வாழாத நெஞ்சம்

 


வாழாத நெஞ்சம்

-----

 

     வாழ்க்கைக்குக் குறிக்கோள் உண்டு. இந்த வாழ்க்கை ஏதோ குருட்டாம் போக்காக அமைந்த ஒன்றல்ல. திட்டமிட்ட ஓர் அமைப்பே ஆகும். வாழ்வது மட்டும் போதுமாமுறைப்படி வாழவேண்டும். வாழ்க்கைக்கு ஒரு நெறியும் - முறையும் வேண்டும் என்று உணர்ந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு. அதனால் தான், தமிழில் எழுத்து சொல் இலக்கணத்தோடு பொருள் இலக்கணமும் எழுந்தது. திருவள்ளுவ நாயனாரும் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்"என்று கூறி அருளினார் என்பதும் நினைக்கத் தக்கது. குறிக்கோள் என்பது இலட்சியம் என்றும் சொல்லப்படும்.

 

     வாழ்க்கையில் ஒருவன் அடைய விரும்புவது "குறி" அல்லது "இலக்கு" ஆகும். அந்தக் குறி அல்லது இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி "குறிக்கோள்" அல்லது "இலட்சியம்" ஆகும். குறியைக் கொள்வது குறிக்கோள் எனப்பட்டது. குறிக்கோள் இல்லாமல் வாழ்வது யாராலும் முடியாத ஒன்று. 

 

     இலட்சியம் இல்லாத மனிதன், திசையறி கருவி இல்லாத கப்பலை ஒப்பான். இலட்சியம் உயர்ந்ததாக இருந்தால் உயரலாம். உயர்கதியை அடையலாம். தாழ்வாக இருந்தால் தாழ்ந்து போகலாம். அதோகதிக்குப் போகலாம். மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாதவன் தரையில்தான் புரள வேண்டி இருக்கும். தாழ்ந்த இலட்சியத்தில் வெற்றி பெறுவதைவிட, உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவது மேலானதே ஆகும். 

 

    வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை, இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே வாழ்வாகும். மற்றதெல்லாம் பிழைப்பு கருதியதே.  

 

     சிறந்த குறிக்கோள் இல்லாத வாழ்க்கையானது கெட்டுப் போவதற்கே வழிவகுக்கும் என்பது குறித்து,

 

"பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதைமார் தம்

மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்தநாளும், குறிக்கோள் இலாதுகெட்டேன்,

சேல்உலாம் பழனவேலித் திருக்கொண்டீச்சரத்து உ(ள்)ளானே".

 

என்று இரங்கிப் பாடினார் அப்பர் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     சேல் மீன்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த திருக் கொண்டீச்சரம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமானே! நான் சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும்குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும்உடல் மெலிவோடு கிழப் பருவம் வந்து, கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றியே வாழ்ந்து கெட்டுப் போனேன்.

 

     இதனால், குறிக்கோள் இல்லாது, புலன் வழி மனத்தைச் செலுத்தி வாழ்ந்து கழிந்த காலத்தின் இழிவும்உயர்ந்த குறிக்கோளின் இன்றியமையாமையும் சொல்லப்பட்டது. 

 

     உயர்ந்த குறிக்கோள் என்பது ஒவ்வொருவருக்கும் இறைவன் உள்ளிருந்து உணர்த்துவது ஆகும். அது, இறவாத இன்ப அன்பை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு, எல்லா உயிர்களிடத்தும் அன்பினைச் செலுத்தி, வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்நாளின் முடிவில் இறைவன் திருவடியில் சேர்ந்து அந்தமில்லாத ஆனந்த வாழ்வில் வாழ்வதே ஆகும். அதுவே, இறைவன் நமக்கு உணர்த்துகின்ற குறி. எனவே, இறைவன் திருவடி நினைவை உள்ளத்தில் இருத்துங்கள், புலன்களின் வழி ஓடுகின்றதை நிறுத்துங்கள் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.

 

"புகவே வேண்டா புலன்களில் நீர்,

     புயங்கப் பெருமான் பூங்கழல்கள்

மிகவே நினைமின், மிக்க எல்லாம்

     வேண்டா, போக விடுமின்கள்,

நகவே ஞாலத்து உள் புகுந்து

     நாயே அனைய நமை ஆண்ட

தகவே உடையான் தனைச்சாரத்

     தளராது இருப்பார் தாம் தாமே".        --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     நகவே--- நாட்டில் உள்ளோர்நகை செய்யஞாலத்துள் புகுந்து --- உலகில் எழுந்தருளிநாயே அனைய --- நாயைப் போன்றநமை ஆண்ட --- நம்மை ஆட்கொண்டதகவு உடையான்தனை --- பெருமையைடைய இறைவனைசார --சென்று அடைந்தால்தாம் தாம் ---அவரவர்தளராது இருப்பார் ---தமது தளர்ச்சி நீங்கி இருப்பார்கள்(ஆதலின்அடியவர்களே!) நீர்புலன்களில்புகவே வேண்டா--- நீங்கள்ஐம்புல விடயங்களில்உங்கள் மனத்தைச் செலுத்த வேண்டாம்புயங்கப் பெருமான்பூங்கழல்கள் மிகவே நினைமின்--- பாம்பணிந்த பெருமானதுதாமரைப் பூவை ஒத்த திருவடிகளைமிகுதியாக நினையுங்கள்மிக்க எல்லாம்வேண்டா--- எஞ்சியவைஎவையும் நமக்கு வேண்டாபோக விடுமின்கள் --- அவற்றை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டுவிடுங்கள்.

 

       இறைவனை அடைந்தவர் "எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்னும் நிலையில் இளைப்பு நீங்கி அமைதியாக இருபார். எனவே, இறைவனை அடையும் முயற்சியில் தளாரது இருக்கவேண்டும் என்றார். இறைவன் திருவடியை அடைய விரும்புவதே குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என்றார். அதுவே உயர்ந்த குறிக்கோள். புலன்களில் மனத்தைச் செலுத்துவது தாழ்நிலைக்கு இட்டுச் செல்லும் தாழ்ந்த குறிக்கோள்.

 

     எனவே, இறைவன் திருக்குறிப்பையே குறியாகக் கொண்டு, அந்த வழியில் வாழ்வதற்கு மனத்தைப் பொருத்தி இருங்கள் என்றும், அத்தகைய உயர்ந்த வழியில் நம்மைச் செலுத்தத் துணை புரிவது இறைவனது பழைய அடியார்கள் திருக்கூட்டமே ஆகும் என்பதைப் பின்வரும் பாடலால் அறிவுறுத்துகின்றார் மணிவாசகப் பெருமான். "தொண்டு அல்லால் துணையும் இல்லை, ஐயன் ஐயாறனார்க்கு" என்பார் அப்பர் பெருமான். இறைவனுக்குத் தொண்டர்கள் அல்லால் துணை ஏதும் இல்லை. இறைவன் தொண்டர்களைத் துணையாகக் கொண்டு, அவர்கள் வழியாகவே உயிர்களை நல்வழிப் படுத்துகின்றான். எனவே, "தொண்டரொடு கூட்டு" என்றார் அபிராமி பட்டரும். உயர்ந்த குறிக்கோளோடு வாழ்வரைக் கூடினால், உயர்ந்த பலனை அடையலாம். அல்லாதவரோடு கூடினால், உயர்ந்தது அல்லாதது கிடைக்கும்.

 

"தாமே தமக்குச் சுற்றமும்,

     தாமே தமக்கு விதிவகையும்,

யாம்ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்?

     என்ன மாயம்? இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

     அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு

போமாறு அமைமின் பொய்நீக்கிப்

     புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே".  --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     தமக்குச் சுற்றமும் தாமே --- ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே,தமக்கு விதி வகையும் தாமே --- நடைமுறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரேஆதலால்அடியவர்களேநீங்கள்யாம் ஆர் --- நாம் யார்எமது ஆர் --- எம்முடையது என்பது யாதுபாசம் ஆர் --- பாசம் என்பது எதுஎன்ன மாயம் --- இவையெல்லாம் என்ன மயக்கங்கள்என்று உணர்ந்துஇவை போக --- இவை நம்மை விட்டு நீங்ககோமான் --- இறைவனுடையபண்டைத் தொண்டரொடும் --- பழைய அடியாரொடும் சேர்ந்துஅவன்தன் குறிப்பே த--- அவ்விறைவனது திருவுள்ளக் குறிப்பையேகுறிக்கொண்டு --- உறுதியாகப் பற்றிக்கொண்டுபொய் நீக்கி --- பொய் வாழ்வை நீத்துபுயங்கன் --- பாம்பணிந்தவனும்ஆள்வான் --- எம்மை ஆள்வோனுமாகிய பெருமானதுபொன் அடிக்கு --- பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ்,போம் ஆறு அமைமின் --- போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

 

       ஒவ்வொருவருக்கும் வரும் நன்மை தீமைகளுக்குக் காரணம் அவரவர் செய்யும் செய்கையே. அல்லாமல் வேறு இல்லை. எனவே, "'தாமே தமக்குச் சுற்றமும்"என்றும்இப்படித்தான் வாழவேண்டும், இப்படி வாழ்வது கூடாது என்று உறுதி செய்துகொண்டு அவ்வாறு நடப்பவரும் அவரே. எனவே, "தாமே தமக்கு விதி வகையும்"என்றும் கூறினார்.

 

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனு மாமே."

 

என்று இதையே அறிவுறுத்தினார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் என்பதை அறிக.

 

      இறைவன் குறிப்பாவதுஆன்மாக்கள் எல்லாம் வீடுபேறு எய்த வேண்டும் என்பதுஇதனை உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனது அடியார் கூட்டம் திருவடிப் பேற்றினை அடையத் துணை புரியும். எனவே, இறைவன் தன்னை அடியார் திருக்கூட்டத்தில் கூட்டி அருள வேண்டினார் மணிவாசகப் பெருமான்.          

 

"போது சேர்அயன், பொருகடல் கிடந்தோன்,

புரந்தர ஆதிகள் நிற்க, மற்று என்னைக்

கோது மாட்டி, நின் குரைகழல் காட்டிக்

குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய்"

 

இதன் பொருள் ---

 

     போது சேர் அயன் --- தாமரைப்பூவில் உறைகின்ற பிரமன்பொரு கடல் கிடந்தோன் --- அலைகள் மோதுகின்ற பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால்புரந்தராதிகள் --- இந்திரன் முதலிய தேவர்கள்நிற்க --- (தம்மை ஆட்கொள்ள வேண்டி ஏங்கி) இருக்கவும், என்னை --- அடியேனைகோதாட்டி --- சீராட்டி ஆட்கொண்டவனே நின் குரை கழல் காட்டி --- உன்னுடைய ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியைக் காட்டிகுறிக்கொள்க என்று --- அத்திருவடியையே குறியாகக் கொள்வாய் என்றுநின் தொண்டரின் கூட்டாய் --- உன் தொண்டரோடு சேர்ப்பாயாக.

 

     வாழ்வாங்கு வாழ்வது என்றால், முறையாக உண்டு, உடுத்து வாழ்வது ஆகாது. வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை அடைகிற வழியில் பயனுடைய வாழ்க்கைய்யை வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல் ஆகும்.

 

     வேண்டுதல் என்று ஒன்று இருக்குமானால், அது பிறவாமையை வேண்டுவதே ஆகும் என்னும் பொருளில், "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" என்றார் திருவள்ளுவ நாயனார். பிறப்பை நீக்கப் பிறப்பையே சாதனமாகக் கொள்வது நமது நெறி. செத்துப் பிறக்கும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இத்தகைய உயர்ந்த குறிக்கோளோடு கூடிய வாழ்க்கையே வாழ்க்கை ஆகும். இங்ஙனம் வாழ்வதே உண்மையிலேயே வாழ்ந்ததாகக் கருதப்பெறுகிறது.

 

     இத்தகு வாழ்க்கையைப் பெறுவது எங்ஙனம்உயிர்களின் வளர்ச்சி சிந்தனையினாலும்கூட்டுறவினாலும் ஆவதுவினையில் நீங்கி விளங்கிய அறிவினன் ஆக உள்ள இறைவனின் தொடர்பும் சிந்தனையுமே உயிர்களை வாழ்வாங்கு வாழ்கிற வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். இறைவனைச் சிந்தித்துப் பேசி வாழ்வது பயனுடைய வாழ்க்கைவினைத் தொடர்பை நீக்கியருளும் சிறப்பான வாழ்க்கை.

 

      இங்ஙனம் வாழ முடியாத உலகாயகதத்தின் வழி உருண்டு ஓடி வாழ்தல் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்ளும் வாழ்க்கையாகும். யானையின் தலையில் யாரும் மண்ணை அள்ளிப் போடவேண்டாம். அதுவே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும். அது போல இறைவனை வாழ்த்தி வாழமுடியாதவர் தமக்குத் தாமே கேடு சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் வாழ்வதாக நினைப்பு. ஆனால்,அவர்கள் வாழ்வதில்லை. ஆண்டுகள் பல ஓடி இருக்கலாம். போகங்கள் பலதவற்றை அனுபவித்து இருக்கலாம். எனினும் வாழ்க்கையின் குறிக்கோளை - பயனை அடையாத வாழ்க்கையே அது. "குறிக்கோள் இலாது கெட்டேன்"என்று அப்பரடிகள் அலறுகின்றார். இதனையே,

 

"வாழ்கின்றாய் வாழாதநெஞ்சமே! வல்வினைப்பட்டு

ஆழ்கின்றாய்! ஆழாமல்காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடு, உனக்குச்சொல்கின்றேன் பல்காலும்,

வீழ்கின்றாய் நீ அவலக்கடலாய வெள்ளத்தே."

 

என்று திருவாசகப் பாடல் விளக்குகிறது. 

 

     வாழு! வாழ ஆசைப்படுவாழ்வாங்கு வாழ முயற்சி செய். வாழ்க்கையின் பயனை அடையும் வழியில் வாழ்வாயாக. வாழ்க்கையின் பயனாக விளங்கும் திருவருளில்மாறிலாத இன்பத்தை வாழ்த்தி வாழ்வாயாக என்று அறிவுறுத்துகின்றார் மணிவாசகப் பெருமான்.

 

இப் பாடலின் பொருள் ---

 

     வாழாத நெஞ்சமே --- உலகியல் வாழ்க்கையில் தலைப்பட்டு இருந்து, பேரின்ப வாழ்க்கையில் தலைப்படாத எனது மனமே! வாழ்கின்றாய் --- நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றாய், வல்வினைப்படு ஆழ்கின்றாய் --- (ஆனால்) வலிய தீவினைகளின் வசப்பட்டு அதனுள்ளே அழுந்திக் கிடக்கின்றாய், ஆழாமல் காப்பானை ஏத்தாது --- அங்ஙனம் அழுந்தாமல் காக்கின்ற பெருமானைப் புகழ்ந்து வழிபடாமல், உனக்குக் கேடு சூழ்கின்றாய் --- உனக்கு நீயே கேட்டினைத் தேடிக் கொள்ளுகின்றாய். பல்காலும் சொல்கின்றேன் --- இந்த நிலையை (உன்னை நல்வழிப்படுத்தக் கருதி) உனக்குப் பலமுறையும் இடித்துக் கூறி வருகின்றேன், அவ்வாறு பலமுறையும் கூறியும் நீ சற்றும் பொருட்படுத்தாது, அவலக் கடலாய வெள்ளத்து வீழ்கின்றாய் --- துன்பம் ஆகிய கடல் பெருக்கில் நீ விழுந்து மூழ்குகின்றாய்.

 

     உயிரானது என்றும் அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையில் தலைப்பட்டு உய்தி பெறுதற்கும், விரைவில் அழிந்து ஒழியக்கூடிய இயல்பினை உடைய சிற்றின்பத்தில் அழுந்திக் கெட்டு ஒழிவதற்கும் நெஞ்சமே கருவியாகும். பேரின்ப வாழ்க்கையில் தலைப்பட்ட நெஞ்சத்தைக் குறித்து, "என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே" என்று திருஞானசம்பந்தப் பெருமானும், "என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே" என்று அப்பர் பெருமானும் கூறியுள்ளனர். சிற்றின்பத்தில் அழுந்திக் கெட்டுப் போகத் தலைப்படுகின்ற நெஞ்சத்தைக் குறித்து, "உழுத சால் வழியே உழுவான் பொருட்டு, இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே" என்று அப்பர் பெருமான் கூறி உள்ளார். நன்னெறியில் வாழ்ந்து உய்தி பெறத் தமது நெஞ்சம் பயன்படாமை குறித்து, "வாழாத நெஞ்சமே" என்றார். நன்மைக்கு உரிய செயல்களைச் செய்யாமை மட்டுமல்ல,தீய வழிகளிலும் வாழ முற்படுகின்ற தமது நெஞ்சத்தைக் குறித்து, நீ இன்னமும் இறவாமல் இருக்கின்றாயே என்பதாக "வாழ்கின்றாய்" என்றார்.  

 

     "வாழாவெட்டி" என்று ஒரு வழக்குச் சொல் உள்ளது. "வெட்டி" என்னும் சொல்லுக்கு, பயனின்மை என்று பொருள். பயனில்லாமல் வாழ்பவரை "வாழாவெட்டி" என்கின்றனர். வாழாவெட்டி என்று சொல்லப்படுகின்ற நபர் உடுத்துவதும் உண்பதும், பிற செயல்களையும் செய்துகொண்டுதான் இருக்கின்றார். அதுவே வாழ்க்கை ஆகாது. வாழவேண்டிய முறையில் வாழாமையால், அவரை "வாழாவெட்டி" என்கின்றோம். பிழைப்புக்காக வாழ்வது "வாழாத நெஞ்சம்". வாழ்வாங்கு வாழ்வதே வாழ்கின்ற நெஞ்சம் ஆகும்.

 

     

 

 

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...