வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

 



வயிற்றுப் பசிக்கு உணவு

அறிவுப் பசிக்கு கேள்வி

----

உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூல நாயனார். எனவே, உடம்பை வளர்ப்பது, உயிர் உணர்வு வளர்வதன் பொருட்டே என்பதை அறிதல் வேண்டும். உயிர் உணர்வு வளர்தல் என்பது, உயிருக்கு இயல்பாகவே அமைந்துள்ள அஞ்ஞான உணர்வு நீங்கி மெய்யுணர்வு பெறுதல்.

உடம்பிலே உயிர் நிலைபெற்றுள்ளது என்பதை உணர்ந்து, உயிரை வளர்ப்பதற்கு, உடம்பை வளர்க்கவேண்டும். அதற்கு உடம்பும் உயிரும் ஒருங்கே செழித்து வளர்வதற்கு உரிய உணவைக் கொள்ளவேண்டும். உடம்பு பொய், நிலையற்றது. உயிர் மெய், நிலையானது. நிலையற்ற உடம்பைக் கொண்டு, நிலையான உயிரானது, நிலையான ஞானத்தைப் பெற்று, நிலையற்ற உடம்பால் உண்டாகும் பிறவியை ஒழித்து, நிலையான பரம்பொருளோடு கூடவேண்டும்.

தேகாத்மவாதி கொள்கைப்படி, உடம்பே உயிர் என்று கருதி, உடம்பைப் பேணுவதையே பெரிதாக மதித்து இருத்தல் உலக மக்கள் இயல்பு. அஞ்ஞானம் மிகுந்து இருப்பதால், உடம்பை ஏன் பேணவேண்டும், எப்படிப் பேணவேண்டும் என்னும் அறிவு இல்லாமல், நாக்கு ருசி ஒன்றையே கருதி, விரும்புகின்ற உணவை எல்லாம் மிகுதியாக உண்டு, உடம்பைப் பெருக்குவதோடு, நோயையும், காம உணர்வையும் பெருக்கி, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளாமல் இருப்பதும் மனித இயல்பு. அறிவின்மையால் இந்தக் கேட்டினைத் தேடிகொள்வதைத் தவிர்த்து, அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்பதால், அறிவைப் பெருக்கிக் கொள்ளத் தக்க நூல்களைப் படிக்கவேண்டும். நூல்களைப் படிப்பதாலேயே அறிவு விளங்கிவிடாது. கற்று, அதன் வழி நின்றவரிடத்தல் கேட்டு அறிதல் வேண்டும்.

கல்லைமையால் உண்டாகும் கேடு பற்றி, "கல்லாமை" என்னும் அதிராகத்தில் உணர்த்திய நாயனார், "கேள்வி" என்னும் அகிதாரத்தில், கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்பதை  வலியுறுத்துகின்றார். 

இந்தக் கேள்வியானது, கேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின், அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவனாக இருந்தால், அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

எனவே, கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், "செவிச் செல்வம்" என்பது பெரும் செல்வம் ஆயிற்று. பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

திருக்குறளில் கேள்வி என்னும் அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது, வயிற்றினுக்கும் சிறிது உணவு இடப்படும்" என்கின்றார் நாயனார்.

வயிற்றுக்கு உணவு பெரிதெனத் தோன்றும்போது, உணவைத் தேடுதல் துன்பம். உணவிற்காகப் பொருள்களைத் தேடுதல் துன்பம். உணவின் மிகுதியால் உண்டாகும் உடல் பருமனால் துன்பம். உணவின் செறிவினால் உண்டாகும் காம உணர்வினால் துன்பம். 

கேள்வியால் மிகுந்த சுவை உண்டாவதையும், பின்னே மிகுந்த பயன் விளைவதையும் கருதி உணவு வெறுக்கப்படும். காதால் ஒருவன் கேட்டுக் கொண்டே இருப்பின், ஏனைய புலன் இன்பங்கள் மறக்கப்படும். அது இல்லாதபோது, உடலின் நலம் கருதி சிறிது உணவு கொடுத்தால் போதும். உணவு மிகுந்தால், மனமானது கேள்வியில் பொருந்தாது. காமத்திலேயே பொருந்தும்.

வயிற்றைப் பேணுதல் உயிர் பொருட்டே அன்றி, உடம்பின் பொருட்டு அல்ல என்பது தோன்ற "வயிற்றுக்கும்" என்றார்.

"இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்" என்றும், "கழிபேர் இரையான்கண் நோய்" என்றும் நாயனார் காட்டி உள்ளதும் அறிக.

"செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி உள்ள பாடல்...

"பொருள்துறைஉன் பாட்டேநல் பூசைஎன்றார் ஊரர்க்கு

அருள்துறையார் அன்புசெய்வார் ஆனார்; --- மருள்தேர்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

இதன் பொருள் ---

சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடிமை ஓலை காட்டி ஆட்கொண்டு திருவெண்ணெய்நல்லூரிலே திருவருட்டுறையிலே சென்று அற்புதக் காட்சி அளித்தருளினார் சிவபிரான். "நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்தொண்டன் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலே ஆகும். ஆதலால், நம் மேலே தமிழ்ப் பாட்டுக்களைப் பாடு" என்று மேலும் அருளிச் செய்தார். சுந்தரர் வணங்கி, "அருட்பெருங் கடவுளே! தேவரீருடைய அனந்த குணங்களில் சிறியேன் எதை அறிவேன்? என்ன சொல்லிப் பாடுவேன்?" என்றார். அதற்குக் கடவுள், "நீ முன்னே என்னைப் பித்தன் என்று சொன்னாய். ஆகையால் என் பெயர் பித்தன் என்றே பாடு" என்று சொல்லி அருளினார். உடனே சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்னும் சொற்றொடரை முதலாகக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி அருளினார். சிவபிரான் மகிழ்ந்து, "தொண்டனே!  நீ இன்னும் நம்முடைய புகழைக் குறித்துப் பலவகையாகப் பாடு" என்று அருளினார். அக் கட்டளையின்படியே சுந்தரர் பல திருத்தலங்கட்கும் சென்று திருப்பதிகம் அருளிச் செய்தார். பற்பல அற்புதங்களையும் நிகழ்த்தினார். இறைவனே மிகவும் விரும்புவது அவன் திருச்செவியில் சாத்தப்படும் பாமாலைகளே. பூமாலைகள் வாடிவிடும். பாமாலை என்றும் வாடாது. பாமாலையானது இறைவனது உள்ளத்தைக் குளிரவைக்கும். கேட்போர் உள்ளத்தையும் குளிரவைக்கும். அன்போடு இறைவனைப் பாடி வழிபடவேண்டும். இறைவன் பெரிதும் விரும்புவது நிவேதனப் பொருள்களை அல்ல என்பதை இதன் வாயிலாக அறிதல் வேண்டும். 

செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

பொருள் என்றது அகப்பொருள் புறப்பொருள்களை. அருட்டுறை என்பது திருவெண்ணெய்நல்லூர்ச் சிவாலயத்தின் பெயர். மருள்தேர் --- மயக்கத்தினின்றும் தெளிந்த. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மை சொல்தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்பது பெரியபுராணத் திருப்பாடல் பகுதி.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று திருவள்ளுவ நாயனார் பாடியதற்கு ஏற்ப, பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளதை அறிக.

"மற உரையும், காமத்து உரையும், மயங்கிய

பிறவுரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திருவுடையாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

பாவத்தினை வளர்க்கும் சொற்களும், ஆசையினை வளர்க்கும் வார்த்தைகளும், சோம்பல் முதலியனவற்றை வளர்க்கும் சொற்களும் நிறைந்து காணும் இந்த உலகத்தில், அறத்தினை வளர்க்கும் சொற்களைக் கேட்டுத் தெளியும் நற்பேறு உடையவர்களே, பிறவியினை நீக்குவதற்கு உரிய வீட்டுலகினை உடையவர் ஆவார்.

"செந்தமிழ் நாடு என்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்றார் அமரகவி. காதுகளில் இன்பத் தேன் வந்து பாயும்போது, வாயானது உணவை விரும்பாது. செவிச் சுவையால் உயிரானது பேரின்பத்தை அடையும்.

இராமன் முடிசூடப் போகின்றான் என்பதைக் கேட்ட மக்கள் யாவரும், தெய்வத் தன்மை பொருந்திய தேனைத் தமது காதுகளால் நுகர்ந்தார்கள், மற்ற புலன் இன்பங்களை மறந்தார்கள் என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.

"அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள

புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி

கவிக்கும்’என்று உரைக்கவே, களித்ததால், அது

செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?" --- கம்பராமாயணம், ஆறுசெல் படலம்.

இதன் பொருள் ---

ஐம்புலன்களை அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம், இராமன் பொன்மயமான மகுடம் சூடப் போகிறான் என்று சத்துருக்கனன் அறிவித்த முரசொலி மூலம் கேட்டுப்  பெருமகிழ்ச்சி அடைந்தன.  இராமன் மூடி சூடப் போகின்றான் என்னும் அந்தச் சொல், செவி என்னும் பொறியால், கேள்வி என்னும் அறிவைப் பெற்று அனுபவிக்கும்படியான ஒப்பற்ற தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

     உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிய சொல்லைச் செவிநுகர் தேனாகக் கற்பனை செய்தார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

எனவே, வயிற்றுப் பசிக்கு நல்ல உணவை அளவாக உண்டால் உடல் வளம் பெறும். உயிர் அறிவும் வளம் பெறும். உடம்பையே பொருட்டாக மதித்து, சுவையான உணவை மிகுதியாக உண்டால், உடல் பருப்பதோடு, நோய்தான் பெருகும். எனவே, 

"செவியின் சுவை உணரா வாய்உணர்வின் மாக்கள்,

அவியினும் வாழினும் என்?"

என்றார் திருவள்ளுவ நாயனார். "காதுகளால் அனுபவிக்கப்படும் கேள்விச் சுவையை உணராமல், வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை அறியும் அறிவினை உடைய மனிதர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த உலகிற்கு வருவது என்ன?" என்கின்றார் நாயனார். மேன்மக்கள் போல், காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மை? இறந்தால் என்ன தீமை? இரண்டும் ஒன்றே ஆகும்.

"மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம். விலங்குகள் தனது வயிற்றுப்பாட்டுக்கே உழலும். மனித வடிவில் இருந்தாலும் விலங்கு உணர்வோடு இருப்பவரை "மாக்கள்" என்றார்.

காதுகளால் அனுபவிக்கப்படும் சுவைகள், சொல்சுவை, பொருள்சுவை என இருவகைப்படும். சொற்சுவை என்பது குணம், அலங்காரம் என இருவகைப்படும். 

குணம் என்பது பலவடிவுகளிலாவது, பல சீர்களிலாவது எழுத்துக்கள் ஒன்றி வருவது. அது செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனப் பத்து வகைப்படும். கைகால் முதலிய உறுப்புக்கள் இருந்தும் உயிர் இன்மையால் மனிதன் எனக் கொள்ளப்படாதது போல, இந்தக் குணங்கள் இல்லாதவை செய்யுள் எனப்படமாட்டா.

அலங்காரம் எனப்படுவது, சொல்லையும் பொருளையும் பற்றி நின்று அழகு செய்வது. இது சொல் அலங்காரம், பொருள் அலங்காரம் என இருவகைப்படும். 

மக்களுக்கு அலங்காரம் செய்வனவாகிய அணிகலன்களைப் போல், காப்பியத்திற்கு அலங்காரம் செய்வன இவை இரண்டும்.

பொருட்சுவை என்பது, காமம் என்னும் ஒரு பொருளின்மீது உண்டாகும் விருப்பு. ஒரு பொருளின் மீது விருப்புத் தோன்றுவதால் உண்டாகும் களிப்பு. உயிர்களின் மீது உண்டாகும் கருணை. எல்லா உயிர்களின் மீதும் செல்கின்ற ஆசையும், வீரமும். தம்மோடு பொருந்தாத பகைவரை அழிக்கின்ற உருத்திரம். தெய்வம், விலங்கு, கள்வர் முதலானவர்களால் உண்டாகும் அச்சம். மூப்பு, பிணி, வருத்தம் முதலியவற்றால் உண்டாகும் இளிவரல், அருவருப்பு.  புதியவற்றையும், பெரியவனவற்றையும் அறிதலால் உண்டாகும் வியப்பு. பற்று அற்று இருக்கும் சமநிலை என்னும் சாந்தம் என்று சொல்லப்படும்.

வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையானது, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு என்னும் ஆறுவகையான சுவைகளைக் குறிக்கும். நன்று, தீது என்பவற்றை அறிந்து ஒழுகும் மன உணர்ச்சி இல்லாது, இந்த சுவைகளையே பெரிதும் விரும்பி வாழ்கின்ற மனிதர்களை "மாக்கள்" என்றார். இவர்கள் இருப்பதால் உலகத்துக்கு யாதொரு பயனும் இல்லை. இறப்பதால் யாதொரு இழப்பும் இல்லை என்றார்.

வயிற்றுக்கு ஈயப்படும் உணவால் விளைந்த வாயுணர்வும், உயிர் நிலைக்க, உடல் வளம்பெற்றுத் திகழ்ந்து, நூற்பொருள்களைக் கேட்டுத் தெளிந்த அறிவினைப் பெறுவதற்கே. எனவே, அப்பயனை இழந்த மாக்கள் மடிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்றார் நாயனார்.

வயிற்றுப் பசிக்கே உணவு அவசியம். சுவைக்கு அல்ல. அறிவுப் பசிக்கு நல்ல கேள்வி அவசியம். அறிவு நலம் தரும் கேள்விகளையே எப்போதும் கற்றும் கேட்டும் வருதல் வேண்டும். நூல்கள் இரு வகைப்படும். அவை உலகநூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலகநூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உலகநூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலகநூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம். 

ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விரும்பார்.  கற்க முன்வரமாட்டார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளமாட்டார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில், அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.

பொது --- 1085. கொடியன பிணிகொடு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கொடியன பிணி (பொது)


முருகா! 

திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


தனதன தனதன தத்தத் தத்தத்

     தாந்தாந் ...... தனதான


கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந் ...... தசடாகுங்


குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்

     கோண்பூண் ...... டமையாதே


பொடிவன பரசம யத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே


பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்

     பூண்டாண் ...... டருள்வாயே


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்தாங் ...... குடனாடத்


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோந்தாந் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனிலாடும்


பழயவர் குமரகு றத்தத் தைக்குப்

     பாங்காம் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்



கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந்து, ...... அசடு ஆகும்


குடில்உற வரும்ஒரு மிக்கச் சித்ரக்

     கோண் பூண்டு ...... அமையாதே,


பொடிவன பரசமயத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே,


பொருள்அது பெற,அடி நட்புச் சற்றுப்

     பூண்டுஆண்டு ...... அருள்வாயே.


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்து ஆங்கு ...... உடன் ஆட,


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோம்தாம் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை ஒத்த, சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனில் ஆடும்


பழயவர் குமர! குறத் தத்தைக்குப்

     பாங்கு ஆம் ...... பெருமாளே.

பதவுரை

துடிபட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு உடன் ஆட --- உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, 

தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி தாளம் படிதரு பதிவ்ரதை ஒத்த --- தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, 

சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர --- தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறத் தத்தைக்குப் பாங்கு ஆம் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடியன பிணி கொடு --- கொடிதான நோய்களை அடைந்து,

விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் --- விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, 

குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு அமையாதே --- உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, 

பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் தலைமேலே --- நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல்,

பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அருள்வாயே --- மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடிதான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல், மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

கொடியன பிணி கொடு, விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் குடில் ---

குடில் - குடிசை.

"கால்கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து

தோல்மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்

ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,

மால்கொடுத்து, ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே."    --- அப்பர் தேவாரம்.

இதன் பொருள் ---

மாமறைக்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபிரான், கால்களைக் கொடுத்து, கைகளை ஏற்றி, எலும்புக் கழிகளை நிரைத்து, மேலே புலாலை வேய்ந்து, குருதி நீரைக் கலந்து, தோலை தட்டிச் சுவரை வைத்து, இரண்டு வாயில்களையும், ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி, அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.

இந்த உடம்பு எப்படிப் பார்த்தாலும் புழுக்கள் நெளிகின்றதும் நோய்கள் மலிந்து உள்ளதும் ஆகும்.

"எல்லாப் படியாலும் எண்ணினால், இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்து இருப்பார், ஆதலினால், ஆங்கமல நீர்போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு." --- ஔவையார்.

இதன் பொருள் ---

எல்லா வகையாலும் எண்ணிப் பார்க்கும்போது இந்த உடம்பு பொல்லாத புழுக்கள், அவற்றால் மிகும் நோய் அகியவற்றைக் கொண்ட அற்பமான ஒரு கூடு. (உயிர்க் குருவி போய்விட்டால் அதனால் என்ன பயன்) இந்த உண்மையை நல்லவர்கள் அறிந்திருக்கின்றனர். அதனால் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல உடல் இன்பத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர்.

"பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க்கூரை" என்பார் மணிவாசகப் பெருமான்.

இந்த உடம்பானது மாயையால் ஆனது. பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம், தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் சாராமல் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. 

    "ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம், புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்று, வினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது, இதனை வீணாக்கக் கூடாது.


"பஞ்சுஇட்ட அணைமிசை

கொஞ்சி, பலபல விஞ்சைச் சரசமொடு

          அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்

          அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்

சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்

     சிந்த, கொடிஇடை தங்கிச் சுழல்இட,

          சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்

          வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத

சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,

     வம்பில் பொருள்கள் வழங்கிற்று, இது பினை

          சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி

          பிடித்திட, அனைவரும் நகைப்ப, கருமயிர் ......நரைமேவி, 


தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,

உந்திக்கு அசனமும் மறந்திட்டு, உளமிக

          சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி

          விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்

சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,

     சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு

          எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை

          பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,

சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,

இரங்க, பிணம் எடும் என்றிட்டு, அறை பறை

          தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு

          கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்.....உடல் ஆமோ?"

என்கின்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார்.


தாயுமான அடிகளார் புலம்புவது காண்க.

ஐம்பூதத்தாலே அலக்கு அழிந்த தோடம் அற

    எம்பூத நாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ? 

சத்த முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும்

    பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ?

 நாளும் பொறிவழியை நாடாத வண்ணம் எமை

    ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ?

வாக்கு ஆதி ஆன கன்ம மாயை தம்பால் வீண்காலம்

    போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ?

மனம் ஆன வானரக் கைம் மாலை ஆக்காமல்

    எனை ஆள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ?

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம், மனக்

    காட்டைத் திருத்திக் கரை காண்பமது எந்நாளோ?

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது, எந்தை அருள்

    வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ?

புத்தி எனும் துத்திப் பொறி அரவின் வாய்த்தேரை

    ஒத்துவிடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ?

ஆங்காரம் என்னும் மத யானை வாயிமல் கரும்பாய்

    ஏங்காமல், எந்தை அருள் எய்தும்நாள் எந்நாளோ?

சித்தம் எனும் பௌவத் திரைக்கடலில் வாழ் துரும்பாய்

    நித்தம் அலையாது அருளில் நிற்கும்நாள் எந்நாளோ?

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓடச்

    சுத்தபர போகத்தைத் துய்க்கும் நாள் எந்நாளோ?

 சுத்தவித்தையே முதலாத் தோன்றும் ஓர் ஐந்துவகைத்

    தத்துவத்தை நீங்கி, அருள் சாரும் நாள் எந்நாளோ?

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என் அறிவு

    செல்லாமல், நன்னெறியில் சேரும் நாள் எந்நாளோ?

அடிகள் அடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணம்

    குடிகெடுக்கும் பாழ் மடிமைக் கூறு ஒழிவது எந்நாளோ?

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்று உளவும்

    போன வழியும் கூடப் புல் முளைப்பது எந்நாளோ?

அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறு, அறிவில்

    வந்தஇருள் வேலை வடியும் நாள் எந்நாளோ?

புன்மலத்தைச் சேர்ந்து, மலபோதம் பொருந்துதல் போய்,

    நின்மலத்தைச் சேர்ந்து, மலம் நீங்கும் நாள் எந்நாளோ?

கண்டுகண்டும் தேறாக் கலக்கம் எல்லாந் தீர்வண்ணம்

    பண்டைவினை வேரைப் பறிக்கும் நாள் எந்நாளோ?

பைங்கூழ் வினைதான் படுசாவியாக, எமக்கு

    எம் கோன் கிரண வெயில் எய்தும்நாள் எந்நாளோ?

குறித்தவிதம் ஆதியால் கூடும்வினை எல்லாம்

    வறுத்த வித்து ஆம் வண்ணம்அருள் வந்திடும்நாள் எந்நாளோ?

சஞ்சிதமே ஆதி சரக்கு ஆன முச்சேறும்

    வெந்த பொரியாக அருள் மேவும் நாள் எந்நாளோ?

தேகம் முதல் நான்காத் திரண்டு ஒன்றாய் நின்று இலகும்

    மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ?

சத்த முதலாத் தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும்

    சுத்தமா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ?

எம்மை வினையை இறையை எம்பால் காட்டாத

    அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ?

நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம்

    சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ?

சன்னல் பின்னல் ஆன சகலம் எனும் குப்பை இடை

    முன்னவன் ஞானக்கனலை மூட்டும் நாள் எந்நாளோ?

மாயா விகார மலம் ஒழி சுத்த அவத்தை

    தோயா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ?

உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீரத்

    திடம்பெறவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

செம்மை அறிவால் அறிந்து தேக ஆதிக்கு உள் இசைந்த

    எம்மைப் புலப்படவே யாம் அறிவது எந்நாளோ?

தத்துவமாம் பாழ்த்த சட உருவைத் தான் சுமந்த

    சித்து உருவாம் எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

பஞ்சப் பொறியை, உயிர் என்னும் அந்தப் பஞ்சம் அறச்

    செஞ்செவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

அந்தக் கரணம் உயிராம் என்ற அந்தரங்க

    சிந்தைக் கணத்தில் எம்மைத் தேர்ந்து அறிவது எந்நாளோ?

முக்குணத்தைச் சீவன்ரென்னும் மூடத்தை விட்டு, அருளால்

    அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ?

காலைஉயிர் என்னும் கலாதிகள் சொற் கேளாமல்

    சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வது எந்நாளோ?

  வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போல, எமை

    நான்கெடுத்துத் தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ?

மாயையால் ஆன இந்த உடம்பு இறையருளால் நமக்கு வாய்த்தது. அதிலும் உயர்ந்த இந்த மனிதப் பெறிவி வாய்த்தது. இதன் அருமையை எண்ணி, இந்த உடம்பைப் போற்றிப் பாதுகாத்து, நல்வழியில் வாழ்ந்து, நற்கதியை அடைதல் வேண்டும். பிறவி அற்ற பெருநிலையை அடையவதற்கு உபாயமாகவே இந்த உடம்பு நமக்கு அருளப் பெற்று உள்ளது. இன்னொரு பிறவி எடுப்பதற்கு ஏதுவாக கருவழியில் புகுதல் கூடாது. பெருவழியில் புகுதல் வேண்டும்.

முருகன் பவரோக வைத்தியநாதன். அவருடைய அடியவர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்க்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

"முருகா எனவுனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்

அருகாத செல்வம் அடைவர், வியாதி அடைந்து நையார்,

ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,

பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே"      --- திருப்போரூர்ச்சந்நிதிமுறை


பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் ---

பொடிதல் - நிலைத்து நிற்காது அழிதல். 

பர சமயம் - அயல் சமயம். 

"பரசமய கலை ஆரவாரம் அற" என்பார் சீர்பாத வகுப்பில் அடிகளார். தத்தமது சமயமே உயர்ந்தது என்று ஆரவாரிப்பது பரசமயங்களின் ஆரவாரங்களில் இருந்து தப்பிப் பிழைத்தல் வேண்டும். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகப் பெருமான்.


"வம்பு அறாச் சில கன்னம் இடும், சம-

     யத்துக் கத்துத் ...... திரையாளர்,

வன் கலாத்திரள் தன்னை அகன்று,

     மனத்தில் பற்றுஅற்று, ...... அருளாலே,


தம் பராக்கு அற, நின்னை உணர்ந்து, உரு-

     கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,

தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு

     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?"              --- கச்சித் திருப்புகழ்.


"கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

கதறிய வெகுசொல் பங்கம் ஆகிய ...... பொங்களாவுங்


கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும்

ஒழியுற மொழியில் துஞ்சு றாதன

கரணமும் ஒழியத் தந்த ஞானம் ...... இருந்தவாறென்."       ---  (அலகில்) திருப்புகழ்.


 "நிகரில் பஞ்ச பூதமும் நினையும் நெஞ்சும் ஆவியும்

   நெகிழ வந்து நேர்படும்                   அவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர

   நிருப அங்கு மாரவெள்                   எனவேதம்

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்

   சமய பஞ்ச பாதகர்                       அறியாத

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன

   சரண புண்ட ரீகம்அது                   அருள்வாயே. "    ---  திருப்புகழ்.

இத்தகைய வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு விலகியவர்கள் உத்தம அடியார்கள்.


கருத்துரை

முருகா! திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


நன்றி மறத்தல் பெரும்பாவம்


நன்றி மறத்தல் பெரும்பாவம் 

-----

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தைக் கழித்து, கரந்துறை வாசத்திற்கு (அஞ்ஞாத வாசம்) விராட தேசமே தகுந்தது என எண்ணி, பாண்டவர்கள் விராடனுடைய நாட்டின் எல்லையில், மயான பூமியில் உள்ள காளி கோயிலின் எதிரில் உள்ள வன்னி மரத்தில் தமது படைக்கலங்களை ஒளித்து வைத்து, தமது உருவை ஒருவரும் காணாவண்ணம் மாற்றிக் கொண்டு, விராட நாட்டில் புகுகின்றனர்.

தருமன், கங்கன் என்னும் துறவி ஆகின்றான். அவனை விராட மன்னன் தனது துணையாக ஏற்றுக் கொள்கின்றான். வீரத்தில் வல்லவனான பீமன், பலாயனன் என்னும் பெயருடன் தலைமைச் சமையல்காரனாக விராடன் அரண்மனையில் புகுகின்றான். ஊர்வசி தனக்கு முன்னரே அளித்திருந்த சாபத்தின் பலனாக, பேடி உருவத்தைத் தாங்கி, வில்லில் மிகுந்தவனாகிய அருச்சுனன், பிருகன்னளை என்னும் பெயரோடு, விராட மன்னனின் மகளாகிய உத்தரைக்குப் பாங்கியும் ஆசிரியரும் ஆகின்றான். நகுலன், தாமக்கிரந்தி என்னும் பெரயோடு, விராட மன்னனின் குதிரைப் படைகளைக் காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான். கண்ணனே வியக்கும்படி ஞானசாத்திரங்களில் வல்லவனாகிய சகாதேவன், தந்திரிபாலன் என்னும் பெயர் தாங்கி, விராட மன்னனின் ஆநிரை (ஆ - பசு. நிரை - கூட்டம்) காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான். பாஞ்சாலி, விரதசாரிணி என்னும் பெயரோடு, விராட மன்னன் தேவிக்கு வண்ணமகளாகப் பணியில் அமர்கின்றாள்.

இத்தனை உபகாரமும் விராட மன்னனின் கருணையினால் நடந்தது.  தேவமைந்தர்களான பாண்டவர்களும்,  அயோனிஜையாக வேள்வியில் அவதரித்த பாஞ்சாலியும் வாழ்ந்திருந்த காலத்தில் விராடநாடு எல்லா வளங்களும் நிறைந்ததாக விளங்கியது. நல்லவர்கள் வாழுகின்ற இடம் சிறக்கும். "இச்சை இல்லார் இட்ட மலம் பட்ட இடம் பொன் ஆகும்" என்பது வள்ளல்பெருமான் அருள்வாக்கு. கீழோரது பாதம் பட்டால், அந்த இடம் விளங்காது. நல்லவர்கள் பாதம் பட்ட இடம் விளங்கும். எனவே, பாண்டவர்கள் இருந்ததால் விராடநாடு செழிப்பாக இருந்ததில் ஐயம் இல்லை.

விராட நாட்டுக்கு வந்த வாசவன் என்னும் மற்போர் வீரனை வெல்லுதற்கு உரியவன், தலைமைச் சமையல்காரனான பலாயனனே என்று கங்கன் சொல்ல, விராட மன்னனின் ஆணைக்கு இணங்க, பலாயனனால் வாசவன் தோற்கடிக்கப்பட்டான்.

கீசகன் தனது தமக்கையும், விராட மன்னனின் தேவியும் ஆன சுதேட்டிணையைக் காண வந்தபோது, அவளுடன் இருந்த விரதசாரிணியைக் கண்டு அவளைக் காமுற்றான். பின்னர், அவனை, பலாயனன் கொன்று வீழ்த்தினான். அது கண்டு வெகுண்டு எழுந்த உபகீசகர்களையும் பலாயனன் கொன்று அழித்தான்.

  துரியோதனன் தனது ஒற்றர்களை நாலாபக்கமும் ஏவி, பாண்டவர்கள் வாழும் இடத்தை வெளிப்படுத்த முயன்றுகொண்டு இருந்தான். ஒற்றர்களில் ஒருவன் விராடனது நாட்டின் வளமிக்க வாழ்வையும், கீசகன் ஒரு வண்ணமகள் காரணத்தால் மடிந்ததையும் துரியோதனனுக்கு அறிவிக்கின்றான்.

துரியோதனன் ஆணைக்கு இணங்கி, விராட மன்னனது ஆநிரையைக் கவர, திரிகர்த்தன் என்பவன் படை எடுத்து வருகின்றான். திரிகர்த்தனை வென்று, அவனால் சிறைபிடிக்கப்பட்ட விராட மன்னனை பலாயனன் மீட்கின்றான். தமக்கிரந்தி பகைவர்களது குதிரைகளைக் கவர, தந்திரிபாலன் ஆநிரையை மீட்டு வருகின்றான்.

இதை அறிந்த துரியோதனன் பெரும் படைகளுடன் விராட நாட்டின் மீது போர்த் தொடுக்கின்றான். அவனை எதிர்கொள்ள, விராட மன்னின் மகன் உத்தரன், தக்க சாரதியைத் தேடுகின்றான். விரதசாரிணி சொல்ல, பிருகன்னளை சாரதி ஆகின்றான். போரில் தோற்று ஒடிய உத்தரனைத் தேரினை ஓட்டும்படி பணித்து, பிருகன்னளை போர் புரிகின்றான். 

போர் முகத்தில் தனக்கு எதிர் வந்த பேடியைக் கண்டு துரோணர் ஐயுறுகின்றார். நான்கு நாழிகையில், பிருகன்னளை ஆக இருந்த அருச்சுனன், ஊர்வசியின் சாபம் தீர்ந்தபடியால், தனது பழைய உருவைப் பெறுகின்றான். போரில் அனைவரையும் வென்று, உத்தரனோடு விராடநாடு திரும்புகின்றான். அருச்சுனன் மீண்டு வந்து, வன்னிமரப் பொந்தில் முன்புபோல ஆயுதங்களை வைத்து, பேடி வடிவம் கொண்டு, உத்தரனுடன் விராடனது தலைநகர்க்கு மீளுகின்றான்.

தன் மகனது வெற்றி அது என்று எண்ணிய விராட மன்னன், அவனை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யப் பணித்து, அவன் நாடு திரும்பும் வரையில், கங்கனோடு பகடை ஆடுகின்றான். தன் மகனது வெற்றியைப் பேசிய விராட மன்னனுக்கு, "அது பேடியின் வெற்றி" என்கின்றான். மனம் வெகுண்ட விராட மன்னன் தனது கையில் இருந்த பகடைக் காயை, கங்கன் மேல் வீச, அது கங்கனது நெற்றியில் பட்டு குருதி வழிய, விரதசாரிணி ஓடிவந்து, குருதியைத் தனது ஆடையால் மாற்றுகின்றாள். கங்கனது குருதி நிலத்தில் விழுந்தால், விராட நாட்டுக்குக் கேடு என்று சொல்லுகின்றாள் விரதசாரிணி. (நல்லவர்கள் இரத்தம் சிந்தக் கூடாது) விராடன் வருந்துகின்றான். அரண்மனை புகுந்த உத்தரன் கங்கனை வணங்கி, நெற்றி வடுவைக் கண்டு, தந்தையால் நிகழ்ந்தமை அறிந்து, பொறுக்குமாறு வேண்டுகின்றான். விராட தேசத்தில் உருமாறி இருப்பவர்கள் பஞ்சபாண்டவர்களும் பாஞ்சாலியுமே என உத்தரன் அறிவிக்கின்றான்.

பாண்டவர்களும் பாஞ்சாலியும் தமது உண்மை உருவை வெளிப்படுத்துகின்றனர். தருமனது நெற்றியில் உண்டான வடுவின் காரணத்தை, பாஞ்சாலி கூற, பீமன் சினம் கொள்ள, அருச்சுனன் வில்லை எடுக்கின்றான். தருமன் தனது தம்பியரின் சினத்தை மாற்றப் பின்வருமாறு அறிவுரை கூறுகின்றான். 

"பற்றி எரியும் தன்மையினை உடைய பெரும் காட்டில் வாழும் காலம் முடிந்து, அஞ்ஞாத வாசத்திற்குத் தக்க நாடு என எண்ணி, இந்த விராடநாட்டுக்கு வந்தோம். விராட மன்னனின் தயவால், நம்முடைய எண்ணம் ஈடேற இங்கு பாதுகாப்பாகத் தங்கி இருந்தோம். விராட மன்னனால் பல நன்மைகளை அடைந்த நாம் அவற்றைக் கருத்தில் கொள்ளாது, சினம் மிகுதியால் எனது நெற்றியில் வடுவினை உண்டாக்கிய ஒரு சிறு தவற்றினை விராட மன்னன் செய்தான் என்பதை மட்டும் பெரிதாக எண்ணி, அவன் மீது கோபத்தை வெளிப்படுத்த எண்ணுவது தவறு."

"ஒருத்தர் ஓர் உதவி செய்தாலும், காலத்தினால் செய்த அந்த உதவியை மறவாமல்,  பிறகு, அந்த உதவியைச் செய்தவர், செய்கின்ற பல குற்றங்களையும் பொறுப்பது பெரியோர் செய்கை. ஆனால், கீழ்மக்களோ, ஒருவர் தமக்குப் பல உதவிகளைச் செய்து இருந்தாலும், அவரது ஒரு செயல் தீமையைத் தருவதாய் முடிந்தால், அவர் முன்பு செய்த பல உதவிகளையும் மறந்து அவர் மீது சினம் கொள்ளாமல், அமைதியாய் இருக்கமாட்டார்".

"எனவே, நீங்கள் கயவர் தன்மையை மேற்கொள்வது நல்லதல்ல. பெரியோர் தன்மையை மேற்கொண்டு விராடன் செய்த பல நன்மைகளை எண்ணி, என் நெற்றியில் வடுச்செய்த இந்த ஒரு தீமையை மறந்துவிட வேண்டும்."

குந்திதேவியின் கட்டளை தனது மகன்கள் ஐவரும் எந்நாளும் ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும் என்பது. தாயின் கட்டளையை மனம் கொண்ட பீமார்ச்சுனர், அண்ணனது சொல்லுக்கு மாறாது சினம் தணிந்தனர்.

இந்த நிகழ்வை வில்லிபுத்தூரார், பின்வரும் பாடல்களில் அமைத்துக் காட்டினார்.

"ஒன்று உதவி செய்யினும் அவ் உதவி மறவாமல்

பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர்;

நன்றி பலவாக, ஒரு நவை புரிவரேனும்

கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே."

 

"அனலும் முதுகானகம் அகன்று, நெடுநாள் நம்

நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம்;

சினம் மிகுதலில் தவறு செய்தனன் எனப்போய்

முனிதல் பழுது ஆகும் என முன்னவன் மொழிந்தான்".

 

நாலடியார் இந்த உண்மையைப் பின்வருமாறு அறிவிக்கின்றது.

"ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்: --- கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்று தீது ஆயின்,

எழுநூறும் தீதாய் விடும்."

இதன் பொருள் ---

ஓர் உதவியைச் செய்தவர், பின்னர் தமக்குப் பலநூறு தீமைகளைச் செய்திருந்தாலும், பெரியோர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ஆனால், கீழ்மக்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்திருந்து, தவறிப் போய் ஒரு தீமை செய்ய நேர்ந்து விட்டால், அந்த ஒரு தீமையையே மனத்தில் கொண்டு, முன்னர் செய்த எழுநூறு நன்மைகளையும் தீமையாகவே எண்ணுவர்.

கயவர்களின் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும் என்பது கருத்து.

"நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்" என்கின்றது புறநானூறு.  உலகமே தலைகீழாகப் போய்விடும் என்ற போதும், ஒருவன் செய்த உதவியை அழிக்க முயன்றவர்க்கு உய்வு இல்லை. "நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும் குன்றா வாய்மை" என்கின்றது கல்லாடம்.

வேதங்களை எல்லோராலும் படித்து அறிந்துகொள்ள முடியாது. எனவே, அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளை நீதிநூல்களாக வடித்துப் பெரியோர் தந்தனர். நீதிநூல்களில் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விளக்கமாகவே புராணங்கள் எழுந்தன என்பதை அறிதல் வேண்டும்.

எனவே, ஒருவர் தனக்குச் செய்த நன்மையானது சிறியதே ஆனாலும், அதனை நன்றி உணர்வுடன் நினைவில் கொள்ள வேண்டும். மறந்து விடுதல் ஆகாது. "நன்றி மறப்பது நன்று அன்று" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியது கொண்டு,  "நன்றி மறவேல்" என்பதைப் பற்றி வாழ்தல் நன்மையைத் தரும்.


நன்றி அறிதல் - நன்றி கொல்லாமை

 


நன்றி அறிதல் - நன்றி கொல்லாமை.

-----

மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் பல ஆகும். அப்பண்புகள் அனைத்திலும் தலையாயது, "செய்ந்நன்றி அறிதல்" என்னும் பண்பு ஆகும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வுஇல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்று அறவுறுத்தினார் திருவள்ளுவ நாயனார். எந்த நன்மைகளையும் மறந்து அழித்தவருக்கு மன்னிப்பு உண்டு. செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே இல்லை.

கொள்வதும் கொடுப்பதும் ஆக அமைவதே வாழ்க்கை ஆகும். முட்டுப்படாமல் யாரும் வாழ்ந்துவிட முடியாது. சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டு வாழ்வாக விளங்குகின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதன் மூலமே சமுதாயமானது உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றது. ஒருவர் ஒரு காலத்தில் தமக்குச் செய்த நன்மையை மறவாமல் போற்றுவது மனிதப் பண்பின் சிகரமாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத் தலைப்பிற்கு உரை வகுத்த பரிமேலழகர், "தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை" என்பார். மணக்குடவர், மேலும் ஒரு படி கடந்து, "பிறர் செய்த தீமையையும் மறந்து நன்மையை மறவாமை" என்றார். "நன்றி எனப்படுவது இதயத்தின் நிறைவு" (Gratitude is the memory of the heart) என்று மேசியூ என்னும் மேல்நாட்டு அறிஞர் குறிப்பிடுவார். சர் ராபர்ட் வால்போல் எனும் அறிஞர், "எதிர்கால நன்மைக்கு நிகழ் காலத்தில் நன்றி என்னும் உணர்வு நின்று நிலைத்து இருக்கவேண்டும்" (Gratitude is a lively sense of future favours) என்பார்.

ஔவைப் பிராட்டியார் அருளிய அருந்தமிழ் நூல்களுள் "மூதுரை" என்பதும் ஒன்று. மூதுரை என்பதற்கு மூத்த உரை அல்லது அறிவுரை என்று பொருள். மூதுரை என்று வழங்கப்பட்டு வந்த இந்த அருமையான நூல் பிற்காலத்தில், "வாக்குண்டாம்" என்ற பெயராலும் வழங்கப்படுகின்றது. "வாக்குண்டாம்" என்று இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் தொடங்குவதால், முதலில் வந்த சொல்லே நூலின் பெயராக அமைந்து விட்டது.  நன்றியுடைமையின் இன்றியமையாமையை நாள்தோறும் தாம் காணும் காட்சியினை வைத்தே அது அறிவுறுத்துகின்றது.

தென்னங்கன்றுக்கு மனிதன் அதன் வேரில் நீரை ஊற்றுகின்றான். தென்னங்கன்று வளர்கின்றது. எருவை இடுகின்றான். மேலும் நன்றாக வளர்கின்றது. நீண்ட மரமாக உயர்ந்து குலை தள்ளியது. மனிதன் தென்னையின் இளங்காயைப் பறித்து, அதன் உள்ளிருக்கும் நீரைப் பருகுகின்றான். அது இனிக்கின்றது. இவன் ஊற்றிய தண்ணீர் போல், அவன் குடித்த இளநீர் இல்லை.

"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால், அந்நன்றி

என்று தரும்கொல் என வேண்டா --- நின்று

தளரா வளர் தெங்கு, தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்"

என்று காட்டினார் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

நின்று தளரா வளர் தெங்கு - ஒரே இடத்தில் நிலைபெற்று, சோராமல் வளர்கின்ற தென்னை மரமானது, தாள் உண்ட நீரை - தன் அடியால் (வேரின் மூலமாக) உண்ட தண்ணீரை, தலையாலே தான் தருதலால் - தனது முடியாலே, சுவையுள்ள இளநீராக்கித் தருதலால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் - நல்ல குணமுடைய ஒருவனுக்கு ஓர் உதவியை ஒரு காலத்தில் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா - அந்த உதவியை அவன் எப்பொழுது செய்வானோ என்று ஐயம் கொள்ள வேண்டுவதில்லை.

நற்குணம் உடையவனுக்கு உதவி செய்தால், அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பது கருத்து.

தாள் உண்ட நீர் --- தென்னை மரத்திற்குப் பாய்ச்சிய நீர், அது தருகின்ற இளநீரைப் போலத் தூய்மையானதும், இன்சுவை உடையதும், மருத்துவக் குணம் வாய்ந்ததும் அல்ல. தான் வளர்வதற்குப் பாய்ச்சிய எந்த நீரையும் உண்டு, அதற்கு கைம்மாற்றாக (பிரதி உபகாரமாக) அற்புதமானதொரு இளநீரைத் தென்னை மரமானது அது உள்ள காலம் வரை தருகின்றது. ஒரு தேங்காயை வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட தென்னை மரமானது, தான் உள்ளவரையில் எல்லோருக்கும் இளநீர்க் காய்களை அளவில்லாமல் வழங்கி வருகின்றது. தன்னை வைத்தவனுக்கு மட்டுமல்லாமல், அவனது சந்ததிக்கும் மட்டுமல்லாது, தன்னை வந்து சார்ந்தோர்க்கும், இன்னார் இனியார் என்று பாராமல், வழங்கி வருகின்றது.

அதுபோலவே,  ஒருவன் ஒருவனுக்குச் செய்த உபகாரமானது, அவனாலோ, அல்லது யாராலோ, எவ்விதத்திலாவது, பலவிதமாக வந்து பயன் தரும் என்பதை அறியலாம். செய்த அறச் செயலானது நிலைத்து நின்று, தக்க காலத்தில், உரிய பயனைத் தரும். எனவே, இயன்ற வழிகளில் எல்லாம், அறச் செயல்களை எப்போதும் ஒழியாது செய்து வருதல் வேண்டும் என்பதும் இப் பாடலின் கருத்து. 

அறத்தை நாளும் செய்யவேண்டும் என்பது வாழ்வியல் நெறி ஆகும். அறங்களைச் சிதைத்தல் மறம் (பாவம்) ஆகும். அது மன்னிக்க முடியாத பெரும் குற்றமும் ஆகும். ஒருவன் பெரிய அறங்களைச் சிதைத்தால் கூட, பாவம் என்னும் பாழ்நரகில் இருந்து மீண்டு விடலாம். ஆனால், ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு, எப்படிப் பார்த்தாலும் அந்தப் பாவத்தில் இருந்து விடுதலை இல்லை.

"ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என,

நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் 

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடிற்றே, ஆயிழை கணவ!"         --- புறநானூறு.

இதன் பொருள் ---- 

அழகிய அணிகலன்களை அணிந்துள்ள மங்கையின் மணவாளனே! பசுவின் மடியை அறுத்த பெரும்பாவத்தைப் புரிந்தோர்க்கும், பெண்ணின் தாய்மைப் பேற்றை அழித்த கொடுமையைப் புரிந்தோர்க்கும், இருமுது குரவர்களாகிய தாய், தந்தை, குரு முதலானோரைப் பழித்த கொடுமையாளர்க்கும், அவர்கள் செய்த தீமைகளுக்குப் பரிகாரம் உண்டு. ஆனால், இந்த மண்ணுலகமே கீழ்மேலாகப் புரளும் ஊழிக் காலம் வந்தாலும், செய்த நன்றியைக் கொன்றவர்களுக்கு அந்தப் பாவத்தில் இருந்து விடுபட வழியே இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

துன்பப்பட்ட காலத்தில் உதவிய ஒருவனுக்கு, அவன் துன்பப்படும் காலத்தில் உதவவில்லை என்றால், அது அவன் பரம்பரைக்கும் ஆகாது என்கின்றது "கலித்தொகை" என்னும் சங்கநூல்.

"ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன்

எச்சத்துள் ஆயினும் தெறியாது விடாதே காண்"..

இதன் பொருள் ---

வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.


"இசையா ஒருபொருள் இல்என்றால் யார்க்கும்

வசைஅன்று, வையத்து இயற்கை –--  நசைஅழுங்க

நின்றுஓடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி

கொன்றாரின் குற்றம் உடைத்து".

என்கிறது நாலடியார்.

தம்மிடம் கொடுக்க இயலாத ஒரு பொருளை வந்து கேட்பவரிடம் இல்லை என்பது ஒன்றும் குற்றம் இல்லை. இது உலக இயல்புதான். ஆனால், ஒன்றைத் தருவதாக வாக்களித்து விட்டு, பின் அந்த நம்பிக்கை கெட, இல்லை என்று பொய் கூறுவது, செய்த நன்றியை மறப்பதற்கு ஒப்பான குற்றம் ஆகும்.

மழைக் காலம் முடிந்த பின் சீதையைத் தேடித் தருவதாக இராமனிடம் வாக்களித்து விட்டு சென்றான் சுக்கிரீவன். மழைக் காலம் முடிந்தும் வரவில்லை. கோபம் கொண்டு இலக்குவன் போகிறான். அப்போது அங்கு வந்த அனுமனிடம் இலக்குவன் கேட்கிறான்...."நீயுமா செய்நன்றி மறந்தாய்" என்று. அப்போது அனுமன் கூறுவான் "பெற்றோரை, ஆசிரியரை, தெய்வம் போல் போற்றத்தக்க அந்தணர்களை, பசுவை, குழந்தைகளை, பெண்களை கொன்றவர்களுக்குக் கூட உய்வு உண்டு. ஆனால், செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒரு உய்வும் இல்லை" என்பதை நான் அறிவேன். எனவே, நான் செய் நன்றி மறக்கமாட்டேன் என்று உணர்த்துகிறான்.

"சிதைவு அகல் காதல் தாயை, 

தந்தையை, குருவை, தெய்வப்

பதவி அந்தணரை, ஆவை, 

பாலரை, பாவைமாரை

வதை புரிகுநர்க்கும் உண்டாம் 

மாற்றலாம் ஆற்றல், மாயா

உதவி கொன்றார்க்கு என்றேனும் 

ஒழிக்கலாம் உபயம் உண்டோ?"    --- கம்பராமாயணம்.

தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக் கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும். இருப்பினும் அப்பாவங்களைப் போக்குவதற்கு உரிய கழுவாய் உண்டு. ஆனால், செய்ந்நன்றி மறத்தலுக்கோ எத்தகைய கழுவாயும் இல்லை.

தனது அண்ணனான இராமனுக்கு அணுவளவேனும் துரோகம் எண்ணியிருந்தால், இன்னின்ன பாவங்களைப் புரிந்த பாவிகள் அடையும் கொடிய நரகத்தை நான் உறுவேனாக என்று பரதன் கூறுகின்றான். இதில் தலைமையாக அவன் சொல்லி இருப்பது சிந்தனைக்கு உரியது.

"கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,

மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,

நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே".    --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

தனக்கும், தனது கன்றுக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப் பாலை இறைவன் அளித்திருக்கின்றான். கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல், தானே கறந்து அநுபவித்தல் பாதகம் ஆகும். பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்து, அதைக் கைப்பற்றல் அறம் அல்லாத செயல் ஆகும். தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன் நாகரிகம் அற்ற நாவினை உடையவன். இவர்கள் அடைவது நரகமே ஆகும்.

தாய்ப்பாலை இழந்து இறந்து போன கன்றின் தோலை உரித்து அதனுள் வைக்கோலைப் பொதிந்து உயிருள்ள கன்று போல் காட்டிப் பகக்களிடம் வஞ்சமாய்க் கறக்கும் பாவச் செயல்கள் மலிந்து உள்ளன. இது பெரும்பாவம் என்கின்றது கம்பராமாயணமும், பின்வரும் சிறுபஞ்சமூலம் பாடலும்..


"தோற்கன்று காட்டிக் கறவார், கறந்தபால்

பாற்பட்டார் உண்ணார், பழிபாவம் - பாற்பட்டார்

ஏற்றவா தின்புற்று வாழ்வன ஈடு அழியக்

கூற்று உவப்பச் செய்யார் கொணர்ந்து."   --- சிறுபஞ்சமூலம்.

"சுக்கிரீவன் பெறுதற்கு அரிய அரசை நம்மால் பெற்றான். அவனுக்கு நாம் செய்த உதவியை அவன் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு உதவியவர்க்குத் திரும்ப உதவி செய்யவேண்டும் என்னும் அறத்தை அவன் மறந்தான். நம்மால் பெற்ற அரசியல் வாழ்வில் இப்போது அவன் மயங்கிக் கிடக்கின்றான். செய்த நன்றிக்குத் திரும்ப உதவி செய்யாது, நன்றியைக் கொன்றுவிட்டான். அருமையான நட்பு என்னும் கயிற்றையும் அறுத்து விட்டான். இத்தகையவனைக் கொன்று அழித்தல் குற்றம் ஆகாது. நீ சென்று அவன் எண்ணம் என்ன என்று அறிந்து வருவாய்" என்று இராமபிரான் இலக்குவனுக்குக் கூறுகின்றார்.

"நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,

ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்

கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?

சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்."     --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

இப்படி ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்து,  பெறுவதற்கு அருமையான நட்பாகிய அன்புக் கயிறு அற அழித்து, எல்லோர்க்கும் ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையைக் குலைத்துவிட்டு, வாக்குத் தவறியவனைக்  கொன்று ஒழிப்பது, பழிபாவங்களிலிருந்து நீங்கிய செயலே ஆகும். ஆகவே, நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை ஆராய்ந்து அறிந்து வருவாய்;                                                                                               

"நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்

குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்

தங்குவன கண்டும் வலிமனங் கூடி

ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு

சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்ம்... 

என்று கல்லாடம் அறிவுறுத்தும்.


நன்றி அறிதல் --- புண்ணியம். நல்வினை.

நன்றி கொல்லுதல் --- பாவம். தீவினை.

பிற பாவங்களுக்குக் கழுவாய் உண்டு. நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் என்பதே இல்லை.

ஒருவர் தனக்குச் செய்த நன்மையை எக்காலத்தும் மறவாது இருத்தல் வேண்டும். அதன் அறிகுறியாகத்  தன்னால் முடிந்த உதவியைக் கைம்மாற்றாகச்  செய்யலாம். மணக்குடவர்  காட்டியபடி, ஒருவர்  தனக்குச் செய்த தீமையை  மறந்துவிட வேண்டும். அவர் செய்த உதவியை மறவாது  இருக்க வேண்டும். செய்த உதவியை மறந்து , பழித்துப் பேசுதலும், தீமை செய்தலும் பாவம் ஆகும்.  யார்க்கும் முட்டுப்பாடு வரும். தனக்கு உதவிய ஒருவருக்கு முட்டுப்பாடு வந்தத் என்பதை அறிந்தாலோ, கேள்விப்பட்டாலோ, முடிந்த வகையில் உதவுதல் வேண்டும். மேலே கலித்தொகை கூறியது போல, துன்பப்பட்டுக் கொண்டு இருந்த காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.



வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...