திருச்செந்தூர் - 0035. உததிஅறல் மொண்டு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உததியறல் மொண்டு (திருச்செந்தூர்)

மாதர் மயல் உறாது, முருகன் திருவடியில் அன்பு செய்ய வேண்டல்

தனதனன தந்த தானதன
     தனதனன தந்த தானதன
          தனதனன தந்த தானதன ...... தந்ததான


உததியறல் மொண்டு சூல்கொள்கரு
     முகிலெனஇ ருண்ட நீலமிக
          வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய்

உதிரமெழு துங்க வேலவிழி
     மிடைகடையொ துங்கு பீளைகளு
          முடைதயிர்பி திர்ந்த தோஇதென ......வெம்புலாலாய்

மதகரட தந்தி வாயினிடை
     சொருகுபிறை தந்த சூதுகளின்
          வடிவுதரு கும்ப மோதிவளர் ......     கொங்கைதோலாய்

வனமழியு மங்கை மாதர்களின்
     நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
          வழியடிமை யன்பு கூருமது ......     சிந்தியேனோ

இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
     மணவறைபு குந்த நான்முகனும்
          எறிதிரைய லம்பு பாலுததி ......      நஞ்சராமேல்

இருவிழிது யின்ற நாரணனும்
     உமைமருவு சந்த்ர சேகரனும்
          இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்

முதல்வசுக மைந்த பீடிகையில்
     அகிலசக அண்ட நாயகிதன்
          மகிழ்முலைசு ரந்த பாலமுத ......    முண்டவேளே

முளைமுருகு சங்கு வீசியலை
     முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
          முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


உததி அறல் மொண்டு சூல்கொள், கரு
     முகில் என இருண்ட நீலம் மிக
          ஒளி திகழு மன்றல் ஓதி, நரை ...... பஞ்சுபோல்ஆய்,

உதிரம் எழு துங்க வேலவிழி
     மிடை கடை ஒதுங்கு பீளைகளும்
          முடைதயிர் பிதிர்ந்ததோ இதுஎன .....வெம் புலால்ஆய்,

மத கரட தந்தி வாயின் இடை
     சொருகு பிறை தந்த சூதுகளின்
          வடிவு தரு கும்ப மோதி வளர் ......கொங்கை தோலாய்,

வனமுஅழியு மங்கை மாதர்களின்
     நிலைதனை உணர்ந்து, தாளில் உறு
          வழி அடிமை அன்பு கூரும் அது ...... சிந்தியேனோ?

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின்
     மணஅறை புகுந்த நான்முகனும்,
          எறிதிரை அலம்பு பால்உததி, ...... நஞ்சு அராமேல்
  
இருவிழி துயின்ற நாரணனும்,
     உமை மருவு சந்த்ர சேகரனும்,
          இமையவர் வணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்

முதல்வ! சுக மைந்த! பீடிகையில்
     அகில சக அண்ட நாயகி தன்
          மகிழ் முலை சுரந்த பால்அமுதம் ...... உண்டவேளே!

முளை முருகு சங்கு வீசி, லை
     முடுகி, மை தவழ்ந்த வாய்பெருகி,
          முதலி வரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.


பதவுரை

         இதழ்பொதி அவிழ்ந்த தாமரையில் மண அறை புகுந்த நான்முகனும் --- இதழின் கட்டு விரிந்த தாமரை மலரில்,  வாசனையுடைய வீடாக அமர்ந்திருக்கின்ற பிரமதேவரும்,

     எறிதிரை அலம்பு பால் உததி நஞ்சு அரா மேல் இருவிழி துயின்ற நாரணனும் --- அலைகள் வீசும் திருப்பாற்கடலில், நஞ்சுடன் கூடிய பாம்பின் மீது, இரு விழிகளும் துயில் புரிகின்ற திருமாலும்,

     உமை மருவு சந்த்ரசேகரனும் --- உமா தேவியாரை இடப்பாகத்தில் கொண்ட உருத்திரமூர்த்தியும்,

     இமையவர் வணங்கு வாசவனும் --- தேவர்கள் வணங்குகின்ற இந்திரனும்,

     நின்று தாழும் முதல்வ --- சந்நிதியின் முன்னே நின்று வணங்க அவர்கட்கு அருள்புரியும் முதற்கடவுளே!

         சுக மைந்த --- சுகத்தைத் தரும் குமார மூர்த்தியே!

         பீடிகையின் அகில ஜக அண்ட நாயகி தன் --- சிறந்த பீடத்தில் விளங்கும், எல்லா உலகங்களுக்கும் எல்லா அண்டங்களுக்குந் தலைவியாகிய உமாதேவியாருடைய,

     முகிழ்முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே --- குவிந்த திருமுலையினின்றும் சுரந்தபால் அமுதத்தைப் பருகிய  முருகவேளே!

         வளை முருகு சங்கு வீசி --- மிக்க இளமையான சங்குகளை கரையில் வீசியெறிந்து,

     அலை முடுகி --- அலைகடல் வேகமாக வீசுகின்றதும்

     மை தவழ்ந்த வாய்பெருகி முதல் இவரு --- மைநிறம் பொருந்தியதுமாகிய கடலின் அருகில் வளம் பெருகி, ஞானமுதல் உயர்கின்ற

     செந்தில் வாழ்வு தரு தம்பிரானே --- திருச்செந்தூரில் எழுந்தருளி அடியார்க்கு வாழ்வைத் தருகின்ற தனிப்பெருந் தலைவரே!

         உததி அறல் மொண்டு சூல்கொள் கருமுகில் என --- கடல் நீரை மொண்டு குடித்துக் கருக் கொண்ட கரிய மேகம்போல்,

     இருண்ட நீலம் மிக ஒளி திகழும் --- --- இருண்டுள்ள நீலநிற மிகுந்திருப்பதினால் ஒளி வீசுவதும்,

     மன்றல் ஓதி நரை பஞ்சுபோல் ஆய் --- வாசனை உடையதுமாகிய மயிரானது, நரைத்து பஞ்சுபோல் ஆகி,

     உதிரம் எழு துங்க வேல்விழி --- இரத்த ஓட்டம் நிறைந்து பரிசுத்தமாகிய வேல் போன்ற கண்கள்,

     மிடைகடை ஒதுங்கு பீளைகளும் --- செறிந்து ஓரங்களில் ஒதுங்குகின்ற பீளைகளும்,

     முடை தயிர் பிதிர்ந்ததோ இது என --- இது நாற்றமடிக்கின்ற தயிர் பிதிர்ந்ததுபோல்,

     வெம் புலால் ஆய் --- கொடிய தீய நாற்றத்துடன் கூடியதாகி,

     மத கரட தந்தி வாயின் இடை சொருகு --- கரட மதம் பொழிகின்ற யானையின் வாயினிடத்தே சொருகியுள்ள

     பிறை தந்த சூதுகளின் வடிவு தரு --- பிறைச் சந்திரனைப் போன்ற வடிவத்துடன் கூடிய தந்தத்தினால் கடைந்த சூதுக்கருவியைப் போன்று,

     கும்பம் மோதி வளர் கொங்கை தோலாய் --- குடத்தைத் தகர்த்து வளர்கின்ற தனங்கள் தோல் போலாகி,

     வனம் அழியு மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து --- அழகு அழிகின்ற இளம் பெண்களின் நிலைமையை உணர்ந்து,

     தாளில் உறு வழி அடிமை அன்பு கூரும் அது சிந்தியேனோ? --- தேவரீர் திருவடியில் பொருந்துகின்ற, வழிவழியாகிய அடிமை பூண்ட நாயினேன் அன்பு கூர்கின்ற நெறியினை எண்ண மாட்டேனோ?

பொழிப்புரை

         இதழ் விரிந்த தாமரையாகிய மணங்கமழும் கோயிலில் வாழுகின்ற நான்முகக் கடவுளும், அலைவீசுகின்ற திருப்பாற் கடலில் ஆதிசேடன்மீது அறிதுயில் புரிகின்ற நாராயண மூர்த்தியும், உமாதேவியாரை இடப்பாகத்திற் கொண்டவரும் சந்திரனை முடித்தவரும் ஆகிய உருத்திர மூர்த்தியும், தேவர்கள் தொழுகின்ற இந்திரனும் திருமுன் நின்று தொழ அருள்புரிகின்ற முழு முதற் கடவுளே! (ஆன்மாக்களுக்கு) இன்பத்தைத் தருகின்ற குமாரக் கடவுளே!

         சிறந்த பீடத்தில் விளங்கும் எல்லா உலகங்களுக்கும் அண்டங்களுக்கும் தலைவியாகிய உமையம்மையாரின் குவிந்த தனங்களினின்றுஞ் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய குமாரவேளே!

         மிக்க இளமையான சங்குகளை வீசும் அலைகளுடன் கூடி கரிய நிறம் பொருந்திய கடற்கரையில் ஞானமுதல் உயர்கின்ற திருச்செந்தூரில் எழுந்தருளி அடியார்க்கு வாழ்வு தருகின்ற தனிப்பெருந் தலைவரே!

         கடல் நீரை மொண்டு குடித்து கருக் கொண்ட மேகம்போல் இருண்ட நீல நிறம் மிகுந்து ஒளி வீசுகின்றதும், மணம் வீசுவதும் ஆகிய கூந்தல் நரைத்து பஞ்சு போலாகியும், உதிரம் நிறைந்து தூய வேல் போன்ற கண்களின் ஓரங்களில் நாறுகின்ற தயிர் பிதிர்ந்தது போல் பீளைகள் ஒதுங்கி தீய வாசனை வீசவும், கரட மதம் பொழிகின்ற யானையின் வாயில் பிறைச் சந்திரனைப்போல் திகழ்கின்ற தந்தத்தினால் கடைந்த சூதுக் காய்கள் போல், குடத்தை மோதி வளர்கின்ற தனங்கள் தோல்போல் ஆகியும், அழகு அழிகின்ற இளம் பெண்களின் நிலமையுணர்ந்து, தேவரீருடைய திருவடியில் பொருந்துகின்ற வழியடிமையாகிய நாயேன் அன்புகொண்டு உய்யும் நெறியைச் சிந்திக்க மாட்டேனோ?

விரிவுரை

உததியறல்மொண்டு.......பஞ்சு போலாய் ---

கல்வியின் பயன் கடவுளை அடைவதே.

“உள்ள நிறைக் கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்றால் தெள்ளி வடித்தறிந்த பொருள் சிவன் கழல் செறிவு” என்றார் சேக்கிழாரடிகள்.

கல்வியையும், அறிவையும், இறைவனுக்கே உரிமையாக்க வேண்டும். கற்புடைய பெண், தன் அழகையும் நலத்தையும் தன் கணவனுக்கே பயன்படுத்துவார்கள்.

அங்ஙனமின்றிக் கல்வி கற்று, அக் கல்வி  நலத்தை மாந்தர்கள் புகழ்வதில் பயன்படுத்துவது பேதைமை. காமதேனுவின் பாலைக் கமரில் உகுப்பதற்கு நிகராகும்.

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
 தாமே பெற வேலவர் தந்தது”                --- கந்தர் அநுபூதி

புலவர்கள் உய்வு நெறியுணராது பெண்களது குழலையும், விழியையும், மொழியையும், தனத்தையும் புகழ்ந்து பாழ்படுகின்றனர்.

கூந்தலை “மேகம்” என்றும், “கமுகின் பாளை” யென்றும், “சைவலம்” என்றும், “கருமணல்” என்றும் பற்பல புகழ்ந்து கவி பாடுவர். அத்தகைய கூந்தல் பின்னர் நரைத்து பஞ்சு போலாகி விடுகின்றது.

உதிரமெழு துங்க வேல விழி.......வெம்புலாலாய் ---

கண்களை “சேல்” என்றும், “வேல்” என்றும், “கணை” என்றும், “மான்” என்றும் பலப்பலவாக விதந்தும் வியந்தும் பாராட்டிப் பேசுவர். அக் கண்கள் பெண்கள் மூப்புற்றபோது, பீளை யொதுங்கி மிகுந்த அருவருப்புக்கு இடனாக தீய நாற்றம் வீசுவதாக ஆகின்றது.

தெண்ணீர்க் குவளை பொருகயல் வேல் என்று
கண்இல்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ?
உண்ணீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டு அன்ன
கண்ணீர்மை கண்டு ஒழுகு வேன்.          ---  நாலடியார்.

கண்களில் உள்ள நீர் வற்றிவிட்டால் நுங்கைத் தோண்டியதை யொத்து விகாரமாகின்றது.

ஆதலின் பெண்களின் கண்களை நயந்து வியந்து நலியாமல், இறைவனுடைய திருக்கண்களைப் புகழ்ந்து உய்தல் வேண்டும்.

மதகரட தந்த.......கொங்கை தோலாய் ---

யானை தந்தத்தால் கடைந்து செய்யப்பட்ட சூதுக் கருவியைப் போன்றது என்றும், `தாமரை முகை’ என்றும் புகழ்ந்து பேசப்பட்ட தனங்கள் தோலாகின்றன. அவைகளை நினைந்து மாலாகியழியற்க.

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்ப அலைக்கும் கும்பத்தைப்-பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலார் கண்விளக்கப் பட்டு.                ---  நாலடியார்.

அன்றியும் பெண்களது பற்களை “முல்லை அரும்பு” என்றும். “மயிலிறகின் அடி” யென்றும் வர்ணனை செய்வர். அந்தப் பற்கள் சுடலையில் உதிர்ந்து கிடப்பதைக் காணும்போது எத்துணை அருவருப்பாக இருக்கிறது.

முல்லைமுகை முறுவல் முத்துஎன்று இவை பிதற்றும்
கல்லாப் புன் மாக்கள கவற்ற விடுவனோ
எல்லாரும் காணப் புறங்காட்டு உதிர்த்து உக்க
பல் என்பு கண்டொழுகு வேன்.             ---  நாலடியார்.


வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து ---

அழகுபோல் தோன்றி, பின் அழிந்து நிலைகுலையும் மாதர்களைக் கண்டு மயங்குதல் மதியின்மை.

குடரும் கொழுவும் குருதியும் என்பும்
தொடரு நரம்பொடு தோலும்-இடையிடையே
வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.               ---  நாலடியார்.

இங்ஙனம் நிலைகுலையும் மாதரழகை அழகென்று கருதாது, என்றும் பொன்றாது அழகுடன் விளங்கும் இறைவனைப் பேணுதல் வேண்டும்.

தாளில் உறு வழியடிமை அன்புகூருமது சிந்தியேனோ? ---

இறைவனுடைய திருவடிக்கு அருணகிரிநாதர் வழிவழியாக அடிமைப்பட்டவர். அடிகள் பல இடங்களில் தம்மைப் பற்றி இவ்வண்ணம் கூறுகின்றனர்.

தஞ்சமாகியெ வழிவழி யருள்பெறும்
 அன்பினாலுன தடிபுக ழடிமையெ னெதிரே நீ”
                                                                    ---  (பஞ்சபாதக) திருப்புகழ்.

எழுமையும் எனைத் தனது கழல்பரவு பத்தன் என
 இனிய கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்”   
                                                               --- வேடிச்சி காவலன் வகுப்பு.

முடியவழி வழியடிமை எனும் உரிமை அடிமை முழுது
 உலகறிய மழலைமொழி கொடுபாடு மாசுகவி”
                                                                                     --- சீர்பாத வகுப்பு

அன்பு செய்வார்க்கு இறைவன் எளிதில் அருள் புரிவான். அன்புருவாய இறைவனை அன்பினாலேயே அடைதல் வேண்டும், “அன்பினில் விளைந்த ஆரமுது” ஆகிய இறைவன்பால் அன்பு செய்து இன்பம் எய்துக.

ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுவான்
ஆரேனும் காணா அரன்.             ---  திருக்களிற்றுப்படியார்.
    
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மணவறை புகுந்த நான்முகனும் ---

பிரமதேவர் தாமரைக் கமலத்தில் வீற்றிருப்பர். தாமரை மண்ணில் தோன்றுவது. மண்ணிலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன. பிரமதேவர் சிருஷ்டிக் கடவுள். ஆதலால் தாமரை மலரில் வாழ்கின்றனர். மலர்களில் உயர்ந்தது தாமரை. “பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை” என்பது தேவாரம்.

எறிதிரை அலம்பு பால் உததி நஞ்சு அராமேல் இருவிழி துயின்ற நாரணனும் ---

திருமால் திருப்பாற் கடலில் துயில்புரிகின்றனர். ஏன்? அவர் காத்தல் கடவுள். உலகில் உள்ள உயிர்களை எல்லாம் காப்பது நீர். “நீரின்றி அமையாது உலகம்” ஆதலின் நீரிடைத் துயில்கின்றனர். அன்றியும் ஆதிசேடன் வெள்ளை நிறமுடைய பாம்பு. அது சுழுமுனை என்ற வெள்ளைநாடி. அந்த சுழுமுனையில் திருமால் அறிதுயில் (யோக நித்திரை) செய்கின்றனர்.

உமை மருவு சந்திரசேகரனும் ---

உமையம்மையாரை இடபாகத்தில் கொண்ட சந்திரசூடியாகிய உருத்திரமூர்த்தி. இது பரமசிவத்தைக் குறிக்காது. உருத்திரர் வேறு. பரமசிவம் வேறு. உருத்திரர் மூவரில் ஒருவர். அவருக்குக் குணம் குறி செயல் வடிவு முதலியன உண்டு. அவர் சங்கார கர்த்தா. ஆதலின் சுடலையில் இருப்பர்.

பரமசிவம் மூவரும் அறியா முழுமுதல்; “சதுர்த்தம்” என்று உபநிடதங்கள் கூறுகின்றன. “மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்” என்பது திருவாசகம். இந்த நுணுக்கம் அறியாதவர் பரமசிவத்தை மூவரில் ஒருவராக எண்ணியும் கூறியும் இடர்ப்படுவர்.

தேவதேவன், மெய்ச் சேவகன், தென்பெருந்துறை நாயகன்,
மூவராலும் அறியஒணா முதல்ஆய ஆனந்த மூர்த்தியான்,
யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிய ஒணா மலர்ச் சோதியான்,
தூயமாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே.    ---  திருவாசகம்.

சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று, நஞ்சம் அஞ்சி,
ஆவ எந்தாய் என்று அவிதா இடு நம்மவர், அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண்ஆண்டு, மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவந் திரிதவரே.                   ---  திருவாசகம்.

இமையவர் வணங்கு வாசவனும் ---

வாசவன்-இந்திரன். தேவர்களுக்குத் தலைவன் ஆதலின் இந்திரனை இமையவர் வணங்குகின்றனர். இவன் மழைக்கு அதிகாரி; மேகநாதன், போகங்களை நுகர்பவன், அதனால் போகியெனப்படுவான்.

நின்று தாழும் முதல்வ ---

மாலும், அயனும், உருத்திரனும், இந்திரனும், குமாரக்கடவுள் திருமுன் நின்று தத்தம் தொழில்கள் இனிது நிகழுமாறு இறைஞ்சுகின்றனர். முத்தொழிலுக்கும் மூவர்க்கும் முதல்வர் முருகவேளே.

படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே”
                                                                    ---  (கனைத்ததிர்க்கு) திருப்புகழ்.

மன்னா வயற்பதி மன்னா மூவர்க்கொரு தம்பிரானே”
                                                                     ---  (என்னால்) திருப்புகழ்.

முளை முருகு சங்குவீசி ---

திருச்செந்தூர், கடற்கரையில் விளங்கும் ஓர் அருமையான திருத்தலம். “திருச்சீரலைவாய்” எனப்படும். அந்தக் கடல் அலைகள் சங்குகளையும் முத்துக்களையும் கொழிக்கின்றன. இயற்கை வளம் செறிந்த இனிய தலம்.

வாலுக மீதுவண்டல் ஓடிய காலில்வந்து
 சூல்நிறை வானசங்கு மாமணி ஈன உந்து
 வாரிதி நீர்ப் பரந்த சீரலை வாயுகந்த      பெருமாளே”  ---  (பூரணவார) திருப்புகழ்.

வாழ்வுதரு தம்பிரானே :-

   முருகவேள் செந்திலில் வாழ்வதனால் உயிர்கள் இன்புற்று வாழ்கின்றன.


கருத்துரை

   மூவர் முதல்வரே! உமைபாலரே! செந்திலாண்டவரே! மாதர்களது மயலில் மயங்காது உமது திருவடியில் அன்பு வைத்து உய்ய அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...