அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அயிலார் மைக்கடு (திருக்குடவாயில்)
முருகா!
திருவருள் புரிவாய்
தனனா
தத்தன தனனா தத்தன
தனனா தத்தன ...... தனதான
அயிலார்
மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு ...... விலைமாதர்
அணைமீ
திற்றுயில் பொழுதே தெட்டிக
ளவரே வற்செய்து ...... தமியேனும்
மயலா
கித்திரி வதுதா னற்றிட
மலமா யைக்குண ...... மதுமாற
மறையால்
மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத ...... மருள்வாயே
கயிலா
யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை ...... யிடுவோனே
கடலோ
டிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே
குயிலா
லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி ...... யுறைவோனே
குறமா
தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அயில்ஆர்
மைக் கடு விழியார், மட்டைகள்,
அயலார் நத்திடு ...... விலைமாதர்,
அணை
மீதில் துயில் பொழுதே தெட்டிகள்,
அவர் எவல்செய்து, ...... தமியேனும்
மயல்
ஆகித் திரிவது தான் அற்றிட,
மல மாயைக் குணம் ...... அதுமாற,
மறையால்
மிக்கஅருள் பெறவே, அற்புத
மது மாலைப் பதம் ...... அருள்வாயே.
கயிலாயப்
பதி உடையாருக்கு ஒரு
பொருளே கட்டளை ...... இடுவோனே!
கடல்
ஓடிப் புகு முதுசூர் பொட்டு எழ
கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே!
குயில்
ஆலித்திடு பொழிலே சுற்றிய
குடவாயில் பதி ...... உறைவோனே!
குற
மாதைப் புணர் சதுரா! வித்தக!
குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
பதவுரை
கயிலாயப் பதி
உடையாருக்கு
--- திருக் கயிலை மலையைத் தமது இருப்பிடமாக உடையவராகிய சிவபெருமானுக்கு
ஒரு பொருளே கட்டளை இடுவோனே ---
ஒப்பற்ற பிரணவப் பொருளை, குருவாக நின்று உபதேசித்தவரே!
கடல் ஓடிப் புகு --- கடலில் ஓடி
ஒளிந்திருந்த
முது சூர் பொட்டு எழ --- பழைய சூரதபுமன்
அழிபட,
கதிர் வேல் விட்டிடு திறலோனே --- ஒளி
பொருந்திய வேலாயுதத்தை விடுத்து அருளிய பராக்கிரமம் மிக்கவரே!
குயில் ஆலித்திடு
பொழிலே சுற்றிய --- குயில்கள் கூவுகின்ற சோலைகளால் சூழப் பட்டுள்ள
குடவாயில் பதி உறைவோனே --- திருக் குடவாயில்
என்னும் திருத்தலத்தில் உறைபவரே!
குற மாதைப் புணர்
சதுரா ---
குறமகளாகிய வள்ளிநாயகியை மணம் புணர்ந்த வல்லமை உடையவரே!
வித்தக --- பேரறிவாளரே!
குறையா மெய்த்தவர் பெருமாளே --- குறைவுபடாத
உண்மைத் தவ நிலையை உடைய அடியார்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
அயில் ஆர் --- கூரிய வேல்
போன்ற
மைக் கடு விழியார் --- மை பூசப்பட்ட, நச்சுத் தன்மை பொருந்திய கண்களை
உடையவர்கள்,
மட்டைகள் --- பயனற்றவர்கள்,
அயலார் நத்திடு விலைமாதர் --- பக்கத்தில்
வருபவர்களை விரும்புகின்ற விலைமாதர்கள்,
அணை மீதில் துயில்
பொழுதே தெட்டிகள் --- படுக்கையில் தூங்கும் பொழுதிலேயே வஞ்சிப்பவர்கள்,
அவர் ஏவல் செய்து --- அவர்கள் ஏவின
வேலைகளைச் செய்து,
தமியேனும் மயலாகித்
திரிவது தான் அற்றிட --- யானும் மயக்கம் கொண்டவனாகத் திரிவது அற்றிடவும்,
மல மாயைக் குணம் அது மாற --- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் ஏற்படும்
தீயகுணங்கள் ஒழிந்து போகவும்,
மறையால் --- வேதங்களை ஓதி, உணர்ந்து தெளிந்து,
மிக்க அருள் பெறவே --- திருவருளை மிகப்
பெறுமாறு,
அற்புத மது மாலைப் பதம் அருள்வாயே ---
அற்புதமான தேன் நிறைந்த மலர்மாலைகளை அணிந்துள்ள திருவடியை அருளுக.
பொழிப்புரை
திருக் கயிலை மலையைத் தமது இருப்பிடமாக
உடையவராகிய சிவபெருமானுக்கு. ஒப்பற்ற பிரணவப் பொருளை மேல் நிலையில் நின்று
உபதேசித்தவரே!
கடலில் ஓடி ஒளிந்திருந்த பழைய சூரபதுமன்
அழிபட, ஒளி பொருந்திய வேலாயுதத்தை
விடுத்து அருளிய பராக்கிரமம் மிக்கவரே!
குயில்கள் கூவுகின்ற சோலைகளால் சூழப்
பட்டுள்ள திருக் குடவாயில் என்னும் திருத்தலத்தில் உறைபவரே!
குறமகளாகிய வள்ளிநாயகியை மணம் புணர்ந்த
வல்லமை உடையவரே!
பேரறிவாளரே!
குறைவுபடாத உண்மைத் தவ நிலையை உடைய
அடியார்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
கூரிய வேல் போன்ற, மை பூசப்பட்ட, நச்சுத் தன்மை கொண்ட கண்களை உடையவர்கள், பயனற்றவர்கள், பக்கத்தில் வருபவர்களை விரும்பிச் சேருகின்ற
விலைமாதர்கள், படுக்கையில் தூங்கும் பொழுதிலேயே
வஞ்சிப்பவர்கள், அவர்கள் ஏவின
வேலைகளைச் செய்து தன்னம் தனியனான அடியேனும், மயக்கம் கொண்டவனாகத் திரிவது ஒழிந்து
போகவும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும் தீய
குணம் ஒழிந்து போகவும், வேதங்களை ஓதி, உணர்ந்து தெளிந்து, திருவருளை மிகப் பெறுமாறு, அற்புதமான, தேன் நிறைந்த மலர்மாலைகளை அணிந்துள்ள
திருவடியை அருளுக.
விரிவுரை
இத்
திருப்புகழின் முற்பகுதியில், அடிகளார், விலைமாதர்களின்
தன்மையை எடுத்துரைத்து, அவர்பால் உண்டான காம மயக்கத்தால், அவர்கள்
ஏவுகின்ற தொழிலை எல்லாம் விருதாவிலே செய்து அழியாமல் ஈடேற வேண்டும் என்கின்றார்.
குமர! குருபர! முருக! குகனே! குறச்சிறுமி
கணவ! சரவண! நிருதர் கலகா!
பிறைச்சடையர்
குரு என நல் உரை உதவு மயிலா!
எனத் தினமும்....உருகாதே,
குயில்மொழி நன் மடவியர்கள், விழியால் உருக்குபவர்,
தெருவில் அநவரதம் அனம் எனவே
நடப்பர், நகை
கொளும் அவர்கள் உடைமை மனம்
உடனே பறிப்பவர்கள்.....அனைவோரும்
தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்,
முலையில் உறு துகில் சரிய நடு
வீதி நிற்பவர்கள்,
தனம் இலியர் மனம் முறிய நழுவா
உழப்பியர், கண் .....
வலையாலே
சதிசெய்து, அவர்
அவர் மகிழ அணை மீது உருக்கியர்கள்,
வசம் ஒழுகி, அவர் அடிமை என, மாதர் இட்ட தொழில்
தனில் உழலும் அசடனை, உன் அடியே வழுத்த அருள் ...... தருவாயே.
--- திருப்புகழ்.
மல
மாயைக் குணம் அது மாற ---
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள், அவைகளால் உண்டாகும் முக்குணங்களால் ஏற்படும் குணங்கள் அனைத்தும்
ஒழிந்து போகவேண்டும்.
ஆணவம்
இறைவன்
இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப்
பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த
எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்வோமா? தீமை
செய்வோமா?
எங்கும்
உளன் ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி
அங்கம்
குலைவது அறிவு --- (நீதிநெறி விளக்கம்)
என்றார்
குமர குருபர அடிகள். இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து
நிற்பதாகிய பொருள் ஒன்று உண்டு. அதுவே ஆணவ மலம் எனப்படுகிறது. எல்லா உயிர்களும்
முதலிலிருந்தே ஆணவ மலத்தை உடையவாயின. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும் இருள் போலவும், உயிர்களின் அறிவை மறைத்து நிற்பது.
கடவுளுக்கு அடுத்த படியாகப் பெரும் பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால்
சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவ மலமேயாகும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேட்டிற்கும்
இது மூலம் ஆதலின் மூலமலம் எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க்
கலந்து நிற்றலின் சகச மலம் எனப்படும். கண்ணை மறைக்கும் புற இருள் போல இஃது அறிவை
மறைக்கும் அகவிருள் ஆகும். அது பற்றி இருள் மலம் எனப்படும். மலம் என்று சொன்னாலே
அது ஆணவமலத்தையே குறிப்பதாகும்.
மாயை
ஆணவ
மலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவும்
உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை
விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் சத்தி சிறிது மடங்கிய போது ஆன்மா
நுண்ணறிவைப் பெறாது பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே
உடையதாகிறது. அதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளேயிருக்கும் தலைவனாகிய
இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப்
பொருள்களையே நோக்கி நிற்கிறது.
கன்மம்
இந்நிலையில்
ஆணவ மலம் திரிபுணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே, இத்திரிபுணர்வால் ஆன்மா தன்னையே
எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம்
முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.
மாயை
உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம்
அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம்
யான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது.
இவ்வாறு இவை மூன்றும் உயிரறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம் என்றும், கட்டு என்றும், தளை என்றும் கூறப்படுகின்றன. இம்
மூன்றனுள் ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு, மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவை
ஆணவமாகிய கட்டினை நீக்கி உதவ வந்த கட்டுக்கள்.
அவிழ்க்க
முடியாத ஒரு கட்டினை எப்படி அவிழ்ப்பது? அதற்கு
ஒரு வழி உண்டு. அதனோடு வேறு சில கட்டுக்களை இட்டு இறுக்கினால் அம் முதற்கட்டு
நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள
ஆணவ மலமாகிய வலிய கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை
உயிரோடு சேர்ப்பிக்கின்றான்.
பிரகிருதி
மாயை என்பது, அசுத்த மாயையின்
உள்ளாக அடங்கி நிற்பதாகும். சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே
மேலாய் நிற்பது, அதன் உள்ளே நிற்பது.
அதற்கும் உள்ளே நிற்பது என உணர்ந்து கொள்ளவேண்டும். நம்முடைய உலகம் தோன்றுவது
பிரகிருதி மாயையிலிருந்துதான்.
பிரகிருதி
மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள்.
மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்புநிலை போலப் பிரகிருதி மாயை
அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும்
வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம். பிரகிருதி
என்ற சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல்
பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.
முக்குணங்களின்
தன்மை வருமாறு---
1. சத்துவம்; நற்குணங்களில் மனம் பற்றுதல்
2. இராஜசம்:
ஆசை மிகுந்திருத்தல்; மிகுந்த
பொருளுக்கு ஆசை வைத்தல்;
எதிர்ப்பட்டதைப் பற்றி
நிற்றல்.
3. தாமசம்: எதிர்ப்பட்ட
காரியத்தைச் செய்யாதிருத்தல்; சோம்பல்; மயக்கம்.
ஆன்மாக்களுக்கு, இந்த மூன்று குணங்களும் மாறி
மாறி வந்துகொண்டே இருக்கும். இதனால் ஆன்மாக்கள் துன்பத்தில் உழலும்.
மறையால்
---
மறே
- வேதம். அறிவு நூல்.
மேற்குறித்த
மும்மலங்கள், முக்குணங்கள்
ஆகியவற்றின் தன்மைகளையும், அவற்றால் விளையும் குற்றங்களையும், அதில் இருந்து
விடுபட வேண்டிய நெறிகளையும் வேதங்களை ஓதி, உணர்ந்து தெளிந்து கொள்ளவேண்டும். தெளிந்தால்
மெய்யறிவு விளங்கும்.
கயிலாயப்
பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே ---
திருக்கயிலை
மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள்
அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து
பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது
விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை "மலையிடை
வைத்த மணி விளக்கு" என வெளிப்படுத்தினர்.
பின்னர்
ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத்
தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று
எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு
அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை
உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி
எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு
மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய்
வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,“அமரர் வணங்கும் குமர
நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல்
நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு
பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும்
செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார்.
ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன்.
அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும்
நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும்
நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை
கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராப்
பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித்
தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான்
“மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே!
எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன
அறிந்து, முறையினால்
கழறவல்லேம்” என்றனர்.
கேட்டு
“செல்வக் குமர! உண்மையே உரைத்தனை;
ஞானபோத
உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந்
தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச்
சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம்
தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய
ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகைமலைச்
சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு
கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம்
புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக
வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற்
கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,
கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப்
பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி
நின்று, பிரணவ உபதேசம்
பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை
உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.
"எதிர்
உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,
அங்கு
அதிர்கழல்
வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட
வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்". --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே" --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று
அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
--- (கொடியனைய) திருப்புகழ்.
மறிமான்
உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த
மதியாளா.... --- (விறல்மாரன்)
திருப்புகழ்.
சிவனார்
மனம் குளிர, உபதேச மந்த்ரம்
இரு
செவி
மீதிலும் பகர்செய் குருநாதா... ---
திருப்புகழ்.
பிரணவப்
பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால்
சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக்
காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச்
சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி
உபதேசித்தருளினார்.
அரவு
புனிதரும் வழிபட
மழலை
மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை
அறிவது பொருளென அருளிய பெருமாளே.
---
(குமரகுருபரகுணதர)
திருப்புகழ்.
தேவதேவன்
அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு
அருள் நாடகம் இது.
உண்மையிலே
சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
"தனக்குத்
தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத்
தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத்
தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்
தான் நிகரினான், தழங்கி
நின்றாடினான்". --- தணிகைப் புராணம்.
"மின்
இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை
ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக்
கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப்
பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!"
என்னும்
திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும்
முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு
நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது
சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன
போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான்
மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில்
சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள்
தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால்
தகப்பன் என்றும், சிவமும் சத்தியும்
சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார்.
இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
"தவளத்த
நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள்
அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த
யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு
ஆர்குழல் தூமொழியே".
என
வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம்
தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,
சத்தி
தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
"வாயும்
மனமும் கடந்த மனோன்மனி
பேயும்
கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும்
அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும்
மகளும் நல் தாரமும் ஆமே". --- திருமந்திரம்.
"கனகம்
ஆர் கவின்செய் மன்றில்
அனக
நாடகற்கு எம் அன்னை
மனைவி
தாய் தங்கை மகள்".... --- குமரகுருபரர்.
"பூத்தவளே
புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே
உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே".
---
அபிராமி அந்தாதி.
"தவளே
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே
அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே
கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன்
இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே".
---
அபிராமி அந்தாதி.
"சிவம்சத்தி
தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை
ஈன்றும்,
உவந்து
இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன்
பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம்
தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே".
--- சிவஞான
சித்தியார்.
கடல்
ஓடிப் புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே ---
முருகப் பெருமானுடைய விசுவ ரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும்
பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர்
யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று
ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில்
சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான்.
அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி
திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.
"நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்".
"தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்".
"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து
அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை
நோக்கி, "இங்கிவன்
உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான்
விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம்
அழிந்தது.
"ஏய்என முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீஅழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே".
அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவண் ஒளித்தனன். வேல் கடலின்
அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.
திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்.... --- வேல்
வகுப்பு.
சூரபன்மன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன.
சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள்
மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு
முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம்
பிளக்கப்பட்டதும், மாளா
வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை
இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.
"புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி, அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு, கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கைஎய்திவீற்று இருந்ததுஅன்றே".
சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.
"தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்".
அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும்
எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர்
புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும்
பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க
வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும்
வரம்பிலாப் பேறு பெற்றான். அவனது தவத்தின்
பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது
பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.
"மருள்கெழு புள்ளே போல
வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த
ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி
நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன்
ஆகிய இயற்கை யேபோல்".
"தீயவை புரிந்தா ரேனும்
முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ,
அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ
வரம்புஇலா அருள்பெற்று
உய்ந்தான்". --- கந்தபுராணம்.
..... ..... ..... "சகம்உடுத்த
வாரிதனில், புதிய
மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்
அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்
சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! - மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே!" --- கந்தர் கலிவெண்பா.
தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,
சலம் பிளந்து எற்றிப் ......
பொருசூர், அத்
தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து, இடம்
புக்குத்
தடிந்திடும் சொக்கப் ......
பெருமாளே. ---
பொதுத் திருப்புகழ்.
கடல் சலம் தனிலே ஒளி சூரனை
உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது
கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...விடும்வேலா! --- அவிநாசித் திருப்புகழ்.
கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண்
திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!
திறல! கொடும்பைக்கு உள் ......
பெருமாளே. --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.
கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
கொதிவேல் படையை ......
விடுவோனே! --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.
குயில்
ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே ---
திருக்
குடவாயில் என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளி, பெருமானை வழிபட்டுப் பாடி அருளிய திருப்பதிகத்தில், திருஞானசம்பந்தப்
பெருமான்,
இத்
திருத்தலத்தின் எழிலை அழகுறப் பாடியுள்ள அருமையை எண்ணுவோம்.
"கழல்ஆர்பூம்
பாதத்தீர், ஓதக்கடலில்
விடம்உண்டுஅன்று
அழல்ஆரும்
கண்டத்தீர், அண்டர்போற்றும்
அளவினீர்,
குழல்ஆர
வண்டுஇனங்கள் கீதத்துஒலிசெய் குடவாயில்
நிழல்ஆர்ந்த
கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே".
இதன்
பொழிப்புரை
:கழல்
அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை
உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே!
தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி
செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர்.
"மறிஆரும்
கைத்தலத்தீர், மங்கைபாகம்
ஆகச்சேர்ந்து,
எறிஆரும்
மாமழுவும் எரியும்ஏந்தும் கொள்கையீர்,
குறிஆர
வண்டுஇனங்கள் தேன்மிழற்றும் குடவாயில்
நெறிஆரும்
கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே".
இதன்
பொழிப்புரை
:மான்
பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட
மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன்
உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக்
கொண்டு வாழ்கின்றீர்.
"பாடல்ஆர்
வாய்மொழியீர், பைங்கண்வெள்ளேறு
ஊர்தியீர்,
ஆடல்ஆர்
மாநடத்தீர், அரிவைபோற்றும்
ஆற்றலீர்,
கோடல்ஆர்
தும்பிமுரன்று இசைமிழற்றும் குடவாயில்
நீடல்ஆர்
கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே".
இதன்
பொழிப்புரை
:வேதப்
பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை
ஊர்தியாக உடையவரே!ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும்
ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில்
நீண்டு உயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.
அருணகிரிநாதப்
பெருமானும், "குயில் ஆலித்திடு
பொழிலே சுற்றிய குடவாயில்" என்று பாடி அருளுகின்றார்.
திருக்
குடவாயில்,சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள்
வழக்கில் "குடவாசல்" என்று அழைக்கப்படுகின்றது.
கும்பகோணம்
- திருவாரூர் சாலை வழியில் குடவாசல் இருக்கிறது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம்
உள்ளது.
கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய
இடங்களிலிருந்தும் குடவாசல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
திருப்பெருவேளூர், திருதலையாலங்காடு என்ற பாடல் பெற்ற
திருத்தலங்கள் அருகருகில் உள்ளன.
இறைவர்
: கோணேசுவரர், சூரியேசுவரர், ப்ருகநாதர்
இறைவியார்
: பெரிய நாயகி
தல
மரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
கோச்செங்கட்
சோழ நாயனார் அமைத்த மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.
காசிப
முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன் கருடன்.
மகாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், பரமபக்தனாகவும்
இருந்து "பெரிய திருவடி" என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும் மூத்த மனைவியின்
அடிமையாக வேண்டிய நிலை உண்டானது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக கருடன், பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில்
இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து
வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன்
அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து
அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான்
அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு
வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது
சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார். கோணேசப் பெருமான்
அருளாணைப்படி கருடன் இத்திருத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார்.
கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர்
அமிர்தலிங்கமானார். அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள தீர்த்தம்
அமிர்த தீர்த்தம் ஆயிற்று.
திருணபிந்து
முனிவர் பூஜிக்க இறைவன் திருக்குடத்திலிருந்து வெளிப்பட்டு முனிவர் நோயினை நீக்கயருளிய
தலம் இதுவாகும். அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். அவர் திருவுருவங்கள்
இங்குள்ளன.
பிரளய
காலத்தில் உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக
இருந்து சிவபெருமான் காத்தார்; குடத்திலிட்டுக்
காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக்
காலத்தில் வேடன் வடிவெடுத்து வந்த சிவபிரான் வில்லால் அக்குடத்தை உடைத்தார். குடம்
மூன்றாக உடைந்து, முதற்பாகமாகிய
அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும்
கும்பகோணம் (ஆதி கும்பேசம்) ஆகும். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலையநல்லூர் ஆகும்.
குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயில் என்னும் குடவாசல் எனப்படுகின்றது.
இத்திருத்தலம்
சங்ககாலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று, அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்தே
சிறை வைத்தான் என்னும் செய்தியை புறநானூறு தெரிவிக்கிறது. இதிலிருந்து அன்றைய
குடவாயில், சோழப்பேரரசின்
சிறைக்கோட்டமாக இருந்தது என்று தெரிய வருகிறது. குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள்
பாடியுள்ள பாடல்கள் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
நடராச
சபை அழகானது. நடராசப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது. நடராசப்
பெருமானின் திருமேனியின் பீடத்தில் 10 -11
ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் எழுத்துக்கள் வடிவில் "களக்காடுடையார் மாலை
தாழ்மார்பன்" என எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துக்களுடன் மத்தியில்
இருகரங்கள் கூப்பிய நிலையில் அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது. இராஜராஜ சோழனின்
காலத்துக் கலைப்பாணியை உடைய இத்திருமேனி இத்தலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள களக்காட்டில்
வாழ்ந்த 'மாலைதாழ் மார்பன்' என்பவரால் வடித்து வழங்கப்பட்டது எனக்
கூறப்படுகிறது.
சந்நிதிக்கு
வெளியில் பக்கவாட்டிலுள்ள காசிவிசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண்
நிறத்தில் காணப்படுகிறது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே சென்றால் மூலவர்
கோணேசுவரர் மேற்கு நோக்கிய சந்நிதியில் பெரிய சிவலிங்கத் திருமேனி உருவில்
எழுந்தருளியுள்ளார். இறைவன் திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன.
கருத்துரை
முருகா! திருவருள் புரிவாய்
No comments:
Post a Comment