திரு நாவலூர்


திரு நாவலூர்
(திருநாமநல்லூர்)

     நடு நாட்டுத் திருத்திலம்

         சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.


இறைவர்         : பக்தஜனேசுவரர், திருநாவலேசுவரர்.

இறைவியார்      : மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை.

தல மரம்          : நாவல்.

தீர்த்தம்           : கோமுகி தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சுந்தரர் - கோவலன் நான்முகன்.

          இத்தலம் சுக்கிரன் வழிபட்ட தலம்.  மக்கள் வழக்கில் கொச்சையாகத் 'திருநாமநல்லூர் ' என்று வழங்குகின்றனர்.

         சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி.

          அவதாரத் தலம்   : திருநாவலூர்.
          வழிபாடு          : இலிங்க வழிபாடு.
          முத்தித் தலம்     : திருநாவலூர்.
          குருபூசை நாள்    : மார்கழி - திருவாதிரை.

சுந்தரர் அவதாரத் திருத்தலம்.

          அவதாரத் தலம்   : திருநாவலூர்.
          வழிபாடு          : குரு வழிபாடு.
          முத்தித் தலம்     : திருஅஞ்சைக்களம் / திருக்கயிலாயம்
          குருபூசை நாள்    : ஆடி - சுவாதி.

          இஃது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.

          திருமுறைத் தலமட்டுமன்று. அருணகிரிநாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது.

          உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது; பரவை, சங்கிலியார் சூல எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார்.

          நரசிங்க முனையரையர் அவதரித்து, அரசு வீற்றிருந்தவர்; குறுநில மன்னர்.

          அவதாரத் தலம்   : திருநாவலூர்.
          வழிபாடு          : சங்கம வழிபாடு.
          முத்தித் தலம்     : திருநாவலூர்.
          குருபூசை நாள்    : புரட்டாசி - சதயம்.

         தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்து அரசு புரிந்தனர்; சிவனடியார்களின் திருவடியை அடைதலே அரும்பேறென்று அடியாரைப் பணிந்தார். சிவன்கோயிலின் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.

         திருவாதிரை நாள்தோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வரும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.

         நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகில் அடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.

         நரசிங்கமுனையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேர் உருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைப் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றனர்.

          உள் பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

          கருவறைச் சுவரில் சண்டேசுவரர் வரலாறு சிற்ப வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களை துணிப்பது, இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது.

          நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிப்பட்ட சுக்கிரலிங்கம் உள்ளது.

          நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார்.

          கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு; கண்டு மகிழத் தக்கது.

          சுந்தரர் மடாலயம் அழகான முன்மண்டபம்; சுந்தரர் கையில் செண்டுடன் அழகாக காட்சி தருகிறார்; இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது; இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பன்ன அரிதாம் ஆவலூர் எங்களுடை ஆரூரன் ஆரூராம் நாவலூர் ஞானியருள் ஞாபகமே" என்று போற்றி உள்ளார்.

சுந்தரர் திருப்பதிக வரலாறு
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புரணம்

பெரிய புராணப் பாடல் எண் : 168
திருத்தினைமா நகர்மேவும்
         சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்,
நிருத்தனார் அமர்ந்துஅருளும்
         நிறைபதிகள் பலவணங்கி,
பொருத்தமிகும் திருத்தொண்டர்
         போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரும் ஆதரவால்
         கைதொழச்சென்று எய்தினார்.

         பொழிப்புரை : திருத்தினை மாநகரில் வீற்றிருந்தருளும் சிவக்கொழுந்தைப் பணிந்து, அங்கிருந்தும் கூத்தியற்றும் பெருமானார் அமர்ந்தருளும் திருப்பதிகள் பலவும் வணங்கிச் சென்று, திருவருள் உறைப்பு மிகும் திருத்தொண்டர்கள் போற்றுகின்ற திருநாவலூருக்கு வரும் ஆதரவால், அப்பதியில் வீற்றிருக்கும் இறைவனைக் கைதொழச் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 169
திருநாவ லூர்மன்னர்
         சேர்கின்றார் எனக்கேட்டு,
பெருநாமப் பதியோரும்,
         தொண்டர்களும், பெருவாழ்வு
வருநாள்என்று அலங்கரித்து,
         வந்து,எதிர்கொண்டு, உள்அணையச்
செருநாகத்து உரிபுனைந்தார்
         செழுங்கோயில் உள்அணைந்தார்.

         பொழிப்புரை : திருநாவலூரின் அருள் அரசராய சுந்தரர், அங்கு எழுந்தருளுவதைக் கேட்டுப் பெரும் புகழுடைய அப்பதியில் உள்ளார்களும், தொண்டர்களும், `தங்களுக்கு இன்று பெருவாழ்வு வருநாள்' என்று நகரம் முழுவதும் அணி செய்து, அவரை எதிர் கொண்டு அழைத்துச் சென்றிட, அவரும் சென்று, வலி மிகுந்த யானையின் தோலைப் போர்த்த பெருமானின் திருவமைந்த திருக்கோயிலின் உள்ளாகச் சென்றருளினார்.


பெ. பு. பாடல் எண் : 170
மேவியஅத் தொண்டர்குழாம்
         மிடைந்து அரஎன்று எழும்ஓசை
மூவுலகும் போய்ஒலிப்ப,
         முதல்வனார் முன்புஎய்தி,
ஆவியினும் அடைவுஉடையார்
         அடிக்கமலத்து அருள்போற்றி,
"கோவலனான் முகன்"எடுத்துப்
         பாடியே கும்பிட்டார்.

         பொழிப்புரை : தம்முடன் வந்த அடியவர் கூட்டம் நெருங்கி, அரகர என மொழிந்திட எழுகின்ற ஓசை மூவுலகும் சென்று ஒலித்திட, முதல்வனாரின் திருமுன்பு எய்தி, உயிரினும் சிறந்தாராய பெருமானின் திருவடித் தாமரை வழங்கியருளும் பேரருளின் திறம் போற்றி, `கோவலன் நான்முகன்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்துப் பாடிக் கும்பிட்டார்.

         குறிப்புரை : `கோவலன் நான்முகன்' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.17). இறைவன் ஆவணம் கொண்டு ஆட்கொள்ள வரத் தாம் வன்மைகள் பேசி வன்தொண்டர் என்பதோர் வாழ்வு பெற்றமையை இத்திருப்பதிகத்தில் பாடக் குறித்து அருளுகின்றார். நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்பும் இதன் உள் காணக்கிடக்கின்றது.


பெ. பு. பாடல் எண் : 171
நலம்பெருகும் அப்பதியில்
         நாடியஅன் பொடுநயந்து,
குலம்பெருகும் திருத்தொண்டர்
         குழாத்தோடும் இனிதுஅமர்ந்து,
சலம்பெருகுஞ் சடைமுடியார்
         தாள்வணங்கி, அருள்பெற்றுப்
பொலம்புரிநூல் மணிமார்பர்
         பிறபதியும் தொழப்போவார்.

         பொழிப்புரை : நலம் என்றும் பெருகிய அப்பதியில் பெருமானை விரும்பிக் கொண்ட அன்போடும் பணிந்து, குலம் பெருகும் திருத்தொண்டர் கூட்டத்தோடும் இனிதே அங்குத் தங்கி, கங்கை தங்கும் சடைமுடியையுடைய பெருமானின் திருவடிகளை வணங்கி, அருள்பெற்று, அழகு பொருந்திய முப்புரி நூலை அணிந்த மார்பினராய சுந்தரர், அப்பதியினின்றும் நீங்கிப் பிறபதிகளையும் தொழுதிடப் போவார்,



சுந்தரர் திருப்பதிகம்

7. 017    திருநாவலூர்                      பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கோவலன் நான்முகன் வானவர்
         கோனும்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீஎழு
         வித்தவர் ஓரம்பினால்,
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், `அம்பு எய்தலில் வல்லவர்`எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, ` திருமால், பிரமன், இந்திரன் ` என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரே யாகும்.


பாடல் எண் : 2
தன்மையி னால்அடி யேனைத்தாம்
         ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்தொண்டன்
         என்பதுஓர் வாழ்வுதந்தார்,
புன்மைகள் பேசவும், பொன்னைத்தந்து
         என்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : தமக்கு இயல்பாக உள்ள ` பேரருளுடைமை ` என்னுங் குணத்தினால் , என் பிழையைத் திருவுளங்கொள்ளாது , அடிமை என்பது ஒன்றையே கருதி , என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந் நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு , ` வன்றொண்டன் ` என்பதொரு பதவியைத் தந்தவரும் , பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து , எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .


பாடல் எண் : 3
வேகங்கொண்டு ஓடிய வெள்விடை
         ஏறி, ஓர் மெல்இயலை
ஆகம்கொண் டார், வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளும்கொண்டார்,
போகங்கொண் டார்கடம் கோடியின்
         மோடியை, பூண்பதாக
நாகம் கொண் டார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும் , மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும் , என்னைத் திரு வெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்ட வரும் , தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும் , பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .


பாடல் எண் : 4
அஞ்சும்கொண்டு ஆடுவர் ஆவினில்,
         சேவினை ஆட்சிகொண்டார்,
தஞ்சம்கொண் டார்அடிச் சண்டியைத்
         தாம்என வைத்துஉகந்தார்,
நெஞ்சங்கொண் டார்,வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளுங்கொண்டு,
நஞ்சம்கொண் டார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : ஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும் , ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும் , தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு , என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும் , நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும் .

  
பாடல் எண் : 5
உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
         தார்,உரித் தார்களிற்றை,
செம்பொனார், தீவண்ணர், தூவண்ண
         நீற்றர்,ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும் , யானையை உரித்தவரும் , சிவந்த பொன்போல்வதும் , நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும் , வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும் , ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .


பாடல் எண் : 6
கோட்டம்கொண் டார்குட மூக்கிலும்,
         கோவலும், கோத்திட்டையும்,
வேட்டங்கொண் டார்,வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளுங்கொண்டார்,
ஆட்டம்கொண் டார்தில்லைச் சிற்றம்
         பலத்தே, அருக்கனைமுன்
நாட்டம்கொண் டார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : திருக்குடமூக்கில் ( கும்பகோணம் ) திருக் கோவலூர் , திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்ட வரும் , வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும் , தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடன மாடுதலை மேற்கொண்டவரும் , சூரியனை (` பகன் ` என்பவனை ) க் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திரு நாவலூரேயாகும் .


பாடல் எண் : 7
தாயவ ளாய்த்தந்தை ஆகி,
         சாதல் பிறத்தல்இன்றிப்
போய்அக லாமைத்தன் பொன்னடிக்கு
         என்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்,வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : எனக்குத் தாயாகியும் , தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன் போலும் திருவடிக்கண் அகலாதபடி இருக்க வைத்த , மூங்கில் இடத்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .


பாடல் எண் : 8
வாயாடி மாமறை ஓதி,ஓர்
         வேதியன் ஆகிவந்து,
தீஆடி யார்,சினக் கேழலின்
         பின்சென்றுஓர் வேடுவனாய்
வேயாடி யார்,வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளுங்கொண்ட
நாஆடி யார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : தீயின்கண் நின்று ஆடுபவரும் , சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்த வரும் , பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .


பாடல் எண் : 9
படம்ஆடு பாம்புஅணை யானுக்கும்
         பாவைநல் லாள்தனக்கும்
வடம்ஆடு மால்விடை ஏற்றுக்கும்
         பாகனாய் வந்து,ஒருநாள்
இடம்ஆடி யார், வெண்ணெய் நல்லூரில்
         வைத்துஎனை ஆளுங்கொண்ட
நடம்ஆடி யார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : படமாடுகின்ற, பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும் , பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும் , மணி வடம் அசைகின்ற ஆனேற்றுக்கும் , ` பாகன் ` எனப்படும் தன்மை யுடையவராய் , ஒருநாள் என்னிடம் வந்து , தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .


பாடல் எண் : 10
மிடுக்குஉண்டுஎன்று ஓடிஓர் வெற்புஎடுத்
         தான்வலி யைநெரித்தார்,
அடக்கங்கொண்டு ஆவணம் காட்டிநல்
         வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்,
தடுக்கஒண் ணாததுஓர் வேழத்
         தினைஉரித் திட்டு,உமையை
நடுக்கங்கண் டார்க்குஇடம் ஆவது
         நம்திரு நாவலூரே.

         பொழிப்புரை : தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும் , மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும் , தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து , உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும் .


பாடல் எண் : 11
நாதனுக்கு ஊர், நமக்கு ஊர்,நர
         சிங்க முனையரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும்
         ஊர்,அணி நாவலூர், என்று
ஓதநல் தக்கவன் தொண்டன்,
         ஆரூரன் உரைத்ததமிழ்
காதலித் தும்,கற்றும் கேட்பவர்
         தம்வினை கட்டுஅறுமே.

         பொழிப்புரை : முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும் , நமக்கு உரிய ஊரும் , நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு , விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு , நல்ல தகுதியை உடையவனும், ` வன்றொண்டன் ` என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும் , கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்.

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...