நுணங்கிய கேள்வி

 


நுணங்கிய கேள்வி

-----

 

     ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரைஎன்பது இந்நாட்டில் வழங்கும் பழமொழி. அதாவதுநல்ல சுவையுடைய சர்க்கரை அகப்படாத ஊரில் உள்ளவர்கள்ஓரளவு சுவை உடைய இலுப்பைப் பூவைத் தின்றுவிட்டுஅதைவிடச் சுவையுடைய வேறு பொருள் உலகில் இருக்க முடியாது என்று முடிவு செய்து கொள்வார்களாம். அதுபோலக் கற்றறிந்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்ற நம்முடைய நாட்டில்கற்றவர் கர்வம் கொள்ளுதல் இயல்பு என்று சிலர் நினைக்கலாம்.

 

     கல்விஏட்டுக் கல்வி என்றும்அனுபவக் கல்வி என்றும் இரண்டு வகைப்படும். முழுவதும் ஏட்டுக் கல்வியைக் கற்ற ஒருவனும்முழுவதும் அனுபவக் கல்வியே பெற்ற ஒருவனும் முற்றிலும் கற்றவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். இவை இரண்டு கல்வியும் சேரும் பொழுது தான் கல்வி முழுத் தன்மையை அடைகிறது. இவ்விரண்டையும் சேர்த்துப் பொதுவாக வழங்கப்படும் கல்வி என்பதுகூட இரண்டு வகையில் கற்கப்படும். முதலாவது நூலைத் தானே கற்றல்இரண்டாவதுகற்றறிந்தவர்கள் கூறுவதைச் செவி மூலம் கேட்டு அறிந்து கொள்ளுதல்.

     ஒருவன் ஏட்டைத் தானே கற்று அறிவு பெறுவதைக் காட்டிலும் கேள்வி ஞானத்தால் பெறும் அறிவைப் பெரிதும் போற்றினார்கள். ஏனென்றால்ஒருவன் திருக்குறள் போன்ற ஒரு நூலில் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் அதனை முற்றக் கற்றுவிட முடியாது. மேலும் எத்தனையோ அலுவல்களுக்கு இடையேஎத்தனையோ வகை நூல்களின் இடையே  திருக்குறளையும் ஒரு நூலாகவே கற்க முடியும். ஆனால்ஒரு சிலர் பொதுவான கல்வியை ஓரளவு பெற்றுபிறகு திருக்குறள் போன்ற ஒரு நூலை முற்றிலும் கற்பதிலேயே தம்முடைய காலம் முழுவதையும் செலவழிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய ஒருவர் திருக்குறளைப் பற்றி எடுத்துக் கூறும் பொழுது பல காலமாகத் தாம் அதில் உழைத்துக் கண்ட அரிய பெரிய உண்மைகளை எல்லாம் மிகச் சுருங்கிய கால அளவில்மிக எளிதாக நாம் அறிந்து கொள்ளுமாறு தந்துவிடுவார். இதனால்தான்"கற்றலின் கேட்டலே நன்றுஎன்று பழமொழி நானூறு என்னும் நூல் பின்வருமாறு கூறுகிறது. 

"உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்

கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை

முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்

கற்றலின்கேட்டலே நன்று."

இதன் பொருள் ---

     குடிப்பதற்கு இனிய உவர்ப்பு இல்லாத நன்னீர்வேறு இடங்களில் இல்லை என்று நினைக்கும்கிணற்றின் உள்ளே வாழும் தவளையைப் போல் தாமும் கருதாமல்நூல்களை நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும்அறிஞர்களிடம் விரும்பிக் கேட்டலே நன்று. (கற்றலின் கேட்டலே இனிது.)

     கிணற்றின் உள்ளே வாழும் தேரைக்குக் கிணற்று நீரை அன்றி வேறு தெரியாது. எனவேஅந்த நீர்தான் உவர்ப்பு இல்லாத நல்ல தண்ணீர் என்று அது நினைக்கும். அதுபோலகற்றதனால் அன்றிக் கேட்டு அறிதலினால் பயனில்லை என்று கருதுதல் கூடாது என்பது அறிவுறுத்தப்பட்டது. இதனாலேயே, "கேள்வி" என்றொரு அதிகாரத்தைத் திருவள்ளுவ நாயனார் வைத்தார் என்பதை அறிதல் வேண்டும்.

     பல்வேறு வகைப்பட்ட கல்வியும் விஞ்ஞான வளர்ச்சியும்மிகுதிப்பட்டுக் கொண்டே செல்லுகின்ற இந்த நாட்களில்இம் முதுமொழியின் உண்மையை நாம் நன்கு அறிய முடியும். பழைய காலத்தில் மருத்துவர்கள்ஏறத்தாழ எல்லா வகையான நோய்களுக்கும் மருந்து கொடுப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இன்றோஎதை எடுத்துக்கொண்டாலும் சிறப்பாக அறிவுபெற்றவர்கள் (ஸ்பெஷலிஸ்ட்ஸ்) ஒவ்வோர் உறுப்பையும் கவனித்துக் கொள்பவர்களாக இருக்கக் காண்கிறோம். எனவேகல்வியின் வளர்ச்சி பெருகிக் கொண்டே போகின்ற இது போன்ற காலங்களில் ஒருவன் எல்லாவற்றையும் தானே படித்து அறிந்து கொள்வது என்பது இயலாத காரியம். கேள்வி ஞானத்தால் அறிவைப் பெருக்கிக்கொள்ளுதல் மிகவும் தேவை. இதன் இன்றியமையாமையைக் கருதியே திருவள்ளுவர் 'கேள்வி’ என ஒர் அதிகாரமே வகுத்துள்ளார். தானாகவே எல்லா நூல்களையும் படித்து அறிவு பெற்றவனுக்கும்பிறரிடம் கேள்வி ஞானத்தால் அறிவு பெற்றவனுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.

     பெரிய நூல் ஒன்றைத் தானே கற்ற ஒருவன்தன்னுடைய கல்வியின் பெருக்கத்தை நினைந்து கர்வம் கொள்ளுதல் இயல்பு. ஏனென்றால்அவனைச் சுற்றியுள்ளவர்கள் அந்நூலைப் பற்றி ஒன்றும் அறியாமலிருக்கும் பொழுதுஅவன் மட்டும் பொறுமையோடு அதனைக் கற்று முடித்துவிட்டான் ஆதலின்சுற்றியிருப்பவர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கர்வம் கொள்ளுகிறான். ஆனால்பிறரிடம் அதே நூலைக் கேட்டுக் கேள்வி ஞானத்தால் அறிபவன்அந்நூலை அறிந்து கொள்வதோடுஅதனைச் சொல்லித் தருபவருடைய அறிவின் விரிவையும் அறிந்து கொள்ளுகிறான். இங்ஙனம் பல பேரிடம் பெரிய விஷயங்களைக் கேட்கக் கேட்க ஒருவனுடைய அறிவு விரிவு அடைவதோடு மற்றவருடைய அறிவின் விரிவை அவன் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

 

     இப்படிச் சொன்னவுடன் அனைவருமே கேள்வியின் மூலம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறதே என்று  நினைத்தலும் வேண்டாம். பெரியவர் ஒருவர் சொற்பொழிவு செய்வதை ஆயிரக்கணக்கான மக்கள் சென்று  கேட்டுவிட்டு வருகிறார்கள். அப்படி வருகிறவர்களிடம் 'பெரியவர் என்ன பேசினார்?' என்று கேட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். கேட்ட பலரும் 'மழை போலப் பொழிந்தார்என்றும், "சும்மா வெளுது வாங்கினார்" என்றும் சொல்வார்களே தவிரஅப்படி என்ன சொன்னார்சுருக்கமாகச் சொல்லுங்கள்?" என்று கேட்டால்ஒன்றும் சொல்லத் தெரியாமல் விழிப்பார்கள். இதிலிருந்து ஓர் உண்மை புலப்படும். ஒரு நூலைக் கற்பது எவ்வளவு கடினமோஅவ்வளவை விடக் கடினமானது ஒருவர் சொல்லுவதைக் கேட்டு அதனை உள்வாங்கிக் கொள்வது என்பது.

 

     பிறர் சொல்லுகின்றவற்றைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களை நுண்மையான கேள்வி ஞானம் உடையவர்கள் என்று திருக்குறள் சொல்கிறது. நுண்மை என்பது மிகச் சிறிய அல்லது கூர்மையான பொருளைக் குறிக்கும். எனவேகூர்மையான கேள்வி ஞானத்தைநுண்மையான கேள்வி ஞானம் என்று சொல்லலாம். எவ்வளவு கடினமானவற்றைக் கேட்டாலும் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் இது ஆகும். இத்தகைய கேள்வி ஞானம் உடையவர்கள் ஒரு நாளும் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் காரியத்தைச் செய்யமாட்டார்கள். அது மட்டுமன்றி,எந்தச் சந்தர்ப்பத்திலும் பணிவான மொழிகளையே பேசுவார்கள் என்றும் குறள் கூறுகின்றது. "நிறை குடம் நீர் தளும்பாதுஎன்பது பழமொழி.

 

"கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார் 

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பார்--தெற்ற 

அறைகல் அருவி அணிமலை நாட! 

நிறைகுடம் நீர்தளும்பல் இல்."

 

என்பது "பழமொழி நானூறு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்.

 

இதன் பொருள் ---

 

     பாறைக் கல்லிலே அருவிகள் வீழ்ந்து ஒலி முழங்கிக் கொண்டிருக்கின்ற அழகிய மலைநாடனே! கற்கவேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவர் ஆனவர்கள் கண்ட அடக்கமேஉண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோதங்களுடைய அறியாமையான தன்மையை மறந்து விட்டு,தம்மைப் புகழ்ந்து தெளிவாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். நீர் நிறைந்த குடம் தளும்புவதில்லைகுறைகுடமே என்றும் தளும்பும்.

 

     இந்தப் பழமொழிக்கு விளக்கமா, "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்.

 

"பொறுமையுடன் அறிவுடையார் இருந்த இடம்

     விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும்!

கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து

     நடந்து,தலை கீழாய் வீழ்வார்!

வறுமையினும் மறுமையினும் காணலாம்,

     தண்டலையார் வாழும் நாட்டில்

நிறைகுடமோ தளும்பாது! குறைகுடமே

     கூத்தாடி நிற்பது ஆமே!"

 

இதன் பொருள் ---

 

     திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில், "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவர் ஆகிய சிவபெருமான் வாழும் நாட்டில்பொறுமையும் அறிவும் உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச்  சென்று காணவேண்டும். செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து,  தலைதடுமாறி அழிவார்கள்வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம்எப்போதும் ஒரு மாதிரியே இருப்பர். நீர்நிறைந்த குடம் தளும்புவது செய்யாதுநீர் குறைந்த குடம்தான் கூத்தாடி நிற்கும்.

 

     சைவப் பெருமக்கள் போற்றுகின்ற நால்வருள் ஒருவர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்று வழங்கப்படும் நம்பியாரூரர்சிவபெருமானிடம் நண்பராய்ப் பழகிதோழமை உரிமையோடு வாழ்ந்து வந்தார். திருநாவலூர் என்னும் திருத்தலத்திலே அவரை அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னராகிய நரசிங்க முனையரையர் என்னும் அரசர்தத்துப் பிள்ளையாக வளர்த்து வந்தார். எல்லையில்லாத கல்விக் கடலைத் தம்பேரறிவால் நீந்திக் கரை கண்டவர் நம்பியாரூரர்.

 

"பெருமைசால் அரசர் காதல் 

     பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்

வருமுறை மரபின் வைகி 

     வளர்ந்து மங்கலம் செய் கோலத்து

அருமறை முந்நூல் சாத்தி 

     அளவுஇல்தொல் கலைகள் ஆய்ந்து

திருமலி சிறப்பின் ஓங்கிச் 

     சீர்மணப் பருவம் சேர்ந்தார்."

 

என்னும் பெரியபுராணப் பாடலால் இதனை அறியலாம்.

 

     நம்பியாரூரருடைய தேவாரப் பாடல்களைப் பொருள் உணர்ந்து ஓதுகின்றவர்கள் அவருடைய கல்விப் பெருக்கத்தை ஒருவாறு அறிந்து கொள்ள முடியும். சுவாமிகள் இறைவனிடம் எவ்வளவு அன்பு கொண்டு இருப்பினும்அவனுடைய திருவருளை எவ்வளவு பெற்றிருப்பினும், தம்முடைய கல்வி வளர்ச்சியைப் பெரிதும் போற்றியிருக்கிறார்கள் என்பது அவர்களுடைய பாடல்களைப் பொருள் உணர்ந்து ஓதியவர்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்குறளில் மிக நிறைந்த பயிற்சி உடையவர் என்பதை அவருடைய தேவாரம் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. திருநெல்வாயில் என்ற திருத்தலத்து இறைவன் மேல் சுந்தரமூர்த்திகள் பாடிய பத்துப் பாடல்களில் திருக்குறளை எடுத்து ஆண்டு இருக்கிறார்திருக்குறள் கருத்துக்களை மட்டும் அல்லாமல்அந்தச் சொற்களையும் அப்படியே ஆட்சி செய்திருக்கிறார். திருக்குறளில் இவ்வளவு பயிற்சியுடைய சுந்தரமூர்த்திகள்அதன் கருத்துக்களை நூல் அளவில் மட்டும் காட்டிவிடாமல்வாழ்க்கையிலும் மேற்கொண்டுள்ளார் என்பது அறிந்து மகிழ்வதற்குரியது. அவருடைய வாழ்வு முழுவதிலும் பல இடங்களில் திருக்குறள் கண்ட வாழ்வை அவர் மேற் கொண்டார் என்பதை நாம் அறிய முடியும். உதாரணமாக ஒன்று காணலாம்.

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடிக்கொண்டு வரும் பழக்கம் உடையவர். பண்ணுருட்டிக்குப் பக்கத்திலுள்ள திருவதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்துக்கு அருகில் சென்றார். சுந்தரமூர்த்திகளுக்கு முற்பட்டவர் ஆகிய திருநாவுக்கரசர், திருவீரட்டானத்தில் தங்கி உழவாரத் திருப்பணியை மேற்கொண்டிருந்தார். அதனை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநாவுக்கரசர் கையினால் திருத்தொண்டு செய்த ஊரில்நான் காலால் நடந்து செல்வது முறை அன்றுஎன்று கருதிஅவ்வூரின் பக்கத்தே உள்ள சித்தவடமடம் என்ற இடத்தில் அன்றிரவு தங்கிவிட்டார்.

 

"உடைய அரசுஉலகு ஏத்தும் உழவாரப் படையாளி,

விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியைமிதித்து

அடையும் அதற்கு அஞ்சுவன் என்று,அந்நகரில் புகுதாதே,

மடைவளர்தண் புறம்பணையில் சித்தவட மடம்புகுந்தார்."

 

என்று பெரியபுராணம் கூறுகின்றது.

 

     நடு இரவு நேரத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தலைமேல் ஒருவருடைய கால் பட்டது. சுந்தரர் எழுந்து, ‘ஐயாஉங்களுடைய கால் என் தலையின் மேல் படுகிறதுஎன்று கூறினார். அதற்கு அந்தப் பெரியவர், 'வயதாகி விட்ட காரணத்தால் திக்குத் திசை தெரியாமல் உன் தலையின் மேல் மிதித்து விட்டேன்!என்று கூறினார். நம்பியாரூரர் வேறோர் இடத்தில் தலையை வைத்துப் படுத்தார். சற்று நேரங்கழித்து அந்த இடத்திலும் கிழவருடைய கால் பட்டது. மறுபடியும் சுந்தரர் கேட்ககிழவர் அதே விடையைத் திருப்பிக் கூறினார். ஒரு சிறிதும் அதுபற்றி வருந்தாத சுந்தார்மற்றோரிடத்தில் சென்று படுத்துக் கொண்டார். ஆனால்கிழவர் அவரை விட்டபாடு இல்லை தாம் படுத்திருந்த இடத்தில் இருந்தபடியே கால்களைச் சுந்தரர் தலையின்மேல் நீட்டினார் கிழவர். இவ்வாறு செய்தவர் யார் என்று நினைக்கிறீர்கள்? “பாதாளம் ஏழினுக்கு அப்பால்" திருவடிகளை உடைய சிவபெருமானேதான்! ஆனால்சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இங்ஙனம் திரும்பத் திரும்பத் தம்மை உதைத்தவர் யார் என்பது தெரியாது.

 

     வசதி மிக்க குடும்பத்திலே பிறந்துஅரசருடைய செல்வத்திலே வளர்ந்துதிருமணம் செய்யப்படுகின்ற நாளிலே இறையவனுடைய அருளால் அத்திருமணம் தடைபட்டுப் போகஊர் ஊராகச் சென்று இறைவனை வணங்கி வருகின்றார் நம்பியாரூரர். 'அப்பொழுது மேற்கொண்ட திருமணக் கோலத்தோடேயே எப்பொழுதும் இருப்பாயாக!’ என்று இறைவனால் கட்டளையிடப்பட்டு அடியார்கள் புடைசூழ இப்பொழுது சித்தவட மடத்தில் தங்கியுள்ளார். உதைபட்டவராகிய அவர் நல்ல இளமை உடையவர். ஆனால்உதைத்தவரோதொண்டு கிழவர்! உதைத்ததும் ஒரு முறை அல்ல. பல முறையாகும். நுண்மையான கேள்வி ஞானத்தை நிரம்ப உடையவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்"ஐயாஇங்கு இப்படிப் பல முறையும் என்னை மிதித்த நீர் யார்?’ என்றுதான் கேட்டார்..

 

     எங்கே சென்று படுத்தாலும் அங்கே எல்லாம் காலை நீட்டிய ஒரு மனிதனை இன்னான் என்று தெரிந்துகொள்ள விரும்பினாரே தவிரசுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஒரு சிறிதும் கோபம் வரவில்லை. கோபம் தொனிக்குமாறு கூடப் பேசவில்லை."இங்குஎன்னைப் பலகாலும் மிதித்தனை, நீ யார்" என்ற கேள்வி மிக்க வணக்கத்துடன் வெளி வருகிறது! ஒரு சிறிதும் சினம் கொள்ளாமல் மிக வணக்கமான முறையில் பேசும் இயல்பைச் சுந்தமூர்த்தி சுவாமிகள் எப்படிப் பெற்றார் என்பதைத் திருக்குறள் கூறுகிறது. "கற்றறிந்தார் கண்ட அடக்கம்" என்று பழமொழி நானூறு கூறுவதையும், "பொறுமையுடன் அறிவு உடையார் இருந்த இடம்விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும்" என்று தண்டலையார் சதகம் கூறுவதையும் இத் திருக்குறளோடு வைத்துக் காணலாம்.

 

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

 வாயினர் ஆதல் அரிது

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     மேலும்நூல்களைத் தாமே கற்றாயினும்கற்றார் வாய் கேட்டு ஆயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாது. கல்வி கேள்விகளால் தெளிந்த அறிவைப் பெறாதவன் பொருளின் உண்மையை ஒருகால் அறிந்து கொள்ளுதல் எத்தன்மையது என்றால்நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போன்றதே அல்லாமல்கல்வி கேள்விகளால் இல்லை என்கிறது "பழமொழி நானூறு" என்னும் நூல். நுணுக்கமான கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.

 

"கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்

தெற்ற உணரார் பொருள்களை,- எற்றேல்

அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை

நாவல்கீழ்ப் பெற்ற கனி."          --- பழமொழி நானூறு.

 

     நுணுக்கமான கேள்வி ஞானத்தை உடையவர் தம்முடைய சிறுமையையும் மற்றவர்கள் பெருமையையும் நன்கு அறிந்திருப்பர். ஆதலால்வணங்கிய வாயினை உடையவராய் இருப்பர்.  பலகாலும் திருக்குறளைப் பயின்று அதில் கூறப்பெற்ற அரிய உண்மைகளை எல்லாம் அறிந்த அளவோடு நிறுத்திக் கொள்ளாமல்வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

 

     பின்வரும் கம்பராமாயணப் பாடல்களும் நுணங்கிய கேள்வி குறித்து அறிவுறுத்துவதைக் காணலாம்.

 

நூல்பெருங்கடல் நுணங்கிய கேள்வியன்

    நோக்கினன்மறம் கூரும்

வேல் பெருங்கடல் புடை பரந்து ஈண்டிய

     வெள்ளிடை வியன் கோயில்

பால் பெருங்கடல் பல்மணிப் பல்தலைப்

     பாப்பு உடைப் படர்வேலை

மால் பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர்

     வனப்பினன் துயில்வானை.          --- கம்பராமாயணம்ஊர்தேடு படலம்.

 

இதன் பொருள் ---

 

     பெருங்கடல் போன்ற நூல் அறிவையும்நுட்பமான கேள்வி அறிவையும் உடைய அனுமன்,  வீரம் நிரம்பிய பெரிய வேலேந்திய வீரர்கள் திரள் பக்கங்களில் பரவி நெருங்கியுள்ள வெளி முற்றங்களையுடைய பெரிய அரண்மனையில் பெரிய பாற்கடலின்கண்ணேபல மணிகளையும் பல தலைகளையும் உடைய ஆதிசேடனைஉடைய விரிகின்ற அலைகளையுடைய கடலிலேதிருமாலாகிய பெருங்கடல் தங்கியிருப்பது போன்ற அழகை உடையவனாய்உறங்குகின்ற இராவணனைப் பார்த்தான். 

 

'நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை 

போலுமால்! உறுபொருள் புகலும் பூட்சியோய்! 

காலம்மேல் விளை பொருள்உணரும் கற்பு இலாப் 

பால! நீ இனையன பகரற் பாலையோ  --- கம்பராமாயணம்இராவணன் மந்திரப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     காலத்தையும் பின்னால் நிகழும் காரியத்தையும்  உணர்கின்ற  அறிவற்ற  சிறுவனே! பல நூல்களையும்  கற்ற நூலறிவினாலும் நுணங்கிய அறிவாற்றலாலும் எதிர்காலத்தை நோக்கும் திறம் உடையாய் போல நேர இருப்பதைக் கூறும் மன உறுதியுடன் பேசுகிறாய்நீ  இத்தகையவைகளைப் பேசுதல் தகுமோ? (என்று இந்திரசித்தன் கூறியதைக் கேட்டு வீடணன் சினந்து கூறினான்.

     

"இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால்,

கணம் கொள்கை நும்மனோர் கடன்மைகாண்என

வணங்கிய சென்னியன்மறைத்த வாயினன்,

நுணங்கிய கேள்வியன்நுவல்வது ஆயினான":   

                                                                --- கம்பராமாயணம்வீடணன் அடைக்கலப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     நம்மை அடைக்கலமாக வந்து அடைந்தவர்கள் அறிவில்லாதவர் என்றாலும்நினைத்துப் பார்த்தால்அவர்களை இனமாகக் கொண்டு சிறப்பித்தல் உங்களைப் போன்றவர்களுக்கு உரிய கடமையாகும் என்று வணங்கிய தலையை உடையவனாகவும்கைகளால் மறைத்த வாயினை உடையவனாகவும் நுணுக்கமான கேள்வி ஞானம் உடையவனான அனுமன் சொல்லுவானானான்.

 

     "நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர்  ஆதல்அரிது" என்ற திருக்குறள் நெறிக்கேற்ப அமைந்தவன் அனுமன்ஆகலால் அனுமனை 'நுணங்கிய கேள்வியன்வணங்கிய சென்னியன்மறைத்த வாயினன்என்றார். 

 

நட்பின் இலக்கணம்



நட்பின் இலக்கணம்

-----

 

     "உங்கள் நண்பரைச் சில நாளாகக் காணவில்லையே?" என்று கேட்டால், ஒரு சிலர், "என் நண்பரா? யாரைச் சொல்கின்றீர்கள்?என்று எதிர் வினா எழுப்புவர். கேள்வியை முதலில் கேட்டவர், இன்னாரைத் தான்  என்று குறிப்பிட்டுச் சொன்னால், "அவரையா சொன்னீர்கள் அவர் இப்போது  எனது நண்பர் இல்லை. ஒன்றுக்கும் உதவாத அவரை எப்படி நண்பர் என்று சொல்லமுடியும்?" என்று கேட்பார். இப்படிச் சிலரை இன்றும் காணலாம்.

 

     இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை ஒன்று உண்டு. நண்பர் என்பவர் பொருள் கொடுத்து உதவ வேண்டும் என்றும்சமயத்தில் உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மிகவும் நெருங்கிப் பழகும் இருவர்கூட இம் மாதிரி சோதனை ஏற்படும் பொழுது பிரிந்து விடக் காண்கின்றோம். இது முற்றிலும் சரி என்று கூறிவிட  முடியாது. சரியன்று என்றும் கூற முடியாது. "உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதே நட்பு" என்று நட்புக்குத் திருவள்ளுவ நாயனார் இலக்கணம் அமைத்துக் காட்டினார். நண்பனுக்குத் துன்பம் வந்தபோது அதைக் களைய முற்படுவதே நட்புக்கு அழகு ஆகும். பொருளை எதிர்பார்த்தும், முன் செய்த ஓர் உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்த்தும் பழகுவது நட்புக்கு இலக்கணம் ஆகாது.

 

     உண்மை நண்பர் யார்வேண்டும் பொழுது பொருள்  கொடுத்தும், ஏனைய உதவிகள் செய்தும் உறுதுணையாக இருப்பவர்தான். நண்பர்களுக்கு இலக்கணம் கூற வந்த நமது முன்னோர், நண்பர்களுக்குச் சாவு வந்த இடத்தில் தானும் சாதலும்நோய் வந்த இடத்துத் தானும் வருந்துதலும்பிரிவை வெறுத்தலும் வேண்டும் பொழுது பொருள் கொடுத்து உதவி செய்தலும் நண்பர்கட்கு இலக்கணம் என்று கூறினர்.

 

     வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த திருவள்ளுவ நாயனார், நட்புப் பற்றி ஐந்து அதிகாரங்களை வைத்தார் என்றால்,  நட்பின் அருமையும் பெருமையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  பயனில்லாத சொல்லைப் பேசவே கூடாது என்று கட்டளை இட்ட திருவள்ளுவ நாயனார்,  நட்பைப் பற்றி மிக அதிகமாக ஐந்து அதிகாரங்களை வைத்தார் என்பதில் இருந்தே மனித வாழ்க்கையில் நட்பு எத்தனை இன்றியமையாதது என்பது விளங்கும்.  "நட்பு" என்னும் அதிகாரத்தில் நட்பின் சிறப்பு குறித்தும்,  "நட்பாராய்தல்" என்னும் அதிகாரத்தில் ஆராய்ந்து  நட்புச் செய்தல் குறித்தும், "பழமை" என்ற அதிகாரத்தில், பழகிவிட்டவரின் குறையைப் பொறுத்து நடந்து கொள்ளுதல் குறித்தும் நட்பின் சிறப்பைக் கூறிவிட்டு "தீ நட்பு" என்னும் அதிகாரத்தில் தீமை தரும் நட்பு கூடாது என்றும்"கூடா நட்பு" என்னும் அதிகாரத்தில் தகாத நட்பு கூடாது என்றும் கூறி நட்புச் செம்மையாக அமையாதபோது விளையும் தீமை பற்றியும் அழகாகக் கூறினார் நாயனார்.

 

     உலகில் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் ஒப்புயர்வற்ற நண்பர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால்இவர்கள் தொகை மிகவும் குறைவானதுதான். அதனாலேதான் இவர்கள் இலட்சியத் தன்மை உடையவர்களாகி விடுகின்றனர். இலக்கியங்களில் இத்தகைய உயர்ந்த நட்புப் படம் பிடித்துக் காட்டப்பட்டு உள்ளது. இலக்கியத்தில் கற்பனையாகத் தோன்றும் நண்பர்கள் அல்லாமல்,உண்மையாகவே வாழ்ந்த பெருமக்களும் உண்டு. நட்புக்குத் திருவள்ளுவ நாயனார் கூறிய இலக்கணம் அனைத்தும் பொருந்த வாழ்ந்த இரண்டு பெருமக்களைப் பெற்ற பெருமை உடையது இத்தமிழ் நாடு.சாதாரணமாக நண்பர்கள் என்பவர்கள் ஒத்த குடியும்செல்வ நிலையும்பண்பாடும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்று கூறுவர்.ஆனால்யசெல்வச் செழிப்பில் மிதக்கின்றஒர் அரசனும், வறுமை காரணமாகப் புரவலர்களைத் தேடிச் சென்று பாடிப் பரிசில் பெற்று வரும்புலவர் ஒருவரும், ஒருவரை ஒருவர் காணாத நிலையிலும் கூடஒத்த உணர்வினால் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தார்கள் இந்த அருந்தமிழ் நாட்டில்.

     கோப்பெருஞ்சோழன் என்பவன் சோழ வள நாட்டை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஆட்சி செய்தவன். நற்பண்புகள் பலவும் நிறைந்தவன். நல்ல குணம் நிறைந்தவரிடத்தில் நல்ல வீரமும் நிறைந்து இருக்கும். வீரத்திலும் கோப்பெருஞ்சோழன்  யாருக்கும் குறைந்தவன் அல்லன். அவனுடைய சிறந்த குணங்கள் குன்றில் இட்ட விளக்கைப்  போலப் பிற நாடுகளிலும் ஒளி விடத் தொடங்கிற்று. அவன் காலத்தில்  பாண்டிய நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள பிசிர் என்னும் சிற்றூரில் 'ஆந்தையார்’ என்ற புலவர் ஒருவர் வாழ்ந்தார். ஊர்ப் பெயரையும் சேர்த்து, அவர்  'பிசிராந்தையார்' என வழங்கப்பட்டார். அவர் சிறந்த புலவர். ஆனால் வறுமை மிக்கவர். சிறந்த பண்பு உடையவர்களைப் பாடுவது புலவர்களுக்கு வழக்கம்.  கோப்பெருஞ்சோழனுடைய நற்பண்பு  பிசிராந்தையாரின் காதுகட்கும் எட்டியது. எனவேஅவனுடைய குணங்களில் ஈடுபட்ட அவர்அவன் மாட்டு அன்பு கொண்டார்.

     ஒருவரிடம் அன்பு உண்டாகி நட்புச் செய்கின்றோம் என்றால்இரண்டு காரணங்களால் அது உண்டாகும். முதலாவது காரணம்அவர் நற்பண்புகள் உடையவர், அன்பு நிறைந்தவர் என்பதால் உண்டாவது. இக்காரணத்தால் ஏற்படும் நட்பில் இரண்டு பேரும் இலாபநட்டக் கணக்குப் பார்க்கமாட்டார்கள். பயன் தூக்க மாட்டார்கள். தூய அன்பு ஒன்றைத் தவிர வேறு எந்தப் பயனையும் கருதமாட்டார்கள். இத்தகைய அன்பைத் தான் காதல் என்று கூறுகின்றோம். இரண்டு ஆடவர்களுக்கு இடையே இது உண்டானால் நட்பு என்றும், ஓர் ஆடவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்டால் காதல் என்றும் கூறுகின்றோம். எந்தப் பெயரிட்டு வழங்கினாலும் தூய அன்பு தவிர வேறு அடிப்படை இங்கு ஒன்றும் இல்லை.

     இரண்டாவதுஒரு காரணத்தால் நட்புச் செய்பவர்களும் உண்டு. இதன் அடிப்படை பொருள் தவிரவேறு ஒன்றும் இல்லை. பையில் கனம் இருப்பவருடன் நண்பர் குழாம் நிறைந்துவிடும். அவர் பை காலி ஆனவுடன் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல அவரைச் சேழ்ந்து இருந்த நண்பர் குழாமும் மறைந்துவிடும்.

     பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு முற்றிலும் முதல் வகையையே சேர்ந்தது. இவர் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டதே இல்லை.ஒருவரைப் பற்றி மற்றவர் கேள்விப்பட்ட அளவிலேயே இருந்தனர். அவ்வாறு இருந்தும் ஆழ்ந்த நட்புக் கொண்டனர்.அவ்வாறானால் இவர்கள் நட்பும் மேற்போக்காக இருந்திருக்கும் போலும் என்று நினைத்தால், அது தவறு. ஓயாமல் ஒவ்வொருவரும் மற்றவரைப் பற்றியே நினைந்து கொண்டிருந்தனர். எவ்வளவு தூரம் ஒருவர் மற்றவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார் ஒரே எடுத்துக்காட்டு உள்ளது. பிசிராந்தையாரை யாரேனும் 'நீர் யார்?’ என்று கேட்டால், ‘யான் பேதைச்சோழன்’ என்று விடை கூறுவார். சோழனும் தன்னைப் 'பிசிராந்தை' என்றுதான் கூறுவான்.

 

     இந்நிலையில் சோழனுக்கு ஒரு தீமை நிகழ்ந்தது. அவன் பிள்ளைகளே படை சேர்த்துக்கொண்டு தந்தையின் மேல் படை எடுத்தார்கள். மக்களின் மமதையைப் போக்கச் சீறி எழுந்தான் சோழன். புல்லூர் எயிற்றியனார் என்ற புலவர் அவனைத் தடுத்தார். 'அவர்கள் அறியாமையால் போர் தொடுத்தால் நீயும் புறப்படலாமா?அவர்கள் தோற்றுவிட்டால் இந்த அரசை யாருக்குத் தரப் போகிறாய்?' என்று அவர் எடுத்துக் கூறினார். சோழன் மனம் மாறிவிட்டான். ஆட்சிப் பீடத்தை விட்டுக் கொடுத்துவிட்டுவடக்கிருக்கப் புறப்பட்டு விட்டான். வாழ்வில் வெறுப்புற்றவர் வடக்கு முகமாக அமர்ந்து ஊண் உறக்கத்தை நீத்துக் கொஞ்சங் கொஞ்சமாக உயிரை விடுவர். இதையே 'வடக்கிருத்தல்’ என்று கூறினர் நம் முன்னோர்.

 

     சோழன் வடக்கிருக்க அமர்ந்தவுடன் தனக்குப் பக்கத்தே ஒர் இடம் விட்டு வைக்கக் கூறினான். உடன் இருந்த புலவர்களும் மற்றையோரும், 'யாருக்கு?’என்று கேட்டார்கள். அரசன், ‘என் உயிர்த்தோழர் பிசிராந்தையாருக்குஎன்றான். நீ வடக்கிருப்பதை உன் நண்பர் அறியமாட்டார். உறையூரில் இருக்கும் உன் நிலையைப் பாண்டிய நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் உன் நண்பர் எவ்வாறு அறிய முடியும்?' என்று கேட்டார்கள். அதற்குச் சோழன்"செல்வக் காலை நிற்பினும்அல்லல் காலை நில்லலன் மன்னே"என்று கூறினான். அதாவது நான் நன்றாகச் செல்வத்துடன் வாழ்ந்த காலத்தில் அவர் வரவில்லை என்பது உண்மைதான். ஆனால்உண்மை நண்பராகிய அவர்நான் துன்பப்படும் இப்பொழுது வாராமல் இருக்க மாட்டார்,’என்ற பொருளில் சோன் விடை கூறியதாகப் புறநானூற்றில்,

 

"கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல், 

தாதெரு மறுகின் போதொடு பொதுளிய 

வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளிஇ

ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை 

அவரை கொய்யுநர் ஆர மாந்தும் 

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

பிசிரோன் என்பஎன் உயிர் ஓம்புநனே

செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை நில்லலன் மன்னே".

 

இவ்வாறு ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது.

 

இதன் பொருள் ---

 

     பிளந்துபட்டு இருக்கும் வரகு அரிசிக் கதிர்களைக் குத்தி உலையில் இட்டு ஆக்கிய சோற்றை, தழைத்து வளர்ந்த வேளைச் செடியின் வெள்ளைப் பூவை, கட்டித் தயிரோடு சேர்த்து, இடைச்சியர் பெண்கள் வழங்கஅவரை கொய்பவர் விரும்பி உண்ணும், தென்னவன் பாண்டியன் ஆளும் பொதியமலை உள்ள தென்பாண்டி நாட்டின் உட்புறத்தே உள்ள சிற்றூர் ஆகிய பிசிர் என்னும் ஊரிலே, பிசிராந்தையார் என்னும் என் உள்ளம் கவர்ந்த நண்பன் இருக்கிறான். நான் செல்வச் சிறப்போடு வாழும் நாளில் வந்து என்னை அவன் கண்டது இல்லை. என்றாலும், என் உயிர் துன்புறும் இறுதி நாட்களில் என்னைக் காண வராது இருக்கமாட்டான், வருவான்.

 

     "அரசே! பிசிராந்தையார் உம்மைக் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றி நேரில் கண்டவர் இல்லை.  பல ஆண்டுகளாகப் பழகிய நண்பராயினும்நேரில் வருவது அரிது. நட்புநெறியில் திரியாது ஒழுகுவதும் அரிது” என்று சோழன்பால் இருந்த சான்றோர் கூறி, ஆந்தையாரை நினைந்து மனக் கவலைகொள்ள வேண்டாம் என்றனர். அதுகேட்ட சோழன், “அறிஞர்களே! நீங்கள் இவ்வாறு ஐயம் கொள்ளுதல் வேண்டாம். நட்புத் திரிந்து என்னை இகழும் சிறுமை எனது நண்பர் ஆகிய பிசிராந்தையாரிடம் கிடையாதுஇனிமை நிறைந்த குணங்களை உடையவர் அவர். பொய்யாமை புகழ் தருவது. ஆகையால்புகழைக் கெடுக்கும் பொய்ம்மையை அவர் விரும்புவது இல்லை.  தனது பெயரைச் சொல்லவேண்டும் இடத்து என்னின் அவர் வேறு அல்லர் என்பது விளங்க என் பெயரைத் தன் பெயராக “என் பெயர் கோப்பெருஞ்சோழன்” என்று சொல்லவார். இக்காலத்தே இப்பொழுது அவர் வாராது ஒழியார்.அவர்க்கு ஓர் இடம் ஒழித்து வைப்பீராக” என்று கூறினான். அவன் கூற்றைப் புறநானூற்றுப் பாடல் வழி காண்போம்.

 

"கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

காண்டல் இல்லாது யாண்டுபல கழிய

வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும்

அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று

ஐயம் கொள்ளன்மின், ஆரறிவாளீர்ர!

இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,

புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலனே,

தன்பெயர் கிளக்கும் காலை, என்பெயர்

பேதைச் சோழன் என்னும் சிறந்த

காதல் கிழமையும் உடையன், அதன்தலை

 இன்னதோர் காலை நில்லலன்த,

இன்னே வருகுவன், ஒழிக்க அவற்கு இடமே".

 

இதன் பொருள் ---

 

     "கேள்விப்பட்டு இருக்கிறீர்களே தவிரஒருமுறை கூட நேரில் சந்தித்துக் கொண்டது இல்லை. நேருக்கு நேர் காணாது நீங்கள் இருவரும் பல ஆண்டுகள் அன்பு பாராட்டி வாழ்பவர்கள். அப்படி இருக்க,அவர் இப்போது இங்கே எப்படி வருவார்? என்று, அறிவார்ந்த சான்றோர்களே! நீங்கள் ஐயப்பட வேண்டாம். அந்தப் பிசிராந்தையன் ஒருபோதும் என்னை இகழாதவன். இனிய பண்பினை உடையவன். எனக்கு இனிய நண்பன். புகழை அழிக்கும் போலி வாழ்வை ஒருபோதும் விரும்பாதவன். தனது பெயரைச் சொல்ல வேண்டிய இடத்திலே, எனது பெயரைத் தனது பெயராகச் சொல்லி, எனக்குப் பெருமை சேர்ப்பவன். எனது அன்புக்கு உரியவன். எனவே, அவன் என்னுடைய இந்த இறுதி நாளில் நிச்சயமாக வந்தே தீருவான். எனக்கு அருகில் அவனுக்கும் ஓர் இடத்தை ஒழித்து வையுங்கள்."

 

     கோப்பெருஞ்சோழன்பால் பெருநட்புக் கொண்டு அவனைச் சூழ இருந்த சான்றோர்களுள் பொத்தியார் என்பவர் ஒருவர். சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உண்டாகி இருந்த நட்பின் திறமும்அச் சோழனது ஆட்சி நலமும், அவனது மனப் பண்பும்அவன் வடக்கிருக்க நேர்ந்த திறமும் பிறவும் நேரில் அறிந்து அவன்பால் பிரியா அன்பு கொண்டிருந்தார். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கச் சென்றபோது பொத்தியாருடைய மனைவியார் கருப்பம் உற்று இருந்தார். ஆயினும்பொத்தியாரும் அவனுடன் சென்று ஏனைச் சான்றோர் போல வடக்கிருக்க விரும்பினார். சோழனோ அதனை அறிந்து  “உன் மனைவி கருவுயிர்த்த பின்பு வடக்கிருக்கலாம்” என்று அவரைத் தடுத்துவிட்டான். இப்படியும் ஆன்மநேயம் மிக்க ஓர் அரசன் இந்தத் தமிழ்மண்ணில் வாழ்ந்தான் என்பது எவ்வளவு பெருமைக்கு உரியது? பொத்தியார் அதனை உடன்பட்டு வடக்கிருத்தலை அப்போது மேற்கொள்ளவில்லை. ஆயினும்,  வடக்கிருந்த அவன் உயிரோடு இருக்கும்காலையில் அடிக்கடி சென்று கண்டுகொண்டு வந்தார். சில நாட்களில் கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பால் உயிர் துறந்தான். அவன் பிரிவால் பெரிதும் மனம் வருந்திய சான்றோர் ஒருவாறு தேறிஅவனுக்கு நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தனர். அவன் நடுகல்லான சில நாட்களில் பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவர் அவனது நடுகல்லையும் சூழ இருந்த சான்றோரையும் கண்டு பெருவருத்தம் உற்றார் பிசிராந்தையார். கோப்பெருஞ்சோழன் சொன்ன குணநலம் முற்றும் பிசிராந்தையார்பால் இருக்கக் கண்ட சான்றோர்க்கு மிக்க வியப்பும் விம்மிதமும் உண்டாயின. பொத்தியார்க்கு உண்டான வியப்பு அவர் உள்ளத்தைக் கவர்ந்து ஒரு பாடலாய் வெளிப்பட்டது. அப் பாடல் இது.

 

"நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,

எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்

அதனினும் மருட்கை உடைத்தே, பிறனாட்டுத்

தோற்றம் சான்ற சான்றோன் போற்றி

இசை மரபாக, நட்புக் கந்தாக,

இனையது ஓர் காலை ஈங்கு வருதல்,

வருவன் என்ற கோனது பெருமையும்,

அதுபழுது இன்றி வந்தவன் அறிவும்

வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே,

அதனால்தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்

 சான்றோன் நெஞ்சு உறப் பெற்ற தொன்று இசை

அன்னோனை இழந்த இவ் வுலகம்

என் ஆவதுகொல்? அளியது தானே."

 

இதன் பொருள் ---

 

     நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு ஆச்சரியம் உண்டாகிறது. எவ்வளவு பெரும் சிறப்றோடு வாழ்ந்த மன்னன் கோப்பெருஞ்சோழன்! இவன் இப்படி வடக்கிருந்து உயிரை விடத் துணிந்தது மேலும் ஆச்சரியமாக உள்ளது. அயல் நாட்டில் வாழ்ந்த கற்றறிந்த மேலோன் (ஆகிய பிசிராந்தையார்), புகழுக்கு உரிய நட்பு ஒன்றையே பற்றுக்கோடாகக் கொண்டு இங்கு வந்ததும், அப்படி அவன் வருவான் என்று உறுதியாகச் சொன்ன கோப்பெருஞ்சோழனின் பெருமையும், வந்த பிசிராந்தையாரது அறிவு நலமும் நினைக்க நினைக்க ஆச்சரியம் அளிப்பதாய் உள்ளது. எனவே, தன் ஆட்சிப் பரப்புக்குள் இல்லாத ஒரு நாட்டில் வாழும் சான்றோன் ஒருவன் உள்ளத்திலும் இடம் பெற்று இருந்த புகழ் உடைய ஒருவனை (கோப்பெருஞ்சோழனை) இன்று இழந்துவிட்டது இவ்வுலகம், இந்தச் சோழவள நாடு. எவ்வளவு பெரிய துன்பம்! எத்தனை இரங்கத் தக்க நிலை இது.

 

     திருவள்ளுவ நாயனார் காட்டிய நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் சோழ கோப்பெருஞ்சோழனும், பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், சிற்றூரில் வழ்ந்திருந்த பிசிராந்தையாரரும்.

 

புணர்ச்சி பழகுதல் வேண்டாஉணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள். உண்மை நட்புக்கு எதிர் நின்று பழக வேண்டும் என்பது இல்லை. உள்ளத்து உணர்வே நட்பை உண்டாக்கும்என்னும் இந்தக் திருக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்து காட்டிய பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும்இக்கால மக்களுக்கு நல்ல வழிகாட்டிகள் ஆவர்.

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...