Showing posts with label பட்டினத்தார் பாடல்கள். Show all posts
Showing posts with label பட்டினத்தார் பாடல்கள். Show all posts

திருவொற்றியூர்

 

"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்

திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்

நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்குஉருண்டு

கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."


பொழிப்புரை --- மனமே1வ முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பது தான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.


விளக்கம் ---  இறந்த பிறகு உறவினராலே தூலதேகத்தை சுடப்படுவோராகிய அஞ்ஞானிகளுக்கு உண்மை விளங்காது என்பார் "சுடப்படுவார் அறியார்" என்றார். முப்புரங்களை எரித்த பிரான் என்பது, முப்புரமாவது மும்மல காரியம் என்பதனால் விளங்கும்.  மும்மலங்களைச் சுட்டான் என்பார் "புரமூன்றையும் சுட்டபிரான்" என்றார். பிறவியை ஒழித்துக் கொள்ள வேறு ஓர் உபாயம் எதையும் முயலவேண்டாம் என்பார், திருவொற்றியூர்த் தெருக்களில் நடப்பவருடைய திருவடிகள் தலைமீது பொருந்த இருந்தாலே போதும் என்பார், "தெருப் பரப்பில் நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே" என்றார்.  உருண்டு கிடத்தல் என்பது அங்கப் பிரதட்சிணம் என்று வடமொழியில் சொல்லப்படும். விதி என்பது பிரமனுக்கு உரிய பெயர்களில் ஒன்று.  அவன் எழுதி வைத்த ஏட்டின்படியே பிறவியும், வாழ்வும் மற்ற நிலைகளும் வாய்க்கும். அவன் எழுதுவது நின்றால் பிறவி இல்லை.  அதனால், பிரமன் எழுதுகின்ற ஏட்டைக் கிழித்துவிட்டால், அவனுக்கு எழுத எடு இருக்காது.


திருவொற்றியூர்

 


"ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டுக்

கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே."


பொழிப்புரை ---  அலங்காரங்கள் செய்து அமைந்த திருவொற்றியூரிலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே! நெஞ்சிலே கோழை மிகுந்து வரவும், கண்கள் பஞ்சடைந்து போகவும், அறிவும் அழிந்து கிடக்கவும்,  இதுவரை மெய் என்று நம்பியிருந்த இந்த உடம்பும் பொய்யாகிப் போகின்ற காலத்தில் அடியேன் ஒன்றை வேண்டிக் கொள்வேன். திருநீற்றை உடம்பில் தரித்து, கைகளைக் கூப்பி, உம்மைத் தொழுது, திருவைந்தெழுத்தை உச்சரிக்க எனக்குக் கற்பித்து அருள்வாயாக.


விளக்கம் ---  நமது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் முறையே 4 :2 : 1 என்னும் விகிதத்தில் இருக்கவேண்டும். இந்த அளவுகளில் ஒன்று குறைந்தாலும், அதிகமானாலும் நோய் செய்யும்.  "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று" என்றார் திருவள்ளுவ நாயனார். இந்த மூன்றின் தொகையும் 7. உடம்பின் அடுக்குகளும் 7.   வாதம் என்னும் காற்று 4/7ம், பித்தம் என்னும் நெருப்பு 2 /7 ம், ஐயம் என்னும் சிலேத்துமம் ஆகிய நீர் 1 /7 ம் இருக்கவேண்டும்.


இந்த மூன்றில் சிலேத்துமம் இறப்பை நெருங்கச் செய்வது.  இறப்பு நெருங்க நெருங்கத் தொண்டையில் கபம் கட்டும். கோழை மிகுந்து சிக்கிக் கொள்ளும். குடலில் மலச்சிக்கல், தொண்டையில் கோழைச் சிக்கல் கூடாது. இறப்புக் காலத்தில் உடலில் குளிர்ச்சி மிகும்போது தொண்டையில் ஐ என்னும் கபம் கட்டும்.


"வாதம் ஊது காமாலை சோகைநோய், பெருவயிறு வயிறுவலி படுவன்வர, இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழும் அது கொழகொழென ஒழுகிவிழ வாடி ஊனெலாம் நாடி பேதமாய்...."  என்பார் அருணகிரிநாதப் பெருமான்.


"ஐ நெரிந்து அகம் மிடற்றே அடைக்கும் போது, ஆவியார்தாம்

செய்வது ஒன்றி அறியமாட்டேன், திருப்புகலூ ரனீரே"


என்றும்,


"ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு

ஆவியார் போவதுமே அகத்தார் கூடி

மையினால் கண்எழுதி மாலை சூட்டி

மயானத்தில் இடுவதன்முன்....."


என்றும் அப்பர் தேவார வாக்குகளாலும்,


"புலன்ஐந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கி

அறிவு அழிந்திட்டு, ஐ மேல் உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று

அருள்செய்வான்....."


எனவும் வரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தாலும் அறியலாம்.


இறப்புக் காலத்தில் கண் பஞ்சடைந்து போகும் கண்மணிப் பாவையும் செருகும் ஆதலின், "விழியும் செருகி" என்றார். மெய்யுணர்வும் அழியும் ஆதலால், "அறிவு அழிந்து" என்றார்.


பொய்யான, நிலையில்லாத உடல்தான். ஆனாலும் மெய்யாகிய உயிர் அதனுள் இருப்பதால் மெய் எனப்பட்டது. நாமும் பொய்யாகிய உடலை மெய் என நம்பினோம். அது ஒரு நாள் பொய்யாகிப் போகும் என்பதால், "மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது" என்றார்.  


அப்போது ஆன்மாவானது பாம்பின் வாய்த் தேரை போல பலப்பல நினைக்கும். அப்போதுதான் இறைவனை எண்ணும். அப்போதாவது இறைவனை மனதார எண்ணி வேண்டுவது வேண்டும். அது என்ன,  முத்தி தருவதாகிய திருநீற்றை உடல் முழுது அணியவேண்டும். பெருமானை மனதார வணங்க வேண்டும். திருவைந்தெழுத்தை மானதமாக உச்சரிக்க வேண்டும். இவை யாவும் இறப்பு நெருங்குகின்ற காலத்தில் தன் முயற்சியால் தடையின்றி முடியாது என்பதால்,  "திருநீறும் இட்டுக் கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே" என்று வேண்டினார்.


திருச்செங்காடு

 




"நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்திநிழல் அருகே

இருப்பார் திருவுளம் எப்படியோ, இன்னம் என்னை அன்னைக்

கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய

திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே."

பொழிப்புரை --- நெருப்பைப் போலும் திருமேனியை உடைய சிவபெருமான் திருச்செங்காட்டில் ஆத்தி மரநிழலிலே எழுந்தருளி இருக்கின்றான். அவனுடைய திருவுள்ளப் பாங்கு எப்படி அமைந்துள்ளதோ தெரியவில்லை. இன்னமும் ஒரு தாயின் வயிற்றிலே என்னைக் கொண்டு சேர்ப்பாரோ? திருமாலும் காண்பதற்கு அரியதான தன்னுடைய திருவடி நிழலிலே சேர்ப்பாரோ?  சிவபெருமானுடைய அருட்செயல் இன்னது என்று தெரியாது.

விளக்கம் - சிவபெருமான் பவளம் போல் சிவந்த திருமேனியை உடையவன் என்பதால், "நெருப்பான மேனியர்" என்றார். அவர் எழுந்தருளி விளங்குகின்ற இடங்கள் எல்லாம் திருக்கோயில் ஆகும்.  அடியவர் உள்ளமும் பெருங்கோயில் தான் அவருக்கு. அந்தப் பக்குவத்தை அடையச் செய்வதற்காக, அவனைக் கும்பம், தம்பம், பிம்பம் என்னும் நிலைகளில் வைத்து, எழுந்தருளப் பண்ணி வழிபாடு ஆற்ற அருளாளர்களை அதிட்டித்து வழிகாட்டியவனும் அவனே தான். பல திருக்கோயில்களிலும் அவன் நமது வேண்டுதலாகிய ஆவாகனம் காரணமாக எழுந்தருளி இருக்கின்றான். அத் திருத்தலங்களில் திருச்செங்காட்டங்குடியும் ஒன்று. ஆத்தி தலமரம். ஆதலின், "செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே இருப்பார்" என்றார்.

தம்மிடத்தில் அன்பு செய்வாருடைய பக்குவத்திற்கு ஏற்பத் தாமும் அன்பு செய்வார் ஆதலால், "அவரது திருவுள்ளம் எப்படியோ" என்றார்.  உயிர்கள் உய்யும்பொருட்டு, மாயாகாரியமாகிய உடம்பிலே அவைகளைச் செலுத்துதல் முதலாகிய ஐந்தொழில்களையும் பெருமான் ஆற்றுகின்றான். அவன்தான் உயிரின் பக்குவத்தை அறிவான்.  எத்தனையோ பிறவிகளை எடுத்து எடுத்து இளைத்த ஆன்மாவை, மேலும் ஒரு பிறவி எடுக்க வேண்டி, இன்னும் ஒரு தாயின் கருப்பையிலே புகுத்துவது செய்வானோ அல்லது, பன்றியாக வடிவெடுத்துச் சென்றும் திருமாலால் காணமுடியாத தனது திருவடி நிழலில் வைத்து ஆட்கொள்ளுவானோ என்பது, நான் என்னும் முனைப்பு உடைய ஆன்ம அறிவுக்குப் புலப்படாது.  அந்த ஊசியின் காது இன்னும் அறவில்லை. அதனால், சிவன் செயல் எப்படி அமையமோ என்பார்,  "இன்னம் என்னை அன்னைக் கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே" என்றார்.


திருத் தில்லை - 14

 

"ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல், ஏக்கற்று இருப்பர்களே."


கங்கை நதியோடு, தும்பை மலரையும் தரித்து ஆடுகின்ற அம்பலவாணப் பெருமானை வழிபடாதவர்களுக்கு இந்த உலகத்தில் அடையாளம் உள்ளது. அது என்னவென்றால், சோற்று வாசனை இல்லாமல், சுகம் ஏதும் இல்லாமல், உடுத்திக் கொள்ள ஆடை ஏதும் இல்லாமல், பிச்சை எடுத்தாலும் கிடைக்காமல் ஏங்கி இருப்பவர்கள்.


"இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம், இடர் கெடலும் ஆம்,

அம்மையை சிவலோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுறவு இல்லையே"


என்னும் சுந்தரர் தேவாரத்தினை எண்ணுக.


திருத் தில்லை - 13

 

"தவியாது இரு, நெஞ்சமே! தில்லை மேவிய சங்கரனை,

புவிஆர்ந்து இருக்கின்ற ஞானாகரனை, புராந்தகனை,

அவியா விளக்கை, பொன்னம்பலத்து ஆடியை, ஐந்தெழுத்தால்

செபியாமல் நீ செபித்தால், பிறவா முத்தி சித்திக்குமே."


பொழிப்புரை---- நெஞ்சமே! மனம்  இளையாமல் இருப்பாயாக.  திருத்தில்லையிலே எழுந்தருளி இருக்கின்ற அம்பலவாணப் பெருமானை, உலக முழுதும் நிறைந்து இருக்கின்ற பரம்பொருளை, ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனை, முப்புரங்களை நீறாக்கியவனை, அழியாத தீபம் போல்பவனை, திருவைந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு நீ செபிக்காமல் செபித்தாயானால் பிறவாமல் இருக்கைக்குக் காரணமாகிய முத்தி உனக்குக் கைகூடும்.


விளக்கம் ---  மனமானது இன்பத்தையே எப்போதும் வேண்டி, துன்பத்திலிருந்து விடுபட நினைத்துத் தவித்துக் கொண்டே இருக்கும்.  அதனால் துன்பம் வந்தபோது இளைத்துப் போகும். எனவே, "தவியாது இரு" என்றார். உயிர்கள் உய்யும் பொருட்டு ஐந்தொழில் ஆற்றுகின்ற நடனத்தைப் புரிபவன் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்றான் என்பதால், "தில்லை மேவிய சங்கரனை" என்றார்.  அவன் உலகப் பொருள்கள் அனைத்துமாக உள்ளவன்; ஞான சொரூபியாகிய அவன் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகின்றான் என்பதால், "புவி ஆர்ந்து இருக்கின்ற ஞானாகரனை: என்றார். தேவர்களைக் காத்தருள்பவன் என்பதால் "புராந்தகனை" என்றார். புறத்திலே ஏற்றுகின்ற விளக்கானது புறத்திலே உள்ள இருளைப் போக்கி ஒளி தருவது போல், அகத்திலே உள்ள ஆணவ இருளைப் போக்கி, அருள் ஒளியை நிரப்புபவன் என்பதால், "அவியா விளக்கை" என்றார். புறத்திலே ஏற்றிய விளக்கு அவியும். அக விளக்கு அவியாது. "நல் அக விளக்கு அது நமச்சிவாயவே" என்றார் அப்பர் பெருமான். புறத்திலே தில்லையிலும், அகத்திலே புருவ மத்தியிலும் விளங்குபவனைப் "பொன்னம்பலத்து ஆடியை" என்றார். கருவி கரணங்களைக் கடந்து நின்று திருவைந்தெழுத்து மந்திரத்தை செபிக்கன்ற நிலை வாய்க்க வேண்டும் என்பதால், செபியாமல் செபித்தால் என்றார். "நினைப்பு அற நினைந்தேன்" என்பார் மணிவாசகப் பெருமான்.  நிட்டை கூடும் நிலை வாய்க்குமானால், முத்தி எளிது.


திருத் தில்லை - 12


"பிறவாது இருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டால்

இறவாது இருக்க மருந்து உண்டு காண்! இது எப்படியோ?

அறம்ஆர் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்

மறவாது இரு மனமே, அதுகாண் நல் மருந்து உனக்கே."


பொழிப்புரை --- நெஞ்சமே! இந்த உலகத்தில் பிறவாது இருக்கும்படி வரம் பெறுவதே தக்கது. ஒருக்கால் பிறந்து விட்டால் இறவாமல் இருக்கவும் மருந்து உள்ளது. அது எப்படி என்றால், அறம் நிறைந்திருக்கின்ற தில்லையிலே திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி இன்பநடம் புரியும் அம்பலவாணனப் பெருமானின் திருவடித் தாமரையை மறவாது இருப்பதுதான், இறவாமல் இருப்பதற்கான நல்ல மருந்து ஆகும்.


விளக்கம் ---  


இப்பிறவி என்னும்ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்

        என்னும்ஒரு மகரவாய்ப்பட்டு,

      இருவினை எனும்திரையின் எற்றுண்டு, புற்புதம்

        எனக்கொங்கை வரிசைகாட்டும்

    துப்புஇதழ் மடந்தையர் மயல்சண்ட மாருதச்

        சுழல்வந்து வந்துஅடிப்ப,

      சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி

        சுரந்ததுஎன மேலும்ஆர்ப்ப,

    கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்

        கைவிட்டு மதிமயங்கி,

      கள்ளவங் கக்காலர் வருவர்என்று அஞ்சியே

        கண்அருவி காட்டும்எளியேன்,

    செப்பரிய முத்தியாம் கரைசேரவும் கருணை

        செய்வையோ, சத்தாகிஎன்

      சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

        தேசோ மயானந்தமே.


    

    காக மோடுகழுகு அலகை நாய்நரிகள்

        சுற்று சோறுஇடு துருத்தியை,

      கால் இரண்டுநவ வாசல் பெற்றுவளர்

        காமவேள் நடன சாலையை,

    போகஆசைமுறி இட்ட பெட்டியை,மும்

        மலமி குந்துஒழுகு கேணியை,

      மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,

        முடங்க லார்கிடை சரக்கினை,

 மாக இந்த்ரதனு மின்னை ஒத்துஇலக

       வேதம் ஓதியகு லாலனார்

        வனைய, வெய்யதடி காரன் ஆன யமன்

      வந்து அடிக்கும்ஒரு மட்கலத்

    தேக மானபொய்யை, மெய் எனக்கருதி

      ஐய, வையமிசை வாடவோ,

        தெரிவ தற்குஅரிய பிரம மே,அமல

      சிற்சு கோதய விலாசமே.


என்னும் தாயுமானார் பாடல்களையும்,



மணம்என மகிழ்வர் முன்னே,

மக்கள்தாய் தந்தை சுற்றம்

பிணம்எனச் சுடுவர் பேர்த்தே,

பிறவியை வேண்டேன் நாயேன்,

பணைஇடைச் சோலைதோறும்

பைம்பொழில் விளாகத்து எங்கள்

அணைவினைக் கொடுக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.


என்னும் சுந்தரர் தேவாரப் பாடலையும் நோக்குமிடத்துப் பிறவியால் வருவது துன்பமே என்றும், அதனால், அதனைப் பிறவிப் பிணி என்றும், அந்த நோயைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு மருந்து அவசியம் என்பதும் தெளிவாகும். பிறவாமல் இருக்க வரம் பெறல் வேண்டும் என்றது இதனால்.


இனி பிறவாதிருக்க வேண்டுமென்றால், இறவாது இருக்க வேண்டும். "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை" என்றார் சுந்தரர் பெருமான். மரணமிலாப் பெருவாழ்வை அடைவதற்கான வழியைப் பார்ப்போம்....


கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்

சரணங்களே சென்று சார்தலுமே தான், எனக்கு

மரணம் பிறப்பு என்று இவைஇரண்டின் மயக்கு அறுத்த

கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ


எனவும்,


முன்னை வினைஇரண்டும் வேர்அறுத்து முன்நின்றான்,

பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன் - தென்னன்

பெருந்துறையின் மேய பெருங் கருணையாளன்

வரும்துயரம் தீர்க்கும் மருந்து.


என வரும் திருவாசகப் பாடல்கள் இறப்பைத் தவிர்ப்பது பெருமானுடைய திருவடியைச் சார்வதே என்றும், அத் திருவடியே பிறவித் துயரத்தைப் போக்கும் மருந்து என்பதும் தெளிவாகும். அத் திருவடியை மறவாமல் இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் திருவாசகப் பாடலால் அறியலாம்...


"மறந்தேயும் தன்கழல் நான் மறவா வண்ணம் நல்கிய அத்

திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ".


அப்பர் பெருமானும், "மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி" என்றார்.


திருத் தில்லை - 11

 



"வித்தாரம் பேசினும், சோங்கு ஏறினும், கம்பமீது இருந்து

தத்தா என்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும், தம்முன் தம்பி

ஒத்தாசை பேசினும் ஆவதுஉண்டோ, தில்லையுள் நிறைந்த

கத்தாவின் சொற்படி அல்லாது வேறுஇல்லை கன்மங்களே."


பொழிப்புரை ---  வாக்கு வித்தாரமாகப் பேசினாலும், கப்பல் ஏறிப் போனாலும், கம்பத்தின் மேல் இருந்து தத்தா என்று சொல்லிப் பவுரிக் கூத்து ஆடினாலும், தமையன் தம்பி உதவியாகப் பேசினாலும், ஏதாயினும் ஒரு காரியம் ஆவது உண்டோ? (இல்லை) தில்லயம்பதியில் எழுந்தருளி உள்ள கர்த்தனின் சொல்படியே அல்லாமல் உலகத்தில் நிகழும் தொழில்கள் வேறு இல்லை.


விளக்கம் ---  பிறர் மயங்கும்படி அணிமா முதலிய அட்டமா சித்திகளை உடையவர் என்று விரிவாகப் போசினாலும், யாதொரு பயனும் இல்லை என்பதால், "வித்தாரம் பேசினும்" என்றார்.  


ஆகூழ் என்று சொல்லப்படும் நல்வினைப் பயன் இல்லாதபோது, அவர் மரக்கலம் ஏறிச் சென்று பொருள் தேட முயன்றாலும் சிறிதும் கைகூடாது என்பார், "சோங்கு ஏறினும்" என்றார்.


மூங்கில் கழியின் மீது இருந்து கழைக் கூத்து ஆடினாலும் அடைவது ஒரு பயனும் இல்லை என்பதால், "கம்ப மீது இருந்து தத்தா என்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும்" என்றார்.


தனக்குத் துணையாக அண்ணன் தம்பிமார் பேசினாலும் கூட யாதொரு காரியமும் ஆகாது என்பார், "தம்முன் தம்பி ஒத்தாசை பேசினும் ஆவது உண்டோ" என்றார்.


உலகத்தில் நிகழும் செயல்கள் அனைத்தும் தில்லயம்பதியில் ஆனந்த்த் திருநடம் புரியும் சிவபெருமானின் அருளாணைப் படியே நிகழும் என்பதால், "தில்லையுள் நிறைந்த கத்தாவின் சொற்படியன்றி அல்லாது வேறு இல்லை கன்மங்களே" என்றார்.


இது ஒத்த கருத்துடைய பாடல்கள் பலவற்றை முன்னும் பார்த்து இருக்கின்றோம். 


திருத் தில்லை - 10

 


"உடுப்பானும், பால்அனம் உண்பானும், உய்வித்து ஒருவர்தம்மைக்

கெடுப்பானும், ஏதுஎன்று கேள்வி செய்வானும், கெதியடங்கக்

கொடுப்பானும், தேகி என்று ஏற்பானும், ஏற்கக் கொடாமல் நின்று

தடுப்பானும், நீ அல்லையோ, தில்லைஆனந்தத் தாண்டவனே."

பொழிப்புரை ---  ஆடை முதலியவற்றைத் தரிப்பவனும், அதன் பின்னே பால் சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரப் புசிப்பவனும், ஒருவரை வாழ்வித்து, ஒருவரைக் கெடுப்பவனும், யாது என்று கேட்பவனும், வறுமை ஒழியக் கொடுப்பவனும், கொடு என்று இரப்பவனும், அவ்வாறு ஏற்பாருக்குக் கொடுக்க ஒட்டாமல் உறுதியாய் நின்று தடுப்பவனும், எல்லாம் நீயே அன்றோ. தில்லை அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் இடுகின்ற பெருமானே!

விளக்கம் ---  உயிர்கள் செய்யும் தொழிலனைத்தும் சிவனருள் விதித்தபடியே நடக்கும். எல்லாம் அவரவருக்கு ஊட்டப்படும் வினையின் பயனே.


திருத் தில்லை - 9

 


"தெய்வச் சிதம்பர தேவா உன் சித்தம் திரும்பிவிட்டால்

பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியும் எங்கே,

மெய்வைத்த செல்வம் எங்கே,  மண்டலீகர் தம் மேடைஎங்கே,

கைவைத்த நாடக சாலை எங்கே, இது கண்மயக்கே."


பொழிப்புரை --- தெய்வீகமான அருள்வெளியில் நடிக்கின்ற தேவனே! உமது திருவுள்ளம் பதிந்து விட்டால், அரசரது வாழ்வும், பொய்த் தன்மை உள்ள கனவை ஒத்த பூமியும் என்ன ஆகும். மெய்த் தன்மை அமைத்ததாகக் கொள்ளப்படும் செல்வம் என்னாகும். அலங்காரம் செய்த நாடக சாலை என்னாகும். இது யாவும் கண் மயக்கமே. எல்லாம் சூனியமே.


விளக்கம் - சிவபெருமானுடைய திருவருளானது அடியவரிடம் பதிந்து விட்டால், உலக இன்பங்கள் யாவும் பொய் எனவே தெளிவாகத் தோன்றும்.


திருத் தில்லை - 8

 


"அடியவர்க்கு எளியவர் அம்பலவாணர் அடி பணிந்தால்,

மடியாமல் செல்வ வரம் பெறலாம், வையம் ஏழ் அளந்த

நெடியோனும் வேதனும் காணாத நித்த, நிமலன்அருள்

குடிகாணும் நாங்கள், அவர்காணும் எங்கள் குலதெய்வமே."


பொழிப்புரை ---  தனது அடியவர்க்கு எளியராய் இருப்பவர் அம்பலவாணர். அவர் திருவடிகளை வணங்கினால், இம்மை நலத்தோடு, இறவாத முத்தி நலத்தையும் பெறுகின்ற வரத்தைப் பெறலாம். உலகம் அளந்த திருமாலும், பிரமனும் கண்டு அறியாத நித்தியப் பொருளாக உள்ளவனும், இயல்பாகவே மலங்கள் அற்றவனும் ஆகிய சிவபெருமானுக்கே நாங்கள் அருட்குடிகள் ஆவோம். அவரே எங்களுக்குத் தெய்வமும் ஆவார்.


விளக்கம் ---  அடியவர்க்கு எளியவர் அம்பலவாணர் என்பது,


"கார்ஆனை ஈர்உரிவைப் போர்வை யானைக்

காமருபூங் கச்சியே கம்பன் தன்னை

ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை

அமரர்களுக்கு அறிவரிய அளவு இலானைப்

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்

பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்

பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே."


என்னும் அப்பர் திருத்தாண்டகத்தாலும்,


"தேவ தேவன்மெய்ச் சேவகன்

தென்பெ ருந்துறை நாயகன்

மூவ ராலும் அறியொ ணாமுத

லாய ஆனந்த மூர்த்தியான்

யாவ ராயினும் அன்ப ரன்றி

அறியொ ணாமலர்ச் சோதியான்

தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்

சென்னி மன்னிச் சுடருமே."


என்னும் மணிவாசகத்தாலும், இன்ன பிற அருட்பாடல்களாலும் தெளிவாகும்.


பெருமான் திருவடியை வணங்கினால், இம்மை நலங்களோடு, வீட்டின்பத்தையும் பெறலாம் என்பது,


"பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்புஎன்று இவையிரண்டும்

உறவினொடும் ஒழியச்சென்று, உலகுஉடைய ஒருமுதலைச்

செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி

மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே."


என்னும் மணிவாசகத்தாலும்,


"இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித் துயர் தீர்த்திடும்

எம்மை ஆளும் இடைமருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே."


என வரும் அப்பர் திருக்குறுந்தொகையாலும், இன்ன பிற பாடல்களாலும் அறியலாம்.


தாமரையாகிய திருவடியைத் தேட வேண்டியது அன்னம்.  சடையாகிய காட்டைத் தேட வேண்டியது பன்றி. அவ்வாறு இல்லாமல், மாறுபட்டு பிரமனும் திருமாலும், அன்னமும் பன்றியுமாக உருவெடுத்துப் பன்றி தாமரையாகிய திருவடியையும், அன்னம் சடையாகிய காட்டையும் தேடிச் சென்று காணமுடியாமல் அலந்தனர்.  ஆனால், அவனுக்கு அன்பு செய்திடும் அன்பர்களுக்கு எளிவந்து காட்சி கொடுப்பதோடு, எல்லா நலங்களையும் அருளுவான் சிவபெருமான்.


திருத் தில்லை - 7

 


"ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றொடுஒன்றை

மூட்டுவிப்பானும், முயங்குவிப்பானும், முயன்றவினை

காட்டுவிப்பானும், இருவினைப் பாசக் கயிற்றின்வழி

ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லைஅம்பலத்தே".


பொழிப்புரை --- உண்ணச் செய்பவனும், உறங்கச் செய்பவனும்,  ஒரு பொருளோடு ஒரு பொருளை இந்த உலகத்தில் மூட்டி விடுவோனும், சேரச் செய்பவனும், நல்வினை தீவினை என்னும் பாசமாகிய கயிற்றின் வழியே அசையச் செய்பவனும் ஆகிய ஒருவன் தில்லை அம்பலத்திலே விளங்குகின்றான்.


விளக்கம் ---  இறைவன் உயிர்களுக்கு உடம்பு, கருவி கரணங்கள், உலகம், உலகப் பொருள்கள் ஆகியவற்றைப் படைத்த பின்னர், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை இயற்றுகின்றான் என்பதை உணர்த்த, "ஊட்டுவிப்பானும், உறங்குவிப்பானும்" என்றார். இறைவன் ஒர் உயிரை இன்னொரு உயிரோடு கூட்டுவதும், பிரிப்பதும் செய்வான் என்பதால், "ஒன்றோடு ஒன்று மூட்டுவிப்பானும்" என்றார். ஆணோடு பெண்ணைச் சேர்ப்பவனும் அவனே யாதலால், "முயங்குவிப்பானும்" என்றார்.  உயிர்களுக்கு இருவினைப் பயனை உண்பிப்பவனும் அவனே என்பதால்,  "முயன்ற வினை காட்டுவிப்பானும்" என்றார். உயிர்களை நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய கயிற்றினால் பிறவியில் சேர்த்து ஆட்டுவிப்பவன் என்பதால், "இருவினைப் பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப்பானும்" என்றார்.


இதனை,


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாட்டு

வான்ஆகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.


என்னும் மணிவாசகத்தால் உணர்க.


திருத் தில்லை - 6

"ஓடும் எடுத்து, அதள் ஆடையும் சுற்றி, உலாவி, மெள்ள

வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி அற்றவர் போல்

ஆடும்அருள் கொண்டு, இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டி தன்னைத்

தேடும் கணக்கு என்ன காண், சிவகாம சவுந்தரியே."


இதன் பொருள் ---


பிச்சைப் பாத்திரமாகிய பிரமனின் மண்டை ஓட்டை எடுத்துக் கொண்டு,  அரையிலே புலித்தோலையும் உடுத்துக் கொண்டு, மான் தோலைத் தோளிலே போட்டுக் கொண்டு, யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு, மெல்லத் திரிந்து, வீடுகள் தோறும் பிச்சையை ஏற்று, விதி அற்றவன் போலும், பித்தனைப் போலும் அம்பலத்திலே ஆடுகின்ற ஆண்டியாகிய பெருமானை, நீ தேடும் காரணம் என்ன, அம்மா சிவாகம சவுந்தரியே.


திருத் தில்லை - 5

 


"ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்,

பாயும் இடபம், கடிக்கும் அரவம், பின்பற்றிச் சென்றால்

பேயும் கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்,

போய் என்செய்வாய் மனமேவ! பிணக்காடு அவர் போம் இடமே."


பொழிப்புரை --- உலகில் நல்லோரால் புகழப் பெறுகின்ற அம்பலவாணனின் திருவடியை அடைய, அவர் அருகில் சென்றால், அவர் ஏறியுள்ள காளையானது பாயும், அவர் அணிந்துள்ள பாம்பானது கடிக்கும்,  பின் தொடர்ந்து போனாலோ, பேய்களும், பூதகணங்களும், பெருந்தலையை உடைய பூதங்களும் பின்தொடர்ந்து வரும். மனமே! அவர் போகும் இடமோ பிணங்களைச் சுடுகின்ற காடு. அங்கே போய் நீ என்ன செய்வாய்.


விளக்கம் -- இப்பாடலின் உட்பொருளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இறைவன் திருவடியை அடைய முற்பட்டால், மெத்தக் கடினம் தான். இருவினைகளானவை சீறும். இருவினைகளுக்கு அஞ்சக் கூடாது. இன்ப துன்பங்கள் நம்மை வருத்தும். போகங்களை விழைந்து, துன்பத்தை வெறுக்கவும் கூடாது. இரண்டையும் சமமாக எண்ணி அனுபவித்துத் தான் ஆகவேண்டும். பேய் மனத்தோடு போராடித்தான் ஆகவேண்டும். உலகில் உள்ள அத்தனை விஷயங்களோடும் போராடித்தான் ஆகவேண்டும். எவ்வளவு துன்பம் வந்தபோதும், திருவடிப் பற்றை விடக்கூடாது என்பது கருத்து.  


பெற்ற தாய்தனை மக மறந்தாலும்,

          பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்,

     உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,

          உயிரை மேவிய உடல் மறந்தாலும்,

     கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,

          கண்கள் நின்றுஇமைப்பது மறந்தாலும்,

     நல் தவத்தவர் உள்இருந்து ஓங்கும்

          நமச்சிவாயத்தை நான் மறவேனே.


வன்மை செய்திடும் வறுமை வந்தாலும்,

          மகிழ்வு செய்பெரு வாழ்வு வந்தாலும்,

     புதுமை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும்,

          பொருந்தினாலும், நின்றாலும், சென்றாலும்,

     தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும்,

          சான்ற மேலவர் தமைஅடைந்தாலும்,

     நன்மை என்பன யாவையும் அளிக்கும்

          நமச்சி வாயத்தை நான்மற வேனே.


இன்னும் பற்பல நாள் இருந்தாலும்,

          இக்கணம் தனிலே இறந்தாலும்,

     துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்,

          சோர்ந்து மாநரகத்து உழன்றாலும்,

     என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்,

          எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்,

     நன்னர் நெஞ்சகம் நாடிநின்று ஓங்கும்

          நமச்சி வாயத்தை நான்மற வேனே.    --- திருவருட்பா.


திருத் தில்லை - 4

 


"முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில்ஒரு

பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு, பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்

அடிசார்ந்து நாம்உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே."


பொழிப்புரை ---  முடிசூடி வாழுகின்ற மன்னர்களும், மற்றும் உள்ளவர்களும், தமது வாழ்நாள் முடிவில் ஒரு பிடி சாம்பலாக வெந்து மண்ணோடு மண்ணாகப் போவதைக் கண்டிருந்தும், இந்த உலகில் வாழும் நிலையற்ற வாழ்வையே எண்ணுவது அல்லாமல், இதை ஒழித்து, பொன்னம்பலவாணனிள் திருவடியைச் சரணாக அடைந்து, பிறப்பு இறப்புக்களில் இருந்து பிழைத்து உய்யவேண்டும் என்று உணர்பவர்கள் ஒருவரும் இல்லை.


விளக்கம் ---  பகை அரசர்களை வென்று, அவர்களது நாடு செல்வம் முதலியவற்றைக் கவர்ந்து, புலவர்களும், பாணர்களும், வந்து தம்மைப் புகழ்ந்து பாடுகையில், அவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்து, சுற்றத்தோடு செல்வச் செழிப்பில் வாழ்ந்த முடிமன்னர் முதலியோரும் கூட,  அத்தகு செழிப்பான வாழ்வின் மூலம், தமது பிறப்பை ஒழித்துக் கொள்ள முடியாது, வாழ்நாள் முடிந்த போது, இந்த உடம்பை விட்டு உயிர் போன, அவர்கள் போற்றிக் காத்த அந்த உடம்பானது தீயில் வெந்து ஒரு பிடி சாம்பலாகிப் போவதையும், மண்ணிலே புதைக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாகிச் சிதைந்து போவதையும், அறிந்து வைத்து இருந்தும், இந்தப் போக்கு வரவினை ஒழித்து, நிலையான பேரின்பத்தை அடையும் வழியை ஆராயாது இருக்கின்றார்கள். அதற்கு ஒரே வழி அம்பலவாணர் திருவடிக் கமலத்தை அன்போடு வழிபடுவதுதான் என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். இந்த நிலையை எண்ணி அடிகள் பாடியருளியது இத் திருப்பாட்டு.


திருத்தில்லை - 3

 


"கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரம் கோள்களவு

கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய்

சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே

செல்லாமல், செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை -- சிதம்பரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள இறைவரே! ஓர் உயிரையும் கொல்லாமல் இருக்கவும், கொன்றதன் ஊனைத் தின்னாமல் இருக்கவும், வஞ்சகத்தையும், கோள் சொல்லுதலையும், திருட்டுத் தனத்தையும் கற்காமல் இருக்கவும், வஞ்சகரோடு சேராமல் இருக்கவும், கனவிலும் பொய்களைச் சொல்லாமல் இருக்கவும், துன்பம் விளைவிக்கும் சொற்களைக் கேளாமல் இருக்கவும், மாதர் மயல் அடையாமல் இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.


திருத் தில்லை - 2

 


"பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி

வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து

பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாதவரைச்

சேராமல், செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை ---  திருத்தில்லையின்கண் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி உள்ள பரமாசாரியனே!  தமது பழைய நிலையைக் கருதாது வந்து இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் இருக்கவும், இரப்பவர்கள் மீது குற்றங்களையே எடுத்துக் கூறி வராமல் இருக்கவும், பாவங்கள் என்னை வந்து அடையாமல் இருக்கவும், முன் நின்ற நிலையில் இருந்து மனம் சோர்வுபடாமல் இருக்கவும், உன்னுடைய திருவடிச் சேவையைப் பிரியாமல் இருக்கவும்,  உன்னிடத்து அன்பு வைக்காதவரை நான் அடையாமல் இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.


விளக்கம் --  இரப்பவர்கள் தமது இளிவரவைத் தமக்குச் சொல்லுவதற்கு, முன்பே அவர் குறிப்பு அறிந்து கொடுத்தலும், இன்னொருவரிடம் சென்று அவர் தமது இளிவரவைச் சொல்லாது இருக்கும்படி கொடுத்தலும், நான் இப்போது பொருள் உடையவன் இல்லை என்று சொல்லி, இரப்பவரக்குக் கொடுக்காமல், கரக்கின்ற இழிநிலை வராமல் இருத்தலும், ஈகைக் குணம் உடையவர்க்கு உரிய குணங்களாதலால், பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல் என்றார்.


பிறர்மேல் குற்றும் கூறுவதையே செய்பவருக்கு யாவரும் பகையாகவே ஆவர் என்பதால், பிறர் தீமை சொல்லா நலமாகிய சான்றாண்மை வேண்டும் என்பார், பழுது சொல்லி வாராமல் என்றார். "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்றார் திருவள்ளுவ நாயனார்.  


பிறர் தீமையைச் சொல்வதாலும், புறம் கூறுவதாலும், எல்லாப் பிறவிகளிலும் பாவங்கள் வந்து அணுகும் ஆதலால், அதைத் தவிர்த்து ஒழுகுதல் பொருட்டு, "பாவங்கள் வந்து அணுகாமல்" என்றார்.


வீட்டின்பத்தை அடைய முயலுவோர் செவி முதலாகிய ஐம்பொறிகளுக்குரிய ஓசை முதலாகிய ஐம்புலன்களையும் அவித்தல் வேண்டும். இல்லாவிடில், ஐம்புலன்கள் மனத்தைத் துன்பத்தினாலும், பாவத்தினாலும், தேடப்படும் பொருள்களின் மேல் அல்லாமல், முத்திவழியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் மார்க்கங்களில் செல்ல ஒட்டாமல் செய்யுமாதலால், "மனம் அயர்ந்து பேராமல்" என்றார்.


முத்திப் பேற்றை அடைய வேண்டுமானால், பெருமான் திருவடியில் அன்பு மிக்கு, அகம் குழைந்து, மெய் அரும்பி, கையினால் தொழுதல் வேண்டும். அந் நெறியில் சிறிதும் வழுவாமல் வழிபாடு இயற்றிட வேண்டும் என்பார், "சேவை பிரியாமல்" என்றார்.  


அதற்கு உபாயமாக உள்ளது அடியவர் திருக்கூட்டத்தினைச் சார்ந்து இருத்தலே ஆகும். அல்லாதாரோடு சேர்ந்து இருந்தால் அல்லாதவை எல்லாம் வந்து சேரும். அல்லாத கூட்டமானது, ஒருவனை இருளிலே உய்த்து விடும். எனவே, நல்லோர் கூட்டத்தை அடைதல் வேண்டும் என்பார், "அன்பு பெறாதவரைச் சேராமல்" என்றார்.


எல்லாவற்றுக்கும் மேலாகிய இறைவன் திருவடிச் செல்வம், மற்ற உலகியல் நலங்கள் எல்லாம் இயல்பாகவே வாய்க்கும் என்பதால்,  "செல்வம் தருவாய்" என்றார். செல்வம் என்பது அருட்செல்வத்தையே குறிக்கும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்னும் திருக்குறளை நோக்குக.  


திருவடிச் செல்வமானது, இம்மை மறுமை நலன்களைத் தரும் செல்வம் போல் அல்லாமல்,  நிரதிசயானந்தத்தைத் தரும். ஆகையால், அதனையே தரவேண்டும் என்று வேண்டினார். நிரதிசயானந்த இன்பம் வாய்க்குமானால், இம்மை மறுமை இன்பங்கள் கசக்கும்.


திருத் தில்லை - 1

 


"ஓடாமல், பாழுக்கு உழையாமல், ஓரம் உரைப்பவர் பால்

கூடாமல், நல்லவர் கூட்டம் விடாமல், வெங்கோபம் நெஞ்சில்

நாடாமல், நன்மை வழுவாமல், இன்றைக்கு நாளைக்கும் என்று

தேடாமல் செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை --- திருத்தில்லையின் கண் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி உள்ள பரமாசாரியனே, ஒவ்வொரு விடயமாக ஓடாது இருக்கவும், வீணுக்கு உழைக்காது இருக்கவும், பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று தரத்திலும் பட்ச பாதமாய்ப் போசுவோரிடத்துச் சேராது இருக்கவும், நல்லவர்களின் கூட்டத்தை விட்டு நீங்காமல் இருக்கவும், என் மனத்தில் கொடிய சினமானது எழாது இருக்கவும், நன்மை தருவன எவற்றையும் நீங்காது இருக்கவும், இன்றைக்கு வேண்டும், நாளைக்கு வேம்டும் என்று பொருள் முதலியவற்றைத் தேடாது இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.  


விளக்கம் --- மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை என்றும், மற்றும் இத் தன்மையான விஷயங்களைச் சொல்லும் மயக்கநூல் வழக்குகளையே மெய்ந்நூல் எனத் துணிந்து, அக் கொள்கைகளை உடையவரிடத்து செல்லாது இருக்க வேண்டும் என்பார், "ஓடாமல்" என்றார்.


காமம், வெகுளி, மயக்கும் என்னும் முக்குற்றங்களையும் கடிந்து, இயமம், நியமம், இருப்பு, உயிர்நிலை, மனவொழுக்கம், தாரணை, தியானம், சமாதி என்று சொல்லப்படும் எண் பகுதியாகிய யோக நெறிகளில் எப்போதும் உழைத்து உயிருக்குரிய ஊதியத்தைப் பெறவேண்டுமேயல்லாது, பிற விஷயங்களில் உழைக்கக் கூடாது என்பார்,  "பாழுக்கு உழையாமல்" என்றார். "பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழ மாட்டேன், மாயமும் தெளியகில்லேன்" என்பார் அப்பர் பெருமான்.


விருப்பு, வெறுப்பு காரணமாக ஒருதலையாகப் பேசுதல் விடுத்து, சொல்ல நினைப்பவைகளைத் தீமை பயக்காதவையாகச் சொல்லுவதால் தனக்கும் கேடு இல்லை, பிறருக்கும் கேடு இல்லை.  அவ்வாறு இல்லாதவரால் கேடு விளையும் என்பதால், "ஓரம் உரைப்பவர் பால் கூடாமல்" என்றார்.  ஓரம் பேசுதல் தீயது என்பதை, "வேதாளம் சேருமே, வெள்எருக்குப் பூக்குமே, பாதாள மூலி படருமே, மூதேவி சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே, மன்று ஓரம் சொன்னார் மனை" என்னும் ஔவைப் பிராட்டியாரின் அருள் வாக்கு தெளிவிக்கும்.


நல்லவர்களைச் சேர்ந்து இருந்தால் நல்ல குணங்களை உடையவராவர். தீய குணங்கள் உடையவரைச் சேர்ந்து இருந்தால், தீய குணங்களே மிகும் என்பதால், "நல்லவர் கூட்டம் விடாமல்" என்றார்.


நெருப்பானது தான் சேர்ந்து இடத்தை மட்டுமே சுடும். ஆனால், சினம் என்னும் நெருப்போ, தான் சேரந்தவரை மட்டுமன்றி, சுற்றத்தையும் சுடும் ஆதலால், "நெஞ்சில் வெம் கோபம் நாடாமல்" என்றார். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்" என்பது திருக்குறள்.  


இன்பத்தின் காரணமாகச் செய்யும் தீவினைகள், முடிவில் துன்பத்தையே தருபவை ஆதலால், அதனை ஒழித்து,  ஒருவருக்கு நன்மையைச் செய்தால், அந்த நன்மையை எழுபிறப்பும் நினைத்துப் பார்ப்பர். எனவே, "நன்மை வழுவாமல்" என்றார்.


அவரவர் ஈட்டிய இருவினைக்கு ஈடாக, எப்போது என்ன என்று எழுதி வைக்கப்பட்டு விட்டது.  அதைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. தேடவேண்டியது இறையருளையே. அதனால், "இன்றைக்கு நாளைக்கு என்று தேடாமல்" என்றார்.


எல்லாவற்றுக்கும் மேலாகிய இறைவன் திருவடிச் செல்வம், மற்ற உலகியல் நலங்கள் எல்லாம் இயல்பாகவே வாய்க்கும் என்பதால்,  "செல்வம் தருவாய்" என்றார்.  செல்வம் என்பது அருட்செல்வத்தையே குறிக்கும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்னும் திருக்குறளை நோக்குக.


திரு ஏகம்ப மாலை - 29

 



"கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம், பின்பு கொன்று கொன்று

தின்றேன், அது அன்றியும் தீங்கு செய்தேன், அது தீர்க்க என்றே

நின்றேன் நின் சந்நிதிக்கே, அதனால் குற்றம் நீ பொறுப்பாய்

என்றே உனை நம்பினென், இறைவா, கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  அநேகமான உயிர்களை எல்லாம் நான் கொன்றேன்.  பிறகு, கொலைசெய்து, கொலைசெய்து உண்டேன். அது அல்லாமலும் மற்றும் பல தீமைகளையும் செய்தேன். அவைகள் தீரவேண்டும் என்று பெருமானின் சந்நிதியில் நின்றேன். ஆதலால், எனது குற்றங்களை எல்லாம் தேவரீர் பொறுத்து அருளுவீர் என்றே நம்பி இருக்கின்றேன்.


விளக்கம் --  உயிர்க்கு உறுதி பயக்கும் செயல்களைச் செய்யாமல் தீத் தொழில்களையே செய்தேன் என்பார், "கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம்" என்றார். "கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர் உண்ணும் கூற்று" என்பதையும் அறவே மறந்தேன். "கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே" என்றார் அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளல்பெருமான். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்றார் தாயுமானார்.


"தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிதின் ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" என்றார் திருவள்ளுவ நாயனார். இத்தனை பெரியோர்கள் சொன்ன அருள்மொழிகள் அனைத்தையும் மறந்து,  கொன்றதோடு மட்டும் அல்லாமல், கொன்றவற்றை எல்லாம், எனது ஊன் உடம்பு கொழுப்பதற்குத் தின்றேன் என்பார், "பின்பு கொன்று கொன்று தின்றேன்" என்றார்.


பதினோராம் திருமுறையில் திருக்கழுமல மும்மணிக்கோவை என்னும் நூலில் பின்வருவாறு அடிகளார் பாடியுள்ளதை நோக்குக...


"அகில லோகமும், அனந்த யோனியும்,

நிகிலமும் தோன்ற, நீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து

யாரும், யாவையும், எனக்குத் தனித்தனித்

தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்

வந்து இலாதவர் இல்லை, யான் அவர்

தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்

வந்து இராததும் இல்லை, முந்து

பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்

இறவா நிலனும் இல்லை, பிறிதில்

என்னைத் தின்னா உயிர்களும் இல்லை,

யான் அவை தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,

அனைத்தே காலமும் சென்றது..."



கோயில் திருஅகவல் என்னும் பாடலில் பின்வருமாறு பாடியுள்ளார் அடிகளார்.....


"பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்,

கொன்றனை அனைத்தும், அனைத்தும் நினைக் கொன்றன,

தின்றனை அனைத்தும், அனைத்தும் நினைத் தின்றன,......"


திரு ஏகம்ப மாலை - 28

"கடும்சொலின் வம்பரை, ஈனரை, குண்டரை, காமுகரை,

கொடும்பவமே செயும் நிர்மூடர் தம்மை, குவலயத்துள்

நெடும்பனை போல வளர்ந்து, நல்லோர் தம் நெறி அறியா

இடும்பரை ஏன் வகுத்தாய், இறைவா, கச்சி ஏகம்பனே."

பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! எந்த நேரமும் கடுமையான சொற்களைப் பேசும் வீணர்களையும், ஒழுக்கம் இல்லாத இழிகுணம் உடையவர்களையும், புறணி பேசுகின்றவர்களையும், காமுகரையும், கொடிய பாவத்தையே செய்கின்ற முழுமூடர்களையும்,   பூமியிலே நீண்ட பனைமரம் போல உருவத்தால் மாத்திரம் வளர்ந்து இருந்து, நல்லவர்கள் சொல்லும் நெறியினை அறியாத ஆணவம் பிடித்தவர்களை, யாது காரணம் பற்றிப் படைத்தாய்?

விளக்கம் --- குண்டர் - சோர புத்திரர். இனிமையும் நன்மையும் பயவாத, பாவத்தையே பயக்கும் கடும் சொற்களை எந்நாளும் பேசுபவர்களை, "கடும்சொல் வம்பர்" என்றார். புகழ் தரும் செயல்களை ஒழித்துப், பழிக்கு ஏதுவான செயல்களையே செய்து, ஏதும் கவலை இல்லாமல் வாழ்வோரை "ஈனர்" என்றார். பிறருக்குச் செய் தீவினைகள் தமக்குத் துன்பம் தருவதைச் சற்றும் எண்ணாது, மேன்மேலும் அச் செயல்களையே செய்வதால், "கொடும் பாவமே செய்யும் நிர்மூடர்" என்றார்.


 

திரு ஏகம்ப மாலை - 27


"பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர், பூவைஅன்னாள்

தன்னை நினைந்து வெகுவாய் உருகுவர், தாரணியில்

உன்னை நினைந்துஇங்கு உனைப் பூசியாத உலுத்தர்எல்லாம்

என்னை இருந்து கண்டாய், இறைவா, கச்சி ஏகம்பனே,"


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! பொன் பொருளைச் சேர்க்க எண்ணி, அதனையே மிகுதியாகத் தேடுவார்கள். பூவை போல்பவளாகிய மாதைத் தழுவ எண்ணி மிகுதியாய் மனம் நைவார்கள். பூமியில் பிறந்து உன்னைப் பூசிக்காத உலோபிகள் எல்லோரும், உயிரோடு இருந்து என்ன பயன்?

விளக்கம் --  பூமியில் பிறப்பதன் நோக்கமே பிறப்பை அறுத்துக் கொண்டு, நிலையான பேரின்ப வீட்டை அடைவதாகும். மறுபிறப்பு என்று ஒன்று இருப்பதானாலும் கூட, அந்தப் பிறவியிலே இன்பமாக வாழவேண்டி, இப் பிறப்பிலே நல்வினைகள் ஏதும் புரியாமல், இந்த உடம்பையே பெரிதாக மதித்து, பொருளால் தான் எல்லாம் ஆகும் என்று மதிமயங்கி, பொன்னையும், அதற்கான பொருளையும் தேடுவதிலேயே வாழ்நாளில் மிகுதியாக முயலுவார்கள்.  இதனால், மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு வருகின்றது. பிறந்தாலும் விரும்புகின்ற முழு இன்பமானது கிடைப்பதில்லை. காரணம், இம்மை இன்பம் கருதிக் கூட நல்வினைகளைச் செய்வதில்லை.  


"பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு"


என்றார் திருவள்ளுவ நாயனார்.  நிலையில்லாத பொருள்களை நிலைத்த பொருளாகக் கருதும் மயக்க உணர்வுகளைத் தருகின்ற வினைகளால் சிறப்பு இல்லாத பிறப்பு உண்டாகும்.  

தோன்றிய அனைத்துமே நிலையில்லாதவை. சிறிது காலம் நின்று அழிபவை. உடம்பு நிலையில்லாதது. இளமை நிலையில்லாதது. செல்வம் நிலையில்லாதது.  உலகப் பொருள்கள் அனைத்தும் நிலையில்லாதவை.  நிலையில்லாத உடம்பை ஓம்ப, நிலையில்லாத பொருளைத் தேடி, தானே துய்ப்போம் என்று வைத்து இருந்து, தானும் முழுதாகத் துய்க்காமல், பிறருக்கும் பயன்படாமல், வாழ்ந்து, உடம்பையும், வாழ்நாளையும், செல்வத்தையும் வறிதாக்கி வாழும் நிலை கூடாது.


"பொருளான் ஆம்எல்லாம் என்று, ஈயாது இவறும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு"


என்றும் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.  கைப்பொருள் ஒன்றால்தான் எல்லாம் ஆகும் என்று, வறியவர்க்குப் பொருளை ஈயாமல், கை இறுக்கம் செய்யும் மயக்கத்தால், இழிந்த பிறப்பே உண்டாகும்.

ஆக, பொன் பொருளைத் தேடுவதிலேயே கருத்து கூடாது. உடல் இன்பத்தையே நிக விரும்பி, அதிலே மனம் மயங்குவதும் கூடாது.

நம்மை இந்த உலகத்தில் படைத்து, நமக்காக உலகப் பொருள்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அருளுகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி, தேடிய பொருளைக் கொண்டு புண்ணியச் செயல்களைச் செய்து வாழாதவர்கள் நரகமே அடைவர். பொருளைத் தேடி எண்ணி மிகுதியாய்த் தேடுவார்களும், பெண்களைத் தழுவ எண்ணி மிகுதியாய் மனம் நைவார்களும் ஆகி, பூமியில் இறைவனை எண்ணி வணங்காதவர்கள்,  உலுத்தர்கள், யாருக்கும் உதவாதவர்கள்.  இவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன் என்றார்.


பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....