நல்லவர் கூட்டுறவால் நன்மை விளையும்

 

 

 

நல்லவரால் நன்மை

-----

 

     திருக்குறளில் "சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவனுக்கு நல்ல இனத்தின் மிக்க துணையும் இல்லை; தீயினத்தின் மிக்க துன்பத்தைத் தருவதும் வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     நல்லினமானது ஒருவனை, அறியாமையில் இருந்து நீக்கி, துன்பம் அடையாதவாறு காத்தலால், அதனைத் "துணை" என்றார்.

 

     தீய இனம் ஒருவனது அறிவினை வேறுபடுத்தி, துன்பம் அடையச் செய்தலால், அதனை "அல்லல் படுப்பது" என்றார்.

 

     ஒருவருடைய ஒழுக்கமும், உயர்வும் அவர் சார்ந்துள்ளவரைப் பொறுத்தே அமையும். சிறுமைப் பண்புகள் கொண்டவர் ஒரு குழுவாக இருந்தால், அது "சிற்றினம்" எனப்படும். அறத்திற்கு மாறாகச் செய்படுவோர் சிற்றினம் சார்ந்தவர். மனம் போனபடி செயல் புரிபவர் இவர்.

 

     நல்வினையால் வரும் நன்மையும், தீவினையால் வரும் தீமையும் வில்லை என்று சொல்லுவோர்க்கு இனம் ஆகாது ஒழிதல் வேண்டும் என்னும் பொருளில், "நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்" என்று புறநானூறு கூறும்.

 

 

நல்இனத்தின் ஊங்கும் துணை இல்லை, தீ இனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த நூல்கள் சில உள்ளன. அவை இக்காலத்தில் வழக்கொழிந்து போகும் நிலை உள்ளது. அவற்றில் சிலவற்றை அரிதில் முயன்று தேடித் தொகுத்து வருகின்றேன்.     

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

குண்டரால் தென்னன் குறைப்பட்டு, கண்ணுதலார்

தொண்டரால் மிக்கு உயர்ந்து தோன்றலால் --- எண்திசையும்

நல்இனத்தின் ஊங்கும் துணை இல்லை, தீ இனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.

 

     குண்டர் --- சமணர். தென்னன் --- கூன்பாண்டியன். தொண்டர் --- திருஞானசம்பந்தர்.

 

     சமணர் சார்பில் இருந்ததால், பாண்டியன் ஆட்சி சிறந்திருக்கவில்லை. தெய்வத்தின் பெயரால், திருஞானசம்பந்தர் அடியார்களுடன் தங்கி இருந்த மடத்திற்கு வஞ்சனையால் தீ இட்ட கொடுமையை, பாண்டியன் இசைவால் புரிந்தனர். "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்பதால், அறநெறியில் வழுவிய பாண்டியனை, அவனது தூண்டுதலால் வைக்கப்பட்ட தீயானது வெப்பு நோயாகச் சென்று பற்றியது. திருஞானசம்பந்தர் எழுந்தருளி அவனுடைய வெப்பு நோயை மாற்றியதோடு, சமணர்களையும் வாதில் வென்று, எல்லை இல்லா நீற்று நெறியினை நிறுவினார். "திருஞானசம்பந்தர் பாதம் நண்ணி, நான் உய்ந்தேன்" என்று பாண்டியனும் தேறினான். அவனது கூனும் நிமிர்ந்தது.

 

     தீய இனத்தவராகிய சமணரால் பாண்டி நாடு துன்புற்றது. நல்லினத்தவர் ஆகிய திருஞானசம்பந்தரால் பாண்டி நாடு உய்தி பெற்றது.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

அற்கா அமண்மொழி கேட்டுஅல்லல்உற்றான் மாறன்இல்லாள்

சொற்கேட்டு நோய்தீர்ந்தான், சோமேசா! --- தற்காக்கும்

நல்இனத்தின் ஊங்கும் துணையில்லை தீஇனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.

 

        

இதன்பொருள்---

 

         சோமேசா!  தற்காக்கும் --- ஒருவனுக்குத் தன்னைக் காக்கும், நல் இனத்தின் ஊங்கு --- நல்லினத்தின் மிக்க, துணையும் இல்லை --- துணைஆவதும் இல்லை; தீ இனத்தின் ஊங்கு அல்லல் படுப்பதூஉம் இல் --- தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.

 

         மாறன் --- கூன் பாண்டியன், அற்கா --- அறிவொடு தங்காத, அமண் மொழி கேட்டு --- சமணர்களுடைய சொற்களைக் கேட்டு, அல்லல் உற்றான் --- துன்பம் அடைந்தான்,  இல்லாள் சொல் கேட்டு --- மனைவியாராகிய மங்கையர்க்கரசியார் சொன்ன சொல்லைக் கேட்டு, நோய் தீர்ந்தான் --- சுரநோய் நீங்கினான் ஆகலான் என்றவாறு.

 

         நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர் உறாமல் காத்தலின் அதனைத் துணை என்றும், தீ இனம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் பகை என்றும் கூறினார். அல்லல் படுப்பது என்பது ஏதுப் பெயர்.

 

         பெரியோர்கள் தாம் நன்னெறியில் ஒழுகுவது அல்லாமல், தம்மைச் சேர்ந்தவர்களையும் தீநெறியினின்று விலக்கி நன்னெறியில் செலுத்துவர்.

 

         பாண்டி நாட்டை சமணக்காடு மூடவே, கூன் பாண்டியனும் அவ் வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும், மந்திரியாகிய குலச்சிறையாரும் மனம் மிக வருந்தி "என்று பாண்டியன் நல்வழிப்படுவான்" என்று இருக்கும் காலத்தில், திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமறைக்காடு என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து,  அவ் இருவரும் விடுத்த ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டும் எனக் குறையிரந்தனர்.  திருஞானசம்பந்தர் அவர்க்கு விடை தந்து, பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மதுரை அடைந்தார். அச் செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப் போது தீயிட, திருஞானசம்பந்தர் அத் தீ, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து அனல்வாதம், புனல்வாதங்களில் தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

                                            

வாக்கரசர் சாவகரால் மாழ்கி, தமக்கையால்

மோக்கநிலை பெற்றார், முருகேசா! - பார்க்கும்கால்

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை, தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.               

 

இதன் பொருள் ---

 

         முருகேசா --- முருகப் பெருமானே, வாக்கரசர் --- திருநாவுக்கரசர், சாவகரால் மாழ்கி --- சமணர்களால் வருத்தம் அடைந்து, தமக்கையால் --- தம்முடைய உடன் பிறந்தாளாகிய அக்காளால், மோக்க நிலை பெற்றார் --- பிறகு வீடுபேற்று நிலை அடைந்தார். பார்க்கும்கால் --- நோக்குமிடத்தில், நல் இனத்தின் --- நல்ல இனத்தை விட, ஊங்கும் துணையில்லை --- சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீ இனத்தின் --- தீய இனத்தை விட, அல்லல் படுப்பதூஉம் இல் --- துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

 

         திருநாவுக்கரசர் சமணரால் வருத்தம் அடைந்து, பிறகு தம்முடைய தமக்கையாரால் வீடுபேற்று நிலையைப் பெற்றார்.  இவ் உலகத்திலே நல்ல இனத்தார்களுடைய நட்பை விடச் சிறந்த துணையும் இல்லை, தீய இனத்தார்களுடைய கூட்டுறவைப் பார்க்கினும் துன்பப் படுத்துவதும் இல்லை என்பதாம்.

 

         திருநாவுக்கரசர் முதலில் சமணர்களோடு நட்புக் கொன்டு, அவர்களுடைய சமய நூல்களை ஆராய்ந்து கொண்டும், அச்சமயத்தாராகியும் விளங்கினார். பிறகு தமது தமக்கையாரை வணங்கிச் சைவசமயம் சார்ந்தார். அதனாலே அவருக்குப் பல வகையான தொல்லைகள் உண்டாயின. அச் சமணர்கள் , நஞ்சினை அருத்தியும், நீற்றறையில் இட்டும், யானைக் காலில் இடறியும்,  கல்லினோடு கட்டிக் கடலில் தள்ளியும் திருநாவுக்கரசரைக் கொலை புரிய முயன்றார்கள். எல்லாத் துன்பங்களையும் இறையருளால் வென்று, சைவம் தழைக்க வழிகாட்டி, இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

                                            

மனத்தாலும் வாக்காலும் மண்ண ஒண்ணா மோன

இனத்தாரே நல்ல இனத்தார், - கனத்தபுகழ்

கொண்டவரும் அன்னவரே, கூறரிய முத்திநெறி

கண்டவரும் அன்னவரே காண்.           ---  தாயுமானவர்.

 

இதன் பொருள் ---

 

     செம்பொருள் துணிவாம் மெய்ப்புணர்ப்பு உடைய நல்லார் சுத்தாத்துவித சித்தாந்த வைதிக சைவர் எனப்படுவர். இவரே நன்னெறியினர். இவர்களே மோனம் கைவரப் பெற்றவர். நினைக்கும் மனத்தினாலும் மாற்றமாகிய சொல்லினாலும் அளவுபடுத்த முடியாதது ஒன்றே மோன நிலை எனப்படும்; அவற்றால் நிலைபெற முடியாத திருவருளால் நிலை பெறுத்தக் கூடிய மோனநிலை கைவரப்பெற்ற திருக்கூட்டத்தாரே நல்லினத்து நல்லாராவார். மிக்க புகழ்பெற்றவரும் அவரே; சொல்லமுடியாத வீடுபேற்றுப் பேரின்ப நுகர்வினரும் அவரே.

 

 

நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்

குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்

தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை

தீயினஞ் சேரக் கெடும்.               ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நிலம் வளம் உடையதாக இருந்தால், அதிலே விளைக்கப்படுகின்ற நெல்லும் உயர்ந்ததாக இருப்பதைப் போல, நல்ல குடிப்பிறப்பு என்பது சான்றோர் குண நலன்களுக்கு ஒரு காரணம் ஆகும். ஆனால், மரக்கலம் உறுதியானது தான் என்றாலும், வலிமை வாய்ந்த புயலில் சிக்குமானால், சிதறுண்டு போவதைப் போல, உயர்ந்த பண்புகளை உடைய பெரியோர்களும், சிறியவர்களுடன் சேர்ந்தால் சீரழிந்து போவர்.

 

         இயல்பாகவே நல்லோராய் இருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கை நன்மையையும், தீயினச் சேர்க்கை தீமையையும் உண்டாக்கும்.

 

 

உணர உணரும் உணர்வு உடையாரைப்

புணரிற் புணருமாம் இன்பம், - புணரின்;

தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்

பிரியப் பிரியுமாம் நோய்.             --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஒருவரின் உள்ளத்தில் உள்ளதை, அவரது முகத்தின் குறிப்புக்களாலேயே கண்டு அறிகின்ற நுண்ணறிவு உடையவருடன் நட்புக் கொண்டு இருப்பது மிகவும் இன்பம் தருவது ஆகும். அப்படி இல்லாமல், மனத்தில் உள்ளதை எடுத்துக் கூறினாலும், கேட்டு அதன்படி நடவாத மூடர்களது நட்பை விட்டு ஒழித்தால், துன்பம் நம்மை விட்டுப் போகும்.

 

    

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்

உடங்கு உடம்பு கொண்டார்க்குஉறலால் - தொடங்கிப்

பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை

உறப்புணர்க அம்மா என் நெஞ்சு.    ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     இயற்கையாகவே உறவினராகவும், செயற்கையாக நண்பர்களாகவும் வந்தவர்கள் பிரிந்து போவதும், கொடிய நோய்கள் ஒருவனை வந்து பற்றிக் கொள்ளுதலும், ஒரு நாள் மரணம் வந்து வாழ்நாள் முடிவதும், உயிரோடு சேர்ந்த இந்த உடம்பு பெற்று உலகில் பிறந்த எவர்க்கும் ஏற்படக்கூடிய துன்பங்கள் தான். எனவே, தொடக்கத்திலேயே, பிறப்பு நிலையற்றது, துன்பத்தைத் தருவது என்று உணர்ந்து, நல்வழியில் செல்லுகின்ற கற்றறிந்த பெரியோரைச் சேர்ந்து, எனது நெஞ்சமும், நினைவும் இருக்கவேண்டும்.

    

         துன்பந் தரும் பிறப்பை அதன் இயல்பு அறிந்து, பற்று நீங்கி ஒழுகும் ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்து ஒழுகுதல் வேண்டும்.

 

 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே, --- நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.       --- மூதுரை

 

இதன் பொருள் ---

 

     நல்லாரைக் காண்பதுவும் நன்றே --- நற்குணம் உடையோரைப் பார்ப்பதும் நல்லதே; நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே --- நல்லவருடைய பயன் நிறைந்த சொல்லைக் கேட்டலும் நல்லதே; நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே --- நல்லவருடைய நற்குணங்களைப் பேசுதலும் நல்லதே, அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று --- அந் நல்லவருடன் கூடியிருத்தலும் நல்லதே.

 

         நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும்.

 

தீயாரைக் காண்பதுவும் தீதே, திரு அற்ற

தீயார்சொல் கேட்பதுவுந் தீதே, --- தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே, அவரோடு

இணங்கி இருப்பதுவுந் தீது.     ---  மூதுரை

 

இதன் பொருள் ---

 

     தீயாரைக் காண்பதுவும் தீதே --- தீக்குணம் உடையவரைப் பார்ப்பதும் தீயதே;   திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே --- தீயவர்களுடைய பயன் இல்லாத சொல்லைக் கேட்டலும் தீயதே; தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே --- தீயவருடைய தீய குணங்களைப் பேசுதலும் தீயதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது --- அத் தீயவருடன் கூடியிருத்தலும் தீயதே.

 

         தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும்.

 

நிந்தை இலாத் தூயவரும் நிந்தையரைச் சேரில்,வர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே, --- நிந்தைமிகு

தாலநிழல் கீழ்இருந்தான் தண்பால் அருந்திடினும்

பால் அது எனச் சொல்லுவதோ பார்.    --- நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

         இழிவு மிகுந்த பனைமரத்தின் கீழ் அதன் நிழலில் அமர்ந்து பசுவின் பாலைக் குடித்தாலும், பிறர் அதனைப் பால் அருந்துவதாகச் சொல்லுவார்களோ? நீ அதனை எண்ணிப்பார்.  கள் குடிப்பதாகவே சொல்லுவார்கள். அதுபோல, பழிக்கப்படாத மேன்மக்களும் பழிக்கப்படும் கீழ்மக்களைச் சேர்ந்தால், அப் பழிப்புக்கு உரிய மக்களின் பழிப்புரை தம்மிடமும் வந்து சேர்வதற்கு ஏதுவாகும்.

 

மணமனை சேர்மண மாலை மாண்புறும்,

பிணவனத் தார் இழிவு எய்தும், பெற்றியார்

கணம் அதில் சேர்ந்தவர் கனங்கொண்டு ஓங்குவர்,

குணமிலார் இனம் உறல் குறை உண்டாக்குமே.  ---  நீதிநூல்

        

இதன் பொருள் ---

 

     கலியாண வீட்டைச் சேர்ந்த மணமுள்ள பூமாலை சிறப்படையும். அம்மாலை சுடுகாட்டைச் சேர்ந்தால் மிக்க இழிவடையும். அதுபோலவே, நல்ல தன்மையையுடைய பெரியவர் கூட்டத்தில் சேர்ந்தவர் பெருமை பெற்று உயர்வர். நல்ல பண்பில்லாதவர் கூட்டத்தைச் சேர்ந்தால், இழிவையுண்டாக்கும்.

 

மண் இயல்பால் குணம் மாறும் தண்புனல்,

கண்ணிய பொருள்மணங் கலந்து வீசும் கால்,

புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும்

நண் இனத்து இயல்பு என நவிலல் உண்மையே.--- நீதிநூல்

        

இதன் பொருள் ---

 

         குளிர்ச்சி பொருந்திய தண்ணீர் தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் தன்மையில் மாறுதல் அடையும். காற்று தான் பொருந்திய பொருளின் மணத்தைக் கலந்து வீசும். அவைபோல் மக்கள் உயர்ந்தோர் ஆதலும் தாழ்ந்தோர் ஆதலும் அவரவர் சார்ந்த கூட்டத்தின் தன்மையெனக் கூறுவது உண்மையாகும்.

 

 

பாரினில் பிறந்தபோது எவரும் பண்பினார்

பூரியர் எனப்பெயர் பூண்டது இல்லையால்,

சீரியர் என்னலும் தீயர் என்னலும்

சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே.  ---  நீதிநூல்.

        

இதன் பொருள் ---

 

         உலகில் பிறந்த யார்க்கும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பெயர் ஏற்பட்டதில்லை. நல்லவர் தீயவர் என்னும் பெயர் அவரவர் சேர்ந்த இனத்தினால் உண்டாவது.

 

 

தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்

ஆயவரை, அந் நிலை அறிந்தனர் துறந்தாங்கு,

ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து, ஒண்

பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே.

                                               ---  கம்பராமாயணம், வரைக் காட்சிப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     தீயரொடு ஒன்றிய --- தீய குணத்தவரோடு (ஆராயாமல்) நட்புக் கொண்ட;  அருவம் திறந்து நல்லோர் --- அரிய திறமையுடைய நல்லவர்கள்; ஆயவரை --- அந்தத்  தீயவரை;  அந்நிலை --- அந்த அளவிலே; அறிந்தனர் --- அவர் தீயவர் என்று அறிந்தவர்களாகி; துறந்தாங்கு --- (அவர்களைக்) கைவிட்டாற் போல;   ஒள் பாய்பரி --- பாய்ந்தோடும் நல்லிலக்கணம் பொருந்திய குதிரைகள்;  ஏய அரு  --- தம் உடலில் பொருந்த;   நுண்பொடி படிந்து --- மண்ணிலே  படிந்ததால் மிக நுண்ணிய  புழுதியை; உடன் எழுந்து --- உடனே எழுந்து; விரைந்து உதறி --- விரைவாக உதறிவிட்டு; பரந்து நின்றன --- பரவி நின்றன.

 

     வழியில் வந்த இளைப்பைப் போக்க வேண்டிக் குதிரைகள் புழுதி படிந்த மண்ணில் புரளுதலும், இளைப்பு நீங்கியதும் அவை தம் மேல் படிந்த புழுதியை உதறி எழுதலும் இயல்பு. இதற்கு நற்குணமுள்ளவர் முதலில் தீயவரோடு நட்புக் கொண்டு, பின்பு   அவரோடு பழகி அவர்களின் தீக் குணத்தை உணர்ந்து, அவர்களுடைய நட்பை அறவே விட்டுவிடுதல் உவமையாகும்.

 

 

ஆயிடை அலகைத் தேரும்

     அடைந்தவர் வெயர்வும் அன்றித்

தூயநீர் வறந்த வந்தச்

     சுடுபுலம் தோய்ந்த காலும்

மீயுயர் மதிநி லாவும்

     வெய்யவாய்ச் சுடும், நல்லோரும்

தீயவர் தம்மைச் சேர்ந்தால்

     தீயவர் ஆவர் அன்றோ.         --- தி.வி.புராணம், தண்ணீர்பந்தர் வைத்த படலம்.

 

இதன் பொருள் ---

 

     ஆயிடை --- அவ்விடத்து, அலகைத் தேரும் --- பேய்த் தேரும், அடைந்தவர் வெயர்வும் அன்றி --- அங்குச் சென்றவர்களின் வியர் நீருமல்லாமல், தூய நீர் வறந்த --- நல்ல நீர்கள் சிறிதுமின்றி வற்றின; அந்த சுடுபுலம் தோய்ந்த காலும் --- அந்த வெப்பு நிலத்தில் படிந்துவரும் காற்றும், மீ உயர் மதி நிலாவும் --- வானின்கண் உயர்ந்து விளங்கும் திங்களின் ஒளியும், வெய்யவாய்ச் சுடும் --- கொடியனவாய்ச் சுடா நிற்கும்; நல்லோரும் --- நல்லவரும், தீயவர் தம்மைச் சேர்ந்தால் --- தீயவரைக் கூடினால், தீயவர் ஆவர் அன்றோ -- தீயவராவர் அல்லவா?

 

    குளிர்ந்த  காற்றும் மதியின் கிரணமும், வெப்பமுடைய நிலத்தைச் சார்ந்து வெய்யவாய்ச் சுடும். அதுபோலவே, நல்லோரும் தீயவரைச் சேர்ந்தால் தீயவராவர்.

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...