ஈகையே அருளைப் பெற வழி
-----
பிறப்புஇறப்பு என்று சொல்லப்படும் இரண்டு எல்லைக் கற்களினிடையே மனிதன் வாழ்கின்றான். வாழும்போது பலபல செயல்களைச் செய்தாலும்,அவனது ஆன்மாவுக்குப் பயன்படுகின்றவை சிலவே. தனது வருங்கால வாழ்வுக்காக, மறுமைக்காக, அவன் ஏதும் செய்வது இல்லை. இந்த வாழ்வே சரி என்றும் சதம் என்றும் எண்ணிக் கொண்டு, இப்போது அனுபவிக்கும் இன்பமே மேலானது என்ற மயக்கத்தில் வாழ்கிறான். செத்த பின்னாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது நல்ல வாழ்வாக அமைய வேண்டும். பிறந்துவிட்டதற்காக மகிழ்தல் கூடாது. இனி பிறக்கக் கூடாது என்பதற்காக சிரமப்பட்டு வாழவேண்டும். மீண்டும் மீண்டும் இறந்து பிறக்காத நிலை பெற வேண்டும்என்ற நினைவு இருந்தால்தான் அதற்கு ஏற்ற முயற்சியை மனிதன் செய்வான். இறைவன் திருவருள் கிடைத்தால்தான் அதற்கான அறிவு விளங்கும். அதற்கான முயற்சியில் தலைப்படுவான்.
அப்படித் தலைப்படும்போது,பிறரிடத்தில் அன்பு வைப்பதும், பிறர் துன்பம் காணச் சகியாது தம்மிடத்து உள்ள பொருளைக் கொடுத்து உதவும் நிலையும் உண்டாகும். பொருளை வைத்திருந்தாலும், கொடுப்பதற்குரிய ஏழைகள் அருகில் இருந்தாலும், எல்லோருக்குமே கொடுத்து உதவவேண்டும் என்னும் எண்ணம் உண்டாவதில்லை. கொடுக்கவேண்டும் என்ற மனம் இருந்தால் கொடுத்துவிடத் தோன்றும். அந்த மனம் இறைவன் திருவருளால் வர வேண்டும்.
பிறர் அடைகின்ற/அடைந்துள்ள நன்மைகளைப் பார்த்து, அத்தகைய நன்மை எனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள் உண்டு. உலகில் பிறந்த எல்லோரும் செத்துப் போகிறார்கள். பிறகு பிறக்கிறார்கள். செத்துச் செத்துப் பிறக்கின்றார்கள். பிறப்பதற்கும் சாவதற்கும் இடையில் உள்ள வாழ்வுக் காலத்தில், புண்ணியத்தை ஈட்டிக் கொள்ள வாய்ப்பு இருந்தும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் சாகிறார்கள். சாவதும் பிறப்பதுமாகிய செயல்கள் நம்மால் தவிர்க்க முடியாதவை. ஆனால், புண்ணியச் செயல் நாம் விரும்பிச் செய்வது.
எல்லோரும் பிறப்பதும் சாவதும் ஒரே விதமாக இருந்தாலும், இன்ப துன்பங்களை அனுபவிப்பதில் வேறுபாடுகள் உண்டு. பணத்தைப் படைத்தவர்கள் எல்லோரும் இன்பமாக வாழ்கின்றார்கள் என்று எண்ணுகின்றோம். ஆனால், அவர்கள் எல்லோரும் இன்பம் அடைகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. இன்பமாக வாழ்வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும், அதற்கேற்ற பணம் இருந்தாலும், மன அமைதி இல்லாமல் வாழ்கிறவர்கள் உண்டு. பணத்தைப் பெறுவதற்கு இறைவன் திருவருள் எப்படி அவசியமோ அப்படியே அதனை அனுபவிப்பதற்கும் இறைவன் திருவருள் அவர்களுக்கு வேண்டும்.
பணத்தை வைத்திருக்கிறவர்கள் எல்லோரும் பிறருக்குக் கொடுக்க முடியாது. தாமும் உண்டு, உடுத்து அனுபவிக்கமுடியாது. பொருளைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவர்களது வினைப்பயன் அப்படி. அவர்கள் பொருளை வைத்து இருந்தாலும், இழந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
"உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான்,
துன்னருங் கேளிர் துயர்களையான், - கொன்னே
வழங்கான், பொருள் காத்து இருப்பானேல், அஆ!
இழந்தான் என்று எண்ணப் படும்". --- நாலடியார்.
இதன் பொருள் ---
தானும் வயிறார நன்றாகச் சாப்பிடமாட்டான்.தன்னிடத்தே அழகானது நிலைபெற்று இருக்குமாறு தன்னை ஆடை அணிகளால் புனைந்தும் இன்புற மாட்டான். வளரும்படியான புகழைத் தரும் செய்கைகளையும் செய்ய மாட்டான். சேர்வதற்கு அருமையான உறவினர்களுடைய துயரங்களையும் போக்கமாட்டான். தன்னை யாசித்து வந்தவர்களுக்கு வழங்கவும் மாட்டான். இப்படி, ஒருவன் எதையும் செய்யாமல் வீணாகப் பொருளையே பெரிது என்று, பூதம் காப்பதுபோலக் காத்துக் கொண்டிருப்பானானால், ஐயோ! அந்தப் பொருளை அவன் இழந்துவிட்டான் என்றே சான்றோரால் எண்ணப்படுவான்.
அவரவர்களுடைய புண்ணிய பாவ வினைக்கு ஈடாக இந்த உலகத்தில் பிறந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இந்த உலகத்தில் பிறந்த பிறகு நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க, நமக்குத் துன்பம் உண்டாகிறதே, எத்தனையோ தீங்குகளைப் புரிந்து வருகிறவனுக்கு இன்பம் கிடைக்கிறதே என்ற எண்ணம் உண்டாகலாம். இப்போது உண்டாகிற விளைவுக்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டுமென்ற தெளிவு உண்டாக வேண்டும். முற்பிறவியில் நன்னெறியில் ஒழுகாமல், இல்லை என்று வந்தவர்க்கு இட்டு உதவி, புண்ணியத்தைத் தேடிக் கொள்ளாமையினால் இந்த நிலை வந்தது என்ற உணர்ச்சி உண்டாகும்.
"இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்;
பலர் நோலாதவர்'"
என்பது நாயனார் அருளிய திருக்குறள். உலகத்தில் பலர் வறுமைப் பட்டு இருக்கிறார்கள். சிலர் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், முற்பிறவியில் இந்த உடம்புக்கு வேண்டிய சுகங்களை மட்டும் எண்ணி வாழாமல் நல்ல காரியங்களைச் செய்யவேண்டும் என்னும் விரதம் மேற்கொண்டவர்கள் சிலர். அப்படி இல்லாதவர்களே பலர்.
இதற்கு மற்றோர் உதாரணத்தைக் காட்டுகின்றார் திருவள்ளுவ நாயனார். பல்லக்கின் மேல் ஒருவன் ஏறிச் செல்கிறான். அதனைப் பலர் சுமக்கின்றார்கள். இன்பத்தை அனுபவிக்கிறவன் ஒருவன்; துன்பத்தை அனுபவிக்கிறவர்கள் பலர். பிறரால் சுமக்கப்பட்டுப் பணத்தை வைத்து வாழ்பவன் ஒருவன். பிறரைச் சுமந்து சிறிதளவு கூலியைப் பெறுகிறவர்கள் பலர். இப்படித்தான் சுகதுக்கம் அமைந்து இருக்கின்றது. சுகப்படுகிறவர்கள் சிலர். துன்பப்படுகிறவர்கள் பலர்.
"அறத்து ஆறு இது என வேண்டா,சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை"
என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார்.
இரண்டு வகையினருக்கும் தோற்றத்தில் வேறுபாடு இல்லை; பிறப்பிலும் சாவிலும் கூட வேறுபாடு இல்லை. ஆனால் அவர்கள் அனுபவத்தில்வேறுபாடு உண்டாவதற்குக் காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த அறம் பாவம்தான். பல்லக்கின் மேல் உள்ளவன் முற்பிறவியில் அறம் செய்திருக்கிறான். சுமக்கிறவர்கள் முற்பிறவியில் அறம் செய்யவில்லை.
முந்திய பிறவியில் அறம் செய்தவர்கள் இந்தப் பிறவியில் பொருள் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் திருவருளால் மீண்டும் அறம் செய்ய வேண்டுமென்ற நினைவு உண்டானால், இனி வரப்போகும் பிறவிகளுக்கும் அவர்கள் நன்மை செய்து கொண்டவர்கள் ஆவார்கள். பிறவிக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இடைக்காலத்தில் நாம் பார்க்கிற செல்வம் மறுபடியும் போய்விடும் என்ற உணர்வோடு, இது நமக்காக வந்தது அல்ல, இரப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக இறைவன் தந்தது என்ற நினைவு மெய்யறிவாளருக்குத் தோன்றும். அவர்கள், தம்மிடத்து உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுத்து இறைவனது அருளைச் சம்பாதித்துக் கொள்வார்கள். அல்லாதவர்கள், சாதாரண நரகம் அல்ல,கடுமையான நரகத்தைத் தேடிக் கொள்வார்கள்.
"இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்"
என்று அருளிச் செய்தார் அப்பர் பெருமான்.
மனிதர்களிடம் பொருளை வைத்து இருக்கின்ற இறைவன். அவர்களுக்குத் தரவேண்டிய அருளைத் தன்னிடம் வைத்து இருக்கின்றான். நம்மிடம் உள்ள பொருளைக் கொடுத்து, இறைவனிடம் உள்ளஅருளைப் பெறவேண்டும்.
இப்போதும் பணம் படைத்தவர்கள் பிறருக்குக் கொடுப்பது உண்டு. தம்முடைய பிள்ளைக்குக் கொடுக்கிறார்கள். மாப்பிள்ளைக்குக் கொடுக்கிறார்கள். உறவினர்களுக்குக் கொடுக்கிறார்கள். திருமணம் அவர்கள் வீட்டில் நடந்தால் ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள். தம் பொருளை அழித்துப் பெரிய விருந்து செய்கிறார்கள். வேண்டியவர்களுக்குப் பணம் கடன் கொடுக்கிறார்கள்;
இப்படிக் கொடுப்பதும் கொடைதானே என்றால், அது கொடையாகாது. தம்மோடு சார்ந்தவர்கள் என்ற அபிமானத்தாலும், தமக்குப் பெயர் வரவேண்டும், தம்மைப் பிறர் பாராட்டவேண்டும் என்ற ஆசையினாலும் செய்வது அது. உண்மையான ஈகை, பயன் ஏதும் கருதாது, இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஆகும்.
"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து"
என்றார் திருவள்ளுவ நாயனார்.
ஒரு பொருளால் குறை உடைய ஏழைகளுக்கு அவர்களுக்கு வேண்டிய பொருளைத் தம்மிடத்து வைத்து உள்ளவர்கள் கொடுப்பதுதான் ஈகையாகும். அப்படி இல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுத்தால், அதற்குக் கைம்மாறாக ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும். தம்முடைய மாப்பிள்ளைக்குப் பணம் கொடுப்பதற்கு, அவன் தம் பெண்ணை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற எதிர்பார்ப்பு காரணம். தம்முடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு விருந்து வைப்பதற்கு, அவர் திரும்பத் தம்மைக் கூப்பிட்டு விருந்து வைப்பார் எதிர்பார்ப்பு காரணம். ஒரு பொருளைக் கொடுத்து மீட்டும் அளந்து வாங்கிக் கொள்வது குறியெதிர்ப்பு ஆகும்.
யாருக்கு உண்மையாகப் பொருள் தேவையோ, யாருக்குக் குறை இருக்கிறதோ, அவர்களுக்குக் கொடுப்பதுதான் கொடை, அறம். வள்ளல்கள் வறியவர்கள் தம்மை நோக்கி வராவிட்டாலும் தாம் அவர்களைத் தேடிச் சென்று கொடுப்பார்கள். தாம் பொருளை வைத்திருப்பதற்குப் பயன் இரவலர்களுக்குக் கொடுப்பதே என்று எண்ணுவார்கள். "செல்வத்துப் பயனே ஈதல்" என்கின்றது புறநானூறு. ஒவ்வொரு நாளும் நன்றாகச் கழிந்தது என்ற நிறைவு வரவேண்டுமானால், அன்று நல்ல அறச் செயல் செய்தோம் என்ற நினைவு இருக்க வேண்டும். பொருளை ஈட்டுவது பெரிது அல்ல. அதனை அடைவதும் பெரிது அல்ல. ஈட்டிய பொருளைப் பிறருக்கும் கொடுத்து அதனால் வருகிற இன்பத்தைப் பெறுவதே அதனால் உண்டாகும் சிறந்த பயன். "ஈத்து உவக்கும் இன்பம்" என்றார் திருவள்ளுவ நாயனார். வறுமையினால் தளர்ந்தவர்களுக்கு, உடல் வலிமை இல்லாமல் தளர்ந்தவர்களுக்கு, அன்னமும் ஆடையும் இல்லாமல் தளர்ந்தவர்களுக்கு, இப்படியே எந்த எந்தப் பொருள் இல்லாமல் யார் யார் தளர்ந்து இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அந்த அந்தப் பொருளைக் கொடுக்க வேண்டுமென்று அருணகிரிநாதப் பெருமான் முருகப் பெருமானிடம் விண்ணப்பித்துக் கொள்கின்றார்.
"சாகைக்கும்,மீண்டு பிறக்கைக்கும் அன்றி,தளர்ந்தவர்க்கு ஒன்று
ஈகைக்கு எனை விதித்தாய் இலையே! இலங்காபுரிக்குப்
போகைக்கு நீ வழி காட்டுஎன்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச்சிலை வளைத்தோன் மருகா! மயில்வாகனனே!
என்பதே அந்த விண்ணப்பம்.
இதன் பொருள் ---
இலங்கை மாநகரத்திற்குச் செல்வதற்கு நீ வழிகாட்டக் கடவாய் என்று சென்று, கடலானது நெருப்புப் பற்றிக்கொள்ளுமாறு செய்து, வெற்றி பொருந்திய கோதண்டம் என்னும் வில்லை வளைத்தவராகிய இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகரே! மயிலை வாகனமாக உடையவரே! இறப்பதற்கும் மீண்டும் திரும்பத் திரும்பப் பிறப்பதற்கும் அல்லாமல், வறுமைப் பிணியால் தளர்வுற்றவர்களுக்கு,ஒரு பொருளைக் கொடுத்து உதவிசெய்வதற்கு அடியேனை நீ விதிக்கவில்லையே!
தளர்ந்தவர்களுக்குக் கொடுக்கும்படியாக எனக்குப் பொருள் தரவில்லையேஎன்பது விண்ணப்பம் அல்ல. தளர்ந்தவர்க்குப் பொருளைத் தரும்படியாக என்னை விதிக்கவில்லையே என்பதுதான் விண்ணப்பம்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பொருள் முயற்சி உண்டு. பொருள் உண்டு. பொருள் அளவு ஒரு பொருட்டு அல்ல. உள்ள பொருளைக் கொண்டு பிறருக்கு உதவி செய்யலாம். ஆகவே, அறம் செய்வதற்குப் பொருள்தான் முக்கியம் என்பது அல்ல. அறம் செய்யவேண்டும் என்னும் மனம் இருக்கவேண்டும். என்னிடம் பொருள் இருந்தால் கொடுப்பேன் என்று சிலர் சொல்வது உண்டு. அது போலி வாதம். இறைவன் திருவருளை உணர்ந்து கொள்ளாமல் பிறருக்குக் கொடுக்காமல் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் செல்வத்தைத் திருட்டிலே கொடுத்து, திகைத்து, இளைத்து,வாடி, கிலேசித்து, வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவர்கள் என்று அடையாளப் படுத்தினார் அருணகிரிநாதப் பெருமான். தம்மிடம் பிறர் வந்து இரக்கிற காலத்தில் உதவி செய்வதற்குப் பொருள் இருந்தாலும் கொடுப்பதற்கு அஞ்சி மறைத்துக் கொள்கிறார்களே, அவர்களுக்குக் கடுமையான நரகத்தை அல்ல, நரகங்களை இறைவன் வைத்திருக்கிறானாம்.
நாமும் மக்கள். ஆகையால், பிறருக்கு எதனால் தளர்ச்சி உண்டாகும் என்பது நன்றாகத் தெரியும். பசியினால் மனிதன் துடிக்கும் போது அவன் தளர்ச்சி நமக்கு நன்றாகத் தெரிகிறது. தன்னுடைய தொழில் முயற்சியில் பொருள் இல்லாமல் திண்டாடும் போது அந்தத் திண்டாட்டத்திற்குப் பொருள் இல்லாத தளர்ச்சியே காரணம் என்பது நமக்குத் தெரியும். தளர்ச்சியைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் பொருளைக் கொடுக்கத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தளர்ச்சி ஒருவருக்கு உண்டு என்பதை நன்றாகத் தெரிந்து இருந்தும்,வேண்டிய உதவியைச் செய்யாமல் இருக்கும் இயல்பு மிகக் கொடிது. உலகத்தில் எங்கே பார்த்தாலும் தளர்ச்சியுள்ளவர்களையே காண்கிறோம். உடல் தளர்ச்சி, உள்ளத் தளர்ச்சி இவற்றினால் வாடுகிற மக்கள் எங்கும் இருக்கின்றார்கள். தளர்ச்சி உள்ளவர்கள் யாரும் இல்லை என்று சொல்ல இயலாது. என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று சொல்வதும் முறையல்ல. தளர்ச்சி உள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கு எனக்கு மனம் வரவில்லையே என்றால், அத்தகைய எண்ணத்தை இறைவன் திருவருள் உண்டாக்கவில்லை என்று சொல்வதுதான்உ உண்மை. எனவே, "தளர்ந்தவர்க்கு ஒன்ற ஈகைக்கு என்று என்னை விதித்தாய் இல்லையே" என்று அருணகிரிநாதர் முறையிடுகின்றார்.
இப்படிச் சொன்ன அருணகிரியார் அடுத்த இரண்டடியில் இராமபிரான் புரிந்த செயல் ஒன்றை நினைவு ஊட்டுகிறார். இலங்காபுரிக்குப் போவதற்கு நீ வழிகாட்டு என்று போய்க் கடல் தீக்கொளுந்த வாகைச் சிலை வளைத்தவன் இராமபிரான். இராமச்சந்திர மூர்த்தி நாட்டைத் துறந்து காட்டுக்கு வந்தார். இராவணன் அபகரித்துச் சென்ற சீதாபிராட்டியைத் தேடிக் கொண்டு கானகத்தில் அலைந்து திரிந்தார். இலங்கையில் இருப்பது தெரிந்து அதை நாடிச் சென்றார். அப் போது விபீடணன் வந்து அடைக்கலம் புகுந்தான். இராமபிரானுடைய வருகையை எதிர்பார்த்து ஊண் உறக்க மின்றிச் சீதாபிராட்டி இலங்கையில் தவம் கிடக்கிறாள். கடலுக்கு அப்புறம் இருக்கிறது இலங்கை. இப்புறத்தில் இராமபிரான் இருக்கிறார். கடலைக் கடந்து இலங்கைக்குப் போகவேண்டும் இதற்கு என்ன வழி என்று இராமபிரான் எண்ணுகிறார். விபீடணனைப் பார்த்து அதற்கொரு உபாயத்தை வினவுகின்றார். விபீடணன் இலங்கைக்குச் செல்வதற்கு உரிய உபாயத்தைச் சொல்லுகின்றான்.
அவன் சொன்ன உபாயத்தின்படி, கருணைக் கடலாகிய இராமபிரான் உப்புக் கடலின் வாசலில் வருணனைத் தெய்வமாக எண்ணி விதிமுறைப்படி வணங்கித் தோத்திரம் செய்து கொண்டு கிடந்தார். ஏழு நாட்கள் திருப்புல்லணையில் தவம் கிடந்தார். இப்படிக் கிடக்க வேண்டிய நிலை தமக்கு வந்ததே என்ற நினைவு அவருக்கு அப்போது உண்டாயிற்று. எவரிடத்திலும் ஒன்றையும் வேண்டாத குறையற்ற பெரியவராக இருந்தாலும், பிறர் கேட்பதற்கு முன்பே எல்லாம் கொடுக்கும் திறன் உடையவராக எல்லாப் பொருளும் நிரம்பியவராக இருந்தாலும், அற்ப குணம் உடையவரிடத்தில் காலத்தினாலும், இடத்தினாலும் இளைத்து ஏதேனும் உதவியை நாடிச் சென்றால், அவர்கள் தம் அற்ப குணத்தையே காட்டுவார்கள். 'நாம் இந்த வருணனின் உதவியை நாடி வந்தோம். நாம் இப்போது இளைப்புற்று இருக்கிறோம் என்று அவன் அலட்சியமாக இருக்கிறான். நமக்கு உதவி செய்யாமல் ஒளிந்து கொண்டிருக்கிறான்' என்று நினைத்தார் இராமபிரான். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. சத்திரிய குலத்தில் பிறந்தவர் அவர். தளர்ந்தவர்களுக்கு உதவி செய்யாமல் ஒளிந்து கொள்பவர்களுக்குக் கடும் நரகம் விதிக்கும் இராமபிரான். வில்லினை எடுத்து அம்பினை எய்தார். கடல் வற்றிப் போனது. வருணனது உடம்பு தீய்ந்து போனது. அழுத கண்ணீரோடு வருணன், "நான் உனக்கு அபயம்" என்று இராமனின் திருவடிகளில் விழுந்தான். முன்னாலே தளர்ந்து வந்து உதவி கேட்ட பெருமானுக்குக் கரவாமல் அவன் உதவியிருந்தால் இந்தத் தண்டனை கிடைத்திருக்குமா? இரப்பவர்க்கு ஈயாமல் இருந்தான். அதனால் தண்டனை கிடைத்தது. இரப்பவர்களுக்கு ஈயாமல் கரப்பவர்களுக்கு இப்படித்தான் தண்டனை கிடைக்கும்.
இலங்கைக்குப் போகவேண்டும் என்ற கருத்தினால், "நீ வழி காட்டுவாய்" என்று இராமபிரான் வருணனிடம் கேட்டுக் கொண்டார். வழியைத் தான் கேட்டார். பொருளைக் கேட்கவில்லை. வழி தெரியாமல் சுற்றி அலைந்து தளர்ந்திருக்கிற ஒருவன், "இன்ன ஊருக்குப்போக வழி என்ன?" என்று கேட்டால், "இதோ வழி" என்று சொல்பவனே மனிதன். அதுபோல், "இலங்கைக்குப் போக ஒரு வழி காட்டு" என்று இராமபிரான் கேட்டார். எப்படிப் போகவேண்டுமென்று சொல்ல வருணனுக்குத் தெரியும். ஆனால் ஒரு சொல் கூடச் சொல்லாமல், தளர்ந்து வந்து யாசித்த பெருமானுக்கு வழி இதுதான் என்று காட்டாமல், அவன் மறைந்திருந்தான். அதன் பலன், கடல் தீப்பற்றிக் கொள்ள வெற்றிச் சிலை வளைத்து அம்பைப் பொழிந்தார் இராமபிரான். ஒல்லும் வகையால் அறவினையைச் செய்து வரல் வேண்டும். அத்தயை பெருமானுடைய திருமருகன் முருகப் பெருமான்.
அந்த கருணைக் கடலாகிய முருகப் பெருமானை விளித்து, "தளர்ந்தவருக்கு ஒன்று உதவுகின்றபடி என்னை நீ விதிக்கவில்லையே. சாவதற்கும் பிறப்பதற்கும் என்று தானே விதித்து இருக்கின்றாய்" என்று குறை இரந்து வேண்டிக் கொள்ளுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
மக்களாகிய நம் எல்லோருக்கும் இந்தக் குறையிரத்தல் பொருந்தும். இருக்கின்ற பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவேவேண்டும் என்னும் எண்ணத்தை இறைவன் நமக்கு அருளவேண்டும். அது மட்டும் இருந்துவிட்டால், பொருள் சுரந்துகொண்டே இருக்கும். இறைக்கின்ற கிணறு தானே சுரக்கும்.