003. நீத்தார் பெருமை - 09. குணமென்னும்





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்
மூன்றாம் அதிகாரம் - நீத்தார் பெருமை

     இவ் அதிகாரத்தின் ஒன்பதாம் திருக்குறள், பண்பு ஆகிய குன்றின் உச்சியின் மேல் ஏறி நின்றவர் உள்ளத்தில் தோன்றும் கோபத்தை நொடிப்பொழுதும் காத்துக் கொள்வது அரிது என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ---

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி,
கணம்ஏயும் காத்தல் அரிது.                        

இதற்குப் பரிமேலழகர் உரை ---

         குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி --- துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி;

      'கணம் ஏயும்' காத்தல் அரிது --- தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.

         (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றிய பொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின், கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)

     யான் எனது என்னும் அகப்பற்றையும் புறப்பற்றையும் விட்டவரை துறந்தவர். ஆகையால், அவர்கள் மனம் வருந்தும்படி ஏதும் நிகழக் கூடாது. அப்படி வருந்தும்படி நிகழ்ந்துவிட்டால், என்ன நடக்கும்? பார்ப்போம்....
  
தாம்அடங்க இந்தத் தலம் அடங்கும், தாபதர்கள்
தாம் உணரின் இந்தத் தலம் உணரும், –  தாம்முனியில்
பூமடந்தை தங்காள், புகழ்மடந்தை போய்அகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.

என்கிறது திருக்களிற்றுப்படியார் என்னும் மெய்கண்ட சாத்திர நூல்.

         தவச்செல்வர்கள் வெகுளும் படி எவரேனும் இப்பெருமக்களை இகழ்வார்களாயின், அவர்தம் வாழ்விலே திருமகள் தங்கமாட்டாள், புகழ்மகள் அவரைவிட்டு அகல்வாள், மாமகளாகிய கலைச்செல்வி அவர்கள்பால் நயந்து நிற்க மாட்டாள்.        
  
ஈசன் அடியார் இதயம் கலங்கிட
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாகும் நம்நந்தி ஆணையே.

என்கிறார் திருமந்திரம் அருளிய திருமூலர்.

இந்த உலகத்தை ஆள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா, இறைவனைத் தொழுங்கள். வானுலகத்தை ஆள வேண்டுமா, இறைவனைப் பணியுங்கள். நித்தமும் எண்ணியது ஐடேற வேண்டுமா, இறைவனையே நினைந்துகொண்டு இருங்கள். அவனோடு இரண்டறக் கலந்து மகிழ வேண்டுமாயின், சோலைகளிலே நிறைந்துள்ள நல்ல மலர்களால் அருச்சனை செய்யுங்கள். அல்லாமல், நரகத்துள் இருந்து துன்புறுதல் வேண்டுமாயின், சிவன் அடியாரைத் துன்புறுத்துங்கள் என்று அறிவுறுத்துகின்றார், அடியார் பெருமையை நன்கு உணர்ந்த சேரமான் பெருமாள் நாயனார், தாம் பாடி அருளிய "பொன்வண்ணத்து அந்தாதி" என்னும் நூலில்... 


உலகுஆள் உறுவீர் தொழுமின், விண்ஆள்வீர் பணிமின், நித்தம்
பலகாமுறுவீர் நினைமின், பரமனொடு ஒன்றல் உற்றீர்
நலகா மலரால் அருச்சிமின், நரகத்துள் நிற்கும்
அல காமுறுவீர், அரன் அடியாரை அலைமின்களே.

     அருணகிரிநாதர் முருகப் பெருமானிடத்தில் அவனருளை விரைந்து பெற வேண்டுகின்றார். எப்படி? 

         அடியார்கள் மனம் துன்பப்படும்படி அவர்களை யாராவது பழித்தால், அதனால் பிழை ஏற்பட்டு, கெட்ட நோய்கள் வந்து பழித்தவர்களைப் பீடித்துக் கொள்ள,  எல்லோரும் வந்து கண்டு சீ சீ என்று அருவருப்புடன் இகழ்ந்து, நாலு பேர் பரிகசித்துச் சிரிக்க, கடைசியில் வெம்மையால் கொதிப்புற்று இறந்துவிடுவது போல, இழிந்தவனாகிய என்னுடைய மும்மலங்கள் யாவும், நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும், என்னைப் பற்றியுள்ள வறுமை நோயும் ஒழிந்து, ஞான பரிசுத்த பரவெளியை அடியேன் அடைந்து, அதனால் மகிழ்ச்சி மிக, அடியேன்முன் மயில் மீது ஏறி வந்து, வீடு பேறு ஆகிய பரகதியை அடைய அடியேன் மீது அன்பு வைத்து, திருவருளைத் தந்தருள்க.

பின் வரும் திருப்புகழ்ப் பாடலைக் காண்போம்....

                                                              
அடியார்மனம் சலிக்க எவராகிலும் பழிக்க
அபராதம் வந்து கெட்ட                    பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி எனநால்வரும் சிரிக்க
அனலோடு அழன்று செத்து               விடுமாபோல்
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த
கலியோடு இறந்து சுத்த                  வெளியாகி
களிகூர என்றனுக்கு மயில்ஏறி வந்துமுத்தி
கதிஏற அன்பு வைத்துஉன்                அருள்தாராய்.
                                                                       
ஒளி விளங்குகின்ற சிவந்த கிரணங்களை உடைய சூரியனுக்கு முன்னை வெழிலைப் பொறுத்துக் கொண்டு நின்றாலும் நிற்கலாம்.  ஆனால், அந்தச் சூரியனின் வெப்பம் தங்கி உள்ள மணலில் நிற்க முடியாது.

அதுபோல, எல்லாம் வல்ல இறைவன் முன் பகைத்து நின்றாலும், அந்த இறைவனின் பேரருளைப் பெற்ற அடியார்கள் எதிரே, அவரைப் பகைத்து நிற்றல் இயலாது. பகைத்தால் விரைந்து அழிவு ஆகும்.

இத் திருக்குறளுக்கு ஒப்பாக, "நீதி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போம்...

ஈசன்எதிர் நின்றாலும் ஈசன்அருள் பெற்று உயர்ந்த
நேசர் எதிர் நிற்பது அரிதாமே ---  தேசுவளர்
செங்கதிர் முன் நின்றாலும், செங்கதிர் வன்கிரணம்
தங்குமணல் நிற்க அரிதே தான்.    ---  நீதிவெண்பா

இதன் பொருள் ---- ஒளி விளங்குகின்ற சிவந்த கிரணங்களை உடைய சூரியனுக்கு முன்னே வெயிலைப் பொறுத்துக் கொண்டு நின்றாலும், அந்தச் சூரியனின் கிரண வெப்பம் தாங்கியுள்ள மணலில் நிற்றல் என்பது இயலாது. அதுபோல, எல்லாம் வல்ல இறைவன் முன் பகைத்து நின்றாலும், அவ் இறைவனின் பேரருளைப் பெற்று உயர்ந்த அடியார்கள் எதிரே பகைத்து நிற்றல் இயலாது.  பகைக்கின் விரைவில் அழிவாகும்.    


     மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்னும் பெரியவர் தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், பெரிய புராணத்துள் வரும் எறிபத்த நாயனார் வரலாற்றை வைத்து, பின் வரும் பாடலைப் பாடி உள்ளார்.


பத்தர்பூ மூளி பறித்தகரி பாகரைக்கொன்று,
இத்தல வேந்து அஞ்ச, எறிபத்தர் - கைத்தார்,
குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.              

         சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் சிவபெருமானுக்குச் சாத்தும் பொருட்டுத் தம்முடைய திருக்கரத்திலே உயர்த்தி எடுத்துச் சென்ற திருப் பூக்கூடையைப் பிடுங்கிச் சிதறிய சிறந்த மதயானையையும், அதன் பாகரையும், அரசனாகிய புகழ்ச்சோழர் அஞ்சுமாறு கொன்று, சிவனருளால் இறந்தோர் அனைவரையும் எழுப்பிச் சிவபிரான் திருவடியைச் சேர்ந்தார் எறிபத்த நாயனார். 

         ஆகலான், துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளிதான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாராலே தடுத்தல் அரிது என்றவாறு.

         சலியாமையும் பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்று என உருவகம் செய்தார். நிறைமொழி மாந்தர் ஆகலின் காத்தல் அரிது என்பர் பரிமேலழகர்.

இதற்கு ஒப்பாக அமைந்த பாடல்கள்.....

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.   ---  நாலடியார்.

இதன் பொருள் --- பொறுப்பர் என்று எண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் --- பொறுத்துக் கொள்வார் என்று நினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர் வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல் வேண்டும்; வெறுத்தபின் --- அவர் உள்ளம் அதனால் வருந்தியபின், ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட --- ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகிய மலைகள் பொருந்திய சிறந்த நாடனே; பேர்க்குதல் யார்க்கும் அரிது --- அவ் வருத்தத்தால் உண்டாகுந் தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும் இயலாது.

         பெரியோரை அவமதித்து ஒழுகினால் தீர்வில்லாத தீங்கு உண்டாகும் என்பது கருத்து.


விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.    ---  நாலடியார்.

இதன் பொருள் ---  விரிநிற நாகம் விடர் உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும் --- படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே உள்ளதானாலும், இடியின் கொடிய ஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்கு அஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும் பெருமையுடையார் செறின் உய்யார் --- அருமைப்பாடுடைய பாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும், மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச் சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.

         பெரியோர்க்குப் பிழைசெய்து, பின் அதிலிருந்து தப்புதல் இயலாது என்பது கருத்து.


பூவுட்கும் கண்ணாய் பொறுப்பர் எனக்கருதி
யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்
நோவச்செய் நோயின்மை இல். ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் --- பூ உட்கும் கண்ணாய் --- தாமரையும் (ஒப்பாதற் கில்லையே யென்று) வருந்தும் கண்ணை உடையாய்!, தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும் --- தேவர்களுக்கும் இயலாத காழ்த்த அன்புடையார்க்காயினும், நோவச் செய் --- துன்புறுத்தினால், நோயின்மை இல் --- துன்புறாதிருப்பது இல்லை (பொறுமையிலராவார்.) (ஆகையால்) பொறுப்பார் எனக்கருதி --- எத்துணைத் தீங்கு செயினும் பொறுமையுடன் இருப்பார்கள் என்று தாமே நினைத்து, யாவர்க்கேயாயினும் --- எத்துணை எளியராயினும், இன்னா செயல் வேண்டா --- தீங்கினைச் செய்தல் வேண்டாவாம்.


'இனி ஒரு கற்பம் உண்டுஎன்னின் அன்றியே,
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ?
பனி வரும் கானிடைப் பழிப்பு இல் நோன்புடை
முனிவரர் வெகுளியின் முடிபு' என்றார் சிலர்.         
                               --- கம்பராமாயணம். மாரீசன் வதைப் படலம்.

இதன் பொருள் ---

இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றியே --- இனி வேறொரு ஊழிக்காலம் உண்டானால் அன்றி; வனை கழல் வயங்கு வாள் --- புனைந்த வீரக் கழலையும், விளங்கும் வாளையும் உடைய; வீரர் வல்லரோ? --- (இந்நாளில் வாழும்) வீரர் இச் செயல் செய்ய வல்லமை உடையவர்களோ? (இலர்); (ஆதலால்); பனி வரும் கானிடை --- அச்சம் உண்டாகும் காட்டில்; பழிப்பில் நோன்புடை முனிவரர் --- குற்றமற்ற தவம் செய்யும் தவசிகள் கொண்ட; வெகுளியின் முடிபு --- சினத்தின் விளைவேயாகும்; என்றார் சிலர் --- என்று சிலர் கூறினார்கள்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...