திருச்செந்தூர் - 0042. கரிக் கொம்பம்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரிக்கொம்பம் (திருச்செந்தூர்)

முருகா!
மாதர் மயலில் உழலாமல் உய்ய அருள்


தனத்தந்தம் தனத்தந்தம்
     தனத்தந்தம் தனத்தந்தம்
          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா


கரிக்கொம்பந் தனித்தங்கங்
     குடத்தின்பந் தனத்தின்கண்
          கறுப்புந்தன் சிவப்புஞ்செம் ......       பொறிதோள்சேர்

கணைக்கும்பண் டுழைக்கும்பங்
     களிக்கும்பண் பொழிக்குங்கண்
          கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச்

சரக்குஞ்சம் புடைக்கும்பொன்
     றுகிற்றந்தந் தரிக்குந்தன்
          சடத்தும்பண் பிலுக்குஞ்சம் ...... பளமாதர்

சலித்தும்பின் சிரித்துங்கொண்
     டழைத்துஞ்சண் பசப்பும்பெண்
          தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ

சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
     செழுத்தின்பங் களித்துண்பண்
          சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ......     கசுராரைத்

துவைத்தும்பந் தடித்துஞ்சங்
     கொலித்துங்குன் றிடித்தும்பண்
          சுகித்துங்கண் களிப்புங்கொண் ......   டிடும்வேலா

சிரப்பண்புங் கரப்பண்புங்
     கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
          சிவப்பண்புந் தவப்பண்புந் ......        தருவோனே

தினைத்தொந்தங் குறப்பெண்பண்
     சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
          செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ......   பெருமாளே.


பதம் பிரித்தல்


கரிக்கொம்பம் தனித் தங்கம்
     குடத்து இன்பம் தனத்தின்கண்,
          கறுப்பும் தன் சிவப்புஞ்செம் ...... பொறி, தோள்சேர்

கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு
     அளிக்கும் பண்பு ஒழிக்கும் கண்,
          கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் ...... குழைஆடு

அசரக் குஞ்சம் புடைக்கும் பொன்
     துகில் தந்தம் தரிக்குந்தன்
          சடத்தும் பண் பிலுக்கும், சம்- ......    பளமாதர்

சலித்தும், பின் சிரித்தும் கொண்டு,
     அழைத்தும் சண் பசப்பும் பெண்
          தனத்துன்பம் தவிப்பு உண்டுஇங்கு ......உழல்வேனோ?

சுரர்ச் சங்கம் துதித்து அந்த, ஞ்சு
     எழுத்து இன்பம் களித்து, ண் பண்
          சுகத்து உய்ந்து இன்பு அலர் சிந்துஅங்கு ......அசுராரைத்

துவைத்தும், பந்து அடித்தும், சங்கு
     ஒலித்தும், குன்று இடித்தும், பண்
          சுகித்தும், கண் களிப்பும் கொண் ...... டிடும்வேலா

சிரப்பண்பும், கரப்பண்பும்,
     கடப்பம் தொங்கலில் பண்பும்,
          சிவப்பண்பும், தவப்பண்பும் ......      தருவோனே!

தினைத் தொந்தம் குறப்பெண், பண்
     சசிப்பெண் கொங்கையில் துஞ்சும்
          செழிக்கும் செந்திலில் தங்கும் ......   பெருமாளே.


பதவுரை

         சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்செழுத்து இன்பம் களித்து --- தேவர்களின் கூட்டம் துதி செய்து அந்த திருவைந்தெழுத்தால் வரும் இன்பத்தில் மகிழ்ந்து,

     உண் பண் சுகத்து உய்ந்து இன்பு அலர் --- அமிர்தத்தை உண்டும் இசைப் பாடியும் சுகத்தில் திளைத்து இன்புறுதலை,

     அங்கு சிந்து அசுராரைத் துவைத்தும் --- அவ்விடத்தில் சிந்தும்படிச் செய்து துன்புறுத்திய அசுரர்களைக் கசக்கியும்,

     பந்து அடித்தும் --- பந்தாடுவது போல் தூக்கி எறிந்தும்,

     சங்கு ஒலித்தும் --- வெற்றிச் சங்கத்தை ஊதியும்,

     குன்று இடித்தும் --- கிரவுஞ்ச மலையைப் பிளந்தும்,

     பண் சுகித்தும் --- துதிப்பாடலைக் கேட்டும்,

     கண்களிப்பும் கொண்டிடு வேலா --- கண்கள் களிக்கின்ற வேலாயுதக் கடவுளே!

சிரப்பண்பும் கரப்பண்பும் --- தலையினுடைய நலனையும்,  கரங்களின் நலனையும்,

கடப்பம் தொங்கலின் பண்பும் --- கடப்ப மலர் மாலையின் நலத்தையும்,

சிவப் பண்பும் --- சிவமாம் தன்மையையும்,

தவப் பண்பும் தருவோனே --- தவநிலையையும் தந்தருள்பவரே!

தினை தொந்தம் குறப்பெண் --- தினைப்புனத்தில் தொடர்புடைய வள்ளியம்மை,

பண் சசிப்பெண் --- இசை நிறைந்த இந்திராணியின் மகளாகிய தெய்வயானை என்ற இரு தேவிகளின்,

கொங்கையில் துஞ்சும் --- தனங்களில் துயில்கின்ற,
செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே --- வளமை மிக்க திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

      கரி கொம்பு (அம்-சாரியை) --- யானையின் கொம்பைப் போலவும்,

     தனி தங்க குடத்து --- ஒப்பற்ற பொற்குடம் போலவும் திகழ்கின்ற,

     இன்பத் தனத்தின்கண் --- இன்பத்தைத் தருகின்ற கொங்கைகளையும்,

     கறுப்பும் தன் சிவப்பும் செம்பொறி --- கருநிறமும் செந்நிறமும் உடைய செவ்வரிகள் படர்ந்ததும்,

     தோள் சேர் --- தோள் வரை சேர்வதும்,

     கணைக்கும் --- அம்புக்கும்,

     பண்டு உழைக்கும் --- பழைமையான மானுக்கும்,

     பங்கு அளிக்கும் --- தனது தன்மையில் பங்கு தருவதும்,

     பண்பு ஒழிக்கும் --- குணத்தை அழிக்கவல்லதும் ஆகிய,

     கண் --- விழிகளையும்,

     சங்கு ஒலிக்கும் கழுத்து --- சங்கு நாணி ஒலிக்குமாறு அழகுடைய கழுத்தையும்,

     பொன்குழை --- பொன்னாலாகிய குழைகளையும்,

     ஆடு அசர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் --- அசைந்து சரம்போல் பக்கத்தில் தொங்கவிட்டுள்ள அந்த கொய்சகத்துடன் கூடிய பொன்னாடையையும்;

     தந்தம் தரிக்கும் தன் சடத்தும் --- தந்த மணிகளை அணிந்துள்ள சரீரத்தையும் கொண்டு,

     பண் பிலுக்கும் --- நன்கு பகட்டு செய்யும்,

     சம்பள மாதர் --- பொருள்பெறும் விலை மாதர்கள்,

     சலித்தும் --- பொருள் தராது ஒழியில் சலிப்புற்றும்,

     பின் சிரித்தும் --- பிறகு பொருள் தந்தால் புன்னகைப் புரிந்தும்,

     கொண்டு அழைத்தும் --- பொருள் கொண்டு அழைத்தும்,

     சண் பசப்பும் பெண் --- சார்ந்து பசப்புகின்ற அப்பெண்களின்,

     தனத் துன்பம் --- தனபாரங்களால் வருந்துன்பத்தை ஆடைந்து,

     தவிப்பு உண்டு இங்கு உழல்வேனோ --- தவிப்பை அடைந்து இங்கு அடியேன் அலைவேனோ?


பொழிப்புரை

         இறைவனைத் துதித்தும், பஞ்சாக்கரத்தை நினைத்து இன்புற்றும், அமிர்தத்தை உண்டும், கீதத்தைப் பாடியும் மகிழ்கின்ற தேவர் குழாங்கள் துன்புறுமாறு செய்த அசுரர்களைக் கசக்கியும், பந்துபோல் எடுத்து எறிந்தும், வெற்றிச் சங்கை ஒலித்தும், கிரவுஞ்சமலையைப் பிளந்தும், துதிப் பாடலைக் கேட்டருளியும், கண்களித்த வேலாயுதக் கடவுளே!

     சென்னியினுடைய நலனையும், கரங்களின் நலனையும், கடப்பமலர் மாலையின் நலனையும், சிவமாந்தன்மையையும், தவநிலையையும் தந்து அருள் புரிபவரே!

     தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளியம்மையார், இனிய இந்திராணியின் புதல்வியுமாகிய தெய்வயானை என்ற இரு அம்மையார்களின் தனங்களில் துயில்கின்ற வரும், செழுமை நிறைந்த செந்திலம்பதியில் எழுந்தருளியிருப்பவரும் ஆகிய பெருமிதம் உடையவரே!

         யானையின் கொம்பையும் ஒப்பற்ற பொற்குடத்தையும் ஒத்து இன்பத்தைத் தருகின்ற தனங்களையும், கருமை செம்மை நிறமுள்ள வரிகளையுடையதாய், தோள்களில் சேர்வதாய் அம்பையும் மானையும் ஒத்தாய், குணங்களை யழிப்பதாயுள்ள கண்களையும், சங்கு நாணும்படி யழகு செய்யுங் கழுத்தையும், பொன்னாலாகிய குழையையும், அசைக்கின்ற சரம்போல் தொங்கி அழகுற்று விளங்கும். அந்த கொய்சகத்துடன் கூடிய பொன்னாடையையும், தந்த மணிகளையணிந்த சரீரத்தையும் கொண்டு பகட்டிப் பொருள் பறிக்கும் விலைமாதர், பணத்தை நோக்கிச் சலித்தும், பணம் பெற்றவுடன் புன்னகைப் புரிந்தும், வீட்டிற் அழைத்துச் சென்றும் சார்ந்து பசப்புவர். அவர்களுடைய தனபாரங்களினால் துன்புற்றுத் தவித்து வீணில் அலையலாமோ?


விரிவுரை

கரிக்கொம்பு..........தனம் ---

     தனபாரத்திற்கு யானையின் கொம்பும், பொற்குடமும் உவமைகளாகும். விலைமகளிர் தனத்தால், இளைஞர் தனத்தைக் கவர்வர்.


கறுப்புந்தன் சிவப்பும் செம்பொறி ---

     கண்களில் கருநிற ரேகையும், செந்நிறரேகையும் படர்ந்திருக்கும். பொறி - வரி.அழகிய வரிகள்.


கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பொழிக்குங்கண் ---

     பெண்களின் கண்கள் அம்புபோல் கூர்மையாகவும், மான் விழிபோலவும் இருக்கும். ஆடவர்களுடைய பண்பையழிக்கும் தன்மையுடையது அக்கண்கள்.


கழுத்துஞ் சங்கொளிக்கும் ---

     கழுத்து சங்கைப்போல் அழகாக இருக்கும். கழுத்தின் அழகை நோக்கி நாணத்தினால் சங்கு தண்ணீரில் ஒளிக்கின்றது என்று தற்குறிப்பேற்ற வணியினால் கூறுகின்றனர்.


ஆடச் சரக் குஞ்சம் புடைக்கும் பொன் துயில் ---

     "ஆடு, அச்சரக் குஞ்சம்" எனப் பிரித்துக்கொள்க. விலை மகளிர் புடவையில் ஒரு பகுதியை நன்கு மடித்து ஒரு புறத்தில் தொங்கவிடுவர். அது அசைந்து அசைந்து ஆடும். அதற்கு கொய்சகம் என்று பேர். விலைமகளிர் நல்ல பொன்னாடைகளை யுடுத்து, அதனைப் பற்பலவாறு திருத்தி ஆடவரை மயக்குவர்.

பண் பிலுக்கும் ---

     உயர்ந்த ஆடை அணிகலன்களால் ஆடம்பரமாக அலங்கரித்துக் கொள்வர்.

சம்பள மாதர் ---

     சம்பளம் --- கூலி. கைப்பொருள் பெற்று பொருளுக்குத் தக்கப்படி அன்பைக் காட்டுவர்.


சலித்தும் ---

     பணம் தராவிடில் சலித்துக் கொள்வர்.

பின் சிரித்தும் ---

     பணந் தந்தபின் புன்முறுவல் காட்டுவர்.

கொண்டு அழைத்தும் ---

     பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்வர்.

சண் பசப்பும் பெண் --

     சண் --- சண்ணித்தல் (சார்ந்திருத்தல்). தம்பால் வந்து பொருள் தந்தவரைச் சார்ந்திருப்பர்.

சுரர்ச்சங்கம் அசுராரை ---

     தேவர்கள் எப்போதும் இறைவனைத் துதிசெய்தும், திருஐந்தெழுத்தை யோதியும் இன்புறுவர். அவர்களை சூராதிய வுணர்கள் இடர்ப் படுத்தி சிறையில் அடைத்து உண்ணல் இசை கேட்டல் முதலிய சுகங்களின்றி வருத்தினார்கள். அதனால் சுரர் அசுரர் என்ற இருதிறத்தினருக்கும் பொதுவாகிய இறைவன் அசுரரை அடக்கிச் சுரரை வாழ்வித்தனர்.

சிரப்பண்பு ---

     சிரப் பண்பாவது இறைவனுடைய திருவடிகளை வணங்குவதாகும். வணங்காத தலை உயர்வில்லாதது. பயனற்றதுமாகும். காணாத கண்ணும், கேளாத காதும்,பேசாத வாயும் இருந்தும் பயனின்றி இழிவு பெறுவது போல் இறைவனை வணங்காத தலையும் இகழத்தக்கதாம்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.                --- திருக்குறள்.

     அன்றியும் இறைவனை வணங்காத தலை மறுபிறப்பில் நன்றி மறந்த வினைப்பயத்தால் விறகு சுமந்து வேதனையுறும்.

சும்மாடு கட்டிச் சுமந்துழலு வார்சிலரை
இம்மா நிலத்தில் எண்ணுங்கால்-அம்மாநின்
பொன்னா ரடிமுடியைப் போற்றாத பேரன்றோ
மன்னா சிதம்பரதே வா.                  --- குருநமசிவாயர்.

எங்கள் பெருமான் உன்னை வணங்காத மூடர்தலை
இதழ் விறகு எடுக்குந்தலை”         --- இராமலிங்கர்.

வீட்டுத் தலைவநின் தாள்வணங்கார்தன் விரிதலைசும்
மாட்டுத் தலை,பட்டி மாட்டுத் தலை,புன் வராகத்தலை,
ஆட்டுத் தலை,வெறி நாய்த்தலை, பாம்பின் அருந்தலை,கல்
பூட்டுத்தலை, வெம்புலைத்தலை, நாற்றப் புழுத்தலையே.  --- இராமலிங்கர்.

     இனி அருணகிரிநாதருடைய சிரத்தில் முருகப்பெருமான் வேதாகமங்களின் சிரத்தில் விளங்கும் தனது திருவடிமலரைச் சூட்டினார்.

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும்படி தந்தது சொல்லு மதோ
வீடுஞ் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே.          --- கந்தர்அநுபூதி.

எனது தலையிற் பதங்கள் அருள்வோனே”     --- (களபமு) திருப்புகழ்

கரப் பண்பும் ---

     கரத்தின் பண்பாவது, கரத்தைத் தந்த இறைவனைக் கடிமா மலர்த் தூவி அர்ச்சித்து கைகூப்பித் தொழுவதேயாகும். அவ்வண்ணம் தொழுத கரங்கள் மறுபிறப்பில் நன்றி பாராட்டிய புண்ணியத்தால், பொன் வழங்கும் புனிதக் கரங்களாகத் திகழும். தொழாத கரங்கள் பிச்சையேற்க நீட்டும் துன்பத்தை அனுபவிக்கும்.

தோன்றல்உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள்
 சுவர்ணம் இடுகின்ற கைகள்.”                --- இராமலிங்கர்.

பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
 பலியேற்க நீள் கொடுங்கை”             --- இராமலிங்கர்.


     ஆடு மாடுகட்குக் கரங்கள் இல்லை. மனிதனுக்குக் கடவுள் கரங்களைத் தந்தனர். அவர் தந்த கரத்தால் அவரைத் தொழுதும், அவருடைய ஆலயங்களாகிய வறியவர்கட்கு இயன்றதை வழங்கியும் உய்தல் வேண்டும். ஆகவே, கரப் பண்பு வணங்குதலும், வழங்குதலும் ஆகும்.

கடப்பந் தொங்கலில் பண்பு ---

     முருகவேளுக்கு உகந்த கடப்பமலர்களைத் தொடுத்து மாலையாக்கி அவருடைய அடிமலரில் புனையவேண்டும்.


சிவப் பண்பும் ---

     சிவமாகுந் தன்மையை சீவர்கள் பெறுவதே முடிந்த முடிபு ஆகும். “சீவன் சிவசொரூபமென தேறி” என்கின்றார் பிறிதொரு திருப்புகழில். “சித்தமலமறுவித்து சிவமாக்கி” என்கின்றார் மாணிக்கவாசகர். சீவன் சிவனாகும் இயல்புடையது. சிவம் சாராதது சவம்தானே.

தவப் பண்பு ---

     சிவத்தை தவத்தால் அடைய முடியும். தவம் என்றால் சிந்தையை யடக்கிச் செந்நெறி நிற்றல் ஆகும்.

கருத்துரை

         அசுரகுல காவலரே! சிவாநுபவத்தைத் தருகின்றவரே! செந்திலாண்டவரே! மாதர் வயப்படாது உய்யுமாறு அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...