திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
பாயிர இயல்
மூன்றாம் அதிகாரம் - நீத்தார்
பெருமை.
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாவது திருக்குறள்,
யான் எனது என்னும் அகப்பற்றையும் புறப்பற்றையும் விட்டவரை, செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்பவர்.
அவர்களே பிறர் எவரும் செய்தற்கு அரிய செயல்களைச் செய்த பெரியோர் ஆவர்.
அல்லாதவர்கள் எல்லோரும் சிறியவரே. அச் சிறியோரால் அரிய செயல்களைச் செய்ய முடியாது என்கின்றது.
செய்வதற்கு எளிய செயல்கள் ஆவன---மனம்
விரும்பிய படியே அதனை கண் முதலிய இந்திரியங்களின் வாயிலாக விடயங்களில்
செலுத்துதலும்,
விரும்புதலும், கோபித்தலும்
முதலான செயல்கள்.
செய்வதற்கு அருமையான செயல்கள் --- இயமம், நியமம் முதலான
எண்வகை யோகங்கள்.
எண்வகையான
யோகங்கள் - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.
1. இயமம் என்பது விலக்க
வேண்டியவற்றை விலக்குதல் அல்லது தீது அகற்றுதல் எனப்படும்.
கொல்லான்பொய்
கூறான் களவிலான் எள்குணன்
நல்லான்
அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான்
பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான்
நியமத் திடையில்நின் றானே.
இதன்
பொழிப்புரை --- கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம
யோகம் கைவரப் பெற்றவனாவான்.
2. நியமம் என்பது ஒழியாது
மேற்கொள்ளுதல் அல்லது நன்று ஆற்றல் எனப்படும்.
தவம்செபம்
சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன்
விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ
பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல
செய்யின் நியமத்த னாமே.
இதன்
பொழிப்புரை --- தவம் முதலாக மதி ஈறாகச் சொல்லப்பட்ட பத்தினையும் நியமமாகக்
கொண்டவன் நியம யோகியாவான்.
தவம் என்பது நெறிப்பட்ட வாழ்க்கை.
செபம் என்பது வாய்ப்புப் பெற்றுழி மந்திரங்களை
மிகுதியாகக் கணித்தல்,
சந்தோடம், `உள்ளது போதும்` என்னும் உள்ள நிறைவு.
ஆத்திகம் என்பது நூல்களில் சொல்லப்படும் கடவுள், இருவினை, மறுபிறப்பு, துறக்க நிரையங்கள் உள்ளன என உணரும்
உணர்வு.
தானம், பொருளை நல்வழியில் ஈட்டி, உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்.
சிவன்
விரதம், சிவனுக்குரிய சிறப்பு
நாள்களில் தவச்செயல்களை மிகச் செய்தல்.
சித்தாந்தக்
கேள்வி, சிவாகமங்களின்
ஞானபாதப் பொருளைக் கேட்டல்.
மகம், இயன்ற பொழுது தீ வேட்டலைச் செய்தலும், செய்வித்தலும்.
சிவபூசை, சிவலிங்க வழிபாட்டினை இன்றியமையாததாகக்
கொண்டு, விடாது செய்து
வருதல்.
ஒண்மதி என்பது நற்பண்பு.
இதனால், நியமம் சிறப்பாகப் பத்தாதல்
கூறப்பட்டது.
3. ஆதனம் - இருக்கை அல்லது
இருப்பு.
பத்திரங்
கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம்
வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம
மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு
நூறு பலஆ சனமே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை ---
பத்திரம், கோமுகம், பதுமம், சிங்கம், திரம், வீரம், சுகம்` எனப் பெயர் பெற்ற ஏழ் ஆதனங்களும் உத்தம
ஆதனங்களாம். அவற்றொடு உத்தமோத்தம ஆதனமாக முதலிற் கூறப்பட்ட சுவத்திகாதனமும் கூடச்
சிறப்புடைய ஆதனங்கள் எட்டாகும். ஆதனங்களை இவ்வாறு `எட்டு` என்பதேயன்றி, `பத்து` என்றும், `நூறு` என்றும், மற்றும் பலவாகவும் கூறுவர்.
4. பிராணாயாமம் என்பது வளிநிலை எனப்படும். இரேசக (வாயுவை மூக்கின் வலது
துவார வாயிலாக விடுதல்), பூரக (வாயுவை மூக்கின் இடது துவார வாயிலாக
உள்ளுக்கு இழுத்தல்) கும்பகம் (வாயுவை உள்ளே அடக்குதல்) செய்தல்.
5. பிரத்தியாகாரம் - மனத்தைப்
பொறிவழிகளினின்றும் பிரித்து அகமுகமாக ஆதாரங்களில் நிற்கச் செய்தல்.
6. தாரணை --- அங்ஙனம் சென்ற மனத்தை மீளவும் புறத்தே
பொறிவழிச் செல்லாது தடுத்து அவ்வவ்வாதாரங்களிலே நிறுத்துதல்
7. தியானம் --- அங்ஙனம் நின்ற மனத்தால் அவ்வாதார
நிலைகளை எல்லாம் ஊன்றி நினைத்தல்
8. சமாதி --- அத் தியான முதிர்ச்சியால் தன்னை மறந்து
அவ்வாதாரப் பொருளேயாய் விடுதல்.
அந்நெறி
இந்நெறி என்னாதே, அட்டாங்கம்
தன்னெறி
சென்று சமாதியிலே நின்மின்,
நன்னெறி
செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்,
புன்னெறி
ஆகத்தில் போக்குஇல்லை ஆகுமே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை --- `நாம் கொண்ட நெறி
நன்றோ, இது வல்லாத பிறிதொரு
நெறி நன்றோ` என்று ஐயுற்று
அலமராது, எந்நெறிக்கும்
வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே
உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில்
தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற்
செல்லுதல் இல்லையாம்.
ஆக, அட்டாங்க யோகம்
என்பது,
உயிர்கள்
நன்னெறியில் நின்று, ஞானத்தைத் தலைப்பட்டு, பிறவியின் பயனாகிய வீடு
பேற்றை அடைதலே ஆகும். அதுவே, நீத்தாரது நிலை ஆகும். அவராலேயே செயற்கு அரிய
செயல்களைச் செய்யவும் கூடும்.
திருக்குறளைக்
காண்போம் -----
செயற்கு
அரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கு
அரிய செய்கலாதார்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
செயற்கு அரிய
செய்வார் பெரியர் --- ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச்
செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;
செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் ---
அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.
(செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால்
புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள்.
நீரிற் பலகால் மூழ்கல் முதலாய,
'நாலிரு
வழக்கின் தாபதபக்கம்' (புறப்பொருள்
வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)
இத் திருக்குறளுக்கு, பெரிய புராணத்திலே வரும் அடியார்களில் ஒருவரான
திருநீலகண்ட நாயனாரின் வரலாற்றைக் காட்டி, கமலை வெள்ளியம்பல
வாணமுனிவர் தாம் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில்
பின் வருமாறு பாடி உள்ளார்.
ஆர்
பெரியர் நீத்தும், அரன் அறிய நின்ற, திரு
நீலகண்டர்
போல் அரிதின் நீத்திலரால் --- சாலச்
செயற்கு
அரிய செய்வார் பெரியர்,சிறியர்
செயற்குஅரிய
செய்கலாதார்.
பெரியர் ஆர் நீத்தும் --- பெரியோர் ஆர் துறந்தும்.
வாய்ப்பு ஒன்றும் இல்லாத காலத்தில் துறவற
வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகும் மற்றவரிலும், திருநீலகண்டர்
இல்லறத்தின்கண் மனைவியோடு இருந்துகொண்டே சிற்றின்பத்தை நீத்ததனால், அவருடைய அச்செயல் செயற்கரும் செயல்
ஆயிற்று.
அடியார் பெருமக்களில் மூவர் செயற்கரும்
செயல்களைச் செய்ததாக, ஒட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்து
அடிகள் பின்வருமாறு பாடியுள்ளதைக் கருத்தில் கொண்டே இப் பாடல் எழுந்ததாகக்
கொள்ளலாம்.
வாளால்
மகவு அரிந்து ஊட்டவல்லேன்
அல்லன், மாதுசொன்ன
சூளால்
இளமை துறக்க வல்லேன் அல்லன்,
தொண்டு செய்து
நாள்ஆறில்
கண் இடந்து அப்பவல்லேன் அல்லன்,
நான் இனிச் சென்று
ஆள்
ஆவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே.
திருநீலகண்ட நாயனார்
வரலாறு
தில்லயம்பதியிலே குயவர் குலத்தில்
அவதரித்து அறவழியிலே நின்றவர். சிவபத்தி, சிவனடியார்
பத்தியில் சிறந்தவர். மண்கல் வனையும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்.
அடியவர்களுக்குத் திருவோடு கொடுப்பது அவருடைய திருத்தொண்டு. சிவபெருமானுடைய
திருநீலகண்டமானது, யாவரையும் அழிக்கக்
கூடிய விடத்தை உண்டு, எல்லோரையும்
காத்ததால், திருநீலகண்டத்தினிடத்துப்
பேரன்பு கொண்டு எப்போதும் "திருநீலகண்டம், திருநீலகண்டம்" என்று சொல்லி
வந்தமையால், அவருக்குத்
திருநீலகண்ட நாயனார் என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.
நாயனார், அருந்ததி அனைய மங்கை நல்லாள் ஒருவரை
மணம் செய்து இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்.
வரும் நாளில் இன்பத் துறையில் எளியர் ஆனார். பரத்தை பால் அணைந்து வீடு
சேர்ந்தார். அதை உணர்ந்த இல்லக் கிழத்தியார், ஊடல் கொண்டு, வீட்டுப் பணிகள் எல்லாவற்றையும் குறைவு
அறச் செய்து கொண்டு, கூடலுக்கு மட்டும்
இசையாது இருந்தார். ஊடலைத் தீர்க்க வேண்டி, நாயனார் ஒருநாள் நயவுரைகள் கூறி, மனைவியாரைத் தழுவ முயன்றார். அவ் வேளையில் அம்மையார் வெகுண்டு, "நீர் எம்மைத்
தீண்டுவீர் ஆயின், திருநீலகண்டம்"
என்றார். நாயனாரோ, திருநீலகண்டத்தினிடத்து
அளவில்லாப் பத்தி பூண்டவர். நாயனார், தம் மனைவியைத் தீண்டாது அகன்று, அவரை "அயலாரைப் பார்ப்பது போல் பார்த்து, இவள் எம்மைப் பன்மையாகக் கூறினமையால
இவளையும், இவள் இனமாகிய மற்ற
மாதர்களையும் நான் மனத்தினாலும் தீண்டேன்" என்று சபதம் சொன்னார். இக்
கொள்கையுடன், இருவரும் வீட்டை
விட்டுத் துறவாது, தங்களுக்குள்
புணர்ச்சி இன்மையை அயலவரும் அறியாதவண்ணம், இல்லறத்தை நடத்தி வந்தனர். இவ்வாறே ஆண்டுகள் பல கழிந்து, முதுமையும் வந்தது. உடம்பு தளர்ந்த
போதிலும், சிவபத்தியும், சிவனடியார் பத்தியும் சிறிதும்
தளரவில்லை.
நாயனாரது பெருமையை உலகுக்கு உணர்த்த
வேண்டி, தில்லையம்பலவாணப்
பெருமான், ஒரு சிவயோகியாகி
நாயனாரது வீட்டிற்கு எழுந்தருளினார். நாயனார் அவரை முறைப்படி வழிபட்டு, "அடியேன் செய்ய
வேண்டிய பணி யாது?" என்று கேட்டார். சிவயோகியார், "அன்பனே, இந்தத் திருவோட்டைப் பாதுகாப்பாக
வைத்திருந்து நான் கேட்கும்போது கொடுப்பாயாக. இது தனக்குத் தானே ஒப்பானது. தன்னிடம்
சேரும் எல்லாப் பொருளையும் தூய்மை செய்யும் ஆற்றல் உடையது. பொன்னினும் மணியினும் போற்றும் தகையது. இத்தகு சிறப்பு வாயந்த இந்தத் திருவோட்டினை, நீ வாங்கி, வை" என்று அதை நீட்டினார். நாயனார்
அதை அன்புடன் வாங்கி, இல்லத்தின் ஒரு
பக்கத்தில், காப்புடைய ஓரிடத்தில்
வைத்துத் திரும்பினார். சிவயோகியார்
அங்கிருந்து புறப்பட்டார். நாயனார் அவருடன் சிறிது தூரம் சென்று
விடைபெற்றார். சிவயோகியாக வந்த நடராச
வள்ளல் பொற்சபைக்கு எழுந்தருளினார்.
நெடுநாள் கழிந்தது. திருவோடு
வைக்கப்பட்ட இடத்தில் இருந்து அதை மறைந்து ஒழியச் செய்த அம்பலவாணப் பெருமான், முன்பு போலச் சிவயோகியாகத் திருவடிவம்
கொண்டு, நாயனார் வீட்டுக்கு
வந்தார். நாயனாரைப் பார்த்து, "நான் முன்னே உன்னிடம்
தந்த ஓட்டைக் கொண்டுவா" என்றார்.
நாயனார் திருவோட்டை வைத்த இடத்தில் கண்டாரில்லை. மனைவியாரைக் கேட்கிறார், மற்றவரைக் கேட்கிறார், பிற இடங்களில் தேடுகிறார், திகைக்கிறார். "யோகியாருக்கு என்ன
சொல்வேன், என்ன செய்வேன்"
என்று அலமருகிறார். நாயனார் ஒன்றும்
தோன்றாது நிற்கிறார். இந்நிலையில்
சிவயோகியார், "எவ்வளவு நேரம்" என்று
கூவுகிறார். நாயனார் ஓடிவந்து, "ஐயனே, திருவோட்டை வைத்த இடத்திலும் தேடினேன், வேறு இடங்களிலும் தேடினேன். அதைக்
கண்டிலேன். அப் பழைய ஓட்டினும் சிறந்த ஓடு ஒன்றினை வனைந்து தருகிறேன். ஏற்றுக்
கொண்டு என் பிழையைப் பொறுத்து அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். சிவயோகியாருக்குச் சினம் மூண்டது. அவர், நாயனாரை உற்று நோக்கி, "என்ன சொன்னாய்? புதிய ஓடா கொடுக்கப் போகிறாய்? யான் கொடுத்த மண் ஓடு தான் வேண்டும்.
மற்றது பொன் ஓடே ஆயினும் எனக்கு வேண்டாம்.
என் ஓட்டைக் கொண்டு வா" என்றார்.
நாயனார் நடுக்குற்றுப் பெரியவரைப் பணிந்து, "ஐயரே! தங்கள் திருவோடு கெட்டு
விட்டது. என்ன செய்வேன்" என்று
ஏக்கத்தோடு நின்றார். புண்ணியப் பொருளாய் உள்ள பெருமான், "என்ன இது? உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிக்
கொண்டாய். பழி பாவத்திற்கு அஞ்சுகிறாய் இல்லை, நான் உன்னை விடமாட்டேன். என் ஓட்டை
வாங்கிக் கொண்டே போவேன்" என்றார்.
நாயனார், "திருவோட்டை நான்
வௌவினேன் இல்லை. என் உள்ளத்திலும் களவு
இன்மையை நான் எப்படி விளக்குவேன்" என்று இரங்கிக் கூறினார். "அப்படியானால், உன் மகனைப் பற்றிக் குளத்தில் மூழ்கித்
திருவோடு கெட்டது என்று சொல்லிப் போ" என்றார் சிவயோகியார். அதற்கு நாயனார், "எனக்குப் புதல்வன் இல்லையே"
என்றார். சிவயோகியார், "உன் மனைவியைப்
பற்றிச் சொல்" என்றார். அதற்கும்
நாயனார், "எனக்கும் என் மனைவிக்கும்
முன்னமே ஒரு சூள் உண்டு. அதனால் அவள் கையைப் பிடித்து முழ்க இயலாமை குறித்து
வருந்துகிறேன். நானே முழ்கி உண்மையைச்
சொல்கிறேன்" என்றார். சிவயோகியார் சினந்து, "என் ஓட்டையும் கொடாமல், மனைவியைப் பற்றிக் குளத்தில் முழ்கவும்
இசையாமல், சிந்தை வலித்து
இருக்கிறாய். தில்லைவாழ் அந்தணர்கள்
கூடியுள்ள பேரவையில் என் வழக்கை உரைக்கப் போகிறேன்" என்று சொல்லி விரைந்து
நடந்தார். நாயனாரும் அவரைத் தொடர்ந்து நடந்தார்.
சிவயோகியார் அந்தணர் அவைக்களம் புகுந்து
நிகழ்ந்ததைக் கூறினார். வேதியர்கள் வேட்கோவரைப் பார்த்தார்கள். இருவர் கூற்றையும்
கேட்ட அந்தணர்கள், வேட்கோவரை நோக்கி, "இவருடைய ஓட்டை நீர்
இழந்தீராயின், இவர் விரும்பும்
வண்ணம் செய்வத நியாயம்" என்று தீர்ப்புக் கூறினார்கள்.
தமக்கும் தம் மனைவிக்கும் உள்ள
தீண்டாமையை நாயனார் வெளியிடமாட்டாராய், "பொருந்திய
வகையால் குளத்தில் முழ்குகிறேன்" என்று சொல்லி, சிவயோகியாருடன் தமது இல்லத்திற்குச்
சென்று, மனைவியாரை அழைத்துக்
கொண்டு, திருப்புலீச்சுரத்திற்கு
முன் உள்ள திருக்குளத்தை அடைந்து,
ஒரு
மூங்கில் தண்டின் ஒரு முனையை மனைவியார் பற்ற, மற்றொரு முனையைத் தாம் பற்றி
முழ்கலானார். அப்போது சிவயோகியார், "உன் மனைவியைக்
கைப்பற்றி மூழ்கு" என்றார். நாயனார், அப்படிச் செய்யக் கூடாமையை யாவரும் அறிய
விளக்கி மூழ்கிக் கரை ஏறினார். ஏறிய
இருவரிடமும் முதுமை ஒழிந்து இளமைச் செவ்வி மலர்ந்தது. அக் காட்சியைக் கண்டவர்கள், அங்கிருந்த சிவயோகியாரைக்
கண்டார்களில்லை. அந் நேரத்தில் சிவயோகியாக
வந்த சிவபெருமான் உமையம்மையாருடன் விடைமீது காட்சி வழங்கினார். திருநீலகண்ட
நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவபெருமானை வணங்கிப் போற்றி இன்பக் கடலில்
மூழ்கினர். எல்லாம் வல்ல இறைவர், "ஐம்புலனை வென்ற
விழுமிய அன்பர்களே! இவ் இளமை என்றும் நீங்காமல் நம்மிடத்து இருங்கள்" என்று
திருவருள் சுரந்து எழுந்தருளினார்.
நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோகத்தினை அடைந்தார்கள்.
பெரிய
புராணத்திலே வரும் அடியார்களில்,
பட்டினத்து
அடிகள் குறித்த மூன்று அடியார்களை அன்றி, வேறு ஒரு அடியாரும் உண்டு. அவரே, இயற்பகை நாயனார்
ஆவார்.
அடியவராக
வந்த இறைவன் கேட்க, இல்லை என்று சொல்லாது தன் மனைவியையே ஈந்த செயற்கரும் செய்கை
செய்தவர் அவர். செயற்கரும் செய்கை செய்தவர் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான்
பெரியபுராணத்தில் பின்வருமாறு வைத்துப் போற்றி உள்ளார்.
"செய்வதற்குஅரிய
செய்கை செய்தநல் தொண்டர் போக
மைதிகழ்
கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி
பொய்தரும்
உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய்தரு
சிந்தையானை மீளவும் அழைக்கல் உற்றான்".
"இயற்பகை
முனிவா ஓலம், ஈண்டுநீ வருவாய் ஓலம்,
அயர்ப்பு
இலாதானே ஓலம், அன்பனே ஓலம் ஓலம்,
செயற்குஅரும்
செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்குஅறு
மறை ஓலிட்டு மால்அயன் தேட நின்றான்".
இத் திருக்குறளால் புலன்களை அவை செல்லும்
வழியே விடாது நின்றவர் பெரியர் என்றும், அது செய்யாது புலன்கள் சென்ற வழியே
மனத்தினை விட்டவர் சிறியர் என்றும் விளங்கும். இதனை, பட்டினத்து அடிகளார், தமது
"திருவிடைமருதூர் மும்மணிக்கோவை"யினுள்,
"உழப்பின்
வாரா உறுதிகள் உளவோ?
கழப்பின்
வாராக் கையுறவு உளவோ?
அதனால்
நெஞ்சப்
புனத்து வஞ்சக் கட்டையை
வேர்அற
அகழ்ந்து போக்கி, தூர்வைசெய்து,
அன்பு
என் பாத்தி கோலி, முன்பு உற
மெய்
எனும் எருவை விரித்தாங்கு, ஐயம்இல்
பத்தித்
தனி வித்து இட்டு, நித்தலும்
ஆர்வத்
தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று
தடுக்குநர்க்கு
அடங்காது இடுக்கண் செய்யும்
பட்டி
அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று
சாந்த
வேலி கோலி, வாய்ந்தபின்
ஞானப்
பெருமுளை நந்தாது முளைத்து,
கருணை
இளந்தளிர் காட்ட, அருகாக்
காமக்
குரோதக் களை அறக் களைந்து,
சேமப்
படுத்துழி, செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப்
புளகம் முகிழ்த்திட்டு அம் எனக்
கண்ணீர்
அரும்பிக் கடிமலர் மலர்ந்து.
புண்ணிய
அஞ்செழுத்து
அருங்காய் தோன்றி, நஞ்சுபொதி
காள
கண்டமும், கண் ஒரு மூன்றும்,
தோள்
ஒரு நான்கும், சுடர்முகம் ஐந்தும்,
பவளநிறம்
பெற்று, தவளநீறு பூசி,
அறுசுவை
அதனினும் உறுசுவை உடைத்தாய்,
காணினும்,
கேட்பினும், கருதினும் களிதரும்
சேண்உயர்
மருத மாணிக்கத் தீங்கனி
பையப்
பையப் பழுத்துக் கைவர,
எம்ம
னோர்கள் இனிது இனிது அருந்திச்
செம்மாந்து
இருப்ப, சிலர்இதின் வாராது
மனம்
எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி,
காமக்
காடு மூடி, தீமைசெய்
ஐம்புல
வேடர் ஆறு அலைத்து ஒழுக,
இன்பப்
பேய்த்தேர் எட்டாது ஓட,
கல்லா
உணர்வு எனும் புல்வாய் அலமர,
இச்சை
வித்து குத்துழி யான் எனப் பெயரிய
நச்சு
மாமரம் நனிமிக முளைத்து,
பொய்
என் கவடுகள் போக்கி, செய்யும்
பாவப்
பல்தழை பரப்பி, பூவெனக்
கொடுமை
அரும்பி, கடுமை மலர்ந்து,
துன்பப்
பல்காய் தூக்கி, பின்பு
மரணம்
பழுத்து, நரகிடை வீழ்ந்து,
தமக்கும்
பிறர்க்கும் உதவாது
இமைப்பில்
கழியும் இயற்கையோர் உடைத்தே".
என்று
பாடிக் காட்டி, நம்மை ஆற்றுப்படுத்தி, செயற்கரிய செய்யும் பெரியார் இவர் என்றும்,
அவ்வாறு செய்யாத சிறியார் இவர் என்றும் அழகு பெற அமைத்து அருளி உள்ளார்.
புலன்களை
அடக்குவது பெரியார் தன்மை என்று திருவள்ளுவ நாயானார் அருளியவண்ணம், பட்டினத்து
அடிகளும், ஒருவன் தான் செய்ய வேண்டிய முயற்சிகளால் அடையக்கூடாத பேறுகள்
இவ்வுலகத்தில் இல்லை. அவ்வித முற்சிகளை மேற்கொள்ளாது காலத்தைப் போக்குவதால்
உண்டாகாத துன்பங்களும் இல்லை. எனவே, இதை நன்குணர்ந்த நன்மக்கள் சிலர், மனமாகிய
காட்டில் உள்ள வஞ்சகம் என்னும் மரத்தினை வேரோடு தோண்டி அறுத்து, பிறகு நிலத்தினை
முளை முளைத்தற்கு உரிய பதமாக்கி, அன்பு என்னும் பாத்தியினைக் கோலி, முதல் முதலாக
அப்பாத்தியினுள் உண்மை என்னும் எருவினை நிறையப் பெய்து, பிறகு சிறிதும்
குற்றமில்லாத பத்தி என்கின்ற ஒப்பும் உயர்வும் இல்லாத விதையினை விதைத்து,
தினம்தோறும் ஆசை என்கின்ற தெளிந்து நீரை அந்நிலத்தில் பாய்ச்சி, எதிரே நின்று உள்
புகாவண்ணம் தடுப்போர்க்கும் சிறிதும் அடங்காமல் மிகவும் துன்பத்தைச் செய்கின்ற
புலன்கள் என்னும் ஐந்து பெரிய பட்டி மாடுகளுக்குப் பயந்து, அப்புனத்துள் சென்று
சாந்தம் என்னும் வேலியை அமைத்துக் காத்த பிறகு, ஞானமாகிய பெரிய முளை ஒன்று
சிறிதும் கெடாது முளைத்து, அந்த முளையில் இருந்து அருள் என்கின்ற பசுமையான
தளிர்கள் உண்டாகவும், அத் தளிர்கள் கெடாவண்ணம், காம குரோதம் என்னும் பூண்டுகளை
வேருடன் பிடுங்கி எறிந்து போக்கிச் செம்மைப் படுத்தவும் நன்றாக வளர்ந்து, உடம்பில்
உள்ள மயிர்க்கால்கள் ஆகிய முகிழ்கள் முகிழ்த்து, அம்மென்னும் ஆனந்த ஒலியினை உடைய
கண்ணீர் ஆகிய அரும்பு விட்டு, மணமுள்ள மலரானது போது, புண்ணிய உருவினைக் கொண்ட
திருவைந்தெழுத்து ஆகிய அரிய காயானது உண்டாகி, விடம் கலந்த கண்டமும், மூன்று
திருக்கண்களும், எட்டுத் திருத்தோள்களும், ஐந்து திருமுகங்களும், பவளம் போன்ற
திருமேனியில், வெண்மையான திருநீற்று ஒளியும் விளங்க, கைப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு,
புளிப்பு, உவர்ப்பு என்னும் ஆறுவகைச் சுவைகளினும் மிக்க சுவையும் இனிமையும்
உடையதாகி, கண்ணால் கண்டாலும், காதால் கேட்டாலும், மனத்தால் நினைத்தாலும் மிக்க
மகிழ்ச்சியை உண்டுபண்ணுகின்ற மிக உயர்ந்த "மருதமாணிக்கம்" என்னும் அரிய
கனியானது கொஞ்சம் கொஞ்சமாகப் பழுத்து, அது தமது கையில் கிடைத்தலும், அதனை இன்புற
உண்டு மகிழ்ந்து இருக்கின்றனர். இந்த அருமையை அறியாத பலரோ, உழைப்பாகிய முற்சியைச்
செய்யாது, மனமாகிய வயலைப் பயன் பறற பாழ்நிலம் ஆக்கி, காமம் என்னும் காடு மூடச்
செய்து, தீமையே புரிகின்ற ஐம்புலன்கள் என்னும் வேடர்கள், தாம் செல்லுகின்ற வழியில்
செல்லவொட்டாது தம்மை மறித்து இழுக்க,
அதனால் தாம் விரும்பிய சிற்றின்பம் ஆகிய கானல் நீர் கைக்கு எட்டாது ஓட, சிறிதும் கல்லாத உணர்வு என்னும் மான்
ஆனது, ஒட்டாத கானல் நீர் போன்ற காமத்தின் வழியே சென்று, ஆசை என்கின்ற விதையினை
இட்டு, நான் என்கின்ற நச்சுமாமரத்தினை மிகுதியாக முளைக்கச் செய்து, அம்மரத்தில்
பொய் என்னும் பெரிய கிளைகள் உண்டாகி, பாவம் என்னும் பலதழைகளை விரித்து, கொடுமை
என்னும் அரும்புகள் அரும்பி, அந்த அரும்புகளில் தீமை என்னும் மலர் மலர்ந்து,
துன்பம் என்கின்ற பல காய்கள் காய்த்து, மரணம் என்னும் பழமானது பழுக்கச் செய்வதால்,
தமக்கும் பிறர்க்கும் உதவாதவர்களாய், இமைக்கும் அளவில் இறந்து போகின்ற இயற்கைக்
குணம் உடையவர்களாய் இருக்கின்றனர்.
இதனால்
நாம் உணரவேண்டுவது, பிறவிகளில் உயர்ந்ததாகிய மக்கள் பிறப்பை எடுத்து
வந்துள்ளவர்களில் சிலர் மிக புலன்களை அடக்குகின்ற மிக அரிய செயலைப் புரிந்து
பெருமைக்கு எல்லாம் இருப்பிடமாக விளங்கும் பெரியவர்கள் ஆகின்றனர் என்பதும், மிகப்
பலர் தமது பிறப்பின் அருமையை உணராது, காமக் கடலில் விழுந்து அழுந்தி சிறுமைக்கு
எல்லாம் காரணமாகின்ற சிறியர் ஆகின்றனர் என்பது ஆகும்.
அருமை
உடையதன் பெருமை பழியார். --- முதுமொழிக் காஞ்சி.
இதன்
பதவுரை ---
அருமை
உடையதன் பெருமை ---- அருமையுடையதொரு பொருளை அரிதென்று முயற்சிப் பெருமையை, பழியார் --- பழித்துத் தவிரார்.
கிடைத்தற் கருமையான பொருளினது அருமையைப்
பழியாமல் அது கிடைத்தற்குரிய கௌரவமான முயற்சிகளைச் செய்வர்.
"செயற்கரிய செய்வார்
பெரியர் சிறியர்
செயற்கரிய
செய்கலா தார்." ---
திருக்குறள்.
No comments:
Post a Comment