புறம் புறம் திரிந்த செல்வம்

 


புறம் புறம் திரிந்த செல்வம்

-----

 

     உயிர்க்குலத்தில் தாய்க்கு நிகரான படைப்புஅல்லை. தாய்கடவுளை நினைப்பிப்பவள். குழந்தையின் உருவாக்கத்தில் தாயின் பங்கு மிகுதி. கடவுளின் கருத்தை முடித்துத் தருபவள் தாய். கருவில் சுமந்தபோது மட்டுமல்ல. மண்ணிற்கு வந்த பிறகும் குழந்தையின் வளர்ப்பிலும்காப்பிலும் தாயின் பங்கு அதிகம். குழந்தையின் நோய்க்குத் தாய் மருந்து உண்கிறாள். பத்தியம் இருக்கிறாள். திருமுறைகள் அம்மையே! அம்மையே!” என்று போற்றுகின்றன. அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று திருக்களிற்றுப்படியார் கூறும். "அம்மே! அப்பா!" என்றுதான் திருஞானசம்பந்தர் அழுதார்.

 

     குழந்தையைப் பெற்று வளர்ப்பவள் தாய். குழந்தையைப் பெறுபவர்கள் எல்லாரும் நல்ல தாயாகி விடுவதில்லை. தாயிலும் தரங்கள் உண்டு. ஈன்றெடுத்த குழந்தை பசியால் கதறி அழுதாலும் பால் ஊட்டாத தாயும் உண்டு. இந்தக் காட்சியைப் பெரும்பாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழைகள் வீட்டில் காணலாம். தாயும் உடலுழைப்பில் ஈடுபட்டுப் பொருளீட்ட வேண்டும்வீட்டுப் பணிகளையும் பார்க்க வேண்டும். களியாட்டமோ பொழுதுபோக்கோ இல்லாத நிலையில் அவள்சிறுவயதிலேயே பல குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அதனால் உடலில் சோர்வுஅலுத்தும் சலித்தும் வாழும் நிலை. இந்தச் சூழ்நிலையில் வாழும் தாய்மார்கள் விரும்பினாலும் நல்ல தாயாக வாழமுடிவதில்லை. இது ஏழைத் தாயின் நிலை. இது அவள் குற்றமல்ல. சமூகத்தின் குற்றம். இனிதான் பாலூட்டாமல் மாற்றுத் தாயின் மூலம் பாலூட்டும் தாயும் உண்டு. இது செல்வச் செழிப்பில் நிகழ்வது. இது வாழும் கலையை அறியாத குடும்பங்களில் காணப்படும் காட்சி. இளமை அழகில் உள்ள கவர்ச்சியின் விளைவு. இது இயற்கையை இகழ்ந்த வாழ்வு. சில தாய்மார்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வந்து பால் ஊட்டுவர். இது வேறு பல பணிகளில் ஈடுபடுவதின் விளைவுகவனத்தில் உண்டாகும் சோர்வு. சில தாய்மார்கள் குழந்தைகள் அழுவதற்கு முன்னரே காலக் கணிப்புடன் குழந்தைக்குப் பசிக்குமே என்று எண்ணிஉறங்கிக் கொண்டு இருந்தாலும்எழுப்பிப்பால் ஊட்டுவர். பால்நினைந்து ஊட்டுபவர்களே நல்ல தாய்மார்கள்.

 

     அப்படி நினைந்து ஊட்டுகின்ற தாய் குழந்தையை சில நேரங்களில் மறப்பதும் உண்டு. மறதியைத் தொடர்வதே நினைப்பு. மறத்தல் இல்லை என்றால் நினைப்பும் இல்லை. மணிவாசகப் பெருமான் நமக்கு ஒரு ஒப்பற்ற தாயை அறிமுகப்படுத்துகின்றார். அந்தத் தாய்குழந்தையை ஒருக்காலும் மறப்பது இல்லை. மறப்பதே இல்லை என்னும்போதுநினைப்பது என்பதும் இல்லை. மறப்பும் நினைப்பும் மாறிமாறி வருவதில்லை. மணிவாசகப் பெருமான் அறிமுகப்படுத்துகின்ற தாயின் இடத்தில் எப்போதும் குழந்தையின் நினைவே அது சிவசக்தியாகிய தாய். இந்தத் தாய் ஆன்மாக்களை மறப்பதில்லை. சிவசக்தியாகிய தாய்குழந்தை மறுத்தாலும் மிகவும் பரிவு உணர்வுடன் பாலை ஊட்டுவாள். குழந்தையானது தனக்கு வேண்டிய பாலின் தேவையை அறியாது. குழந்தையின் தேவை தாய்க்குத் தான் தெரியும். ஆதலால்குழந்தை மறுத்தாலும் இந்தத் தாய் விடுவதில்லை. இழுத்துப் பிடித்துப் பாலூட்டுவாள்பால் மட்டுமல்லஉணவையும் மருந்தையும் கூட.

 

     தாய் என்பவள் தனது குழந்தையின் தகுதி கருதி அன்பு காட்டுவதில்லை. தகுதியிருந்தால் மகிழ்வாள். தகுதி இல்லையானாலும் தன் பிள்ளையைச் சீராட்டவே விரும்புவாள். தன் குழந்தை பாவச் செயல் செய்வதாய் இருந்தால் தாங்கிக் கொள்ள மாட்டாள்! எந்தத் தாயும் தன் குழந்தையை "சான்றோன்என்று பிறர் பாராட்டுவதைக் கேட்கவே விரும்புகிறாள். அதை நேரத்தில்தன் குழந்தையைப் "பாவி"என்று தாய் வெறுத்து ஒதுக்கவும் மாட்டாள். 

 

     அன்பைப் பெருக்கிநம்பிக்கையை வளர்த்துமெல்ல மெல்ல நன்னெறிக்கு அழைத்து வந்துவிடுவாள்! அடிப்பது எளிது. ஆனால் திருத்துவது அரியது. இதற்கு நிலத்தினும் மேலான பொறுமை தேவை. குழந்தையின் நலம் கருதித் திருத்தும் பணியாதலால்அது மெல்ல மெல்லத்தான் நிகழும்நிகழவும் வேண்டும். பாண்டியனை நன்னெறிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட திருஞானசம்பந்தர்அவனது ஆணையால் இடப்பட்ட நெருப்பைப் "பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே" என்று பாடி அருளினார். "பைய நடந்தால் வையம் தாங்கும்" என்பது ஔவையார் அருளிய கொன்றேவேந்தன். மணிவாசகப் பெருமானும் இறைவன் தன்னைப் "பையவே கொடுபோந்து பாசம் என்னும் தாழ் உருவிஉய்யும் நெறி காட்டுவித்திட்டுஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார்" என்றே தனக்கு உண்டான இறையனுபவத்தைப் பாடிக் காட்டினார்.

 

     உடலின் ஆதிக்கம் ஆன்மாவின் மேலிருந்தால் பாவம் வளரும். உடலைஆன்மா பணிகொண்டால் புண்ணியச் செயல்கள் நிகழும். உடல்,ஆன்மாவை வேலை வாங்கினால் உடலின் ஏவலின்படிக்கு ஆன்மா செயல்படும். இதனால் உடல் கொழுக்க வேண்டிமிகுதியான உணவைத் தின்னத் தொடங்கும். இதனால் உடல் கொழுக்கும். உடல் கொழுப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லஆன்ம இலாபத்திற்கும் உகந்தது அல்ல."விடக்கையே பெருக்கிப் பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக் கடக்கிலேன்நெறி காணவும் மாட்டேன்" என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்."ஊனைப் பெருக்கி,உன்னை நினையாது  ஒழிந்தேன்செடியேன்உணர்வு இல்லேன்" என்றும் பாடினார். ஊனைப் பெருக்குவதால் உள்ளொளி விளங்காது. எனவே, "ஊனினை உருக்கிஉள் ஒளி பெருக்கிஉலப்பு இல்லா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     உடலின் எடை குறைவதுஉடலுக்கும் நல்லதுஅந்த உடலில் பொருந்தி உள்ள ஆன்மாவுக்கும் நல்லது. உடலின் தேவைகள் குறைந்துஆன்மாவின் தேவைகள் பெருகி வளர வேண்டும். 

 

     அதனால்அருட்சக்தியாகிய தாய்உடலை உருக்கி இளைக்க வைக்கிறாள். அதனைத் தொடர்ந்து ஆன்மாவின் ஞான ஒளியைப் பெருக்குகிறாள். ஞான ஒளி வளரவளரஉடலின் எடை குறைகிறது. ஆன்மாவின் கட்டுப்பாட்டில் உடல் வந்துவிடும்.  இதனால் உண்டாகும் இன்பம் சாதாரண இன்பம் அல்ல. உலப்பு இல்லாத இன்பம். "அந்தம் (முடிவு) ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்" என்பார் மணிவாசகர்.

 

     அத்தகு ஆனந்தமயமான இன்பத்தின் அருமையை அறியாமல் ஆன்மா அதனை இழந்துவிடலாம். ஆன்மாவை ஆதியில் பற்றி இருக்கும் அறியாமையின் விளைவு இது. அறியாமையால் "ஈறு இல்லாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தைத் துறந்து,மண்ணின் மேல் "நான்என்றும்"எனதுஎன்றும் மாயை கடித்த வாயிலேயே நின்று, முன்வினை மிகுவதையும் ஆன்மா உணர்வதில்லை. அருட்சத்தியாகிய தாய் மெல்ல மெல்ல உணர்த்துகின்றாள். சிவமாகிய சக்திஆன்மாவைப் பின்தொடர்கிறது. ஆன்மாசெல்லுமிடம் எல்லாம் அதன் பின்னே சிவமாகிய சக்தி தொடர்கிறது. ஆன்மா ஆனந்தமாகிய இன்பத்தை இழந்துவிடாமல் அனுபவிக்குமாறு செய்வது சிவசக்தியின் அருளார்ந்த குறிக்கோள்!

 

     ஆன்மா வழிபட்டுப் பின்தொடர்வதற்கு உரிய சிவசக்திஆன்மாவின் பின்னே திரிகின்றது. முன்னே போனால் வழிகாட்டலாம்வழி தவறிப் போகாமல் நெறிவழிச் செலுத்திக் காப்பாற்றலாம். ஆனால்கீழே விழுந்தால் உடன் தூக்க இயலாது. பின்னே வந்தால் விழுந்தவுடன் தூக்கிக் காக்கலாம்தாயானவள் குழந்தையை நடக்க விட்டுப் பின் தொடர்வாள்.

 

     உலகியலில் பலரும் பிறர் தம்மைப் பின்தொடர வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால்சிவசத்தி ஆன்மாவைப் பின்தொடர்கின்றது இதுதான் உலகியலுக்கும்அருளியலுக்கும் உள்ள வேறுபாடு. முன்னே சென்று வழிகாட்டுவோர் உள்ளனர். இந்த வழியில் போ என்று சொல்லிபின்தொடர்ந்து வந்து காப்பாற்றும் தாயுள்ளம் கொண்டோரை உலகியலில் காண்பது அரிது.

     

     திருப்பெருந்துறையில் சிவபரம்பொருள் மணிவாசகரை ஆட்கொண்டு அருளியது. அந்தம் ஒன்று இல்லாத இன்பத்தை மணிவாசகர் பெற்றார். அந்த இன்பத்தை மாணிக்கவாசகர் இடையீடு இல்லாமல் அனுபவிக்கதிருப்பெருந்துறையில் இருந்த சிவம்மாணிக்கவாசகரைப் பின் தொடர்ந்துமதுரைக்கும் செல்கின்றது. மாணிக்கவாசகருக்காகக் குதிரைச் சேவகன் வடிவம் கொள்கின்றது. அடிமை ஆளாகி மண் சுமந்து பிரம்படி படுகின்றது. 

 

     நமது திருக்கோயில் திருவிழாக்களில் சுவாமியின் முன்னே நாம் போவோம்! சுவாமி பின்னே வருவார். இது அருளியல் நிலை. உலகியலில் அமைச்சர்களுக்குஅதிகாரிகளுக்குப் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள்அவர்களுக்குப் பின்னேதான் வருவார்கள்.

 

     இறைவன் தாய்! ஒப்பற்ற உயிர்த் தாய். பால் நினைந்து ஊட்டும் தாயிலும் நல்லவன். ஊனை இளைக்க வைத்துஉயிரை ஒளியூட்டி வளர்க்கின்றான். ஆனந்தமாய இன்பத்தைப் பொழிந்து கருணை செய்கிறான். பொழிந்த இன்பத்தை ஆன்மா இழந்துவிடாமல் தொடர்ந்து அனுபவிக்கப் பின் தொடர்கிறான். சிவசக்தி பிறப்பும் இறப்பும் நீங்கும் வரை தொடர்கின்றது.

 

     இந்த அனுபவத்தை மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் காட்டுகின்றார்.

 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்

பரிந்து,நீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி,உள்ஒளி பெருக்கி,

உலப்பு இ(ல்)லா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து,புறம்புறம் திரிந்த

செல்வமே! சிவபெருமானே!

யான் உ(ன்)னைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கு எழுந்தருளுவது இனியே!

 

     குழந்தைக்குப் பசிக்குமே என்று எண்ணிபரிவோடு எடுத்து அணைத்துப் பாலை உட்டுகின்ற முதல்தரமான தாயை விடவும் பெரியவன் இறைவன் என்பதால், "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்றார். பிறவியால் வருகின்ற துன்பம் ஆன்மாவைத் தொடரக் கூடாது. இன்ப நிலை வந்து எய்தவேண்டும் என்னும் கருணையால்ஆன்மாவின் ஊனை உருக்கிஉள்ளத்தின் உள்ளே ஒளியைப் பெருக்குகின்றாள். பெருகிய ஒளியானது குன்றாதபடிக்குஆன்மைவைப் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றான். எனவே, "ஊனினை உருக்கிஉள் ஒளி பெருக்கிஉலப்பு இல்லா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே" என்று உள்ளம் உருகிப் பாடுகின்றார். புறம் புறம் திரிதல்இறைவன் ஆன்மாவைக் கண்காணிக்கின்றான் என்பதைக் காட்டும்.

 

"கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்,

கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்,

கண்காணி ஆகக் கலந்து எங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே".

 

என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லைஎன்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு போதும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர். 

 

     அம்மையப்பரைப் போற்றுவோம். இம்மை மறுமை நலங்களைப் பெறுவோம்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...