Showing posts with label விவேக சிந்தாமணி. Show all posts
Showing posts with label விவேக சிந்தாமணி. Show all posts

பெரியோரை நிந்தனை செய்தல் கூடாது.

 

 

பெரியோரை நிந்தை செய்தல் ஆகாது

-----

 

     திருக்குறளில் "பெரியாரைப் பிழையாமை" என்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் நாயனார்.

 

     காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது என்பதைக் காட்ட,

 

எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

 

என்று அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "விவேக சிந்தாமணி" என்கின்ற பழம்பெரும் நூலில் ஒரும் ஒரு பாடலைப் பார்ப்போம்....

 

வில்லது வளைந்தது என்றும்,

     வேழம்அது உறங்கிற்று என்றும்

வல்லியம் பதுங்கிற்று என்றும்

     வளர்கடா பிந்திற்று என்றும்

புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப்

     பொறுத்தனர் பெரியோர் என்று

நல்லது என்று இருக்க வேண்டா

     நஞ்சு எனக் கருதலாமே.  

 

இதன் பதவுரை ---

 

     (உலகத்தவர்களே! பகைவரைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து) வில்லது வளைவுற்றது என்றும் --- இந்த வில்லானது வளைந்து போனது (அது தீங்கு செய்யாது) என்றும்; (காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குகின்ற யானையைப் பார்த்து) வேழம் அது உறங்கிற்று என்றும் --- இந்த யானையானது உறங்கிவிட்டது (அதனால், அது தீங்கு செய்யாது) என்றும், (ஒரு விலங்கைக் கொல்வதற்குக் காலம் பார்த்துப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து) வல்லியம் பதுங்கிற்று என்றும் --- இந்த புலியானது பதுங்கி விட்டது (அதனால் இது தீங்கு செய்யாது) என்றும், (தனது பகையின் மேல் பாய்வதற்காக ஓடி வந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்து) வளர் கடா பிந்திற்று என்றும் --- இந்த ஆட்டுக்கடாவானது பாய்வதை விடுத்து, பின்னே சென்று விட்டது (அதனால் இது பினும் பாய்ந்து வந்து தீங்கு செய்யாது) என்றும், (தம்மை நிந்திப்போர் தாமாகவே கெட்டுப் போவார்கள் என்பதை அறிந்து, கீழ்மக்களின் நிந்தனையைப் பொறுத்துக் கொண்டு வாளா இருக்கும்) பெரியோர்கள் புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் என்றும் --- இந்தப் பெரியவர்கள் கீழ்மக்களின் சொற்களுக்குப் பயந்தே பொறுத்துக் கொண்டார்கள் (எனவே, இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்) என்றும், எண்ணிக் கொண்டு, நல்லது என்று இருக்க வேண்டா --- (இச் செய்கைகளால் வருவது) நன்மையே என்று முடிவு கட்டி இருந்துவிட வேண்டாம்; நஞ்சு எனக் கருதலாம் --- (இவற்றால் வருவது) நிச்சயம் நஞ்சைப் போன்ற கேடுதான் என்று எண்ணலாம்.

 

     Do not remain complacent by thinking that a curved bow, a slepping elephant, a hiding - tiger, a back-stepping ram, forbearing elders who endure the taunts of the foul-mouthed are innocuous. They may prove to be destructive. The tolerant elders, especially, shall not be reckoned as disposed to forgiveness of insults under the mistaken notion that their patience is due to the dread of the scoffers. They should know that those who scold the elders will, definitely and automatically, come to grief in due course.

 


நிலை மாறிப் போனால்...




பாடல் எண். 62
நிலை தளர்ந்திட்ட போது நீள்நிலத்து உறவும் இல்லை,
சலம் இருந்து அகன்றபோது தாமரைக்கு அருக்கன் கூற்றம்,
பல வனம் எரியும்போது பற்று தீக்கு உறவாம் காற்று,
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம்.    

இதன் பொருள் ----

தாமரைக்கு --- குளத்திலே உள்ள தாமரைக் கொடிக்கு, (நீர் உள்ள வரையில் சூரியன் நன்மையைச் செய்யும்)

சலம் இருந்து அகன்றபோது --- அது செழித்து வளர்வதற்குத் துணை புரிந்த தண்ணீரானது குளத்தில் இருந்து வற்றிய பொழுது,

அருக்கன் கூற்றம் --- (முன்பு தன்னைச் செழித்து வளரச் செய்த) சூரியனே அதனைக் கொல்லுகின்ற இயமன் ஆவான்.

பல வனம் எரியும்போது --- பலனைத் தருகின்ற காடானது தீப் பற்றி எரிகின்ற போது,

பற்று தீக்கு உறவாம் காற்று --- அதில் பற்றுகின்ற நெருப்புக்கு காற்று துணை நின்று, எரிவதை அதிகப்படுத்தும்,

மெலிவு அது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம் --- அந்தக் காற்று மெலிந்து விட்டால், சிறு நெருப்பு விளக்குப் போல ஆகும்போது, முன்னர் காட்டுத் தீயாய் இருந்தபோது, பற்றி எரியத் துணை செய்த காற்றே, அதனை அணைத்து விடும்.

அது போல,

நிலை தளர்ந்திட்ட போது --- மனிதர்கள் தமது உயர்ந்த நிலைமை கெட்டு ஒழிந்த காலத்தில்,

நீள் நிலத்து உறவும் இல்லை --- இந்தப் பரந்த உலகத்தில் உதவியாக யாரும் இல்லாமல் போய்விடும்.

கருத்துரை ---

குளத்தில் உள்ள தாமரை நீரோடு சேர்ந்து செழிப்பாய் இருக்கும்போது, அது மலர்வதற்குத் துணை புரிந்த சூரியனே, குளத்தில் உள்ள நீர் வற்றியபோது, அந்தத் தாமரையை வாடச் செய்வது போலவும், காட்டில் பற்றியது பெருநெருப்பாய் இருந்தபோது, அதனை மேலும் மூளும்படித் துணை புரிந்த காற்றே, அந்த நெருப்புக் குறுகிச் சிறியதாய் இருக்கும்போது, அதனை அணைத்து விடுவது போலவும், இந்தப் பரந்த உலகத்தில், மனிதர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்த காலத்தில் அவர்களுக்கு இருந்து வந்த உறவும் நட்பும், அவர் தமது நிலையில் தாழ்ந்த போது இல்லாமல் போய்விடும்.

பகை ஆவது




பாடல் எண். 61
தாய் பகை அன்பு அற்றாளேல், தந்தை கடன்காரன் ஆகில்
வாய் பகை, மனைவி நல்ல மதிஇழந்து இருப்பாள் ஆகில்
பேய் பகை, அறிவு உண்டாகும் பெருமைநூல் கல்லாவிட்டால்
சேய் பகை, ஒருவர்க்கு ஆகும், தெளிந்தவர் உரை இது ஆமே.

இதன் பதவுரை ---

     ஒருவர்க்கு --- உலகில் தோன்றிய ஒருவனுக்கு,

     அன்பு அற்றாளேல் தாய் பகை ஆகும் --- தாயானவள் அன்பு இல்லாமல் இருப்பாளே ஆகில் அவள் பகை ஆவாள்.

     தந்தை கடன்காரன் ஆகில் வாய் பகை ஆகும் --- தந்தையும் கடன்பட்டு வாழ்ந்து, தனது மகனுக்குக் கடனை உண்டாக்கி வைப்பானானால் அவன் தன் மகனுக்கு வாய்த்த பகை ஆவான்.

     மனைவி நல்ல மதி இழந்து இருப்பாள் ஆகில் பேய் பகை ஆகும் --- மனைவியானவள் நல்ல அறிவை இழந்து இருந்தால் அவள் பேய் ஆவதோடு, அவனுக்குப் பகையும் ஆவாள்.

     அறிவு உண்டாகும் பெருமை நூல் கல்லாவிட்டால், சேய் பகை ஆகும்  --- ஞானம் உண்டாகின்ற பெருமைக்கு உரிய நூல்களை, கல்லாவிட்டால் மகனும் பகை ஆவான்.

     இது --- அந்த நீதி ஆனது

     தெளிந்தவர் உரை ஆமே --- நூல்களைக் கற்று ஆராய்ந்து தெளிந்த அறிவினை உடையவரின் சொற்கள் ஆகும்.

விளக்கம் ---

பகை --- எதிர்ப்பு, மாறுபாடு, வெறுப்பு, தீங்கு. இந்த உணர்வு நற்பயனை ஒருவனுக்குத் தராது. கேட்டையே விளைவிக்கும்.

உள்ளத்தில் அன்பு இல்லாத தாயாலும், உழைத்து வருவாய் ஈட்டி வாழாமல் சோம்பேறியாக வாழ்வதோ, அல்லது வருவாய்க்கு மீறி, கடன் பட்டு வாழ்க்கை நடத்துவதோ கொண்ட தந்தையாலும், நல்லறிவு இல்லாத மனைவியாலும், அறிவு நூல் கல்லாத மகனாலும் கேடு விளையும் என்பது சொல்லப்பட்டது.

அன்பில் சிறந்தது தாய் அன்பு. அதற்கு ஈடாக வேறு எதையும் காட்ட முடியாது. அன்பின் வடிவமாக இருக்கவேண்டிய தாய் அன்பு இல்லாது இருப்பது ஒருவனுக்கு நன்மையைத் தராது.

பாவி மகன் படும் துயரம்





பாடல் எண். 60
ஆஈன, மழைபொழிய, இல்லம் வீழ,
     அகத்தினள் நோய் தனில் வருந், அடிமை சாவ,
மாஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட,
         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல,
     தள்ள ஒணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட,
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க,
         பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

இதன் பொருள் ---

     பாவி மகன் --- உலகில் பாவப்பட்ட பிறவியாய் இருக்கும் இந்த மகன் ஆனவன்,   

     ஆ ஈன --- தன்னால் வளர்க்கப்படும் பசுவானது கன்றை ஈனும் வேளையில் (அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது)

     மழை பொழிய --- அதற்கு இடையூறாக மழையானது பெய்யவும், ( அந்த மழை காரணமாக)

     இல்லம் வீழ --- தனது வீடானது இடிந்து விழவும், (அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது)

     அகத்தினள் நோய் தனில் வருந்த --- தனது மனைவியானவள் பிரசவ வேதனையில் துன்பப் படவும் (என்ன செய்யலாம் என்று வருந்தும் சமயத்தில்)

     அடிமை சாவ --- தனது பணியாளாகிய பெண் ஆனவள் இறந்து போகவும்,

(அப்போது விதை விதைக்கும் சமயமாய் இருந்ததால், இன்று விட்டால் நாளைக்கு நிலமானது)

     மா ஈரம் போகும் என்று விதை கொண்டு ஓட --- ஈரம் காய்ந்து போகும் என்று எண்ணி (அடிமைப் பெண்ணையும் அடக்கம் செய்யாமல், அப்படியே விட்டு விட்டு) விதையை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி விரைந்து ஓடவும்,

     வழியிலே --- போகும் வழியில் (அந்த நேரம் பார்த்து)

     கடன்காரர் மறித்துக் கொள்ள --- கடன் கொடுத்தவர்க்கள், பெற்ற கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்று வழியை மறித்துக் கொள்ளவும்,

(கடன்கார்ருக்கு ஒரு வழியாகப் பதில் சொல்லி விட்டு, வருகின்ற வேளையில்)

     சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல ---  உறவினர் இறந்து பட்ட செய்தியைத் தாங்கி ஒருவர் எதிரே வரவும், (அதை அறிந்து மேலே செல்கையில்)

     தள்ள ஒணா விருந்து வர --- தவிர்க்க முடியாத விருந்தினர் எதிரே வரவும் ( அவரைத் தனது இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மேலே செல்லும்போது)

     சர்ப்பம் தீண்ட --- பாம்பு ஒன்று வந்து தனது காலில் கடிக்கவும், (அதனால் விஷம் ஏறி மயங்குகின்ற நேரத்தில், அவனது துன்ப நிலையை உணராத)

     பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்க --- புலவர்கள் வந்து கவிகளைப் பாடி, பரிசுப் பொருள்களைக் கேட்கவும்,

         படும் துயரம் பார்க்க ஒண்ணாதே --- இப்படிப் பல துன்பங்கள் நேர்ந்த போதும் ஒன்றும் பரிகாரம் தேட இயலாமல் வருந்துகின்ற நேரத்தில், பாம்பு தீண்டியதாலும் படுகின்ற துன்பத்தைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லையே.


இப் பாடல் சிறிது மாற்றம் பெற்றுப் பின்வருமாறு சில பதிப்புக்களில் வந்துள்ளது.

ஆஈன, மழைபொழிய, இல்லம் வீழ,
     அகத்து அடியாள் மெய்நோவ, அடிமை சாவ,
மாஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட,
         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,
         குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க,
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க,
         பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

"அகத்தினள் நோய் தனில் வருந்த" என்பது, "அகத்து அடியாள் மெய் நோவ" என்றும்,

"சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல", என்பது, "கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க" என்றும்,

"தள்ள ஒணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட" என்பது, "குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க" என்றும்

பேதங்கள் கொண்டு வந்துள்ளது.

கருத்து --- தீவினையின் பயனை ஒருவன் அனுபவிக்க நேரும்போது , துன்பங்கள் தொடர்ந்து வரும்.  "பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்" என்பது வழக்கு மொழி ஆதல் அறிக.


சுகம் பெறுவது எப்படி




பாடல் எண். 59
நிட்டையிலே இருந்து மனத் துறவு அடைந்த
         பெரியோர்கள் நிமலன் தாளைக்
கிட்டையிலே தொடுத்து முத்தி பெறும் அளவும்
         பெரிய சுகம் கிடைக்கும்; வேட்கை
வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு
         மணம்பேசி, விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து, நடுக் கட்டையிலே
         கிடத்துமட்டும் கவலை தானே.

இதன் பொருள் ---
                         
நிட்டையிலே இருந்து --- மனம் ஒருநிலைப் படுவதற்கான யோகத்திலே பொருந்தி இருந்து,

மனத் துறவு அடைந்த பெரியோர்கள் --- மனத்தில் தோன்றும் பற்றுக்களை முற்றவும் துறந்த பெரியோர்கள்

நிமலன் தாளைக் கிட்டையிலே தொடுத்து --- இயல்பாகவே மலம் அற்ற இறைவன் திருவடியை மனத்தில் இருத்தி தியானத்தில் இருக்கின்ற நிலை தொடங்கி,

முத்தி பெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் --- உலகப் பாசங்கள் எல்லாவற்றையும் விட்டு, வீடுபேற்றினை அடையும் வரையிலும் பெரும் சுகத்தில் மூழ்கி இருப்பர்.

வேட்கை வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு --- பெண் மீது கொண்ட வேட்கையாகிய வெப்பத்திலே அறிவு மயக்கம் கொண்டு இருக்கும் சிறியோர்களுக்கு,
        
மணம் பேசி --- திருமணத்தைப் பேசி முடித்து,

விரும்பித் தாலி கட்டையிலே தொடுத்து ---  விருப்பத்துடன் பெண்ணின் கழுத்திலே தாலியைக் கட்டும் நாள் தொடங்கி,

நடுக் கட்டையிலே கிடத்து மட்டும் கவலை தானே ---  பின் நாளில் அவன் இறந்த பிறகு, சடலத்தைச் சுடுகாட்டிலே கொண்டு போய், கட்டையின் நடுவிலே கிடத்துகின்ற வரையிலே அவனுக்குக் கவலையே மிகுந்து இருக்கும்.

கருத்து --- பெண்ணாசையில் அறிவு மயக்கம் கொள்ளக் கூடாது. இல்லறத்தை நல்லறமாக நடத்துதல் வேண்டும். அதுவே துறவு நிலைக்கு முதல் படி. இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தாலே பற்றுக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தானாகவே நீங்கும் பக்குவம் வாய்க்கும்.           

இம்மையில் சுவர்க்க இன்பம்.





பாடல் எண். 58
நற்குணம் உடைய வேந்தை
     நயந்து சேவித்தல் ஒன்று,
பொற்புடை மகளிரோடு
     பொருந்தியே வாழ்தல் ஒன்று,
பற்பலரோடு நன்னூல்
     பகர்ந்து வாசித்தல் ஒன்று,
சொற்பெறும் இவைகள் மூன்றும்
     இம்மையில் சொர்க்கம் தானே.

இதன் பொருள் ----

     நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று --- நல்ல குணங்கள் பொருந்தப் பெற்ற அரசனை விரும்பி, அவருக்குப் பணி புரிதல் என்பது ஒன்றும்,
   
     பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று --- நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள பெண்ணை மணம் செய்துகொண்டு, அவளோடு சேர்ந்து வாழ்தல் என்பது ஒன்றும்,

    பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று --- பலப்பல அறிவு நூல்களைக் கற்று வல்லவர்களோடு கூடி இருந்து, அந்த நூல்களைச் சொல்லிப் படித்தல் என்பது ஒன்றும்

    சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம் தானே --- புகழ்ந்து கூறப்பெறும் இந்த மூன்று செயல்களும் இந்தப் பிறவியில், சுவர்க்க இன்பத்தைப் போன்று இனிமை தருவன ஆகும்.

     விளக்கம் --- உடம்பை விட்டபின் சென்று அனுபவிக்கத் தக்கது சுவர்க்க இன்பம். சுவர்க்கத்தில் இன்ப அனுபவத்தைத் தவிர, துன்பம் என்பது சிறிதும் இல்லை. அத்தகைய இன்பத்தை, இப் பாடலில் கூறிய செயல்கள் இந்தப் பிறவியிலேயே தரும்.

பாவம் சேரும் இடம்





பாடல் எண். 57
மண்டலத்தோர்கள் செய்த
     பாவம் மன்னவரைச் சேரும்,
திண்திறல் மன்னர் செய்த
     தீங்கு மந்திரியைச் சேரும்,
தொண்டர்கள் செய்த தோடம்
     தொடர்ந்து தம் குருவைச் சேரும்,
கண்டுஅன மொழியாள் செய்த
     கன்மமும் கணவர்க்கு ஆமே.

இதன் பொருள் ---

     மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரைச் சேரும் --- மண்ணுலகில் வாழ்வார்கள் செய்கின்ற பாவமானது, அவர்களை ஆளுகின்ற மன்னவனையே சாரும்.

     திண்திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியைச் சேரும் --- வலிமையும் வெற்றியும் பொருந்திய செய்த தீவினையானது, நன்மை தீமைகளை ஆராய்ந்து மன்னனைச் செங்கோல் செலுத்தும் முறையில் நடத்தாத அமைச்சரையே சாரும்.

     தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவைச் சேரும் --- அடியார்கள் செய்யும் குற்றமானது, அவர்களை வழி நடத்தி வரும் குருவையே சேரும்.

     கண்டுஅன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே --- (கணவனாய் இருப்பவனுக்குத் தான் செய்த பாவத்தோடு,) கற்கண்டை ஒத்த மொழியை உடைய மனைவி செய்த பாவமும் அவளின் கணவனையே சாரும்.


பசித்தோர் முகம் பார் - பசியின்றி வாழலாம்.




பாடல் எண். 56
மண்ணார் சட்டி கரத்து ஏந்தி
     மறநாய் கௌவும் காலினராய்
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை
     அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா!
பண்ணார் மொழியார் பால் அடிசில்
     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட
உண்ணா நின்ற போது ஒருவர்க்கு
     உதவா மாந்தர் இவர்தாமே!

இதன் பொருள் ---

     மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி --- களிமண்ணால் செய்யப்பட்ட செய்யப்பட்ட பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, வீதிகள் தோறும் சென்று,

     மறநாய் கௌவும் காலினராய் --- கோபம் பொருந்திய தெரு நாய்கள் தங்களின் கோர வடிவத்தைக் கண்டு, குரைத்துக் கொண்டு வந்து கடிக்கின்ற கால்களை உடையவர்களாய்,

     அண்ணாந்து ஏங்கி இருப்பாரை --- தலையினை உயர்த்திப் பார்த்து, பசியினால் வாடி, யாராவது தமக்குத் தருவார்களா என்று ஏக்கமுற்று, இரந்து நிற்போரை

     அறிந்தோம் அறிந்தோம் ---  இன்னார் என யாம் அறிந்து கொண்டோம், அறிந்து கொண்டோம்,

     அம்மம்மா --- ம்ம, அம்மா! (இவர் யார் என்றால், முற்பிறவியில்)

     பண்ணார் மொழியார் --- இசை ததும்பும்படியான இனிமை தரும் சொற்களைப் பேசுகின்ற தமது மனைவியர்,

     பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட --- பால் சோற்றை பசுமையான பொன்னால் ஆன கலத்தில் வைத்து அன்போடு தங்களுக்கு ஊட்ட,

     உண்ணா நின்ற போது --- உண்டுகொண்டு இருந்த காலத்தில்,

     ஒருவர்க்கு --- (முன் சொன்னது போல) பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கு
    
     உதவா மாந்தர் இவர் தாமே --- (தாம் உண்ணுகின்ற சோற்றில் ஒரு பிடியேனும் கொடுத்து) உதவாத மனிதர் இவரே தான்.

     விளக்கம் --- மனிதனாகப் பிறந்தால் அவன் ஆறறிவு உடையவனாக இருத்தல் வேண்டும். ஆறாவது அறிவு மன அறிவு அல்லது உயிர் அறிவு எனப்படும். உயிர் அறிவு உள்ளவன் என்றால், பிற உயிர் படும் துன்பத்தைக் கண்டு பொறுத்திருக்கமாட்டான். அப்படிப்பட்ட அறிவு இல்லாதபோது, ஒருவன் கொண்டிருக்கும் வெற்று நூல் அறிவால் பயன் இல்லை. "அறிவினால் ஆவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போற்றாக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார்.

     பசியினால் துன்பப்படுவோருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வாழ்வதே, இந்த உடம்பினால் உயிரானது பெறுகின்ற பயன் ஆகும். பசித்தோர்க்குச் செய்யும் உதவி அவரது பசியைத் தணிப்பதே ஆகும். காரணம் பசிவந்திடப் பத்தும் பறந்து போகும்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.               --- ஔவையார்.

அற்றார் அசிபசி தீர்த்தல், உஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.             --- திருக்குறள்.

"யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார்.

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு, பிடிசோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.

என்றார் அருணை அடிகள் கந்தர் அலங்காரத்தில்.

ஆற்றொடு தும்பை அணிந்து ஆடும் அம்பல வாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டு, இந்தப் பூதலத்தில்,
சோற்றாவி அற்று, சுகம் அற்று, சுற்றத் துணியும் அற்றே,
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே.
                                        
அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்
சென்மம் எடுத்தும், சிவன் அருளைப் போற்றாமல்,
பொன்னும், மனையும், எழில் பூவையரும், வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே.

முன்தொடர்பில் செய்த முறைமையால் வந்தசெல்வம்,
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது, பாழ்மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல், அரன் பூசை செய்யாமல்,
கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறைந்து விட்டனையே.

நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயம் என்றே எண்ணி,
பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்,
போர்க்குள் எமதூதன் பிடித்து இழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே.

எனவரும் பட்டினத்து அடிகள் அருட்பாடல்களையும் சிந்திக்கவும்.


மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...