திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
பாயிர இயல்
மூன்றாம் அதிகாரம் -
நீத்தார் பெருமை.
யான் எனது என்னும் அபிமானத்தை முற்றும் விட்ட
முனிவரது பெருமையைச் சொல்லுவது.
அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பொருள் உண்மைகளை
உலகத்தார்க்கு உள்ளவாறு உணர்த்துபவர் அவரே. வான் சிறப்பு என்னும் இறையருளை
முழுமையாகப் பெற்றவர் அவரே. ஆசையைத் துறப்பதே துறவு.
அறம், பொருள் இன்பம் என்னும்
நூல் பொருளை உணர்த்துகின்ற ஆசிரியருக்கு உரிய இலக்கணத்தை "நன்னூல்"
வகைப்படுத்தி உள்ளது.
குலன், அருள், தெய்வம் கொள்கை, மேன்மை,
கலை
பயில் தெளிவு, கட்டுரை வன்மை;
நிலம்
மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்;
உலகியல்
அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன்
நூல் உரை ஆசிரி யன்னே --- நன்னூல்.
உயர்குடிப் பிறப்பும், உயிர்கள் மேல்
கருணையும், கடவுள்
வழிபாடும் ஆகிய இவைகளால் எய்திய மேன்மையும், பல நூல்களிலே பழகிய தெளிந்த
அறிவும்,
நூல்
பொருளை மாணவர் எளிதில் உணரும்படி தொடுத்துச் சொல்லும் வன்மையும் அமைந்து இருக்கவேண்டும்.
நிலத்தையும் மலையையும் துலாக்கோலையும்
பூவையும் ஒத்த குணங்கள் வாய்க்கப்பெற்று இருக்கவேண்டும்.
உலக நடையை அறியும் அறிவும், உயர்வாகிய
குணங்கள் ஆகியவை நிறையப் பெற்றவனே நூலைக் கற்பிக்கும் ஆசிரியன் ஆவான் என்று உரை
ஆசிரியருக்கு இலக்கணம் வகுக்கின்றது நன்னூல்.
நூலை ஒருவன் ஓதுவதன் பயன் அறம் பொருள் இன்பம்
வீடு என்னும் உறுதிப் பொருள்களை அடைதலே ஆகும். "அறம் பொருள் இன்பம் வீடு
அடைதல் நூல் பயனே" என்கின்றது நன்னூல். அதனால்தான், "கற்க கசடு
அற" என்னும் சொல்லுக்கு, கற்க வேண்டிய நூல்கள்எவை என்பதற்கு அறம் போருள்
இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்தும் நூல்கள் என்றார் பரிமேலழகர்.
உரை ஆசிரியருக்கு நிலத்தையும், மலையையும், துலைக் கோலையும், பூவையும் ஒத்த
குணங்கள் வாய்க்கப்பெற்று இருக்கவேண்டும் என்கின்றது நன்னூல்.
நிலத்தின் பெருமையாவது.....
தெரிவரும்
பெருமையும், திண்மையும், பொறையும்,
பருவ
முயற்சி அளவில் பயத்தலும்
மருவிய
நல் நில மாண்பு ஆகுமே
பிறரால் அறியப்படாத உருவத்தின் பெருமையும், பெரிய பாரம்
செய்து தன் மேலே நெருங்கின் அவைகளால் கலங்காத வலிமையும், தன்னை அடுத்த மனிதர்
தோண்டுதல் முதலிய குற்றங்களைச் செய்யினும் பொறுக்கும் பொறுமையும், பருவத்திலே
உழவர் செய்யும் முயற்சி அளவிற்குத் தக அவர்க்குப் பயனைத் தருதலும், நல்ல நிலத்தின்
இடத்துப் பொருந்திய குணங்கள் ஆகும்.
அதாவது, பிறரால் அறியப்படாத
கல்வி அறிவின் பெருமையும், பெரிய வாதம் செய்து தன் மேலே நெருங்கினவரால்
கலங்காத வலிமையும், தன்னை அடுத்த மாணாக்கர் இகழ்தல் முதலிய குற்றங்களைச் செய்யினும்
பொறுக்கும் பொறுமையும், பருவத்திலே மாணாக்கர் செய்யும் முயற்சி
அளவிற்குத் தக அவர்க்குப் பயனைத் தருதலும் ஆசிரியன் இடத்துப் பொருந்தியிருக்க
வேண்டிய குணங்கள்.
ஆதலால் நிலம் அவனுக்கு உவமானம் ஆயிற்று
மலையின் பெருமை ஆவது.......
அளக்கல்
ஆகா அளவும், பொருளும்,
துளக்கல்
ஆகா நிலையும், தோற்றமும்,
வறப்பினும்
வளம்தரும் வண்மையும் மலைக்கே
அளவு செய்யப்படாத தன் வடிவத்தின் அளவும், அளவு
செய்யப்படாத பல வகைப் பொருளும், எப்படிப்பட்ட வலிமை உடையவராலும் அசைக்கப்படாத
உருவத்தின் நிலையும், நெடுந்தூரத்தில் உள்ளாராலும் காணப்படும் உயர்ச்சியும், மழை பெய்யாமல்
வறந்த காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர்வளத்தைக் கொடுக்கும் கொடையும்
மலைக்கு உள்ள குணங்கள் ஆகும் .
அளவு செய்யப்படாத தன் கல்வியின் அளவும், அளவு
செய்யப்படாத பலவகை நூல்பொருளும், எப்படிப்பட்ட புலமையை உடையோராலும் அசைக்கப்படாத
கல்வி அறிவின் நிலையும், நெடுந்தூரத்தில் உள்ளாராலும் அறியப்படும்
உணர்ச்சியும்,
பொருள்
வரு வழி வறந்த காலத்திலும் தன்னைச் சேர்ந்த மாணாக்கருக்குக் கல்விப் பொருளைக்
கொடுக்கும் கொடையும் ஆசிரியனுக்கு அமைந்து இருக்கவேண்டிய குணங்கள்.
ஆதலால் மலை அவனுக்கு உவமானம் ஆயிற்று.
தராசுக் கோலின் பெருமை ஆவது.....
ஐயம்
தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு
நிலையும் மிகும் நிறை கோற்கே
சந்தேகம் தீர நிறுக்கப்பட்ட பண்டத்தின்
அளவைக் காட்டலும், உண்மைபெறத் தான் இரண்டு தட்டுக்களுக்கும் நடுவே நிற்றலும் தராசு
கோலின் இடத்து இருக்க வேண்டிய குணங்களாகும்.
சந்தேகம் தீர வினாவப் பட்ட சொல்பொருளின்
இயல்பைக் காட்டலும், புலவர் இருவர் மாறுபட்டார் ஆயின் உண்மை பெறத் தான் அவ் இருவருக்கும்
நடுவாக நிற்றலும் ஆசிரியன் இடத்து இருக்கவேண்டிய குணங்களாகும்.
ஆதலால், நிறைகோல் அவனுக்கு
உவமானம் ஆயிற்று
மலரின் பெருமை ஆவது......
மங்கலம்
ஆகி இன்றி அமையாது
யாவரும்
மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின்
முகம் மலர்வு உடையது பூவே
சுப கருமத்திற்கு உரியதாகி, யாதொரு செயலும்
அலங்கரிக்கும் தான் இல்லாது முடியாது ஆக, கண்டோர் யாவரும் களித்து மேலாகத் தன்னைச்
சூடிக்கொள்ள,
மெல்லிய
குணம் உடையதாகி,
மலர்தற்கு
உரிய காலத்திலே முகம் விரிதலை உடையது பூவாகும்.
சுப கருமத்துக்கு உரியவன் ஆகி, யாதொரு செயலும்
சிறப்பிக்கும் தான் இல்லாது முடியாது ஆக, கண்டோர் யாவரும் களித்து மேலாகத் தன்னை
வைத்துக் கொள்ள,
மெல்லிய
குணம் உடையவன் ஆகிப், பாடம் சொல்லுதற்கு உரிய காலத்திலே முக மலர்தலை உடையவன் ஆசிரியன்.
ஆதலால், பூ அவனுக்கு உவமானம்
ஆயிற்று.
ஆசிரியர் ஆகத் தகுதி அற்றவர்கள் யார்
என்பதையும் "நன்னூல்" நமக்குக் காட்டுகின்றது....
மொழிகுணம்
இன்மையும், இழிகுண இயல்பும்,
அழுக்காறு, அவா, வஞ்சம், அச்சம் ஆடலும்,
கழல்குடம், மடல்பனை, பருத்திக்
குண்டிகை,
முடத்தெங்கு
ஒப்பு என முரண்கொள் சிந்தையும்
உடையோர்
இலர் ஆசிரியர் ஆகுதலே
தான் கற்றவற்றை உள்ளபடியே பாடம் சொல்லும்
குணம் இல்லாதவரும், பொய் பேசுதல் போன்ற இழிந்த குணங்களை இயற்கையிலேயே
கொண்டிருப்பவரும், அஞ்சத் தகாத செயல்களுக்கு அஞ்சுபவரும், பொறாமை, பேராசை, வஞ்சனை முதலியவை
தோன்றப் பேசுபவராய் இருத்தலும், கழல் பெய்த குடம், மடல்களையுடைய பனைமரம், பருத்திக்
குண்டிகை,
முடத்
தெங்கு ஆகியவற்றிற்கு ஒப்பாக இருப்பவரும் ஆசிரியராகார்.
இதில் ஆசிரியர் ஆவாருக்கு, கழல் பெய்த
குடம்,
மடல்
பனை,
பருத்திக்
குண்டிகை,
முடத்
தெங்கு ஆகிய நான்கினையும் ஒத்த குணம் அமைந்து இருத்தல் கூடாது என்கிறது.
கழல் குடமானது தன்னுள் முன் இட்ட காய்களைப்
பின்னும்,
பின்
இட்ட காய்களை முன்னுமாக மாற்றித் தருவதோடு, தன் உள்ளே இட்ட காய்களை
விரைந்து வெளிப்படுத்தும் தன்மையும் உள்ளது.
ஆசிரியன் ஆனவன், முன்னே கூற வேண்டியதைப்
பின்னும்,
பின்னேகூற
வேண்டியதை முன்னுமாகக் கூறி இடர்ப்பட வைக்கக்கூடாது. பாடம் கற்போர் மனத்தில் கொள்ள
முடியாதபடி விரைந்தும் சொல்லக்கூடாது.
அடுத்து, மடல் பனை மரமானது, ஒருவன் எளிதில்
ஏற முடியாதபடி இன்னல் செய்யும் மட்டைகளை உடையது. பழங்களைத் தானே கொடுக்குமே அன்றி, விரும்பிய
வகையில் விரும்பிய நேரத்தில் ஏறிப் பறித்துக்கொள்ள முடியாது.
ஆசிரியன் ஆனவன் தன்னே யாரும் எளிதில்
விரும்பி அடைய முடியாதவனாக இருத்தல் கூடாது. தானாக விரும்பினால் கற்றுக் கொடுப்பது
அல்லாமல்,
பிறர்
தன்னை நெருங்கிக் கறிக வந்தால், அவருக்குக் கற்றுத் தர மாட்டாதவராக இருத்தல் கூடாது.
அடுத்து, ஆசிரியனுக்கு இருக்கக்
கூடாத இயல்பாக,
பருத்திக்
குண்டிகை கூறப்பட்டது. பருத்தியைத் தூய்மை செய்து, அதைப் பாதுகாப்பதற்காக
உள்ள சிறிய வாயை உடைய ஒரு பொருள் குடிக்கை அல்லது குண்டிகை எனப்படும். அந்தக் குண்டிகையானது பருத்தியைத் துருத்தும்
போது சிறிது சிறிதாக ஏற்றுக் கொள்ளும். திரும்ப எடுக்கும்போதும் சிறிது சிறிதாகவே
எடுத்துக்கொள்ள இடம் தரும்.
ஆசிரியன் என்பவர், தான் கற்கும் காலத்தில்
மிகவும் வருந்தித் துன்பப்பட்டு சிறிது சிறிதாகவே கற்று இருப்பார். மனம் உவந்து
முழுமையாக எதையும் கற்று இருக்கமாட்டார். பிறருக்குக் கற்றுத் தரும்போதும் மிகவும்
வருத்தப்பட்டு சிறிது சிறிதாகவே கற்றுத் தருவார். இத்தன்மையவர் ஆசிரியர் ஆகத்
தகுதி இல்லாதவர்.
அடுத்ததாக, முடத் தெங்கு
ஆசிரியருக்குக் காட்டப்பட்டது. தனக்கு உரிய எல்லையாக இடப்பட்ட வேலியைத் தாண்டி, வளைந்து
வளர்ந்துள்ள தென்னை மரம் முடத்தெங்கு ஆகும்.
தெங்கு - தென்னை. நீர் பாய்ச்சி வளர்த்தவருக்குப் பயன்படாமல், அடுத்தவருக்குப்
பயன் தருவது இது.
ஆசிரியன் என்பான் தன்னை அண்டி வழிபட்டுப்
பாடம் கேட்பவர்களை விடுத்து, பிறருக்குக் கற்றுக் கொடுப்பவராக இருத்தல்
கூடாது.
அற நூல்களை உரைப்பதற்கு உரியவர் யார் என்ற
இலக்கணத்தை அறநெறிச்சாரம் என்னும் நூல் வகுத்துள்ளது.
அறநூல்கள் பலவற்றையும் அறிஞரிடம் கேட்டு
அறிந்தவனாய்,
இயற்கையிலேயே
அருட்குணம் உடையவனாய், ஐம்புல இன்பங்களை விரும்பாதவனாய், அகம் புறம் ஆகிய
இருவகைப் பற்றுக்களையும் விட்டவனாய், அடக்கம் உடையவனாய் விளங்கி, நிலைபெற்ற
உயிர்கள் பிழைப்பதற்கு உரிய வழியினை உரைக்கக் கூடியவன் எவனோ, அவனே அற நூல்களை
விளக்கிச் சொல்லித் தருவதற்கு உரியவன் ஆவான்.
அறம்கேட்டு, அருள்புரிந்து, ஐம்புலன்கள் மாட்டும்
இறங்காது, இருசார் பொருளும் - துறந்து, அடங்கி
மன்னுயிர்க்கு
உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்,
பன்னுதற்குப்
பாற்பட் டவன்.
அவ்வாறே, அறநூல்களை உரைப்பதற்குத் தகுதி இல்லாதவன் யார்
என்றும் "அறநெறிச்சாரம்" கூறி உள்ளது.
குழந்தை, பேய்பிடித்தவன், பைத்தியக்காரன், நோயாளி, முன்னேற்றத்தில்
கருத்து இல்லாதவன், அறிவில்லாதவன், குடிகாரன், பிறர்க்குத் துன்பம்
செய்பவன்,
பேராசைக்காரன், குற்றம்
உடையனவற்றையே ஆராய்ந்து பற்றிக் கொள்பவன் ஆகிய இந்தப் பத்து பேரும் அறநூலை உரைப்பதற்கு உரிமை
இல்லாதவர்.
பிள்ளை,பேய், பித்தன், பிணியாளன், பின்னோக்கி,
வெள்ளை, களி, விடமன், வேட்கையான், - தெள்ளிப்
புரைக்கப்
பொருள்உணர்வான் என்று இவரே நூலை
உரைத்தற்கு
உரிமைஇலா தார்.
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களை உலகவர்க்கு
உணர்த்துபவரே துறந்தார் என்பது இதனால் நன்கு தெளிவாகும். இத்தகு சிறப்பு உடையோரிடத்து அறநூல்களைக்
கேட்பதால் உண்டாகும் பயன்கள் இரண்டு. ஒன்று, அறிவு ஒழுக்கங்களோடு
சிறந்த இல்லறத்தில் வாழ்வது. மற்றொன்று, இல்லறத்தில் சிறந்து வாழ்வது மட்டுமே
அல்லாமல்,
ஞானத்தால்
தலை சிறந்து என்றும் மீளுதல் என்பதே இல்லாத வீடுபேற்றினை அடைவது.
காட்சி
ஒழுக்கொடு ஞானம் தலைநின்று
மாட்சி
மனைவாழ்தல், அன்றியும் -- மீட்சிஇல்
வீட்டுஉலகம்
எய்தல் என இரண்டே நல்லறம்
கேட்டதனால்
ஆய பயன்.
யான் எனது என்னும் அபிமானத்தை விட்டவரை
முற்றத் துறந்தவர், அவரே நீத்தார்
என்று முன்னே கண்டோம். அது எப்படித் தலைக்கூடும் என்பதை, பரிமேலழகர் பின்வருமாறு
வகுத்துக் காட்டுகின்றார்.
தத்தமது வருணத்திற்கும் நிலைக்கும் உரிய
ஒழுக்கங்களில் நின்று துறத்தல் வேண்டும். அதாவது, தமக்கு உரிய
ஒழுக்கங்களில் நின்று தவறாது நடக்கப் புண்ணியம் வளரும். புண்ணியம் வளர, பாவம் குறையும்.
பாவம் குறைய அறியாமை நீங்கும். அறியாமை நீங்க, இது நித்தியம், இது அநித்தியம்
என்னும் பகுத்தறிவும், சிறிது நேரமே நின்று அழியும் தன்மை உடைய இம்மை மறுமை
இன்பங்களில் வெறுப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும். அது தோன்றவே, வீடு பேற்றில்
விருப்பம் உண்டாகும். அது உண்டாகவே, பிறவிக்குக் காரணமாகிய பொருள் இன்பங்களைத்
தேடுவதற்கு உரிய வீண் முயற்சிகள் எல்லாம் நீங்கும். அப்படி நீங்கவே, வீடு பேற்றினை
அடைவதற்கு நிமித்த காரணமாகிய யோக முயற்சி உண்டாகும். யோக முயற்சி முதிர முதிர, தத்துவஞானம்
பிறந்து,
புறப்பற்று
ஆகிய எனது என்னும் மமகாரமும், அகப்பற்று ஆகிய நான் என்னும் அகங்காரமும்
நீங்கும்.
புறப்பற்றும் அகப்பற்றும் நீங்கினால், "அற்றது பற்று
எனில், உற்றது
வீடு".
இந்த வகையில் நின்று முற்றத் துறந்தவர்களுடைய
பெருமையைக் கூறமுற்பட்டால், இவ்வளவு என்று எண்ணிக்கையால் சொல்லி மாளாது. அளவு
படாது நிற்கும். அது இந்த உலகத்திலே இது வரையிலும் பிறந்து இறந்தவர்கள் எத்தனை
பேர் என்று எண்ணி அறிவது போல் ஆகும். ஆகவே, துறந்தவரது பெருமைக்கு
அளவு இல்லை என்று, இந்த அதிகாரத்தின் இரண்டாவது திருக்குறள் கூறுகின்றது.
அவ்வாறு முற்றத் துறந்தவர்கள் இறைவனோடு
வைத்துப் போற்றத் தக்கவர்கள் ஆவர். "மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம்
தானும் அரன் எனத் தொழுமே" என்னும் சிவஞான போதம் பன்னிரண்டாம் சூத்திரக்
கருத்து இங்கு வைத்து எண்ணுதற்கு உரியது.
"கங்கை
வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில், அவர் கண்டீர் நாம் வணங்கும்
கடவுளாரே" என்னும் அப்பர் பெருமானாரின் அமுத வாக்கும் எண்ணத்தக்கது.
இனி,
திருக்குறளைக் காண்போம்.....
துறந்தார்
பெருமை துணைக் கூறின், வையத்து
இறந்தாரை
எண்ணிக் கொண்டு அற்று.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
துறந்தார் பெருமை
துணைக் கூறின்
--- இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின்
அளவுபடாமையான்;
வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று
--- இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும்.
(முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)
இத் திருக்குறளையும், தாம் வணங்கும் கடவுளாகிய திருமாலின் பெருமையையும் நன்கு உணர்ந்த
பெருமகனார் ஒருவர் "திருப்புல்லாணி மாலை" என்று தாம் பாடிய
நூலில், பின்வருமாறு
பாடியுள்ளார்.....
குறைந்தார்
குறைந்தார் எனாத் துறந்தார் பெருமைத் துணைக்
கூறின், வையத்து
இறந்தாரை
எண்ணிக் கொண்டு அற்று எனலால், இறவாது உனைச்சேர்
துறந்தார்
பெருமை அறிந்தும் என் போலிகள் சொல்ல வற்றோ
மறந்தார்கள், நீ மறந்தேனும் சொல்லாய், புல்லை வாமனனே.
முற்றத் துறந்த முனிவர்களின் பெருமையைச்
சொல்லப் புகுந்தால், அது இந்த உலகத்திலே பிறந்து இறந்தவர்கள் எத்தனை பேர் என்று
எண்ணப் புகுந்து, எப்படி அளவு படாது போகுமோ, அது போல அளவிறந்து
நிற்கும்.
வாமன அவதாரம் கொண்டவனே!
திருப்புல்லாணி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள
தெய்வச்சிலைப் பெருமாளே! தேவரீரது திருவடியை அடைந்த அடியவர்களின் பெருமையை
அறிந்து இருந்தும், என்னைப் போன்றவர்கள் சொல்ல முடியாமல் மறந்தார்கள். என்பதைச்
சொல்லி அருளுவாயாக.
நன்மை தரும் எப்பொருளையும் மனிதர்கள்
மறக்கவேண்டும் என்று எண்ணுவது இல்லை. உலகியல் நிலையில் உழன்றுகொண்டு, நாளும் சிறிது
காலமே நிலைத்திருக்கக் கூடிய சிற்றின்பத்தையே பெரிதும் அனுபவித்து வருவதாலும், அதுவே எளிதில்
கிடைக்கக் கூடியதாக இருப்பதாலும், நிலையான இன்பத்தைத் தரும் பெரிய பொருளை இயல்பாகவே
மறந்து உழல்கின்றனர். நிலையான இன்பம் என்பது எளிதில் பெற முடியாதது. அரிதின்
முயன்று பெற வேண்டியது. துன்பம் வரும்போது அதை நீக்கிக் கொள்ளத் தம்மால் இயலாது
என்று உணர்ந்து,
அப்போது
மட்டும் இறையைத் தேடுகின்றனர். அதுவும் கைகூடாத போது, இந்தத் தெய்வம்
சரியில்லை என்று, வேறு தெய்வத்தை நாடிச் செல்கின்றனர். சிற்றறிவு உடைய
உயிர்க்கு,
தெய்வம்
ஒன்றே என்பதும்,
அது
அவரவர் விரும்பிய வடிவத்தை எடுக்கும் எளிய கருணை வாய்ந்தது என்பதைத் தெளிய
முடியவில்லை.
காரணம், அதற்கு முற்றத் துறந்த
முனிவர்களை,
தூய
உள்ளம் படைத்தோரை நாடும் நல்வினை வாய்க்கப் பெறவில்லை.
உண்மைப் பொருளை உணர்த்துபவர் அவரே.
வாய்த்தால் அவரையே குருவாகக் கொள்ளுதல் வேண்டும்.
சிவமே குரு. குருவே
சிவம்.
குருவே சிவம் எனக் கூறினன் நந்தி என்கின்றார்
திருமூலர்.
குருவே
சிவம் எனக் கூறினன் நந்தி,
குருவே
சிவம் என்பது குறித்து ஓரார்,
குருவே
சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்,
குருவே
உரை உணர்வு அற்றது ஓர் கோவே .
வேதத்திற் சொல்லப்படாத அறம் யாது ஒன்றும்
இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டிய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவு உடையோர் பலரும் வேதத்தை மறுத்துச்
செய்யும் சொற்போரை விடுத்து, எல்லாச் சொல் வளமும், பொருள் வளமும் உடைய வேதத்தை ஓதியே வீட்டினை
அடையும் நெறியைப் பெற்றார்கள்.
வேதத்தை
விட்ட அறம் இல்லை, வேதத்தின்
ஓதத்
தகும் அறம் எல்லாம் உள, தர்க்க
வாதத்தை
விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை
ஓதியே வீடுபெற் றார்களே.
இறைவனால் திருவாய் மலர்ந்து அருளப்பெற்ற
வேதங்களை ஒதியும் தெளிவு பெறாத சனகாதி முன்வர்களுக்கு, இறைவன் குருவடிவம் தாங்கி, கல்லால மரத்தின்
கீழ் எழுந்தருளி, வேதத்தின் உட்பொருளாக விளங்குவது தானே என்றும், தன்னை அடைவதே
அதன் பயன் என்றும், உணர வேண்டிய விதத்தில், உணர வேண்டிய நிலையில்
இருந்து உணர்த்தியது இறைவனே.
கேட்டவர்கள் சாமானியர்கள் அல்ல. நான்கு
வேதங்களையும்,
ஆறு
அங்கங்களையும் கற்றும், கற்றார்பால் கேட்டும் வல்லவர்கள். வெறும் கல்வி கேள்விகளால் இறைவனை உணர
முடியாது. கற்ற வழியும் கேட்ட வழியும்
நிற்க வேண்டும். "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்றார் திருவள்ளுவ தேவர்.
காரணம்,
இறைவன்
மாற்றம் மனம் கழிய நின்றவன். வாக்கு இறந்த பூரணமாக உள்ளவன்.
கல்லாலின்
புடையமர்ந்து நான்மறை ஆறு
அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள்
நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய்
அல்லதுமாய் இருந்தனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல்
சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
நாம் சனகாதி முனிவர் அல்ல. மும்மலங்களும்
நிறைந்த சகலர்கள். சகலர்களாகிய நமக்கு உணர்த்த சகல வடிவம் தாங்கியே பரம்பொருள்
வரும். மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல. யானையைக் காட்டி யானையைப் பிடிப்பது
போல. மனிதர்களை ஆட்கொள்ள மனித வடிவம் தாங்கியே, மானிடச் சட்டை தாங்கியே இறைவன் வருவான். அதனாலாயே, குருவே சிவம் என்றனர்.
அந்த நிலையில் நமக்கு உணர்த்தப்பட்டவையே
திருக்குறள் முதலாகிய வாழ்வியல் நூல்களும், பன்னிரு திருமுறை
மற்றும் திவ்விய பிரபந்தம் முதலான அருள் நூல்களும் ஆகும். இறைவனே, திருவள்ளவர்
முதலாகிய அருட்புலவர்களாகவும், நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும்
திருமேனி தாங்கி வந்து, வேதத்தின் உட்பொருளை உணர்த்தினான் என்பது தெளிவு.
ஆக, அந்த அருள் நூல்களுக்கு உரையை அருளி நம்மை
நல்வழிப் படுத்துபவர்களும், இறையருளைப் பெற்றவராகிய நீத்தாரே ஆவர். அதனால்
தான்,
அறம்
முதலாகிய பொருள்களே உலகிற்கு உள்ளவாறு உணர்த்துபவர் அவரே என்றார் பரிமேலழகர்.
அத்தகு பெருமை மிக்க நீத்தாருடைய அருமை
பெருமைகளை உணர்ந்தால் மட்டுமே, அருள் நூல்களின் பெருமையும் அருமையும் நமக்கு
நன்கு விளங்கும்.
அருள் நூல்களை முழுமையும் படித்துத் தெளிய
வாய்ப்பில்லாத நிலையில், அதனை உரைப்பவர்களை நாடுகின்றோம். அவர்கள் வெறும்
கல்வியாளர்களாக மட்டும் இல்லாமல், தூய உள்ளத்தினராக இருத்தல் வேண்டும்.
நமக்கு நல்வினைப் பயன் இருக்குமானால், நூல்களைக் கற்று
நுண்ணுணர்வு பெற்ற அருள் உரையாளர்கள் வாய்ப்பார்கள். நம்முடைய சிந்தை தெளிவு பெறும். இல்லையானால், வெறும் நூலுணர்வு
மட்டுமே உள்ளவர்கள் வாய்க்கப் பெறுவார்கள்.
பிறந்தநாள்
மேலும் பிறக்கும்நாள் போலும்
துறந்தோர்
துறப்போர் தொகை. --- திருவருட்பயன்.
இதன் பொருள் : இதுவரையில் பற்று
நீங்கி முத்தி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ணிச் சொல்லுதல் முடியாது. இது, உலகம் தோன்றிய காலந்தொட்டு இது வரையில்
வந்துபோன நாட்களை எண்ணிச் சொல்வது போல முடியாத செயல். அவ்வாறே, இனிமேல் பற்று நீங்கி முத்தி பெற
இருப்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்லுதல் முடியாது. இதுவும், உலகம் முடியும் வரை இனி மேல் வர
இருக்கின்ற நாட்களை எண்ணி அறிய முயல்வது போல முடியாத செயலேயாகும்.
துறப்பதன்
பெருமை குறித்து "புறநானூறு" கூறுவதாவது....
பருதி
சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல்
எழுவர் எய்தி அற்றே,
வையமும்
தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி
அனைத்தும் ஆற்றாது, ஆகலின்
கைவிட்டனரே
காதலர், அதனால்
விட்டோரை
விடாஅள் திருவே
விடாஅதோர்
இவள் விடப்பட்டோரே.
இதன்
பொருள் ---
பருதி
சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் --- ஞாயிற்றால் வலமாகச் சுற்றப்படும் இப் பயன்
பொருந்திய பெரிய நிலவுலகம்; ஒரு பகல் எழுவர்
எய்தியற்று --- ஒருநாளில் எழுவரைத் தலைவராகக் கொண்டாற்போலும் தன்மைத்து; வையமும் தவமுந் தூக்கின் --- உலகியலாகிய
இல்லறத்தையும் தன் வாழ்வாகிய துறவறத்தையும் சீர் தூக்கினால்; தவத்துக்கு ஐயவியனைத்தும் ஆற்றாது ---
தவத்துக்கு வையம் சிறு கடுகவவும் நேர்படாதாம்; ஆகலின் --- ஆதலால், காதலர் கைவிட்டனர் --- வீடு காதலித்தோர்
இல்வாழ்விற் பற்றுவிட்டனர்; திரு விட்டோரை விடாள்
--- திருமகள் தன்பாற் பற்றுவிட்டோரை நீங்காள்; இவள் விடப்பட்டோர் --- இத் திருமகளால்
விடப்பட்டோர்; விடார் - இல்வாழ்விற்
பற்றுவிடாது, அதனுள் --- அழுந்தி
வருந்துவர்
எ - று.
பருதியால் சூழ்வரப்பட்டது நிலம்
என்றாராயினும் நிலத்தாற் சூழ்வரப்பட்டது
பருதி யென்பது கருத்தாகக் கொள்க. எழுவார் தலைவராகிய வழி, அவர் கீழ் வாழ்வோர்க்கு ஒருகாலும்
இன்பமில்லையாம்; இன்பம் போலத் தோன்றுவதெல்லாம் துன்பமேயாதலின் “ஒரு பகல் எழுவரெய்தியற்று”
என்றார். எழுவர் என்பது பலர் என்னும் பொருள்பட நின்றது. இல்வாழ்க்கை உற்ற நோய்
பொறாது வருந்துதலும் உயிர்க்கு உறுகண் செய்தாரை முறையும் மானமுங் கருதி வருத்துதலு
முடைமையின் தவத்துக்குச் சிறிதுமாற்றாதெனப் பட்டது. தன்பாற் பற்று வைத்தார் கடும் பற்றுள்ளம் உடையராய் அறஞ்செய்தலும் இன்ப நுகர்தலுமின்றித் திருவுடைமைக் கேதுவாகிய அறப்பயனை
யிழத்தலின், “விடாதோர் இவள்
விடப்பட்டோர்” என்றார். “இலர் பலராகிய காரணம் நோற்பார், சிலர் பலர் நோலாதவர்” (குறள். 270) என்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
No comments:
Post a Comment