திருச்செந்தூர் - 0082. புகரப் புங்க


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புகரப் புங்க (திருச்செந்தூர்)

முருகா!
அடியேன் உள்ளம் தெளிய
முதல்மொழிப் பொருள் உபதேசம் அருள்வாய்


தனனத் தந்தத் தனனத் தந்தத்
     தனனத் தந்தத் ...... தனதான


புகரப் புங்கப் பகரக் குன்றிற்
     புயலிற் றங்கிப் ...... பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
     பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
     திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
     டெளிதற் கொன்றைத் ...... தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
     தடநற் கஞ்சத் ...... துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
     தையளித் தன்புற் ...... றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
     படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
     பதியிற் கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புகர புங்கப் பகர குன்றில்
     புயலில் தங்கிப் ...... பொலிவோனும்,

பொருஇல் தஞ்சச் சுருதிச் சங்கப்
     பொருளைப் பண்பில் ...... புகல்வோனும்,

திகிரிச் செங்கண் செவியில் துஞ்சு அத்
     திகிரிச் செங்கைத் ...... திருமாலும்,

திரிய, பொங்கி, திரை அற்று, ண்டு,உள்
     தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்

தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி,
     தட நல் கஞ்சத்து ...... உறைவோனே!

தருணக் கொங்கைக் குறவிக்கு இன்பத்-
     தை அளித்து அன்புஉற்று ...... அருள்வோனே!

பகரப் பைம்பொன் சிகரக் குன்றைப்
     படியில் சிந்தத் ...... தொடும்வேலா!

பவளத் துங்கப் புரிசைச் செந்தில்
     பதியில் கந்தப் ...... பெருமாளே.

பதவுரை

      தகரத்து அந்த --- தகர வித்தாகிய அழகிய,

     சிகரத்து ஒன்றி --- வேத சிரமுடியாகிய பேரின்பத்தைப் பொருந்தி,

     தட நல் கஞ்சத்து உறைவோனே --- நல்ல இடமாகிய இதயக் கமலத்தில் உறைகின்றவரே!

     தருண கொங்கைக் குறவிக்கு --- இளமையான தனபாரங்களையுடைய வள்ளியம்மையாருக்கு,

     இன்பத்தை அளித்து --- பேரின்பத்தை வழங்கி,

     அன்பு உற்று அருள்வோனே --- அவர்மீது அன்பு கொண்டு அருள் புரிந்தவரே!

      பகர பைம்பொன் சிகர குன்று --- ஒளியையுடைய பசும்பொன் சிகரங்களையுடைய கிரவுஞ்சமலை,

     படியில் சிந்த --- இப்பூமியின் கண் பொடிபடுமாறு,

     தொடு வேலா --- தொடுத்தருளிய வேலாயுதத்தைய உடையவரே! 

      பவள துங்க புரிசை --- பவளம் போன்ற சிவந்த தூய மதில் சூழ்ந்த,

      செந்தில் பதியில் கந்த --- திருச்செந்தூர் என்ற திருத்தலத்தின்கண் எழுந்தருளிய கந்தக் கடவுளே!

      பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

      புகர புங்க பகர --- புள்ளிகளை உடையதும், தூய்மையுடையதும்,  அழகியதுமாகிய,

     குன்றில் --- மலைபோன்ற வெள்ளை யானை மீதும்,

     புயலில் --- மேகத்தின் மீதும்,

     தங்கிப் பொலிவோனும் --- தங்கிப் பொலிகின்ற தேவேந்திரனும்,

     பொருவில் --- இணையில்லாததும்,

     தஞ்சம் --- எல்லாக் கலைகளுக்கும் புகலிடமானதும் ஆகிய,

     சுருதி சங்கப் பொருளை --- வேதத் தொகுதிகளின் பொருள்களை,

     பண்பில் புகல்வோனும் --- முறையுடன் மொழிபவராகிய பிரம்மதேவரும்,

     திகிரி --- மலைபோன்றதும்,

     செம் கண்செவியில் --- செம்மைப் பண்புடையதுமாகிய ஆதிசேடன் மீது,

     துஞ்சு --- அறிதுயில் புரிகின்ற,

     அத் திகிரி செங்கை திருமாலும் --- அந்த சக்ராயுதத்தை ஏந்திய சிவந்த கரமலரை உடைய நாராயணமூர்த்தியும்,

     திரிய --- நமக்கு இவ்வுபதேசப் பொருள் கிடைக்கவில்லையே என்று உள்ளம் வருந்தி (இங்கும் அங்குமாகத்) திரியவும்,

     பொங்கி --- உவகை மிகுந்தும்,

     திரை அற்று --- உள்ளத்தில் எழும் பல எண்ண அலைகள் அகன்றும்,

     உண்டு --- சிவாநுபவத்தை உட்கொண்டும்,

     உள் தெளிதற்கு --- உள்ளம் தெளியுமாறும்,

     ஒன்றைத் தரவேணும் --- ஒப்பற்ற மொழியை அடியேனுக்கு உபதேசித்து அருளவேணும்.


பொழிப்புரை


         தகர வித்தையும் அழகிய வேத சிரசும் ஆகிய பெரிய இடத்தைப் பொருந்தி இதய கமலமாகிய நல்ல இடத்தில் உறைகின்றவரே!

     இளமுலை நாயகியாகிய வள்ளிப் பிராட்டியாருக்குப் பேரின்பத்தை வழங்கி, அவர் மீது அன்பு வைத்து, அருள் புரிந்தவரே!

     ஒலியுடைய பசும்பொன் போன்ற சிகரங்களையுடைய கிரவுஞ்சமலை இப்பூமியில் பொடிபடுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

     பவளம்போல் சிவந்து தூய்மையாக விளங்கும் திருமதில் சூழ்ந்த செந்திலம்பதியில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

         புள்ளிகளை உடையதும் பரிசுத்தமானதும் மலை போன்றதும் ஆகிய ஐராவதம் என்ற வெள்ளை யானை மீதும்,  மேகத்தின் மீதும் விளங்குகின்ற இந்திரனும், சமானமில்லாததும், கலைகளுக்குப் புகலிடமானதுமான வேதத்தின் தொகுதிக்குப் பொருள் கூறுகின்ற நான்முகக் கடவுளும், மலையை ஒத்ததும், செம்மைப் பண்பு உடையதும், கண்ணையே காதாக உடையதுமாகிய சர்ப்ப அரசின் மீது அறிதுயில் புரிகின்றவரும், சக்கரத்தைத் தாங்கிய செங்கையை உடையவருமாகிய நாராயணரும், (நமக்கு இவ்வுபதேசப் பொருள் கிடைக்கவில்லையே என்று வருந்தித்) திரியவும், உள்ளத்தில் மகிழ்ச்சிப் பொங்கவும், எண்ண அலைகள் ஓயவும், சிவாநுபவத்தை உண்டு உள்ளம் தெளிவு பெறவும், ஒப்பற்ற ஒரு மொழியை அடியேனுக்கு உபதேசித்து அருள்புரிய வேண்டும்.

விரிவுரை

         இப்பாடலில் முருகப்பெருமானை பிரணவ உபதேசம் புரியவேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். ஆனால், அது அத்துணை எளிதாகக் கிடைப்பதன்று. இந்திரனும் பிரமனும் மாலும் அவ்வுபதேசப் பொருளை நாடித் திரிகின்றார்கள். ஆகவே அவர்களுக்கும் கிடைக்கப் பெறாத அம் மோன எழுத்தின் பொருளை எளியேனுக்கு உபதேசித்தருளும் என்று குறிப்பிடுகின்றார்.

புகரப் புங்கப் பகரக் குன்று ---

     புள்ளிகளை உடைய தூய ஐராவதம். இது இந்திரனுடைய வாகனம். பாற்கடலில் அமுதத்துடன் தோன்றியது; சிவபெருமானை வழிப்பட்டது.

புயலில் தங்கிப் பொலிவோனும் ---

     இந்திரனுக்கு மேகமும் ஒரு வாகனம். எனவே ஐராவதத்தின் மீதும் மேகத்தின் மீதும் உலாவுகின்ற இந்திரன்.

பொருவில் தஞ்சச் சுருதி ---

     சுருதி --- வேதம். காதால் கேட்கப்படுவதால் வேதம் சுருதி எனப்பெற்றது. வேதத்தை எழுதிப் படிக்கும் வழக்கம் கிடையாது. எழுதிக் படித்தால் உதாத்த அனுதாத்த சுரங்கள் வரமாட்டா. அதனால் குரு மூலம் கேட்டே படிக்க வேண்டும். தஞ்சம் ---புகலிடம். ஏனை கலைகளுக்கு வேதமே புகலிடமாயது.
பொரு --- சமானம். வேதம் --- சமானமில்லாதது.

பொருளைப் பண்பில் புகல்வோன் ---

     வேதத்தின் பொருளை நன்கு உரைப்பவர் பிரமதேவர். அதனால் அவருக்கு வேதன் என்ற பேர் உண்டாகியது.

திகிரி வெங்கட்செவி ---

     கட்செவி --- பாம்பு. கண்ணையே காதாக உடையது பாம்பு. ஆதலின் இப்பேர் பெற்றது. இங்கு ஆதிசேடனைக் குறிக்கின்றது. மலைபோன்ற பெரு வடிவுடைய சிறந்த அரவம். அவர் நாகராஜா. அவர் மீது திருமால் பள்ளிக்கொண்டிருக்கிறார்.

திகிரிச் செங்கைத் திருமால் ---

     திருமால் திருவீழிமிழலையில் சிவபெருமானை நாடோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து, ஒருநாள் ஒரு மலர் குறைதலும் கண்மலரை எடுத்து அர்ச்சித்துப்பெற்ற ஆயுதம் சக்ராயுதம். திகிரி --- சக்ராயுதம்.

"நீற்றினை நிறையப் பூசி
     நித்தல் ஆயிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்று
     குறையக்கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி
     அவன்கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழி
     மிழலையுள் விகிர்த னாரே".     --- அப்பர்.


திரிய ---

     இந்திரன், பிரமன், திருமால் இம்மூவரும் பிரணவத்தின் பொருள் தெரியாது திகைத்து, அதனைப் பெறும் பொருட்டுத் திரியவும்.

பொங்கி ---

     கிடைக்கப் பெறாத பொருள் கிடைத்ததே என்று உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழ”,

திரையற்று ---

திரை --- அலை. பற்பல எண்ணங்களாகிய அலைகள் அற்று உள்ளந் தெளிய”. உண்டு- “சுகாநுபவமாகிய இன்பத் தேனைப் பருகி”

உள் தெளிய ---

     அதனால் உள்ளத்தில் உள்ள கலக்கம் நீங்கி சுத்தமான பளிங்குபோல தெளிவடைய”

ஒன்றைத் தரவேணும் ---

     ஒப்பற்ற மொழியாகிய ஓம் என்னும் தனி மந்திரத்தினை உபதேசிக்க வேணும்.

தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றித் தட நல் கஞ்சத்து உறைவோனே ---

     ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞான மயமாக ஒலியுடன்கூடி விளங்கும் ஆகாயம், தகராலயம், தகராகாசம் எனப்பெறும். அதன் நடு்வே சுத்த பளிங்கு போன்ற பரமான்மா வசிக்கின்றது.  இதை அறிகின்ற வித்தை தகர வித்தை எனப்படும். இந்த வித்தையை அறிந்தவரே வீடு பெறுவர். சிவயோகநிலை முழுவதும் கைவந்த ஒளவையார் இதனையே தமது நீதிநூல் முடிகின்றபோது, “வித்தை விரும்பு” “வீடு பெற நில்” என்று குறிப்பாகக் கூறியருளினார்.

கருத்துரை

         தகராலய மூர்த்தியே! வள்ளிமணவாளா! செந்திற்குமரா! மூவரும் அறியாத முதன் மொழிப் பொருளை அடியேனுக்கு உபதேசித்தருளுவீர்.


No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...