நிலை மாறிப் போனால்...
பாடல் எண். 62
நிலை தளர்ந்திட்ட போது நீள்நிலத்து உறவும் இல்லை,
சலம் இருந்து அகன்றபோது தாமரைக்கு அருக்கன் கூற்றம்,
பல வனம் எரியும்போது பற்று தீக்கு உறவாம் காற்று,
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம்.    

இதன் பொருள் ----

தாமரைக்கு --- குளத்திலே உள்ள தாமரைக் கொடிக்கு, (நீர் உள்ள வரையில் சூரியன் நன்மையைச் செய்யும்)

சலம் இருந்து அகன்றபோது --- அது செழித்து வளர்வதற்குத் துணை புரிந்த தண்ணீரானது குளத்தில் இருந்து வற்றிய பொழுது,

அருக்கன் கூற்றம் --- (முன்பு தன்னைச் செழித்து வளரச் செய்த) சூரியனே அதனைக் கொல்லுகின்ற இயமன் ஆவான்.

பல வனம் எரியும்போது --- பலனைத் தருகின்ற காடானது தீப் பற்றி எரிகின்ற போது,

பற்று தீக்கு உறவாம் காற்று --- அதில் பற்றுகின்ற நெருப்புக்கு காற்று துணை நின்று, எரிவதை அதிகப்படுத்தும்,

மெலிவு அது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம் --- அந்தக் காற்று மெலிந்து விட்டால், சிறு நெருப்பு விளக்குப் போல ஆகும்போது, முன்னர் காட்டுத் தீயாய் இருந்தபோது, பற்றி எரியத் துணை செய்த காற்றே, அதனை அணைத்து விடும்.

அது போல,

நிலை தளர்ந்திட்ட போது --- மனிதர்கள் தமது உயர்ந்த நிலைமை கெட்டு ஒழிந்த காலத்தில்,

நீள் நிலத்து உறவும் இல்லை --- இந்தப் பரந்த உலகத்தில் உதவியாக யாரும் இல்லாமல் போய்விடும்.

கருத்துரை ---

குளத்தில் உள்ள தாமரை நீரோடு சேர்ந்து செழிப்பாய் இருக்கும்போது, அது மலர்வதற்குத் துணை புரிந்த சூரியனே, குளத்தில் உள்ள நீர் வற்றியபோது, அந்தத் தாமரையை வாடச் செய்வது போலவும், காட்டில் பற்றியது பெருநெருப்பாய் இருந்தபோது, அதனை மேலும் மூளும்படித் துணை புரிந்த காற்றே, அந்த நெருப்புக் குறுகிச் சிறியதாய் இருக்கும்போது, அதனை அணைத்து விடுவது போலவும், இந்தப் பரந்த உலகத்தில், மனிதர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்த காலத்தில் அவர்களுக்கு இருந்து வந்த உறவும் நட்பும், அவர் தமது நிலையில் தாழ்ந்த போது இல்லாமல் போய்விடும்.

No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...