வழுவூர் வீரட்டம் - 0818. தலைநாளில் பதம்.

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தலைநாளில் பதம் (வழுவூர்)

முருகா!
உனது திருவருளை ஒருபோதும் மறவேன்.

தனனா தத்தன தாத்த தந்தன
     தனனா தத்தன தாத்த தந்தன
          தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான

தலைநா ளிற்பத மேத்தி யன்புற
     வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
     தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன்

சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
     ளறியா முத்தமி ழூட்டி முண்டக
     தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும்

கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
     ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
     கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக்

கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
     வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
     கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ......மறவேனே

சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
     அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
     சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா

சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
     வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
     சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே

மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
     யமுதா கத்தன வாட்டி யிந்துள
     மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா

வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
     நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
     வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தலை நாளில் பதம் ஏத்தி, அன்பு உற,
     உபதேசப் பொருள் ஊட்டி, மந்திர
     தவ ஞானக்கடல் ஆட்டி, என்தனை ......அருளால்உன்

சதுர ஆகத்தொடு கூட்டி, அண்டர்கள்
     அறியா முத்தமிழ் ஊட்டி, முண்டக
     தளிர் வேதத் துறை காட்டி, மண்டலம் ...... வலமேவும்

கலை சோதிக் கதிர் காட்டி, நன்சுடர்
     ஒளி நாதப் பரம் ஏற்றி, முன்சுழி
     கமழ் வாசற்படி நாட்டமும் கொள, ...... விதிதாவி,

கமல ஆலைப் பதி சேர்த்து, முன்பதி
     வெளியாகப் புக ஏற்றி, அன்பொடு
     கதிர் தோகைப் பரி மேல் கொளும் செயல் ......மறவேனே.

சிலை வீழ, கடல் கூட்டமும் கெட,
     அவுணோரைத் தலை வாட்டி, அம்பர
     சிர மாலைப் புக ஏற்றவும் தொடு ...... கதிர்வேலா!

சிவகாமிக்கு ஒரு தூர்த்தர், எந்தையர்,
     வரி நாகத் தொடையார்க்கு உகந்து, ரு
     சிவஞானப்பொருள் ஊட்டும் முண்டக ...... அழகோனே!

மலை மேவித் தினை காக்கும் ஒண்கிளி,
     அமுது ஆகத் தன வாட்டி, இந்துள
     மலர் மாலைக்குழல் ஆட்டு அணங்கி தன் ......மணவாளா!

வரி கோழிக் கொடி மீக் கொளும்படி
     நடம் ஆடி, சுரர் போற்று தண்பொழில்
     வழுவூர் நல்பதி வீற்று இருந்து அருள் .....பெருமாளே.


பதவுரை


      சிலை வீழ --- தாரகாசுரன் அழிந்து, கிரவுஞ்ச மலையானது பொடியாகி வீழவும்,

     கடல் கூட்டமும் கெட --- கடலில் ஒளிந்திருந்த சூரபதுமனோடு அவனது கூட்டமும் கெட்டு ஒழியவும்,

      அவுணோரைத் தலை வாட்டி --- அவுணர்களின் சிரங்களைக் கொய்து,

     அம்பர சிர மாலைப் புக ஏற்றவும் தொடு கதிர்வேலா --- வானில் உள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனைத் தேவலோகத்தில் மீண்டும் குடி ஏற்றவும் விடுத்தருளிய ஒளிமிக்க வேலாயுதத்தைத் தரித்தவரே!

     சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் --- சிவகாமி அம்மைக்கு அன்புடையவரும்,

     எந்தையர் --- எமது தந்தையாரும்,

     வரிநாகத் தொடையார்க்கு --- வரிகளை உடைய பாம்புகளை மாலையாக அணிந்தவரும் ஆன சிவபெருமானுக்கு,

      உகந்து --- மகிழ்ந்து,

     ஒரு சிவஞானப் பொருள் ஊட்டும் --- ஒப்பற்ற சிவஞானத்தின் பொருளை உபதேசித்து அருளி,

     முண்டக அழகோனே --- அழகிய தாமரை மலரை ஒத்த திருமுகமண்டலத்தை உடையவரே!

      மலை மேவித் தினை காக்கும் ஒண்கிளி --- வள்ளிமலையில் இருந்து தினைப்புனத்தைக் காவல் புரிந்துகொண்டு இருந்த அழகிய கிளியைப் போன்றவளும்,

     அமுது ஆகத் தன வாட்டி --- அமுதை ஒத்த திருமேனியையும், கொங்கைகளையும் உடையவளும்,

      இந்துளம் மலர்மாலைக் குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா --- கடப்பமலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிய தெய்வமகளும் ஆன வள்ளிநாகியின் மணவாளரே!

      வரி கோழிக்கொடி மீக் கொளும்படி நடமாடி --- நீண்ட கோழிக் கோடியானது உயர்ந்து விளங்குமாறு திருநடனம் புரிபவரே!

      சுரர் போற்றும் --- தேவர்களும் வந்து வழிபடுகின்,

     தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே --- குளிர்ந்த சோலைகள் உள்ள வழுவூர் என்னும் நல்ல திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பெருமையில் மிக்கவரே!

     அன்பு உற --- அடியேன் மீது அன்பு வைத்து,

      தலை நாளில் பதம் ஏத்தி --- முன் நாளில் தேவரீரது திருவடியை அடியேன் சிரம் மீது சூட்டி,

     உபதேசப் பொருள் ஊட்டி --- மெய்ஞ்ஞானப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து,

      மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி --- அடியேனுக்கு உபதேசித்து அருளிய சிவமந்திரங்களால், என்னைத் தவஞானக் கடலில் திளைத்திருக்குமாறு செய்து,

      என் தனை --- அடியேனை,

     அருளால் --- தேரீரது திருவருள் கருணையால்,

     உன் சதுர் ஆகத்தோடு கூட்டி --- உமது சதுரப்பாடு அமைந்த அடியார் திருக்கூட்டத்தில் அடியேனைக் கூட்டி வைத்து,

     அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி --- தேவர்களுக்கும்  அறியக் கிடையாத முத்தமிழ் இன்பத்தை அடியேனுக்கு ஊட்டி,,

      முண்டக தளிர் வேதத் துறை காட்டி --- முண்டக உபநிடதம் முதலான வேதத் துறைகளின் உண்மையையும் உணர்த்தி,

      மண்டலம் வலம் மேவும் கலை சோதிக் கதிர் காட்டி --- அக்கினி முதலிய மூன்று மண்டலங்களிலும் இடம் வலமாக மேலேறிச் சென்று பொருந்தி உள்ள பேரொளியைக் காட்டி

     நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி --- நல்ல ஒளி பொருந்திய பரநாத நிலையின் மேல் அடியேனை ஏற்றி,

      முன் சுழிகமழ் வாசல்படி நாட்டமும் கொள விதி தாவி --- முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிட்டான ஆதாரத்தைக் கடந்து,

      கமல ஆலைப் பதி சேர்த்து --- மூலாதார நிலையில் இருந்து,

     முன் பதி வெளியாகப் புக ஏற்றி --- மேலேறிச் செல்லும் வழியில் புகுமாறு புரிந்து,

      அன்பொடு கதிர் தோகைப் பரி மேற்கொ(ள்)ளும் செயல் மறவேனே --- அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை அடியேன் ஒருபோதும் மறவேன்..

பொழிப்புரை

         தாரகாசுரன் அழிந்து, கிரவுஞ்ச மலையானது பொடியாகி வீழவும், கடலில் ஒளிந்திருந்த சூரபதுமனோடு அவனது கூட்டமும் கெட்டு ஒழியவும், அவுணர்களின் சிரங்களைக் கொய்து, வானில் உள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனைத் தேவலோகத்தில் மீண்டும் குடி ஏற்றவும் விடுத்தருளிய ஒளிமிக்க வேலாயுதத்தைத் தரித்தவரே!

     சிவகாமி அம்மைக்கு அன்புடையவரும், எமது தந்தையாரும்,
வரிகளை உடைய பாம்புகளை மாலையாக அணிந்தவரும் ஆன சிவபெருமானுக்கு, திருவள்ளம் மகிழ்ந்து, ஒப்பற்ற சிவஞானத்தின் பொருளை உபதேசித்து அருளிய அழகிய தாமரை மலரை ஒத்த திருமுகமண்டலத்தை உடையவரே!

     வள்ளிமலையில் இருந்து தினைப்புனத்தைக் காவல் புரிந்துகொண்டு இருந்த அழகிய கிளியைப் போன்றவளும், அமுதை ஒத்த திருமேனியையும், கொங்கைகளையும் உடையவளும், கடப்பமலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிய தெய்வமகளும் ஆன வள்ளிநாகியின் மணவாளரே!

         நீண்ட கோழிக் கோடியானது உயர்ந்து விளங்குமாறு திருநடனம் புரிபவரே!

         தேவர்களும் வந்து வழிபடுகின்குளிர்ந்த சோலைகள் உள்ள வழுவூர் என்னும் நல்ல திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பெருமையில் மிக்கவரே!

     அடியேன் மீது அன்பு வைத்து, முன் நாளில் தேவரீரது திருவடியை அடியேன் சிரம் மீது சூட்டி, மெய்ஞ்ஞானப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து, அடியேனுக்கு உபதேசித்து அருளிய சிவமந்திரங்களால், என்னைத் தவஞானக் கடலில் திளைத்திருக்குமாறு செய்து, அடியேனை, தேரீரது திருவருள் கருணையால், உமது சதுரப்பாடு அமைந்த அடியார் திருக்கூட்டத்தில் அடியேனைக் கூட்டி வைத்து, தேவர்களுக்கும்  அறியக் கிடையாத முத்தமிழ் இன்பத்தை அடியேனுக்கு ஊட்டி, முண்டக உபநிடதம் முதலான வேதத் துறைகளின் உண்மையையும் உணர்த்தி, அக்கினி முதலிய மூன்று மண்டலங்களிலும் இடம் வலமாக மேலேறிச் சென்று பொருந்தி உள்ள பேரொளியைக் காட்டி,  நல்ல ஒளி பொருந்திய பரநாத நிலையின் மேல் அடியேனை ஏற்றி, முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிட்டான ஆதாரத்தைக் கடந்து, மூலாதார நிலையில் இருந்து, மேலேறிச் செல்லும் வழியில் புகுமாறு புரிந்து, அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை அடியேன் ஒருபோதும் மறவேன்..


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார், முருகப் பெருமான் தன் மீது பெருங்கருணை புரிந்து, ஆட்கொண்டு, உபதேசத்தை அருளி, யோக நிலையில் தன்னை விளங்குமாறு அருள் புரிந்து, பெருமானைத் தரிசிக்குமாறு புரிந்த பேர்ருளை ஒருபோதும் மறவேன் என்கின்றார்.
  
சதுர் ஆகத்தொடு கூட்டி ---

சதுர் - திறப்பாடு. "பெருந்திறல் அருந்தவர்க்கு அரசே" என்னும் மணிவாசகத்தே எண்ணுக.

ஆகம் - உடல், மனம். இங்கு அடியார் கூட்டத்தைக் குறித்தது.

அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி ---

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கற்புணையை நற்புணையாக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்.  இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ்.

அத்தகைய அற்புதமான தமிழ் மொழியானது மூன்று இயல்களைக் கொண்டது. இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்பவே அவை. இந்த முத்தமிழால் வைதாலும் வைதவர்களை வாழவைப்பவன் முருகப் பெருமான் என்பதால்,
"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்றருளினார் அடிகளார். இரவு பகல் பலகாலும் இயல் இசை முத்தமிழால் வணங்கினால் இறைவன் திருவருள் வாய்க்கும்.

"இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என்பது பிங்கல நிகண்டு.

தமிழின் இனிமையானது ஊனினை உருக்கும். உள்ளொளி பெருக்கும் என்பதனைப் பின்வரும் பாடலில் மணிவாசகப் பெருமான் காட்டி உள்ளது கருதத் தக்கது.

"சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
    பலத்தும் என் சிந்தைஉள்ளும்
உறைவான், உயர்மதில் கூடலின்
    ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோ?அன்றி
    ஏழிசைச் சூழல்புக்கோ?
இறைவா! தடவரைத் தோட்கு என்கொல்
    ஆம்புகுந்து எய்தியதே"      ---  திருக்கோவையார்.


அம்பர சிர மாலைப் புக ஏற்றவும் தொடு கதிர்வேலா ---

அம்பரம் - வான். வானலோகத்தைக் குறிக்கும்.

சிரம் - தலை. வானுலகில் வாழும் தேவர்கள் தலைவனாகிய இந்திரன்.

தனது வேலாயுதத்தை விடுத்து சூரபதுமனாதியர்களை அழித்தார்.
சூரபதுமனுக்கு அஞ்சி, தேவலோகத்தில் இருந்து நீங்கி, பல துனபங்க்ளை அனுபவித்து ஒளிந்து வாழ்ந்திருந்த இந்திரன் மீண்டும் தேவலோகத்தைச் சார்ந்து வாழ்ந்எதான்.
  
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் ---

தூர்த்தர் - காமுகர்.

சிவகாமி அம்மைக்கு அன்புடையவர் சிவபெருமான்.

வரிநாகத் தொடையார்க்கு ---

தொடை - மாலை.

வரிகளை உடைய பாம்புகளை மாலையாக அணிந்தவர் சிவபெருமான். நாகாபரணர்.
  
சுரர் போற்றும் தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே ---

சுரர் - தேவர்கள்.

மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் மங்காநல்லூர் என்ற ஊர் வருவதற்கு சற்று முன்பாக வலதுபுறம் கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் இரண்டு கி.மீ. சென்றால் "வழுவூர்" என்னும் இந்த தேவார வைப்புத் திருத்தலத்தை அடையலாம்.
தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த அபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்து, அதன் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த திருத்தலம். வழுவூர் வீரட்டம், அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. இறைவன் பெயர், வீரட்டேசுவரர், கீர்த்திவாசர், கஜசங்காரர்இறைவி பெயர் பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி.

அட்ட வீரட்டத் தலங்கள் பற்றிய குறிப்பு வருமாறு...

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
         உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
         வீரட்டம் மாதானம் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
         வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையும்
         கயிலாய நாதனையே காண லாமே. --- அப்பர்.

இதன் பொழிப்புரை : உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திர கோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை : ஊறல், ஓத்தூர் இவை தொண்டை நாட்டுத் தலங்கள். மறைக்காடு, மீயச்சூர், வைகா, கஞ்சனூர் இவை சோழ நாட்டுத் தலங்கள். மேற்சொல்லப்பட்ட இளங்கோயில் மீயச்சூரிலுள்ள மற்றொரு திருக்கோயில்; அது மூலட்டான மூர்த்தி பாலாலயத்துள் இருந்தபொழுது பாடப்பட்ட இடம் என்பர். வைகா-வைகாவூர். கேதாரம், வடநாட்டுத்தலம். வெஞ்சமாக்கூடல், கொங்கு நாட்டுத் தலம். உஞ்சேனை மகாளம். உருத்திரகோடி பொதியில்மலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம் வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள்.

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானம்
         கடவூர்வீ ரட்டானம் காமருசீர் அதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
         வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கைவீ ரட்டம்
         கோத்திட்டைக் குடிவீரட் டானம்இவை கூறி
நாவில்நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
         நமன்தமரும் சிவன்தமர்என்று அகல்வர் நன்கே.
                                                   ---  அப்பர்.
இதன் பொழிப்புரை : காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர்.

குறிப்புரை : இத்திருத்தாண்டகம், அட்ட வீரட்டங்களை வகுத்து அருளிச்செய்தது. அவை , கண்டியூர் வீரட்டம், கடவூர் வீரட்டம், அதிகை வீரட்டம், வழுவை வீரட்டம், பறியலூர் வீரட்டம், கோவலூர் வீரட்டம், குறுக்கை வீரட்டம், விற்குடி வீரட்டம் என்பனவாதல் அறிக.

இவ்வீரட்டங்கள் முறையே,  `பிரமன் சிரத்தை அரிந்தது, காலனை உதைத்தது, திரிபுரத்தை எரித்தது, யானையை உரித்தது, தக்கன் வேள்வியைத் தகர்த்தது, அந்தகாசுரனை அழித்தது, காமனை எரித்தது, சலந்தராசுரனை அழித்தது` ஆகிய வீரச்செயல்களைச் சிவபிரான் செய்தருளிய இடங்களாகும்.

இதனை

"பூமன் சிரம்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை, யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களுஞ் சூடிதன் சேவகமே"

என்னும் பழஞ்செய்யுளால் அறிக.  

இவற்றுள், அதிகையும் கோவலும் நடுநாட்டில் உள்ளவை; ஏனையவை சோழநாட்டில் உள்ளன. வழுவை, வைப்புத் தலம். வழுவை, `வழுவூர்` எனவும் படும்.இத்தலத்துக்குரிய கஜசங்கார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞானசபையும் சிறப்பானவை.  திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி, அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசங்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம்.   

அமாவாசை தோறும் இறைவன் சந்நிதிக்கு எதிரிலுள்ள பஞ்சபிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுகிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் புத்திரதோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகின்றது. இந்த வழிபாடு இன்றளவும் நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
கருத்துரை

முருகா! உனது திருவருளை ஒருபோதும் மறவேன்.
50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...