திருக் கோவலூர் வீரட்டம்


திருக் கோவலூர் வீரட்டம்
(திருக்கோயிலூர்)

     நடு நாட்டுத் திருத்தலம்.

         பெண்ணையாற்றின் தென்கரையில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் இருந்து திருக்கோவிலூர் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது.


இறைவர்               : வீரட்டேசுவரர்.

இறைவியார்           : சிவானந்தவல்லி, பெரியநாயகிபிருகந்நாயகி.

தல மரம்               : வில்வம்.

தீர்த்தம்                : தென்பெண்ணையாறு (தட்சிணபிநாகினி).

  தேவாரப் பாடல்கள்    :       1. சம்பந்தர் - படைகொள் கூற்றம்.
                                               2. அப்பர் -செத்தையேன் சிதம்பநாயேன்.

          மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது.

          அவதாரத் தலம்   : திருக்கோவலூர்.
          வழிபாடு         : சங்கம வழிபாடு
          முத்தித் தலம்     : திருக்கோவலூர்.
          குருபூசை நாள்    : கார்த்திகை - உத்திரம்

         மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான் குலமாகும். நாயனார் அறநெறி தவறாது அரசு புரிந்து வந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்து வந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையில் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுவனற்றைக் குறைவறக் கொடுத்து, நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

         இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமை கொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப் போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாது எனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத் துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தக முடிப்பு ஒன்றைக் கையில் ஏந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியார் என வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணம் அறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவு கண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்து இருந்தவர் எங்கும் இலாததோர் சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப் பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்ச நெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடத்திலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத் தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது வென்றார். 

முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா, நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தி அறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றொழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து, நகரைக் கடந்து சென்று, நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தை செய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருள் நாயனாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்” –                                          திருத்தொண்டத் தொகை.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்

சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்" என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம். 

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், திருமுறை கண்ட சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேசுவரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும், மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.

         வீரட்டேசுவரர் கோயிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோயிலும் தனித்தனி கோயில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இரண்டு கோயில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.

         சுவாமி கோயில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.

         திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

         தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.

         அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சொல் வண்ணம் நாவலர் போற்று நலம் பெறவே ஓங்கு திருக் கோவலூர் வீரட்டம் கொள் பரிசே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 967
சென்று அணைந்துசிந் தையின்மகிழ்
         விருப்பொடு திகழ்திரு ஆமாத்தூர்ப்
பொன்த யங்குபூங் கொன்றையும்
         வன்னியும் புனைந்தவர் அடிபோற்றி,
"குன்ற வார்சிலை" எனும்திருப்
         பதிகம்மெய் குலவிய இசைபாடி,
நன்றும் இன்புஉறப் பணிந்துசெல்
         வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.

         பொழிப்புரை : சென்றடைந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி மீதூரக் கொண்ட விருப்பத்துடனே, விளங்கும் திருஆமாத்தூரில் பொன் போல் விளங்கும் கொன்றையையும் வன்னியையும் அணிந்து வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் போற்றிக் `குன்றவார் சிலை\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை, மெய்ம்மை விளங்கும் இசை யுடன் பாடி, இன்பம் மிகப் பொருந்த வணங்கிச் செல்பவரான ஞானசம்பந்தர், திருக்கோவலூரை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 968
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர்
         குரைகழல் பணிந்துஏத்தி,
ஆவின் ஐந்துஉகந்து ஆடுவார்அறையணி
         நல்லூரை அணைந்துஏத்தி,
பாஅலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார்
         பரவுசீர் அடியார்கள்
மேவும் அன்புஉறு மேன்மையாம் தன்மையை
         விளங்கிட அருள்செய்தார்.

         பொழிப்புரை : திருக்கோவலூரில் திருவீரட்டக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இறைவரின், ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றி, ஆனினிடமாகத் தோன்றும் ஐந்து பொருள்களையும் விரும்பியாடுபவரான இறைவரின் திருஅறையணிநல்லூரைச் சென்றடைந்து போற்றிப் பாவாக மலர்ந்த தமிழ்ப் பதிகத்தினால் போற்றுபவரான பிள்ளையார், இறைவரின் பொருள்சேர் புகழ்களையே போற்றி வாழும் தொண்டர்களுக்கு, அன்பினால் உளவாகும் மேம்பாடான தன்மைகளை உலகம் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருக்கோவலூர்: `படைகொள்\' (தி.2 ப.100) - நட்டராகம்.

     2. திருஅறையணிநல்லூர்: `பீடினால்\' (தி.2 ப.77) - காந்தாரம்.

         திருஅறையணிநல்லூரில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவோர்க்கு உளவாகும் நலன்களை இப்பதிகப் பாடல் தொறும் பிள்ளையார் அருளுவதை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் அருளுவாராயினர்.


2.100 திருக்கோவலூர்வீரட்டம்            பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
படைகொள்கூற்றம் வந்துமெய்ப்
         பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வார் எமக்குஇலை
         எழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை
         குழகன்கோவ லூர்தனுள்
விடைஅதுஏறும் கொடியினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப் பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில் இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை . நெஞ்சே ! எழுக . என்னோடு போதுக . வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலைய மானின் முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனு மாய்க் கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் .


பாடல் எண் : 2
கரவலாளர் தம்மனைக்
         கடைகள்தோறும் கால் நிமிர்த்து
இரவல்ஆழி நெஞ்சமே
         இனியது எய்த வேண்டிநீ
குரவம் ஏறி வண்டுஇனம்
         குழலொடுயாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :நெஞ்சே ! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று இரவாதே. இனியதை நீ எய்த வேண்டின், வண்டினங்கள் குரா மரங்களில் ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும் கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் .


பாடல் எண் : 3
உள்ளத்தீரே போதுமின்,
         உறுதியாவது அறிதிரேல்
அள்ளல்சேற்றில் கால்இட்டுஇங்கு
         அவலத்துள் அழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான்
         குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :நல்ல உள்ளம் உடையவர்களே ! உயிருக்கு உறுதி யானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித் துயரு றாமல் , செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும் கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம் . வருக .


பாடல் எண் : 4
கனைகொள்இருமல் சூலைநோய்
         கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோடு
         எய்திவந்து நலியாமுன்
பனைகள்உலவு பைம்பொழில்
         பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :மூப்புக் காலத்தில் கனைத்தலைக் கொண்ட இருமல் , சூலை நோய் , நடுக்கம் , குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே , பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில் , இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக .


பாடல் எண் : 5
உளங்கொள்போகம் உய்த்திடார்
         உடம்புஇழந்த போதின்கண்
துளங்கிநின்று நாள்தொறும்
         துயரல்ஆழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துஉலா
         வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே ! உடலற்ற காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது . நாள் தோறும் துளங்கித் துயருறாதே . வளமான பெண்ணையாறு வந்து பாயும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் , விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான் வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம் .


பாடல் எண் : 6
கேடுமூப்புச் சாக்காடு
         கெழுமிவந்து, நாள்தொறும்
ஆடுபோல நரைகளாய்,
         ஆக்கைபோக்கு அதுஅன்றியும்,
கூடிநின்று பைம்பொழிற்
         குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :நம் உடல் நரையுடையதாய் , ஆடுபோல அலைதலால் கேடு, முதுமை, சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது . பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில் விளங்கும் குழகனும் , வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். நெஞ்சே ! வருக .


பாடல் எண் : 7
உரையும்பாட்டும் தளர்வுஎய்தி
         உடம்புமூத்த போதின்கண்
நரையும்திரையும் கண்டுஎள்கி
         நகுவர் நமர்கள் ஆதலால்
வரைகொள்பெண்ணை வந்துஉலா
         வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் நீற்றினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :பேச்சும் , பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர் . ஆதலால், மலையி லிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம் .


பாடல் எண் : 8
ஏதம்மிக்க மூப்பினோடு,
         இருமல்ஈளை என்றுஇவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர்,
         உறுதிஆவது அறிதிரேல்,
போதில்வண்டு பண்செயும்
         பூந்தண்கோவ லூர்தனுள்
வேதம்ஓது நெறியினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியனவற்றுக்கு இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே ! உயிர்க்கு உறுதியாவதை அறிவீராயின் , மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில் , வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவ பிரானது வீரட்டானத்தை அடைவோம் . வருக .


பாடல் எண் : 9
ஆறுபட்ட புன்சடை
         அழகன்,ஆயி ழைக்குஒரு
கூறுபட்ட மேனியான்,
         குழகன்,கோவ லூர்தனுள்
நீறுபட்ட கோலத்தான்,
         நீலகண்டந் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான்
         வீரட்டானஞ் சேர்துமே.

         பொழிப்புரை :கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய அழகனும் , உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த கோலத்தினனாய் , நீலகண்டனாய் , திருமால் பிரமர்க்கு வேறான சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம் வருக .


பாடல் எண் : 10
குறிகொள்ஆழி நெஞ்சமே,
         கூறைதுவர்இட் டார்களும்
அறிவிலாத அமணர்சொல்
         அவத்தம்ஆவது அறிதிரேல்,
பொறிகொள்வண்டு பண்செயும்
         பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :ஆழமாகப் பலவற்றை எண்ணும் நெஞ்சமே ! துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும் கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால் , பொறிகளை உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும் கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் வருக .


பாடல் எண் : 11
கழியொடுஉலவு கானல்சூழ்
         காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொல்
         பாவநாசம் ஆதலால்,
அழிவுஇலீர்கொண்டு ஏத்துமின்,
         அந்தண்கோவ லூர்தனுள்
விழிகொள்பூதப் படையினான்
         வீரட்டானம் சேர்துமே.

         பொழிப்புரை :வீணே அழிதல் இல்லாதவர்களே ! உப்பங் கழிகளோடு கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் , பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ் சொல் , பாவங்களை நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழி படுங்கள் . அழகிய தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் . வருக .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 148
திருஅதிகைப் பதிமருங்கு திருவெண்ணெய் நல்லூரும்,
அருளுதிரு ஆமாத்தூர், திருக்கோவலூர், முதலா
மருவுதிருப் பதிபிறவும் வணங்கி, வளத் தமிழ்பாடி,
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார்.

         பொழிப்புரை : திருவதிகையின் அருகிலுள்ள திருவெண்ணெய் நல்லூரும், அருள் தருகின்ற திருவாமாத்தூரும், திருக்கோவலூரும் முதலாகப் பொருந்திய பதிகள் பலவற்றையும் வணங்கி, செழுமையுடைய தமிழ்ப்பதிகங்களைப் பாடி, ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருப்பெண்ணாகடத்தைப் பெருவிருப்புடன் அடைந்தார்.

         குறிப்புரை :திருவெண்ணெய் நல்லூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

திருஆமாத்தூரில் அருளிய பதிகங்கள் இரண்டாம், அவை:

1.    திருக்குறுந்தொகை: `மாமாத்தாகிய ஈசனை` (தி.5 ப.44) எனத் தொடங்குவது. 2. திருத்தாண்டகம்: `வண்ணங்கள் தாம்பாடி` (தி.6 ப.9) எனத் தொடங்குவது.

2.    திருக்கோவலூரில் அருளிய பதிகம், `செத்தையேன்` (தி.4 ப.69) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகமாகும்.

`முதலாமருவு திருப்பதிகள்` எனக் குறிப்பன, திருவிடையாறு, திருநெல்வெண்ணெய் முதலாயினவாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

3.    திருமுண்டீச்சரம் என்ற பதியை இவ்விடத்துக் குறிப்பிட்டு, அப்பதியில் அருளியது, `ஆர்த்தான்` (தி.6 ப.85) எனத் தொடங்கும் பதிகமாகும் என வெள்ளைவாரணனார் கூறுவர்.



4. 069   திருக்கோவலூர் வீரட்டம்             திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
செத்தையேன். சிதம்பன், நாயேன்,
         செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி, நாளும்
         புகல்இடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்,
         இருள்அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே,
         கோவல் வீரட்ட னீரே.

         பொழிப்புரை : திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே ! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய், பண்பிலேனாய் , நாய் போன்றேனாய் , குற்றமுடையேனாய் , முடைநாற்றம் உடையேனாய் , அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய் , இருள்தீர மனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன் ? யாது செயற்பாலேன் ?


பாடல் எண் : 2
தலைசுமந்து இருகை நாற்றித்
         தரணிக்கே பொறை ஆதுஆகி,
நிலையிலா நெஞ்சம் தன்னுள்
         நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத்து அறுக்க மாட்டேன்,
         வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்,
குலைகள்மாங் கனிகள் சிந்தும்
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக் கோவலூர்ப் பெருமானே ! தலையைச் சுமந்து கொண்டு , இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன் .


பாடல் எண் : 3
வழித்தலைப் படவும் மாட்டேன்,
         வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன் பாசம் அற்று,
         பரம,நான் பரவ மாட்டேன்,
இழித்திலேன் பிறவி தன்னை,
         என்நினைந்து இருக்க மாட்டேன்,
கொழித்துவந்து அலைக்கும் தெண்ணீர்க்
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தெளிந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே ! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய் , நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய் , இப் பிறப்பை இழிவாகக் கருதேனாய் , யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன் .


பாடல் எண் : 4
சாற்றுவர் ஐவர் வந்து
         சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர், கனலப் பேசிக்
         கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர், அலந்து போனேன்,
         ஆதியை அறிவுஒன்று இன்றிக்
கூற்றுவர் வாயில் பட்டேன்,
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கோவலூர்ப் பெருமானே ! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண் , செவி , மூக்கு , வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன் .


பாடல் எண் : 5
தடுத்திலேன் ஐவர் தம்மை,
         தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கி,
         பன்மலர்ப் பாதம் உற்ற
அடுத்திலேன், சிந்தை ஆர
         ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன், கொடியவா நான்,
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே !


பாடல் எண் : 6
மாச்செய்த குரம்பை தன்னை
         மண்இடை மயக்கம் எய்து
நாச்செய்த நாலும் ஐந்து
         நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயம் தன்னுள்
         நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க ஆற்றேன்,
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கோவலூர்ப் பெருமானே ! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக , ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் .


பாடல் எண் : 7
படைகள்போல் வினைகள் வந்து
         பற்றிஎன் பக்கல் நின்றும்
விடகிலா, ஆத லாலே
         விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடையிலேன், என்செய் கேன்நான்,
         இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடைஇலேன் கொள்வதே நான்,
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கோவலூர்ப் பெருமானே ! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால் , என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன் , பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .


பாடல் எண் : 8
பிச்சிலேன், பிறவி தன்னைப்
         பேதையேன் பிணக்கம் என்னும்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து,
         துயரமே இடும்பை தன்னுள்
அச்சுஅனாய், ஆதி மூர்த்திக்கு
         அன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வது என்னே,
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கோவலூர்ப் பெருமானே ! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன் . உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது ?


பாடல் எண் : 9
நிணத்துஇடை யாக்கை பேணி
         நியமஞ்செய்து இருக்க மாட்டேன்,
மணத்துஇடை ஆட்டம் பேசி
         மக்களே சுற்றம் என்னும்
கணத்துஇடை ஆட்டப் பட்டுக்
         காதலால் உன்னைப் பேணும்
குணத்துஇடை வாழ மாட்டேன்,
         கோவல்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கோவலூர்ப் பெருமானே ! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய் , திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற்படுத்தப் பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன் .


பாடல் எண் : 10
விரிகடல் இலங்கைக் கோனை
         விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச்
         சிரங்களும் நெரிய ஊன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
         படைகொடுத்து அருளிச் செய்தார்,
குரவொடு கோங்கு சூழ்ந்த
         கோவல் வீரட்ட னாரே.

         பொழிப்புரை : குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான் , விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர் .

திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...