திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
பாயிர இயல்
மூன்றாம் அதிகாரம் - நீத்தார்
பெருமை
இவ் அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்
ஐந்தின் அடிப்படைகளில் பிரிவுபடும் நுண்பொருளைத் தெரிந்து, அவற்றிற்கு ஏற்ப நடந்து
கொள்ளுபவன் அறிவில் இந்த உலகம் அடங்கும் என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்......
சுவை
ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகை, தெரிவான் கட்டே உலகு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
சுவை ஒளி ஊறு ஓசை
நாற்றம் என்ற ஐந்தின் வகை --- சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்
மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்;
தெரிவான் கட்டே உலகு --- ஆராய்வான் அறிவின் கண்ணதே
உலகம்.
(அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு
முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய
அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய
ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள்
ஐந்தும் ஆக இருபதும் ஆம்.
'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவி ஆகிய மான் அகங்கார
மனங்களும், அவற்றிற்கு முதல்
ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின்
பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண்
தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய
அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன்
மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை
நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை
நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும்,
அவற்றின்கண்
தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண்
தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண்
தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல்.
இவ் விருபத்தைந்தும் அல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ணது ஆயிற்று.)
கமலை
வெள்ளியம்பல வாண முனிவர் தாம் இயற்றிய "முதுமொழி மேல் வைப்பு"
என்னும் நூலில் பின்வரும் பாடலை,
மேற்குறித்த
திருக்குறளுக்கு விளக்கமாக அமைத்துப் பாடி உள்ளார்.
புறம்
அகம் என்று யாவும் புகல்வனவும் காணாத்
திறம்
நுவல்கின்ற சிவநூல் --- நெறியில்
சுவை
ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகை
தெரிவான் கட்டே உலகு.
புறம் அகம் --- புறச்சமயம், அகச்சமயம்.
வேறு சமய நூல்களில் காணப்பெறாத திறனை
நுவல்கின்ற சிவநூல் என்க. சிவநூல் --- சிவஞானபோதம், சிவாகமங்கள் முதலியன. சிவநூல்
நெறியாலேயே உலகை அறிதல் முடியும் என்பது இக்கவியின் கருத்து ஆகும். சுவை முதலான
தன்மாத்திரைகளின் கூறுபாடுகளை அறிபவனிடத்தே உலகம் நிற்கும்.
இதற்கு
ஒப்புமையாக அமைந்த நாலடியார் பாடல்....
மெய்வாய்கண்
மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய
வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற்
காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது
வீடு பெறும். --- நாலடியார்.
இதன்
பொருள் --- மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற - , ஐ வாய வேட்கை அவாவினை - ஐந்து வழிகளாகச்
செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காமல் காத்து - தீயவழிகளில்
நிலைமாறிச் செல்லாமல் பாதுகாத்து,
கைவாய்
உய்க்கும் ஆற்றலுடையான் - ஒழுக்கநெறியிற் செலுத்தும் வல்லமையுடையவனே, விலங்காது வீடு பெறும் - தவறாமல் வீடுபே
றடைவான்.
ஐம்புல விருப்பங்களை ஒழுக்கநெறியிற்
செலுத்தி உய்தல் வேண்டும் என்பது கருத்து.
No comments:
Post a Comment