திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
பாயிர இயல்
இரண்டாவது அதிகாரம் - வான்சிறப்பு
திருக்குறள் அறத்துப் பாலில், இரண்டாவது அதிகாரமாகிய வான் சிறப்பில் வரும்
மூன்றாவது திருக்குறள், "மழையானது இல்லை என்று ஆகிப் பொய்த்து விட்டால், கடலால்
சூழப்பட்ட இந்த அகன்ற நில உலகத்தில், பசியானது நிலைத்து நின்று வாட்டும்" என்கிறது.
விண்இன்று
பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து
உள்,நின்று
உடற்றும் பசி.
இதற்குப்
பரிமேலழகர் உரை---
விண் இன்று
பொய்ப்பின்
--- மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்;
விரி நீர் வியன் உலகத்துள் --- கடலால்
சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்;
நின்று உடற்றும் பசி --- நிலை பெற்று
உயிர்களை வருத்தும் பசி.
(கடல் உடைத்து ஆயினும், அதனால் பயன் இல்லை என்பார், 'விரிநீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான்
உயிர்கள் இறக்கும் என்பதாம்.)
மழை இல்லை என்றால், உயிர்கள் வாழ்வது எத்துணை துன்பத்தைத் தருமோ, அத்துணைத்
துன்பத்தை இறைவன் கருணை இன்மை தரும்.
திருப்புல்லாணி என்னும் திருத்தலத்திலே
திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள மேகவண்ணனாகிய தெய்வச்சிலைப் பெருமாள் வந்து
அருள் புரியாவிடில், உலகத்து உயிர்களாகிய, குளிர்ச்சி உடைய அழகிய
பயிர்கள் வாடும் என்பதற்கு ஐயம் இல்லை என்று அழகுறப் பாடி உள்ளார், ஓர் அடியவர், "திருப்புல்லாணி
மாலை" என்னும்
நூலில். இந்தப் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.
விண்நன்று, விண்இன்று
பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து
உள்
நின்று உடற்றும் பசி எனலால்,
புல்லை
ஊரின் மழை
வண்ணம்
சிறந்தவன் வந்து அருளாவிடில் வாடும் உயிர்த்
தண்அம்
பயிர் எனற்கு ஐயம் உண்டோ இச் சகதலத்தே.
இதன்
பொழிப்புரை ---
வானம்
பெய்தால் நல்லது. வானம் பெய்யாது ஒழியுமாயின், அகன்ற கடலால் சூழப்பட்டுள்ள இந்த உலகத்தில் உள்ள உயிர்களைப்
பசியானது வருத்தும் என்று திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்து உள்ளார். அதுபோலவே, திருப்புல்லாணி என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள,
அழகில்
சிறந்தவனாகிய தெய்வச்சிலைப் பெருமாள் வந்து அருள் புரியாவிடில், உலகத்தில் உள்ள இந்த
உயிர்த்தொகை என்னும் குளர்ந்த பயிரானது வாடிவிடும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை.
"இன்னா
நாற்பது" என்னும் நூலில், மழை வளம் பொய்த்து விட்டால், அது உயிர்களுக்குத்
துன்பத்தைத் தரும் என்னும் பொருள் அமைந்த பாடல் வருமாறு....
மாரிநாள்
கூவும் குயிலின் குரல் இன்னா,
வீரம்
இலாளர் கடுமொழிக் கூற்று இன்னா,
மாரி
வளம்பொய்ப்பின் ஊர்க்கு இன்னா, ஆங்கு இன்னா
மூரி
எருத்தால் உழவு. --- இன்னா நாற்பது.
இதன் பொழிப்புரை ---
மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா ---
மழைக்காலத்தில் கூவுகின்ற குயிலினது குரலோசை துன்பமாம்; ஈரம் இலாளர் கடுமொழி கூற்று இன்னா --- அன்பு இல்லாதவரது கடிதாகிய சொல் துன்பமாம்; மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா --- மழை
வளம் பொய்க்குமாயின் உலகில் வாழும் உயிர்கட்குத்
துன்பமாம்; ஆங்கு --- அவ்வாறே,
மூரி
எருத்தால் உழவு இன்னா --- மூரியாகிய எருதால் உழுதல் துன்பமாம்.
No comments:
Post a Comment