அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தொந்தி சரிய
(திருச்செந்தூர்)
ஆவி பிரியும்போது, மயில்
மீது வந்து காத்தருள வேண்டல்
தந்த
தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன ...... தனதான
தொந்தி
சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்
...... நகையாடி
தொண்டு
கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு ......
செவியாகி
வந்த
பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக ......
துயர்மேவி
மங்கை
யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை
...... வரவேணும்
எந்தை
வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ......
அபிராம
இங்கு
வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ......
வருமாயன்
சிந்தை
மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ......
அடுதீரா
திங்க
ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
தொந்தி
சரிய, மயிரே வெளிற, நிரை
தந்தம் அசைய, முதுகே வளைய, இதழ்
தொங்க, ஒருகை தடிமேல் வர, மகளிர் ...... நகையாடி
தொண்டு
கிழவன் இவன் ஆர்என, இருமல்
கிண்கிண் என, முன் உரையே குழற, விழி
துஞ்சு குருடு படவே, செவிடுபடு ...... செவியாகி,
வந்த
பிணியும், அதிலே மிடையும் ஒரு
பண்டிதனும் மெய் உறு வேதனையும், இள
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுக, ...... துயர்மேவி,
மங்கை
அழுது விழவே, யம படர்கள்
நின்று சருவ, மலமே ஒழுக உயிர்
மங்கு பொழுது, கடிதே மயிலின்மிசை .....வரவேணும்.
எந்தை
வருக, ரகுநாயக வருக,
மைந்த வருக, மகனே இனிவருக,
என்கண் வருக, எனது ஆரஉயிர் வருக, ...... அபிராம
இங்கு
வருக, அரசே வருக, முலை
உண்க வருக, மலர் சூடிட வருக,
என்று பரிவினொடு கோசலை புகல ......
வருமாயன்
சிந்தை
மகிழும் மருகா! குறவர் இள
வஞ்சி மருவும்அழகா! அமரர்சிறை
சிந்த, அசுரர் கிளைவேரொடு மடிய ......
அடுதீரா!
திங்கள்
அரவு நதி சூடிய பரமர்
தந்த குமர! அலையே கரை பொருத
செந்தி நகரில் இனிதே மருவிவளர் ......
பெருமாளே.
பதவுரை
எந்தை வருக --- என் அப்பனே வா!
ரகுநாயக வருக --- ரகு குலத்திற்கு நாயகனே வா!
மைந்த வருக --- வலிமையுடையவனே வா,
மகனே இனி வருக --- என் புதல்வனே தாமதியாது
இனி வருவாய்,
என் கண் வருக --- எனது கண்ணே வா!
எனது ஆர்உயிர் வருக --- எனது அருமையான
உயிருக்கு நிகரானவனே வா!
அபிராம இங்கு வருக --- அழகிற் சிறந்தவனே
இவ்விடம் வா!
அரசே வருக --- இராஜாவே வா!
முலை உண்க வருக --- பால் உண்ண வா!
மலர் சூடிட வருக --- மலர்களைச் சூட்டிக்கொள்ள
வா!
என்று பரிவினொடு கோசலை புகல - என்று அன்புடன்
கௌசலாதேவி சொல்லி அழைக்குமாறு,
வரும் மாயன் --- இராம பிரானாக அவதரித்து வந்த
மாயா சொரூபராகிய நாராயணமூர்த்தி,
சிந்தை மகிழும் மருகா --- உள்ளங்
களிக்கும்படியான திருமருகரே!
குறவர் இள வஞ்சி மருவும் அழகா ---
குறவர் குலத்தில் தோன்றியவரும் இளமையுடையவரும், வஞ்சிக்கொடி போன்ற இளமை உடையவருமாகிய
வள்ளிநாயகியார் அணைகின்ற அழகிற் சிறந்தவரே!
அமரர் சிறை சிந்த --- தேவர்களது சிறைச்சாலைத்
துன்பமானது நீங்குமாறு,
அசுரர் கிளை வேரொடு மடிய அடு தீரா ---
இராக்கதர்களுடைய சுற்றமுழுவதும்,
வேருடன்
(அடியோடு) அழிந்து போகுமாறு, போர் புரிந்து கொன்ற
தீரரே!
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர
--- சந்திரனையும், பாம்பையும், கங்கையையும், சடாபாரத்தில் தரித்துள்ள, எப்பொருட்டும் இறைவரும் பெரிய
பொருளுமாகிய சிவபெருமான் பெற்றருளிய குமாரக்
கடவுளே!
அலை (ஏ-அசை) கரை பொருத --- கடலில் எழும்
அலைகள் ஒழியாது கரையில் மோதப்பெற்ற,
செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே ---
திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரில் இனிமையாகப்
பொருந்தி வாழ்கின்ற பெருமையிற்
சிறந்தவரே!
தொந்தி சரிய --- வயது முதிர்ச்சியால்
வயிறு சரிந்து தொங்கவும்,
மயிர் (ஏ-அசை) வெளிற --- கருத்திருந்த
தலைமயிரானது (கொக்கைப்போல்) வெளுத்து நரைக்கவும்,
நிரை தந்தம் அசைய --- வரிசையாக இருந்த பற்கள்
அசையவும்,
முதுகு (ஏ-அசை) வளைய --- நிமிர்ந்திருந்த
முதுகானது வளையவும்,
இதழ் தொங்க --- உதடுகள் தொங்கவும்,
ஒருகை தடிமேல் வர --- (கூனுடன்) ஒருகரம்
தடியின் மேல் பொருந்திவர (தடியூன்றித் தள்ளாடி நடந்து வருகின்றசமயத்தில்),
மகளிர் நகையாடி --- பெண்கள், (கிழவனாகிய என்னை நோக்கி) ஏளனமாகச்
சிரித்து,
தொண்டு கிழவன் இவன் ஆர் என --- பழைய
கிழவனாகிய இவன் ஆர் என்று பரிகசிக்கவும்,
இருமல் கிண் கிண் என --- கிண் கிண் என்ற
ஒலியுடன் இருமல் வரவும்,
முன் உரை (ஏ-அசை) - குழற --- முன்னர்
திருத்தமாகப் பேசிக்கொண்டிருந்த சொற்கள் குழறவும்,
விழி துஞ்சு குருடு பட (ஏ - அசை) --- கண்கள்
எக்காலத்தும் தூங்குவதுபோல் ஒளி குன்றி குருட்டுத் தன்மையடையவும்,
செவிடு படு செவியாகி --- காதுகள் செவிட்டுத்
தன்மையடையவும்,
வந்த பிணியும் --- உடலுக்கு வந்த நோயும்,
அதிலே மிடையும் --- அந்த நோயை அகற்றுதற்
பொருட்டு நெருங்கிய,
ஒரு பண்டிதனும் --- ஒரு வைத்தியனும்,
மெய் உறு வேதனையும் --- சரீரத்திற்கு வந்த
நோயாலாகிய துன்பமும் துன்புறுத்த,
இள மைந்தர் உடைமை கடன் ஏது என --- இளம்
பருவத்தையுடைய மக்கள் சொத்து எவ்வளவு இருக்கிறது என்றும் கடன் எவ்வளவு
இருக்கின்றது என்றும் கேட்கவும்,
முடுகு துயர் மேவி --- இதனாலாகியத்
துன்பங்களை நான் அடையவும்,
மங்கை அழுது விழவே --- என் பத்தினி ஓவென்று
கதறி அழவும்,
யம படர்கள் நின்று சருவ --- யமதூதர்கள் என்
உயிரைப் பற்றுமாறு வந்து நெருங்கி நிற்கவும்,
மலம் (ஏ - அசை) ஒழுக --- மலம் தண்ணீர்போல
ஒழுகவும்,
உயிர் மங்கு பொழுது --- அடியேனது உயிர் மங்கும்
தன்மை அடையும் போது,
கடிதே மயிலின் மிசை வரவேணும் --- விரைவாக
மயில்வாகனத்தின் மீது வந்து அருள்புரிய வேணும்.
பொழிப்புரை
என் அப்பனே வா! இரகு குலத்திற்கு நாயகனே
வா! வலிமையுடையவனே வா! என் மகனே இனி வருவாயாக! என் கண்ணே வா! எனது ஆருயிரே வா!
அழகிற் சிறந்தவனே இவ்விடம் வா! ராஜாவே வா! பால் குடிக்கும் பொருட்டுவா! மலரைச்
சூடிக் கொள்ளுவதற்காக வா! என்று அன்புடன் கௌசலா தேவி அழைக்குமாறு மண்ணுலகில்
அவதரித்து வந்த இராமபிரானும், மாயா சொரூபியுமாகிய
மகாவிஷ்ணு உள்ளம் மகிழ்ச்சியடையும் மருகரே!
குறவர் குலத்திற் பிறந்துவரும், இளமையுடையவருமாகிய வள்ளியம்மையார்
மருவுகின்ற கட்டழகுடையவரே!
தேவர்களது சிறைவாசம் ஒழிய அசுரர்களது
வமிசம் அடியோடு அழியப் போர்புரிந்த தீரரே!
சந்திரனையும், சர்ப்பத்தையும், நதியையும் சடையிற் சூடிக் கொண்டுள்ள
சிவபெருமான் பெற்ற குமார மூர்த்தியே!
கடலின் அலை கரையில் மோதுகின்ற
திருச்செந்தூர் என்னும் புனிதத் தலத்தில் வாழ்கின்ற பெருமையிற் சிறந்தவரே!
முதுமை அடைந்ததனால் தொந்தி சரியவும், கருமை நிறம் பொருந்திய மயிர்கள்
வெளுத்து நரையடையவும், வரிசையாகிய பற்கள்
அசையவும், முதுகு வளையவும், உதடுகள் தொங்கவும், ஊன்று கோலின் மீது ஒரு கரம்
பொருந்துமாறு தள்ளாடி நடந்து வரும்போது, பெண்கள்
“பழைய கிழவனாகிய இவன் யார்?” என்று எள்ளி
நகையாடவும், ’கிண் கிண்’ என்ற
ஒலியுடன் இருமல் வரவும், அழுத்தமாகவும்
திருத்தமாகவும் முன் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் குழறவும், கண்கள் எப்போதும் தூங்குவதுபோல்
ஒளிகுன்றிக் குருட்டுத்தன்மை யடையவும், செவிகள்
செவிட்டுத் தன்மையடையவும், உடலுக்கு வந்த நோயும், அதனை நீக்குதற்கென நெருங்கி வந்த
வைத்தியனும், சரீரத்திற்கு உற்ற
பிணியின் துன்பமும் (ஒருங்கே வருத்த), இளம்
பிள்ளைகள் சொத்து (ஆஸ்தி) எவ்வளவு இருக்கிறது? கடன் எவ்வளவு இருக்கிறது? என்று கேட்கவும், இதனாலான துன்பமானது மிகவும் விரைந்து
வரவும், என் பத்தினி ஓவென்று
கதறி அழவும், யம தூதர்கள் என்
உயிரைப் பற்றுமாறு வந்து நெருங்கி நிற்கவும், மலம் ஒழுகவும் ஆகிய மரண வேதனை யடைந்து
உயிர் மங்குகின்ற காலத்தில், தேவரீர், மயில் வாகனத்தின் மீது விரைவாக வந்து
அடியேனைக் காத்தருளவேண்டும்.
விரிவுரை
தொந்தி
சரிய
---
வயது
முதிர்ந்த காலத்தில் ஆலிலைப் போலிருந்த வயிறு பெருத்துச் சரிந்துவிடும்.
மயிரே
வெளிற
---
கருமை
நிறத்துடனிருந்த மயிர்கள் கொக்குபோன்று நரைத்து வெளுத்துவிடும். “தலைமயிர்
கொக்குக் கொக்க நரைத்து” என்ற திருவாக்கையும் உன்னுக. ஒவ்வொரு உரோமம்
நரைக்குந்தோறும் ஒவ்வொரு பொருளில் உள்ள அவாவை விடுதல் வேண்டும்.
நிரை
தந்தம் அசைய ---
முத்தைப்போல்
வரிசையாயிருந்த பற்கள் அசைந்து உதிரும்.
“வயது சென்றது
வாய்ப்பல் உதிர்ந்தது” --- (முனையழிந்தது) திருப்புகழ்.
பற்கள்
உதிர்ந்தவுடனே சொற்கள் கெட்டுவிடுமாதலால், இறைவனை வாயார வாழ்த்துவதற்கு இயலாது
போகும். ஆதலால் பற்கள் விழுமுன் இறைவனைத் துதித்தல் வேண்டும்.
பற்கள் உதிர்ந்தபின், மந்திரம் ஜெபிப்பார்க்குச் சித்தி உறாது என்னும் மந்திர சாத்திரத்தையும் உய்த்துணர்க.
முதுகே
வளைய
---
“நிமிர்ந்த முதுகுங்
குனிந்து” என்றபடி முதுகு பல்லக்குக் கொம்பு போல் வளைந்துவிடும்.
அங்ஙனம்
கூன் வளைந்த பின் இறைவன் திருவடியை மனத்தின் கண் நினைத்து தியான சமாதி
செய்தற்கியலாது. முதுகுத் தண்டிலுள்ள சுழிமுனை என்னும் வெள்ளை நரம்பிலுள்ள தாமரைத்
தண்டின் நுண்ணிய வழியில் பிராண வாயுவைக் கபாலம் வரைக்கும் ஏற்றும் சிவயோக சாதனம், முதுகு வளைந்துவிட்ட பின் செய்ய
முடியாது.
எனவே
இடுப்பும் முதுகும் சிரமும் நேரே நிறுத்துச் சித்திரப் பதுமைப் போல் இருந்து
தியானித்தல் வேண்டும். ஆதலால் முதுகு வளையாமுன் சிவயோகத்தை முயலல்வேண்டும்.
மகளிர்
நகையாடி ---
முதுமைப்
பருவம் வந்த காலத்தில் பெண்களும் இளைஞர்களும் பரிகசித்து நகையாடுவர்.
“வருத்த முந்தர
தாய்மனை யாள்மக
வெறுத்தி
டங்கிளை யோருடன் யாவரும்
வசைக்கு
றுஞ்சொலி னால்மிக வேதினம் நகையாட”
--- (மனத்திரைந்)
திருப்புகழ்.
விழி
துஞ்சு குருடு படவே ---
கண்கள்
முதுமையில் ஒளிகுன்றிக் குருடுபடும். அங்ஙனம் கண்ணொளி இழந்தபின், இறைவனது திவ்ய மங்கள திருமேனியின்
பொலிவைக் கண்டு “ஐந்து பேரறவுங் கண்களே கொள்ள” என்ற பேரானந்தத்தையடைய முடியாது.
ஆதலால் கண்கள் ஒளியுடன் விளங்கும்போதே கண்ணினாலாகிய பயனைப் பெற வேண்டும்.
செவிடுபடு
செவியாகி
---
முதுமையில்
கண்கள் குருடு பட்டதோடு காதுகளும் கேட்கும் தொழிலை இழந்துவிடும். அங்ஙனம்
செவிட்டுத் தன்மையடைந்த பின், இறைவனது அருட்பெருங்
குணங்களைக் கேட்டு மகிழமுடியாது. செவிபடைத்ததன் பயன் இறைவனது சீர்கேட்டு சிந்தை
மகிழ்தலே.
“செவ்வேளின்
சீர்கேளாச் செவியென்ன செவியே”
வந்த
பிணியும்
---
உதிரம்
வற்றி உடல் தளர்ந்துவிடுவதால், முதுமையில் பல
நோய்கள் வந்து துன்புறுத்தும்.
“சூலை சொறி ஈளைவலி
வாதமொடு நீரிழிவு
சோகை கள மாலைசுர மோடுபிணி தூறு இருமல்
சூழல்உற மூலகசு மாலம் என நாறி உடல் அழிவேனோ” --- (வாலவய) திருப்புகழ்.
இள
மைந்தர் உடைமை கடன் ஏது என ---
தொந்தி
சரிந்தும், மயிர் நரைத்தும், பற்கள் கழன்றும், முதுகு வளைந்தும், இதழ்த்தொங்கியும், தடியூன்றியும் வருகின்ற “இந்தக் கிழவன்
யார்” என்று பெண்கள் பரிகசித்து நகையாடவும், இருமல் வரவும், மொழிக் குழறவும், குருடு படவும், செவிடுபடவும், பற்பல நோய்கள் வரவும், வைத்தியர் வந்து பணங் கேட்கவும், உடலில் வேதனையும் ஏற்பட, இவை முதலான பல துன்பங்களால் துன்புற்று
ஆவி பிரியுங் காலத்தில், இளம் பிள்ளைகள்
மரணாவஸ்தைப் படுவோனுடைய வருத்தத்தைக் கண்டு மனம் துடியாமல், ’ஆஸ்தி எவ்வளவு? கடன் எவ்வளவு? எங்கெங்கு கொடுத்திருக்கிறீர்?’ என்று கேட்டுத் துன்புறுத்துவார்.
அவர்களது நன்மையைக் கருதுவார்களேயன்றி, நம்முடைய
நன்மையைக் கருதி ஆவி ஈடேறுகின்ற வழியைத் தேடமாட்டார்கள்.
யமபடர்கள்.........மலமே
ஒழுக
---
யம
தூதர்கள் வந்து பாசக்கயிற்றால் உயிரைக் கட்டியீர்க்கின்ற சமயத்தில் மலம் நீர்ப்போல
நெகிழ்ந்து ஒழுகும்.
உயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும் ---
ஆவி
மயங்குகின்ற காலத்தில் முருகனுடைய தெரிசனம் உண்டாயின், இயமதூதர்கள் வெருவி ஓடுவார்கள். ஆதலால்
விரைவாக மயில் வாகனத்தின் மிசை வந்து காப்பாற்ற வேண்டு மென்றனர்.
எந்தை
வருக ...........ரகுநாயக வருக ---
பகவானாகிய
நாராயணர், அளவற்ற தவம்புரிந்த
கௌசலாதேவி அன்புடன் பற்பல வகையாக அழைக்க அவளது திருவுதரத்தில் தோன்றி மகனாக
வந்தனர்.
“மன்னுபுகழ் கௌசலைதன்
மணிவயிறு வாய்த்தவனே” --- திருவாய்மொழி.
மைந்த
வருக மகனே இனி வருக ---
மைந்த
- பல குடும்பங்களைப் போஷிப்பவர்.
மைந்தன், மகன் என்ற இரு
சொற்களும் ஒரே பொருளைக் கொடுப்பன அல்ல.
1. தனக்கு உரிய வயது
வந்ததும், தந்தைக்கு என்ன
வருவாய்? எப்படிக் குடும்பம்
நடைபெறுகின்றது? பிற்காலத்தில் நாம்
எப்படி வாழ்வது? என்ற சிந்தனையும், அறியும் ஆற்றலும் இன்றித் தாய் தந்தையர்
பாதுகாப்பிலேயே இருக்கின்றவன் பாலன்.
2, வயது முதிர்ந்த தந்தை
வேலை செய்ய, தனக்கு உரிய பருவம்
வந்ததும், தந்தைக்கு உதவி
செய்யாது மேற்கொண்டும் செலவு செய்து கொண்டும், ஆடல், பாடல்களில் ஈடுபட்டுக் கொண்டும்
இருப்பவன் பிள்ளை.
3. தந்தைக்கு ஞானம்
உரைக்கும் அளவுக்கு உயர்ந்த அறிவு
பெற்றவன் குமாரன்.
4. தந்தைக்கு நற்கதி
தருகின்றவன் புத்திரன்.
5. தந்தைக்கு நன்மையைச்
செய்கின்றவன் புதல்வன்.
6. தான் பிறந்த
குடும்பத்தைக் காத்து, ஆலமரத்தின் விழுது
அந்த மரத்தைத் தாங்குவது போல் நிற்பவன் மகன்.
7. தந்தையின் குடும்பம், தாயின் குடும்பம், குருவின் குடும்பம், நண்பரின் குடும்பம், இப்படிப் பல குடும்பங்களைக்
காப்பாற்றுபவன் மைந்தன்.
முலை உண்க
வருக
---
இராமர், தன் குடும்பம், குகனுடைய குடும்பம், சுக்ரீவனுடைய குடும்பம், விபீஷணனுடைய குடும்பம், ஆகிய பல குடும்பங்களைக் காத்தலினால், மைந்தன் என்றும், தான் பிறந்த குடும்பத்தையும்
காத்தலினால் மகன் என்றும் அழைக்கப் பெற்றார்.
ஒரு குழந்தைக்குத் தாயே பால் தந்தால், தாயின் அரும்பெருங் குணங்கள்
அம்மகவுக்கு உண்டாகும். அரசமாதேவியே பால் தரவேண்டும் என்ற குறிப்பை இது
உணர்த்துகிறது.
சிந்தை
மகிழு மருகா
---
ஷண்முகப் பெருமான் அளவற்ற கருணையும், முடிவில்லாத ஆற்றலும், ஞானமேயொரு திருமேனியும் உடையவராக
இருந்து, கார்த்திகைப் பெண்கள்
அறுவர்களுக்கும் மகனாகி, அன்னார் பலவாறு
அழைக்க அவர்களுக்கு அருள்புரிந்தமையால் நாராயணர் சிந்தை மகிழுகின்றார்.
குறவரிள
வஞ்சி மருவும் அழகா ---
முருகப்பெருமான், வள்ளி நாயகியார் மருவுகின்ற அழகிற்
சிறந்தவர்; முருகப்பெருமானுடைய
வடிவே அழகு; அழகால் அவரின்
மிக்காரும், ஒப்பாரும் இல்லை.
“முழுது பழகிய குமரா”
(விழையுமனி) திருப்புகழ்.
அமரர்
சிறை சிந்த .............அடுதீரர ---
தேவர்களைச் சூரபன்மன், சிறையிட்டுப் பல யுகங்களாகத்
துன்புறுத்த, இனி நமக்கு உய்வில்லை
என்று நிர்க்கதியாக இருந்த தேவர்களது சிறையை மீ்ட்டு, சூராதி அசுரர்களது குலத்தை அடியோடு
அழித்து, முருகப்பெருமான்
அறத்தை நிலைபெறச் செய்தனர். ஒருவராலும் வெல்ல வொண்ணாத சூரன் முதலியோரை வென்றதனால்
தீரன் என்றனர்.
தேவர்கள் என்பது: -
சத்துவம் முதலிய நற்குணங்கள்;
அசுரர்கள்
என்பது:-தாமசம் முதலிய தீய குணங்கள்.
தீய குணங்களை அழித்து நற்குணங்களை நிலைபெறச்
செய்தனர் என்பதும் அதன் தத்துவம்.
திங்கள்
அரவு ............தந்த குமர ---
அபயமென்று
வந்த சந்திரனையும், கொல்லவந்த அரவம்
முதலியவை களையுங் காப்பாற்றிச் சடாபாரத்தில் சூடிக்கொண்ட கருணா மூர்த்தியாகிய
கண்ணுதற் கடவுளது மைந்தனான படியால்,
இயமபயம்
நேருங்கால் மயில்மிசை வந்து காத்தருளல் வேண்டும் என்று விண்ணப்பம் புரிகின்றனர்.
அலையே
கரை ..........பெருமாளே ---
அலைகள் வந்து தமது திருவடியில்
ஓய்வுறுமாறு கடற்கரையில் முருகன் உறைகின்றனர். அலைகள் என்பது பல வகையான எண்ணங்கள்.
அவைகள் எம்பெருமானது திருவடியில் ஓயுமாறு செந்திலம்பதியில் வாழ்கின்றனர்.
செந்திலாண்டவனை நினைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை.
கருத்துரை
மாயவனது மருகரே! வள்ளிநாயகியின் மணாளரே!
அசுரரையழித்த அதிதீரரே! சிவபெருமானது புதல்வரே! செந்திலாண்டவரே! பற்பல விதமாகத்
துன்புற்று ஆவி பிரியுங்கால் மயில்மிசை வந்து காப்பாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment