002. வான்சிறப்பு - 06. விசும்பின் துளி




திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

இரண்டாவது அதிகாரம் -  வான்சிறப்பு


திருக்குறள், அறத்துப்பால், இரண்டாவது அதிகாரம் வான்சிறப்பில், வரும் ஆறாவது திருக்குறள், "மேகத்தில் இருந்து மழைத்துளி விழுந்தால் ஒழிய, மண்ணில், ஓர் அறிவு உயிராகிய, பசுமையான புல்லின் நுனியையும் காண்பது அரிது" என்கின்றது.


விசும்பின் துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்பு அரிது. 

இதற்குப் பரிமேலழகர் உரை ---          

         விசும்பின் துளி வீழின் அல்லால் --- மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது;

     மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது --- வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.

         ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)

இந்த உண்மையை திருவிளையாடல் புராணத்தின் வாயிலாக உணர்ந், கமலை வெள்ளியம்பலவாண முனிவர், தாம் இயற்றிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில், மேற் குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக ஒரு பாடலைப் பாடி உள்ளார்
  
அடியவரை நீத்து, அரனுக்கு அன்பு செய்ய மாறன்,
மழைமறுத்துப் பல்லுயிரும் வாடும்,  ---  படியில்
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்பு அரிது.                

         மாறன் என்றது குலபூடண பாண்டியன். அடியவர் --- பாண்டி நாட்டு இருந்த அந்தணர். அடியவர்களாகிய அந்தணர்களை ஓம்பாது மற்ற அறங்களைப் பாண்டிய மன்னன் செய்தான். "வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது" என்று தெய்வச் சேக்கிழார் காட்டிய படி,  வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழையானது மறந்தது. அதனால் பாண்டிய நாட்டில் வளம் இன்றி, அந் நாட்டில் வாழ்வோர் வேறு புலம் பெயர நேர்ந்தது. இப் பாடலில் கண்ட வரலாறு,   திருவிளையால் புராணத்தில் வருவது.


உலவாக் கிழி அருளிய படலம்


     வள்ளலாகிய குலபூடண பாண்டியன், சோமவார விரதம் முதலாக உள்ள சிவ புண்ணியங்கள் அனைத்தையும் தவறாமல் நோற்று நடக்கும் தனது வன்மையினால், தனது நாட்டிலுள்ள இகழ்தற்கு உரியர் அல்லாத மறையோரை அவமதித்தான். அதனாலே மழை பெய்யாது ஒழிந்து, நீர்ப்பெருக்குக் குறைய, நாடு முழுதும் விளைவு சுருங்கி வளம் குறைந்தது.

     அந்தணர் எல்லாம் வறுமை உற்று, மார்பில் கிடந்த பூணூலை மட்டுமல்லாது வேதமாகிய நூலையும் இழந்து, வானோர் வேள்வி, தென்புலத்தின் உறைவோர் வேள்வி இழந்து, முனிவர் வேள்வியும் தேவர் வேள்வியும் பிதிரர் வேள்வியுமாகிய இவற்றைக் கைவிட்டு, வறுமைத் துன்பம் பொறுக்காது, இழிவாகிய தொழிலைச் செய்தேனும் உயிரினை ஓம்புதற்பொருட்டு வேற்று நாடு சென்றனர்;

     அவரொழிந்த குடிகளெல்லாம் பசியினாலே மனம் புழுங்கி. எந்த நாட்டிற்குச் செல்வோம் என்று வருந்த, திங்கள் மரபினனாகிய குலபூடணன் மனம் கவன்று,  திங்கட்கிழமையில், அன்றலர்ந்த மலர்களையுடைய பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சித்தி விநாயகரை வணங்கி, தனது அன்பினால், அங்கயற்கண்ணி தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளை அருச்சித்து, திருமுன் வீழ்ந்து, கை கூப்பி, துதித்து, "ஐயனே! உலகின்கண் உள்ள உயிர்களுக்கு உயிராய் உள்ளவன் நீ அல்லவோ? அந்த உயிர்கள் பசியால் இளைத்த வருத்தம் (தேவரீரைச் சாராது) அடியேனைச் சார்ந்து வருத்தும் காரணம் யாது? யான் தேடி வைத்த பொருள் முழுதும் சிவபுண்ணிய நெறியிலே செலவாகியது. தேவரீர்,  இனித் திருவுள்ளம் மலர்ந்து, எனது துன்ப வினை நீங்குமாறு, திருவருள் நோக்கம் செய்தருளுக" என்று குறையிரந்து நின்றான்.

     பாம்பினை அரையில் கட்டியருளிய சோமசுந்தரக் கடவுள், குறை இரந்து நின்ற அடியவனாகிய அரசனது,  தவற்றினைச் சிறிது திருவுள்ளத்திற் கொண்டு, அவன் மொழியைத் தனது திருச் செவியில் கேளாதவர் போலச் சும்மா இருப்ப, மன்னன் தனது மாளிகையில் சென்று, இறைவனது திருவடியை அன்புமிகச் சிந்தித்து, தரையில் படுத்து உறங்குவானாயினன்.

     அப்பொழுது,  வெள்ளியம்பலத்திலே திருநடம் புரியும் சோமசுந்தரக் கடவுள், அவனது கனவின்கண், சங்கினாலாகிய குண்டலமும், வெள்ளிய திருநீறும், சரிந்த கோவண உடையும் விளங்க சித்தமூர்த்தியாக எழுந்தருளி,  பாண்டிவேந்தனாகிய குலபூடணன் முன்னே நின்று இதனைக் கூறியருளுகின்றார்.

     "இதழ்கள் நிறைந்த மலர் மாலையணிந்த மலை போலும் மார்பினை உடையானே!  எப்பொழுதும் என்னிடம் அன்புடைமையும், கெடாத விரதமும் ஆகிய, சிறந்த செல்வத்தினை உடையவனே!  நின்பால் ஒரு குறை உண்டு; அதனால் உனது அழியாத வளம் பொருந்திய நாட்டின்கண்,  இப்பொழுது வேள்வியாகிய செல்வம் குறைந்தது. வேதமே நமது ஆசனம் ஆகும். வேதமே நமது பாதுகை ஆகும்.  வேதமே நமது ஊர்தி ஆகும். வேதமே நமது கால் சிலம்பு ஆகும்.  வேதமே நமது கோவணம் ஆகும்.  வேதமே நமது கண் ஆகும். வேதமே நமது மொழி ஆகும். வேதமே நமது திருவுருவம் ஆகும். வேதமே நமது ஆணையாகிய சத்தி வடிவாகியும்,  விதி விலக்குகளாகியும், அறிவு கொளுத்தி நன்னெறியில் நிறுத்தி, போகத்தை அளித்து,  திரிபினை விளைக்கும் ஆணவ மலக்கட்டினை அவிழ்த்து,  ஆன்ம கோடிகளுக்கெல்லாம், எமது பிரியாத வீடுபேற்றை அருளுவதாகும். வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த மன்னனே!  அவ்வேதமே நமது செங்கோலுமாகும். அந்த வேதங்களுக்கு உறுதி ஆவார், அந்த வேதநூல் வழியே, கலித் துன்பம் கெடுமாறு வேள்வித் தீயினை வளர்த்து, எம்மிடத்துச் சிந்தையைச் செலுத்துகின்ற அந்தணராவர். இவ்வந்தணர் வேட்கும் வேள்வியே மழைக்குக் காரணமாகும்.  மைந்தனே! நீ இவர்களை இகழ்ந்து கைவிட்டனை,  அதனால் மழை பெய்யாது ஒழிந்தது"

     "மூன்று உலகங்களும் உய்தி பெற,  மூன்று தீயையும் வளர்க்கும் இவ் அந்தணரை,  நம்மைப் போலவே கருதி ஒழுகி,  எப்பொழுதும் பல வளங்களையும் பெருகச் செய்து,
அறவடிவான செங்கோலைச் செலுத்தி ஆக்கினா சக்கிரத்தை நடத்தி, வாழ்வாயாக" என்று,  உலவாக்கிழி ஒன்றினை சோமசுந்தரக் கடவுள் தந்தருளினார்.

     "இந்தப் பொற்கிழியில் எவ்வளவு பொன்னாயினும் எடுத்து வழங்குந் தோறும்,  அது நாம் கொடுத்த அளவினின்றும் குறையாத தன்மை உடையதாகும். இதனைக் கொண்டு வந்த வறுமையைப் போக்குவாயாக" என்று கொடுத்தருளி,  மன்னனது மனக் கவலை கெட, திருநீறு தரிப்பித்து, இறைவர் திருவுருக் கரந்து அருளினார்.

     குலபூடண பாண்டியன் தன் கனவு நனவாக எழுந்து வணங்கி, தேவதேவனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடியைப் போன்ற, அழகிய பொன் முடிப்பினைத் தலைமேற் கொண்டு, மகிழ்ச்சி மேலோங்க நின்று, ஒரு முகூர்த்த நேரம் வரை ஆனந்தக்கூத்தாடி,  மந்திரிகளுக்கும் படைத் தலைவர்களுக்கும் அதனைக் காண்பித்து நிகழ்ந்த செய்தியைத் தெரிவித்தான்.

     சிவந்த கண்களையுடைய சிங்கத்தின் பிடர் சுமந்த, தெய்வத் தன்மை பொருந்திய மணிகள் இழைத்த அழகிய ஆதனத்தில் ஏற்றி, சங்கங்கள் (ஒரு பால்) முழங்கவும், வேதம் (ஒருபால்) ஒலிக்கவும், சந்தனக் குழம்பைப் பூசி, மகரந்தம் சிந்த மாலையைச் சூட்டி, தசாங்கத்தால் ஆகிய நறும்புகையினையும், நறுமணம் கமழும் நெய் விளக்கினையும் விளைத்து, கங்கையைத் தரித்த சோமசுந்தரக் கடவுளைப் போல அவ் உலவாக்கிழியைக் கருதி, பூசையாகிய தொழிலை முற்றுவித்தான்.

     நெருங்கி வணங்கி வலஞ்செய்து, அழகிய பொன் முடிப்பைக் கட்டவிழ்த்து எடுத்து, முத்தீயினை ஓம்பும் அந்தணர்கட்கும் வேள்விகளுக்கும் அனைவருக்கும் முகந்து நாள்தோறும் வரைவின்றிக் கொடுக்கக் கொடுக்க,  சோமசுந்தரக் கடவுள் கொடுத்த அப் பொற்கிழியானது, அடியார்கட்குக் கொடுத்தலால் குறைவுபடாத முத்தி இன்பம் போலாயிற்று.

     அந்த உலவாக் கிழியில் விளைந்த பொன்னினால், ஒளி வீசி விண்ணினின்றும் இழிந்த இந்திர விமானத்தை, உள்ளும் புறமும் இழைத்து, ஞானக் கொழுந்து போலும் அங்கயற்கண்ணம்மையின் திருக்கோயிலும், அறுகால் பீடமும், விண்ணினைத் தடவுகின்ற கொடியையுடைய நீண்ட பெரிய கோபுர வாயிலும், மற்றுள்ளனவும், அழகு வீச, வேதத்தின் எல்லையை அறிந்தவனாகிய குலபூடண பாண்டியன், தகடு வேய்ந்தான்.

     குலபூடண வழுதி என்னும் முகிலானது,  முற்பட்டு,  குறையாத நிதியாகிய கடலினை மொண்டு மொண்டு, நாள்தோறும் பொழிந்து தெய்வத் தன்மை பொருந்திய தருமமாகிய பயிரை வளர்க்க, மேகம் வரிசையாய் வரும் அலைகளையுடைய கடல்நீரைக் குடித்து மழையினைப் பொழிய, பல வளங்களும் மிகுந்து. பாண்டி நாடானது, அளகாபுரியைப் போலச் செல்வந் தழைத்தது.

இத் திருக்குறளுக்கு ஒப்பாய் அமைந்த அருட்பாடல்கள்.....

கண்காட்டு நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண்காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண்காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

வெண்காட்டில் உறையும் பெருமான், நெற்றியில் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இசைவடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடைஏந்திய கொடியை உடையவன்.
        

இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால்
         இலையே ஒத்தியால், உளையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால்
         அடியார் தமக்குஓர் குடியே ஒத்தியால்
மழைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள்
         வலித்து எற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அழைக்கும் கடலங்கரைமேல் மகோதை
         அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.  --- சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, ` மகோதை ` என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, உலகத்தை இயக்குதலில், எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய் ; இல்லாதாய் போல்கின்றாய் ; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய் ; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய் ; அடியார்களுக்கு அணியையாதலில், அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய்.

நானே இனிஇந் நிரை மேய்ப்பன்
         என்றார், அஞ்சி இடைமகனும்
தான்நேர் இறைஞ்சி விட்டு அகன்றான்
         தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேர் ஆயம்
         அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்கு
வானே என்ன நிரை காக்க
         வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.  --- பெரிய புராணம்.

சண்டேசுர நாயனார் புராணத்தில் வரும் இப்பாடலின் பொழிப்புரை....

`யானே இனி இப்பசுக்களின் கூட்டத்தினை மேய்ப்பேன்` எனக் கூறினார் விசாரசருமர். அது கேட்டு அஞ்சிய இடையனும் அவரை வணங்கி, அப்பசு மேய்த்தலை விட்டு நீங்கினான். இப்பால், மறைவழி நிற்கும் அச்சிறுவராய விசாரசருமர் தாமும், அங்குள்ள மறையவரின் இசைவு பெற்றுப், பசுக்கள் நெருங்க இருக்கும் அப்பெருங் கூட்டத்தினை மேய்த்திடுவாராகி, பசிய பயிர்களுக்கு வானின் மழை, இன்பம் பயக்குமது போல, அப்பசுக்களின் நிரைகளைக் காத்திட முற்பட்டார்;


எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்துஎழுந்த மாமுகிலே பார்த்திருக்கும், மற்றுஅவைபோல்
மெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோடு அம்மா என்
சித்தம்மிக உன்பாலே வைப்பன் அடியேனே.  --- குலசேகராழ்வார்.

வானம் மழை பொழியாது போனாலும் பயிர்கள் மேகத்தையே நோக்கி இருக்கும். அதுபோல இறைவா! நீ என்மேல் கருணை காட்டாவிடினும் என் மனம் உன்னிடம் தான் எனச் சொல்லும் குலசேகரர் அவன் தாள் (திருவடி) வேண்டி நிற்கின்றார்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...