அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆதிமுதல் நாளில்
(கோடைநகர் - வல்லக்கோட்டை)
முருகா!
உன் திருவடியை அடையத்
திருவருள் புரிவாய்.
தானதன
தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத
னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்
ஆசையுட
னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்
பூதலமெ
லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்
போகமதி
லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் ...... முருகோனே
கோதைமலை
வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த ...... குமரேசா
கூடிவரு
சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆதிமுதல்
நாளில் என்தன் தாய் உடலிலே இருந்து,
ஆக மலம் ஆகி நின்று, ...... புவிமீதில்
ஆசை
உடனே பிறந்து, நேசம் உடனே வளர்ந்து,
ஆள் அழகன் ஆகி நின்று ...... விளையாடி,
பூதலம்
எலாம் அலைந்து, மாதர் உடனே கலந்து,
பூமிதனில் வேணும் என்று ...... பொருள்தேடி,
போகம்
அதிலே உழன்று, பாழ் நரகு எய்தாமல், உன்தன்
பூ அடிகள் சேர அன்பு ...... தருவாயே.
சீதைகொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற,
தீரன் அரி நாரணன் தன் ...... மருகோனே!
தேவர், முநிவோர்கள், கொண்டல், மால் அரி, பிர்மாவும் நின்று
தேட அரிது ஆனவன் தன் ...... முருகோனே!
கோதை,
மலை வாழுகின்ற நாதர் இட பாகம் நின்ற
கோமளி, அநாதி தந்த ...... குமரஈசா!
கூடிவரு
சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பதவுரை
சீதை கொடு போகும்
அந்த ராவணனை மாள வென்ற தீரன் --- சீதையைக் கவர்ந்து சென்ற அந்த இராவணன்
மாளுமாறு வென்ற மனத்திட்பம் உள்ளவரும்,
அரி --- பாவங்களைப்
போக்குபவரும்,
நாரணனன் தன் மருகோனே --- நாராயண
மூர்த்தியின் திருமருகரே!
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவும் --- தேவர்கள், முனிவர்கள், மேகவண்ணன் ஆகிய திருமால், பிரமன் ஆகிய இவர்களெல்லாம்
நின்று தேட அரிது ஆனவன்
தன் முருகோனே
--- தத்தம் நிலையில் நின்று தேடியும் காணுதற்கு அரிதாக விளங்கிய சிவபெருமானின்
குழந்தையாகிய முருகப் பெருமானே!
கோதை --- அழகிய கூந்தலை
உடையவரும்,
மலை வாழுகின்ற நாதர் இட பாகம் நின்ற கோமளி
---கயிலைமலையைத் தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபரம்பொருளின் இடப்பக்கதில் உறையும்
அழகியும்,
அநாதி தந்த குமரேசா --- தனக்கு ஒரு
முதலும் இல்லாதவருமான பார்வதி தந்த குமாரக் கடவுளே!
கூடிவரு சூரர் தங்கள்
மார்பை இரு கூறு கண்ட --- ஒன்றுகூடிப் போரிட வந்த சூரபதுமனாதியரின்
மார்பை இருகூறாகக் கண்டவரே!
கோடைநகர் வாழ வந்த
பெருமாளே
--- கோடை நகரில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!
ஆதிமுதல் நாளில் என்
தன் தாய் உடலிலே இருந்து --- ஆதி காலம் தொட்டு எனது தாயின்
உடலில் இருந்து
ஆக மலமாகி நின்று --- அழுக்குகள்
நிறைந்த உடம்புடன்,
புவிமீதில் ஆசையுடனே
பிறந்து
--- இந்தப் பூமியில் ஆசையுடன் பிறந்து,
நேசமுடனே வளர்ந்து --- பெற்றார்
உற்றாரின் அன்புடன் அன்புடன் வளர்ந்து,
ஆள் அழகனாகி நின்று
விளையாடி
--- ஆள் அழகன் என விளங்கி, விளையாடி,
பூதலம் எலாம் அலைந்து --- பூமியில்
எங்கணும் அலைந்து,
மாதருடனே கலந்து --- பெண்களுடன் கலந்து,
பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி
--- பூமியில் வாழப் பொருள் வேண்டும் என்று உணர்ந்து பொருளைத் தேடி.
போகம் அதிலே உழன்று --- சுகபோகங்களில்
ஈடுபட்டுத் திரிந்து
பாழ் நரகு எய்தாமல் --- பாழான நரகத்தை
அடையாமல்,
உன் தன் பூ அடிகள்
சேர அன்பு தருவாயே --- தேவரீரது திருவடித் தாமரைகளை எக்காலமும் நினைந்து
வழிபட்டு உய்ய திருவருட்கருணை புரிவாயாக.
பொழிப்புரை
சீதையைக் கவர்ந்து சென்ற அந்த இராவணன்
மாளுமாறு வென்ற மனத்திட்பம் உள்ளவரும், பாவங்களைப் போக்குபவரும், நாராயண
மூர்த்தியின் திருமருகரே!
தேவர்கள், முனிவர்கள், மேகவண்ணன் ஆகிய திருமால், பிரமன் ஆகிய இவர்களெல்லாம் தத்தம்
நிலையில் நின்று தேடியும் காணுதற்கு அரிதாக விளங்கிய சிவபெருமானின் குழந்தையாகிய முருகப்
பெருமானே!
அழகிய கூந்தலை உடையவரும், கயிலைமலையைத்
தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபரம்பொருளின் இடப்பக்கதில் உறையும் அழகியும், தனக்கு
ஒரு முதலும் இல்லாதவருமான பார்வதி தந்த குமாரக் கடவுளே!
ஒன்றுகூடிப் போரிட வந்த சூரபதுமனாதியரின்
மார்பை இருகூறாகக் கண்டவரே!
கோடை நகரில் எழுந்தருளி இருக்கும்
பெருமையில் சிறந்தவரே!
ஆதி காலம் தொட்டு எனது தாயின் உடலில்
இருந்து அழுக்குகள்
நிறைந்த உடம்புடன், இந்தப் பூமியில் ஆசையுடன்
பிறந்து, பெற்றார் உற்றாரின்
அன்புடன் அன்புடன் வளர்ந்து, ஆள் அழகன் என
விளங்கி, விளையாடி, பூமியில் எங்கணும்
அலைந்து, பெண்களுடன் கலந்து, பூமியில் வாழப்
பொருள் வேண்டும் என்று உணர்ந்து பொருளைத் தேடி, சுகபோகங்களில் ஈடுபட்டுத்
திரிந்து, பாழான நரகத்தை அடையாமல், தேவரீரது திருவடித்
தாமரைகளை எக்காலமும் நினைந்து வழிபட்டு உய்ய திருவருட்கருணை புரிவாயாக.
விரிவுரை
இத்
திருப்புகழின் முற்பகுதியில், உலகில் மனித வடிவினை எடுத்துப் பிறந்து இறந்து
உழன்று, தீவினைகளையே புரிந்து பாழும் நரகினை அடையாமல், முருகப் பெருமான் தனது
திருவருட் கருணை புரிந்து ஆட்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றார்.
நிலையாமையை
உடையது இந்த மானுடப் பிறவி. உடம்பு நிலையற்றது. இளமை நிலையற்றது. செல்வம்
நிலையற்றது.
இதை
உணர்ந்து தெளிந்து, இறைவன் திருவடி மலரை வணங்கிப் பணிந்து, இனிப் பிறவாத நிலையைப்
பெற்று, இறைவன் திருவடியில் இந்த உயிரானது அமைதி உறவேண்டும். இதற்கான நல் வழியை
அருளுமாறு சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன்பால் வேண்டியருளிய திருப்பதிகப் பொருளை
உணர்தல் வேண்டும்.
கல்வாய்
அகிலும் கதிர் மாமணியும்
கலந்து உந்தி வரும்
நிவவின்கரைமேல்
நெல்வாயில்
அரத்துறை நீடுஉறையும்
நிலவெண்மதி சூடிய
நின்மலனே!
நல்வாய்இல்
செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார்
என்று நானிலத்தில்
சொல்லாய்க்
கழிகின்றது அறிந்து அடியேன்
தொடர்ந்தேன் உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
மலையிடத்துள்ள
அகில்களையும் , ஒளியை உடைய
மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள
திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருத்தலத்தில் என்றும் எழுந்தருளியிருக்கும், நிலவினை உடைய வெள்ளிய பிறையைச் சூடிய
மாசற்றவனே! உலகியலில் நின்றோர்
அனைவரும், ` நல்ல துணையாகிய
இல்லாளை மணந்தார் ; இல்லற நெறியிலே
ஒழுகினார் ; நன்றாக உண்டார் ; உடுத்தார் ; மூப்படைந்தார் ; இறந்தார் ` என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை
உடையவராய் நீங்குவது அல்லாமல், நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன் ; ஆதலின், அடியேன் அச்சொல்லில் இருந்து பிழைத்துப்
போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
கறிமாமிளகும்
மிகு வன்மரமும்
மிகவுந்தி வரும் நிவவின்கரை
மேல்
நெறிவார்
குழலார் அவர் காண் நடம்செய்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே!
வறிதேநிலையாத
இம் மண்ணுலகில்
நரன் ஆக வகுத்தனை,
நான் நிலையேன்;
பொறிவாயில்இவ்
ஐந்தினையும் அவியப்
பொருது, உன் அடியே புகும்
சூழல்சொல்லே.
கறிக்கப்படுகின்ற
மிளகையுடைய கொடியையும் , மிக்க வலிய
மரங்களையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , நெறித்த நீண்ட கூந்தலையுடைய மகளிர்தாம்
பிறர் அனைவரும் விரும்பிக் காணத்தக்க நடனத்தைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறை
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே! உயிர்கள் பலவும் பயன் ஏதும் இன்றிப்
பிறந்து இறக்கும் இம் மண்ணுலகத்தில் அடியேனை மகனாகப் படைத்தாய் ; ஆதலின் , நான் இறவாது இரேன் ; அதனால் , ` பொறி ` எனப்படுகின்ற , அவாவின் வாயில்களாகிய இவ்வைந்தினையும்
அடங்குமாறு வென்று, உன் திருவடிக்கண்ணே
புகுதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
பொறிவாயில்
ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி
நின்றார், நீடு வாழ்வார்.
என்றார்
திருவள்ளுவ நாயனார்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து
அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், பிறப்பு இன்றி
எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார் என்பது இத் திருக்குறளின் பொருள்.
புலன்கள்
ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி
புறம்புறமே திரியாதே
போது நெஞ்சே!
சலங்கொள்சடை
முடிஉடைய தலைவா என்றும்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தாய்
என்றும்
இலங்கையர்கோன்
சிரம்நெரித்த இறைவா என்றும்
எழில்ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும்
நலங்கொள்அடி
என்தலைமேல் வைத்தாய் என்றும்
நாள்தோறும் நவின்று
ஏத்தாய் நன்மையாமே. --- அப்பர்.
விருத்தனே
வேலைவிடம் உண்ட கண்டா
விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச்
சூடும்
ஒருத்தனே
உமைகணவா உலக மூர்த்தீ
நுந்தாத ஒண்சுடரே, அடியார் தங்கள்
பொருத்தனே
என்றென்று புலம்பி நாளும்
புலனைந்து
அகத்தடக்கிப் புலம்பி நோக்கி
கருத்தினால்
தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. --- அப்பர்.
புற்று
ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய்!
புனிதா! பொரு
வெள்விடை ஊர்தியினாய்!
எற்றேஒரு
கண்இலன் நின்னை அல்லால்,
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே!
மற்றேல்
ஒரு பற்றிலன், எம்பெருமான்!
வண்டுஆர்குழலாள்
மங்கை பங்கினனே!
அற்றார்
பிறவிக்கடல் நீந்தி ஏறி
அடியேன்உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
புற்றின்கண்
வாழ்கின்ற ஆடுகின்ற பாம்பை விரும்பி அரையின்கண் கட்டியவனே , தூய்மையானவனே , போர் செய்கின்ற வெண்மையான இடப ஊர்தியை
உடையவனே , எம் பெருமானே , வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய
உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே,
திருநெல்வாயில்
அரத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே, அடியேன் ஒருகண் இல்லாதவனாய்
இருக்கின்றேன் ; இஃது எத்தன்மைத்து
என்பேன் ! மற்றும் வினவின் , உன்னையன்றி வேறொரு
பற்றுக்கோடு இல்லேன் ; ஆதலின் , அடியேன் , இறப்புப் பொருந்திய பிறவிக் கடலைக்
கடந்து கரையேறிப் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
பிறவிப் பெரும்கடல்
நீந்துவர், நீந்தார்
இறைவன்
அடி சேராதார். --- திருக்குறள்.
அறிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினைஎனும்
தொல்மீகாமன் உய்ப்ப, அந்நிலைக்
கருஎனும் நெடுநகர்
ஒருதுறை நீத்தத்து
புலன்எனும் கோள்மீன்
அலமந்து தொடர,
பிறப்புஎனும்
பெருங்கடல்
உறப் புகுந்து அலைக்கும்
துயர்த் திரை
உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும்
நெடுங்கல் வீழ்த்து,
நிறைஎனும் கூம்பு
முரிந்து, குறையா
உணர்வு எனும்
நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு
காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா
முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த
பொதிஅவிழ் சடிலத்துப்
பையரவு அணிந்த தெய்வ
நாயக!
நின் அருள் எனும்
நலத்தார் பூட்டித்
திருவடி நெடும்கரை
சேர்த்துமா செய்யே. --- கோயில் நான்மணி
மாலை.
இப்பிறவி
என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி,
நான்
என்னும் ஒரு மகர
வாய்ப்பட்டு
இருவினை எனும்
திரையின் எற்றுஉண்டு, புற்புதம்
எனக் கொங்கை
வரிசைகாட்டும்
துப்புஇதழ் மடந்தையர்
மயல் சண்டமாருதச்
சுழல் வந்து வந்து
அடிப்ப,
சோராத ஆசையாம்
கான்ஆறு வான்நதி
சுரந்தது என மேலும்
ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல்
அறிவான வங்கமும்
கைவிட்டு மதிமயங்கி,
கள்ள வங்கக் காலர்
வருவர் என்று அஞ்சியே
கண்அருவி காட்டும்
எளியேன்
செப்பரிய முத்தியாம்
கரைசேரவும் கருணை
செய்வையோ, சத்து ஆகி என்
சித்தமிசை குடிகொண்ட
அறிவுஆன தெய்வமே
தோஜோமய ஆனந்தமே. …..
தாயுமானவர்.
துவக்கு
அற அறிந்து பிறக்கும் ஆரூரும்
துயர்ந்திடாது அடைந்து காண் மன்றும்
உவப்புடன்
நிலைத்து மரிக்கும் ஓர் பதியும்
ஒக்குமோ நினைக்கும் நின் நகரை
பவக்கடல்
கடந்து முத்தியம் கரையில்
படர்பவர் திகைப்பு அற
நோக்கித்
தவக்கலம்
நடத்த உயர்ந்து எழும் சோண
சைலனே கைலை நாயகனே.
தோற்றிடும்
பிறவி எனும் கடல் வீழ்ந்து
துயர்ப்பிணி எனும்
அலை அலைப்ப
கூற்று
எனும் முதலை விழுங்குமுன் நினது
குரைகழல் கரை புக
விடுப்பாய்
ஏற்றிடும்
விளக்கின் வேறுபட்டு அகத்தின்
இருள் எலாம் தன்பெயர் ஒருகால்
சாற்றினும்
ஒழிக்கும் விளக்கு எனும் சோண
சைலனே கைலை நாயகனே. --- சோணசைலமாலை.
மனம்
போன போக்கில் சென்றான் ஒருவன்; கண்ணை இழந்தான்.
கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே
வருகிறான். திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது.
உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை
உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக் கொள்கிறான்.
விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.
எதிர்பாராது
எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல்
காற்று, அவனை ஒரே அடியாகக்
கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து
விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம்.
கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய
காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது
பாருங்கள்!
இருண்ட
அறிவால், ஒளிமயமான உணர்வை
இழந்தது; அதன் பயனாக, ஆழங்காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித்
துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயப்
பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.
அகங்கார
மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மதமாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல்.
வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்ததுதான் கண்ட பலன். அமைதியை
விரும்பி, எப்புறம்
நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில்
காய்ச்சல்; மற்றவர் உறவில்
மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், கணபதி திருவடிகளைக் கருதுகிறது.
நினைக்க
நினைக்க, நினைவில் நிஷ்காமியம்
நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து,
இறைவனை வேண்டிப் பாடுகிறது. உணர்வு
நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டு இறைவன் திருவுளம்
மகிழ்கிறது. இறைவன் திருவருள் அசைகின்றது. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும் பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர வீசி விடுகிறது.
அந்நிலையில், முத்திக்கரை
சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனியின்பங் காண்கிறது அந்த ஆன்மா. இந்த வரலாற்றை,
இறப்பு
எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு
எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ,
துறப்பு
எனும் தெப்பமே
துணை செயாவிடின்
பிறப்பு
எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ. --- கம்பராமாயணம்.
நீச்சுஅறியாது
ஆங்குஓய் மலைப்பிறவி ஆர்கலிக்கு ஓர் வார்கலமாம்
ஈங்கோய் மலைவாழ் இலஞ்சிமே. --- திருவருட்பா.
கோஓடு
உயர் கோங்குஅலர் வேங்கை அலர்
மிகஉந்தி வரும் நிவ
வின்கரைமேல்
நீஇடுஉயர்
சோலைநெல் வாயில் அரத்
துறை நின்மலனே! நினைவார்
மனத்தாய்!
ஓஒடு
புனல் கரையாம் இளமை,
உறங்கிவ் விழித்தால்
ஒக்கும் இப்பிறவி,
வாஅடி இருந்து வருந்தல் செய்யாது
அடியேன்உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
கிளைகள்
உயர்ந்த கோங்க மரத்தின் மலர்களையும் , வேங்கை
மரத்தின் மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல்
உள்ள , நெடியனவாக ஓங்கிய
சோலைகளை உடைய திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற
மாசற்றவனே , உன்னை நினைகின்றவரது
நெஞ்சத்தில் வாழ்பவனே , இப்பிறப்பு, உறங்கியபின் விழித்தாற் போல்வது; இதன்கண் உள்ள இளமையோ, ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும்; ஆதலின், ` என் செய்வது` என்று மெலிவுற்று நின்று வருந்தாது , அடியேன் , இப் பிறவியிலிருந்து பிழைத்துப்
போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
உறங்குவது
போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது
போலும் பிறப்பு. --- திருக்குறள்.
இழித்தக்க
செய்து ஒருவன் ஆர உணலின்,
பழித்தக்க
செய்யான் பசித்தல் தவறோ;
விழித்து
இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன்
அழித்துப்
பிறக்கும் பிறப்பு. --- நாலடியார்.
உலவும்முகில்
இற்று அலைகல் பொழிய
உயர் வேயொடு இழி நிவ
வின்கரைமேல்
நிலவும்
மயி லார்அவர் தாம்பயிலும்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே!
புலன்ஐந்தும்
மயங்கி அகம் குழையப்
பொருவேலொர் நமன்தமர்
தாம்நலிய
அலமந்து
மயங்கி அயர்வதன்முன்
அடியேன்உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
உலாவுகின்ற
மேகங்களினின்றும் மலையின்கண் மழை பொழியப்பட , அந்நீர் , ஓங்கிய மூங்கில்களோடு இழிந்து வருகின்ற
நிவாநதியின் கரைமேல் உள்ள , விளங்குகின்ற மயில்
போலும் மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள மாசற்றவனே , ஐந்து புலன்களும்
தத்தமக்கு உரிய பொறிகளுக்கு எதிர்ப்படாது மாறும்படியும் , மனம் மெலியும்படியும், போர் செய்கின்ற முத்தலை வேலை (சூலத்தை)
உடைய கூற்றுவனது ஏவலர் வந்து வருத்த , பற்றுக்கோடின்றி
, உணர்வு தடுமாறி
நின்று இளைத்தற்குமுன் , அடியேன் , இறப்பினின்றும் பிழைத்துப் போதற்குரிய
ஒரு வழியினைச் சொல்லியருள் .
ஏலம்
இல வங்கம் எழில் கனகம்
மிகஉந்தி வரும் நிவ
வின்கரைமேல்
நீலம்
மலர்ப் பொய்கையில் அன்னம் மலி
நெல்வாயில் அரத்துறையாய்!
ஒருநெல்
வால்ஊன்ற
வருந்தும் உடம்புஇதனை
மகிழாது, அழகா
அலந்தேன், இனியான்,
ஆல
நிழலில் அமர்ந்தாய்! அமரா!
அடியேன் உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
` ஏலம் இலவங்கம் ` என்னும் மரங்களையும் , அழகிய பொன்னையும் மிகுதியாகத்
தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரையில் உள்ள , நீலோற்பல மலர்ப் பொய்கையில் அன்னங்கள்
நிறைந்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளி உள்ளவனே , அழகனே , ஆல் நிழலில் அமர்ந்தவனே , என்றும் இறவாதிருப்பவனே , ஒரு நெல்லின் வால் ஊன்றினும் பொறாது
வருந்துவதாகிய இவ்வுடம்பினை யான் உறுதியுடையது என்று கருதி மகிழாது உறுதியை நாடி
உழன்றேன் ; அடியேன் இதனினின்றும்
பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
சிகரம்
முகத்தில் திரள்ஆர் அகிலும்
மிகஉந்தி வரும் நிவ
வின்கரைமேல்
நிகர்இல் மயிலார் அவர் தாம்பயிலும்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே!
மகரக்
குழையாய்! மணக் கோலம் அதே
பிணக்கோலம் அதுஆம்
பிறவி இதுதான்,
அகரம்முத
லின் எழுத்து ஆகிநின்றாய்!
அடியேன்உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
மலைச்
சிகரத்தினின்றும் , திரளாய் நிறைந்த
அகிலையும் பிறவற்றையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரையில்
உள்ள , உலகின் மயில்கள்
போலாத வேறுசில மயில்கள் போலும் சிறந்த மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற
திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே , எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய
முதல் எழுத்துப்போன்று , பொருள்களுக்கெல்லாம்
முதற்பொருளாகி நிற்பவனே , இவ்வுடம்பு தான் , மணக்கோலந்தானே கடிதிற் பிணக்கோலமாய்
மாறுகின்ற நிலையாமையை உடையது ; ஆதலின் , அடியேன் இதனினின்றும் பிழைத்துப்
போதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள்.
மணம்என
மகிழ்வர் முன்னே,
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணம்எனச்
சுடுவர் பேர்த்தே,
பிறவியை வேண்டேன் நாயேன்,
பணைஇடைச்
சோலைதோறும்
பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணைவினைக்
கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சினேனே.
என்று
சுந்தரர் பிறிதொரு பாடலிலும் அருளியுள்ளது காண்க.
திண்தேர்நெடு
வீதி இலங்கையர்கோன்
திரள்தோள் இருபஃதும் நெரித்து
அருளி
ஞெண்டு
ஆடு நெடுவயல் சூழ்புறவில்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே!
பண்டேமிக
நான்செய்த பாக்கியத்தால்,
பரஞ்சோதி! நின் நாமம்
பயிலப்பெற்றேன்,
அண்டா!
அமரர்க்கு அமரர் பெருமான்!
அடியேன்உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
திண்ணிய
தேர்களை உடைய , நீண்ட தெருக்களை
யுடைய இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும்
முன்னர் நெரித்துப் பின்னர் அவனுக்கு அருள்பண்ணி , நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த
, முல்லை நிலத்தையுடைய
திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , மேலான ஒளி வடிவினனே , தேவனே , தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத்
தலைவனே , நான் முற் பிறப்பிற்
செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலும் சொல் லும் பேற்றினைப் பெற்றேன் ; இனி , அடியேன் , உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய
ஒரு வழியினைச் சொல்லியருள் .
மாணாஉரு
ஆகியொர் மண் அளந்தான்
மலர்மேல்அவன்
நேடியும் காண்பு அரியாய்!
நீள்நீள்
முடி வானவர் வந்து இறைஞ்சும்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே!
வாணார்
நுதலார் வலைப்பட்டு அடியேன்
பலவின்கனி ஈஅது
போல்வதன்முன்,
ஆணோடு
பெண்ஆம் உருஆகி நின்றாய்!
அடியேன் உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
சிறப்பில்லாத
குறள் உருவாகி உலகத்தை அளந்த திருமாலும் , மலரின்கண் இருக்கும் பிரமனும் தேடியும்
காணுதற்கு அரியவனே , நீண்ட முடியினையுடைய
தேவர்கள் வந்து வணங்கு கின்ற , திருநெல்வாயில்
அரத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , ஆணும் பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டு
நிற்பவனே , அடியேன் , ஒளி பொருந்திய நெற்றியையுடைய மாதரது
மையலாகிய வலையிற்பட்டு , பலாப் பழத்தில்
வீழ்ந்த ஈயைப் போல அழிவதற்குமுன் ,
அவர்
மையலினின்றும் பிழைத்துப்போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
கண்புனல்
துளிப்ப,அழல்படும் இழுதில்
கரைந்து உகு நெஞ்சில் நின்தனையே
பெண்பயிதல்
உருவமொடு நினைந்து, எனது
பெண்மயல் அகற்றும் நாள் உளதோ?
வண்புனல்
வேந்தன் ஆர்கலிக் குடத்து
மணிமுகில் கலயத்தின் முகந்து
தண்புனல்
ஆட்ட ஆடுறுஞ் சோண
சைலனே கைலைநா யகனே. --- சோணசைல மாலை.
நீர்
ஊரும் நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனைத்
தேர்ஊர்நெடு
வீதிநல் மாடம் மலி
தென்நாவலர் கோன்
அடித் தொண்டன்அணி
ஆரூரன்
உரைத்தன நல்தமிழின்
மிகுமாலைஒர் பத்துஇவை
கற்றுவல்லார்
கார்ஊர்களி
வண்டுஅறை யானைமன்னர்
அவர்ஆகியொர்
விண்முழுது ஆள்பவரே.
நீர்
பாய்கின்ற நீண்ட வயல்கள் சூழ்ந்த ,
முல்லை
நிலத்தை உடைய திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனாகிய
இறைவனை , தேர் ஓடும் நீண்ட
தெருக்களில் நல்ல மாடமாளிகைகள் நிறைந்த, தென்னாட்டில்
உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவனும், சிவபெருமானுக்கு அடித் தொண்டனும் ஆகிய
அழகிய ஆரூரன் பாடிய , நல்ல தமிழ்
மொழியினால் ஆகிய உயர்ந்த பாமாலையின்கண் உள்ள பத்துப் பாடல்களாகிய இவற்றைக் கற்று
உணரவல்லவர் , கருமை மிக்க, களிப்பினை உடைய வண்டுகள் ஒலிக்க
வருகின்ற யானையை உடைய மன்னர்களாகி மண்ணுலகம் முழுதும் ஆண்டு , பின் தேவர்க்குத் தலைவராய் ஒப்பற்ற
விண்ணுலகம் முழுதும் ஆள்பவர் ஆவர் .
கோடைநகர்
வாழ வந்த பெருமாளே ---
கோடை
நகர் என்பது இக் காலத்தில் "வல்லக்கோட்டை" என வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம்
மாவட்டம் ஒரகடத்துக்கு அருகில் உள்ளது வல்லக்கோட்டை. ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர்
செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில்
உள்ளது வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். ஏழு அடி உயர முருகன் திருவுருவம்
அழகு. வள்ளி, தெய்வயானை இருபுறமும் விளங்க முருகப் பெருமான் இங்கு வீற்றிருந்து அருள்
புரிகின்றார்.
கருத்துரை
முருகா!
உன் திருவடியை அடையத் திருவருள் புரிவாய்.
No comments:
Post a Comment