002. வான் சிறப்பு - 09. தானம் தவம்





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

இரண்டாவது அதிகாரம் -  வான்சிறப்பு

திருக்குறள் - அறத்துப்பால் - வான் சிறப்பு என்னும் இரண்டாவது அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது திருக்குறள், "அகன்ற இந்த நில உலகத்தில் மேகமானது மழையை வழங்காவிட்டால், வறியார்க்கு வழங்குதலும், அருள் ஒழுக்கமும் ஆகிய இரண்டும் நிலைபெறா" என்றது. 
 
இல்லறத்தார்க்கு உரியது தானம். துறவறத்தாருக்கு உரியது தவம். இல்லறமும் துறவறமும் இரண்டுமே நிகழாது என்கின்றது. தானம் புறப்பற்றை அறுப்பது. தவம் அகப்பற்றை அறுப்பது.


தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்,
வானம் வழங்காது எனின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---              

      வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா --- அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா;

     வானம் வழங்காது எனின் --- மழை பெய்யாது ஆயின்.

         (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, புகழ்த்துணை நாயனார் வரலாறு அமைந்திருக்கக் கண்டு, மாதவச் சிவஞான யோகிகள் தாம் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா"வில், பின் வருமாறு பாடி உள்ளார்.


நேய புகழ்த்துணையார் நீராட்டும் கை தளர்ந்து,உன்
துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.

         வான்சிறப்பாவது கடவுளது ஆணையான் உலகமும் அதற்கு அறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல்.

இதன்பொருள்---

         சோமேசா! ஆயுங்கால் - ஆராயுமிடத்து,  வானம் வழிங்குத எனின் - மழை பெய்யாது ஒழியுமாயின்,  வியன் உலகம் - அகன்ற உலகத்தினிடத்து, தானம் தவம் இரண்டும் தங்கா - தானமும், தவமும் ஆகிய இரண்டு அறங்களும் உள ஆகா, 

         நேயம் புகழ்த்துணையார் -  மெய்யன்பினை உடைய புகழ்த்துணை நாயனார், நீர் ஆட்டும் கை தளர்ந்து - திருமஞ்சனம் செய்த கை சோர்ந்து, உன் தூய முடிமேல் வீழ்ந்தார் - தேவரீரது பரிசுத்தமான் திருமுடியின்மேல் வீழ்ந்தார் ஆதலால்.

         தானம் - அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவந்து கொடுத்தல்.  தவம் - மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலானவைகளால் அனுட்டிக்கப்படுவது.  
 
       வானம் - மழை.  பெருமாபான்மை பற்றித் தானம் இல்லறத்தின்மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன என்றார் பரிமேலழகர்.  நேயம் - அன்பு.

         "வானம் சுருங்கின் தானம் சுருங்கும்"  (கொன்றை வேந்தன்) "உயிர் உடலில் நிலைத்திருத்தற்கு உணவும் நீரும் எத்தகைய தவசிகளுக்கும் அவசியம் தேவை. உயிருக்கு ஆதாரமான அந் நீரை மழை தருகிறது. அவ்வாறு வழங்கி வந்த அது வழங்காது நின்றுவிடின் யாரும் தவத்தைச் செய்ய முடியாது. ஆதலால், தவம் தங்காது என்றார். அரிய தவமும் நீரால் நிலைத்து வருகிறது". (செகவீரபாண்டியனார்.)

                                            புகழ்த்துணை நாயனார் கதை

         செருவிலிபுத்தூரின் கண் ஆதிசைவ மரபில் அவதரித்தவர் புகழ்த்துணை நாயனார். அவர், சிவபெருமானை முறைப்படி அருச்சித்து வந்தார். பன்னெடு நாள் மழை பெய்யாது பஞ்சம் மேலிட்டது. உணவு இன்மையால் உடல் தளர்ச்சி உற்றபோதும், தம் கொள்கையை விடாது சிவபூசை செய்து வந்தார். பசியால் நாளுக்கு நாள் அவரது உடல் மெலிந்தது. ஒருநாள் பூசை செய்யும்போது, அவருடைய உடல் மெலிவால் திருக்குடமானது தேவதேவன் திருமுடிமேல் வீழ்ந்தது. அது கண்ட நாயனார் சிவசந்நிதியில் விழுந்து அயர்ந்தார். அந்நிலையில் திருவருளால் அவருக்கு நித்திரை வர, ஐயன் கனவின்கண் எழுந்தருளி, "அன்பனே! இப்பஞ்சம் நீங்கும் வரை உனக்கு நாள்தோறும் ஒரு காசு இங்கே வைப்போம் அதைப் பெற்றுக் கொள்க" என அருளிச் செய்தார். நாயனார் விழித்து எழுந்தார். நாள்தோறும் பீடத்தின்கீழ் ஒரு காசு இருக்கக் கண்டு மகிழ்ந்து, தமது திருத்தொண்டு வழாது நடத்திச் சிவனடிப்பேறு பெற்றார். இது திருத்தொண்டர் புராணத்து உள்ளது. ஆளுடைய நம்பிகளும் தமது திருப்புத்தூர்த் தேவாரத்தில்,

அகத்து அடிமை செய்யும் அந்தணன்தான்
         அரிசிற்புனல் கொண்டுவந்து ஆட்டுகின்றான்
மிகத்தளர்வு எய்திக் குடத்தையும் நும்
         முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்து அவனுக்கு நித்தல் படியும்
         வரும்என்றுஒரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துஉகந்தீர்
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

என்று அருளிச் செய்தவாறு அறிக.

திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்குத் திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் எழுந்தருளிய காலத்தில்,மழைவளம் சுருங்கியமையால், பஞ்சம் உண்டாகி உயிர்கள் வருந்தியபோது, இறைவர் திருவருளால், தினமும் படிக்காசு பெற்று, அதனைக் கொண்டு உயிர்களுக்கு உணவு படைத்த நிகழ்வை,இத் திருக்குறளுக்கு விளக்கமாக வைத்து, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் தாம் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா"வில், பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

அன்பர்இடர் கண்டு,அரன்பால் அப்பரும் சம்பந்தரொடு
முன்புஒரு காசுஏற்றார், முருகேசா - இன்புதரும்
தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

இதன் பொருள் ----                  

         முருகேசா --- முருகப் பெருமானே, அப்பரும் சம்பந்தரொடு --- திருநாவுக்கரசு நாயனாரும், திருஞானசம்பந்தரோடு கூடி, அன்பர் இடர் கண்டு --- அடியார்கள் பசியால் அடையும் துன்பத்தைப் பார்த்து, அரன் பால் --- சிவபெருமானிடத்தில், முன்பு ஒரு காசு ஏற்றார் --- முன்னாளிலே ஒரு காசைப் பெற்றுக்கொண்டார், ஆகவே, வியன் உலகம் --- பரந்த இந்த உலகத்திலே, வானம் வழங்காது எனின் --- மழை பெய்யாமல் போனால், தானம் தவம் இரண்டும் தங்கா --- தானமும் தவமுமாகிய இரண்டும் இவ்வுலகிலே நிலைபெறமாட்டாவாம்.

         அடியார்களுடைய பட்டினித் துன்பத்தைக் கண்ட திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரோடு சிவபெருமானிடம்  இருந்து காசைப் பெற்றுக் கொண்டார், மழை பெய்யாது ஒழிந்ததால், உலகில் தானமும் தவமும் நிலைபெற மாட்டா என்பதாம். 

அன்பர் --- திருநாவுக்கரசரையும், திருஞானசம்பந்தரையும் சூழ்ந்திருந்த அடியார்கள். 

அப்பரும் என்பதிலுள்ள உயர்வு சிறப்பும்மை, அப்பர் தாம் இறைவனுக்குக் கைத்தொண்டு செயதலே அன்றி, அவ்விறைவனிடம் எந்நாளினும் விரும்பி வேண்டாதிருந்த விழுமிய மாண்பைச் சுட்டி நின்றது.

                                                 படிக்காசு பெற்ற கதை

         திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அடியார்களுடைய திருக்கூட்டத்தோடு திருவீழிமிழலையை அடைந்து அங்கு இறை வழிபாடு செய்துகொண்டு தங்கியிருந்தார்கள். அப்பொழுது மழை  இல்லாதபடியால் வற்கடம் ஏற்பட்டு எல்லோரும் வருந்தினார்கள். அவர்களோடு சென்றிருந்த அடியார்களும் உணவு கிடைக்காமல் திண்டாடினார்கள். இவர்களுடைய வருத்தத்தைக் கண்ட சிவபெருமான், இருவருடைய கனவிலும் தோன்றி, இப்பஞ்சத்தினால் உங்களுக்கு வருத்தமில்லாவிடினும் அடியார்கள் பொருட்டு இரண்டு பொற்காசு கிழக்குப் பீடத்திலும் மேற்குப் பீடத்திலும் வைக்கின்றோம். அதனை நீங்கள் இருவரும் எடுத்து உணவுப் பொருள் வாங்கி அடியார்கட்கு அமுது படையுங்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே இரண்டு இடங்களிலும் காசு வைத்தார். அதனை இருவரும் எடுத்து அடியார்கட்கு உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.  பிறகு இருவரும் அவ்விடம் விட்டுச் சென்றார்கள்.
கூன்செய்த பிறை அணியும் தண்டலையார்
         கருணை செய்து, கோடி கோடி
யான்செய்த வினை அகற்றி நன்மை செய்தால்
         உபகாரம் என்னால் உண்டோ,
ஊன்செய்த உயிர் வளரத் தவம் தானம்
         நடந்து ஏற, உதவியாக
வான்செய்த நன்றிக்கு வையகம் என்
         செய்யும் அதை மறிந்திடாதே.  ---  தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

     ஊன் செய்த உயிர் வளர --- இவ்வுடம்பிலை குடிகொண்டு இருக்கும் உயிர் வளரவும்; 

     தவம் தானம் நடந்து ஏற --- துறந்தோரின் தவமும், இல்லறத்தாரின் கொடையும் வளர்ந்து ஓங்கவும்,

     உதவி ஆக வான்செய்த நன்றிக்கு --- இரண்டிற்கும் உதவியாக வானமானது பெய்து செய்த நன்மைக்கு,

     வையகம் என் செய்யும் --- இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? என்றால்,

     அதை மறந்திடாது --- அந்த நன்றியை மறவாமல்  இருக்கும்.

     அதுபோலவே,

     கூன்  செய்த பிறை அணியும் தண்டலையார் கருணை செய்து --- வளைந்த்துள்ள பிறைச் சந்திரனை முடியிலே சூடியுள்ள தண்டலை நீள்நெறி இறைவர் இன்னருள் புரிந்து,

     கோடி கோடி யான் செய்த வினை அகற்றி --- கோடி கோடியாக, அளவில்லாமல் நான் செய்து சேர்த்த வினைகளை அகற்றி,

     நன்மை செய்தால் என்னால் உபகாரம் உண்டோ --- எனக்கு நலம் புரிவாரானால், அதற்கு மாறாக என்னால் என்ன உதவி உண்டு? (ஒன்றும் இல்லை. அவன் திருவடியை மறவாமல். இருப்பதே சிறந்த கைம்மாறு ஆகும்)


மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்
தவம் இல்லார் இல்வழி இல்லை, தவமும்
அரசன் இலாவழி இல்லை, அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்.         --- நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

     மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை --- மழையில்லாமல் இப் பேருலகத்தின் மக்கட்கு நலமில்லை;

         மழையும் தவம் இலார் இல்வழி இல்லை --- அம்மழை தானும் தவம் செய்தல் இல்லாதவர்கள் இருப்பிடங்களில் பெய்தலில்லை;

         தவமும் அரசன் இலாவழி இல்லை --- அவ் வியல்பினதான தவஞ்செய்தலும் செங்கோலரசன் இல்லாதவிடத்து நிகழ்தல் இல்லை;

         அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல் --- அச் செங்கோ் அரசனும், குடிமக்கள் இல்லாதவிடத்து இலன் ஆவான்.

         மழை இல்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம் மழையும் தவம் உடையார் இல்லாத இடத்துப் பெய்தல் இல்லை; அத் தவம் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை; அவ் அரசனும் குடிகள் இல்லாத இடத்தில் இருப்பதில்லை.



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...