செய்ந்நன்றி மறத்தல் பெரும்பாவம்

 


 

செய்ந்நன்றி மறத்தல் பெரும்பாவம்

-----

 

     உலகில் என்று மனிதன் வாழத் தொடங்கினானோஅன்றிலிருந்தே பிறருடைய உதவியை நாடித்தான் வாழ்ந்து வருகிறான். எவ்வளவு உயர்ந்தநிலையில் உள்ளவனும் வசதியுடன் வாழ்பவனுங்கூட பிறருடைய உதவி இன்றி வாழ முடியாது. 

 

     மனைவி உணவு சமைத்துப் போடுதலும்வேலையாள் நமக்கு உரிய தொண்டுகளைச் செய்தலும் கடமையின்பால் படும். அப்படியிருக்கஅவரவர் கடமையை அவரவர் செய்தமைக்காக நாம் ஏன் அவர்களிடம்  நன்றி பாராட்ட வேண்டும் என்று நினைக்கலாம். கடமையைச் செய்கின்றவர்கள் எந்த மனநிலையில் செய்கின்றார்கள் என்பது பற்றிக் கவலையில்லை. ஆனால் அந்தக் கடமையின் பயனைப் பெற்றுக்கொண்டு அனுபவிப்பவர்கள் மன நிலையைப் பற்றித்தான் எண்ணிப் பார்க்கவேண்டும். கணவனுக்குச் சமைத்துப் போடுவது மனைவியின் கடமை. தான் என்றாலும்கடமை என்று மட்டும் நினைத்துக் கொண்டு அவள் சமைப்பது இல்லை! அப்படிச் சமைத்துப் போடுவதாக இருந்தால்மனைவி படைக்கின்ற உணவுக்கும்உணவு விடுதியில் கிடைக்கும் உணவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று ஆகும்.ஆனால்விடுதிச் சாப்பாட்டைவிட வீட்டு உணவு உடம்புக்கு ஏற்றது என்று சொல்கிறோம் பல பேருக்குச் சமைக்கின்ற உணவு விடுதியில் செய்யப்படும் உணவைக் காட்டிலும்சிலருக்குச் சமைக்கின்ற வீட்டு உணவு சுவைஉடையதாகவும் நன்மை தருவதாகவும் இருக்கும்உண்மையில் பார்த்தால்,வீட்டில் செய்யப்படும் உணவில்,உணவுப் பொருள்களின் சேர்க்கை மட்டும் இல்லை. உணவைச் சித்தம்செய்பவர்கள்அன்பு என்ற ஒன்றைக் கலந்தே உணவைத் தயாரிக்கிறார்கள்.அதனாலேதான் வீட்டு உணவு உயர்ந்ததாய் இருக்கிறது.

     கணவன்மேல் கொண்ட அன்பு மனைவியின் மனத்தில் இருப்பதனால் அந்த உணவுசுவை உடையதாய் இருக்கிறது. அதனை உண்ணுகின்ற கணவன்மனைவி செய்த உணவை உண்ணும்பொழுது அவள் அன்பையும் நினைந்து பார்ப்பானேயானால்அவனையும் அறியாமல் அவன் மனத்தில் நன்றிப் பெருக்கம் ஏற்படும். உலகத்தில் ஒவ்வொருவர் செய்கின்ற உதவியையும் இப்படியே நினைந்து பார்த்தால்ஒவ்வொருவரும் மற்றவர்க்கு நன்றி பாராட்ட வேண்டுவது கடமை என்பது நன்கு விளங்கும்.

     இருந்தும்பெரும்பாலான மக்கள் நன்றி பாராட்டுவதில்லை ஒவ்வொரு மனிதனும் பிறருடைய உபகாரத்தைப் பெறும்பொழுதுஅவர்கள் தனக்கு உபகாரம் செய்ய வேண்டுவது கடமை என்றும்தான்அதனை ஏற்றுக் கொள்வது நியாயம் என்றும் நினைக்கிறான்தனக்கு உபகாரம்செய்வது செய்கிறவர்களுடைய பாக்கியம் என்றும்தான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் நினைக்கின்றான். இதனாலேதான் நன்றிப்பெருக்கம் அவனிடம் உண்டாவதில்லை.

     மனிதன் தான் பெறும் உதவிகளுக்கு நன்றி பாராட்ட வேண்டுவது மிகமிக அவசியம் என்ற உண்மையை நம்முடைய நாட்டில் பெரியவர்கள் அனைவரும் மிக அழகாகவும்விரிவாகவும்அழுத்தமாகவும் கூறியுள்ளார்கள். "உப்பு இட்டவரை உள்ளளவும் நினை," என்று பிறந்த பழமொழி நன்றி அறிதலின் அவசியத்தை நன்கு வலியுறுத்துகிறது. 'எவ்வளவு பெரிய உதவியைப் பெற்றால் நன்றி பாராட்ட வேண்டும்மிகச் சிறிய உதவிக்குக்கூட நன்றி பாராட்ட வேண்டுமா?’ என்னும் சந்தேகம் உண்டாகக் கூடாது என்று எண்ணித்தான், மிகச் சாதாரணமானதும், எங்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய உப்பைக் கொடுத்தவர்களைக் கூடசாகின்ற வரையில் ஒருவன் நினைந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

 

"துப்பிட்ட ஆலம்விதை சிறிது எனினும்

     பெரிதாகும் தோற்றம் போல,

செப்பிட்ட தினையளவு செய்த நன்றி

     பனையளவாய்ச் சிறந்து தோன்றும்!

கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்

     வளநாட்டில் கொஞ்ச மேனும்

உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்

     நினைக்கும் இந்த உலகந் தானே!"

 

என்று கூறுகிறது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்.

 

இதன் பொருள் ---

 

     கொப்பு என்னும் காதணியை அணிந்த  உமையம்மையை இடப்பாகத்தில்  கொண்ட திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபெருமானின் வளம் பொருந்திய நாட்டில்துப்பி விட்டஆலம் வித்து சிறியதாயினும் பெரிய மரம் ஆகும் காட்சியைப்  போல,  கூறப்பட்ட தினையின் அளவாகச் செய்த நன்மையானதுஏற்கும் இடத்தால்  பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும்,  எனவேஇந்த உலகம்சிறிதளவாக  உப்பு இட்டவரையும் உயிருள்ள வரையும் நினைத்துப்பார்க்கும்.

 

"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன் தெரிவார்"

 

என்னும் திருக்குறள் இக்கருத்தையே வலியுறுறுத்திக் காட்டுகிறது.

 

     நன்றி மறந்தவர்கள் மிகக் கொடியவர்கள் என்றும்அவர்கட்கு நரகந்தான் கிடைக்கும் என்றும் அறநூல்கள் வலியுறுத்துகின்றன. நம்முடைய நாட்டிலே மட்டுமன்றிஏனைய நாடுகளிலும் இவ்வாறே நினைத்தார்கள். நன்றி கொன்ற தன்மைதுரோகிகளின் கொடிய ஆயுதங்களை விடக் கொடுமையானது!". இலக்கியத்தில் காணப் பெறுகின்ற பாத்திரங்களுள் நன்றி மறவாத தன்மைக்காகச் சிறப்புப் பெற்றவர் முக்கியமாக இருவர். ஒருவன் கம்பராமாயணத்தில் காட்சி அளிக்கின்ற கும்பகர்ணன். மற்றவன் மகாபாரதத்தில் வருகின்ற கர்ணன்.

 

     பாரதப் போர் நடைபெறுகின்ற வரையில் கர்ணனுக்குத் தான் யார் என்பது தெரியவே தெரியாது. ஏறத்தாழ இறுதிவரைத் தாய் தந்தையர் பெயர் தெரியாத அனாதையாகவே அக் கொடைவள்ளல் இருக்க நேரிட்டது. மாவீரன் ஆகிய அவனுடைய இந்த அவல நிலையைப் போக்க முடிவு செய்தான் அவனுக்கு உற்ற நண்பனாகிய துரியோதனன்.துரியோதனன் ஏனைய கெட்ட குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமாய் இருப்பினும்நட்பு என்ற பண்பாட்டில் மிகச் சிறந்தவனாய் இருந்தான் ஊர்பேர் தெரியாத ஒருவனை, 'தேர்ப்பாகன் மகன்என்று எல்லாராலும் எள்ளி நகையாடப்பட்ட ஒருவனைத் தனக்கு உற்ற நண்பனாகச் செய்துஅங்க நாட்டு அதிபதியாகவும் செய்தான். யாதொரு பயனையும் கருதி அவன் இவ்வாறு செய்யவில்லை என்பதை ஒரு நிகழ்ச்சி நன்கு எடுத்துக்காட்டுகிறது.

 

     ஒரு நாள்தான் சிற்றுலாப் போகும் பொழுது கர்ணனையும் உடன் வரவேண்டும் என்று அழைத்தான் துரியோதனன். ஆனால்,தனக்குத் தலைநோவு இருப்பதால் வரவில்லை என்று கூறி விட்டான் கர்ணன். துரியோதனன் தனியே சென்று விட்டான். அவன் சென்றபிறகு அவன் மனைவியாகிய பானுமதி கர்ணனைச் சூது விளையாட வருமாறு அழைத்தாள் அவன் ஏகாந்தமண்டபத்தில் அவளுடன் விளையாடத் தொடங்கினான். வாயிற்புறத்தை நோக்கி அவள் அமர்ந்திருந்தாள். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் அவள் தோற்றுவிட்டாள். அந்த நிலையில்உலாவச் சென்ற துரியோதனன் மீண்டு வந்து விட்டான். கணவனைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்வதற்காக அவள் எழுந்தாள் ஆனால்தன்னிடம் தோற்றுவிட்டு அதைச் சமாளிப்பதற்காகஅவள் எழுகின்றாள் என்று தவறாக நினைத்தகர்ணன்அவளுடைய சேலையின் மேலணிந்திருந்த,மேகலாபரணத்தைப் பிடித்து இழுத்தான். அவ்வாபரணத்தில் கோக்கப்பட்டிருந்த முத்துக்களும்மணிகளும் உதிர்ந்துவிட்டன. இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில்துரியோதனன் அவன் எதிரே வந்துவிட்டான்!


     ஏகாந்த மண்டபத்தில் சூதாடிஅவளுடைய மேகலாபரணத்தையும் பற்றி இழுத்தகாட்சியை துரியோதனன் நேரே கண்டு விட்டான். எவ்வளவு நெஞ்சுரம்  உடையவர்களுக்கும் மனம் கலங்கி விடுதல் இயல்பு. செய்வது அறியாது மயங்கிய நிலையில் தலையைத் தொங்க விட்டுக்கொண்டு கர்ணன் அயர்ந்து விட்டான். ஆனால்துரியோதனன் எவ்விதமான விகற்பமும் மனத்தில் கொள்ளாமல், "நண்பாசிதறிய மணிகளைஎல்லாம் பொறுக்கி எடுத்தல் போதுமாஅல்லது கோத்தே தர வேண்டுமாஇதோ நான்  இருக்கின்றேன்!” என்றான்.


     துரியோதனனுக்கு. கர்ணனுடைய ஒழுக்கத்தின் மீது சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. துரியோதனன் வியப்படையும் அளவுக்கு கர்ணன் நடந்து கொண்டான். அதனால் அல்லவோஅந்தப்புரத்தில் தன் மனைவியுடன் மாற்றான் ஒருவனை சொக்கட்டான் ஆட அனுமதித்தான். துரியோதனன் தனக்குச் செய்த உதவியையும், அவனது நற்குணத்தையும் நன்றி உணர்வுடன் தனது மனத்தில் வைத்து இருந்தான் கர்ணன்.


     கர்ணன்தான் தனது மூத்தமகன் என்று கூறி குந்திதேவி கூறியபோதும், கட்சி மாற மறுத்தான் கர்ணன். அப்போது அவன் முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லி, இப்படிப் பட்ட துரியோதணனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதே தனது வாழ்வின் இலட்சியம் என்று சொல்லி தனது நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறான். வில்லிபாரதத்தில் இந்தக் காட்சி படம்பிடித்துக் காட்டப்படுகிறது.


"மடந்தை பொன்திரு மேகலை மணி உகவே 

     மாசு அறத் திகழும் ஏகாந்த

இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப,

      "எடுக்கவோ?கோக்கவோ?'" என்றான்;

திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் 

     செருமுனைச் சென்றுசெஞ்சோற்றுக்

கடன் கழிப்பதுவேஎனக்கு இனிப் புகழும்

     கருமமும்,தருமமும்!என்றான்."

 

     போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்ற கர்ணன் முன்பு கண்ணன் வந்து நின்று, அவன் செய்த புண்ணியத்தின் பயனை எல்லாம் தனக்குத் தாரை வார்த்துத் தருமாறு கேட்டபோது, "மாதவத்தால் தான் வாழ்ந்தேன்" என்று கர்ணன் கூறுகிறான். அவன் செய்த மாதவம்தான் யாது என்பதை வில்லிபாரதம் கூறுகிறது.

 

"தருமன் மகன் முதலான அரிய காதல் 

     தம்பியரோடு எதிர் மலைந்து,தறுகண் ஆண்மைச்

செருவில்எனது உயிர் அனைய தோழற்காகச் 

     செஞ்சோற்றுக் கடன் கழித்தேன்தேவர் கோவுக்கு

உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன்

     உற்ற பெரு நல்வினைப் பேறு உனக்கே தந்தேன்;

மருது இடை முன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே! 

     மாதவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே!"

 

     துரியோதனன் தனக்குச் செய்த பேருதவியை மறவாமல் இருந்து போரில் அவனுக்காக ஈடுபட்டு செஞ்சோற்றுக் கடன் கழித்தது கர்ணன் செய்த மாதவம். அது மட்டும் அல்லாமல், தன்னிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் இன்னலை என்னாமல் தருகின்ற உயர்ந்த பண்பை உடையவன் ஆகிய கர்ணன், இந்திரன் வந்து யாசித்தபோது, தன்னோடு உடன் பிறந்த கவசகுண்டலங்களையும் தானமாகத் தந்தான். அத்தோடு நில்லாமல், இதுவரை தான் செய்த புண்ணியங்களின் பயன் அனைத்தையும் திருமாலுக்குத் தானமாகத் தந்தான் அவையும் கர்ணன் செய்த மாதவம் ஆகும். 

 

     உயர்ந்த நட்பின் பண்போடு துரியோதனன் விளங்கினான். நன்றி பாராட்ட இது  ஒரு காரணம். இரண்டாவது காரணம் அதைவிட முக்கியமான,  ஊர் பேர் தெரியாத தன்னைஉணவு கொடுத்துஒரு நாட்டின் அரசன் ஆக்கிய உபகாரத்திற்கு நன்றி பாராட்ட வேண்டும் என்பதுமிக இன்றியமையாதது. இதனையே, "செஞ்சோற்றுக்கடன் கழிப்பது" என்று கூறுகிறான் கர்ணன்.


     போர்க்களத்தில் வந்து நிற்கும் கும்பகர்ணனைத் தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கின்றான் வீடணன். இராவணன் செய்வது பெரும் தவறு என்பதை நன்குஅறிந்தவனாயினும்நன்றிப் பெருக்கம் உடைய கும்பகர்ணன்வீடணனோடு சேர்ந்துகொண்டு இராவணனுக்கு எதிராகப் போரிட விரும்பவில்லை. எனவேவீடணனை நோக்கி, "தம்பிஅறிவில்லாதவனாகிய அரசன் தீமை செய்வதைக் கண்டால் அவனை இடித்துக்  கூறித் திருத்த முற்படவேண்டும். திருத்த முடியவில்லையானால்அதற்காகப்பொறுத்துக் கொண்டிருப்பதோ அன்றிப் பகைவனுடன் சேர்ந்து கொண்டு அண்ணன்மேல்போர் தொடுப்பதோ முறையல்ல. போருக்குச் சென்று உயிரை விடுதலே அவனுடைய  உப்பைத் தின்றவர்கள் செய்ய வேண்டிய கடமையாகும்என்று கும்பகர்ணன் கூற்றாநன்றி உணர்வு பற்றி கம்பர் பின்வருமாறு பாடுகின்றார்.


"கருத்து இலா இறைவன் தீமை

    கருதினால்அதனைக் காத்துத்

திருத்தலாம் ஆகில் அன்றோ

    திருத்தலாம்தீராது ஆயின்,

பொருத்து உறு பொருள் உண்டாமோ?

    பொருதொழிற்கு உரியர் ஆகி

ஒருத்தரின் முன்னம் சாதல்

    உண்டவர்க்கு உரியது அம்மா."


     செய்ந்நன்றி நினைப்பதற்காகத் தம் உயிரையே பணயமாக வைத்துக் கர்ணனும்கும்பகர்ணனும் திருக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்து காட்டி விட்டார்கள். "என் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்உய்வு இல்லைசெய்நன்றி கொன்ற மகற்கு"

என்பதே திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள்.


       இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர்தாம் அருளிய "முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்...

 

"அன்று குணன் உய்ந்தான் அந்தணனைக் கொன்றும்அரன்

நன்றி கொலும் அசுரர் நாடு அறியப் --- பொன்றுதலால்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டுஆம்உய்வு இல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு."    

 

இதன் பொருள் ---

 

     குணன் --- வரகுண பாண்டியன்.  அவன் ஒரு சமயம் வேட்டைமேல் சென்று திரும்பி வருகையில்வழியில் களைத்துப் படுத்திருந்த ஓர் அந்தணன் மீது அறியாமல் குதிரையைச் செலுத்தவேஅம் மறையவன் மாண்டனன். அதனால் பிரமஹத்தி தோஷம் பாண்டியனை விடாமல் பற்றிக்கொள்ளவரகுணன் மிகவும் வருந்தி ஆலவாய் எம்பிரான் கோயிலைப் பன்முறை வலம் வந்து வழிபட்டுஅம்முர்த்தியின் ஆணைப்படியேதிருவிடைமருதூர் சென்று அங்கே தோஷத்தைத் தீர்த்துக் கொண்டான் என்பது திருவிளையாடல் புராணத்தில் கண்ட வரலாறு.  

 

      நன்றி கொல்லும் அசுரர் - முப்புரவாசிகள். சிவபெருமானால் பல்வகைச் செல்வங்களைப் பெற்று வீறுடன் இருந்த அசுரர்கள்பின்னொரு காலத்தில் தமது செருக்கால் இறைவன் தந்த வரங்களைபிறரைத் துற்புறுத்தவதில் பயன்படுத்தினர். பின்னொரு காலத்தில் திருமாலால் ஏவப்பட்ட நாரதர் வார்த்தையைக் கேட்டுச் சிவ நிந்தனைக்கு உள்ளாகினர். அவர்களுடைய முப்புரங்களைச் சிவபெருமானின் சிரித்து அழித்தார்.

 

     பின்வரும் பாடல்கள் மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 

"ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என,

நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடிற்றே, ஆயிழை கணவ..".   --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

     பசுவினதுமுலையால் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்மாட்சிமைப்பட்ட ஆபரணத்தை உடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந் தொழிலை உடையோர்க்கும்அவர் செய்த பாதகத்தினை ஆராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள்ளன எனவும்நிலம் கீழ் மேலாம் காலமாயினும்ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதல் இல்லை எனவும்அறநூல் கூறிற்று தெரிந்த ஆபரணத்தை உடையாள் கணவனே!

 

"சிதைவு அகல் காதல் தாயை

     தந்தையைகுருவைதெய்வப்

பதவி அந்தணரைஆவை

     பாலரைபாவைமாரை

வதை புரிகுநர்க்கும் உண்டாம் 

     மாற்றலாம் ஆற்றல்மாயா

உதவி கொன்றார்க்கு என்றேனும் 

     ஒழிக்கலாம் உபயம் உண்டோ?"    ---  கம்பராமாயணம்கிட்கிந்தைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     கேடு நீங்கியஅன்புடையதாயையும்தந்தையையும்,குருவையும்தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும்பசுக்களையும்,குழந்தைகளையும்மகளிரையும் வதை கொலை செய்தவர்களுக்கும் அந்தப் பாவங்களை நீக்குவதற்கு உரிய வழிகள் உள்ளதாம்ஆனால் அழியாத பேருதவியை மறந்தவர்களுக்கோ அப் பாவத்தைப் போக்குவதற்குரிய வழி ஒன்றாவது உண்டோ?(இல்லை).

 

"கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,

மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,

நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே.".    ---  கம்பராமாயணம்பள்ளியடைப் படலம்.

 

 இதன் பொருள் ---

 

     பால்விடாமையால் கன்றுக்குட்டி உயிர் இல்லையாய்ப் போகபசுவினிடத்து உள்ளஎல்லாப் பாலையும் தானே கறந்து உண்டவன்மன்றத்தில் பிறரது பொருளை அவர்அறியாதபடி மறைத்துக் கைப்பற்றிக் கொண்டவன்ஒருவன் செய்த நன்றியை மறந்து அவனைப்பழித்துப் பேசுகின்ற இனிமையற்ற நாக்கை உடையவன்என்று கூறப்பெறுகின்ற இந்த மூவரும் சென்றடையும் நரகம் எனக்கும் சொந்தமாகட்டும்.

 

"உய்ய, 'நிற்கு அபயம்!" என்றான்

     உயிரைத் தன்உயிரின் ஓம்பாக்

கய்யனும்ஒருவன் செய்த 

     உதவியில் கருத்திலானும்,

மய் அறநெறியின் நோக்கி

     மா மறை நெறியில்நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்

     மீள்கிலா நரகில்வீழ்வார்.".   --- கம்பராமாயணம்விபீடணன் அடைக்கலப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     நான் உய்யுமாறு உன்னைச்சரண் புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன்னுயிராகக் கருதிப்பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும்ஒருவன் செய்த உதவியில்  கருத்து இல்லாதுமறந்தவனும்;   குற்றம் நீங்கசிறந்த வேதநெறிப்படி நின்றொழுகும் உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார்.

 

"அரவம் மல்கிய பதாகையாய்! மதி 

     அமைச்சர் ஆய் அரசு அழிப்பினும்,

குரவர் நல்உரை மறுக்கினும்பிறர்

     புரிந்த நன்றியது கொல்லினும்,

ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும்

     அவருடன் அழன்று பொர  உன்னினும்,

இரவி உள்ள அளவும் மதியம் உள்ள அளவும்

     இவர்களே நரகில் எய்துவார்.".    ---  வில்லிபாரதம்கிருட்டிணன் தூது.

 

இதன் பொருள் ---

 

     பாம்பின் வடிவம்பொருந்தின பெருங்கொடியை உடையவனே!  நல்லறிவு உடைய [அல்லது அரசனுக்கு அறிவுறுத்தற்குரிய] மந்திரிகளாயிருந்து அரசாட்சியை (வேண்டுமென்று) கெடுத்தாலும் பெரியோர்களது நல்ல உபதேச மொழிகளை(க்கேட்டு ஒழுகாது) விலகி நடந்தாலும்,  அயலார் செய்த உபகாரத்தை மறந்தாலும்,ஒருவர் வசிக்கின்ற வீட்டிலே அவர் உணவைப் புசித்துப் பின்பு அவருடன் கோபித்துப் போர்செய்யக் கருதினாலும்இந்த நான்கு அக்கிரமத் தொழில்களைச் செய்பவர்களேசூரியன் உள்ள வரையிலும் சந்திரன் உள்ள வரையிலும் நரகலோகத்தில் சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பார்கள்.

 

"ஒன்றுஒரு பயன்தனை உதவினோர் மனம்

கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்

புன்தொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே

கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ."     --- கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     நன்றி மறந்த பாவிகள் ஒருபோதும் ஈடேறமாட்டார்கள்.  அவர்கள் விரைவில் அழிவர். அவரைக் கொல்வதற்கு வேறு கூற்றுவன் வரவேண்டா. அவர் மறந்த நன்றியே அவரைக் கொன்றுபோடும்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...