திருச்செந்தூர் - 0078. பதும இருசரண்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பதும இருசரண் (திருச்செந்தூர்)

பொதுமாதர் மயக்கம் அற

தனன தனதனந் தத்தத் தத்தத்
     தனன தனதனந் தத்தத் தத்தத்
          தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான


பதும இருசரண் கும்பிட் டின்பக்
     கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்
          பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ...... கயல்போலும்

பரிய கரியகண் செம்பொற் கம்பிக்
     குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப்
          பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப்

புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்
     தினிது வரையவெண் சந்தத் திந்துப்
          புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி

பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்
     கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்
          பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் ......தவிரேனோ

திதிதி ததததந் திந்திந் தந்தட்
     டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
          தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா

திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
     திரிரி தரரவென் றென்றொப் பின்றித்
          திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ......சுவர்சோரச்

சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற்
     புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்
          தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் ......க்ருபைதாவென்

சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்
     பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்
          சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பதும இருசரண் கும்பிட்டு, இன்பக்
     கலவி நலமிகும் துங்கக் கொங்கைப்
          பகடு புளகிதம் துன்றக் கன்றி, ...... கயல்போலும்

பரிய கரியகண் செம்பொன் கம்பிக்
     குழைகள் பொர மருண்டு, இன்சொல் கொஞ்சிப்
          பதற, விதம் உறும் கந்துக் கொந்துக் ...... குழல்சாய,

புதுமை நுதிநகம் பங்கத்து, அங்கத்து
     இனிது வரைய, வெண் சந்தத்து இந்துப்
          புருவ வெயர்வுடன் பொங்க, கங்கைச் ...... சடைதாரி

பொடிசெய்து அருள் மதன் தந்த்ரப் பந்திக்கு,
     அறிவை இழவிடும் பண்புத் துன்பப்
          பொருளின் மகளிர்தம் அன்புப் பண்பைத் ......தவிரேனோ?

திதிதி ததததந் திந்திந் தந்தட்
     டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
          தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா

திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
     திரிரி தரரஎன்று ஒன்று ஒப்பு இன்றித்
          திமிலை பறை அறைந்து, எண்திக்கு அண்டச் ......சுவர்சோர,

சதியில் வருபெரும் சங்கத் தொங்கல்
     புய அசுரர் வெகுண்டு அஞ்சி, குஞ்சித்
          தலைகொடு அடிபணிந்து எங்கட்கு உன்கண் ......க்ருபைதா என்

சமர குமர! கஞ்சம் சுற்றும் செய்ப்
     பதியில் முருக! முன் பொங்கித் தங்கிச்
          சலதி அலைபொரும் செந்தில் கந்த! ...... பெருமாளே.


பதவுரை

         திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடிடடடடண் டிண்டிட்டண்டத் தெனன தனதனந் தெந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தரர என்று --- திதிதி..... தரர என்ற ஒலியுடன் பன்முறை,

     ஒப்பின்றி திமிலை பறை அறைந்து --- ஒப்பில்லாத முறையில் திமிலை என்ற பறை வாத்தியத்தை முழக்கி,

     எண்திக்கு --- எட்டுத் திசைகளும்,

     அண்ட சுவர் சோர - அண்டத்தின் சுவர்களும் சோருமாறு,

     சதியில் வரு பெரும் சங்க --- வஞ்சனை எண்ணத்துடன் வருகின்ற பெரிய கூட்டமான,

     தொங்கல் புய அசுரர் - மாலை அணிந்த புயங்களையுடைய இராக்கதர்கள்,

     வெகுண்டு அஞ்சி --- கோபித்தும், பின்னர் பயந்தும்,

     குஞ்சி தலைகொடு அடி பணிந்து --- குடுமியுடைய தலையுடன் திருவடியில் பணிந்து,

     எங்கட்கு உன் கண் க்ருபை தா என் சமர குமர --- எங்களுக்கு உனது திருவருளைத் தரவேண்டும் என்று கேட்கும்படி போர்செய்த குமாரக் கடவுளே!

         கஞ்சம் சுற்றும் செயப் பதியில் முருக --- தாமரைக் குளங்கள் சூழ்ந்துள்ள வயலூரில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானே!

         முன் பொங்கி தங்கி --- எதிரில் பொங்கியும் தங்கியும்,

     சலதி அலைபொரும் செந்தில் கந்த --- கடலின் அலைகள் கரையில் மோதுகின்ற திருச்செந்தூரில் வாழுகின்ற கந்தக் கடவுளே!

         பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

         பதும இருசரண் கும்பிட்டு --- தாமரை போன்ற இரண்டு பாதங்களையும் கும்பிட்டு,

     இன்ப கல்வி நலமிகும் --- இன்பமான கலவிச்சுகம் மிகுந்துள்ள,

     துங்க கொங்கை பகடு புளகிதம் துன்ற --- உயர்ந்த தனங்களின் பரப்பு புளகம் கொள்ள,

     கன்றி கயல் போலும் பரிய கரிய கண் --- சினக் குறிப்புள்ள மீன்போன்ற விசாலமான கருமைநிறம் பொருந்திய கண்,

     செம்பொன் கம்பி குழைகள் பொர --- சிவந்த பொற்கம்பியுடன் கூடிய தோடுகளைத் தாக்க,

     மருண்டு இன்சொல் கொஞ்சி பதற --- மருட்சியுடன் இனிய மொழிகள் கூறிப் பதற,

     விதமுறும் கந்து கொந்து குழல் சாய --- விதவிதமாகத் தொடுத்துள்ள பூங்கொத்துக்கள் கொண்ட கூந்தல் சரிய,

     புதுமை நுதி நகம் பங்கத்து --- புதிய வகையில் நுதி நகத்தால் விகாரப்படும்படி

     அங்கத்து இனிது வரைய --- உடலில் அடையாளம் இனிதாகச் செய்ய,

     எண் சந்தத்து இந்து புருவ வெயர்வை உடன் பொங்க --- மதிக்கத்தக்க அழகிய பிறைபோன்ற புருவத்தில் வியர்வை எழுமாறு,

     கங்கை சடைதாரி --- சடையில் கங்கையைத் தரித்த சிவபெருமான்,

     பொடி செய்து அருள் மதன் --- பொடியாக்கிய மன்மதனுடைய,

     தந்த்ர பந்திக்கு --- சேனையாகிய மகளிர் கூட்டத்திற்கு,

     அறிவை இழவிடும் பண்பு --- அறிவைத் தொலைக்கும் மனப் பான்மையையும்,

     துன்ப பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை --- துன்பந் தரும் பொருட் பெண்டிர் மீது அன்பு செய்யும் மனப் பான்மையையும்,

     தவிரேனோ --- விட்டு ஒழிக்கமாட்டேனோ?


பொழிப்புரை

         திதிதி ததததந் திந்திந் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்த திந்திந்தித் தித்தித்திரிரி தரர என்ற ஒலிக்குறிப்புடன், ஒப்பில்லாத வகையில் திமிலை என்ற பறைவாத் தியத்தை முழக்கி, எட்டுத்திசைகளும், அண்டச் சுவர்களும் சோரும்படி, வஞ்சனை எண்ணத்துடன் வந்த பெருங்கூட்டமான மாலைகள் யணிந்த புயங்களை யுடைய அரக்கர்கள், முதலில் கோபித்தும், பின்னர் அச்சமுற்றும், தங்கள் குடுமியுடன் கூடிய தலை கீழே படுமாறு பாதத்தில் பணிந்து, எங்களுக்கு உனது அருளைத் தரவேண்டும் என்று வேண்டுமாறு போர்செய்த குமார மூர்த்தியே!

         தாமரைக் குளங்கள் சூழ்ந்துள்ள வயலூரில் வாழ்கின்ற முருகவேளே! எதிரில் பொங்கியும் தங்கியும் கடல் அலைகள் கரையில் மோதுகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளே!

         பெருமிதம் உடையவரே!

         விலை மகளிருடைய தாமரை போன்ற இரண்டு பாதங்களையும் தொழுது, இன்பமான கலவி நலம் மிகுந்துள்ள உயர்ந்த தனங்களின் பரப்பு புளகங்கொள்ளவும், கோபக்குறியுள்ள கயல்மீன் போன்ற பெரியகரிய கண்கள் பொற்கம்பியுடன் கூடிய குழைகளைத் தாக்கவும், மருட்சியுடன் இனிய சொற்களைக் கொஞ்சிப்பேசிப் பதறவும், பல விதமாகப் பிணைத்துள்ள பூங்கொத்துக்களையுடையகூந்தல் சரியவும், புதிய வகையில் நகநுனியால் விகாரப்படும்படி உடலில் இனிதாக அடையாளங்களைச் செய்யவும், மதிக்கத்தக்க அழகிய பிறைபோன்ற புருவங்களில் வியர்வைத் தோன்றவும், கங்கையை சடையில் தரித்த சிவபெருமான் பொடி செய்த மன்மதனுடைய சேனைகளாகிய மாதர் கூட்டத்துக்கு அறிவைத் தொலைக்கும் மனப்பான்மையையும், துன்பம் தரும் பொருட் பெண்டிர் மேல் அன்பு கொள்ளும் மனப்பான்மையையும் அடியேன்
விடமாட்டேனோ?

விரிவுரை

இப்பாடலின் பாதி, விலைமகளிரால் விளையும் தன்மைகளைப் பற்றிக் கூறுகின்றது. மற்றப் பாதியில் ஆறு வரிகளில் சூராதியவுணர்களது போரில் பறை முழக்கத்தின் தாளவரிசையை அழகாகக் கூறுகின்றார்.

பதும இருசரண் கும்பிட்டு ---

மாதர் மீதுமோகமுற்றவர்கள், அவர்கள் ஊடலுற்றபோது அவர்களைப் பணிந்து தணிந்து ஆறுதல் புரிவர்.

அசுரர் வெகுண்டு அஞ்சி ---

அசுரர்கள் போரில் முதலில் சினமுற்றார்கள்; பின்னர் அஞ்சினார்கள்.

கொஞ்சித்தலை கொடு அடி பணிந்து ---

குஞ்சி--ஆண்பால் மயிர். அவர்களது குடுமியுடன் கூடிய சென்னியை நிலத்தில் வைத்து வணங்கினார்கள்.
எங்கட்கு உன்கண் க்ருபை தா ---

முருகா! எங்களுக்கு உமது கருணையைத் தந்தருள வேண்டும் என்று கூறி, அந்த அசுரர்களில் சிலர் முறையிட்டார்கள்.

செய்ப் பதி ---

செய்-வயல்; பதி-ஊர். செய்ப்பதி - வயலூர். இத்தலம் அருணகிரிநாதருக்கு மிகுந்த விருப்பமானது. இங்கேதான் அவருக்குத் திருப்புகழ் பாடும் திறம் கிடைத்தது.

கருத்துரை

         அசுர குல காலரே! வயலூர் வள்ளலே! செந்திற் கடவுளே! மாதர் மீதுள்ள மயக்கந் தவிர அருள் புரிவீர்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...