உத்தரமேரூர் - 0728. மாதர் கொங்கையில்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாதர் கொங்கையில் (உத்தரமேரூர்)
  
முருகா!
ஆசைக் கடலில் இருந்து முத்திக் கரை ஏற அருள்.


தான தந்தன தத்தா தத்தன
     தான தந்தன தத்தா தத்தன
     தான தந்தன தத்தா தத்தன ...... தனதான

மாதர் கொங்கையில், வித்தா ரத்திரு
     மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
     வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில்

மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
     வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
     வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி

ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
     ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
     ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ

ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
     ஆயி ரங்கலை கத்தா மத்திப
     னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே

சாத னங்கொடு தத்தா மெத்தென
     வேந டந்துபொய் பித்தா வுத்தர
     மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே

தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
     நீதி தந்திர நற்சார் புற்றருள்
     சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே

வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
     வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
     வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ்.....மறையோர்வாழ்

மேரு மங்கையி லத்தா வித்தக
     வேலொ டும்படை குத்தா வொற்றிய
     வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மாதர் கொங்கையில், வித்தா ரத்திரு
     மார்பு இலங்குஇயல் முத்து ஆரத்தினில்,
     வாச மென்குழலில், சேலைப் பொரும் ...... விழிவேலில்,

மாமை ஒன்று மலர்த்தாள் வைப்பினில்,
     வாகு வஞ்சியில், மெய்த் தாமத்தினில்,
     வான் இளம்பிறையைப் போல் நெற்றியில், ......மயலாகி,

ஆதரம் கொடு கெட்டே, இப்படி
     ஆசையின் கடலுக்கே மெத்தவும்
     ஆகி நின்று, தவித்தே நித்தலும் ...... அலைவேனோ?

ஆறு இரண்டு பணைத்தோள் அற்புத!
     ஆயிரம் கலை கத்தா! மத்திப-
     னாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் ...... புரிவாயே!

சாதனங்கொடு தத்தா மெத்தென-
     வே நடந்து, பொய் பித்தா, உத்தரம்
     ஏது எனும்படி தற் காய் நிற்பவர், ...... சபையூடே,

தாழ்வுஇல் சுந்தரனைத் தான் ஒற்றிகொள்
     நீதி தந்திர நற்சார்பு உற்று அருள்
     சால நின்று சமர்த்தா வெற்றிகொள் ...... அரன்வாழ்வே!

வேதமும் கிரியைச்சூழ் நித்தமும்
     வேள்வியும் புவியில் தாபித்து,ருள்
     வேர் விழும்படி செய்த்து, ர் மெய்த்தமிழ் ...மறையோர்வாழ்

மேரு மங்கையில் அத்தா! வித்தக!
     வேலொடும் படை குத்தா ஒற்றிய
     வேடர் மங்கைகொள் சித்தா! பத்தர்கள் ...... பெருமாளே!


பதவுரை

      ஆறு இரண்டு பணை தோள் அற்புத --- பன்னிரண்டு பெருமை வாய்ந்த திருத்தோள்களை உடைய அற்புதமானவரே!

     ஆயிரம் கலை கத்தா --- பல கலைகளுக்குத் தலைவரே!

      சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து --- ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மெதுவாகத் தத்தி தத்தி நடந்து போய்,

     பொய் பித்தா உத்தரம் ஏது எனும்படி தன் காய் நிற்பவர் சபை ஊடே --- பொய் பேசும் பித்தனே, மறுமொழி என்ன என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி திருமணப் பந்தலின் கீழ் நிற்பவர் சபை நடுவில்,

      தாழ்வு இல் சுந்தரனை --- தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை,

     தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் ---  தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, தந்திரமான  நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, உள்ளத்தில் மிகவும் அருள் கொண்டு

     சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே --- சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவபெருமானின் செல்வக் குழந்தையே!

      வேதமும் கிரியைச் சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து --- வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி,

     அருள் வேர் விழும்படி செய்த ஏர் மெய்த்தமிழ் மறையோர் வாழ் --- இறைவனது அருள் வேரூன்றி பதியும்படிச் செய்த பெருமை மிக்க உண்மைச் செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற

     மேருமங்கையில் அத்தா --- உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவரே!

     வித்தக --- பேரறிவாளரே!

      வேலொடும் படை குத்தா ஒற்றிய வேடர் மங்கை கொள் சித்தா --- வேற்படை முதலியவைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளிநாயகியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே,

     பத்தர்கள் பெருமாளே  --- பக்தர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      மாதர் கொங்கையில் --- விலை மாதர்களுடைய மார்பகங்களிலும்,

     வித்தாரத் திருமார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் --- அழகிய மார்பில் விளங்கும் முத்து மாலையிலும்,

     வாசமென் குழலில் --- நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும்,

     சேலைப் பொரும் விழி வேலில் --- சேல் மீன் போன்று சுழல்கின்ற, வேலை ஒத்த கண்களில்,

      மாமை ஒன்று மலர்த்தாள் வைப்பினில் --- அழகு பொருந்திய மலருக்கு ஒப்பான பாதங்களிலும்,

     வாகு வஞ்சியில் --- வஞ்சிக் கோடி போன்ற இடையிலும்,

     மெய்த் தாமத்தினில் --- உடலில் அணிந்துள்ள மாலையிலும்,

     வான் இளம் பிறையைப் போல் நெற்றியில் மயலாகி --- வானில் தோன்றும் இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மையல் கொண்டவனாய்,

      ஆதரம் கொடு கெட்டே --- அவர்கள் மேலேயே பற்று வைத்துக் கெட்டுப் போய்,

     இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும் ஆகி நின்று --- இப்படியாக ஆசைக் கடலிலேயே உழல்பவனாகி

     தவித்தே நித்தலும் அலைவேனோ --- நாள்தோறும் தவித்து அலைவேனோ?

     மத்திபனாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் புரிவாயே  --- சாமானிய மனிதனாய் உழன்று அலைகின்ற அடியேனுக்கு அருள் புரிவாயாக.


பொழிப்புரை


     பெருமை வாய்ந்த பன்னிரண்டு திருத்தோள்களை உடைய அற்புதமானவரே!

     எண்ணில்லாத கலைகளுக்குத் தலைவரே!

      ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மெதுவாகத் தத்தி தத்தி நடந்து போய்பொய் பேசும் பித்தனே, மறு மொழி என்ன என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி திருமணப் பந்தலின் கீழ் நிற்பவர் சபை நடுவில், தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை, தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, தந்திரமான நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, உள்ளத்தில் மிகவும் அருள் கொண்டு, சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவபெருமானின் செல்வக் குழந்தையே!

     வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி,  இறைவனது அருள் பதியும்படிச் செய்த பெருமை மிக்க உண்மைச் செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவரே!

     பேரறிவாளரே!

     வேற்படை முதலியவைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளிநாயகியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே,

     பக்தர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      விலை மாதர்களுடைய மார்பகங்களிலும், அவரது அழகிய மார்பில் விளங்கும் முத்து மாலையிலும், நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும், சேல் மீன் போன்று சுழல்கின்ற, வேலை ஒத்த கண்களில், அழகு பொருந்திய மலர் போல்ம் மென்மையான பாதங்களிலும், வஞ்சிக் கொடி போன்ற இடையிலும், உடம்பில் அணிந்துள்ள மாலையிலும், வானில் தோன்றும் இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மையல் கொண்டவனாய், அவர்கள் மேலேயே பற்று வைத்துக் கெட்டுப் போய்,  இப்படியாக ஆசைக் கடலிலேயே உழல்பவனாகி, நாள்தோறும் தவித்து அலைவேனோ? சாமானிய மனிதனாய் உழன்று அலைகின்ற அடியேனுக்கு அருள் புரிவாயாக.

விரிவுரை

சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா.............. சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் ----

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதிசைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரர் என்பதாகும். நம்பியாரூரர் என்பதை ஆரூரர் என்று சுருக்கி அழைப்பர். சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். இவருடைய அழகினையும் பொலிவினையும் கண்டு, சிறுவன் சுந்தரனை மகன்மையாகக் கொண்டு, அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். வைதிகத் திருவும் மன்னர் திருவும் பொலிய நம்பியாரூரர் வளர்ந்து வந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

நம்பியாரூரர் திருமணக் கோலம் கொண்டு மணம் வந்த புத்தூரில் திருமணப் பந்தருக்கு வந்து சேர்ந்தார். மணவறையில் அமர்ந்தார்.

அந்த வேளையில், திருக்கயிலாயத்திலே, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வாக்களித்தபடியே, அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு, சிவபெருமான் ஒரு முதிய வேதியர் கோலம் தாங்கித் தண்டு ஊன்றி திருமணப் பந்தருள் நுழைந்து, அங்கிருந்த சபையாரை நோக்கி, "இந்த நாவல் நகர் ஊரன் எனது அடிமை" என்றார். சுந்தரர் வெகுண்டு, "அந்தணர் வேறு ஒர் அந்தணருக்கு அடிமை ஆவதில்லை. பித்தனோ மறையோன்" என்றார். வேதியர், "அந்தக் காலத்தில் எனது பாட்டன் எனக்கு எழுதித் தந்த அடிமை ஓலை இருக்கிறது. என்னை இகழாதே" என்றார். "அந்த அடிமை ஓலையைக் காட்டும்" என்றார் சுந்தரர். சபை முன்னே காட்டுவேன் என்றார் வேதியர். சுந்தர்ர் அவரைத் தொடர்ந்து ஓடி, ஓலையைப் பிடுங்கிக் கிழித்து எறிந்தார்.

அங்கிருந்தவர்கள் அந்தணரைப் பார்த்து, "ஐயரே இந்த உலகத்தில் இல்லாத வழக்கைக் கொண்டு வந்தீர். நீர் இருப்பது எங்கே" என்று கேட்டனர். அதற்கு, "நான் இருப்பது திருவெண்ணெய்நல்லூர். இவன் ஓலையை வலிந்து பிடுங்கிக் கிழித்து எறிந்தான். அதனாலேயே இவன் எனது அடிமே என்பது உறுதி ஆயிற்று" என்றார். அதுகேட்ட சுந்தரர் "உமது ஊரிலேயே இந்த வழக்கைப் பேசலாம்" என்றார். வேதியரும் "அப்படியே செய்வோம். அங்கே மூல ஓலையைக் காட்டி சாதிப்பேன்" என்றார்.

எல்லோரும் திருவெண்ணெய்நல்லூரை அடைந்து, வேதியர்கள் நிறைந்த சபையில் தனது வழக்கை வேதியர் சொன்னார். சபையார் வேதியரைப் பார்த்து, "அந்தணர் அடிமை ஆகும் வழக்கம் இல்லையே" என்றனர். வேதியர் "என் வழக்கு நியாயமானது. இவன் வலிந்து கிழித்த ஓலை படியோலை. மூல ஓலை இதோ பாருங்கள்" என்று காட்டினார். அதில், "திருநாவலூரிலே வாழும் ஆதிசைவனாகிய ஆரூரன் திருவெண்ணெய்நல்லூரில் வாழும் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் மரபினரும் திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு வழித்தொண்டு செய்ய அகமும் புறமும் ஒத்து உடன்படுகின்றோம். இங்ஙனம் ஆரூரன்" என்ற வாசகம் இருந்தது. 

சபையார், அந்த ஓலையையும், சுந்தரரின் பாட்டனாருடைய வேறு கையெழுத்துக்களையும் ஒப்பு நோக்கி, சுந்தரரைப் பார்த்து, இந்த வேதியருக்கு அடிமையாய் இருப்பது உமது கடன் என்றனர்.

இவ்வாறு, சமர்த்தாக வெற்றி கொண்டு சுந்தரரை ஓலை காட்டி ஆட்கொண்ட சிவபெருமானுடைய திருக்குமாரரே என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பாடிப் பரவுகின்றார்.

வேதமும் கிரியைச்சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து ருள் மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா! ---

"வேள்வி நல் பயன் வீழ்புனல் ஆவது" என்பார் தெய்வச் சேக்கிழார். "வீழ்க தண்புனல்" என்பார் திருஞானசம்பந்தர். உலக நன்மைக்காக வேதியர்கள் வேள்விக் கடனை நாளும் ஆற்றுவார்கள்.

"கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை" என்பார் திருஞானசம்பந்தர்.


ஓர்ஆறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
     ஒன்று தப்பாது புரிவார்;
  உதயாதி யில்சென்று நீர் படிகுவார்; காலம்
     ஒருமூன்றி னுக்கும் மறவாது

ஆராய்ந்து காயத்ரி அது செபிப்பார்; நாளும்
     அதிதி பூசைகள் பண்ணுவார்;
  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
     இன்றியே செய்து வருவார்;

பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
     பிழையாது இருக்கும் மறையோர்
  பெய்யெனப் பெய்யும் முகில்; அவர் மகிமை எவர்களும்
     பேசுதற்கு அரிது அரிதுகாண்!

ஆர்ஆர் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

"வேதம் ஓதிய வேதியருக்கு ஓர் மழை" என்பது விவேகசிந்தாமணி.

மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்
தவம் இல்லார் இல்வழி இல்லை, தவமும்
அரசன் நிலாவழி இல்லை, அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்.     ---  நான்மணிக்கடிகை.


மத்திபனாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் ---

மிகவும் கீழானவனும் அல்ல. ஞான நிலையை அடைந்த மேலானவனும் அல்ல. சாதாரண மனிதனாக வாழுகின்ற அடியேனுக்கு அருள்.

கருத்துரை

முருகா! ஆசைக் கடலில் இருந்து முத்திக் கரை ஏற அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...