மனம் எனும் குரங்கு





     "தூக்கணம்" என்னும் சொல்லுக்கு, தொங்கல், உறி என்று பொருள்.

     குருவி வகைகளுள் ஒன்று தூக்கணங்குருவி. மரங்களில் தொங்கும் வடிவில் கூடுகளைக் கட்டி வாழ்வதால், இந்தக் குருவி வகைக்கு, தூக்கணம் குருவி என்று பெயர் வந்தது. கூடுகளைக் கட்டும் பறவைகளுள் இது சிறப்பானதொன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் பார்வைக்கு அழகாகவும், அதிசயமாகவும் இருக்கும். தூக்கணம் குருவியின் கூடு, சுரைக்காயின் வடிவத்தில் தொங்கியபடி இருக்கும். கூட்டின் வாயிலானது மழைநீர் உள்ளே புகாதபடி கீழ்ப்புறமாக இருக்கும். தாய்க் குருவியானது, காட்டில் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வந்து, களிமண் சேற்றில் புதைத்து, அதைக் கொண்டு வந்து தனது கூட்டில் வெளிச்சத்திற்குப் பயன்படுத்தும்.

     தூக்கணம் குருவி ஒன்று அழகாகக் கூடு கட்டி வாழும் காலத்தில் நல்ல மழை பொழிந்தது. மழையில் நனையாதபடி பாதுககாப்பாக தூக்கணம் குருவி தனது கூட்டில் இருந்தது. அந்த மரத்தில் பலகாலமாக இருந்து வந்த ஒரு குரங்கு மழையில் நனைவதைப் பார்த்த தூக்கணம் குருவியின் மனம் பொறுக்கவில்லை.

     குரங்கின் மீது வைத்த இரக்கம் பற்றி, "இந்த மழையில் நனையாது இருக்க நீயும் என்னைப் போல் ஒரு கூடு கட்டிக்கொள்ளலாமே" என்று தனக்குத் தெரிந்த உபாயத்தைத் தூக்கணம் குருவி கூற, அதனைக் கேட்ட அறிவில்லாத அந்தக் குரங்கு, கோபம் கொண்டு, தான் இருந்த இடத்தில் இருந்து பாய்ந்து, அந்த குருவியானது அழகாகக் கட்டி வைத்திருந்த கூட்டினைப் பிய்த்து எறிந்தது.

     குருவியானது, தனது அறிவுக் கூர்மையால் முயன்று, தனது பாதுகாப்புக்காகக் கட்டி இருந்து கூடு சிதைந்து போனது. குருவி வருந்தியது. தனது வீரத்தைக் காட்டி விட்டதாக எண்ணி, குரங்கு மகிழ்ந்தது.

     இந்த நிகழ்வில் இருந்து தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், அறிவுள்ளவர்கள், அறிவு இல்லாதவர்களுக்கு அறிவுரை சொன்னால், சொன்னவர்க்கே துன்பம் விளையும் என்பதுதான்.

     "விவேகசிந்தாமணி" என்று ஒரு பழைய நீதிநூல் உண்டு. இந்த நூலில், மேற்குறித்த நீதியானது, ஒரு பாடலாகக் காட்டப்பட்டு உள்ளது.

பாடலைக் காண்போம்.....

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தான் ஒரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்;
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!

இதன் பொருள் ---

     வானரம் --- (மரத்தில் இருந்து) குரங்கு ஒன்று,

     மழைதனில் நனைய --- மழை நீரில், (இருக்க இடம் இல்லாமையால், மரக் கிளையில் இருந்துகொண்டு) நனைந்து (நடுங்க),

     (அதைக் கண்டு, அந்த மரத்திலே கூடு கட்டிக் கொண்டு, மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருந்த, அறிவு வல்லமை உள்ள)

     தூக்கணம் --- தூக்கணம் குருவியானது,

     ஒரு நெறி சொல்ல --- (குரங்கின் மீது இரக்கம் கொண்டு, இந்த மழையில் நனையாது இருக்க, என்னைப் போல் ஒரு கூடி கட்டிக் கொண்டு இருக்கலாமே என்று) ஒரு நல்ல வழியைச் சொல்ல,

     தாண்டிப் பிய்த்திடும் --- (அறிவில்லாத அந்த குரங்கு, குருவி சொன்ன நல்ல அறிவுரையை ஏற்றுக் கொள்ளாமல் சினம் கொண்டு) தான் இருந்த இடத்தில் இருந்து பாய்ந்து, (தூக்கணங்குருவி கட்டி வைத்திருந்த அழகான கூட்டைப்) பிய்த்து எறியும்.

     அதுபோ,

     ஞானமும், கல்வியும் நவின்ற நூல்களும் --- மெய்ப்பொருள் உண்மையும், அதனை உணரும் கல்வியையும் (பெரியோர்களால் தெளிந்து, உயர்ந்தவை என்று) அறிவித்துள்ள நல்ல நூல்களின் கருத்துக்களை,

     ஈனருக்கு உரைத்திடில் --- அறிவு ஈனம் உள்ள கீழ்மக்களுக்கு (அறிவுடையோர் உணர்ந்து, அவரது தன்மை கருதி) கூறினால்,

     அது இடர் ஆகும் --- அது (கூறிய அறிவுடையோருக்கே) துன்பத்தை உண்டாக்கும்.

     உயர்ந்த நூல்களின் பொருள் விளங்காமையால், விளங்கிக் கொள்ளும் அறிவு இல்லாதவர்கள், விளங்கிக் கொள்ள முயலாமல், அதனைத் தரக்குறைவாக விமரிசனம் செய்வதோடு, இழித்தும் பேசுவார்கள்.

     எனவேதான், பாடம் சொல்லுவோனுக்கு உரிய இலக்கணம், பாடம் கேட்போனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றி, நன்னூல், அறநெறிச்சாரம் முதலாகிய நூல்களில் சொல்லபட்டுள்ளது.

     இந்தப் பாடலில் இருந்து இன்னொரு உண்மையும் விளங்கும்.

     இறைவன் தந்த உடம்பைக் கொண்டு, அதை அழகாகப் பேணி, உலகியல் நிலைகளால் தனக்குத் துன்பம் வராதபடி காத்துக் கொள்ளுகின்றவர்கள் அறிவு உடைய தூக்கணம் குருவியைப் போன்றவர்கள். உடம்பாகிய கூடு சிதையாமல்படிக்கு அதனைக் காத்து, அதனால் நலம் பெறவே மனத்தை நல்வழியில் முயன்று செலுத்துவார்கள். என்னதான், நல்ல நெறியில் ஒழுகவேண்டும் என்று முயன்றாலும், மனமானது சில நேரங்களில் அது போனவழியே செல்வதால் துன்பத்தை அனுபவிக்க நேரும். அதனால் குருவியின் கூடு போன்ற உடம்பும், கூட்டில் உள்ள குருவியைப் போன்ற உடம்பில் உள்ள உயிரும் துன்பத்தை அடையும்.

     மனம் என்பது ஒரு குரங்கைப் போன்றது. பலவேறு நினைவுகளைக் கொண்டு, ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றிச் சென்றுகொண்டே இருக்கும். நிலையில்லாது உழலும். அந்த மனமாகிய குரங்கை அடக்கி வைத்து இருந்தால், உயிரானது தீய நெறிகளில் சென்று இடர்ப்படாமல், நல்ல நெறியில் செல்லும். உடம்பும் நெடுநாள் நிலைத்து இருக்கும்.

     மனம் என்பதை ஒரு குரங்காக வைத்து, அதை அறிவு என்னும் கோலால் அவ்வப்போது அதட்டிக் கொண்டே இருக்கவேண்டும். "கோல் இருந்தால் குரங்கு ஆடும்" என்பது உலகியல் வழக்குச் சொல். சற்று அயர்ந்தாலும், அது தனது சேட்டையைப் புரிந்து விடும். "குரங்கின் கையில் பூமாலை" என்பதும் நமக்குத் தெரிந்ததே.

     எனவேதான், பெரியோர்கள் தாம் சொல்ல வந்த நல்ல நெறிகளை, "நெஞ்சு அறிவுறுத்தல்" என்னும் வகையில், தமது மனத்திற்கு அறிவுறுத்துவதாகவே பாடி வைத்து இருப்பார்கள்.

     எடுத்துக்காட்டாகப் பின்வரும் பாடல்களைக் காணலாம்....

     திருஞானசம்பந்தப் பெருமான் தனது நெஞ்சுக்கு அறிவுறுத்துவதாக அமைந்த பாடல்...

நீ நாளும் நல் நெஞ்சே!
         நினைகண்டாய், யார்அறிவார்
சாநாளும் வாழ்நாளும்?
         சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப,
         புகழ்நாமம் செவிகேட்ப,
நாநாளும் நவின்றுஏத்தப்
         பெறலாமே நல்வினையே.

இதன் பொருள் ---

     நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்? ஆதலின், திருச்சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும், செவிகளால் அவன் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப் பயன் பெறலாம்.

     அடுத்து, வள்ளல்பெருமான் பாடி அருளிய, கந்தகோட்ட "தெய்வ மும்மணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன்
     என்செய்கேன் வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
     வாய்ந்து உழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
     பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
     பேதைவிளை யாடுபந்தோ

காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
     காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
     கர்மவடிவோ அறிகிலேன்"  

இதன் பொருள் ---

     என்மனத்தின் இயல்பை வாயால் உரைக்க முடியாது; எளியேன் என்ன செய்வேன். வள்ளலாகிய உன் சேவடிக்கண் ஒன்றி நில்லாமல் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு உழலுவதாகிய அம்மனது பேய் பிடித்து, கள் குடித்து, கோலால் அடியுண்டு பித்துக் கொண்ட குரங்கு என்பதோ?  மண்குயவன் என்று சொல்லப்படுகின்ற குலாலனால் சுழற்றப்படுகிற சக்கரம் என்பதோ?  சிறுவர் கைக்கொண்டு விளையாடும் பந்து என்பதோ?  சினம் கொண்டு பிற உயிர்மேல் பாயும் கொடிய விலங்கு என்பதோ? பெருங் காற்றினால் சுழலும் காற்றாடி என்பத? , காலன் வடிவோ? இந்திர சால வடிவமோ? என்னுடைய வினையின் வடிவமோ? இன்ன தென்று அறியேன்.

     மனம் என்னும் குரங்குக்கு, வள்ளல் பெருமான் கூறும் நல்லுரையைக் காண்போம்....

மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே! நீதான்
     மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்;
இனம் உறஎன் சொல்வழியே இருத்தியெனில், சுகமாய்
     இருந்திடுநீ; என்சொல்வழி ஏற்றிலை ஆனாலோ,
தினையளவு உன் அதிகாரம் செல்லவொட்டேன்; உலகம்
     சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே;
நனவில்எனை அறியாயோ? யார் என இங்கு இருந்தாய்
     ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.

இதன் பொருள் ---

     மனம் என்று சொல்லப்படும் ஒரு பேய் பிடித்த குரங்கின் செயலையுடைய அறிவில்லாத சிறுவனே! நீ என்னை மற்றவர்களைப் போல எண்ணிக்கொண்டு மயக்குதல் ஒழிக. நட்பு உண்டாக என் சொல் வழியே இருப்பாயானால் சுகமாய் இருந்திடுவாய். என் சொல்லை ஏற்க மாட்டாயானால் தினையளவு கூட உன் செல்வாக்கு என்னிடம் செல்லுமாறு இடங்கொடுக்க மாட்டேன். அதற்கு மாறா,க உலகவர் எல்லாரும் கண்டு இகழ்ந்து சிரிக்குமாறு திருவருள் துணையால் ஒருகணப் பொழுதில் உன்னை அடக்கி ஒடுக்கி விடுவேன். என்னை இன்னார் என அறியாமல், யாரோ என்று கருதிக் கொண்டு என்னுள் நீ இருக்கின்றாய். ஞான சபைத் தலைவனாகிய சிவனுக்கு நான் ஒரு நல்ல பிள்ளை என அறிவாயாக.

திருப் பந்தணை நல்லூர் --- 0862. கெண்டைகள் பொரும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கெண்டைகள் பொரும் (திருப்பந்தணை நல்லூர்)

முருகா!
பெண்மயலால் அடியேன் படும் துயர் தீ,
திருவடிகளைத் தந்து அருள்விராக.



தந்ததன தந்ததன தனதனத்
     தந்ததன தந்ததன தனதனத்
     தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான


கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
     கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
     கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ......கொடுபோய்வண்

கெந்தபொடி யும்புனைந் துறவணைத்
     தின்பவச னந்தருந் தொழிலடுக்
     கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந்

தண்டைகள்க லின்கலின் கலினெனக்
     கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத்
     தண்கொலுசு டன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச்

சந்ததமும் வந்திரும் பரிமளப்
     பங்கயப தங்களென் கொடுவினைச்
     சஞ்சலம லங்கெடும் படியருட் ...... புரிவாயே

தொண்டர்கள்ச ரண்சரண் சரணெனக்
     கொம்புகள்கு குங்குகுங் குகுமெனத்
     துந்துமிதி மிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை

சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக்
     கந்தகுற வஞ்சிதங் கருவனத்
     துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும்

பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்
     கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்
     பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும்

பந்திவரு மந்திசெண் பகமகிற்
     சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
     பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கெண்டைகள் பொரும் கண், மங்கையர் மலர்க்
     கொண்டைகள் குலுங்க நின்று, ருகினில்
     கெஞ்சு பல்உடன் குழைந்து, அமளியில்......கொடுபோய், வண்

கெந்த பொடியும் புனைந்து, ற அணைத்து,
     இன்ப வசனம் தரும் தொழில் அடுக்-
     கின்ற மயலின் படும் துயர் அற, ...... ப்ரபை வீசும்

தண்டைகள் கலின்கலின் கலின் என,
     கிண்கிணி கிணின்கிணின் கிணின்என,
     தண் கொலுசுடன், சிலம்பு அசைய, உள் ......பரிவாகி,

சந்ததமும் வந்து இரும் பரிமளப்
     பங்கய பதங்கள், என் கொடுவினைச்
     சஞ்சலம் மலம் கெடும்படி அருள் ...... புரிவாயே.

தொண்டர்கள் சரண் சரண் சரண் என,
     கொம்புகள் குகுங் குகுங் குகும் என,
     துந்துமி திமிந் திமிந் திமின் என, ...... குறும்ஓசை

சுந்தரி மணஞ் செயும் சவுரியக்
     கந்த! குறவஞ்சி தங்கு அருவனத்
     துங்க மலையும் புரந்து, மரருக்கு ...... இடர்கூரும்

பண்டர்கள் புயங்களும் பொடிபடக்
     கண்டவ! ப்ரசண்ட குஞ்சரி எழில்
     பைந் தரு வனம் புரந்து, கழ்எயில் ......புடைசூழும்

பந்தி வரு மந்தி செண்பகம் அகில்
     சந்து செறி கொன்றை துன்றிய வனப்
     பந்தணையில் வந்திடும் சரவணப் ......    பெருமாளே.


பதவுரை

      தொண்டர்கள் சரண் சரண் சரண் என --- அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க,

     கொம்புகள் குகும் குகும் குகும் என --- ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என ஓசை செய்ய,

     துந்துமி திமிந் திமிந் திமிந் எனக் குறுகு ஓசை --- பேரிகை முதலான வாத்தியங்கள் திமிந் திமிந் திமின் என்று நெருங்கி ஓசை செய்ய,

      சுந்தரி மணம் செயும் சவுரியக் கந்த --- அழகிய தேவயானையைத் திருமணம் புணர்ந்த வல்லமை வாய்ந்த கந்தப் பெருமானே!

      குறவஞ்சி தங்கு அருவனத் துங்க மலையும் புரந்து --- குறமகளாகிய வள்ளிநாயகியார் தங்கியிருந்து அரிய காடுகள் நிறைந்த வள்ளிமலையையும் காத்து அருள் புரிந்து,

     அமரருக்கு இடர் கூரும் பண்டர்கள் புயங்களும் பொடிபடக் கண்டவ --- தேவர்களுக்குத் துன்பத்தை விளைவித்த கீழ்மக்களாகிய அசுரர்களின் தோள்களும் பொடியாகச் செய்தவரே!

      ப்ரசண்ட குஞ்சரி --- வலிமை மிக்க தேவலோகத்து யானையால் வளர்க்கபட்டவளாகிய தேவயானை அம்மை வாழ்ந்திருந்த

     எழில் பைந்தரு வனம் புரந்து --- அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தையும் காத்து அருள் புரிந்து,

      அகழ் --- அகழியும்,

     எயில் புடை சூழும் --- பக்கத்தில் மதில்களால் சூழப்பட்டு உள்ளதும்,

     பந்தி வரு மந்தி --- வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்துள்ளதும்,

     செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன --- செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை ஆகிய மரங்கள் பொருந்தியதும் ஆகிய சோலைகளால் சூழப்பட்டுள்ள,

      பந்தணையில் வந்திடும் சரவண --- திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் சரவணபவரே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!  

       கெண்டைகள் பொரும் கண் மங்கையர் --- கெண்டை மீனைப் பழிக்கும்படியான கண்களை உடைய பெண்கள்,

     மலர்க் கொண்டைகள் குலுங்க --- மலர்களைச் சூடியுள்ள கொண்டைகள் குலுங்கும்படியாக,

       அருகினில் நின்று கெஞ்சு ப(ல்)லுடன் குழைந்து --- அருகினில் வந்து, பற்களை தெரியக் காட்டிக் குழைந்து பேசி,

     அமளியில் கொடு போய் --- படுக்கையில் கொண்டு போய்,

      வண் கெந்த பொடியும் புனைந்து --- மணம் மிக்க பொடிகளைப் பூசி,

     உற அணைத்து --- இறுக அணைத்து,

     இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற மயலின் படும் துயர் அற --- இன்பத்தைத் தருவதான பேச்சுக்களுடன் கூடிய அவர்களது செயல்களால் உண்டாகும் காமமயக்கில் அடியேன் படுகின்ற துன்பம் நீங்க,

      ப்ரபை வீசும் தண்டைகள் கலின்கலின் கலின் என --- ஒளி வீசும் தண்டைகள் கலின் கலின் என ஒலிக்க,

     கிண்கிணி கிணின் கிணின் என ---  கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய,

      தண் கொலுசுடன் சிலம்பு அசைய --- அழகிய கொலுசுகளும் சிலம்புகளும் அசைய,

     உள் பரிவாகி --- அடியேன் மீது பரிவுகொண்டு,

     சந்ததமும் வந்து இரும் பரிமளப் பங்கயப் பதங்கள் ---
எப்போதும் என் முன் வந்து தோன்றும் தேவரீரது  பெருமை தங்கிய, நறுமணம் மிக்க தாமரைமலரைப் போன்ற திருவடிகளைத் தந்து,

       என் கொடு வினைச் சஞ்சலம் மலம் கெடும்படி --- அடியேனது கொடிய வினைகளும், மனத் துயரும், மும்மமலங்களும் கெட்டு ஒழியும்படியாக

     அருள் புரிவாயே --- திருவருள் புரிந்து அருள்வீராக.


பொழிப்புரை


         அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க, ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என ஓசை செய்ய, பேரிகை முதலான வாத்தியங்கள் திமிந் திமிந் திமின் என்று நெருங்கி ஓசை செய்ய, அழகிய தேவயானையைத் திருமணம் புணர்ந்த வல்லமை வாய்ந்த கந்தப் பெருமானே!

     குறமகளாகிய வள்ளிநாயகியார் தங்கியிருந்து அரிய காடுகள் நிறைந்த வள்ளிமலையையும் காத்து அருள் புரிந்து, தேவர்களுக்குத் துன்பத்தை விளைவித்த கீழ்மக்களாகிய அசுரர்களின் தோள்களும் பொடியாகச் செய்தவரே!

         வலிமை மிக்க தேவலோகத்து யானையால் வளர்க்கபட்டவளாகிய தேவயானை அம்மை வாழ்ந்திருந்த அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தையும் காத்து அருள் புரிந்து, அகழியும், பக்கத்தில் மதில்களால் சூழப்பட்டு உள்ளதும், வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்துள்ளதும், செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை ஆகிய மரங்கள் பொருந்தியதும் ஆகிய சோலைகளால் சூழப்பட்டுள்ள திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் சரவணபவரே!

     பெருமையில் மிக்கவரே!  

         கெண்டை மீனைப் பழிக்கும்படியான கண்களை உடைய பெண்கள் மலர்களைச் சூடியுள்ள கொண்டைகள் குலுங்கும்படியாக, அருகினில் வந்து, பற்களை தெரியக் காட்டிக் குழைந்து பேசி, படுக்கையில் கொண்டு போய்,  மணம் மிக்க பொடிகளைப் பூசி, இறுக அணைத்து, இன்பத்தைத் தருவதான பேச்சுக்களுடன் கூடிய அவர்களது செயல்களால் உண்டாகும் காமமயக்கில் அடியேன் படுகின்ற துன்பம் நீங்க, ஒளி வீசும் தண்டைகள் கலின் கலின் என ஒலிக்க, கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய, அழகிய கொலுசுகளும் சிலம்புகளும் அசைய, அடியேன் மீது பரிவுகொண்டு, எப்போதும் என் முன் வந்து தோன்றும் தேவரீரது  பெருமை தங்கிய, நறுமணம் மிக்க தாமரைமலரைப் போன்ற திருவடிகளைத் தந்து, அடியேனது கொடிய வினைகளும், மனத் துயரும், மும்மமலங்களும் கெட்டு ஒழியும்படியாகத் திருவருள் புரிந்து அருள்வீராக.


விரிவுரை

கழ் எயில் புடைசூழும், பந்தி வரு மந்தி, செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வனப் பந்தணை ---

திருப் பந்தணை நல்லூரின் எழிலை இந்த அடிகளில் அடிகளார் விளக்கி அருளுகின்றார்.

"திருப்பந்தணை நல்லூர்", சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "பந்தநல்லூர்" என்று வழங்குகிறது.

கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர் --- பசுபதீசர்.
இறைவியார் --- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம்  --- சூரியதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.

இத் திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு.  உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக் கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார். பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையை பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப் பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம் வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.

பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.

காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.

சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞானசம்பந்தர் திருவாயில்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துரை

முருகா! பெண்மயலால் அடியேன் படும் துயர் தீ, திருவடிகளைத் தந்து அருள்விராக.

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...