002. வான் சிறப்பு - 05. கெடுப்பதூஉம் கெட்டார்க்கு




திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

இரண்டாவது அதிகாரம் -  வான்சிறப்பு


     திருக்குறள் அறத்துப்பாலில் இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு. இதில் வரும் ஐந்தாவது திருக்குறள், "மனிதர்கள் தம் முனைப்பாய் செய்யும் முயற்சிகளைக் கெடுப்பதும், தம் முனைப்பு அவிந்து அருள் நினைவாய்ச் செய்யும் போது, அவர்களது நன்முயற்சிகளுக்கு உதவியாய் நின்று அவர்களைக் கை தூக்கி விடுவதும், எல்லாமே மழை" என்கிறது. மிகுதியாகப் பெய்வதனாலும், அளவாகப் பெய்வதனாலும் மழை இவ்வாறு செய்ய வல்லது.


கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வுஆய், மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---                

      கெடுப்பதூஉம் --- பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;

     கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் --- அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்;

     எல்லாம் மழை --- இவை எல்லாம் வல்லது மழை.
        
      ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்கு என்பது மறுதலைத் தொழில் உவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம் மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)

     இந்த உலகத்தையும், உலகத்துப் படைக்கப்பட்ட உயிர்களையும் பொருள்களையும் சங்கார காலம் வந்தபோது முற்றாக அழித்து, பின் அவற்றை ஆக்குவது சங்கார கடவுளே.

     எவற்றையும் தன்னுள் ஒடுக்கி வைத்திருக்கும் சுதந்திரம் உடைய கடவுளே, இந்தப் பிரபஞ்சத்தை மீண்டும் தோற்றுவிக்கவும் செய்யும். ஆகவே, பிரபஞ்சம் முழுவதையும் சங்கரிக்கும் கடவுளே உலகிற்கு முதல் கடவுள் ஆகும் என்னும் சிவஞானபோத முதல் சூத்திரக் கருத்து, மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்து உள்ளது என்னும் உண்மையைப் புலப்படுத்தும் விதத்தில், கமலை வெள்ளியம்பலவாண முனிவர் தாம் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் பின்வரும் வெண்பாவைப் பாடி உள்ளார்.


அழித்து உலகை ஆக்குதல் அந்தமே ஆதி,
அழித்து ஒன்றை ஆக்குவது உண்டோ ---  எனில், கொள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வுஆய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

      அழித்து ஒன்றை ஆக்குவது உண்டோ எனில் ---  ஒரு பொருள் ஒன்றை அழித்து மீண்டும் ஆக்குவது உண்டோ என்று வினவினால்,                

      அழித்து உலகை ஆக்குதல் அந்தமே --- இந்த உலகத்தை அழித்து, மீண்டும் ஆக்குவது சங்காரக் கடவுளே, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை. 

     எதைப் போல எனில்,  மனிதர்களின் முயற்சிகளைக் கெடுத்துப் பெய்கின்ற மழையே, அம் முயற்சிகளுக்கு உதவிக் கை தூக்கி விடுவதைப் போல.

     எனவே சங்காரமே முதல் என்ற கருத்து உடைய சிவஞானபோதத்து முதல் சூத்திரத்தை ஒட்டி, இது கூறப்பட்டது.


அடுத்து, பிறைசை சாந்தக் கவிராயர் தாம் இயற்றி, நீதி சூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா"வில், மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக ஒரு பாடலைப் பாடி உள்ளார். பாடலும் அதன் விளக்கமும் பின் வருமாறு....
        
                                                              
கொண்டல் உறையூர்க் கச்சிக் கோநகரின் செய்குணத்தால்,
எண்திசையும் போற்றும் இரங்கேசா! - மண்டிக்
கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.                      

      இப் பாடலின் பதவுரை --- 

     எட்டு திசையும் போற்றும் இரங்கேசா --- கிழக்கு முதலிய எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து வணங்கித் துதிக்கின்ற திருவரங்கநாதக் கடவுளே, 

     கொண்டல் உறையூர் கச்சிக் கோ நகரில் --- மேகம் தவழும் உறையூரிலும், காஞ்சிபுரத்திலும்,

     செய் குணத்தால் ---- சிவன் செயலின் விசேடத்தால் முறையே மண்மாரியும், பொன்மாரியும் பெய்து தீமையும் நன்மையும் நேரிட்டன. 

இதனால்

     மண்டு --- நெருங்கி மிதமிஞ்சிப் பெய்து,

     கெடுப்பதும் --- உலகத்து உயிர்களைக் கெடுத்து விடுவதும்,

     கெட்டார்க்கு --- அப்படிக் கெட்டவர்களுக்கு,

     சார்வு ஆய் --- துணையாய் இருந்து,

     ஆங்கே --- முன் கொடுத்தது போலவே,

     எடுப்பதும் --- அளவாய்ப் பெய்து காப்பதும்,

     எல்லாம் மழை --- இவைகளை எல்லாம் செய்ய வல்லது மழையே ஆகும்.

மண் மாரி பெய்த கதை

     முனிவர் ஒருவர் இறைவர் பொருட்டு பூம்பொழில் ஒன்றை அமைத்து,  அதில் அரிய மலர்ச் செடிகளைப் பயிரிட்டு, அவற்றில் பூத்த மலர்களைக் கொண்டு இறைவரை அருச்சித்து வந்தார். அம்மலரின் மீது அவாக் கொண்ட உறையூர்க் கோ வேந்தன், மலரினைக் களவு செய்து வரச் செய்து, அதனைத் தான் அணிந்து மகிழ்ந்தான். இதனை உணர்ந்த முனிவர் உறையூர் மீது மண்மாரி பெய்யுமாறு சாபம் வழங்கினார். அவ்வாறே ஒரு சாம காலம் வரையில் உறையூரில் மண் மாரி பெய்ததால், அவ்வூர் அழிந்தது. இப்பொழுது உள்ள உறையூர் பிற்காலத்தில் உண்டாகியது.

பொன் மாரி பெய்த கதை

     காஞ்சி மாநகரில் ஒரு காலத்தில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அதனால் மக்கள் துன்புற்று வருந்தினர்.அந் நகரில் இருந்த சிறு குழந்தை ஒன்று, அந்தப் பஞ்சத்தைப் போக்கி அருளவேண்டும் என்று இறைவனை அன்போடு போற்றி வந்தது. அக் குழந்தையின் அன்புக்கு இரங்கிய இறைவன், ஒரு முகூர்த்த நேரம் வரை காஞ்சி மாநகரில் பொன்மாரி பெய்யச் செய்தார். இதனால் எல்லோரும் பஞ்சக் கொடுமையில் இருந்து விடுபட்டு நலம் அடைந்தனர்.

அடுத்ததா,

நேரிமலைக்கு உரியவனான சோழ மன்னனின் நாட்டில் உள்ள மக்களின் தீமையால் மழை பெய்யாமல் கெடுக்கும். நன்மையால் பெய்து வாழ்விக்கும். பூவையர்கள் பூச்சூடி மகிழ வள மழை பொழிவதும், அதற்கு வழியின்றிப் போக பெய்யாமல் பொய்ப்பதும் எல்லாம் மழையால் என்னும் பொருள் பட, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல்,.....

பூமலர்கொள் நேரியற்கும் பூவையர்க்கும் பூமழைசெய்
தீமைநலம் கண்டோம் சிவசிவா - பூமுற்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.  



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...