Showing posts with label உலகநீதி. Show all posts
Showing posts with label உலகநீதி. Show all posts

உலகநீதி - 12

 


"கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்;

    கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்;

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்;

    துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்;

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்;

    வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்;

மாறான குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


இதன் பொருள் ---

ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவு படுத்தி, கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே.

பூ தேடி - பூவைத் தேடி, கொண்டை மேல்- கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே.

தூறு ஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை உண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக் கொண்டு, திரியவேண்டாம் - அலையாதே.

துர்ச்சனாய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.

வீறு ஆன - பெருமை மிக்க, தெய்வத்தை - தெய்வத்தை இகழவேண்டாம் - இகழாதே.

வெற்றி உள்ள - மேன்மை உடைய, பெரியோரை - பெரியோர்களை, வெறுக்க வேண்டாம் - வெறுக்காதே.

மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமை உடையராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே-மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


விளக்கம் ---

ஒரு குடியில் ஒற்றுமையுடன் வாழ்பவர்களைப் பிரிவு செய்தல் கூடாது. (கூறு - பிளவு; பிரிவு.)  பிறர் காணும்படி கொண்டை மேல் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர் போலத் திரிவது ஆகாது என்று சொல்லப்பட்டது. முன் இருந்து பார்த்தால் தலையில் சூடி உள்ள பூ தெரியாத வகையில் பூச்சூடிக் கொள்ள வேண்டும். மலரைக்  கண்டால் இறைவனுக்குச் சாத்த வேண்டும். பிறர்மேல் பழிச்சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது. (தலையிடல் - தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; பொறுப்பேற்றல்.) தீய தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது. துர்ச்சனர் - துட்டர், தீயோர். "தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே; தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு இணங்கி இருப்பதுவும் தீது." என்னும் ஔவையார் அருள்மொழியைக் கருத்தில் கொள்க.  பெருமையுள்ள தெய்வத்தை இகழ்ந்து உரைத்தல் கூடாது. "தெய்வம் இகழேல்" என்பது ஔவையிர் அருள்மொழி. கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பெரியோரை வெறுத்தல் கூடாது. "பெரியாரைத் துணைக் கோடல்" எனவும், "பெரியாரைப் பிழையாமை" எனவும் திருவள்ளுவ நாயனார் வகுத்துள்ள திருக்குறள் அதிகாரங்களைக் காண்க.


உலகநீதி - 11

 

 "அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்;

    அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்,

தஞ்சமுடன் வண்ணான், நாவிதன்றன் கூலி,

    சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி,

வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி,

    மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி,

இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை

    ஏதேது செய்வானோ ஏமன் றானே."


பதவுரை ---

அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை ; கைக்கொள்ள வேண்டாம் - கொடுக்காமல் வைத்த இருக்க வேண்டாம் (கொடுத்து விடவேண்டும்), அது - அக் கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ கேளாய் - நீ கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும், ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த, மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவு தனை (நீக்குவதற்கு அரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி - வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன்- அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை , ஏமன் - இயமன், ஏது ஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ- செய்வானோ, (நான் அறியேன்).

விளக்கம் --

வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் எமனால் துன்புறுத்தப்படுவார்கள்.


உலகநீதி - 10

 



"மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம்;

    வாதாடி, வழக்கழிவு சொல்ல வேண்டாம்;

திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்;

    தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்;

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்;

    ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்;

குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

    குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே!"


இதன் பொருள் ---

மறம் பேசி- வீரமொழி கூறி,  திரிவாரோடு (போருக்கு) அலைபவருடன், இணங்க வேண்டாம் - நட்புக் கொள்ளாதே.

வாதாடி - வாதுகூறி, அழிவு வழக்கு - கெடு வழக்கு, சொல்ல வேண்டாம் - கூறாதே.

திறம் பேசி - வலிமை கூறி, கலகம் இட்டு - கலகம் செய்து, திரிய வேண்டாம் - அலையாதே.

தெய்வத்தை - கடவுளை, ஒரு நாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.

இறந்தாலும் - இறக்க நேரிடுமாயினும், பொய் தன்னை - பொய்யை, சொல்ல வேண்டாம்- சொல்லாதே.

ஏசல் இட்ட - இகழ்ச்சி செய்த, உற்றாரை - உறவினரை, நத்த வேண்டாம் - விரும்பாதே.

குறம்பேசி - குறி சொல்லி, வாழ்கின்ற - வாழும், வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - முருகவேளின், நாமத்தை - பெயர்களை, நெஞ்சே - மனமே, கூறாய் - சொல்லித் துதிப்பாயாக.


பொழிப்புரை---

வீரவாதம் பேசித் திரிவாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. மறம் பேசல் - தம் வீரத்தைத் தாமே புகழ்ந்து பேசுதல். திரிவார் - வீணே அலைகின்றவர். மறம் என்ற சொல்லுக்குப் பாவம் என்று ஒரு பொருளும் உண்டு. மறம் பேசி என்பதற்குக் கொலை, திருட்டு, கள்ளுண்ணுதல், குருநிந்தை மற்றும் முறையற்ற காமம்.  முதலிய கொடிய காரியங்களைப் பேசி என்றும் பொருள் கொள்ளலாம்.

வழக்கு அழிவு என்பதை அழிவு வழக்கு என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் சென்று அழி வழக்குப் பேசுதல் கூடாது. அழி வழக்கு - வழக்கல்லாத வழக்கு ; பொய் வழக்கு.

வல்லமை பேசிக் கலகஞ் செய்தல் கூடாது. திறம் பேசல் - தன் வலிமை முதலியவற்றைத் தானே புகழ்ந்து பேசுதல். கலகம் - சிறு சண்டை. "வல்லமை பேசேல்" என்பது ஆத்திசூடி.

கடவுளை எப்பொழுதும் மறத்தல் கூடாது. சிந்தித்து வணங்க வேண்டும். ஒருநாளும் என்றது இன்பத்திலும், துன்பத்திலும் என்றபடி.

உயிர் நீங்க நேர்ந்த இடத்தும் பொய் கூறுதல் கூடாது. ("பொய்யாமை பொய்யாமை அற்றின், அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று" என்னும் திருக்குறள்ள் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.) உயிரைக் கொடுத்தாயினும் உண்மையை நிலைநாட்டுதல் வேண்டும் என்பது கருத்து.

மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பிச் சேர்தல் கூடாது, நத்தல் - விரும்பல்.

குறமகளிர் சொல்லும் குறியைக் குறம் என்பர். குறி - சோதிடம்; ஒருவர் மனத்து நினைத்ததைக் குறித்துக் கூறல். வள்ளி அம்மையார் குறி சொல்லவில்லை. தினைப்புனத்தைக் காத்துக் கொண்டு இருந்தார். குறப் பெண்டிர் செய்கை வள்ளிக்கு ஏற்றிச் சொல்லப்பட்டது.


உலகநீதி - 9

 



"மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்

    மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்

கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்

    காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்

புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்

    புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம்

மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


இதன் பொருள் ---

மண்ணில் நின்று - நிலத்தில் நின்று, மண் - மண்ணைப் பற்றி, ஓரம் - ஒருதலைச் சார்பாக, சொல்ல வேண்டாம் - பேசாதே.

மனம் - உள்ளம், சலித்து - இளைத்து, சிலுகிட்டு - (யார் மாட்டும்) சண்டையிட்டு, திரிய வேண்டாம் - அலையாதே.

கண் - அருளை, அழிவு செய்து- அழித்து, துயர் காட்ட வேண்டாம் - (பிற உயிர்கட்குத்) துன்பஞ் செய்யாதே.

காணாத - காணாதவற்றைப் பற்றி, கட்டு வார்த்தையை - கட்டு வார்த்தைகளை, உரைக்க வேண்டாம் - சொல்லாதே.

புண்பட - (கேட்போர் மனம்) புண்படுமாறு, வார்த்தைதனை - சொற்களை, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.

புறம் சொல்லி - புறங்கூறி, திரிவாரோடு - அலைபவருடன், இணங்க வேண்டாம் - சேராதே. 

மண் அளந்தான் - நிலத்தை (மூவடியால்) அளந்த திருமாலுக்கு, தங்கை - தங்கையாகிய, உமை - உமாதேவிக்கு ; மைந்தன்-மகனும், எம்கோன் - எமக்குத் தலைவனும் ஆகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


விளக்கம் ---

நிலத்தின்மீது நின்று நிலத்தைப் பற்றிய வழக்கில் ஓரஞ் சொல்லுதல் கூடாது. "ஓரஞ் சொல்லேல்" என்பது ஆத்திசூடி. ஓரம்- நடுநிலையின்மை, பட்சபாதம். மனத் திட்பம் இல்லாது கோபத்தால் யாருடனும் சண்டையிடுதல் கூடாது. அருளின்றிப் பிற உயிர்களை வருத்துதல் கூடாது. கண், கண்ணோட்டத்திற்கு ஆகுபெயர். ஈண்டு அருளைக் குறித்து நின்றது. இனி, கண்ணீர் ஒழுகுமாறு தனக்குள்ள துயரைப் பிறரிடத்துப் புலப்படுத்தல் வேண்டா என்பதும் ஆம். கண்ணழிவு என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு தடுத்து என்றும், பிரித்து என்றும் பொருள் சொல்லுதலும் உண்டு. பிறர் செய்யும் நல்ல காரியத்தைத் தடுத்து, என்றும் சேர்ந்திருப்போரைப் பிரித்து என்றும் கொள்ளவேண்டும். காணாதவற்றைக் கண்டதுபோல வைத்துப் பொய் கூறல் கூடாது. (கட்டு வார்த்தையை என மாற்றப்பட்டது. கட்டுவார்த்தை - கற்பனை வார்த்தை.) வார்த்தை என்பதற்குச் செய்தி என்று பொருள் கூறி, காணாத செய்தியைக் கண்டதுபோல உறுதியாகப் பேச வேண்டாம் என்று உரைத்தலும் உண்டு. (கட்டுரைத்தல்- உறுதியாகப் பேசுதல்.) கேட்போர் மனம் வருந்துமாறு கொடுஞ்சொல் கூறலாகாது. புண்படல் - புண்பட்டாற்போல் வருந்தல். "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க. புறம் கூறுவாருடன் சேர்தல் கூடாது. "போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்" என்று மேலே கூறப்பட்டது.


உலகநீதி - 8

 


"சேராத இடந்தனிலே சேர வேண்டாம்;

    செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்;

ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்;

    உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்;

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்;

    பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்;

வாராருங் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---


சேராத இடந்தனில் - சேரத் தகாத இடங்களில், சேரவேண்டாம் - சேராதே.


செய்தநன்றி - ஒருவன் செய்த உதவியை, ஒருநாளும் - ஒருபொழுதும் மறக்க வேண்டாம் - மறக்காதே.


ஊர் ஓடும் - ஊர்தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் - கோள் சொல்பவனாகி, திரிய வேண்டாம் - அலையாதே.


உற்றாரை - உறவினரிடத்து, உதாசினங்கள் - இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் - சொல்லாதே.


பேர் ஆன - புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை - காரியத்தை, தவிர்க்க வேண்டாம்- (செய்யாது) விலக்க வேண்டாம்.


பிணைபட்டு - (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி - துணையாகச் சென்று, திரியவேண்டாம் - அலையாதே.


வார்ஆரும் - பெருமை நிறைந்த, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை ---


சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது. தகாதவர் - கள்ளுண்போர், தூர்த்தர் (காமுகர்) முதலாயினார். "கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்" என்பது சிலப்பதிகாரம். (கள் குடியர்கள், திருடர்கள், காமுகர்கள், பொய்யர்கள், பயனில்லாதவற்றைப் பேசித் திரியும் கூட்டத்தார் ஆகியோரே ஒழிக்கும் உபாயம் அறிந்து ஒழித்து விடுங்கள்) "சேர் இடம் அறிந்து சேர்" என்றார் ஔவைப் பிராட்டியார். ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது. நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்; "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்பது திருக்குறள். "நன்றி மறவேல்" என்றார் ஒளவைப் பிராட்டியாரும். "செய்ந்நன்றி கொல்லன்மின்" என்பது சிலப்பதிகாரம். ஊர்தோறும் (அங்கங்கே) சென்று புறங்கூறுதல் கூடாது. குண்டுணி - கோள் சொல்வோன், புறம் பேசித் திரிவோன். "புறம் பேசிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல் ஆறம் கூறும் ஆக்கம் தரும்" (ஒருவரைக் காணாத போது இகழ்ந்து பேசி வாழ்வதை விட, செத்துப் போவது அறநூல்களில் சொல்லப்பட்டு உள்ள ஆக்கத்தைத் தரும்) என்கிறார் திருவள்ளுவ நாயனார். "பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலேன்...என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே" என்று பாடினார் அப்பர் பெருமான்.  எனவே, புறம் கேசித் திரிவதை விட, இறந்து போவது நல்லது என்பது தெரிகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்றும் பொருள் கொள்ளலாம். உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது. புகழைத் தருதற்குரிய செயல்களைச் செய்யாதிருத்தல் கூடாது. (பேர், பெயர் - புகழ்.) ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்து கொண்டிருத்தல் கூடாது. கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாக நிற்பது துன்பத்தை யுண்டாக்கும். (பிணை - புணை ; ஈடு - ஜாமீன்.)


உலகநீதி - 7

 


"கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

    கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்

    பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேடவேண்டாம்

    எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்

குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்

    குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!"

பதவுரை --


கருமங்கள் - (செய்யத் தக்க) காரியங்களை, கருதாமல் - (செய்யும் வழியை) எண்ணாமல், முடிக்க வேண்டாம் - முடிக்க முயலாதே.


அழிவு கணக்கை - பொய்க் கணக்கை, ஒருநாளும் - ஒருபொழுதும், பேச வேண்டாம் - பேசாதே.


பொருவார் - போர் செய்வாருடைய, போர்க்களத்தில்- போர் (நடக்கும்) இடத்திலே, போக வேண்டாம் - போகாதே.


பொது நிலத்தில் - பொதுவாகிய இடத்தில், ஒருநாளும் - ஒரு பொழுதும், இருக்க வேண்டாம் - (குடி) இராதே.


இருதாரம் - இரு மனைவியரை, ஒருநாளும் - ஒருபொழுதும், தேடவேண்டாம் - தேடிக் கொள்ளாதே.


எளியாரை - ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் - பகைத்துக் கொள்ளாதே.


குருகு - பறவைகள், ஆரும் - நிறைந்த, புனம் - தினைப்புனத்தை, காக்கும் - காத்த, ஏழை - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - குமரவேளின், பாதத்தை - திருவடியை, நெஞ்சே - மனமே, கூறாய் - புகழ்வாய்.


பொழிப்புரை --


செய்யப்படும் காரியங்களை முடிக்கும் வழியை ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தை அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராயாமல் செய்தல் கூடாது என்பதும் ஆகும். "எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்னும் திருக்குறளை இங்கு வைத்து எண்ணுக.


பொய்க்கணக்குக் கூறுதல் கூடாது. பொய்யானது நிலைபெறாது. எனவே, அது "அழிவு" என்று சொல்லப்பட்டது.


பிறர் போர் (சண்டை) செய்யும் இடத்தில் குறுக்கே செல்லலாகாது. வீணாகப் போரிலே (சண்டையிலே) கலந்து கொள்ளவும் கூடாது.


பலர்க்கும் உரிய பொது நிலத்தில் குடியிருத்தல் கூடாது.


பொது நிலம் - மந்தை, சாவடி முதலியன. பொது இடத்தில் பலரும் வருவார்கள். ஆகையால் அங்கே குடியிருப்பின் துன்பம் உண்டாகும் என்க. (இக் காலத்தில் பொது இடத்தைத் தனக்கு உரியதாக்கிக் கொள்வோரையே பெரிய மனிதர் என்று கருதுமாறு ஆகிவிட்டது. கலியின் கொடுமை)


இரண்டு மனைவியரை மணந்து கொள்ளல் கூடாது. இரு மனைவியரைக் கொண்டால் பெரும்பாலும் அவர்களுக்குள் போராட்டம் உண்டாகும். ஆதலின் தனக்குத் துன்பமேயன்றி இன்பம் இராது. தாரம் - மனைவி.


ஏழைகளிடத்துப் பகைத்தல் கூடாது. எளியார்- இடம் பொருள் ஏவல் இல்லார், எதிர் - பகை. மறுமையில் நரகத்திற்கு ஏது ஆகும். எனவே, "எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்" என்றார்.


"வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னின்

மெலியார் மேல் செல்லும் இடத்து"

 

என்னும் திருக்குறள் கருத்து இங்கு வைத்து எண்ணத் தக்கது.


"முடவனை மூர்க்கன் கொன்றால், 

மூர்க்கனை முனிதான் கொல்லும்;

மடவனை வலியான் கொன்றால், 

மறலிதான் அவனைக் கொல்லும்;

தடவரை முலைமாதே! இத் 

தரணியில் செருக்கினாலே,

மடவனை அடித்த கோலும் 

வலியனை அடிக்கும் கண்டாய்."     -- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் --- 

தடவரை முலைமாதே - விசாலமாகிய மலை போன்ற முலைகளை உடைய அழகிய பெண்ணே! இத் தரணியில் - இந்த உலகத்தில், முடவனை மூர்க்கன் கொன்றால் - கைகள் கால்கள் முதலியன முடங்கிச் செயல்பாடு இழந்த ஒருவனை முரடன் ஒருவன் கொன்றான் ஆனால், மூர்க்கனை முனிதான் கொல்லும் - இந்த முரடனை அவனிலும் வலிமை பொருந்திய ஒருவன் (அல்லது பேய் அல்லது கடவுள்) பின் ஒரு காலத்தில் கொல்லுவான். மடவனை வலியான் கொன்றால் - அறிவு அற்ற ஓர் ஏழையை, வலிமை பொருந்திய ஒருவன் கொன்றான் ஆனால், மறலி தான் அவனைக் கொல்லும் - அவனை எமன் ஒரு காலத்தில் கொல்லுவான். செருக்கினாலே மடவனை அடித்த கோலும் - செல்வச் செருக்கு காரணமாக, ஏழை ஒருவனை வலியவன் ஒருவன் தனது கைக் கொண்டு அடித்த கோல் ஆனது, வலியனை அடிக்கும் கண்டாய் - பின் ஒரு காலத்தில் அவனிலும் வலியவன் ஒருவன் கையில் அந்தக் கோல் வந்து பொருந்தி, முன்னே ஏழையை அடித்த வலியவனை அடிக்கும் என்று உலகின் நிகழ்வைக் கண்கூடாகக் கண்டு கொள்வாய்.


தான் வலியவனே ஆனாலும், தன்னிலும் மெலியவரைத் துன்புறுத்தக் கூடாது. செய்தால், வேறு ஒருவரால் அத் துன்பம் வந்து பின்னர் அடையும். 


உலகநீதி - 6

 



"வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்,

    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்,

மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்,

    முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்,

வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்,

    வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்,

சேர்த்தபுக ழாளன்ஒரு வள்ளி பங்கன்

    திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே!"


பதவுரை ---


வார்த்தை சொல்வார் - (பயனில்லாத சொற்களைக் கூறுவாருடைய, வாய் பார்த்து - வாயைப் பார்த்துக் கொண்டு, திரியவேண்டாம் - அவரோடு கூட அலையாதே.


மதியாதார் - நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் - கடை வாயிலில், மிதிக்க வேண்டாம்- அடியெடுத்து வைக்காதே.


மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும், சொல் வார்த்தைகளை - உன்னை நல்வழிபடுத்தும் முகத்தான் கூறுகின்ற அறிவுரைகளை, மறக்க வேண்டாம் - மறவாமல் கடைப்பிடிக்க வேண்டும்.


முன்கோபக்காரரோடு - முன்கோபம் உடையாருடனே, இணங்க வேண்டாம் - சேராதே.


வாத்தியார் - கல்வி கற்பித்த ஆசிரியருடைய, கூலியை - சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் - கொடுக்காமல் வைத்துக் கொள்ளாதே.


வழி பறித்து - வழிப்பறி செய்து, திரிவாரோடு- திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.


சேர்த்த - ஈட்டிய, புகழாளன் - புகழுடையவனாகிய, ஒரு - ஒப்பற்ற, வள்ளி பங்கன் - வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திருகை - அழகிய கையின்கண், வேலாயுதனை-வேற்படையை உடைய முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, செப்பாய் - புகழ்வாயாக.


பொழிப்புரை ---

வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக்கொண்டு அவர்பின் அலைதல் கூடாது. பயனில்லாத சொற்களைப் பேசுவோரை 'மனிதனில் பதர்' என்னும் முகத்தான், "பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல்" என்று திருவள்ளுவ நாயனார் திருவாய் மலர்ந்து அருளிதை இங்கு வைத்து எண்ணுக. 

உன்னை அவமதிப்புச் செய்தாருடைய வீட்டிற்குச் செல்லுதல் கூடாது. (மிதித்தல் - அடியெடுத்து வைத்தல், சேர்தல்.) "மதியாதார் முற்றம் மதித்து ஒருகால் சென்று மிதியாமை கோடி பெறும்" என்னும் ஔவையின் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக.

பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும். மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான், அரசன் (இக்காலத்தில் மேலதிகாரி) முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும் ஆவர். இவர்கள் நன்னெறிப்படுத்தும் முகத்தானும், தவறு கண்டபோது திருத்தும் முகத்தானும் கூறுகின்ற நல்வார்த்தைகளை மறக்கல் ஆகாது. "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" எனவும், "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன் துவர்க்கும், பின் இனிக்கும்" என்னும் முதுமொழிகளைக் கருத்தில் கொள்ளுக.

மிக்க கோபம் உடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. முன்கோபம் - பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று.

கல்வி கற்பித்த ஆசிரியருக்கு உரிய காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது. உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது.

வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது. வழிப்பறி செய்தல் - வழியில் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக்கொள்ளுதல்.


உலகநீதி - 5

"வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்,

    மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்,

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்,

    வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்,

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்,

    தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,

வாழ்வுஆரும் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---

பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் - அலையாதே.

மனையாளை - மனைவியின் மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்லவேண்டாம் - சொல்லாதே.

வீழாத - விழத் தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே.

வெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பி வாராதே.

தாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன் - குலத்தினருடன், சேர வேண்டாம் - சேரக் கூடாது.

தாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.

வாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி - வள்ளி நாச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே , வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை ---

மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல் - வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம்.

மனைவியைப் பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது. மனைவிக்கு உள்ளது தனக்கும் உள்ளது. மனைவிக்குப் பழி என்றாலும், புகழ் என்றாலும் அது தனக்கும் உரியதே. எனவே, மனைவியைக் குற்றம் சொல்லக்  கேட்ட அயலார் ஒருவேளை பழிக்கக்கூடும் என்பதால், சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம்.

விழத் தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்திற்கு ஏதுவாகிய தீய செய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை உண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது.

போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல்கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர் புரிய வேண்டும். புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம்.

தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியில் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தம் செய்துகொள்ளுதலும்.

உயர்ந்த நிலையில் இருந்து தாழ்வு அடைந்தவர்களைத் தீமையாகப் பேசுதல் கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். "கீழோர் ஆயினும் தாழ உரை" என்பது கொன்றைவேந்தன். கேட்பவர் உனக்குக் கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், உன் சொல் வணக்கம் உடையதாய் இருக்கும்படி அவருடன் பேசு என்பது இதன் பொருள்.


உலகநீதி - 4

"குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்;

    கொலை,களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்;

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்;

    கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்;

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்;

    கோயில்இல்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்;

மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்

    மயில்ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---


குற்றம் ஒன்றும் - (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி - எடுத்துச் சொல்லி, திரிய வேண்டாம் - அலையாதே.


கொலை களவு - கொலையும் திருட்டும், செய்வாரோடு -செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம் - நட்புச்செய்யாதே.


கற்றவரை - (அறிவு நூல்களைக்) கற்றவரை; ஒரு நாளும் - ஒரு பொழுதும், பழிக்கவேண்டாம் - பழிக்காதே.


கற்பு உடைய மங்கையரை - கற்புடைய பெண்களை, கருத வேண்டாம் - சேர்தற்கு நினையாதே.


எதிர் - எதிரேநின்று, கொற்றவனோடு - அரசனோடு, மாறு - மாறான சொற்களை, பேசவேண்டாம் - பேசாதே.


கோயில் இல்லா - கோயில் இல்லாத, ஊரில் - ஊர்களில், குடிஇருக்க வேண்டாம் - குடியிருக்காதே.


மற்று - பிறிதொன்று, நிகர் இல்லாத - ஒப்புச்சொல்ல முடியாத, வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.


பொழிப்புரை --


ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும்.


கொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது  தானே பெறப்படும்.


அறிவு நூல்களைக் கற்று, அதன்வழி ஒழுகும் பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும்.


கற்புடைய மாதர்மேல் விருப்பம் வைத்தல் கூடாது. 'மங்கையர்' என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் கூடாது என்றார்.


அரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு - விரோதம். (இக் காலத்தில் மேல் அதிகாரிகளை என்பதாகவும் கொள்ளலாம்)


கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டை ஒக்கும். "திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும்...... ஊரல்ல, அடவி காடே" என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.


வள்ளிநாயகன் ஆகிய முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து இந்த நூல் பாடப்பட்டது. பிற கடவுளரை வழிபடுவோருக்கும் இந்த உலகநீதி பொருந்தும்.


உலகநீதி - 3

"மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

    மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்

தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

    தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்

    சினத்து இருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


இதன் பதவுரை ---


மனம் - உள்ளமானது, போனபோக்கு எல்லாம் - சென்றவாறெல்லாம், போக வேண்டாம் - செல்லாதே.


மாற்றானை - பகைவனை, உறவு என்று - உறவினன் என்று, நம்ப வேண்டாம் - தெளியாதே.


தனம் தேடி - பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல் - நுகராமல், புதைக்கவேண்டாம் - மண்ணில் புதைக்காதே.


தருமத்தை - அறம் செய்தலை, ஒருநாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே.


சினம் - வெகுளியை, தேடி - தேடிக்கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும், தேட வேண்டாம் - தேடாதே.


சினந்து இருந்தார் - சினம் கொண்டு இருந்தாருடைய, வாசல்வழி - வாயில் வழியாக, சேறல் வேண்டாம் - செல்லாதே.


வனம் தேடும் - காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித் திரியும், குறவருடை - குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாச்சியாரை,  பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும்  பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை---


மனம்போன வழியில் தான் போகாமல் தன்வழியில் மனத்தைநிறுத்த வேண்டும். "எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். அதுபோல நெஞ்சை விளித்து, `மனம்போன போக்கெல்லாம்' என்றார். 


பகைவன் உறவினன் ஆயினும் அவனை நம்பலாகாது. பகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பன் என்று நம்பிவிடக்கூடாது. 


பொருளைத் தேடி அனுபவிக்காமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக்கொள்க. நாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல்வேண்டும். மறக்கவேண்டாம் என்றமையால், நினைந்து செய்தல்வேண்டும் என்பது ஆயிற்று.


கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பம் அடையலாகாது.  கோபம் கொண்டு இருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது.


உலகநீதி - 2

"நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

    நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

    நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

    அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை --


நெஞ்சு ஆர - மனம் பொருந்த, பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம் - சொல்லாதே.


நிலை இல்லா - நிலைபெறாத, காரியத்தை - காரியத்தை, நிறுத்த வேண்டாம் - நிலைநாட்டாதே.


நஞ்சுடனே - விடத்தை உடைய பாம்புடனே, ஒருநாளும் - ஒரு பொழுதும், பழக வேண்டாம் - சேர்ந்து பழகாதே.


நல்இணக்கம் - நல்லவர்களுடைய நட்பு, இல்லாரோடு - இல்லாதவர்களுடன், இணங்கவேண்டாம் - நட்புக்கொள்ளாதே.


அஞ்சாமல்- பயப்படாமல், தனி - தன்னந்தனியாக,வழி போகவேண்டாம் - வழிச்செல்லாதே.


அடுத்தவரை - தன்னிடத்து வந்து அடைந்தவரை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே.


மஞ்சு ஆரும்- வலிமை நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில், உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே; வாழ்த்தாய் - நீ வாழ்த்துவாயாக.


பொழிப்புரை---


மனமறியப் பொய் கூறுதல் கூடாது. "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார் திருவள்ளுவ நாயனார்.  உறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. (நிலையின்மை - பொய்த்தன்மை.) பாம்பைப் போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அது இங்கு கொடியாரை உணர்த்திற்று. நல்லோர் இனத்தைப் பெறாது தீயவருடன் நட்பு உடையோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது. "நல்லிணக்கம் இல்லார்" என்றமையால்; தீயவரின் இணக்கம் உடையவர் என்று கொள்க. நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். "இணக்கம் அறிந்து இணங்கு" என்கிறது ஆத்திசூடி. துணை இல்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனிவழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம். தன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல் காத்தல் வேண்டும். "அடுத்தவர்" - வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். "கெடுக்க வேண்டாம்" என்றமையால் காத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.


"மைந்து" என்பது மஞ்சு எனப் போலியாக வந்தது. மைந்து - வலிமை.


உலகநீதி.1

 


"ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம்

    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

    வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---


ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும் - ஒருபொழுதும், இருக்கவேண்டாம் - (நீ) வாளா இராதே.


ஒருவரையும் - யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு - தீமை பயக்கும் சொற்களை, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.


மாதாவை - (பெற்ற) தாயை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.


வஞ்சனைகள் - வஞ்சகச் செயல்களை, செய்வாரோடு - செய்யுங் கயவர்களுடன், இணங்க வேண்டாம்- சேராதே.


போகாத - செல்லத்தகாத, இடந்தனிலே - இடத்திலே, போகவேண்டாம் - செல்லாதே.


போகவிட்டு - (ஒருவர்) தன்முன்னின்றும் போன பின்னர், புறம் சொல்லி - புறங்கூறி, திரியவேண்டாம் - அலையாதே.


வாகு - தோள்வலி, ஆரும் - நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை --


 எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்கவேண்டும்.


எவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு "ஒருவரையும்" என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று.


பெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும்.


வஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. வஞ்சனை - கபடம்.


செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே, தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது.


ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் - புறங்கூறல்; காணாவிடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல்.


குறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக.


வாகு - தோள், தோள்வலி. மான் வயிற்றிற்பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப்பெற்றமையானும் குறவர் எல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் 'குறவருடை வள்ளி' என்றார்.


மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...