திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
பாயிர இயல்
மூன்றாம் அதிகாரம் -
நீத்தார் பெருமை.
இந்த அதிகாரத்தில் நான்காவது திருக்குறள், ஞானம் என்னும் அங்குசத்தால் ஒப்பற்ற ஐந்து
புலன்களையும் காத்துக் கொள்பவன், மேன்மையான அருள் உலகத்தினுக்கு வித்துப் போன்றவன்
என்கின்றது. இந்த நிலவுலகத்தில் பிறந்தும் இறந்தும் உழல்கின்றவன் ஆகமாட்டான்.
திருக்குறளைக்
காண்போம்....
உரன்
என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்,
வரன்
என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
உரன் என்னும்
தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் --- திண்மை என்னும் தோட்டியால் பொறிகள்
ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்;
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து ---
எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு
அறிவின் மேற்று. அந்நிலத்திற் சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும்
மகனல்லன் என்பதாம்.)
இத் திருக்குறளின் பொருளை நன்குணர்ந்தவரும், திருத்தொண்டர் வரலாற்றைச் சொல்லும் பெரிய
புராணத்தையும் ஓதி உணர்ந்தவருமான, குமார பாரதி என்னும் பெரியவர், தாம் இயற்றிய "திருத்தொண்டர்
மாலை" என்னும் நூலில் மேற்குறித்த திருக்குறளை திருநீலகண்டத்துக்
குயவனார் என்னும் நாயனாரோடு இயைத்துப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.
ஆலகண்டர்
ஆணைகொண்டு இல்லாள் எதிர் செல்லாது திரு
நீலகண்டர்
ஐம்பொறி மா நீக்கினார் - மேலாம்
உரன்
என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்
என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.
சிவபிரானுடைய தீருநீலகண்டத்தின் ஆணையால், மனைவியாரைத் தொடாமல் நீங்கி, திருநீலகண்ட நாயனார்
பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை ஓட்டிக் கீர்த்தி பெற்றார்.
மேம்பட்ட அறிவு என்னும் அங்குசத்தால்
ஒப்பற்ற பொறிகளாகிய யானைகள் ஐந்தினையும் தத்தம் புலன்கள் மேல் செல்லாமல்
பாதுகாக்கும் வன்மையினை உடையோன் எல்லா நிலத்தினும் மிக்கது என்று சொல்லப்படும்
வீட்டு நிலத்துக்கு ஓர் வித்தாம் என்றவாறு.
மா - யானை. ஐந்து என்றது மெய் வாய் கண் மூக்கு செவி என்ற
ஐந்து அறிகருவிகளை. உரன் - திண்மை. ஈண்டு அறிவின் திண்மை என்க. தோட்டி - அங்குசம்.
வரன் - சிரேட்டம்.
வைப்பு
- நிலம்.
திருநீலகண்ட நாயனார்
வரலாறு
தில்லயம்பதியிலே
குயவர் குலத்தில் அவதரித்து அறவழியிலே நின்றவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். மண்கலம்
வனையும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். அடியவர்களுக்குத் திருவோடு கொடுப்பது
அவருடைய திருத்தொண்டு. சிவபெருமானுடைய திருநீலகண்டமானது, யாவரையும் அழிக்கக் கூடிய விடத்தை உண்டு, எல்லோரையும் காத்ததால், திருநீலகண்டத்தினிடத்துப் பேரன்பு
கொண்டு எப்போதும் "திருநீலகண்டம், திருநீலகண்டம்"
என்று சொல்லி வந்தமையால், அவருக்குத்
திருநீலகண்ட நாயனார் என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.
நாயனார், அருந்ததி அனைய மங்கை நல்லாள் ஒருவரை
மணம் செய்து இல்லறத்தில் வாழ்ந்து வந்தார். வரும் நாளில் இன்பத் துறையில் எளியர்
ஆனார். பரத்தைபால் அணைந்து வீடு சேர்ந்தார். அதை உணர்ந்த இல்லக் கிழத்தியார், ஊடல் கொண்டு, வீட்டுப் பணிகள் எல்லாவற்றையும் குறைவு
அறச் செய்துகொண்டு, கூடலுக்கு மட்டும்
இசையாது இருந்தார். ஊடலைத் தீர்க்க வேண்டி, நாயனார் ஒருநாள் நயவுரைகள் கூறி, மனைவியாரைத் தழுவ முயன்றார். அவ்
வேளையில் அம்மையார் வெகுண்டு,
"நீர்
எம்மைத் தீண்டுவீர் ஆயின், திருநீலகண்டம்"
என்றார். நாயனாரோ, திருநீலகண்டத்தினிடத்து
அளவில்லாப் பத்தி பூண்டவர். நாயனார், தம்
மனைவியைத் தீண்டாது அகன்று, அவரை "அயலாரைப்
பார்ப்பது போல் பார்த்து, இவள் எம்மைப்
பன்மையாகக் கூறினமையால இவளையும்,
இவள்
இனிமாகிய மற்ற மாதர்களையும் நான் மனத்தினாலும் தீண்டேன்" என்று சபதம்
சொன்னார். இக் கொள்கையுடன், இருவரும் வீட்டை
விட்டுத் துறவாது, தங்களுக்குள்
புணர்ச்சி இன்மையை அயலவரும் அறியாதவண்ணம், இல்லறத்தை நடத்தி வந்தனர். இவ்வாறே
ஆண்டுகள் பல கழிந்து, முதுமையும் வந்தது.
உடம்பு தளர்ந்த போதிலும், சிவபத்தியும், சிவனடியார் பத்தியும் சிறிதும்
தளரவில்லை.
நாயனாரது பெருமையை உலகுக்கு உணர்த்த
வேண்டி, தில்லையம்பலவாணப்
பெருமான், ஒரு சிவயோகியாகி
நாயனாரது வீட்டிற்கு எழுந்தருளினார். நாயனார் அவரை முறைப்படி வழிபட்டு, "அடியேன் செய்ய
வேண்டிய பணி யாது?" என்று கேட்டார். சிவயோகியார், "அன்பனே! இந்தத் திருவோட்டைப் பாதுகாப்பாக
வைத்திருந்து நான் கேட்கும்போது கொடுப்பாயாக. இது தனக்குத் தானே ஒப்பானது. தன்னிடம்
சேரும் எல்லாப் பொருளையும் தூய்மை செய்யும் ஆற்றல் உடையது. பொன்னினும் மணியினும்
போற்றும் தகையது. இத்தகு சிறப்பு வாயந்த
இந்தத் திருவோட்டினை, நீ வாங்கி, வை" என்று அதை நீட்டினார். நாயனார்
அதை அன்புடன் வாங்கி, இல்லத்தின் ஒரு
பக்கத்தில், காப்புடைய ஓரிடத்தில்
வைத்துத் திரும்பினார். சிவயோகியார் அங்கிருந்து புறப்பட்டார். நாயனார் அவருடன்
சிறிது தூரம் சென்று விடைபெற்றார். சிவயோகியாக வந்த நடராச வள்ளல் பொற்சபைக்கு
எழுந்தருளினார்.
நெடுநாள் கழிந்தது. திருவோடு வைக்கப்பட்ட
இடத்தில் இருந்து அதை மறைந்து ஒழியச் செய்த அம்பலவாணப் பெருமான், முன்பு போலச் சிவயோகியாகத் திருவடிவம்
கொண்டு, நாயனார் வீட்டுக்கு
வந்தார். நாயனாரைப் பார்த்து,
"நான்
முன்னே உன்னிடம் தந்த ஓட்டைக் கொண்டுவா" என்றார். நாயனார் திருவோட்டை வைத்த இடத்தில் கண்டாரில்லை. மனைவியாரைக் கேட்கிறார், மற்றவரைக் கேட்கிறார், பிற இடங்களில் தேடுகிறார், திகைக்கிறார். "யோகியாருக்கு என்ன
சொல்வேன், என்ன செய்வேன்"
என்று அலமருகிறார். நாயனார் ஒன்றும் தோன்றாது நிற்கிறார். இந்நிலையில் சிவயோகியார்,
"எவ்வளவு
நேரம்" என்று கூவுகிறார். நாயனார் ஓடிவந்து, "ஐயனே! திருவோட்டை வைத்த இடத்திலும் தேடினேன், வேறு இடங்களிலும் தேடினேன். அதைக்
கண்டிலேன். அப் பழைய ஓட்டினும் சிறந்த ஓடு ஒன்றினை வனைந்து தருகிறேன். ஏற்றுக்
கொண்டு என் பிழையைப் பொறுத்து அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். சிவயோகியாருக்குச்
சினம் மூண்டது. அவர், நாயனாரை உற்று நோக்கி, "என்ன சொன்னாய்? புதிய ஓடா கொடுக்கப் போகிறாய்? யான் கொடுத்த மண் ஓடு தான் வேண்டும்.
மற்றது பொன் ஓடே ஆயினும் எனக்கு வேண்டாம்.
என் ஓட்டைக் கொண்டு வா" என்றார். நாயனார் நடுக்குற்றுப் பெரியவரைப்
பணிந்து, "ஐயரே! தங்கள்
திருவோடு கெட்டு விட்டது. என்ன செய்வேன்" என்று ஏக்கத்தோடு நின்றார்.
புண்ணியப் பொருளாய் உள்ள பெருமான்,
"என்ன
இது? உன்பால் வைத்த
அடைக்கலப் பொருளை வௌவிக் கொண்டாய். பழி
பாவத்திற்கு அஞ்சுகிறாய் இல்லை,
நான்
உன்னை விடமாட்டேன். என் ஓட்டை வாங்கிக்
கொண்டே போவேன்" என்றார். நாயனார், "திருவோட்டை
நான் வௌவினேனில்லை. என் உள்ளத்திலும் களவு இன்மையை நான் எப்படி விளக்குவேன்"
என்று இரங்கிக் கூறினார். "அப்படியானால், உன் மகனைப் பற்றிக் குளத்தில் மூழ்கித்
திருவோடு கெட்டது என்று சொல்லிப் போ" என்றார் சிவயோகியார். அதற்கு நாயனார், "எனக்குப் புதல்வன்
இல்லையே" என்றார். சிவயோகியார், "உன்
மனைவியைப் பற்றிச் சொல்" என்றார். அதற்கும் நாயனார், "எனக்கும் என் மனைவிக்கும் முன்னமே ஒரு
சூள் உண்டு. அதனால் அவள் கையைப் பிடித்து முழ்க இயலாமை குறித்து
வருந்துகிறேன். நானே முழ்கி உண்மையைச் சொல்கிறேன்"
என்றார். சிவயோகியார் சினந்து,
"என்
ஓட்டையும் கொடாமல், மனைவியைப் பற்றிக்
குளத்தில் முழ்கவும் இசையாமல், சிந்தை வலித்து
இருக்கிறாய். தில்லைவாழ் அந்தணர்கள் கூடியுள்ள பேரவையில் என் வழக்கை உரைக்கப்
போகிறேன்" என்று சொல்லி விரைந்து நடந்தார். நாயனாரும் அவரைத் தொடர்ந்து
நடந்தார்.
சிவயோகியார் அந்தணர் அவைக்களம் புகுந்து
நிகழ்ந்ததைக் கூறினார். வேதியர்கள் வேட்கோவரைப் பார்த்தார்கள். இருவர் கூற்றையும்
கேட்ட அந்தணர்கள், வேட்கோவரை நோக்கி, "இவருடைய ஓட்டை நீர்
இழந்தீராயின், இவர் விரும்பும்
வண்ணம் செய்வத நியாயம்" என்று தீர்ப்புக் கூறினார்கள்.
தமக்கும் தம் மனைவிக்கும் உள்ள
தீண்டாமையை நாயனார் வெளியிடமாட்டாராய், "பொருந்திய
வகையால் குளத்தில் முழ்குகிறேன்" என்று சொல்லி, சிவயோகியாருடன் தமது இல்லத்திற்குச்
சென்று, மனைவியாரை அழைத்துக்
கொண்டு, திருப்புலீச்சுரத்திற்கு
முன் உள்ள திருக்குளத்தை அடைந்து,
ஒரு
மூங்கில் தண்டின் ஒரு முனையை மனைவியார் பற்ற, மற்றொரு முனையைத் தாம் பற்றி
முழ்கலானார். அப்போது சிவயோகியார், "உன் மனைவியைக்
கைப்பற்றி மூழ்கு" என்றார். நாயனார், அப்படிச் செய்யக் கூடாமையை யாவரும் அறிய
விளக்கி மூழ்கிக் கரை ஏறினார். ஏறிய இருவரிடமும் முதுமை ஒழிந்து இளமைச் செவ்வி
மலர்ந்தது. அக் காட்சியைக் கண்டவர்கள், அங்கிருந்த
சிவயோகியாரைக் கண்டார்களில்லை. அந்
நேரத்தில் சிவயோகியாக வந்த சிவபெருமான் உமையம்மையாருடன் விடைமீது காட்சி
வழங்கினார். திருநீலகண்ட நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவபெருமானை வணங்கிப் போற்றி
இன்பக் கடலில் மூழ்கினர். எல்லாம் வல்ல இறைவர், "ஐம்புலனை வென்ற விழுமிய அன்பர்களே! இவ்
இளமை என்றும் நீங்காமல் நம்மிடத்து இருங்கள்" என்று திருவருள் சுரந்து
எழுந்தருளினார். நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோகத்தினை அடைந்தார்கள்.
உரன் என்னும் தோட்டியால் ஒப்பற்ற புலன்கள் ஐந்தையும்
வென்றவர் திருநீலகண்ட நாயனார்.
இதே திருக்குறளை வைத்து, பிறைசை சாந்தக் கவிராயர் என்பார் தாம்
இயற்றிய "நீதிசூடாமணி" என்னும் இரங்கேச வெண்பாவில், பின்வரும்
பாடலைப் பாடி உள்ளார்.
மன்னன்
மகமும் காதி மைந்தன் தனைஅடைந்தோன்
இன்உயிரும்
காத்தான் இரங்கேசா - சொன்னால்
உரன்என்னும்
தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும்
வைப்புக்கு ஓர் வித்து.
இப் பாடலின் பதவுரை --- இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே, மைந்தன் ---
விசுவாமித்திர முனிவர், மன்னன் மகமும் ---
அபம்ரீஷன் என்னும் மன்னனுடைய நரமேத யாகத்தையும், தனை அடந்தோன் இன் உயிரும் --- தன்னை
அடைக்கலம் அடைந்த தன்னுடைய தமக்கை மகனாகிய சுனாசிபனுடைய இனிய உயிரையும் காத்தான் ---
முற் காலத்தில் அழியாமல் காப்பாற்றினார், இதனால்
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும்
காப்பான் --- திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம்
புலன்கள் மேல் செல்லாமல் காப்பான்;
வரன்
என்னும் வைப்பிற்கு ஓர் வித்து --- எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும்
வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
கருத்துரை --- முற்றத் துறந்த
முனிவரால் முடியாத காரியமில்லை.
விளக்கவுரை --- அம்பரீட மன்னன் ஒரு
பயனைக் கருதி நரமேத யாகம் செய்ய எண்ணினான். மனித வேள்வியினை மனிதனைப் பலி கொடுத்தே
செய்யவேண்டும். ஆகையால், அதற்காக ஓர் வேதிய
மைந்தனை நாடிச் சென்று பல இடத்திலும் தேடித் திரிந்து நாடி வனத்தில் வந்து, விசுவாமித்திரருடைய
தமக்கை கௌசிகியின் கணவராகிய இரிசித முனிவரைக் கண்டு தன் எண்ணத்தை வெளியிட்டான்.
அவருக்கு மைந்தர் மூவர். மூவரில் மூத்தவன் மேல் தந்தைக்கு அன்பு அதிகம். கடைசி
மைந்தன் மேல் தாய்க்கு அன்பு. இருவரும் நடுப்பிள்ளையைக் கொடுப்பது என முடிவு
செய்தார்கள். அதற்காகப் பொருளும் பெற்றுக்கொண்டார்கள். தாய் தந்தையர்
விரும்பியபடி நடுப்பிள்ளையும் உடன்பட்டு அம்பரீடனுடைய தேர் மேல் ஏறிக்கொண்டு
அவனோடு சென்றான். இடைவழியில் அம்பரீடன், பகல்
கடன் நிறைவேற்ற வனத்தில் அங்கோரிடத்தில் தேரை நிறுத்துத் தங்கினான். அவனோடு சென்ற சிறுவனும், தன் கடனை முடிக்க அங்கோரிடத்தில்
சென்றபோது, தன் அம்மானாகிய
விசவாமித்திர முனிவரைக் கண்டு, வணங்கி அங்குத் தான்
வந்த வரலாற்றை விளங்க உரைத்தான். அது கேட்ட முனிவர் அச்சிறுவனுடைய நற்குணத்தை
வியந்து, "மருமகனே அஞ்சாதே, பெற்றோரிடத்தில் உனக்குள்ள பத்திக்கும்
கீழ்ப்படிதலுக்கும் நான் மெத்த மகிழ்கின்றேன். யாகத்தில் உன் உயிருக்குக் கெடுதி
ஒன்றும் வராது. யாகமும் நரமேதமாகவே முடியும். இந்தா, இந்த இரு மந்திரங்களையும் பாடம்
பண்ணிக்கொள்" என்றார். சிறுவனும் அவ்வாறே உருவேற்றினான். அதனால் அவனுடைய
உயிர் தப்பியது. மனிதவேள்வியும் இனிது நிறைவேறியது. அரசன் விரும்பிய பலனும்
கிடைத்தது.
சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து
சென்னமல்லையர் தாம் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில், மேற்குறித்த திருக்குறளை வைத்து, பின் வரும்
பாடலைப் பாடி உள்ளார்.
நல்ல
சுகருக்கு அன்றி நாணுவதுஎன் வேதமுனி
செல்ல
மடவார், சிவசிவா, - சொல்லின்
உரன்
என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன்
என்னும் வைப்புக்கோர் வித்து.
வேதமுனி - வியாசர். உடையின்றி நீராடிய
வானகப் பெண்கள் வியாசரைக் கண்டு நாணினர். அவர் மகன் சுகருக்கு நாணவில்லை.
இத்
திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்த பாடல்கள்...
உரன்
உடையான் உள்ளம் மடிந்து இருத்தல் இன்னா,
மறன்
உடை ஆள் உடையான் மார்பு ஆர்த்தல் இன்னா,
சுரம்
அரிய கானம் செலவு இன்னா, இன்னா
மன
வறியாளர் தொடர்பு. --- இன்னா நாற்பது.
இதன்
பொருள் ---
உரன் உடையான் உள்ளம் மடிந்து இருத்தல் இன்னா
--- திண்ணிய அறிவுடையவன் மனம் மடித்து இருத்தல் துன்பமாம்;
மறன் உடை ஆள் உடையான் மார்பு ஆர்த்தல் இன்னா ---
வீரமுடைய ஆட்களை உடையான் மார்பு தட்டுதல் துன்பமாம்;
சுரம் அரிய கானம் செலவு இன்னா ---
அருநெறியாகிய இயங்குதற்கு அரிய காட்டின் கண் செல்லுதல் துன்பமாம்;
மனம் வறியாளர் தொடர்பு இன்னா - மன வறுமை உடையாரது
சேர்க்கை துன்பமாம்.
மெய்வாய்கண்
மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய
வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற்
காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது
வீடு பெறும். --- நாலடியார்.
இதன்
பொருள் ---
மெய்
வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற ற--- மெய் வாய் கண் மூக்கு செவி என்று சொல்லப்படுகின்ற, ஐ வாய வேட்கை அவாவினை --- ஐந்து
வழிகளாகச் செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காமல் காத்து --- தீயவழிகளில்
நிலைமாறிச் செல்லாமல் பாதுகாத்து,
கைவாய்
உய்க்கும் ஆற்றலுடையான் --- ஒழுக்கநெறியிற் செலுத்தும் வல்லமையுடையவனே, விலங்காது வீடு பெறும் --- தவறாமல்
வீடுபேற்றை அடைவான்.
ஐம்புல விருப்பங்களை ஒழுக்கநெறியிற்
செலுத்தி உய்தல் வேண்டும் என்பது கருத்து.
No comments:
Post a Comment