திரு நெல்வெண்ணெய்


 திரு நெல்வெணெய்
வெண்ணையப்பர் கோவில்

(நெய்வணை)

     நடு நாட்டுத் திருத்தலம்.

         விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் எலவானாசூர் வந்து பின் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் எறையூர் வந்தடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வடகுரும்பூர் வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். எறையூரிலிருந்து நெய்வெணை செல்ல நகரப் பேருந்து உள்ளது.

இறைவர்              :        சொர்ணகடேசுவரர், வெண்ணெய்யப்பர்,
                                             நெல்வெண்ணெய்நாதர்.

இறைவியார்         :       பிருகந்நாயகி, நீலமலர்க்கண்ணி.

தல மரம்              :       புன்னை (தற்போதில்லை)

தீர்த்தம்               :       பெண்ணையாறு.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - நல்வெணெய் விழுதுபெய்.


         சிறிய ஊர். முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. கோயிலின் முன் நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரம் இல்லை. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி வாயிலின் வெளியே திருமால் சங்கு சக்ரதாரியாகத் திருமகளுடன் அழகாகக் காட்சி தருகிறார். துவாரபாலகரை தொழுது உள்வாயில் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக ருத்ராட்ச பந்தலின் கீழ் அருட்காட்சி தருகிறார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் இறைவன் திருமேனி மீது சூரிய ஒளி விழுகிறது. சனகர், சனகாதி முனிவர்கள் நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கியுள்ளனர்.

         வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது. அதையடுத்து வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுக சுவாமி மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது. அம்பாள் நீலமலர்க்கன்னி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே நேர் எதிரில் தேவார மூவர் சந்நிதி உள்ளது. சுந்தரர் நடுவிலும் இருபுறங்களிலும் அப்பரும் ஞானசம்பந்தரும் உள்ளனர். ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர், நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றார்.

         இத்தலத்து கல்வெட்டு ஓன்றில் இத்தல இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது செவி வழிச் செய்தி ஆகும்.

     இன்றைய வழக்கில் வடமொழிப் பெயரான சொர்ணகடேஸ்வரர் என்று அழைக்கப்படும் இத்தல இறைவனை வணங்கி வழிபடுவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர்.

         காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "அன்று அகத்தின் நல் வெண்ணெய் உண்டு ஒளித்த நாரணன் வந்து ஏத்துகின்ற நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே" என்று போற்றி உள்ளார்.


        
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 229
தேவர் தம்பிரான் திருஅரத் துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில், விமலனார் நெல்வெண்ணெய் முதலாத்
தாஇல் அன்பர்கள் தம்முடன் தொழுது,பின் சண்பைக்
காவலார் அருள் பெற்றுஉடன் கலந்துமீண்டு அணைந்தார்.

         பொழிப்புரை : தேவரின் தலைவரான சிவபெருமானைத் திருவரத்துறையில் இருந்து வணங்கி அங்கிருந்தருளிய நாள்களில், சிவபெருமானின் திருநெல்வெண்ணெய் முதலான திருப்பதிகளைக் குற்றம் அற்ற அன்பர்களுடனே தொழுது, பின் சீகாழித் தலைவரான பிள்ளையார் இறைவரின் திருவருளைப் பெற்று உடன் கலந்திருந்து மீண்டும் திருவரத்துறையில் வந்து சேர்ந்தார்.

         குறிப்புரை : திருநெல்வெண்ணெய் முதலாக உள்ள திருப்பதிகளை வணங்கினார் எனக் குறிக்கப்பெறினும், அப்பதிகள் எவையென அறிதற்கில்லை. திருநெல்வெண்ணெய்க்கு உரிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. பதிகம் - நல்வெணெய் விழுது (தி.3 ப.96) பண் : சாதாரி.



3. 096  திருநெல்வெண்ணெய்  திருமுக்கால்     பண் - சாதாரி
1.                                               திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நல்வெணெய் விழுதுபெய்து ஆடுதிர் நாள்தொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீர்உமை நாள்தொறும்
சொல்வணம் இடுவது சொல்லே.

         பொழிப்புரை : நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர் . திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச் சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும் .


பாடல் எண் : 2
நிச்சலும் அடியவர் தொழுதுஎழு நெல்வெணெய்க்
கச்சுஇள அரவுஅசைத் தீரே
கச்சுஇள அரவுஅசைத் தீர்உமைக் காண்பவர்
அச்சமொடு அருவினை இலரே.

         பொழிப்புரை : நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற , நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளமையான பாம்பைக் கச்சாக இடையில் அணிந்துள்ள சிவ பெருமானே ! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு அச்சப்படாதவர் , கொடிய வினைகளும் இல்லாதவர் .


பாடல் எண் : 3
நிறைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீர்உமை அலர்கொடு
உரைவிரிப் போர்உயர்ந் தோரே.

         பொழிப்புரை : வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இடையில் விரித்துக் கட்டிய கோவணத்தையுடைய சிவ பெருமானே ! அவ்வாறு கோவணத்தை விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு பூசித்து , உமது புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர் .


பாடல் எண் : 4
நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீர்உமை உள்குதல்
பார்மல்கு புகழ்அவர் பண்பே.

         பொழிப்புரை : நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! அவ்வாறு அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள் இயல்பாகும் .


பாடல் எண் : 5
நீடுஇளம் பொழில்அணி நெல்வெணெய் மேவிய
ஆடுஇளம் பாப்புஅசைத் தீரே
ஆடுஇளம் பாப்புஅசைத் தீர் உமை அன்பொடு
பாடுஉளம் உடையவர் பண்பே.

         பொழிப்புரை : நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக் கட்டியுள்ள சிவபெருமானே ! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக் கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம் உடையவர்களின் பண்பே சிறந்ததாகும் .


பாடல் எண் : 6
நெற்றிஓர் கண்உடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீர்உமைப் பேணுதல்
கற்றுஅறி வோர்கள்தம் கடனே.

         பொழிப்புரை : நெற்றிக் கண்ணை உடையவரும் , திருநெல் வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும் , அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடையவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு பிறை போன்ற நெற்றியுடைய உமாதேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும் .


பாடல் எண் : 7
நிறையவர் தொழுதுஎழு நெல்வெணெய் மேவிய
கறைஅணி மிடறுஉடை யீரே
கறைஅணி மிடறுஉடை யீர்உமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே.

         பொழிப்புரை : நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானே ! அவ்வாறு விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ் என்றும் வீற்றிருப்பர் .


பாடல் எண் : 8
நெருக்கிய பொழில்அணி நெல்வெணெய் மேவிஅன்று
அரக்கனை அசைவுசெய் தீரே
அரக்கனை அசைவுசெய் தீர்உமை அன்புசெய்து
இருக்கவல் லார்இடர் இலரே.

         பொழிப்புரை : நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர் .


பாடல் எண் : 9
நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவிஅன்று
இருவரை இடர்கள் செய்தீரே
இருவரை இடர்கள் செய்தீர்உமை இசைவொடு
பரவவல் லார்பழி இலரே.

         பொழிப்புரை : வரிசையாக விரிந்த சடைமுடியினை உடையவராய் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவராய் , அன்று திருமாலும் , பிரமனும் உம் அடிமுடி காணாமல் துன்பம் அடையச் செய்த சிவபெருமானே! அவ்வாறு திருமால் , பிரமன் என்னும் இருவரைத் துன்பம் அடையச் செய்தவராகிய உம்மை உள்ளும் , புறமும் ஒத்து வணங்கிப் போற்று பவர்கள் பழியில்லாதவர் ஆவர் .


பாடல் எண் : 10
நீக்கிய புனல்அணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீர்உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.

         பொழிப்புரை : வறுமை , பிணி முதலியவற்றை நீக்கியவரும் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும் , புத்தமும் , சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு புத்தமும் , சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும் .

பாடல் எண் : 11
நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துயர் இலரே.

         பொழிப்புரை : நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நன்மைகளைத் தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர்.


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...