054. பொச்சாவாமை - 02. பொச்சாப்புக் கொல்லும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அறிவினை நித்திய வறுமை கெடுப்பது போல, ஒருவருடைய பெருமைக்கு உரிய புகழை அவரிடம் உள்ள மறதியானது கொன்றுவிடும்" என்கின்றார் நாயனார்.

நாள்தோறும் பிச்சை எடுப்பதால் வருத்தம் அடைந்து, தனது வயிற்றினை நிறைத்து வருகின்ற ஒருவன், அறிவு உடையவனாக இருந்தாலும், அவன் பிச்சை எடுக்கின்ற காரணம் பற்றி, இழித்துக் கூறப்படுகின்றான். எனவே, அவனுடைய மதிப்பினை அவன் இழக்க நேர்கின்றது. அதுபோல், ஒருவனுடைய மறப்பு அல்லது சோர்வும், அவன் புகழை அடையக் கூடியவனாய் இருந்தாலும், அவன் தன்னை மறதி அல்லது சோர்வில் இருந்து காத்துக் கொள்ளாததால் உண்டாகும் காரியக் கேட்டால், அவனுக்கு இழிவை உண்டாக்கி, அவனுக்கு உள்ள நன்மதிப்பையும் கெடுக்கும்.


இதற்குத் திருக்குறள்....

“பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை

நிச்ச நிரப்புக் கொன்று ஆங்கு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

புகழைப் பொச்சாப்புக் கொல்லும் --- ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், 

அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு --- அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.

(நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

“இப்புவிமேல் கோயில் இறந்தது அயனார் மறந்து

செப்புதலால் அன்றோ, சிவசிவா! --- எப்பொழுதும்

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்சல் நிரப்புக்கொன் றாங்கு.”

அயன் --- நான்முகன். அவனுக்கு உலகத்தில் கோயில் இல்லை. அவன் செருக்கால் தன்னை மறந்து சிவனுக்குப் பெருமையை மறுத்தல்.

ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். அது முற்றிப் போரில் முடிந்தது. இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் அனற்பிழம்பாய் காட்சி அளித்தது. ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்’என்று கூறி போர்புரிந்த பிரமனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள்  இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச்சோதிப் பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

“பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,

அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.”   --- திருவாசகம்.

திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரமனோ அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காண முடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் அத்தீப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே"   --- திருமந்திரம்.

அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம் அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்து, பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், திருமால் பிரமன் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார். 

திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள்.

(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலையினை வீசி, அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7) பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

பிரமன் தனது அறிவுச் செருக்கால், புகழினை இழந்தான் என்பது அறியப்படும்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"உறுதியுள் வள்ளுவர் ஓதல் பொச்சாப்புக் கொல்லும் புகழை 

அறிவினை நிச்ச நிரப்புக் கொன்று ஆங்கு எனலால், உனது

நறுமலர்ப் பாதத்தை நான்மறந்தால் புகழ் நன்மை இனிப்

பெறுவதற்கு ஓர்செயல் காணேன் புல்லாணிப் பெருந்தகையே".

இதன் பொருள் ---

"அறிவினை நித்திய வறுமையால் கெடுப்பது போல, ஒருவருடைய பெருமைக்கு உரிய புகழை அவரிடம் உள்ள மறதியானது கொன்றுவிடும்" என்று உயிர்களுக்கு உறுதி பயக்கும் சொல்லாகத் திருவள்ளுவர் அருளி இருப்பதால், திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் கோயில் கொண்டு இருக்கும் பெருமாளே! உனது தாமரை மலர் போன்ற திருவடிகளை நான் மறப்பேனானால், புகழையும், நன்மையையும் அடைவதற்கு வேறு ஒரு செயலையும் நான் அறியமாட்டேன்.

உறுதியுள் - உறுதிச் சொல்லான திருக்குறளுள். நறு மலர்ப்பாதம் - நறிய மலர் போன்ற திருவடி. செயல் - செய்கை. பெருந்தகை - பெரிய தன்மைகளை உடையவன்.


054. பொச்சாவாமை - 01. இறந்த வெகுளியின்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


அதாவது, தொழிலில் மறதி கொள்ளாமல் இருத்தல். அழகு, செல்வம், ஆற்றல் முதலியவற்றால் மகிழ்ந்து தன்னைக் காத்துக் கொள்ளுதலிலும், மாற்றாரை ஆழித்தல் முதலிய காரியங்களிலும் மறதி கொள்ளாமல் இருத்தலைக் குறித்தது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "மிக்க இன்பக் களிப்பால் உண்டாகும் மறதியானது, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் தீமையானது" என்கின்றார் நாயனார்.

அதாவது பகைவரை வெல்வதற்கும், கொடியவரைத் தண்டிப்பதற்கும் வேண்டுவதாகிய அளவான கோபம், அளவு கடந்து போகுமானால் எத்தகைய தீமையை அது விளைக்குமோ, அத்தகைய தீமை ஒருவனுக்குத் தன்னிடத்து உள்ள பெருஞ்செல்வம், அழகு, ஆற்றல் முதலியவற்றால் ஆன அளவிறந்த மகிழ்ச்சியானல் உண்டாகும் மறதி அல்லது சோர்வினால் உண்டாகும்.


இதற்குத் திருக்குறள்.....


“இறந்த வெகுளியின் தீதே, சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---


சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு --- மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, 

இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.

(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்,  இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை அறியலாம்...


“வெகுளியே உயிர்க்கு எல்லாம் விளைக்கும் தீவினை,

வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால்,

வெகுளியே அறிவினைச் சிதைக்கும், வெம்மைசால்

வெகுளியில் கொடும்பகை வேறொன்று இல்லையால். --- காஞ்சிப் புராணம்.


இதன் பொருள் ---

கோபமே உயிர்களுக்கெல்லாம் பாபமாகிய பைங்கூழை விளைவிக்கும்  வித்தாம். மேலும், கோபமே நற்குணம், தவம், நோன்பு முதலிய புண்ணியச் செயல்களை அழிக்கும் கருவியாம்; கோபமே அறிவினை அழிக்கும் மயக்கப் பொருளாம். கொடுமை மிக்க கோபத்தினும் கொடிய பகை ஒருவற்குப் பிறிதொன்றும் இல்லை. (அதுவே என்க)


“சில்சொல் பெருந்தோள் மகளிரும், பல்வகையுந்

தாளினால் தந்த விழுநிதியும், --- நாடோறும்

நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும், இம்மூன்றும்

காப்பு இகழல் ஆகாப்பொருள். ---  திரிகடுகம்.


இதன் பொருள் ---


சில்சொல் பெருந்தோள் மகளிரும் - மெல்லிய சொல்லையும், பெரிய தோள்களையுமுடைய, பெண்டிரும்; பல்வகையும் தாளினால் தந்த விழுநிதியும் - பலவகையாலும் தமது முயற்சியினால் தேடிய சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் - எப்பொழுதும் நாக்கில் நீர் அருந்தும்படி சமைத்த உணவும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், காப்பு இகழல் ஆகாப் பொருள் - காத்தலைத் தாழ்த்திக் கூறுதலாகாத பொருள்களாம்.


பெண்டிரும், பொருளும், உண்டியும் காப்பாற்ற வேண்டி முறையில் காப்பாற்றப்படாமற் போனால் கெட்டுப்போம் என்றபடி.


054. பொச்சாவாமை - 02. பொச்சாப்புக் கொல்லும்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அறிவினை நித்திய வறுமை கெ...