002. வான்சிறப்பு - 10. நீரின்று அமையாது





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

இரண்டாவது அதிகாரம் -  வான்சிறப்பு

திருக்குறள், அறுத்துப்பாலில், வான் சிறப்பு என்னும் இந்த இரண்டாவது அதிகாரத்தில் வரும் இறுதிப் பாடல், "நீர் இன்றி நடைபெறாது உலகம் என்றால், எப்படிப்பட்டவருக்கும் மழை இன்றி நீர் ஒழுக்குகள் அமையா" என்கின்றது.
                          
நீர்இன்று அமையாது உலகு எனின், யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

         யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் --- எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்;

     ஒழுக்கு வான் இன்று அமையாது --- அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.

         ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின், அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)

இத் திருக்குறளுக்கு அமைந்துள்ள ஒப்புமைப் பகுதிகள்.....

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண்தாது ஊதி, மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே!         --- நற்றிணை.

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,
உண்டி முதற்றே உணவின் பிண்டம்,
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே,
நீரு நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே...        --- புறநானூறு.

இதன் பொருள் ---

நீர் இன்று அமையா யாக்கைக்கெல்லாம் --- நீரை யின்றியமையாத உடம்பிற்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் --- உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார்; உண்டு முதற்று உணவின் பிண்டம் --- உணவை முதலாக வுடைத்து அவ்வுணவாலுளதாகிய உடம்பு; உணவெனப்படுவது நிலத்தொடு நீர் --- ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; நீரும் நிலனும் புணரியோர் --- அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்; ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோர் --- இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்;

மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்
தவம் இல்லார் இல்வழி இல்லை, தவமும்
அரசன் இலாவழி இல்லை, அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்.         --- நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

     மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை --- மழையில்லாமல் இப் பேருலகத்தின் மக்கட்கு நலமில்லை;

         மழையும் தவம் இலார் இல்வழி இல்லை --- அம்மழை தானும் தவம் செய்தல் இல்லாதவர்கள் இருப்பிடங்களில் பெய்தலில்லை;

         தவமும் அரசன் இலாவழி இல்லை --- அவ் வியல்பினதான தவஞ்செய்தலும் செங்கோலரசன் இல்லாதவிடத்து நிகழ்தல் இல்லை;

         அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல் --- அச் செங்கோ் அரசனும், குடிமக்கள் இல்லாதவிடத்து இலன் ஆவான்.

         மழை இல்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம் மழையும் தவம் உடையார் இல்லாத இடத்துப் பெய்தல் இல்லை; அத் தவம் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை; அவ் அரசனும் குடிகள் இல்லாத இடத்தில் இருப்பதில்லை.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...