திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 59 -- ஒற்றாடல்
இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "எல்லார் இடத்தும் நடப்பவற்றை எல்லாம், நாள்தோறும் ஒற்றரால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் ஆகும்" என்கின்றார் நாயனார்.
எல்லார் இடத்தும் என்றது, பகைவர், நண்பர், அயலார் ஆகிய மூவரிடத்தும். எல்லாம் என்றது, நாட்டில் நிகழும் நல்லனவும் தீயனவும் ஆகிய எல்லா நிகழ்வுகளையும், தெரிந்து கொள்ளுதலும்,
வல்லறிதல் ஆவது, தெரிந்துகொண்ட பொழுதே, நல்ல செயல்களுக்கு உண்டான அருளைச் செலுத்தி, அதற்கு உரியோரைக் காத்தலும், தீய செயல்களுக்கு உரியோரைத் தக்க முறைப்படி தண்டித்தல் செய்வதும். காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.
இதற்குத் திருக்குறள்...
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்
வல்அறிதல், வேந்தன் தொழில்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் --- எல்லார் கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்;
வேந்தன் தொழில் --- அரசனுக்கு உரிய தொழில்.
('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விரு தொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
“சீர்படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும்
பேர்படைத்த சேரர் பெருமான்போல் --- பார்மிசையின்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்.”
இதன் பொருள் ---
சேரர்பெருமான் - சேரமான் பெருமாள் நாயனார். பாணபத்திரருடைய வறுமையைத் தீர்த்தல் பொருட்டுச் சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய திருமுகப் பாசுரம் வருமாறு......
திருச்சிற்றம்பலம்
மதிமலி புரிசை மாடக் கூடல்,
பதிமிசை நிலவு பால் நிறவரிச் சிறகு
அன்னம் பயில்பொழில், ஆலவாயில்
மன்னிய சிவன், யான் மொழிதரு மாற்றம்,
பருவக் கொண்மூப்படி எனப் பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்
செருமா உகைக்கும் சேரலன் காண்க,
பண்பால் யாழ் பயில் பாணபத்திரன்,
தன்போல் என்பால் அன்பன், தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்,
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.
திருச்சிற்றம்பலம்
இதனைக் கொண்டு சென்ற பாணபத்திரரைச் சேரர் பல உபசாரங்களுடன் வரவேற்று, அவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அனுப்பினார் என்பது வரலாறு.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“வேதன்இல்லாள் வீந்ததிறம் மீனவற்கு நீதெரித்தாய்,
சோதி,பழி அஞ்சும் சோமேசா - பூதலத்தின்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்.”
இதன் பொருள் ---
சோதி - பரஞ்சோதி வடிவமாகவுள்ளவரே, பழி அஞ்சும் சோமேசா - முன்பு பாண்டிய மன்னனுக்கு வர வின்ற பழிக்கு அஞ்சிய சோமேசப் பெருமானே! பூதலத்தின் - நிலவுலகத்தில், எல்லார்க்கும் - எல்லார்கண்ணும், நிகழ்பவை எல்லாம் - நிகழ்வன எல்லாவற்றையும், எஞ்ஞான்றும் வல் அறிதல் - நாள்தோறும் ஒற்றான் விரைந்து அறிதல், வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்,
வேதன் - ஓர் அந்தணணுடைய, இல்லாள் வீந்த திறம் - மனைவி இறந்த விதத்தை, மீனவற்கு - குலோத்துங்க பாண்டியனுக்கு, நீ தெரித்தாய் - நீயே தெரிவித்து அருளினாய் ஆகலான் என்றவாறு.
அரசர்க்கு உற்றார் உறவினர் நண்பினர் பகைவர் எல்லாரானும் தீமை விளையக் கூடும் ஆகலின், அவர்கள் செயலையும் ஒற்றான் அறியவேண்டுவது அரசர்க்கு இன்றி அமையாதது ஆயிற்று. காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.
குலோத்துங்க பாண்டியன் என்பான் செங்கோல் செலுத்தும் நாள், ஓர் அந்தணன் தன் மனைவியோடும் கைக் குழந்தையோடும் திருப்புத்தூரினின்றும் புறப்பட்டு மாமனார் வீடு செல்ல மதுரைக்கு வருகிற வழியில் தாகவிடாய் கொண்ட மனைவியைக் குழந்தையுடன் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் விட்டு, நீர் கொணரச் சென்றான். அவ் ஆலமரத்தில் நெடுங்காலமாய்ச் சிக்குண்டு இருந்த ஓர் அம்பு காற்றால் அலைப்புண்டு வீழ்ந்து அப் பார்ப்பனியின் வயிற்றில் ஊடுருவிற்று. அவளும் உயிர் இழந்தாள். அத் தருணத்தில் அம்பினைத் தொடுத்த வில் ஏந்தியவனான வேடன் ஒருவன் வெயிற்கு ஒதுங்கி அந்த ஆலமரத்தின் அடியில் நின்றான். நீர் கொணரச் சென்ற அந்தணன் நீரொடு திரும்பி வந்து, தன் மனைவி இறந்து கிடப்பதைக் கண்டான். இது யார் செய்தார் என்று சுற்றிப் பார்த்தான். வேடன் ஒருபுறம் நிற்கின்றான். அவனே செய்தானென்று துணிந்து அரசன் ஆணை கொண்டு அவன் தன்னுடன் வரும்படி செய்து இறந்த மனைவியைத் தன் முதுகில் இட்டுக் குழந்தையை இடுக்கி மதுரை நோக்கி வழி நடந்து வந்து பாண்டியன் அரண்மனை வாயிலில் வேடனை விட்டு, மனைவியின் சவத்தை இட்டு, "நீதி தவறாத மன்னவ! இது முறையோ?" என்று கதறினான். வாயில் காப்போர் நிகழ்ந்தன யாவும் பாண்டியற்குத் தெரிவித்தார்கள். பாண்டியன் உடனே தன் அரியணையினின்றும் போந்து அந்தணன் நிலை கண்டு வருந்தி விசாரித்தான். அந்தணன் நிகழ்ந்தன கூறி "அவ் வேடனே கொன்றான்" என்றான். அதன்பின் அரசன் வேடனது வாய்ப் பிறப்பைக் கேட்டான். அவன் "தான் கொன்றதுமில்லை, கொன்றாரைக் கண்டதுமில்லை" என்றான். மேல் தான் இட்ட கட்டளைப்படி அவ் வேடனைச் சிறையிலிட்டுத் தண்டலாளர்கள் பலவாறு கடும் தண்டனை செய்தும் அவன் ஒரு சொல்லாகச் சொன்னமையானும், கொன்ற குறிப்பு முகத்தில் தோன்றாமையானும், ஒன்றும் தோன்றாது பாண்டியன் சுந்தரேசப் பெருமான் திருமுன் புகுந்து, "மன்றாடு மணியே! ஒன்றாலும் என் ஐயம் தீர்தற்கு இடனில்லை. நீரே என் தாழ்வு கெட நிகழ்ந்தவற்றைத் தெரிவிக்கவேண்டும்" என்று பிரார்த்தித்தான். உடனே, "வணிக வீதியில் ஒரு வீட்டில் மணம் நடக்கிறது. அந்தணனோடு நீ அங்கு வருவாய். உனது ஐயம் தெளியும்" என்று ஆகாயவாணி கூறக்கேட்டு, அவ்வாறே அன்று இரவு அந்தணனோடு அவ் வீட்டில் ஒரு பக்கம் மறைந்து இருந்தான். அன்று அம் மணமகன் ஆயுள் முடிய, யமதூதர்கள் அவனுடைய உயிரைக் கவர வந்தார்கள். பாண்டியனும் அந்தணனும் கேட்கும்படி, வந்த தூதர்களில் ஒருவன், "யாம் எவ்வாறு இம் மணமகன் உயிரைக் கொள்வது? அவன் உடம்பில் பிணி ஏதும் இல்லையே? காரணமின்றி உயிர் கொள்ளப்படாதே" என்றான். அதற்கு மற்றவன், "அன்று ஆலமரத்தில் சிக்குண்டு இருந்த அம்பைக் காற்றால் விழும்படி செய்து எவ்வாறு பார்ப்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ, அவ்வாறு ஓர் உபாயத்தால் இவன் உயிரையும் கவரவேண்டும். ஒன்று செய்க. வாத்திய முழக்கொலியால் அவ் ஈன்றணிமையுடைய இப்பசுவை வெருட்டித் தாம்பு அறுத்துவிட்டு இவன் உயிரைக் கவர்க" என்றான். பாண்டியன் அந்தணனை நோக்கி, "கேட்டீரோ, மனம் தெளிந்ததோ" என்றான். அதற்கு அந்தணன், "நிற்க இம் மணமகன் இவ்வாறு இறப்பானேல், என் மனைவி இறந்தது அவ்வாறெனக் கொள்வன்" என்றான். மணவினை தொடங்கினார்கள். பல வாத்தியங்களும் முழங்கின. அம்முழக்கொலியால் வெருண்டு கட்டிய தாம்பு அறுந்து போக அப் பசுவானது ஓடிப்போய் மணமகனை முட்டியது. அவன் அக்கணமே உயிர் துறந்தான். ஐயம் நீங்கி யாவர்க்கும் இது கூறி மகிழ்ந்து, அந்தணனுக்கு மறுமணம் முடிக்கப் பொருளுதவி, விடை தந்து, சிறையிலிருந்த வேடனுக்கு இடப்பட்ட விலங்கைக் கழற்றுவித்து, "தெளியாது யாம் கடும் தண்டம் செய்தோம். பொறுத்துக் கொள்க" என்று இரந்துவேண்டி அவனுக்கு வேண்டியன கொடுத்து விட்டான் பாண்டியன். இது திருவிளையாடல் புராணத்து உள்ளது.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...
"நெறிவார் சடையாரைப் போல், நீள்திலத்தோர் செய்கை
அறிவார் கழிறிற்று அறிவார் --- அறிவார்ஆர்
எல்லார்க்கு எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்"
இதன் விளக்கம் ---
மலைநாட்டிலே உள்ள மகோதை என்னும் பெயரை உடைய கொடுங்கோளூரிலே, சேரர் குடியிலே பெருமாக்கோதையார் என்பவர் அவதரித்தார். இளம் வயதிலேயே அவர் வைராக்கியம் உடையவராய்ச் சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டும் என்னும் கருத்தினராய் விளங்கினார். திருவஞ்சைக்களம் என்னும் திருத்தலத்தை அடைந்தார். பரமசிவனே சுவதந்திரர். நாம் பரதந்திரர் என்று உணர்ந்தார். சிவாதீனமாய் நின்றார். நாள்தோறும் நியமமுடன் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார். அப்போது செங்கோல் பொறையன் என்னும் சேர அரசன் தபோவனத்தை அடைந்தான். மன்னன் ஒருவன் இல்லாமல் நாடு இருத்தல் கூடாது என்று எண்ணிய, மந்திரிமார்கள் திருத்தொண்டு செய்துகொண்டு இருக்கும் பெருமாக்கோதையாரிடம் வந்து இம்மலை நாட்டை நீரே முடிசூடி அரசியற்றல் வேண்டும் என்று விண்ணப்பித்தனர். பெருமாக்கோதையார் அதனைக் கேட்டு ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை வணங்கி விண்ணப்பித்தார். அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்தி வழுவாது அரசியற்றும் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகள் அனைத்தையும் அறியும் அறிவையும், நாசம் இல்லாத மகா பராக்கிரமத்தையும், பெருங்கொடையையும், அரசருக்கு உரிய படை வாகனம் முதலிய எல்லாவற்றையும் கைவரப் பெற்றார். மீட்டும் இறைவனை வணங்கி விடைபெற்று வெளிப் போந்து, முடிசூடி அரசியற்றினார் சேரமான் பெருமாள். எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் என்றார் திருவள்ளுவ நாயனார்.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
தாய் அறியாத சேய் இருந்தாலும்
தான் அறியாதவர் இல்லை,
ஆய தன்மையினால் அறவழி நிற்கும்
அறிஞரை அறிந்து, அவர்க்குரிய
தேய ஆதிக்கம் தந்து நல் நீதி
செலுத்தி, எங்கணும், மருந்தினுக்கும்
தீயவர் இலர் என்று இசையுற மடக்குந்
திறல்உளோன் பூதல வேந்தே. --- நீதிநூல்.
எல்லாக் குடிகளையும் தானறிந்து, நல் அறிவாளரைக் கொண்டு அரசு நடத்தித், தீயவர் பெயருமில்லாமல் நீக்கிப் புகழுடன் ஆள்வோனே மன்னன்.
No comments:
Post a Comment