Showing posts with label சேத்திரத் திருவெண்பா. Show all posts
Showing posts with label சேத்திரத் திருவெண்பா. Show all posts

பாடல் 24

 


"உய்யும் மருந்துஇதனை உண்மின் எனவுற்றார்

கையைப் பிடித்துஎதிரே காட்டியக்கால், - பைய

எழுந்து,இருமி, யான்வேண்டேன் என்னாமுன், நெஞ்சே,

செழுந்திரும யானமே சேர்."

இதன் பொருள் ---

    உய்யும் மருந்து – இறவாமல் வாழ்வதற்கு உரிய மருந்து,  இதனை உண்மின் என – இதனை உண்ணுங்கள் என்று, உற்றார் – சுற்றத்தார், கையைப் பிடித்து எதிரே காட்டியக்கால் – கையினைப் பிடித்து எதிரே காட்டி நிற்கும்போது, பைய எழுந்து – மெல்லப் படுக்கையிலு இருந்து எழுந்து, இருமி – எழுகின்ற முயுற்சியால் இருமல் உண்டாகிய நிலையில், யான் வேண்டேன் என்னா முன் – உண்ண முடியாமையால் எனக்கு இது வேண்டாம் என்று சொல்லும் நிலை வருவதற்கு முன்பாகவே, நெஞ்சே – நெஞ்சமே! செழும் திருமயானமே சேர் – செழிப்பு உடைய திருமாயனம் என்னும் திருத்தலத்தைச் சென்று அடைவாயாக.

    நோய் முற்றிய நிலையில் படுக்கையில் கிடப்போர்க்கு அவரது சுற்றத்தார் எவ்வகையிலாவது தேற்றி விட வேண்டும் என்னும் எண்ணத்தால், நோயில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கு உரிய மருந்து இது என்று சொல்லி, நோயின் மிகுதியால் கண்மூடிப் படுத்துக் கிடக்கும் ஒருவரை, அவரது கையைப் பிடித்து இந்த மருந்தினை உண்ணுங்கள் என்று கையைப் பிடித்துக் காட்டிய நிலையில், படுக்கையில் இருந்து மெல்ல எழும்போது, இயலாமையால் இருமல் வந்து நிற்கும். மருந்தினை உண்ண மனம் வராமையால் இது எனக்கு வேண்டாம் என்று சொல்லும் நிலை உண்டாகும். அந்த நிலை வராத முன்னரே, திருமாயனம் என்று சொல்லப்படும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளை வழிபட்டு உய்ய வேண்டும்.

'திருமயானம்' என்பது சில திருத்தலங்களில் உள்ள திருக் கோயில்களைக் குறிக்கும். திருக் கச்சி மயானம், திருக் கடவூர் மயானம்,  திரு நாலூர் மயானம் ஆகிய இவை காண்க.


பாடல் 23

"நூற்றுஅனைத்து ஓர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்

வீற்றுஇருந்த செல்வம் விழையாதே, கூற்றுதைத்தான்

ஆடுஅரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான்தன்

பாடுஅரவம் கேட்ட பகல்."

இதன் பொருள் ---

    கூற்று உதைத்தான் – மார்க்கண்டேயருக்காகு இயமனைத் தனது திருவடியால் உதைத்து அருள் புரிந்தவரும், ஆடு அரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான் - ஆடுகின்ற பாம்பினைக் கச்சாக இடையிலே கட்டிய அம்மானாரும் ஆகிய, தன் பாடு அரவம் கேட்ட பகல் - சிவபெருமானது அருட்புகழைப் போற்றும் படலாகிய வேத கீதத்தினைக் கேட்ட ஒரு பகலின் விளைவுக்கு ஈடாகிய பயனாக, நூற்றனைத்து ஓர் பல் ஊழி - நூற்றுக் கணக்காகிய பல ஊழிக் காலம், நுண் வயிர வெண்குடைக் கீழ் வீற்று இருந்த செல்வம் விழையாதே -- நுண்ணிய வயிரமணிகள் வரிசை பெறக்  வெண்கொற்றக் குடையின் நிழலின் கீழே வீற்றிருந்து அரசாண்ட அரசச் செல்வம் பெற்றபயனை ஏற்றுக் கொள்ளாது.


விளக்கம் --- 

அனைத்து - அளவு; ஊழி - நீண்ட கால அளவு – யுகம். காலத்தின் பேரெல்லை. பகல் – காலத்தின் ஒரு சிற்றெல்லை. பாடு அரவம் – பாட்டின் ஒலி.   வயிரமணிகள் பதிக்கப்பெற்ற வெண்கொற்றக் குடைக்கீழ் பல ஊழிக் காலம் வீற்றிருந்த அரச போகமானது, காலத்தின் ஒரு சிறு கூறாகிய பகல் பொழுதில் சிவபரம்ப்பொருளின் அருட்புகழைக் கூறும் பாடலைக் கேட்டதால் உண்டான இன்பத்துக்கு ஈடாகாது என்றார்.


பாடல் 22

“தஞ்சாக மூவுலகும் ஆண்டு, தலையளித்திட்டு,

எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்

கரந்துஉண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி

இரந்துஉண் டுஇருக்கப் பெறின்.”

இதன் பொருள் ---

    நஞ்சம் கரந்து உண்ட கண்டர் தம் ஒற்றியூர் பற்றி – திருப்பாற்கடலிலே வந்து எழுந்த ஆலாகால விடமானது மறைந்து இருக்கும்படி, திருவமுது செய்த திருக்கழுத்தினை உடைய சிவபரம்ப்பொருள் எழுந்தருளி உள்ள திருவொற்றியூரினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இரந்து உண்டு இருக்கப் பெறின் – அங்கே பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து இருக்கும் பெரும்பேற்றினை அடியேன் பெற்றால், தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டு – அடியேனிடத்து ஒப்படைக்கப் பெற்ற அடைக்கலப் பொருளாக ஏற்று மூன்று உலகங்களையும் குடிகளை நன்கு காப்பாற்றி ஆட்சி புரியும் செல்வத்தை, எஞ்சாமை பெறினும் யான் வேண்டேன் – குறைவு இன்றிப் பெற்றாலும் அதனை யான் விரும்பமாட்டேன். 

    `ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறிக்கும். 


“படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பார் எலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து, மும்மைக் கடியிலங்கு

தோடு ஏந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு

ஓடுஏந்தி உண்பது உறும்.”\

என்று மேலே நாயனார் பாடி அருளியதைக் கருத்தில் கொள்க.


மெய்யடியார்கள் இறைவன் திருவடி இன்பம் ஒன்றையே விரும்பி இருப்பார்கள். மண்ணுலக இன்பமும் விண்ணுலக இன்பமும் அவர்க்கு ஒரு பொருட்டு அல்ல. “மலர்க் கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே” என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் அருள்வாக்கு. “கூடும் அன்பினில் கும்பிடலே ஆன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று மெய்யடியவர்கள் குறித்துத். தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடி அருளி இருப்பது அறிக.  

“அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்

கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்

வண்டு சேர் மயிலாடுதுறை அரன் 

தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.”

என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.


“யான் ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன்,

வானேயும் பெறில் வேண்டேன், மண்ணாள்வான் மதித்தும் இரேன், 

தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்

மானே! உன் அருள் பெறும் நாள் என்று என்று இருப்பனே”

என்பர் மணிவாசகப் பெருமான்.


“பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய், கமலச் செங்கண் 

அச்சுதா!. அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும், 

இச்சுவை தவிர, யான்போய் இந்திர லோகம் ஆளும், 

அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகர் உளானே”

என்பது தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருள் வாக்கு.  


    தொண்டை நன்னாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான “திரு ஒற்றியூர்” சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் உள்ளது. மெட்ரோ இரயில் நிலயமும் உள்ளது. இறைவர் திருநாமம்  - ஆதிபுரீசுவரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத் தியாகர். இறைவியார் திருநாமம் - திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை. தல மரம், மகிழ மரம்.

        தேவார மூவர் முதலிகள் ஆகிய திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடி வழிபட்டுத் திருப்பதிங்கள் அருள்ப் பெற்ற திருத்தலம்.

        வருடத்தில்மூன் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இலிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஆண்டுதோறும், கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு வழிபடலாம்.

    சுந்தரமூர்த்தி நாயனார் – சங்கிலியார் திருமணம் நடைபெற்ற சிறப்புக்கு உரிய திருத்தலம். ஞாயிறு என்னும் ஊரிலே, ஞாயிறுகிழார் என்னும் வேளாளர் ஒருவர் இருந்தார். திருக்கயிலையிலே நம்பியாரூரரைக் கண்ணுற்ற மாதர் இருவருள் அனிந்திதையார் என்பவர் ஞாயிறுகிழாருக்குத் திருமகளாகப் பிறந்தார்.  அவருக்குச் சங்கிலியார் என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. சங்கிலியார் சிவனிடத்து அன்பு உடையவராக வளர்ந்தார்.  திருமணப் பேச்சு வந்தபோது,  "நான் ஒரு சிவனடியாருக்கு உரியவள், இவர்கள் என்ன செய்வார்களோ" என்று மனம் கலங்கி மயங்கி விழுந்தார்.  மயக்கம் தெளிந்ததும், மணம் பேச முயன்ற தந்தையைப் பார்த்து, "நீங்கள் பேசிய வார்த்தை எனக்கு உடன்பாடில்லை. நான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள்.  இனி, நான் திருவொற்றியூரை அடைந்து திருவருள் வழி நடப்பேன்" என்றார்.  பெற்றோருக்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின. சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஞாயிறுகிழாரின் மரபில் தோன்றிய ஒருவன் சங்கிலியாரை மணம்பேச ஞாயிறு கிழார்பால் சில முதியோரை அனுப்பினான். அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது.  அம் முதியவர்கள் ஞாயிறு கிழாரிடம் வந்து தாங்கள் வந்த கருத்தைத் தெரிவித்தார்கள். ஒருவாறு இனியமொழி பேசி வந்தவர்களை அனுப்பி வைத்தார் ஞாயிறுகிழார். அவர்களை அனுப்பினவன் ஏதோ ஒரு தீங்கு செய்து மாண்டவனைப் போல் மாண்டான். அச் செய்தி ஞாயிறு கிழாருக்கு எட்டியது.  இனிச் சங்கிலியார் கருத்தின் வழி நடப்பதே சரி என்று பெற்றோர் எண்ணினர். திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றைச் சமைத்து, அதில் சங்கிலியாரை இருத்தினர். சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்துகொண்டு ஆண்டவனை வழிபட்டு வந்தார்.  அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத்தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று.  பூமண்டபத்தில் திரை சூழ்ந்த ஓரிடத்தில் இருந்து பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பி வந்தார்.

திருக்காளத்தியை வழிபட்ட நம்பியாரூர் பெருமான் திருவொற்றியூர் வந்தார். வழக்கம்போல் ஒரு நாள் திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனைத் தொழுதவர், அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளையும் தனித்தனியே கண்டு வணங்கி, பூமண்டபத்தினுள் சென்றபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிவிக்கும் பொருட்டு, பூமாலையைத் தோழிகளிடம் தந்து மின்போல் மறைந்தார். “மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண்ணுற்றார்” என்பது பெரியபுராணம். அங்கிருந்த சிலரைப் பார்த்து, "பூமண்டபத்திலே இருந்த நங்கை என் மனதைக் கவர்ந்தாள். அவள் யார்" என்று வினவினார்.  அவர்கள், "சங்கிலியார் அவர் பேர். சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவர்" என்றார்கள். அது கேட்ட நம்பியாரூரர், "இப் பிறவி இருவர் பொருட்டு அளிக்கப்பட்டது. அவருள் ஒருத்தி பரவை. மற்றொருத்தி இவள்தான்" என மருண்டார். திருக்கோயிலுக்குச் சென்றார். "திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்" என்று இறைவரை வேண்டினார். வெளியே வந்து திருக்கோயிலின் ஒருபுறத்திலே இருந்து சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார்.  மாலைக் காலம் வந்தது.  

சிவபெருமான் தம் தோழர்பால் வந்து, "சங்கிலியை உனக்குத் தருகின்றோம். கவலையை ஒழி" என்றார். நம்பியாரூரர், "பெருமானே, அன்று என்னைத் தடுத்து ஆட்கொண்டு அருளீனீர். இன்று என் விருப்பத்திற்கு இணங்கி வந்து அருள் செய்தீர்" என்று வியந்து, வணங்கி, மகிழ்ந்தார்.

சங்கிலியார் கனவிலே சிவபெருமான் தோன்றினார்.  "நம்பியாரூரன் என்பவன் மேருமலையின் மேம்பட்ட தவத்தான். நம் மாட்டுப் பேரன்பு உடையவன். நம்மால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவன். அவன் உன்னை விரும்பி, என்னை வேண்டினான்.  அவனை மணம் செய்து கொள்வாய்" என்றார். சங்கிலியார், "பெருமான் ஆணைப்படி இசைகின்றேன். ஆனால், திருமுன்னே முறையிட்டுக் கொள்ள வேண்டுவது ஒன்று உண்டு. திருவாரூரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர் அவர். இதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.    சிவபெருமான், "உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதம் செய்து கொடுப்பான்" என்றார்.

சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரர் பால் எழுந்தருளி, "சங்கிலியிடம் உன் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு குறை உண்டு.  அக் குறையைத் தீர்த்தல் வேண்டும்" என்றார். "அவள் முன்னிலையில் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்று இரவே செய்து கொடு" என்றார்.  நம்பியாரூரர், "எதைச் செய்தல் வேண்டுமோ, அதைச் செய்வேன். உமது அருள் வேண்டும்" என்றார்.

இச் சபதம் பிற பதிகளை வணங்குதற்கு இடையூறாக இருக்குமே என்று எண்ணிய நம்பியாரூரர்,  சிவபெருமான வணங்கி, "பெருமானே, சபதம் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச் சந்நிதிக்கு வருவேன்.  அப்போது, அடிகள் திருமகிழ்க்கீழ் எழ்ந்தருளல் வேண்டும்" என்று வேண்டினார். அதற்கிசைந்த இறைவர், சங்கிலியாரிடம் சென்று, "ஆரூரன் சபதம் செய்து கொடுக்க இசைந்தான். உன்னுடன் கோயிலுக்கு வருவான். அப்பொழுது மகிழமரத்தின் அடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்பாயாக" என்றார்.

சங்கிலியார் திருவருளை நினைந்து துயிலாதவரானார்.  தோழிமார்களை எழுப்பி நிகழ்ந்ததை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் மகிழ்வெய்தி அம்மையாரைத் தொழுதார்கள். திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுத்துத் தோழிமார்களுடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழர் முன்னே எழுந்து, சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  சங்கிலியாரைக் கண்டு அவர் அருகே சென்று சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார் நாணத்தால் ஏதும் பேசாமல் திருக்கோயிலுக்குச் சென்றார். நம்பியாரூரரும் தொடர்ந்தார். சந்நிதியை அடைந்தனர்.

நம்பியாரூரர் சங்கிலியைப் பார்த்து, "நான் உன்னைப் பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும்" என்றார். சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்திருந்த தோழிமார்கள், "அடிகள், இதற்காக இறைவன் திருமுன்னர் சபதம் செய்தல் ஆகாது" என்றனர்.  "சபதம் எங்கே செய்து தருவது" என்றார். "மகிழின் கீழ் அமையும்" என்றனர்.  நம்பியாரூரர் மருண்டார். வேறு வழியில்லை.  "அப்படியே செய்கிறேன்" என்றார். மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து, "நான் சங்கிலியைப் பிரியேன்" என்று சபதம் செய்து கொடுத்தார்.  அதைக் கண்ட சங்கிலியார் மனம் வருந்தினார். "சிவபெருமான் ஆணையால் பாவியேன் இக் காட்சியைக் காண நேர்ந்தது" என்று நைந்து ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார்.  நம்பியாரூரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுச் சென்றார். சங்கிலியார் தமது திருத்தொண்டினைச் செய்து கன்னிமாடத்தில் இருந்தார். அன்று இரவு சிவபெருமான் திருவொற்றியூரில் உள்ள தொண்டர்கள் கனவில் தோன்றி, நம்பியாரூரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டளை இட்டார். தொண்டர்கள் அச் சிவப்பணியை அடுத்த நாளே நிறைவேற்றினார்கள். தம்பிரான் தோழர் சங்கிலியாரோடு திருவொற்றியூரிலே இன்பம் நுகர்ந்து வந்தார்.

வசந்த காலம் வந்தது. தென்றல் காற்றானது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவினை நினைவூட்டியது. "எத்தனை நாள் பிரிந்து இருக்கேன், என் ஆரூர் இறைவனையே" என்று மனமுருகப் பாடினார். நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை முடுகி எழ, ஒருநாள் திருக்கோயிலுக்குப் போய்த் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினதும், அவருடைய இரு விழிகளும் மறைந்தன.  நம்பியாரூரர் மூர்ச்சித்தார், திகைத்தார், பெருமூச்சு விட்டார். சபதம் தவறியமையால் இது நேர்ந்தது என்று எண்ணி, பெருமானையே பாடி இத் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டு, "அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்" என்னும் திருப்பதிகத்தை அருளினார். சிலர் வழிகாட்டத் திருமுல்லைவாயிலுக்கு எழுந்தருளினார்

     நம்பியாரூரர் சங்கிலியார் திருமணம் நிகழ்ந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது "மகிழடி சேவை" விழாவாக நடைபெறுகிறது.


கலிய நாயனாரின் அவதாரத் தலம்.

அவதாரத் தலம் : திருவொற்றியூர்.

வழிபாடு : இலிங்க வழிபாடு.

முத்தித் தலம் : திருவொற்றியூர்.

குருபூசை நாள் : ஆடி - கேட்டை.

தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போல் குறைய, வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபில் உள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால், கூலிக்குச் செக்காடி, அக்கூலி கொண்டு விளக்கு எரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால், வீடு முதலிய பொருட்களை விற்று, விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகர் எங்கும் விலைகூறி வாங்குவார் இல்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடம்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியில் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

முற்றத் துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம். பட்டினத்தடிகளின் சமாதிக் கோயில் கடற்கரையில் உள்ளது. பட்டினத்து அடிகளார் அருளிய பினவரும் பாடல்களைச் சிந்தித்தால் திருவொற்றியூரின் சிறப்பு நன்கு விளங்கும்.

"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்

திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்

நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு

கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."

        மனமே!  முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பதுதான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.


"ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு

இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன் - கடுஅருந்தும்

தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்

போவார் அடியில் பொடி."

        புண்கள் உண்டாகி, சீழானது ஒழுகுகின்ற, ஒன்பது துளைகளை உடைய உடலாகிய இந்தப் புண்ணுக்கு இடவேண்டிய மருந்தினை நான் கண்டுகொண்டேன். அது என்னவென்றால், பால்கடலில் வந்த ஆலகால விடத்தை உண்ட, தேவர்களுக்கு எல்லாம் தலைவனான, சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தின் வீதிகளில் நடப்பவர்களுடைய பாத தூளியே ஆகும்.


"வாவி எல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் சிவலிங்கம்,

காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்

ஈது சிவலோகம் என்றுஎன்றே மெய்த்தவத்தோர்

ஓதும் திருவொற்றி யூர்."

        இது பூலோக சிவலோகம் என்று உண்மைத் தவம் உடையார் சொல்லுகின்ற திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் உள்ள  குளங்கள் எல்லாம் தீர்த்தங்கள்.  மணல் அனைத்தும் சிவலிங்கம்.  சோலைகளும், நந்தனவனங்களும் சிவகணநாதர்கள்.


           வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வோடு இயைந்த பதி. எழுத்தறியும் பெருமான் மீது பல திருவருட்பாக்களையும், வடிவுடை அம்மை மீது, “வடிவுடைமாணிக்க மாலை” என்னும் அற்புத நூலையும் பாடி உள்ளார் வள்ளற்பெருமான். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேர்ந்து உலகர் போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற்குள் பெரியோர் சாற்றும் புகழ் வேத சரமே" என்று போற்றி உள்ளார்.


பாடல் 21

 “கரம்ஊன்றி, கண்இடுங்கி, கால்குலைய, மற்றுஓர்

மரம்ஊன்றி, வாய்குதட்டா முன்னம், - புரம்மூன்றுந்

தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய

ஈச்சரத்தான் பாதமே ஏத்து.”


இதன் பொருள் ---

    கரம் ஊன்றி  -முதுமையில் எழும்பொழுது, எழுந்திருக்க இயலாமல், கைகளை நிலத்தில் ஊன்றி எழுதலும், கண் இடுங்கி – பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமையால் கண்களைக் குழித்துப் பார்ப்பதும், கால் குலைய – நடக்க முடியாமல் கால்கள் தடுமாற்றம் அடைதலும், மற்று ஓர் மரம் ஊன்றி – தள்ளாட்டத்தைத் தவிர்த்தல் பொருட்டு, ஆதரவாக மற்றும் ஒரு ஊன்றுகோலினைப் பற்றிக் கொண்டு நடத்தலும், வாய் குதட்டா முன்னம் – பற்கள் இல்லாமையால் வாயைக் குதட்டுதலும், முன்னம் – ஆகிய இந்நிலை வந்து சேராத முன்னரே, புரம் மூன்றும் தீச்சரத்தால் செற்றான் – திரிபுரங்களையும் தீயினை முனையாக உடைய அம்பினால் எரித்து அழித்த இறைவரும், திருப்பனந்தாள் தாடமைய ஈச்சரத்தான் – திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில், “தாடகை ஈச்சரம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபெருமானின், பாதமே ஏத்து – திருப்பாதங்களைப் போற்றி வழிபடுவாயாக.

கரம் ஊன்றுதல் முதலாகச் சொல்லபட்ட ஐந்தும் முதுமையின் குறிகள். தீச்சரம் – தீயினைக் கூராக உடைய அம்பு.

    திருப்பனந்தாள் சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம். இறைவர் திருப்பெயர், செஞ்சடையப்பர், தாலவனேசுவரர். செஞ்சடை அப்பர் என்னும் திருநாமம் வடமொழியில் அருணஜடேசுவரர் என்று வழங்கப்படும். இறைவியார் திருப்பெயர், பெரிய நாயகி, தாலவனேசுவரி. பெரிய நாயகி என்னும் திருப்பெயர் வடமொழியில், பிருகன்நாயகி என்று வழங்கப்படும். தல மரம், பனை. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம். 

    பனையின் தாளில் (அடியில்) இறைவன் எழுந்தருளி இருத்தலால், பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீசுசுவரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

     தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி இத்திருத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார்.  அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது.

சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்பட  நிறுத்தி வணங்க அன்பு கொண்டான் அரசன். பூங்கச்சினை சுற்றி அதன் முனையில் வலிய கயிறு கட்டி இழுத்து நேர்படுத்த முயன்றான். திருமேனி நிமிரவில்லை. அன்பின் மிகுதியால் யானைகளைச் சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஒன்றும் முடிய வில்லை. மன்னன் மனம் வாடினான். இச்செய்தியை அறிந்த குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். திருப்பனந்தாள் கோயிலை அடைந்த கலயனார் ஆலயத்தை வலம் வந்து ஐந்தெழுத்தை நினைத்தபடியே குங்குலியப் புகையினால் சந்நிதியைத் தூபமிட்டார். கலயனார் பூங்கச்சுடன் கூடிய ஓர் கயிற்றை எடுத்து அப்பூங்கச்சோடு சேர்ந்த கயிற்றின் ஒரு பக்கத்தைச் சிவலிங்கத் திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத் தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். 

அன்புக் கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார். கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு பூமாலையாக மாறியது.  சிவலிங்கத் திருமேனியின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது. குங்குலியக் கலய நாயனாரின் அன்பின் திறத்தினைக் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர். சோழ மன்னன் கலய நாயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  கலயனார் அங்கு சில காலம் தங்கியிருந்து அரனாரை வணங்கி வழிபட்டு திருக்கடவூரை அடைந்தார். இத்தலத்தில்தான் 

    குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது. இக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தரும மனந்தான் மலரை மருவுவிப்போர் வாழும் பனந்தாளில் பால் உகந்த பாகே" என்று போற்றி உள்ளார்.


பாடல் 20

 


“என்னெஞ்சே! உன்னை இரந்தும் உரைக்கின்றேன்,

கன்னம்செய் வாய்ஆகில்; காலத்தால் வல்நெஞ்சுஏய்

மாகம்பத்து ஆனை உரித்தானை, வண்கச்சி

ஏகம்பத் தானை இறைஞ்சு.”


இதன் பொருள் ---


    என்னெஞ்சே - எனது நெஞ்சமே! கன்னம் செய்வாயாகில் – காது கொடுத்துக் கேட்பாயாகில்; உன்னை இரந்தும் உரைக்கின்றேன் - உன்னைக் கெஞ்சியும் வேண்டிச் சொல்கின்றேன்; காலத்தால் – உயிருள்ள காலத்திலேயே, வல் நெஞ்சு ஏய் மா கம்பத்து ஆனை உரித்தானை --- வலிய கொடிய நெஞ்சினை உடைய பெரிய அசைகின்ற (மலைபோன்ற) யானையின் தோலை உரித்தப் போர்த்துக் கொண்டவரும், வண் கச்சி ஏகம்பத்தானை இறைஞ்சு – வளப்பம் பொருந்திய திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியவரும் ஆகிய திருவேகம்ப நாதரை வணங்குவாயாக.

கன்னம் - காது; கன்னஞ் செய்தல் - செவிகொடுத்துக் கேட்டல்; இரந்தும் - மிகக் கெஞ்சியும்; காலத்தால் - உயிரும் ஆற்றலும் உள்ள காலத்திலே. "காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்" என்பது மணிவாசகம். காலம் உள்ளபோதே இறைவரை வணங்கு. வன்னெஞ்சு - மாறுபட்ட வலிய கொடிய நெஞ்சு; மா - பெரிய; உருவுடைய; கம்பத்து ஆனை - கம்பம் - அசைவு; எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது யானையின் இயல்பு.  கம்பம் - நடுக்கம் என்று கொண்டு பெரிய நடுக்கத்தை விளைக்கும் யானை என்றும் பொருள் கொள்ளலாம். கம்பம் - கட்டுத்தறி என்றாலும் பொருந்தும். வண் - வளப்பமாவது முத்தி அறிக்கும் ஏழு திருத் தலங்களுள் ஒன்று திருக்காஞ்சி. ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செய்கின்ற அம்மைக்கு இருப்பிடமாக உள்ளதும் திருக்காஞ்சி. 

    காஞ்சிபுரம், தொண்டை நாட்டில் உள்ள முதல் திருத்தலம். சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவு. சென்னையில் இருந்து இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது. பிற நகரங்களில் இருந்தும் வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட நகரம். "நகரேஷு காஞ்சி" என்று வடமொழியில் மகாகவி காளிதாசரால் சிறப்பித்துக் கூறப் பெற்றது.  தொண்டை நல்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடையது. முக்தி தரும் தலங்கள் ஏழில் ஒன்று. வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “கண் ஆர்ந்த நாகம் பராம் தொண்ட நாட்டில், உயர் காஞ்சி ஏகம்பம் மேவும் பேரின்பமே” என்று போற்றி உள்ளார். மூவர் முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம். இத் திருத்தலத்தில் எந்தக் கோழிலிலும் அம்புகைக்குத் தனிச் சந்நிதி இல்லை என்பது சிறப்பு. நகரின் நடுநாயகமாக அம்மை வீற்றிருக்கும் காமக் கோட்டம் அமைந்து உள்ளது. மூவர் முதலிகளும், காமக் கோட்டம் சென்று அம்பிகையை வழிபட்டனர் என்பது பெரும் சிறப்பு. பாடல் பெற்ற திருத்தலங்கள் ஆகிய திருமேற்றளி, திரு ஓணகாந்தன்தளி, திருக்கச்சி அனேகங்காவதம், திருக் கச்சிநெறிக் காரைக்காடு ஆகியவை இந்நகரில் அமைந்து உள்ளன. சிறந்த வைணவத் தலமாகவும் விளங்குகின்றது. குமரக் கோட்டம் இங்கு அமைந்துள்ளது. பலவேறு திருக்கோயில்கள் உள்ளன.

இப் பாடல் ஆசிரியர் ஆகிய, ஐயடிகள் காடவர்கோன் அவதரித்து, ஆட்சி செய்து தொண்டாற்றிய திருத்தலம். குருபூசை நாள் - ஐப்பசி - மூலம். காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ ஆகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும். ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தாவண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

“திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 

பெருமையுடன் இனிதுஅமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்

தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்

அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்”

என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் திருத்தல யாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துத் திருத் தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே “சேத்திரத் திருவெண்பா” எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம். இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவநெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

கழற்சிங்க நாயனார் அவதரித்து ஆட்சி செய்த திருப்பதி. குருபூசை நாள் - வைகாசி - பரணி. கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவில் குறியாதவர்.  வடபுல வேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணை நாயனார், இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு "அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?" என வினவினார். அருகே நின்ற செருத்துணையார், "இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்" என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, "பூவை எடுத்த கையை அல்லவா முதலில் வெட்டுதல் வேண்டும்?" என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் அவதரித்து சிவனடியார்களுக்கு கந்தை வெளுத்துக் கொடுத்து தொண்டாற்றிய பெரும்பதி. குருபூசை நாள் - சித்திரை - சுவாதி. காஞ்சி மாநகரத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர். இவர் நாயன்மார்களில் ஒருவர். சிவனடியார்களின் உள்ளத் திருக்குறிப்பை உணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார். இவர் செவ்விய அன்புடையவர். நல் ஒழுக்க நெறி நிற்பவர். சிவனடித்தொண்டு புரிபவர்.  மன, மொழி, மெய்யாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பு அழுக்கும் போக்குவார் ஆயினர்.

இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள், திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இளைத்திருக்கின்றதே?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கையுடன் ‘தாங்கள் உடுத்துள்ள இக் கந்தையைத் துவைப்பதற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார் "நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டுபோய் துவைத்துத் தருவீராக" என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர், "அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக" என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராது ஒழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லி தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.

அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புழுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி "இனி நான் யாது செய்வேன்" என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப் போயிற்றே’"என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. "முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்" என்று எழுந்து "துணி துவைக்கும் கல்லிலேயே எனது தலை சிந்தும்படி மோதுவேன்" என்று தமது தலையை மோதினார்.

அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க, மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம். இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக" என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

        திருக்கயிலாயத்தில் ஆகமங்களைஎல்லாம் இறைவர் அருளிச் செய்ய அம்மையார் கேட்டருளினர். எண்ணில் ஆகமங்களை அருளிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனையே ஆகும் என்று அருளிச் செய்ய, அவ்வாறே தாம் பூசைசெய்ய அம்மையார் மனம் கொண்டனர். அதற்கேற்ற இடம் காஞ்சிபுரத்தின் மாவடியே ஆகும் என்று இறைவர்பால் அறிந்த இறைவியார் அங்கு நின்றும் போந்து, மலையரசன் வந்து விடுத்த பரிசனங்களுடன் சென்று காஞ்சியில் பதும மாநாகம் வேண்டியபடி அதன் பிலத் துவாரத்தில் எழுந்தருளியிருந்து, கம்பையாற்றின் கரையில் மாவின் மூலத்தில், தவஞ்செய்து, சிவனுரு வெளிப்படக் கண்டு, பூசிக்கத் தொடங்கி மெய்ப்பூசை எய்த ஆகம விதியெலாம் செய்தருளினர். அப்போது இறைவனார் ஒரு திருவிளையாட்டினால் அம்மையாருக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, கம்பையாற்றில் பெருவெள்ளம் வர அருளினர். ஆறு பெருக்கெடுத்து மேலெழுந்து வரக் கண்டு தம் திருக்கையால் தடுத்து நில்லாமையால், அம்மையார் வெருக்கொண்டு காதலால் முலைக்குவட்டொடு வளைக்கையால் நெருக்கி இறுகச் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். இறைவர் அதனை விரும்பியவராய், யானையை உரித்துப் போர்த்த தமது திருமேனி குழைந்து காட்டி முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்துகொண்டு அத்திருமேனி காட்டி வெளிப்பட்டருளினர். எல்லா உயிரும் உடம்பும் உருகி ஒன்றாகி இறைவரருளை ஏத்திப் போற்றின. கம்பையாறு  வெள்ளந் தவிர்ந்து வணங்கியது. மணவாள நற்கோலங் காட்டி நின்ற இறைவனார், அம்மையாரை நோக்கி, "வேண்டும் வரம் கொள்க" என்றருள, அம்மையார், இறைஞ்சி நின்று, "இன்றைய என் பூசை இன்னும் முடிந்ததில்லையாதலின் அதனைக் குறை நிரம்பிடக் கொண்டருளல் வேண்டும்" ன்று விண்ணப்பிக்க, அதற்கு இறைவனார் “நம்பால் நின்பூசனை என்றும் முடிவதில்லை" என்றருளவே, அம்மையார் இறைவர்பால் வரம் கேட்கலாயினர். அவையாவன : - "இந்தப் பூசை என்றும் மாறாது நிலைத்திருக்கும்படி தேவரீர் மகிழ்ந்து கொண்டருளுதல் வேண்டும். இந்தப் பதியில் எல்லா அறங்களும் யான்செய்யும்படி அருளுதல்வேண்டும். திருவடிப் பிழைத்தல் ஒன்றொழிய இங்குள்ளவர் வேறு செய்வினை எதுவேயாயினும் மாதவப்பயன் கொடுத்தருளப் பெறவும் வேண்டும்" என்ற மூன்றுமே ஆம். எல்லா வுயிர்களின் பிறப்பையும் ஒழிக்கும் பேரருட் செல்வியாகிய அம்மையார் கேட்டருள, அவ்வாறே இறைவனார் அந்தப் பூசனையை விரும்பி வீற்றிருந்தும், இடையறாத அறங்களை யெல்லாம் வளர்க்கும் வித்தாக இகபரத்து இருநாழி நெல்லை அளித்தும், காஞ்சி வாழ்பவர் செய்த தீவினையும் தடையின்றி மெய்ந்நெறியடையச் செய்யும் தவங்களாகவும் வரங்களை மகிழ்ந்து தந்தருளினர்.

அவ்வாறே அம்மையார் நித்தமாகிய பூசனை செய்து கொண்டு உயிர்களிடத்து இல்லறம் பெருக்கும் கருணையினால் புண்ணியத் திருக்காமக் கோட்டத்தில் எழுந்தருளியிருந்து முப்பத்திரணடு அறங்களையும் அளித்தருள்கின்றனர்.


பாடல் 19


“உள்ளிடத்தான் வல்லையே, நெஞ்சமே! ஊழ்வினைகள்

கள்ளிடத்தான் வந்து கலவாமுன், -  கொள்ளிடத்தின்

தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்

தன்திருவாய்ப் பாடியான் தாள்.”


இதன் பொருள் ---

        ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - முன்செய்த ஊழ்வினைகள் உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்காக, தம்மை அறியாமலே வந்து இருந்து, வாழ்நாள் இறுதியில் உயிரைக் கொண்டு போவதன் முன்னே; கொள்ளிடத்தின் தென்திரு ஆப்பாடியான் - கொள்ளிடத் திருநதியின் தென்கரையில் உள்ள திருஆப்பாடி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவரும்; தெய்வமறை நான்கினையும் தன் திருவாய்ப் பாடியான்தாள் - தெய்வத் தன்மை பொருந்திய வேதங்கள் நான்கினையும் தமது திருவாயினாலே பாடியவரும் ஆகிய சிவபரம்பொருளினது திருவடியை, நெஞ்சமே – நெஞ்சே! உள்ளிடத்தான் வல்லையே - நினைக்க வல்லாயோ? (நினைப்பாயாக)

உள்ளுதல் - நினைத்தல். உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. ஊழ்வினைகள் கள் இட வந்து கலவாமுன்– ஊழ்வினைகள், திருடுதல் போல, நம்மை அறியாதவாறு நம்மோடு பொருந்தி இருந்து, நம்மை அறியாமலே உயிரைக் கொண்டு போக. கள்ளம் செய்ய. திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன். 

      திரு ஆப்பாடி - சோழ நாட்டு காவிரி வடகரையில் உள்ள திருத்தலம். மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது; சண்டேச நாயனார் பசுக்களை மேய்த்த இடமாயும், அங்கு இறைவர் வெளிப்பட்ட இடமாயும் உள்ளதால் இப்பெயர் பெற்றது.  இரண்டும் காவிரியின் பிரிவுகளாதலானும், காவிரியின் கிளையாதலாலும், மண்ணி, கொள்ளிடம் என்று உபசரிக்கப்பட்டது. 

        கும்பகோணம் - அணைக்கரை தடத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருப்பனந்தாள் அருகில் உள்ளது.  கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி. மீ. தொலைவில் உள்ளது.  இறைவர் திருநாமம்,  பாலுகந்த நாதர், பாலுகந்தீசுவரர். இறைவியார் திருநாமம், பிருகந்நாயகி, பெரியநாயகி. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம்.

சண்டேசுவர நாயனார் வரலாறு: 

        திரு ஆப்பாடிக்கு அருகிலுள்ள திருச் சேய்ஞலூர் என்பது நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசாரசருமருக்கு முற்பிறவி உணர்ச்சி முறுகி விளைந்ததனால், ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் ஒதுகிடைக்குப் புறப்பட்டார். அவ் வேளையில் அவ்வூர்ப் பசுக்களும் போந்தன. அந் நிரைகளில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார்.  'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள்.  புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய வெள்ளேறு பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது' என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, 'இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச் சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்' என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்த ஆநிரையை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.  

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார்.  நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பசுக்கள், தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.

பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணும்தோறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது.  மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில், ஆத்தி மரத்தடியில் மணலால் ஒரு சிவலிங்கம் அமைத்தார்.  திருமதில்கள் எழுப்பினார். கோபுரங்கள் வகுத்தார்.  சுற்றாலயங்கள் எடுத்தார். வழிபாட்டிற்கு ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வந்தார். கறவைப் பசுக்களிடம் சென்று மடியைத் தீண்டினார். பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டி அருச்சித்தார்.  பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்பிக் கொள்வார். இவர் செய்யும் அன்புப் பூசையைச் சிவபெருமான் அன்புடன் ஏற்பார். திருமஞ்சனத்துக்குப் பால் உதவியும், பசுக்கள் உரியவர்களுக்குப் பாலைக் குறையாதபடி வழங்கி வந்தன.

இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில், ஒருநாள்  ஊரான் ஒருவன் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார் செய்கையைக் கண்டான். உண்மையை உணராத அவன், அவ்வூர் அந்தணர்களுக்கு அதை அறிவித்தான். அவர்கள் எச்சதத்தனை அழைப்பித்து, கேட்டதைச் சொன்னார்கள். எச்சதத்தன், "இது எனக்குத் தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி இப்பிழை நிகழுமாயின், அது என்னுடையது ஆகும்" என்று வணங்கி  விடைபெற்றுச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் விசாரசருமர் வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப் போனார். அன்று எச்சதத்தன், அவரைத் தொடர்ந்து மறைந்து பின்னே சென்றான். சென்று, மணல் திட்டின் அருகே உள்ள ஒரு குராமரத்தில் ஏறி ஒளித்து இருந்தான்.  விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பால்குடங்களை ஏந்தி அபிடேகம் செய்வதை எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தில் இருந்து விரைந்து இறங்கி வந்து, ஓடிக் கைத் தண்டால் பிள்ளையார் முதுகில் அடித்தான். கொடும் சொற்களால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில் திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப் புடைக்கின்றான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல், பால்குடங்களை உதைத்தான். அந்த அடாத செயலைச் செய்தவன் தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார். அவன் கால்களைத் துணிக்கத் தமக்கு முன்னிருந்து கோலை எடுத்தார். அந்தக் கோல் மழுவாக மாறியது. தந்தையின் கால்கள் வெட்டப்பட்டன. முன்புபோல் சிவபூசையில் அமர்ந்தார்.  சிவபெருமான் உமாதேவியுடன் விடைமேல் தோன்றினார். ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்து, விழுந்து வணங்கினார்.

சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால் எடுத்து, "நம் பொருட்டு உன் தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த தந்தை" என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரை அணைத்து உடலைத் தழுவினார். உச்சி மோந்தார். மகிழ்ந்தார். விசாரசருமரது திருமேனி சிவமாயிற்று. பேரொளியில் திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது திருச்சடையில் உள்ள கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.

எச்சதத்தன் சண்டீசப் பெருமானால் வெட்டுண்டதால், அவன் குற்றம் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.

        வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தினம் தாளில் சூழ் திரு, வாய்ப் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் வாழ் திருவாய்ப்பாடி இன்ப வாரிதியே" என்று போற்றி உள்ளார்.


பாடல் 18


“இழவுஆடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி

விழவுஆடி ஆவி விடாமுன்னம், மழபாடி

ஆண்டானை, ஆரமுதை, அன்றுஅயன்மால் காணாமை

நீண்டானை, நெஞ்சே! நினை.”


இதன் பொருள் ---


    இழவு ஆடிச் சுற்றத்தார் எல்லாரும் கூடி - உயிரினை இழக்கும் நிலை கருதிச் சுற்றத்தார்கள் எல்லாரும் கூடி, விழவு ஆடி ஆவி விடாமுன்னம் – பிணத்தின் மேல் விழுந்து அழுகின்ற நிலை உண்டாகும் முன்னரே, மழபாடி ஆண்டானை – திருமழபாடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள ஆண்டவரை, ஆரமுதை – உயிர்கட்கு நிறைந்த அமுதம் போன்றவரை, அன்று அயன் மால் காணாமை நீண்டானை – முன்னொரு காலத்தில் பிரமனும், திருமாலும் காணமுடியாதபடி நெருப்பு உருவமாய் மேலும் கீழும் நீண்டவரை, நெஞ்சே நினை – நெஞ்சமே நினைப்பாயாக.


        திரு மழபாடி, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். இத் திருத்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது.  அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம். இறைவர் திருநாமம், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேசுவரர். இறைவியார் திருநாமம், சுந்தராம்பிகை, அழகம்மை. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர் ஆகிய தேவார மூவர்முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம்.


இந்தத் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை புருடாமிருகம் பிரமலோகத்தில் இருந்து எடுத்து வந்து, இங்கு பிரதிட்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும், அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரமாவால் எவ்வளவு முயன்றும் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.


இதையே திருநாவுக்கரசர் தமது பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரத்தூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது திருப்பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.


இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிட்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழபாடி திருத்தலத்தில் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம்தோறும் நடைபெறுகிறது. திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.


வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விரும்பி நிதம் பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை மன்னும் மழபாடி வச்சிரமே" என்று போற்றி உள்ளார்.


பாடல் 17

 "கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு, நாறி

ஒழிந்தது, உடல்இரா வண்ணம் - அழிந்தது

இராமல்,ஐயா, கொண்டுபோ என்னாமுன், நெஞ்சே!

சிராமலையான் பாதமே சேர்."

இதன் பொருள் ---

        கழிந்தது நென்னெற்று கட்டுவிட்டு - நல்ல நெற்றுப்போல வறண்ட உடலானது நேற்று உயிர் போன பின்னர் கட்டுவிட்டுக் கழிந்தது, நாறி ஒழிந்தது உடல் – உடலானது அழுகும் பதமாய் நாறுகிறது. அது இராவண்ணம் – இனி வைத்து இருக்க முடியாதபடி, அழிந்தது இராமல் – அழிந்து போன உடலை இன்னமும் வீட்டில் வைத்து இராமல், ஐயா – ஐயா!, கொண்டு போ என்னாமுன் -  எடுத்துக்கொண்டு போ என்று சொல்லாத முன்னே; நெஞ்சே – நெஞ்சமே! சிராமலையான் பாதமே சேர் -  திருச்சிராமலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளினது திருவடிகளை இடைவிடாது நினைப்பாயாக.


        நெற்றுப் பதம் வந்த பிறகு காய்கள் மரத்தில் இருந்து தன்னால் உதிர்வது போல, வற்றிப் போன உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றது. நேரம் செல்லச் செல்ல பிணமானது அழுகி நாற்றம் எடுக்கும். உறவினர்களைப் பார்த்து, ஐயா, இனிச் சிறிது நேரமும் வைத்து இருக்காமல், அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் சொல்லுவார்கள். இந்த நிலை வந்து சேராத முன்னம், திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவன் திருவடிகளை எப்போதும் நினைப்பாயாக என்று உபதேசம் செய்யப்பட்டது. 

        சேர்தல் என்னும் சொல்லுக்கு இடைவிடாது நினைத்தல் என்றும் பொருள். எனவே, திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்திற்குச் சென்று வழிபடுவாயாக என்பதோடு, இறைவன் திருவடிகளை இடைவிடாது நினைத்துக் கொண்டு இருப்பாயாக என்பதாகவும் பொருள் கொள்ளலாம். “மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்” என்னும் திருக்குறளில், சேர்தல் – இடைவிடாது நினைத்தல் என்று பரிமேலழகர் உரை கண்டுள்ளார் என்பதை அறிக.

        இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.  இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. உடம்பானது,  இரதம்,  உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை,  சுக்கிலமாகிய விந்து என்னும் ஏழுவகைத் தாதுக்களால் ஆனது. மாயையின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடம்பு தோன்றி, நின்று அழியும் தன்மை உடையது. இது  நெடுநாளைக்கு நிற்பது அல்ல. 

 

“என்பினால் கழிநிரைத்து இறைச்சிமண் 

     சுவர் எறிந்த இதுநம் இல்லம்,

புன்புலால் நாறுதோல் போர்த்து, பொல்- 

     லாமையால் முகடு கொண்டு,

முன்பு எலாம் ஒன்பது வாய்தலார் 

     குரம்பையின் மூழ்கி டாதே

அன்பன் ஆரூர்தொழுது உய்யலாம் 

     மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.”. --- திருஞானசம்பந்தர்.

 

“புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம்ஒரு தோலால் மூடி

ஒழுக்குஅறா ஒன்ப துவாய் ஒற்றுமை ஒன்றும்இல்லை

சழக்குஉடை இதன்உள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய

அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.”   --- அப்பர்.

                                        

“கால்கொடுத்து இருகை ஏற்றிக்

     கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து 

தோல்படுத்து உதிர நீரால்

     சுவர்.எடுத்து இரண்டு வாசல் 

ஏல்வுடைத்தா அமைத்து அங்கு 

     ஏழு சாலேகம் பண்ணி 

மால்கொடுத்து ஆவி வைத்தார்

     மாமறைக் காடனாரே.”                 --- அப்பர்

 

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி

குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்"  --- திருப்புகழ்.

                                                                                                            

“தோல்,எலும்பு,சீ,நரம்பு,பீளை,துன்று கோழை,பொங்கு

     சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான,

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து,நான் மெலிந்து

     சோரும், இந்த நோய் அகன்று,...... துயர்ஆற,” --- திருப்புகழ்.

 

“தோல் அத்தியால் அப்பினால் ஒப்பு இலாது உற்ற

     தோளு கை கால் உற்ற ...... குடில் ஊடே,

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு

     வேதித்த சூலத்தன் ...... அணுகா முன்..” --- திருப்புகழ்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய, 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.”  – திருப்புகழ்.


“தோலால் சுவர்வைத்து,நால்ஆறு காலில் சுமத்தி, இரு

காலால் எழுப்பி,வளைமுதுகு ஓட்டி, கைந் நாற்றி, நரம்-

பால் ஆர்க்கை இட்டு,தசைகொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்,

வேலால் கிரிதொளைத்தோன் இருதாள் அன்றி வேறில்லையே.” - கந்தர் அலங்காரம்.


    திருச்சி என வழங்கும் திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். திருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில். மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்துள்ளது. தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. 

    இது பற்றி வழங்கும் ஒரு கதை உண்டு. ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானை வணங்க ஆதிசேடனும் வாயுவும் வந்தனர். ஆதிசேடன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேடன் திருக்கயிலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச திருக்கயிலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இதன்படி, திருச்சிராப்பள்ளி மலை தென்கயிலாயம் என்ற பெயர் பெற்றது.

திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான். அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும் பெயர் பெற்றது. தென்கயிலாயம் என்றும் போற்றப்படும் சிறப்பை உடையது.

இத்திருத்தலத்தில் வாழ்ந்து வந்த சிவனடியவள் இரத்தினாவதி. பேறு காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவளுடைய தாய் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த தாயால் இக்கரைக்கு வந்து இரத்தினவதியைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தனது அடியவளின் துயரத்தைப் போக்கி உதவி புரிய இறைவன் அவளது தாய் உருவில் வந்து சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனால், இறைவன்  திருப்பெயர் தாயுமானசுவாமி என்று வழங்கப்படுகின்றது. பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த, “நன்றுடையானை தீயது இல்லானை” எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் சுகப் பிரசவம் ஆகும் என்பது அன்பர்களின் நம்பிக்கை. அது உண்மையும் கூட. அன்பர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளுகின்றனர். கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி அதைச் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு, பிறகு அங்கு வரும் அடியவர்களுக்கு வாழைப்பழங்களை வழங்குவார்கள்.

திருஞானசம்பந்தப் பெருமான், அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல் செய் அராப்பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் சிராப்பள்ளி ஞானத் தெளிவே" என்று போற்றி உள்ளார். 


பாடல் 16

 


“இட்ட குடிநீர் இருநாழி ஒர்உழக்காச்

சட்டஒரு முட்டைநெய் தான்கலந்து அட்ட

அருவாய்ச்சா றுஎன்றுஅங்கு அழாமுன்னம் பாச்சில்

திருவாச்சி ராமமே சேர்.”


இதன் பொருள் ---


        இட்ட குடிநீர் – மருந்துப் பண்டங்களைக் கூட்டிய குடிநீரில், சட்ட - செம்மையாக, ஒரு முட்டை நெய்தான் கலந்து – ஒரு சிறிய கரண்டி அளவுக்கு விளக்கெண்ணையைக் கலந்து, இருநாழி ஓர் உழக்கா – இரண்டு கால்படி நீரானது ஒரு கால்படி அளவுக்குச் சுருங்கும் அளவில், அட்ட அருவாய்ச் சாறு – அடுப்பில் வைத்துச் சுவறக் காய்ச்சி எடுக்கப்பட்ட அரிய கசாயச் சாற்றை, என்று – இதனைக் குடியுங்கள் என்று கொடுத்து, அங்கு அழா முன்னம் – அங்கே கூடியுள்ளவர்கள் அழும் நிலை வருவதற்கு முன்பாகவே, பாச்சில் திரு ஆச்சிராமமே சேர் – திருப்பாசிலாச்சிராரமம் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, அங்கு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளை வழிபட்டு உய்வாயாக.


        நாழி, உழக்கு என்பது அக்கால முகத்தல் அளவைகள். ஒரு முட்டை - முட்டை வடிவமாக எண்ணெய் முகப் பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. நெய் – நெய்ப்புத் தன்மை உள்ளது நெய் எனப்படும். இங்கே விளக்கெண்ணையைக் குறித்து வந்ததாகக் கொள்ளலாம். அருவாய்ச் சாறு – அரிய சாறு, கசாயம். என்று – நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரை எந்து உபாயத்தினாலாவது காப்பாற்ற எண்ணி, சுற்றி உள்ளவர்கள், இந்தக் கசாயத்தைக் குடியுங்கள் என்று அழுதுகொண்டே தருவார்கள். அந்த நிலை வருவதற்கு முன்பாகவே இறைவனை வழிபட்டு உய்தல் வேண்டும்.


        திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் திருத்தலம், திருச்சி-சேலம் வழித தடத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம். திருவாசிராமம் என்பது மருவி, இன்று திருவாசி என்று வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.


        இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயினால் பீடிஇக்கப்பட்டாள். மணி, மந்திர ஔடத முறைகளால் முயன்றும் நோய் தீராவில்லை. கொல்லி மழவன் சைவ வழி வந்தவன். ஆதலால், சிவசந்நிதி முன்னர் தனது அருமை மகளைக் கிடாத்தினான். அவ்வேளையில் திருஞானசம்பந்தர் வருகையைக் கேள்வியுற்ற கொல்லிமழவன், நகரை அலங்கரித்துப் பிள்ளையாரை எதிர்கொண்டு, அவர்தம் சிவிகையின் முன் விழுந்து வணங்கினான். பிள்ளையார் அவனுக்கு அருள் செய்தார்.  அவனுடன் பிள்ளையார் திருக்கோயிலுள் சென்றார். அங்கே உணர்வழிந்து கிடந்த பெண்ணைப் பார்த்து, "என்ன இது?" என்று கேட்டார். கொல்லிமழவன் திருஞானசம்பந்த வள்ளலாரை வணங்கி, "இவள் அடியேன் புதல்வி. இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பீடித்து இருக்கிறது. அந் நோய் மணி, மந்திர, மருந்துகளால் தீரவில்லை. இவளைச் சிவசந்நிதி முன்னே கிடத்தினேன்" என்றான். ஆளுடைய பிள்ளையார் ஆகிய திரலுஞானசம்பந்தர், திருவருளைச் சிந்தித்து, "துணிவளர் திங்கள்" என்று எடுத்து, "மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே" என்று பாடியருளினார். உடன் அக் கன்னியும் பிணி தீர்ந்து எழுந்தாள். கொல்லிமழவன் பெருமகிழு எய்திப் புதல்வியோடும் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கினான். பிள்ளையார் அவர்களுக்கு அருள் செய்து அங்கே சிலநாள் தங்கியிருந்தார்.


இத்தலத்தில் இறைவன் மாற்றுரை வரதீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இப் பெயர் வழங்கக் காரணமாக ஒரு வரலாறு உள்ளது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. சுந்தரர், "இவர் அல்லாது இல்லையோ பிரானார்?" என்று "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். திருப்பதிகத்தின் கடைசி பாடலில் "திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று பாடிப் பொன் பெற்றார். இது பெரிய புராணம் நமக்கு அறிவுறுத்துவது.


வழக்கம் போலவே, சில தலங்களுக்கு உள்ள செவிவழிச் செய்தியும் உண்டு. அது வருமாறு, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், திருமால் அவருடன் வந்ததையும் உணர்ந்தார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரை வரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.


இத் திருத்தல இறைவரை வழிபட்டு, திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் தீராத நோய் தீரும் என்பது அடியவர்களின் நம்பிக்கை.


பாடல் 15

“அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்

குஞ்சி வெளுத்து,உடலம் கோடாமுன், - நெஞ்சமே!

போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்

சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.”


இதன் பொருள் ---

    அஞ்சனம் சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய் - மைதீட்டிய கண்களை உடைய பெண்கள் அருவருக்கும் அந்த நிலையில், குஞ்சி வெளுத்து - மயிர் நரைத்து; உடலம் கோடாமுன் - உடல் வளைந்துபடா முன்னமே; போய் காடு கூட – சுடுகாடு போய்க் கூடும் நிலை வருதலால், புலம்பாது – அந்நிலையை எண்ணி மனக் கலக்கம் கொள்ளாமல், பூம்புகார்ச் சாய்க்காடு சார்ந்து கைதொழு நீ – பூம்புகார் என்னும் நகரை அடுத்து உள்ள திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளைச் சார்ந்து கைதொழுது நீ வாழ்வாயாக.

விளக்கம் ---

    அஞ்சனம் – மை. அஞ்சனம் சேர் கண்ணார் – மை தீட்டிய கண்களை உடைய பெண்கள். மனைவி முதலானவர்களைக் குறிக்கும். நோயால் வருந்தி நொடிந்து கொண்டு இருக்கும்போதே அன்பாக இருந்த உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அன்னியர் போல் ஆகிவிடுவார்கள். உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன. வயது முதிர்ந்தால் தலைமுடி நரைத்துப் போகும். (குஞ்சி – தலைமுடி) தோல் திரங்கிப் போகும். நாடி நரம்புகள் எல்லாம் ஒடுங்கி, பிறரை நாடியே வாழவேண்டும் என்னும் நிலை வரும்போது, எல்லோரும் வெறுக்கத்தான் செய்வார்கள். தனியாகவும், ஒன்று கூடியும் பழித்துப் பேசுவார்கள். உடல் கோடுதல் – கூன் விழுதல்.

"தமரும் அமரும் மனையும் இனிய 

தனமும் அரசும்       அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு 

தலையை வளைய  எறியாதே”   --- திருப்புகழ்.


"மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக

     மகளிரும் நகைக்க, தாதை ...... தமரோடும்

மனமது சலிப்ப, நாயன் உளம்அது சலிப்ப, யாரும்

     வசைமொழி பிதற்றி, நாளும் ...... அடியேனை

அனைவரும் இழிப்ப, நாடு மனஇருள் மிகுத்து, நாடின்

     அகம்அதை எடுத்த சேமம் ...... இதுவோ? என்று

அடியனும் நினைத்து, நாளும் உடல்உயிர் விடுத்த போதும்,

     அணுகி முன் அளித்த பாதம் ...... அருள்வாயே.: --- திருப்புகழ்.


"இல்லும் இளையோரும் மெல்ல அயலாக,

     வல் எருமை மாயச் ...... சமனாரும்

எள்ளி, எனது ஆவி கொள்ளை கொளும் நாளில்,

     உய்ய ஒரு நீ பொன் ...... கழல்தாராய்."   --- திருப்புகழ்.


"மனைவிதாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத் தானை

நினையுமா வல்லீர் ஆகில், உய்யலாம் நெஞ்சி னீரே." --- அப்பர்.

திருச்சாய்க்காடு – திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் வழிபட்டுப் பாடி அருளிய திருத்தலம். சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு அடுத்து கி.மீ. தொலைவில் உள்ளது. 

சாய் என்பதற்குக் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் திருச் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது. காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் ஆறு திருத்தலங்களில் திருசாய்க்காடும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்ற மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் அவதரித்து முக்தி அடைந்த திருத்தலம். “இல்லையே என்னாத இயற்பகை” என்று சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தில் வைத்துப் போற்றி உள்ளார். இவரது அன்பை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் "உமது திருத்தொண்டின் திறத்தைக் கேள்வியுற்று, ஒரு பொருள் நாடி இங்கு வந்தோம். அளிக்க, நீர் இசைவீர் ஆயின், அதனை இன்னது என்று சொல்லுவோம்" என்றார். அன்பில் சிறந்த நாயனார், "எப் பொருளாயினும் ஆக, அது என்பால் இருப்பின், அது அடியவர் உடைமை. அதை அருளிச் செய்க" என்றார். வேதியர், முன்பின் சிந்தியாது, "உமது மனைவியை வேண்டி வந்தோம்" என்றார்.  இயற்பகையார், "அடிகள் என்னிடம் உள்ள பொருளையே நாடியது எனது புண்ணியப் பயன்" என்று அகமகிழ்ந்து, உள்ளே விரைந்து எய்தி, இல்லக் கிழத்தியாருக்கு அடிகள் விருப்பத்தையும் தமது கருத்தையும் தெரிவித்தார். மனைவியார் சிறிது மனம் கலங்கி, உடனை தெளிந்து, நாயனார் கருத்துக்கு இணங்கி அவரைத் தொழுதார். நாயனாரும் அவரை வணங்கினார். இயற்பகையாரும் தன் மனைவியை வேதியருடன் அனுப்பி வைத்தார். "அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்" என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், "நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்குக் காவலாக வ வேண்டும்" என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். தடுத்த சுற்றத்தார் அனைவரையும் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், "நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்"' என்றார். இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார்.

சிவபெருமான், "இவன் மனைவியை விட்டுவிட்டுத் திரும்பியும் பாராமல் செல்கின்றான். இவனுடைய அன்பின் நிலை என்னே, என்னே" என்று வியந்து, "இயற்பகை முனிவா ஓலம், ஓலம், இவ்விடம் விரைந்து வருக" என்று ஓலமிட்டார். அந்த ஓலத்தைக் கேட்ட நாயனார், "வந்தேன், வந்தேன், இன்னும் துன்பம் செய்பவர்கள் இருக்கின்றார்களா, அவர்களைத் தொலைத்து விடுகிறேன்" என்று முழங்கிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். வந்தவர் மறையவரைக் காணவில்லை, மனைவியை மட்டுமே கண்டார். அந் நிலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் விடைமேல் காட்சி தந்து, "அன்பனே, உன் தொண்டின் திறம் எமக்குப் பெருமகிழ்வைத் தந்தது.  நீ உன் மனைவியுடன் நம்மோடு வரக் கடவாய்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். நாயனார் விழுந்து, விழுந்து, வணங்கி, வணங்கி, வாழ்த்தி, வாழ்த்தி, ஆனந்தக் கூத்து ஆடினார். இயற்பகை நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சிவலோகம் எய்தி, இன்ப வாழ்வைப் பெற்றனர். இறந்துபட்ட உறவினர்களும் விண்ணுலகை அடைந்து பிறவாத இன்பம் நுகர்ந்தார்கள்.

இறைவன் திருவடியைச் சரண் புகுந்தோர் பெறும் பேறு குறித்து, இத் திருத்தலத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வருமாறு பாடி உள்ளார்.


“மண்புகார், வான்புகுவர், மனம்இளையார், பசியாலும்

கண்புகார், பிணிஅறியார், கற்றாரும் கேட்டாரும்

விண்புகார் எனவேண்டா, வெண்மாட நெடுவீதித்

தண்புகார்ச் சாய்க்காட்டுஎம் தலைவன்தாள் சார்ந்தாரே.”

இதன் பொருள் ---

    வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மை பொருந்திய பூம்புகாரில் விளங்கும் திருச்சாய்க்காட்டுள் எழுந்தருளிய எமது தலைவரின் திருவடிகளைச் சார்ந்து வழிபாடு செய்து, அவன் திருப்புகழைக் கற்றவரும் கேட்டவரும் நில உலகில் வந்து பிறவார். பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வு அடையமாட்டார்கள். பசியாலும் துன்பம் அடையார். நோய் அற்று வாழ்வார்கள்.

அப்படிப்பட்ட பெருவாழ்வை நமக்கு அருளுகின்ற பெருமானை நாளும் நினைத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் அறிவுறுத்துகின்றார். நாம் வாழ்கின்ற நாள்கள் இவ்வளவு என்றும், எப்போது சாகப் போகின்றோம் என்பதும் யாரும் அறிந்து கொள்ள முடியாத ஒன்று. எனவே, உயிர் உள்ளபோதை நாளும் இறைவனை வழபிட வேண்டும் என்றும்  அறிவுறுத்துகின்றார்.  இந்த இருபாடல்களும் நாளும் ஓதவேண்டியவை என்பதை அறிக.


“நீ நாளும், நல்நெஞ்சே! நினைகண்டாய், யார்அறிவார்

சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே

பூநாளும் தலைசுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,

நாநாளும் நவின்றுஏத்தப் பெறலாமே நல்வினையே.”

இதன் பொருள் –

    நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் இறைவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்? ஆதலின், திருச்சாய்க்காட்டை அடைந்து அங்கு எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும், செவிகளால் அவன்  பொருள்சேர் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரைக் கூறி வழிபட்டும் வந்தால் நல்வினைப்பயன் பெறலாம். (நாளும் வழிபட்டால், நாளும் நல்வினைப்பயனைப் பெறலாம். இருப்பும், இறப்பும் அறியாமையால், இருக்கும்போதே சிவபுண்ணியத்தைத் தேடிக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பு)



பாடல் 14

“இல்லும் பொருளும் இருந்த மனையளவே,

சொல்லும் அயலார் துடிப்பளவே, நல்ல

கிளைகுளத்து நீர்அளவே, கிற்றியே, நெஞ்சே!

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.”


இதன் பொருள் ---

    இல்லும் பொருளும் இருந்த மனை அளவே - (உயிர் பிரிந்த பின்னர்) மனைவியும் பொருள்களும் குடி இருந்த மனையின் அளவே நின்று விடுவன. சொல்லும் அயலார் துடிப்பு அளவே - அயலார்களின் சொல்லின் துணையும் உயிர்ப்புத் துடிப்பு உள்ள அளவும், இறந்த பின்னர் சொல்லும் இரக்கச் சொல்லலின் அளவும்தான். நல்ல கிளை குளத்து நீர் அளவே - நல்ல சுற்றத்தார்களது தொடர்ச்சியும் சுடுகாடு வரை பின்தொடர்ந்து, பின்னர் நீர்மூழ்கும் குளத்தின் மட்டுமே. கிற்றியே நெஞ்ச – மனமே இதனை நீ அறியவல்லையானால், வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து – திருவளைகுளம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபரம்பொருளையே வாழ்த்துவாயாக.


பட்டினத்து அடிகளார் பாடியருளிய இந்தப்பாடலையும் இங்கு வைத்து ஓதி உணர்க.

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்புஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மிவிம்மி இரு

கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே,

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே."

இதன் பொருள் –

    ஈட்டிய செல்வமும், அதனால் வாழ்கின்ற வாழ்வும் அவரவர் வீட்டின் அளவே. சூழ்ந்திருந்த பெண்களும் கண்களில் நீர் சோர அழுதுகொண்டு வீதி அளவே வருவார்கள். தந்தையின் அருமையை எண்ணி எண்ணி இருகரம் கூப்பி அழுகின்ற மைந்தர்களும் சுடுகாட்டு அளவே. இறந்துவிட்டவனைப் பின் தொடர்ந்து செல்வன அவன் செய்த புண்ணியமும் பாவமும் ஆகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளே.

    இறந்தவரது உடலைச் சுடுகாட்டில் கொண்டு போய் பெதைத்த பின்னர் அல்லது எரியூட்டிய பின்னர், நீரில் மூழ்கித் திரும்பவும் வராத சுற்றத்தார்கள் உண்டு. “நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே” என்றார் திருமூலதேவ நாயனார்.


    வளைகுளம் என்பது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. 


“மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்,

விருப்புடைய அடியவர்தம் உள்ளத் தாரும்,

வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.”


“வானவர்கோன் தோள்இறுத்த மைந்தன் தன்னை,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை”


எனவும் வரும் அப்பர் திருத்தாண்டகப் பாடல்கள் காண்க.


    தொண்டை நாட்டில் அரக்கோணம் – திருத்தணி சாலையில் உள்ள வளர்புரம் என்னும் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வூர்த் திருக்கோயில் கல்வெட்டில் "வளைகுளத்து நாகேச்சரமுடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. சோழநாட்டில் தஞ்சை – திருச்சி சாலையில் உள்ள வல்லம் என்னும் ஊர் என்று கூறுவர். திரு ராம. சொ. சொக்கலிங்கம் சேட்டியார் என்பவரால் பாடப்பெற்ற “வளைகுளம் நாகேசுரர் பதிகம்” என்று ஒரு நூல் 1921-ல் வெளியிடப்படு உள்ளது. திருத்தலம் எங்குள்ளது என்பது குறித்து இந்நூலில் இல்லை.


பாடல் 13

"காளையர்கள் ஈளையர்கள் ஆகி, கருமயிரும்

பூளைஎனப் பொங்கிப் பொலிவு அழிந்து, --சூளையர்கள்

ஓகாளம் செய்யாமுன், நெஞ்சமே! உஞ்சேனை

மாகாளம் கைதொழுது வாழ்த்து."


இதன் பொருள் ---


    காளையர்கள் ஈளையர்கள் ஆகி - காளைப் பருவம் உடையவர்கள், முதுமையில் ஈளை நோய் உடையவர்களாகி, கருமயிரும் கூளை எனப் பொங்கிப் பொலிவு அழிந்து - கரிய மயிரும் பூளைப் பூவினைப் போல வெண்மயிராக மாறி, நல்ல தோற்றம் அழிந்து; சூளையர்கள் ஓகாளம் செய்யா முன் - தோழியர்கள் பெருமூச்சு விட்டு அழாத முன்னே; உஞ்சேனை மாகாளம் கைதொழுது வாழ்த்து - உஞ்சேனை மாகாளத்தில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நீ கைதொழுது வாழ்த்துவாயாக.


குறிப்புரை --- ஈளை – கோழை, இளைப்பு, காசநோய். முதுமையில் கபம் மேலிட்டு இருமல் வருவதால் உண்டாகும் இளைப்பு நோய். பூளைப் பூ – வெண்ணிறம் உடையதொரு மலர். முந்திய பாடலையும் காண்க. பொங்குதல் என்பது, நரைத்த தலைமுடியானது படியாது விரிந்து கிடத்தலைக் குறிக்கும். 


    சூளையர்கள் – பரத்தையர், விலைமாதர். விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை. "துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.


    உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சாரப் பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடுவர்.  விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர். இளமைக் காலத்தில், இன்பத்தைத் தந்து பொருளைப் பெற்றுச் சென்ற விலைமாதர் முதுமைக் காலத்தில் வெறுப்புக் கொள்வர். ஓகாளம் – அருவருப்புக் கொள்ளுதல். முன் உண்டதைக் கக்குதல்.


“வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச்  செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே.”   --- திருவாசகம்.


“பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!”   --பட்டினத்தார்.


“சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,

பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!”      -- பட்டினத்தார்.


“பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?” -- கந்தர் அலங்காரம்.


மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.”         -- பட்டினத்தார்.


“மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.”                         --திருப்போரூர்ச் சந்நிதி முறை.


    விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். அகலிகையின் அழகில் மயங்கி இந்திரன் தனது நிலையில் இழிவினை அடைந்தான். தனது பாகன் ஆகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கிப் புணர்ந்தான் சூரியன். சந்திரன் தனது குருவின் பத்தினியாகிய தரையைக் கண்டு மயங்கினான். பராசரர் மச்சகந்தியைக் கண்டு மயங்கினார். திருநீலகண்ட நாயனார், “இளமை மீதூர, இன்பத் துறையில் எளியர் ஆனார்” என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டி உள்ளதை அறிக.


    சூளையர்கள் என்பதற்கு, நோய்வாய்ப்பட்ட காலத்தில் சூழ்ந்து இருந்து உதவிபுரிவோர் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படிப்பட்டவர்களும் அருவருப்புக் கொள்ளுகின்ற நிலை முதுமையில் உண்டாகும்.


    உஞ்சேனை மாகாளம் என்பது வடநாட்டில் உள்ளதோர் சிவத்தலம்.  காளி பூசித்த தலமாதலால், மாகாளம் எனப்பட்டது. இது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. “நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்” என்று இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தப் பெருமானும்,  “மதில் உஞ்சை மாகாளம்” என்றும், “உஞ்சேனை மாகாளம்” என்று ஆறாம் திருமுறையில் இரண்டு இடங்களில் அப்பர் பெருமானும், வைத்துப் போற்றி உள்ளனர். இக்காலத்தில் உச்சயினி என்று வழங்கப்படும் சோதிர்லிங்கத் தலம். உச்சியினி என்பது தலம். மாகாளம் என்பது திருக்கோயில்.


பாடல் 12


"குயில்ஒத்து இருள்குஞ்சி கொக்குஒத்து, இருமல்

பயிலப் புகாமுன்னம், நெஞ்சே! -  மயிலைத்

திருப்புன்னை அம்கானல் சிந்தியாய் ஆகில்,

இருப்பின்னை அங்காந்து இளைத்து."


இதன் பொருள் --- 


    நெஞ்சே – மனமே! குயில் ஒத்து இருள் குஞ்சி கொக்கு ஒத்து – குயிலின் நிறம் போன்று கருமை நிறைந்து இருந்த தலைமயிரானது, நரைத்து கொக்கின் நிறம் போன்று வெண்மயிர் ஆகவும், இருமல் பயிலப் புகாமுன்னம் – இருமல் அடிக்கடி வருத்துகின்ற முதுமைப் பருவம் வந்து அடையும் முன்னரே, மயிலைத் திருப்புன்ன அம்கானல் சிந்தியாய் ஆகில் – திருமயிலாப்பூரிலே உள்ள திருப்புனை அம்கானல் என்னும் திருத்தலத்தை நினைக்கமாட்டாய் என்றால், பின்னை அங்காத்து இளைத்து இரு – முதுமையில் வாய் திறந்து இளைப்பினை அடைந்து இருப்பாய். (வாய் திறந்து இறப்பினையும் அடைந்து இருப்பாய்)

    இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல், கொக்கின் நிறம்போல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி இறைவன் அமைத்து இருகுகலாம்.  அது அவனுக்கு அருமையானது அல்ல. அதானல் இறைவனுக்கு நட்டமும் இல்லை.  இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

“கறுத்து தலை வெளிறு மிகுந்து” எனவும், “தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து” எனவும் வரும் திருப்புகழ்ப் பாடல்களை இங்கு வைத்து எண்ணுக. முதுமையில் கோழை மிகுவதால், இருமல் அடிக்கடி உண்டாகும். மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமா, க்ஷயம், புகை இருமல், பாடி இருமல், தூறு இருமல் என்று பலவகை உண்டு. அதுவும் இரவு நேரத்தில் இருமல் வாட்டும். “உறக்கம் வரும் அளவில், எலும்பு குலுக்கி விடும் இருமல் தொடங்கி, உரத்த கன குரலும் நெரிந்து” என்பார் அருணகிரிநாதர். பின்னை – முதுமைக் காலத்தில். அங்காத்தல் – வாயைத் திறத்தல். துயரத்தால் வாயைத் திறந்தபடி இருந்து, வாயைத் திறந்தபடியே இறந்து போவாய் என்றார்.

    புன்னை அம் கானல் - புன்னை மரங்கள் மிகுந்து உள்ள அழகிய கடற்ரை. மயிலை – திருமயிலை என வழங்கும் திருமயிலாப்பூர். இது தொண்டை நாட்டுத் திருத்தலம். சென்னைமாநகரின் ஒரு பகுதியாக உள்ளது. திருக் கபாலீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத் திருப்பதிகம் திருஞானசம்பந்தரால் அருளப்பட்டது.


பாடல் 11

 


“குழீஇ இருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட,

வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇஇருந்தும்

என்ஆனைக்கு ஆவா இதுதகா துஎன்னாமுன்

தென்ஆனைக் காஅடைநீ சென்று.”


இதன் பொருள் ---


    குழீஇ இருந்த சுற்றம் குணங்கள் பாராட்ட - சுற்றிக் கூடியிருந்த சுற்றத்தார்கள் குணங்களை எடுத்துப் பாராட்டிக்கூற; வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாம் தழீஇ இருந்தும் – மரண காலத்தில் நழுவிக் கிடந்த அங்கங்களை எல்லாம் தழுவிச் சேர்த்து இருந்து கொண்டும்; என் ஆனைக்கு இது தகாது என்னா முன் – எனது ஆனைபோன்ற (தோற்றமும் நடையும் உடைய) இவருக்கு இவ்வாறு நேர்ந்தது தகாது என்று சொல்லித் துக்கப்படாத முன்னே; நீ சென்று தென் ஆனைக்கா அடை – மனமே! அழகிய திருவானைக்காவினை நீ சென்று அடைவாயாக.


    எவர் ஒருவர் இறப்பினும் இறந்தவருடைய சுற்றத்தார்கள் இறந்தவரது மிகுதியான குற்றங்களை எல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம்.  வழீஇ இருந்த அங்கங்கள் – (வழுவுதல் - நிலைகெடுதல்.) அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். இது – மரணம். இந்தக் கதி.


சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம் ஆகிய திருவானைக்கா திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக உள்ள திருத்தலம். இறைவர், செழுநீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர். இறைவியார், அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி. தேவார மூவர் முதலிகள் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்) பாடி வழிபட்ட திருத்தலம். பஞ்சபூதங்களில் நீருக்கு உரிய திருத்தலம். நடராசர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட்சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது. இது, நாயனாரின் அவதாரத் திருத்தலம் ஆகும்.


கோச்செங்கண் சோழ நாயனார் வரலாறு


சோழ நாட்டிலே, காவிரிக் கரையிலே ஒரு தீர்த்தம் உண்டு. அதன் பெயர் சந்திர தீர்த்தம். அதன் அருகே ஒர் அழகிய வனம் இருந்தது. அவ் வனத்தில் ஒரு வெண்நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அது, ஒரு வெள்ளானைக்குப் புலப்பட்டது. அந்த யானை துதிக்கையால் நீரை முகந்து வந்து  சிவலிங்கத்தை அபிடேகம் செய்யும். மலரைச் சாத்தும்.  இவ்வாறு நாள்தோறும் அந்த யானை சிவபெருமானை வழிபட்டு வந்தது. அதனால், அத் திருப்பதிக்குத் "திரு ஆனைக்கா" என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.


அங்கே ஞான உணர்வு உடைய ஒரு சிலந்தியும் இருந்தது.  சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை அச் சிலந்தி கண்டது.  அதைத் தடுக்கும் பொருட்டு, அச் சிலந்தி, தனது வாய் நூலால் மேல்கட்டி அமைத்தது. பூசைக்கு வரும் வெள்ளானை, அம் மேற்கட்டியைக் கண்டு, அனுசிதம் என்று அதனை அழித்தது.  சிலந்தி அதைப் பார்த்து, துதிக்கை சுழன்றமையால் விதானம் அழிந்தது போலும் என்று கருதி, மீண்டு விதானம் அமைத்தது.  அடுத்த நாளும் யானை விதானத்தை அழித்தது. சிலந்திக்குச் சினம் மூண்டது. யானையின் துதிக்கயுள் புகுந்து கடித்தது.  யானை விழுந்து, துதிக்கையை நிலத்தில் மோதி மோதி இறந்தது. சிலந்தியும் மாண்டது. சிவபெருமான் யானைக்குச் சிவகதி வழங்கினார். சோழர் குலத்தில் பிறக்குமாறு சிலந்திக்குத் திருவருள் புரிந்தார்.


சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர் இருந்தார். அவர்  மனைவியார் கமலவதியார். அவர்க்குப் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது. அப் பேறு குறித்து அம்மையார் தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம். தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார் கருவுற்றார். அக் கருவில் திருவானைக்காச் சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.


கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம் வந்தது. "பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின், அது மூவுலகங்களையும் ஆள்வதாகும்" என்று காலக் கணக்கர்கள் சொன்னார்கள். அது கேட்ட கமலவதியார், "அப்படியானால், என்னைத் தலை கீழாகக் கட்டுங்கள்" என்று கூறினார். அவ்வாறே செய்ய, ஒரு நாழிகை கழிந்தது. பிள்ளை காலம் தாழ்த்துப் பிறந்தமையால், சிவந்த கண்ணை உடையதாய் இருந்தது. அதைக் கண்ட அன்னையார், "என் கோச்செங்கண்ணானோ?" என்று சொல்லிக் கொண்டே இறந்தார்.


சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். தக்க வயதில் பிள்ளைக்கு முடி சூட்டினார். பின்னே, அவர் தவநெறி நின்று சிவனடி சேர்ந்தார். கோச்செங்கண் சோழருக்கு முன்னை உணர்வு முகிழ்த்து இருந்தது. அவர் திருக்கோயில்கள் கட்டுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார். தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்று, அங்கே திருக்கோயில் அமைத்தார். சோழநாட்டிலேயே பல திருக்கோயில்களைக் கட்டுவித்தார். எழுபது மாடக் கோயில்களை அவர் சமைத்தார். இவற்றில் திருமால் கோயில்களும் அடங்கும். இதனை ஆழ்வாரும் சிறப்பித்து உள்ளார். கோச்செங்கண் சோழ நாயனார் தில்லை சேர்ந்தார்.  தில்லைக் கூத்தனை வழிபட்டார். தில்லைவாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். இவ் வழியில் திருத்தொண்டுகள் பல செய்து நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்தார்.


வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நால் திசையும் தேனை, காவுள் மலர்கள், தேம் கடல் என்று ஆக்குவிக்கும் ஆனைக்கா மேவி அமர் அற்புதமே" என்று போற்றி உள்ளார்.


அப்பர் பெருமான் இத் திருத்தலத்து இறைவர் மீது பாடியருளிய திருத்தாண்டகத் திருப்பதிகம், அனைவரும் ஓதி வழிபடுவதற்கு உரியது.


“எத்தாயர், எத்தந்தை, எச்சுற்றத்தார்,

எம்மாடு சும்மாடுஆம், ஏவர் நல்லார்,

செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை,

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,

சித்துஆய வேடத்தாய், நீடு பொன்னித்

திருவானைக் காஉடைய செல்வா, என்தன்

அத்தா,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,

அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.”


இதன் பொருள் ---


    (அடியேன் பல பிறவிகளை எடுத்து உள்ளேன். பிறவிகள் தோறும் எனக்குத் தாய்தந்தயர், சுற்றத்தார் அமைந்து உள்ளனர். அவர்களுள்) எந்த தாய், எந்த தந்தை, எந்த சுற்றத்தார் நமக்கு நல்லவர்கள்? எந்தச் செல்வம் நம்மைத் தாங்கக் கூடிய நல்ல செல்வம் ஆகும்? யார் நல்லவர்? நாம் இறந்தால் நமது உறவினர்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் உடலுக்கு உறவாக அமைந்தவர்கள் மீது கொள்ளும் பற்றினை விடுத்து,  உயிருக்கு உறவாக அமைந்துள்ள “என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவைத் தமக்கு இடமாக விரும்பி எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை நான் அடைவேனோ? (கூ கா என என் கிளை கூடி, அழப் போகா வகை உண்டாகும்)


“ஊன்ஆகி, உயிர்ஆகி, அதன்உள் நின்ற

உணர்வுஆகி, பிறஅனைத்தும் நீயாய் நின்றாய்,

நான்ஏதும் அறியாமே என்உள் வந்து

நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்,

தேன்ஆரும் கொன்றையனே, நின்றி யூராய்,

திருவானைக் காவில்உறை சிவனே, ஞானம்

ஆனாய்,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,

அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய் கேனே.”


இதன் பொருள் ---


    திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீயே உள்ளாய். நான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய். தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.


பாடல் 10

 "படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு

தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு

ஓடுஏந்தி உண்ப துஉறும்."


இதன் பொருள் ---


    படிமுழுதும் - நில உலகம் முழுவதையும், வெண்குடைக் கீழ் – தமது வெண்கொற்றக் குடையின்கீழ், பார் எலாம் ஆண்ட முடி அரசர் செல்வத்து – உலகை எல்லாம் ஆட்சி செய்த முடிமன்னர் செல்வத்து - உலகமெல்லாம் தமது வெண்கொற்றக் குடையின் கீழே தங்கும்படி எல்லா உலகங்களையும் ஆட்சி புரிந்த முடிமன்னர்களது செல்வத்தினும், கடி இலங்கு தோடு ஏந்து – மணம் மிகுந்த இதழ்களை உடைய, கொன்றை அம் தார் சோதிக்கு – அழகிய கொன்றை மாலையினை அணிந்த சோதி வடிவினர் ஆகிய சிவபரம்பொருளுக்கு, தொண்டுபட்டு – திருத்தொண்டு புரிந்து, ஓடு ஏந்தி உண்பது மும்மை உறும் – தருவோட்டினை ஏந்தி இரந்து உண்பது, மூன்று மடங்கு உயர்ந்தது ஆகும்.

    இத் திருப்பாடலை அருளிய நாயனார், மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், `அரச பாரத்தை இன்னல் தருவது எனக் கருதித் துறந்தர் என்பதை அறிக.  “ஓடு ஏந்தி உண்பது” வீடுபேற்றினை அடைவதற்கு வழி ஆகும். 


“பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்து உணி என்பர்கள், எற்றுக்கு இரக்கும்;

நிரந்தர மாக நினையும் அடியார்

இரந்து உண்டு தன்கழல் எட்டச்செய்தானே.” --திருமந்திரம்.

    எழுவகை உலகம் முழுமையும் வழுவின்றிப் படைத்த விழுப்பொருளாகிய சிவபெருமானை இரந்து உண்பவன் என்று கூறுவர் உண்மையறியாதார். சிவனை உலக முதல்வனாக எண்ணுபவர், அவன் எதன்பொருட்டு இரக்கின்றான் என்பதனை உய்த்து உணர்தல் வேண்டும். இடைவிடாது தன்னையே பூசிக்கின்ற மெய்யடியார்கள் தன்னையே நினைந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் உலகியலில் ஈடுபடாது, பசி நீக்குதல் பொருட்டாக இரந்து உண்டு, பற்றின்றி வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அவர்கள் உண்ணும் உணவு தன் திருவருளால் வழங்கப்படுவது என்னும் மெய்ம்மையை இறைவன் உள்ளிருந்து உணர்த்த உணர்கின்றனர். அதனால் தனது செயலைப் போலவே, தனது அடியார்களும் பிச்சை ஏற்று உண்டு, முடிவில் தனது திருவடியை அடைதல் வேண்டும் என்னும் திருக்குறிப்பு, இறைவன் பிச்சை ஏற்று உண்பதாகும்.

    அரச செல்வம் பற்றினை விளைத்துப் பிறவிக்கே ஏது ஆகும். இறைவனுக்குத் தொண்டுபட்டு ஓடு ஏந்தி உண்பது வீடுபேற்றுக்கு ஏது ஆகும்.


பாடல் 9

“அழுகு திரிகுரம்பை ஆங்குஅதுவிட்டு ஆவி

ஒழுகும் பொழுதுஅறிய ஒண்ணா; - கழுகு

கழித்துஉண்டு அலையாமுன், காவிரியின் தென்பாற்

குழித்தண் டலையானைக் கூறு.”

இதன் பொருள் ---

    அழுகு திரி குரம்பை ஆங்கு அது விட்டு - அழுகும் இயல்புடைய திரிந்து கெட்டுப் போதற்கு இடமாகிய உடம்பை விட்டு, ஆவி ஒழுகும் பொழுது அறிய ஒண்ணா - உயிர் நீங்கும்போது அறிய ஒண்ணாது. கழுகு கழித்து உண்டு அலையா முன் - கழுகு உண்டு கழித்துச் சிதைந்து உடல் அலைபடாத முன்னம்; காவிரியின் தென்பால் – காவிரியின் தென்கரையில் அமைந்து உள்ள, குழித் தண்டலையானைக் கூறு – குழித்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோஇல் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவரின் திருநாமத்தைக் கூறுவாயாக.

    அழுகு திரி குரம்பை – அழுகு குரம்பை, திரி குரம்பை எனத் தனித்தனி கூட்டுக. அழுகுதல் – கெடுதல். கணம் தோறும் வளர்தலும், கணம் தோறும் கெடுதலும் உடைய உடம்பு இது. திரிதல் – விகாரப் படுதல். “வேற்று விகார விடக்கு உடம்பு” என்றார் மணிவாசகப் பெருமான். ஒழுகுதல் – ஓட்டைக் குடத்தில் இருந்து நீர் நீங்குவது போல, உடலில் இருந்து உயிர் பிரிதல். “திருத்தண்டலை” என்பது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். “நீள்நெறி” என்பது அத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயர். தற்காலத்தில் ‘தண்டலைச்சேரி’ என்றும் ‘தண்டலச்சேரி’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது.  இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது. திருஞானசம்பந்தப் பெருமானார் பாடி வழிபட்ட திருத்தலம். 

    குழித்தண்டலை என்பதை, குழித்தலை என்று கொள்வோரும் உண்டு. குளித்தலை என்றும் வழங்கப்படுகிறது. இது கடம்பர் கோயில் என விளக்கமாய் அறியப்படுவது. திருக் கடம்பந்துறை என்று திருமுறையில் அறியப்படுவது. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். இத்திருத்தலம் குளித்தலை என்னும் நகரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்தும், திருச்சியில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். குளித்தலை இரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு வழித்தடத்தில் உள்ளது.


பாடல் 8


தொட்டுத் தடவித் துடிப்புஒன்றும் காணாது,

பெட்டப் பிணம்என்று பேர்இட்டு, கட்டி

எடுங்கள்,அத்தா! என்னாமுன், ஏழைமட நெஞ்சே!

நெடுங்களத்தான் பாதம் நினை.


        ஏழை மட நெஞ்சே! – அறிவில்லாத நெஞ்சமே! தொட்டுத் தடவி – உடலைத் தொட்டுப் பார்த்தும் தடவிப் பார்த்தும், துடிப்பு ஒன்றும் காணாது – நாடித் துடிப்பு ஒரு சிறிதும் அறியப்படாமையால்,  பெட்ட பிணம் என்று பேர் இட்டு – வெறும் பிணம் என்று பேரைச் சூட்டி;  அத்தா கட்டி எடுங்கள் என்னாமுன் – அத்தா! பிணத்தைப் பாடை கட்டி எடுங்கள் என்று சொல்லும் நிலை வருவதன் முன்னம், நெடுங்களத்தான் பாதம் நினை – திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நினைப்பாயாக.

விளக்கம் --- தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது – கணை பார்வை இழந்து, செவி கேட்பதும் அடங்கி, கேச்சும் மூச்சும் இன்றி உணர்வு இழந்து கிடக்கின்ற நிலையில், உயிர் உள்ளதா என்று அறிந்து கொள்வதற்குக் கையாளும் முறை நாடித் துடிப்புப் பார்த்தல். உடலை விட்டு உயிர் பிரிந்த நிலையில் நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு இருக்காது. அந்த நிலையில் முன்பு பலராலும் விரும்ப்பபட்உ, ஒரு பெயர் இட்டு அழைக்கப்பட்ட இந்த உடலைப் பிணம் என்று கூறுவர். “பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு” என்பது திருமூரல் திருமந்திரம். உயிருள்ளபோது ஒவ்வோர் உடம்புக்கும் வெவ்வேறு பெயர். உயிர் பிரிந்தபின் எல்லா உடம்புகளுக்கும் பிணம் என்பதே பொதுப் பெயர். 

        அத்தா – அக்காள் கணவன், அத்தை மகன், அம்மான் மகன்,உடன்பிறந்தாள் கணவன், கணவன் ஆகியோரைக் குறிக்கும் சொல். தலைவன் எனவும் பொருள்படும். “அத்தா உனக்கு ஆளாய்” என்பது சுந்தரர் தேவாரம்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,

 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.” -- திருப்புகழ்.


    உடம்பை விட்டு உயிர் பிரிந்தது, நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் செய்தி அறிந்து, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, வந்து, வாய்க்கு வந்த்தை எல்லாம் பேசி முழக்கம் இட்டும், அழுதும், ஓய்ந்து போவார்கள். பலவிதமாகப் பல்லக்கு போல அலங்கரிக்கப்பட்ட பாடையின் மீது பிணத்தைக் கிடத்துவார்கள்.

     பிணமான பின்னர் நாற்றம் எடுக்கும். பிணமானது நைந்து நாற்றம் வீசும் முன்னர், பாடையில் கிடத்தி, சுடலைக்குக் கொண்டு சென்று, தீயில் சுட்டுவிடுவார்கள். முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆகும். "ஒரு பிடி சாம்பரும் காணாது, மாய உடம்பு இது" என்றார் அருணகிரிநாதர்.

    “கட்டி எடுங்கள்” பாடயைக் கட்டிப் பிணத்தை எடுங்கள். “ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு” என்பது திருமூலர் திருமந்திரம். பாடை என்பது விதவிதமாக இருக்கும் என்பதால், “நானாவிதச் சிவிகை” என்றார் அருணகிரிநாதர்.

        பிறவியானது உயிர்கள் ஈட்டிய விளைகளின் பயனாக ஊட்டப்படுகின்றது. மூலமலமான ஆணவமலம், அறிவை மறைக்கும் ஆற்றல் உடையது. ஆணவ மலத்தால் அறிவை இழந்து, உண்மைப் பொருளை உணராமல், உணர்ந்ததையே பொருளாக உணர்ந்து. மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றது. இறைவன் உள்ளிருந்து உணர்த்துகின்றான். என்றாலும், அதை உணரும் பக்குவம் இன்மையால், தான் உணர்ந்ததையே உணரும் அறியாமை நிலையில் ஆன்மா உள்ளது.

 

“உணர்த்தும் உனை உணராமல்,உணர்ந்தவையே நாடி

இணக்கு உறும் என் ஏழைமைதான் என்னே பராபரமே.”   --- தாயுமானார்.


      கொஞ்சம் கொஞ்சமாகப் பிறவிகள் தோறும் பக்குவப்பட்ட ஆன்மாவுக்கு அறிவு உதித்து, பிறவி பொய் எனவும், வேண்டாத ஒன்று எனவும் தோன்றும். அந்த உணர்வு பெருகப் பெருக, பிறவி அறவேண்டும் என்னும் ஏக்கமும் மிகும். அந்த நிலையில், பிறவி நோய்க்கு மாமருந்தாக உள்ளவன் இறைவன். அவனே பவரோக வயித்தியநாதன் என்னும் நினைப்பு வந்து வழிபடவேண்டும் என்னும் எண்ணம் மிகும். இறைவன் தலங்கள் தோறும் எழுந்தருளி உயிர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறான். திருநெடுங்களம் என்பது ஒரு தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்திருத்தலம் வழியாகச் செல்கிறது. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய இத்தலத் திருப்பதிகம், அதனை ஓதுவோர்க்கு வரும் பலவகை இடையூறுகளையும் நீக்கிக் காக்க வல்லது. 


பாடல் 7

மாண்டு வாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே!

வேண்டுவாய் ஆகி, விரைந்து,ஒல்லை, பாண்டவாய்த்

தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்

நின்னிடைவாய் வைத்து நினை.


இதன் பொருள் ---


    மாண்டு வாய் அங்காவா முன்னம் - உயிர் பிரிந்து வாய்திறந்து போகாத முன்பு,  மடநெஞ்சே – மடமை உடைய நெஞ்சமே! பாண்டவாய்த் தென் இடைவாய் மேய சிவனார் திருநாமம் – மட்பாண்டம் போன்று விரிந்த வாயினை உடைய காவிரியின் தென்கரையில், திரு இடைவாய் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருநாமத்தை, வேண்டுவாயாகி விரைந்து ஒல்லை – விருப்பம் உடையவன் ஆகி மிக விரைவாக; நின்னிடை வாய் வைத்து நினை - உனது மனத்துள்ளே பதிய வைத்து நினைவாயாக.

அங்காத்தல் - திறத்தல். வேண்டுவாயாகி - விரும்புதல் தன்மையை உடையை ஆகி. தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள `இடைவாய்` என்னும் திருத்தலம். சோழ நாட்டில் அண்மையில், `விடைவாய்` என்னும் தலத்து திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது. `இடைவாய்` என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். திருவிடை வாசல் என்று வழங்குவது, கொரடாச்சேரி நிலயத்திற்கு அருகில் உள்ளது.  நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மானதமாகக் கணித்தல்.


பாடல் 6

 



காலைக் கரையிழையால் கட்டி, தன் கைஆர்த்து,

மாலை தலைக்குஅணிந்து, மைஎழுதி, மேல்ஓர்

பருக்கோடி மூடிப் பலர்அழா முன்னம்,

திருக்கோடி காஅடைநீ சென்று.


இதன் பொருள் ---


    காலைக் கரை இழையால் கட்டி - காலினைத் துணியின் கரையைக் கிழித்த இழையினாலே கட்டி; தம் கை ஆர்த்து - தமது கையினையும் அவ்வாறே கட்டி; மாலை தலைக்கு அணிந்து – தலைக்கு மாலையை அணிவித்து, மை எழுதி – கண்களுக்கு மையினைத் தீட்டி, மேல் ஓர் பருக்கோடி மூடி – உடலின் மேல் பெரிய புத்தாடையால் மூடி, பலர் அழா முன்னம் – பலரும் கூடி அழும் காலம் வருவதற்கு முன்பாகவே, நீ சென்று திருக்கோடிகா அடை - நீ சென்று திருக்கோடிகா என்னும் திருத்தலத்தினை அடைவாயாக.


    உயிர் பிரிந்தபின், சில நாழிகை அளவு உடல் விரைத்துக் கைகால்கள் ஒழுங்காகப் பாடையிலும் சிதையிலும் அமைக்க வாரா என்பதால், பிணத்தின் காற்பெருவிரல்களையும் கைப்பெருவிரல்களையும் துணியின் வலுவான பகுதியான கரையினைக் கிழித்து அதனால் உடனே கட்டுதல் வழக்கு.  தலைக்கு மாலை சூட்டுதலும், மை எழுதுதலும் பிணத்திற்குச் செய்யும் அலங்காரம். “மையினால் கண் எழுதி மாலை சூட்டி” என்பது அப்பர் தேவாரம். கோடி – புதுத்துணி. பருக்கோடி – பருத்த துணி. பலர் அழா முன்னம் – “கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை” என்பது கந்தர் அனுபூதி. “உற்றர்கள் சுற்றி அழ, பெற்றார்கள் மெத்த அழ” என்பது திருப்புகழ்.


“கயல் விழித்தேன் எனைச் செயல் அழித்தாய் என,

     கணவ கெட்டேன் எனப் ......     பெறுமாது,

கருது புத்ரா என, புதல்வர் அப்பா எனக்

     கதறிட, பாடையில் ......         தலைமீதே


பயில் குலத்தார் அழ, பழைய நட்பார் அழ,

     பறைகள் கொட்டா வர, ......     சமனாரும்

பரிய கைப் பாசம் விட்டு எறியும் அப்போது, எனைப்

     பரிகரித்து ஆவியைத் ......       தரவேணும்.”  -- திருப்புகழ்.


திருக்கோடிகா என்பது சோழநாட்டில், காவிரியின் வடகரையில் உள்ள திருத்தலம். மக்கள் வழக்கில் கோடிகாவல் என்று வழங்குகிறது. மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் வந்தும் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் வரலாம். திருஞானசம்பந்தரும், அப்பரும் பாடிய திருத்தலம்.


பாடல் 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்

குஞ்சி குறங்கின்மேல் கொண்டுஇருந்து கஞ்சி

அருத்தஒருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே

திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.


இதன் பொருள் –


நெஞ்சே – மனமே! வஞ்சியன நுண்ணிடையார் --- வஞ்சிக் கொடியைப் போலும் நுண்மையான இடையினை உடைய பெண்கள், வாள் தடம் கண் ஈர் சோர --- தமது வாளைப் போன்று ஒளியும் கூர்மையும் உடைய கண்களில் இருந்து நீர் வழிய, குஞ்சி குறங்கின்மேல் கொண்டு இருந்து – தலையினைத் தமது துடையின் மேல் வைத்துத் தாங்கிக் கொண்டு, ஒருத்தி – இன்னொரு பெண்ணை, கஞ்சி அருத்தக் கொண்டு வா என்னா முன் – கஞ்சியினை குடிப்பிக்கக் கொண்டு வா என்று சொல்லும் நிலை வருமுன்பாகவே,  திருத்துருத்தியான் பாதம் சேர் – திருத்துருத்தி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை அடைவாயாக.

        வஞ்சி - கொடி; வஞ்சிக்கொடி.  கண் நீர் சோர - நோயின் நிலையினை எண்ணி வருந்திக் கண்ணீர் சோர; குஞ்சி - மயிர்; தலையைக் குறித்தது;  குறங்கு – துடை. கஞ்சி அருத்த - கஞ்சியினை உண்பிக்க.  திருத்துருத்தி என்பது சோழநாட்டில், காவிரித் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்றாகும்.  மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து 9 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய திருத்தலங்கள் அருகாமையில் உள்ளன.


060. ஊக்கம் உடைமை - 02. உள்ளம் உடைமை

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "ஒருவனுக்கு ஊக்கம் உடை...