அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சொரியு மாமுகிலோ (திருவையாறு)
முருகா!
மாதர் மயலில் அழுந்தாமல்,
மெய்யடியார்களுடன் கூடி,
தேவரீரை வழிபட்டு,
வீடுபேற்றினைப் பெற அருள்.
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி
சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை
துவர தோஇல வோதெரி யாஇடை
துகளி லாவன மோபிடி யோநடை
துணைகொள் மாமலை யோமுலை தானென ....உரையாடிப்
பரிவி னாலெனை யாளுக நானொரு
பழுதி லானென வாணுத லாரொடு
பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப்
பரவை மீதழி யாவகை ஞானிகள்
பரவு நீள்புக ழேயது வாமிகு
பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே
கரிய மேனிய னானிரை யாள்பவன்
அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக்
கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
கணையி னால்நில மீதுற நூறிய
கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே
திரிபு ராதிகள் தூளெழ வானவர்
திகழ வேமுனி யாவருள் கூர்பவர்
தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே
சிகர பூதர நீறுசெய் வேலவ
திமிர மோகர வீரதி வாகர
திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சொரியும் மாமுகிலோ? இருளோ? குழல்,
சுடர்கொள் வாள் இணையோ? பிணையோ? விழி,
சுரர் தம் ஆரமுதோ? குயிலோ? மொழி, ....இதழ்கோவை
துவர் அதோ? இலவோ? தெரியா இடை,
துகள் இலா அனமோ? பிடியோ? நடை,
துணைகொள் மாமலையோ? முலைதான் என ....உரையாடி,
பரிவினால் எனை ஆளுக, நான் ஒரு
பழுது இலான் என வாள் நுதலாரொடு
பகடியே படியா ஒழியா இடர் ...... படும், மாயப்
பரவை மீது அழியா வகை, ஞானிகள்
பரவு நீள் புகழே அதுவா, மிகு
பரம வீடு, அது சேர்வதும் ஆவதும் ...... ஒருநாளே?
கரிய மேனியன், ஆனிரை ஆள்பவன்,
அரி, அரா அணை மேல்வளர் மாமுகில்,
கனகன் மார்பு அது பீறிய வாள்அரி, ...... கனமாயக்
கபடன் மாமுடி ஆறு உடன் நாலும் ஒர்
கணையினால் நிலம் மீது உற நூறிய
கருணை மால், கவிகோப, க்ருபாகரன் ......மருகோனே!
திரிபுர ஆதிகள் தூள் எழ, வானவர்
திகழவே, முனியா அருள் கூர்பவர்,
தெரிவை பாதியர், சாதி இலாதவர் ...... தருசேயே!
சிகர பூதரம் நீறுசெய் வேலவ!
திமிர மோகர! வீர! திவாகர!
திருவையாறு உறை தேவ! க்ருபாகர! ...... பெருமாளே.
பதவுரை
கரிய மேனியன் --- கருநிறத் திருமேனி உடையவன்;
ஆ நிரை ஆள்பவன் --- பசுக்கூட்டத்தை மேய்ப்பவன்;
அரி --- உயிர்களின் பாவத்தை அரிப்பவன்;
அரா அணை மேல் வளர் மாமுகில் --- பாம்பு அணையில் பள்ளி கொள்ளுகின்ற மேகவண்ணன்;
கனகன் மார்பு அது பீறிய ஆளரி --- பொன்மேனி படைத்த இரணியனின் மார்பினைப் பிளந்தவன்;
கன மாயக் கபடன் மா முடி ஆறுடன் நாலும் --- மாயத்தில் வல்லவனான இராவணனின் பத்துத் தலைகளையும்,
ஒர் கணையினால் நிலம் மீது உற நூறிய --- ஒப்பற்றதொரு அம்பினைக் கொண்டு நிலத்தில் விழுந்து தூளாகும்படியாகச் செய்த
கருணை மால் --- கருணையே வடிவான திருமால்;
கவி கோப --- குரங்கைக் (வாலியைக்) கோபித்தவன்;
க்ருபாகரன் மருகோனே --- அருளுக்கு இருப்பிடமான திருமாலின் திருமருகரே!
திரிபுராதிகள் தூள் எழ முனியா --- முப்புர வாசிகள் பொடியாகும்படிச் சினந்து,
வானவர் திகழவே --- தேவர்கள் வாழ்வு அடையும்படி,
அருள் கூர்பவர் --- அருள் பொழிபவர்;
தெரிவை பாதியர் --- உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாதியில் உடையவர்;
சாதி இலாதவர் தரு சேயே --- பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய சிவபரம்பொருள் அருளியவரே!
சிகர பூதரம் நீறு செய் வேலவ --- சிகரங்களை உடைய கிரவுஞ்ச மலையைப் பொடியாக்கிய வேலாயுதரே!
திமிர மோகர வீர திவாகர --- அஞ்ஞானத்தால் உண்டாகும் மயக்கத்தைப் போக்கி அருள் புரிகின்ற வீரம் மிக்க கதிரவனே!
திருவையாறு உறை தேவ --- திருவையாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தேவரே!
க்ருபாகர --- கருணைக்கு இருப்பிடமானவரே!
பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!
சொரியும் மா முகிலோ இருளோ குழல் --- கூந்தல், மழையைப் போழியும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ?
சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி --- கண்கள், ஒளிமிக்க இரு வாட்களோ, அல்லது மானின் கண்களோ?
சுரர் தம் ஆர் அமுதோ குயிலோ மொழி --- மொழியானது, தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ?
இதழ் கோவை துவர் அதோ இலவோ --- வாயிதழ் கொவ்வைக்கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ?
தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை --- கண்ணுக்குப் புலப்படாத இடையினை உடைய இவர்களின் நடையானது, குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ?
துணை கொள் மா மலையோ முலை தான் --- மார்பகங்கள் இரு பெரிய மலைகளோ?
என உரை ஆடி --- என்றெல்லாம் வியந்து கூறி,
பரிவினால் எனை ஆளுக --- அன்புடன் என்னை ஆளாகக் கொள்ளுக
நான் ஒரு பழுது இலான் என --- நான் குற்றமில்லாதவன் (என்று)
வாள் நுதலாரொடு பகடியே படியா --- ஒளி பொருந்திய நெற்றியினை உடைய விலைமாதர்களுடன் வெளிவேடக்காரனைப் போல் பேசி, (அவர்களுடன் உறவு கொண்டு)
ஒழியா இடர் படு --- நீங்காத துன்பத்தை அடைந்து,
மாயப் பரவை மீது அழியா வகை --- பிறவி என்னும் மாயக் கடலில் அழுந்தி அழிந்து போகாதபடி,
ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் --- மெய்ஞ்ஞானிகள் புகழ்ந்து பாடிப் பரவுகின்ற அந்த
மிகு பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே --- மேலான வீட்டினைச் சேர்வதும், (அடியேன்) அதற்குத் தகுதியானவன் ஆவதும் ஆகிய ஒரு நாள் உண்டாகுமா?
பொழிப்புரை
கருநிறத் திருமேனி உடையவன்; பசுக் கூட்டத்தை மேய்ப்பவன்; உயிர்களின் பாவத்தை அரிப்பவன்; பாம்பு அணையில் பள்ளி கொள்ளுகின்ற மேகவண்ணன்; பொன்மேனி படைத்த இரணியனின் மார்பினைப் பிளந்தவன்; மாயத்தில் வல்லவனான இராவணனின் பத்துத் தலைகளையும், ஒப்பற்றதொரு அம்பினைக் கொண்டு நிலத்தில் விழுந்து தூளாகும்படியாகச் செய்த கருணையே வடிவான திருமால்;
குரங்கைக் (வாலியைக்) கோபித்தவன்; அருளுக்கு இருப்பிடமான திருமாலின் திருமருகரே!
முப்புர வாசிகள் பொடியாகும்படிச் சினந்து, தேவர்கள் வாழ்வு அடையும்படி அருள் பொழிபவர்; உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாதியில் உடையவர்; பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய சிவபரம்பொருள் அருளியவரே!
சிகரங்களை உடைய கிரவுஞ்ச மலையைப் பொடியாக்கிய வேலாயுதரே!
அஞ்ஞானத்தால் உண்டாகும் மயக்கத்தைப் போக்கி அருள் புரிகின்ற வீரம் மிக்க கதிரவனே!
திருவையாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தேவரே!
கருணைக்கு இருப்பிடமானவரே!
பெருமையில் மிக்கவரே!
கூந்தல், மழையைப் போழியும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ? கண்கள், ஒளிமிக்க இரு வாட்களோ, அல்லது மானின் கண்களோ? மொழியானது, தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ? வாயிதழ் கொவ்வைக்கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ? கண்ணுக்குப் புலப்படாத இடையினை உடைய இவர்களின் நடையானது, குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ? மார்பகங்கள் இரு பெரிய மலைகளோ? என்றெல்லாம் வியந்து கூறி, அன்புடன் என்னை ஆளாகக் கொள்ளுக, நான் குற்றமில்லாதவன் என்று ஒளி பொருந்திய நெற்றியினை உடைய விலைமாதர்களுடன் வெளிவேடக்காரனைப் போல் பேசி, அவர்களுடன் உறவு கொண்டு, நீங்காத துன்பத்தை அடைந்து, பிறவி என்னும் மாயக் கடலில் அழுந்தி அழிந்து போகாதபடி, மெய்ஞ்ஞானிகள் புகழ்ந்து பாடிப் பரவுகின்ற அந்த மேலான வீட்டினைச் சேர்வதும், (அடியேன்) அதற்குத் தகுதியானவன் ஆவதும் ஆகிய ஒரு நாள் உண்டாகுமா?
விரிவுரை
இத் திருப்புகழின் முற்பகுதியில், விலைமாதரின் அழகை விரித்துக் கூறி, அவரது அழகிலும், அவர் புரியும் சாலங்க்ளிலும் அறிவு மயங்கி, அவர் வசப்பட்டு, அவர் தரும் கலவி இன்பத்தினை விரும்பி, அவர் இட்ட ஏவல்களைச் செய்து, உடல் நலமும், பொருள் நலமும் ஒருங்கே இழந்து, பிறவி என்னும் பெருங்கடலில் விழுந்து அல்லல் பட்டு அழுந்தாது, மெய்யடியார்களுடன் கூடி இருந்து, இறைவனை வழிபட்டு, மேலான வீட்டினை அடைய அறிவுறுத்துகின்றார்.
ஆ நிரை ஆள்பவன் ---
ஆ --- பசு.
நிரை --- கூட்டம்.
பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவன் கண்ணபிரான். அவன் நல்ல மேய்ப்பன்.
கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்தவன். ஆயர்கள் என்பவர் இறைவனை ஆய்பவர். இடையர்கள் என்றால், இறைவனாகிய கண்ணனுக்கும், அவனை அடைய விரும்பும் மனிதர்களுக்கும் இடையில் இருந்து, அவனை எப்படி அடைவது என்று காட்டும் ஞானிகள். ஆயர்கள் எப்போதும் கண்ணனையே தங்கள் மனத்தில் தரித்து, "உண்ணும் சோறும், தின்னும் வெற்றிலையும், பருகும் நீரும் கண்ணனே" என்று இருந்த ஞானிகள். அந்த ஞானிகள் இடத்தில் வளர்ந்த பசுக்கள், பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆகும்.
எனவே, பசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம், அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்து, பருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டி, தக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்து, அவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டா. நன்மையே செய்வன. அதுபோல், கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள், ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன.
"தேங்காதே புக்க இருந்து சீர்த்த முலை பற்றி வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள், நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.
தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள்.
வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.
இந்த விசாரசருமர் தான், பின்னாளில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, சண்டீச நாயனார் ஆனார்.
ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது" என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்" என்று உறுதிகொண்டார். ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.
வேதம் ஓதுவதன் பலன், எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் ஒழுகவேண்டும். உலக நன்மைக்காக வாழவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் இந்தப் புண்ணிய பூமியில் நிகழ்ந்தது.
விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார். அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.
கனகன் மார்பு அது பீறிய ஆளரி ---
கனகன் -- இரணியன்.
பீறிய, பீறுதல் --- கிழித்தல்.
ஆளரி --- ஆள்+அரி. மனித வடிவிலே வந்த சிங்கம்.
அருமறை நூல்ஓதும் வேதியன்
இரணிய ரூபாந மோஎன
அரிகரி நாராய ணாஎன ...... ஒருபாலன்
அவன்எவன் ஆதாரம் ஏதுஎன
இதன்உள னோஓது நீஎன
அகிலமும் வாழ்வான நாயகன் .....எனஏகி
ஒருகணை தூணோடு மோதிட
விசைகொடு தோள்போறு வாள்அரி
உகிர்கொடு வாராநி சாசரன் ...... உடல்பீறும்
உலகுஒரு தாளான மாமனும்
உமைஒரு கூறான தாதையும்
உரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே. --- (இருகுழை) திருப்புகழ்.
திருமால் நரசிங்கமாக வந்து கனகன் மார்பு கீண்ட வரலாறு
பிரமதேவருடைய புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர். காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர். இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர். இளையவனீகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்றபோது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.
இரணியன் தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவவலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டான். மனம் வெருண்டான். பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டான். அப்போது அவன் மனைவி லீலாவதி பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர். நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.
தானவேந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு, கனல் நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன். இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன், சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன். இடையில் நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை மீட்டு, தனது தவச் சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கருவளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்து கொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர்.
இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்ன வாகனத்தில் நான்முகக் கடவுள் தோன்றினர். அவர்பால் இரணியன் மண்ணிலும், விண்ணிலும், அல்லிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், இருளிலும், ஒளியிலும், அத்திரத்தாலும், சத்திரத்தாலும், நரராலும், சுரராலும், நாகங்களினாலும், விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும், மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்று, இரணியபுரம் சேர்ந்தனன். நாரதர் லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர். பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள். மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றான்.
பின்னர் ஒருநாள், தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினான். தன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு பணித்து அனுப்பினான். காலனிலும் கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும், திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திரா, அரியைக் காண முடியவில்லை" என்றனர். இரணியன் சினந்து, மூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான். எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்" என்றனர். இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பன். கட்டையைக் கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன். ஆதலினால், ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்" என்று கட்டளை இட்டனன். காலதூதரினும் கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம" என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.
தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து திருமாலைத் தியானித்துத் துதித்தனர். திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சி இருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருங்கள். யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்ப்போம்" என்று அருளிச் செய்தனர்.
பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்து, தியானபரராக இருந்தனர். ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும், தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது கருமால் அறத் திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.
பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோது, இவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர் தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன். சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார். பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே! பிழைபடக் கூறலுற்றனை. இன்றிருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலமன்று" என மொழிந்து, "ஓம் நமோ நாராயணாய" என்று கூறினர்.
"ஓதப் புக்கவன் உந்தைபேர் உரைஎன லோடும்,
போதத்தன் செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,
மூதக்கோய், இது நல்தவம் அன்று என மொழியா
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்".
பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடா, பாலகனே! அந்தோ, இந்த மந்திரத்தைக் கூறாதே. உன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர். சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே. உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.
"கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை, பாவி அத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர நின் அறிவின்
எடுத்தது என்இது, என்செய்த வண்ணம் நீ என்றான்".
பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐயனே! இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும் உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.
"என்னை உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய
உன்னை உய்வித்தேன், உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம்நான் இயம்பியது இயம்புதி என்றான்".
ஆசிரியர், "அப்பா! குழந்தாய்! நாங்கள் கூறுவதைக் கேள். இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம். இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர். பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின் விழுமியது. எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை" என்றார்.
ஆசிரியர் மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே! உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்" என்றார். இரணியன், "என்ன கூறினான் கூறும்" என்று வினவினான். ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.
இரணியன் தன் மகனை அழைப்பித்தான். பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே! நீ என்ன கூறினாய்" என்று வினவினான் தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோ, ஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்" என்றார். இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப் பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு எடுத்துச் சொல்" என்று கேட்டான்.
"காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய".
"அப்பா! ஓம் நமோ நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டு எழுத்தாம்" என்றார். தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே! முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய இரணியாய நம என்றே கூறுகின்றனர்".
"யாரடா உனக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்? அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த பாம்பின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன். அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு" என்று பலவும் கூறினான்.
தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனே! சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால். எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர். மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர். அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற வேண்டும் என்றால், அவரை வணங்கு. வாயார வாழ்த்து. நெஞ்சார நினை" என்றார்.
அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன் ஆலகால விடம் போல் சீறினான். அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுங்கள்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர். பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை. அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார். ஆயுதங்கள் பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி, இரணியன்பால் உற்றது உரைத்தனர்.
நிருதன் வியந்து, நெருப்பில் இடுமாறு பணித்தனன். விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர். தியானபரர் ஆகிய அவருக்கு அத் தீ, தண்ணிலா எனக் குளிர்ந்தது. தாமரைத் தடாகத்தில் விளையாடும் அன்னம் போல், கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.
அவுணன் வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான். அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டு, பிரகலாதரைக் கொடிய நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன. திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர். பாம்புகளின் பற்கள் ஒடிந்து, பணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.
இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்கு யானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான். வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர், முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, 'கஜேந்திர வரதா' என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன். அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டால் பிரகலாதரைக் குத்தின. வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.
ஏவலர் ஓடி, இதனைக் காவலன்பால் இயம்பினர். கனகன் சிரித்து, "அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள்" என்றான். பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர். அவர் 'ஓம் நமோ நாராயணாய' என்று உருண்டார். பூமிதேவி பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமி தேவியைப் போற்றி நின்றார். பூதேவி, "கண்ணே! குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று அருள் புரிந்தனள். ஞானக்குருந்தர் பகிய பிரகலாதர், "அம்மா! இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம் கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.
இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான். மழையையும் இடியையும் ஏவினான். நிலவறைக்குள் அடைப்பித்தான். விஷத்தை உண்பித்தான். பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான். சாந்த சீலராகிய அவர், சாகர சயனா என்று துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை. இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை. மேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.
ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி "ஓம் நமோ நாராயணாய" என்று சிந்தித்த வண்ணமாக நின்றார். இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். "மதிநலம் படைத்த அமைச்சர்களே! என் மகனுடைய மனக் கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன். இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன். என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன். நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும். பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும். அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான். என்னிடம் காட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான்" என்று சொல்லி, "கண்ணே! பிரகலாதா! உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன். இப்படி வா, மகனே! அந்த மாயவன் எங்குளன் கூறு" என்று வினவினான்.
அன்பு வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே! மலரில் மணம்போல், எள்ளுக்குள் எண்ணெய்போல், என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான். என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார். இரணியன், "மைந்தா! என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உள்ளானோ? உரை" என்று கேட்டான்.
"சாணிலும் உளன், ஓர்தன்மை
அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன், மாமேருக்
குன்றிலும் உளன், இந்நின்ற
தூணிலும் உளன், முன்சொன்ன
சொல்லிலும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின் என்றார்,
நன்றுஎனக் கனகன் சொன்னான்".
பிரகலாதர், "தந்தையே! அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன். காணுதி" என்று அருளிச் செய்தார்.
இரணியன் சீற்றமிக்கு, "பேதாய்! நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி இல்லையானால், சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான். பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாது. என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன் அடியனும் அல்லன்" என்றார்.
"என்உயிர் நின்னால் கோறற்கு
எளியதுஒன்று அன்று, யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட
இடம்தொறும் தோன்றானாயின்.
என்உயிர் யானே மாய்ப்பன்,
பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்
என்றனன் அறிவின் மிக்கான்".
கனகன் உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான். அத் தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு" என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.
அதுகண்ட கனகன், அஞ்சாது வாளினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே! இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப் பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய்! உன் கண் காண இந்த நரசிங்கத்தையும், உன்னையும் கொன்று, என் வீரவாளை வணங்குவன்" என்றான்.
"கேள்இது நீயும்காணக்
கிளர்ந்த கோள்அரியின் கேழல்
தோளொடு தாளும் நீக்கி,
நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவது அல்லால்
வணங்குதல் மகளீரூடல்
நாளினும் உளதோ என்னா
அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்".
அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்கமூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் ல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித்தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறி, அவனுடைய குடலை மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார் நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர். பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சிமோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய்! உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன். என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருளினர்.
"உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான்"
பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்" என்றார்.
"முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் “ என்றான்.
நரசிங்கமூர்த்தி மகிழ்ந்து, வானவர்க்கும் தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
"என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன்
"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.
என்று வரம் அருளி, எவ் உலகும் கைகூப்ப,
முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட,
"நின்ற அமர்ர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு
ஒன்று பெருமை உரிமை புரிக" என்றான்.
திரிபுராதிகள் தூள் எழ முனியா வானவர் திகழவே அருள் கூர்பவர் ---
திரிபுர தகனம்
தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வாள்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர். அவர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டுமென்ன, மூவரும் பத்மயோனியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலம் கழியின் யானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக்கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசன் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய நெஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்” என, தானவர் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கொரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப் புரமூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தால் அன்றி வேறு ஒருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க, திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் தந்து தனது இருக்கை சேர்ந்தனன்.
தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பலவிளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடந் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதியென்று உன்னி, தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலம் தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியார். ஆதலின், அவர்களைச் அழித்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.
திருமால் தேவர்களே அஞ்சாதீர்களென்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரமடைந்து பிடகாகமம், பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரே. ஆதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராது ஒழியுங்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலையடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய போர்க் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தி அண்ணல் மேருவரை சேர்ந்து, சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.
மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப்பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்குயானைகள் இடையிற்றாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கண்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும், துப்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க் கருவிகளை அமைத்துக் கொண்டு அடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.
நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று, தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தரும் கருங்குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.
தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
உடனே நாராயணர் இடபமாக வடிவெடுக்க, அவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல்விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலுங் காண்க.
"கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ".
விரிஞ்சன் விநாயக பூசனை புரிய, அவரருளால் இரதம் முன்போலாக, சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்று அண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.
அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின், அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும், படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.
"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”. --- திருஞானசம்பந்தர்.
வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே. --- திருஞானசம்பந்தர்.
குன்ற வார்சிலை, நாண் அரா, அரி
வாளி கூர்எரி காற்றின், மும்மதில்
வென்றவாறு எங்ஙனே? விடைஏறும் வேதியனே!
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே. --- திருஞானசம்பந்தர்.
குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வாய் ஓட்டி அடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னைச்
சிவனே, எம் பெருமான் என்று இருப்பார்க்க் என்றும்
நன்றாகும் நம்பியை, நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே --- அப்பர்
கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. --- அப்பர்.
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. --- சுந்தரர்.
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.
ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற. --- மணிவாசகர்.
"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்" --- (ஆனாத) திருப்புகழ்.
தெரிவை பாதியர் ---
இம்மை நலம் விரும்புவோர் சக்தியை வழிபடுவார்கள். பரத்தை விரும்புவோர் சிவபெருமானை வழிபடுவார்கள்.
பிருங்கி என்ற முனிவர் இம்மை நலத்தை விரும்பாதவர். வீடுபேறு என்ற பரத்தையே விரும்புபவர். அவர் கயிலாயத்தை
அடைந்த போதெல்லாம், உமாதேவியாரை வலம் வராமல், சிவபெருமானை மட்டுமே வலம் வந்து வழிபடுவார்.
உமாதேவியார் சிவபெருமானுடன் நெருங்கி அமர்ந்திருந்தார். பிருங்கி முனிவர் வண்டு உருவங் கொண்டு இடையில் நுழைந்து சென்றார்.
இதனால் அம்மை வருந்தி, “நான் இடப்பாகம் பெறுவேன்” என்று கூறி, கேதாரம் என்ற திருத்தலஞ் சென்று தவம் புரிந்து, இடப்பாகத்தைப் பெற்றார்கள்.
தன்னை நீக்கியே சூழ்வுறுந் தவமுடைப் பிருங்கி
உன்னி நாடிய மறைகளின் முடிவினை யுணரா
என்னை யாளுடை யானிடம் சேர்வனென் றியமக்
கன்னி பூசனை செய்தகே தாரமுன் கண்டான். --- கந்தபுராணம்.
இமயவல்லி இடப்பாகம் பெற்றது
உமையம்மையார் சந்திர சூரியர் சிவபெருமானுடைய திருக்கண்களே என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு, எம்பெருமானது திருக்கண்களைப் புதைத்தனர். அதனால் உலகங்கள் எல்லாம் இருண்டு விட்டன. உயிர்கள் அனைத்தும் தடுமாறித் துன்புற்றன. அக்காலை சிவபெருமான் நெற்றிக் கண்களைத் திறந்து ஒளியை உண்டாக்கினர். அது கண்ட அம்பிகை முக்கட்பெருமானைத் தொழுது, "எம்பெருமானே! உலகமெல்லாம் இருண்டு மருண்டு துன்புறத் தங்கள் திருக்கண்களைப் புதைத்த பாவம் தீர மண்ணுலகில் சென்று தவம் புரியக் கருதுகின்றேன். அதற்குத் தக்க இடம் அருளிச் செய்வீர்" என்றனர்.
கண்ணுதற்கடவுள், "தேவீ ! உனை வினை வந்து அணுகாது எனினும், உலகம் உய்யத் தவம் புரியக் கருதினை. மண்ணுலகில் மிகவும் சிறந்த தலம் காஞ்சியே ஆகும். ஆங்கு சென்று தவம் செய்தி" என்று அருளிச் செய்தனர்.
அம்மையார் பாங்கிகளும், அடியார்களும், விநாயகரும், முருகரும் சூழ, கச்சியம்பதி போந்து, வேதமே மாமரமாகி நிற்க, அதன் கீழ் மணலால் இலிங்கம் உண்டாக்கி வழிபாடு செய்தனர். அம்மையின் அன்பை உலகறியச் செய்ய இறைவன் கம்பை நதியில் பெருவெள்ளம் வரச்செய்தனர். அதுகண்ட அம்மை தன்னைக் காத்துக் கொள்ளும் கருத்து இன்றி, சிவலிங்கத் திருமேனிக்குப் பழுது நேராவண்ணம் முலைத்தழும்பும், வளைச் சுவடும் உண்டாக சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டனர். இறைவன் அம்மையின் இணையற்ற அன்பின் பெருக்கை நோக்கி உருகி, விடைமீது காட்சி தந்தனர். உமாதேவி இறைவன் திருவடி மீது வீழ்ந்து, "இடப்புறம் தந்து என்னைக் கலந்து அருளும்" என்றனர். பெருமான், "உமையே! இங்கு தவம் புரிந்ததனால் கண் புதைத்த வினை கழிந்தது. இடப்பாகம் வேண்டுதியேல், நினைக்க முத்தியளிக்கும் திருத்தலமாகிய திருவருணைக்குச் சென்று தவம் செய்வாய். ஆங்கு அதனை அருள்வோம்" என்று அருள் புரிந்தனர்.
ஆரணன் திருமால் தேட
அடிமுடி ஒளித்து ஞானப்
பூரண ஒளியாய் மேல்கீழ்
உலகெலாம் பொருந்தி நிற்போம்
தாரணி யவர்க்கும் மற்றைச்
சயிலமாய் இருப்போம் அங்கே
வாரணி முலையாய் பாகம்
தருகுவோம் வருதி என்றார்.
அருளே வடிவாகிய அம்பிகை தனது பரிவாரங்கள் யாவும் சூழ, இரண்டு காவதம் சென்று ஒரு வெள்ளிடையில் சேர்ந்தனர். அங்கே முருகக் கடவுள் வாழைப்பந்தர் இட்டனர். அது கண்ட தாய்,
அன்னையும் குகனை நோக்கி
அரம்பையால் பந்தர் செய்து
பன்னிரு கரமும் சால
வருந்தினை எனப் பாராட்டி
இன்னுமோர் கருமம் சந்தி
முடிப்பதற்கு இனிய நன்னீர்
கைந்நிறை வேலை ஏவி
அழைத்திடு கணத்தில் என்றாள்.
அக்காலை ஆறுமுகப் பெருமான், தம் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தை ஏவி, மேற்பால் உள்ள மலையைப் பிளந்து, அதனின்றும் ஒரு நதியைத் தருவித்தனர். சேய் தருவித்த காரணத்தால், அந்த நதி சேயாறு எனப்படுவதாயிற்று.
வாழைப்பந்தல் என்ற திருத்தலமும் இன்று கண்கூடாக விளங்குகின்றது. அம்மை அந் நதியில் சந்தியாவந்தனம் செய்து, திருவண்ணாமலையை அடைந்தனர். அங்கு தவம் புரியும் முனிவர்களுடன் கௌதமர் அம்மையின் வரவைத் தரிந்து அளவற்ற மகிழ்ச்சி உற்று, எதிர் ஓடி மண்மிசை வீழ்ந்து கண்ணருவியுடன் துதித்து, வாய் குழறி, மெய் பதைத்து நின்றனர். அம்மை அன்புருவாய கோதமனாதியர்க்கு அருள் புரிந்து, ஆங்கு ஒரு தவச்சாலை நியமித்து தவம் புரிவாராயினார்.
கொந்தளகம் சடைபிடித்து விரித்து, பொன்தோள்
குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி,
உந்துமர வுரிநிகர் பட்டாடை நீக்கி,
உரித்தமர வுரிசாத்தி, உத்தூ ளத்தால்
விந்தைதிரு நீறணிந்து, கனற்குள் காய்ந்து,
விளங்கும் ஊசியின் ஒருகால் விரலை ஊன்றி,
அந்திபகல் இறைபதத்தின் மனத்தை ஊன்றி,
அரியபெரும் தவம்புரிந்தாள் அகிலம் ஈன்றாள்.
ஆங்கு மிகப்பெரும் தவ வலிமை உடைய மகிடாசுரன் தன் சேனைகளுடன் வந்து அம்மை தவத்திற்கு இடையூறு செய்ய, அம்மை துர்க்கையினால் மகிடாசுரனைக் கொல்வித்து அருளினர். இங்ஙனம் பரமேசுவரி நெடிது காலம் மாதவம் புரிந்து, கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நீராடி, அண்ணாமலை அண்ணலைத் தொழுது துதித்து நின்றனர். அதுசமயம், மலைமேல் ஒரு ஞானசோதி பல்லாயிரம் கோடி சூரியர் உதயம்போல் எழுந்து உலகமெல்லாம் உய்யத் தோன்றியது. அம்மை அதுகண்டு, மெய் சிலிர்த்து, உள்ளம் குளிர்ந்து வணங்கினர். "பெண்ணே! இம்மலையை வலமாக வருக" என்று சிவமூர்த்தி அசரீரியாகக் கூறியருளினர். அதுகேட்ட அம்மை ஞானதீபமுடன் விளங்கும் அண்ணாமலையைத் தமது பரிவாரங்களுடன் வேதங்கள் முழங்க வலம் வருவாராயினார்.
"அம்மே! உமது திருவடி சிவந்தன" என்று கங்கை கை கூப்பி வணங்க, உமாதேவியார், அக்கினி, தெற்கு, நிருதி என்ற திசைகளில் அண்ணாமலையைத் தொழுது மேல்திசையை அடைந்தனர். அங்கு சிவபெருமான் விடைமீது காட்சி தந்து மறைந்தனர். பின்னர், அம்மை வாயு மூலையில் உள்ள அணியண்ணாமலையைப் பணிந்து குபேர திசை, ஈசான திசைகளிலும் தொழுது, கீழ்த்திசை எய்தினார். தேவர் பூமழை பொழிய, மறைகள் முழங்க, ஆலமுண்ட நீலகண்டப் பெருமான் விடையின்மீது தோன்றி அம்மைக்குத் தன்னுருவில் பாதியைத் தந்து கலந்து அருளினார்.
அடுத்த செஞ்சடை ஒருபுறம், ஒருபுறம் அளகம்
தொடுத்த கொன்றை ஓர்புறம், ஒருபுறம் நறுந்தொடையல்,
வடித்த சூலம்ஓர் புறம், ஒருபுறம் மலர்க்குவளை,
திடத்தில்ஆர் கழல் ஒருபுறம், ஒருபுறம் சிலம்பு.
திருவையாறு உறை தேவ ---
திருவையாறு, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
திருவையாற்றின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
இறைவர் : பஞ்சநதீசுவரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீசுவரர்,
இறைவியார் : அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி.
தேவார மும்மூர்த்திகள் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற அற்புதமான திருத்தலத்.
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவத்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவத்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.
ஏழு நிலைகளையுடைய இராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோயிலாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய திருத்தலம்.
முதல் திருச்சுற்றில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது.
இரண்டாம் திருச்சுற்றில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.
மூன்றாம் திருச்சுற்றில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன.
நான்காம் திருச்சுற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் நானுக் புறமும் கோபுரங்கள் இருக்கின்றன.
ஐந்தாம் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீசுவரர் சிற்பம் சற்று மாறுபட்டது.
வழக்கமாக இந்த அர்த்தநாரீசுவரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது. இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்று வலம் வரக்கூடாது என்பது கடைபிடிக்கப்படுகிறது.
இத்திருத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் திருச்சுற்றின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்" என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கயிலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.
இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோயில்கள் உள்ளன. மூலவர் ஐயாறப்பர் சுயம்பு லிங்கமாகும். இந்த இலிங்கம் பிருதிவி இலிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். இலிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.
திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருதிவிலிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருதிவி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது.
இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு கோலத்தில் தோற்றமளிக்கிறாள்.
இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசு சுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள தட்சினமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு ஸ்ரீபஞ்சநதீசுவரர் திருக்கோயில். திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறும். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சி நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோயிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவியுங்கள்.
அப்பரின் கைலாயக் காட்சி: திருநாவுக்கரசர் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். திருக்கயிலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கயிலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கயிலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கயிலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்
மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதோடு நீர்சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதன் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டு அறியாதன கண்டேன்.
என்ற பாடலுடன் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை தரிசித்தார்.
இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின் வெளிச்சுற்றில் உள்ள வடகயிலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கயிலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய ஒன்றாகும்.
இறைவன் ஆதி சைவராக வந்தது: திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாறப்பர்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பண்பு அகன்ற வெய்ய ஆற்றில் நின்றவரை, மெய் ஆற்றில் ஏற்று திரு ஐயாற்றின் மேவிய என் ஆதரவே" என்று போற்றி உள்ளார்.
கருத்துரை
முருகா! மாதர் மயலில் அழுந்தாமல், மெய்யடியார்களுடன் கூடி, தேவரீரை வழிபட்டு, வீடுபேற்றினைப் பெற அருள்.