அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பங்கம் மேவும்
பிறப்பு (திருச்செந்தூர்)
திருவடித் தாமரையைச் சேர
தந்தனா
தந்தனத் தந்தனா தந்தனத்
தந்தனா தந்தனத் ...... தனதான
பங்கமே
வும்பிறப் பந்தகா ரந்தனிற்
பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப்
பஞ்சபா
ணம்படப் புண்படா வஞ்சகப்
பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர்
தங்களா
லிங்கனக் கொங்கையா கம்படச்
சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதே
தண்டைசூழ்
கிண்கிணிப் புண்டரீ கந்தனை
தந்துநீ யன்புவைத் ...... தருள்வாயே
அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்
தண்டவே தண்டமுட் ...... படவேதான்
அஞ்சவே
திண்டிறற் கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனே
திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகை
சிந்தையே
தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பங்கம்
மேவும் பிறப்பு, அந்தகாரம் தனில்,
பந்த பாசம் தனில் ...... தடுமாறி,
பஞ்ச
பாணம் பட, புண்படா வஞ்சகப்
பண்புஇல் ஆடம்பரப் ...... பொதுமாதர்
தங்கள்
ஆலிங்கனக் கொங்கை ஆகம்படச்
சங்கைமால் கொண்டு இளைத்து ......அயராதே,
தண்டை
சூழ் கிண்கிணிப் புண்டரீகம் தனை
தந்து, நீ அன்பு வைத்து
...... அருள்வாயே,
அங்கை
வேல் கொண்டு, அரக்கன் ப்ரதாபம் கெடுத்து,
அண்ட வேதண்டம் உட் ...... படவேதான்,
அஞ்சவே
திண்திறல் கொண்டல் ஆகண்டலற்கு
அண்ட லோகம் கோடுத்து ...... அருள்வவோனே!
திங்கள்
ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன்
செஞ்சடா பஞ்சரத்து ...... உறுதோகை
சிந்தையே!
தென்திசைத் தென்றல் வீசும் பொழில்
செந்தில் வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
பதவுரை
அம்கை வேல் கொண்டு --- அழகிய
திருக்கரத்திலே வேலாயுதத்தை எடுத்துக் கொண்டு,
அரக்கன் ப்ரதாபம் கெடுத்து --- சூரபன்மனுடைய
பெருமையை அழித்து,
அண்ட வேதண்டம் உள்படவே தான் அஞ்சவே ---
அண்டங்களும் மலைகளும் உள்பட யாவும்,
அஞ்சும்படி,
திண்திறல் --- திண்ணிய வலிமையுடைய,
கொண்டல் ஆகண்டலற்கு --- மேகத்தை வாகனமாகவுடைய
இந்திரனுக்கு,
அண்டலோகம் கொடுத்து அருள்வோனே ---
தேவலோகத்தைத் தந்து அருள் புரிந்தவரே!
திங்கள், ஆர், கொன்றை, மத்தம், துழாய் துன்று --- சந்திரனையும், ஆத்திமலரையும், கொன்றை மலரையும், ஊமத்தம் பூவையும், துளசியையும், நெருக்கமாக அணிந்து,
பொன் செம்சடா பஞ்சரத்து உறு தோகை சிந்தையே ---
அழகுடன் விளங்கும் சிவந்த சடையாகிய
கூட்டில் வாழ்கின்ற மயில் போன்ற கங்காதேவியின் சிந்தைக்கு உகந்தவரே!
தென்திசை தென்றல் வீசும் பொழில் ---
தென் திசையிலிருந்து வரும் தென்றல் காற்று வீசுகின்ற மலர்ச் சோலைகளையுடைய,
செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள செம்மைப் பண்புடைய
தமிழ்க் கடவுளாகிய பெருமையின் மிகுந்தவரே!
பங்க மேவும் பிறப்பு அந்தகாரந்தனில் ---
குற்றம் நிறைந்த பிறவியாகிய இருளிலும்,
பந்தபாசந்தனில் தடுமாறி ---
கட்டுப்படுத்துகின்ற பாசத்திலும்,
தடுமாற்றமடைந்து,
பஞ்சபாணம் பட --- ஐந்து கணைகளும் பட்டதனால்,
புண்படா --- மனம் புண்பட்டு,
வஞ்சக பண்பு இல் ஆடம்பர பொது மாதர் தங்கள் ---
வஞ்சனையுடையவரும், நல்ல பண்பு
இல்லாதவரும், ஆடம்பரம் புரிபவருமாகிய, பொதுமகளிருடைய,
ஆலிங்கன கொங்கை --- தழுவுவதனால் தனங்கள்,
ஆகம்பட --- என் உடம்பில் பொருந்த,
சங்கைமால் கொண்டு இளைத்து அயராது --- ஐயமும்
மயக்கமும் அடைந்து அதனால் இளைப்புற்று அடியேன் அயர்ச்சி யடையாவண்ணம்,
தண்டை சூழ் கிண்கிணி --- தண்டையையும்
சூழ்ந்துள்ள கிண்கிணியையும் அணிந்துள்ள,
புண்டரீகந்தனைத் தந்து --- தாமரையனைய திருவடியைத் தந்து,
நீ அன்பு வைத்து அருள்வாயே --- தேவரீர்
அடியவன் மீதுகருணை வைத்துத் திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
வேற்படையை அழகிய கரத்தில் கொண்டு
சூரபன்மனுடைய பெருமையை அழித்து,
அண்டங்கள்
மலைகள் முதலியயாவும் அஞ்சுமாறு செய்து, திண்ணிய
வலிமையுடைய மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுக்கு தேவலோகத்தைக் கொடுத்து
அருள்புரிந்தவரே!
சந்திரன், ஆத்திமலர், கொன்றைப் பூ, ஊமத்தம் பூ, துளசி இவைகள் நெருங்கியுள்ள அழகிய
சிவந்த சடையாகிய கூண்டின் கண் இருக்கின்ற கங்கா தேவியின் திருவுள்ளத்தில்
விளங்கும் பாலகரே!
தென் திசையிலிருந்து தவழுகின்ற தென்றல்
காற்று வீசுகின்ற பூம்பொழில்கள் சூழும் திருச்செந்தூர் என்ற திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள செந்தமிழ்க் கடவுளாக விளங்கும் பெருமிதம் உடையவரே!
குற்றம் நிறைந்த பிறவியாகிய இருளிலும், கட்டுப்படுத்தும் ஆசையாகிய சுழலிலும், தடுமாற்றமுற்று, மன்மதனுடைய ஐந்து மலர்க்கணை களும் பட்டு
அதனால் நெஞ்சு புண்பட்டு, வஞ்சனையைச்
செய்பவரும், நற்பண்பு இல்லாதவரும், ஆடம்பரமாக வாழ்பவரும் ஆகிய பொது
மாதருடைய தனங்கள் தழுவிக் கொள்வதனால் என் உடம்பில் பொருந்த அதனால் ஐயமும்
மயக்கமும் அடைந்து இளைப்புற்று,
அயர்ந்து
போகாவண்ணம், தண்டையும்
கிண்கிணியும் சூழ்ந்துள்ள திருவடிக்கமலங்களை அடியேனுக்கு அளித்து எளியேன் மீது
தேவரீர் கருணை வைத்துத் திருவருள் புரிவீர்.
விரிவுரை
பங்க
மேவும் பிறப்பு அந்தகாரம் ---
பங்கம்-குறைவு.
பிறப்பு பலப்பல குறைவுகளுடன் கூடியது. குறைவு இன்றி நிறைவுடன் கூடியவர் இறைவர்
ஒருவரே! நாம் அனைவரும் குறைவுடன் கூடியே பிறந்திருக்கின்றோம்.
அறிவு
இருந்தால் அழகு இராது; அழகு இருந்தால் அறிவு
இராது;
இரண்டும்
இருந்தால் அடக்கம் இராது;
செல்வம்
இருந்தால் கருணை இராது; சிலருக்கு உடல் நலம் இராது;
மக்கள்
இருந்தால் செல்வம் இராது; தனம் இருந்தால் மனம் இராது; மக்கள் இராது;
இப்படி
ஏதாவது குறைவு இருக்கும்.
இருள், பொருள்களை மறைக்கும். ஆணவ இருள்
இருளினும் வலிமையுடையது. இருள் எல்லாவற்றையும் மறைக்குமே யன்றித் தன்னை மறைக்காது; ஆணவம் தன்னையும் காட்டாது மறைத்து, மற்றவற்றையும் மறைத்துக் கொடுமை புரியும். எல்லா வகையான தீமைகட்கும்
மூலக்காரணம் ஆணவமலமே ஆகும். அது ஆன்மாவுக்கு செம்புக்குக் களிம்புபோல் அநாதியே
உண்டு. அதன் வலிமையைக் கெடுப்பதுவே பதிஞானமாகும்.
பந்த
பாசம்
---
பந்தம்-கட்டு.
மக்கள், மனைவி, உறவு முதலியவர்கள் ஆசைவைத்து அவர்கள்
நலத்திற்காகவே பலப்பல முயற்சி செய்து மாந்தர் உழல்வர். மனைவி மீதுள்ள பாசத்தை
விடுத்தவர் இயற்பகை முதலியோர். மக்கட் பாசத்தை விடுத்து வீடு பெற்றவர்
சிறுத்தொண்டர். பாச நாசம் ஈசன் நேசத்தால் வரும்.
பஞ்ச
பாணம்
---
மன்மதன்
ஆன்மாக்களை மயக்கி வேட்கைத் தீ மூளுமாறு ஐந்து பூங்கணைகளை விடுவான். அக்கணைகளால்
அல்லல்படுவோர் பலர். முருகன் அருள் பெற்றார் அக்கணைகளை வெல்வர்.
“மாரன் வெற்றி கொள்
பூமுடிக் குழ
லார் வியப்புற நீடு மெய்த்தவர்
வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே” --- (ஏதுபுத்தி) திருப்புகழ்.
வஞ்சகப்
பண்பில் ஆடம்பரப் பொது மாதர் ---
பண்பு
என்பது ஓர் உயர்ந்த குணம். அறிவு மனிதனை உயர்த்தும்; அந்த அறிவினும் பல்லாயிரம் மடங்கு
உயர்ந்தது பண்பு. அறிவு மூளையை உறைவிடமாகக் கொண்டது. பண்பு உள்ளத்தை உறைவிடமாகக்
கொண்டது. பண்பில்லாத அறிவுடைய மனிதனை மரத்திற்கு நிகராகக் கூறுகின்றார்
திருவள்ளுவர்.
அரம்போலும்
கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு
இல்லா தவர்
இத்தகைய
பண்பு பொதுமாதர் பலரிடம் இல்லை. ஆடம்பரமும் அதிகம் புரிவர்.
சங்கை
மால் கொண்டு இளைத்து அயராதே ---
சங்கை-சந்தேகம்.
பொதுமகளிர்பால் நட்பு கொள்வோர் அவள் வேறு ஒருவனைக் காதலிக்கின்றாளோ என்று அடிக்கடி
ஐயுறுவர்.
மாதவி
என்ற கணிகை சிறந்த நெறியும் பண்பும் உடையவள். அவள் கலையில் ஈடுபட்ட கோவலன் அவளுடன்
ஒன்றி வாழ்ந்தான். இந்திர விழா நிகழ்ந்தபோது கடற்கரையில் படாம்மனையில் இருவரும்
இனிது இன்புற்று உறைந்தார்கள். கானல்வரி என்ற பண்ணை அவள் வீணையில் இசைத்துப்
பாடினாள். அவள் உள்ளம் வேறு பட்டனள்போலும் என்று ஐயுற்ற கோவலன் அவளைவிட்டு
அகன்றனன்.
எனவே, நல்லொழுக்கம் பூண்ட மாதவியையே கோவலன்
ஐயுற்றனன் என்றால், ஒழுக்கமில்லாத
கணிகையரைக் காமுகர் ஐயுறுவதில் வியப்பு ஒன்றும் இல்லைதானே?
இனி, ஐயத்துடன் மயக்கமும் அடைவர். காமத்தால்
வெகுளியும், வெகுளியால் மயக்கமும்
தோன்றும். முருகனுடைய திருவடித் தியானத்தால் இவைகள் நீக்கும்.
காமம்
வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம்
கெடக்கெடும் நோய். ---
திருக்குறள்.
தண்டைசூழ்
கிண்கிணிப் புண்டரீகம் ---
முருகன்
என்றும் மாறாத இளமை நலம் உடையவர். தன்னை வழிபடும் அடியார்க்கு, “மணங்கமழ் தெய்வத்து இள நலங்காட்டி”
அருள் புரிவார். இளம்பூரணன் ஆதலின் அவர் திருவடியில் தண்டையும் கிண்கிணியும்
இலகுகின்றன.
அரக்கன்
ப்ரதாபங் கெடுத்து ---
சூரபன்மன்
ஆணவமலம். ஆணவமலம் ஒருபோதும் அழியாது. “உள்ளம் சிதையாது; இல்லது தோன்றாது” என்பது சற்காரிய
வாதம்.
ஆணவமலம்
வலிகுன்றி அடங்கி நிற்கும்.
ஆகவே
ஆணவமலமாகிய சூரன், தனது வலிமைக் குன்றி
மயிலும் வேலுமாகிய நன்னெறி நின்றான். எனவே முருகன் சூரனைக் கொல்லவில்லை.
செஞ்சடா
பஞ்சரத்து உறு தோகை ---
சிவந்த
சடையாகிய கூட்டினுள் உறைகின்ற கங்கை. பஞ்சரம்-கூடு. ’எண்குணபஞ்சரனே’ என்று
கந்தரநுபூதி 15-யிலும்
கூறியிருக்கின்றார்.
சிந்தையே ---
கங்கையின்
திருவுள்ளத்தில் எழுந்தருளி யிருக்கின்றவரே! என்பது பொருள். ’சிந்தையாய் நின்ற
சிவனே போற்றி’ என அப்பரும், “தெருளிடத் தடியார்
சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமாளே” என்று மணிவாசகரும் துதிக்கின்றார்கள்..
செந்தமிழ்ப்
பெருமாளே
---
தமிழும்
முருகனும் ஒன்றே என்பதை எனது செந்தமிழ் இன்பம் என்னும் நூலில் காண்க. தமிழின் பயனாக, தமிழை விரித்த தயாபரனாக, தமிழ் மாலை தரித்த தகவோனாக விளங்குபவன்
முருகன்.
கருத்துரை
இந்திரனுக்கு
அருளிய செந்தில் கடவுளே, பிறவிச் சுழலில்
புகாவண்ணம் எளியேனுக்குத் திருவடியைத் தருவீர்.
No comments:
Post a Comment