003. நீத்தார் பெருமை - 08. நிறைமொழி மாந்தர்





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல் 
மூன்றாம் அதிகாரம் - நீத்தார் பெருமை

     இவ் அதிகாரத்து எட்டாம் திருக்குறள், ஆற்றல் நிறைந்த மொழிகளை உடைய அறவோர்களின் பெருமையை, இந்த நில உலகத்தில் அவரைப் போன்றவர்களுடைய அருள்மொழிகளே வெளிப்படுத்தி விடும் என்கிறது.

     மறைமொழி என்பதற்கு, "புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர்" என்பார் நச்சினார்க்கு இனியர். அதனால் அது மறைமொழி ஆயிற்று.

     "நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்பது தொல்காப்பியம்.

     நிறைமொழி என்பது, அருளால் கூறினாலும், வெகுண்டு கூறினாலும், அவ் அப் பயன்களைப் பயந்து விடுதல்.  பயன்களை வைத்தே நிறைமொழி என்பது தெளியப்படும்.

இனி, திருக்குறளைக் காண்போம் ---

நிறைமொழி மாந்தர் பெருமை, நிலத்து
மறைமொழி காட்டி விடும்.               

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       நிறைமொழி மாந்தர் பெருமை --- நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை;

     நிலத்து மறைமொழி காட்டிவிடும் --- நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.

         ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும்,  அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல் - பயனான் உணர்த்துதல்.)

கண்கூடாகக் காட்டுதல் - பிரத்தியட்சமாகக் காட்டுதல்.

     "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலைப் பாடிய மாதவச் சிவஞான யோகிகள்,மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக, திருஞானசம்பந்தப் பெருமானாரின் வரலாற்றில் ஒரு நிகழ்வை வைத்துப் பின் வரும் பாடலைப் பாடி உள்ளார். 

அத்திரவாக் கால்புத்தன் சென்னி அறுத்தார் செண்பைச்
சுத்தனார் தம்அன்பர், சோமேசா! - நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
  
இதன்பொருள்---

         சோமேசா! நித்தம் --- என்றும் அழியாத, நிறைமொழி மாந்தர் --- பயன் நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது, பெருமை --- பெருமையை, நிலத்து --- இந்த நிலவுலகத்தில், மறைமொழி --- அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே,  காட்டி விடும் --- கண்கூடாக யாவர்க்கும் எடுத்துக் காட்டும்,  

         செண்பைச் சுத்தனார் தம் அன்பர் --- சீகாழியில் அவதாரம் செய்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையாராகிய தூயவரது அடியராகிய சம்பந்த சரணாலயர் என்பவர்,  அத்திர வாக்கால் --- அத்திரம் என்ற திருவாக்கினால், புத்தன் --- புத்தநந்தி என்பவருடைய,  சென்னி அறுத்தார் --- தலையை அறுத்துக் கீழே வீழ்த்தினார் ஆகலான் என்றவாறு.
  
     "சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவு இன்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றல் உடையவராவார் ஆணையால் கிளக்கப் பெற்று, புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர் எல்லாம் மந்திரம் எனப்படும்" என்பர் பேராசிரியர்.

         திருஞானசம்பந்தப் பெருமானார் திருத்தெளிச்சேரியை தரிசித்துப் புத்தர்கள் வாழ்ந்த போதிமங்கைக்கு அண்மையில் வந்தார். போதிமங்கை புத்தர்கள் மலிந்த பதி. அடியவர்கள் ஆரவாரமும், திருச்சின்ன ஓசையும், சிவநாம முழக்கமும், புத்தர்களுக்கு நாராசம் போல் இருந்தது. அவர்கள் எல்லாரும் ஒருங்கு திரண்டு, புத்த நந்தியைத் தலைவனாகக் கொண்டு, அடியவர் திருக்கூட்டத்தை மறித்தனர். அவர்கள், "வெற்றிச் சின்னங்கள் எதற்கு? எங்களை வாதில் வென்றீர்களா? வாதில் எம்மை வென்று அல்லவோ அவைகளை முழக்கல் வேண்டும்" என்று வெகுண்டு விலக்கினார்கள். அவர்கள் செயலைக் கண்ட அடியார்கள் இவனை மாய்த்தல் வேண்டும். இல்லையேல் இவன் தீங்கு விளைவிப்பான் என்று கருதி, நிலைமையைப் பிள்ளையார்க்குத் தெரிவித்தார்கள். பிள்ளையார், "நன்றாய் இருக்கின்றது. புத்தநந்தியின் திறத்தை வாதத்தில் பார்ப்போம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். திருமுறைகளை எழுதிவரும் அன்பர், புத்தர் சமண் கழுக்கையர் எட்டும் திருப்பாட்டை ஓதி, அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே என்று முடித்தார். புத்தநந்தி மீது இடி விழுந்தது. புத்தர்கள் நிலை கலங்கி ஓடினார்கள்.

         புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்
         சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
         வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
         அத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.

திருஞானசம்பந்தப் பெருமானார் நிறைமொழி மாந்தர் என்பது, அவர் பாடி அருளிய தேவாரப் பாடல்களின் அருமையை வைத்தே உணர முடிகின்றது.


     அடுத்ததா, மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், குமார பாரதி என்னும் பெரியவர், சுந்தரமூர்த்தி நானார் வரலாற்றிர் ஒரு நிகழ்வை வைத்துப் பின் வரும் பாடலைப் பாடி உள்ளார்.

ஆரூரர் ஈசனைத்தூ தாக்கியநாள் கூன்குருடு
தாரோடு தாம்பூலம் தாங்கவினை - தீர்வார்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                    

         அடியார்கட்கு எளியரான சிவபெருமான் திருவாரூரிலே பரவையார்பால் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக ஒருகால் அல்ல, இருகாலும் தூதாகச் சென்றார். பரவையார் உடன்பாட்டை அறிந்து தோழர்பால் வந்து அறிவித்தார். அதனால் ஆளுடைய நம்பிகள் மிக மகிழ்ந்தார். பரவையார் இல்லத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்றார். 

         வகைநூல் ஆகிய திருத்தொண்டர் திருவந்தாதி, ஆரூரருக்கு மாலையையும் வெற்றிலையையும் தந்து வந்த கூனனும் குருடனுமாய இருவருக்கும் அவரவருக் குற்ற நோயைத் தீர்த்தருளினார் என்பதொரு வரலாறு கூறி ஆரூரரைப் போற்றி மகிழ்கிறது.

     விரிநூல் ஆகிய பெரியபுராணத்தில் இந்நிகழ்ச்சி இறைவன் தூதுபோன நன்னாளில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றது.

         இக் கூனும், குருடும் ஆய பணியாளர்கள் பரவையார் மாளிகையில் பணியாற்றி வந்தவர் என்பர் சிலர். சிவக்கவிமணியார் இதனை மறுத்து, இறைவரால் புலவி தீர்க்கப் பெற்றபின், நம்பி ஆரூரர் மகிழ்வுடன் பரவையார் மாளிகைக்குச் செல்லுகின்ற போது, மங்கலப் பொருள்களை எடுத்து வந்த பணியாளர்களுடன் அத் திருக்கோயில் உள்ளிருந்த கூனும், குருடும் ஆய இருவரும் உடன் வர, அவ்விருவர் தம் உடல் குறைபாடுகளையும் நம்பி ஆரூரர் நீக்கியமையையே இந்நிகழ்ச்சி கட்டுரைக்கின்றது என்பர்.

     இவ்வரலாறு சுந்தரர் வரலாற்றில் தெய்வச் சேக்கிழார் பெருமானாரால் கூறப்படாமையே இவ்வாறு எல்லாம் எண்ணுவதற்கு இடம் அளிக்கின்றது. ஆசிரியர் சேக்கிழார், பெரிய புராணத்தில் இச்செய்தியைக் குறியாமைக்குக் காரணம் தெரிந்திலது. இனி, இவ்விரு நோய்களையும் சுந்தரருக்கு உற்றதாகக் கூறி அவற்றை இறைவன் தீர்த்தருளினார் என்பாரும் எளர். கூன் உற்றது, சுந்தரர் கண் நீங்கிய நிலையில் கோல் ஊன்றி நடப்ப அதனால் ஆயதென்பர் அவர்.

பின்வரும் இரண்டு திருப்பாடல்களையும் நோக்குக.

கூற்றுக்கு எவனோ புகல்,திரு
         வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலும் இன்அடைக்
         காயும் இடுதருமக்
கோல்தொத்து கூனனும் கூன்போய்,
         குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
         யாம்இத் தரணியிலே.      --- திருத்தொண்டர் திருவந்தாதி.

தேனும் குழலும் பிழைத்ததிரு
         மொழியாள் புலவி தீர்க்க,மதி
தானும் பணியும் பகைதீர்க்கும்
         சடையார் தூது தரும் திருநாள்,
கூனும் குருடுந் தீர்த்து, ஏவல்
         கொள்வார் குலவு மலர்ப்பாதம்,
யானும் பரவித் தீர்க்கின்றேன்
         ஏழு பிறப்பின் முடங்கு கூன்.       --- பெரிய புராணம். 


     அடுத்து, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள், தாம் பாடிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில், மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக, பிருகு முனிவரின் சாபத்தினால் திருமால் பத்து அவதாரம் எடுத்த நிகழ்வைக் குறித்து, பின் வரும் பாடலைப் பாடி உள்ளார்.

ஈண்டு தச தோற்றம் மால் ஏய்ந்தான் பிருகுஉரையால்,
மூண்டு அரற் பூசித்தும், முருகேசா! -- பூண்ட
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.    

இதன் பொருள் ---

         முருகேசா --- முருகப் பெருமானே,  மூண்டு அரன் பூசித்தும் --- மிகுதியான அன்பு கொண்டு சிவபெருமானைப் பூசை செய்தும், வசவுரைப் பயனைப் போக்கிக்கொள்ள முடியாமல்,  மால் --- திருமாலானவர்,  பிருகு உரையால் --- பிருகு முனிவருடைய வசவுரை மொழியினால்,  ஈண்டு --- இவ்வுலகத்தில்,  தச தோற்றம் ஏய்ந்தான் --- பத்துப் பிறப்புக்களை எடுத்தார். 

ஆகவே,

பூண்ட --- பொருந்திய,  நிறைமொழி மாந்தர் பெருமை --- பயன் நிறைந்த மொழிகளை உடைய பெரியோர்களின் பெருமையை, நிலத்து --- இவ்வுலகத்திலே,  மறைமொழி காட்டி விடும் --- அவர்களுடைய சீரிய மொழிகளே புலப்படுத்தி விடுவனவாம்.

         பிருகு முனிவருடைய சாபமொழியைப் பெற்ற திருமால் இறைவனைப் போற்றி வழிபட்டும் கூட அச்சாப மொழியின் பயனைப் போக்கிக் கொள்ள இயலாமல், பத்து வகையான பிறவிகளை எடுத்தார். வாக்கு நலம் உடைய பெரியோர்களுடைய பெருமையை அவர்களுடைய அரிய உரைகளே காட்டிவிடும் என்பதாம்.

                           பத்துப் பிறப்பெடுத்த கதை

         ஒரு காலத்திலே தேவர்கட்கும் அசுரர்கட்கும் போர் மூண்டது. அப்போரில் தேவர்கள் தோல்வி அடைந்து திருமாலிடம் சென்று தங்களுடைய துன்பங்களைக் கூறி முறையிட்டுக் கொண்டார்கள். திருமால் அசுரர்களோடு போருக்குச் சென்று அசுரர்களை விரட்டியடித்தார். திருமாலோடு போர் செய்ய முடியாத அசுரர்கள் தங்களுடைய குலகுருவாகிய சுக்கிராசாரியரின் தந்தையான பிருகு முனிவருடைய இருப்பிடத்தை அடைந்து, முனிவருடைய மனைவியாகிய கியாதி என்பவளிடம் அடைக்கலம் புகுந்தனர். கியாதி அவர்களைக் காப்பதாகக் கூறி மறைத்து வைத்தனள். திருமால் துரத்திக் கொண்டே அங்கு வந்தார். கியாதி உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்ததையும் பொருட்படுத்தாமல், அவள் தமக்கு மாமியாக இருத்தலோடு முனிவருடைய மனைவியாகவும் உள்ளாள் என்பதையும் நோக்காமல், அவளையும் கொன்று உள்ளே போய் அசுரரையும் கொன்று சென்றார். 

     இச் செய்தியை உணர்ந்த பிருகு முனிவர், "திருமாலே, நீ நிலவுலகத்தின்கண் பத்துப் பிறவிகளை எடுப்பாயாக" என்று வசவுரை வழங்கினார். இவ்வசவுரையை உணர்ந்த திருமால் இதனைப் போக்கிக் கொள்ளுமாறு சிவபிரானைப் பூசித்து வழிபட்டார். ஆயினும் முனிவருடைய தீ மொழியிலிருந்து விடுபட முடியவில்லை. நிலவுலகில் பத்துப் பிறப்புக்கள் எடுக்க வேண்டியதாகவே முடிந்துவிட்டது.

இயக்கர் குலத்தில் சுவேதுவின் மக்களாக வந்து தோன்றியவர், தமது குலத்து இயற்கையை விட்டு, அரக்கர் செயலை மேற்கொண்டு, கடல் நீரை ஒரு கையால் மொண்டு உண்டவர் ஆகிய அகத்தியர் இருப்பிடம் சென்று, அங்குள்ள மரங்களை எல்லாம் ஒடித்து, உயிர்களை எல்லாம் துன்புறுத்திப் போக்கிய காலத்தில், அதனைக் கண்ட அகத்தியர் தமது சினந்து நோக்கிய காலத்து சுவாகு முதலியவர்கள் சாம்பல் ஆகிப் போனார்கள்.  இதனை, தாடகை வதைப் படலத்துள் கம்பர் பாடியுள்ளதைக் காண்க.

"மாயமும் வஞ்சமும் வரம்பில் ஆற்றலும்
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வொணாது
ஆய் அவர் வளர்வுழி அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும் களிப்பின் மேன்மையான்".

"தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர
மோது உறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடும்
மாதவன் உறைவிடம் அதனின் வந்து நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்".

"விழைவு உறு மாதவம் வெஃகினோர் விரும்பு
உழை கலை இரலையை உயிர் உண்டு ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மாதவன்
தழல் எழ விழித்தனன், சாம்பர் ஆயினான்".

"மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொன் தொடி கேட்டு வெம் கனலிற் பொங்குறா,
'முற்றுற முடிக்குவன் முனியை' என்று எழா
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்".

"இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிடக்
கடி கெட அமரர்கள் கதிரும் உட்கு உறத்
தடி உடை முகில் குலம் சலிப்ப அண்டமும்
வெடி பட அதிர்த்து எதிர் விளித்து மண்டவே".

"தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக" என உரைத்தனன் அசனி எஞ்சவே".

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...