வல்லக்கோட்டை - 0719. தோள் தப்பாமல்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தோள் தப்பாமல் (கோடைநகர் - வல்லக்கோட்டை)

முருகா!
திருவடி நிலையை அடியேனுக்கு அருள்.
  

தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதான


தோடப் பாமற் றோய்தப் பாணிச்
     சூழ்துற் றார்துற் ...... றழுவாருந்

தூரப் போகக் கோரப் பாரச்
     சூலப் பாசச் ...... சமனாரும்

பாடைக் கூடத் தீயிற் றேறிப்
     பாழ்பட் டேபட் ...... டழியாதே

பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
     பாதத் தேவைத் ...... தருள்வாயே

ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
     தாரச் சீறிப் ...... பொரும்வேலா

ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
     காரத் தாரைத் ...... தரும்வீரா

கூடற் பாடிக் கோவைப் பாவைக்
     கூடப் பாடித் ...... திரிவோனே

கோலச் சாலிச் சோலைச் சீலக்
     கோடைத் தேவப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தோள் தப்பாமல் தோய்தப் பாணிச்
     சூழ் துற்றார் துற்று ...... அழுவாரும்

தூரப் போக, கோரப் பாரச்
     சூலப் பாசச் ...... சமனாரும்,

பாடைக் கூடத் தீயில் தேறிப்
     பாழ்பட்டே பட்டு ...... அழியாதே,

பாசத்தேனைத் தேசு உற்று ஆர்பொன்
     பாதத்தே வைத்து ...... அருள்வாயே.

ஆடல் சூர்கெட்டு ஓட, தோயத்து
     ஆரச் சீறிப் ...... பொரும்வேலா!

ஆனைச் சேனைக் கானில் தேனுக்கு
     ஆரத் தாரைத் ...... தரும்வீரா!

கூடல் பாடிக் கோவைப் பாவைக்
     கூடப் பாடித் ...... திரிவோனே!

கோலச் சாலிச் சோலைச் சீலக்
     கோடைத் தேவப் ...... பெருமாளே.


பதவுரை


      ஆடல் சூர் கெட்டு ஓட --- போரில் வலிமை கெட்டுச் சூரமதுமன் ஓடிப் போய்

     தோயத்து ஆர --- கடலிலே மாமரமாய் நிற்,

     சீறிப் பொரும் வேலா --- சினந்து போர் புரிந்த வேலாயதப் பெருமானே!

      ஆனைச் சேனை --- தெய்வயானை அம்மையாருக்கும்

     கானில் தேனுக்கு --- காட்டில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியாருக்கு

     ஆரம் தாரைத் தரும் வீரா --- முத்து மாலையையும், கடப்பமலர் மாலையையும் தந்து அருளிய வீரரே!

     கூடல் பாடிக் கோவைப் பாவைக் கூடப் பாடித் திரிவோனே --- கூடல் நகரில் எழுந்தருளி உள்ள அரசனான சொக்கநாதப் பெருமானை, தேவி அங்கயற்கண்ணியுடன் வழிபட்டுப் பாடித் திரிந்த திருஞானசம்பந்தப் பெருமானே!

      கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப் பெருமாளே --- அழகிய நெல் வயல்களும் பொழில்களும் சூழ்ந்துள்ள, நல்லொழுக்கம் உடைய அடியார்கள் வாழுகின்ற கோடை நகரில் வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      தோள் தப்பாமல் தோய்தப் பாணி சூழ் --- ஒருவர் தோள் மேல் ஒருவர் கைகோர்த்துச் சூழ்ந்து,

     உற்றார் துற்று அழுவாரும் தூரப் போக --- அழுகின்ற உற்றார்களும் தூரப் போகுமாறு,

     கோரப் பாரச் சூலப் பாசச் சமன் ஆரும் --- கோரமான உருவத்தோடு, பருத்த சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட இயமன் வந்து நெருங்குகின்ற வந்து என்து உயிரைக் கொண்ட போது,

      பாடைக் கூட --- பாடையில் எனது உடலானது கூட்டப்பட்டு,

     தீயில் தேறி --- நெருப்பில் இடப்பட்டு,

     பாழ்பட்டே பட்டு அழியாதே --- பாழாகிப் போய் அழியாமல்,

      பாசத்தேனை --- உலக பாசங்களால் கட்டுப்பட்டு உள்ள அடியேனை,

     தேசு உற்று ஆர் பொன் பாதத்தே வைத்து அருள்வாயே --- ஒளி பொருந்திய தேவரீரின் திருவடிகளில் வைத்து அருள் புரியவேண்டும்.


பொழிப்புரை


         போரில் வலிமை கெட்டுச் சூரமதுமன் ஓடிப் போய் கடலிலே மாமரமாய் நிற், சினந்து போர் புரிந்த வேலாயதப் பெருமானே!

     தெய்வயானை அம்மையாருக்கும், காட்டில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியாருக்கும் முத்து மாலையையும், கடப்பமலர் மாலையையும் தந்து அருளிய வீரரே!

     கூடல் நகரில் எழுந்தருளி உள்ள அரசனான சொக்கநாதப் பெருமானை, தேவி அங்கயற்கண்ணியுடன் வழிபட்டுப் பாடித் திரிந்த திருஞானசம்பந்தப் பெருமானே!

     அழகிய நெல் வயல்களும் பொழில்களும் சூழ்ந்துள்ள, நல்லொழுக்கம் உடைய அடியார்கள் வாழுகின்ற கோடை நகரில் வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         ஒருவர் தோள் மேல் ஒருவர் கைகோர்த்துச் சூழ்ந்து, அழுகின்ற உற்றார்களும் தூரப் போகுமாறு, கோரமான உருவத்தோடு, பருத்த சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட இயமன் வந்து நெருங்குகின்ற வந்து எனது உயிரைக் கொண்ட போது, பாடையில் எனது உடலானது கூட்டப்பட்டு, பின்னர் நெருப்பில் இடப்பட்டு, பாழாகிப் போய் அழியாமல், உலக பாசங்களால் கட்டுப்பட்டு உள்ள அடியேனை,
ஒளி பொருந்திய தேவரீரின் திருவடிகளில் வைத்து அருள் புரியவேண்டும்.


விரிவுரை

ஆடல் சூர் கெட்டு ஓட, தோயத்து ஆர, சீறிப் பொரும்
வேலா --- 

தோயம் - கடல், நீர்.

கடலிலே மாமரமாகச் சூரபதுமன் நின்றான். எம்பெருமான் வேலாயுதத்தை விடுத்து அருளினார். அது சூபதுமனைடைய உடலை இருகூறாகப் பிளந்தது. வலிமை பொருந்திய மயிலும் சேவலுமாய் நின்றான் அவன்.  மயிலை வாகனமாகவும், சேவலைத் தனது கொடியாகவும் கொண்டு அருளினார் முருகப் பெருமான்.

.....       .....           ....       சகம்உடுத்த
வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்
அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்
சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே!               ---  கந்தர் கலிவெண்பா.

கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
     கொதிவேல் படையை ...... விடுவோனே!   --- (நிலையாப் பொருளை) திருப்புகழ்.

ஆனைச் சேனை, கானில் தேனுக்கு, ஆரம் தாரைத் தரும் வீரா ---

தேவலோகப் பெண்ணாகிய தெய்வயானை அம்மையாருக்கு முத்து மமாலையையும், காட்டில் வாழ்ந்திருந்த வள்ளியம்மையாருக்கு கடப்பமலர் மாலையையும் முருகப் பெருமான் தந்து அருளினார் என்கின்றார் அடிகளார்.

கூடல் பாடிக் கோவைப் பாவைக் கூடப் பாடித் திரிவோனே --- 

கூடல் பாடி - கூடல் நகரம்.

கூடல் - மதுரை மாநமகரம், ஆலவாய் என்று திருமுறைகளில் வழங்கப்படும் அற்புதமான திருத்தலம்.

"தென்னாடுடைய சிவனே போற்றி" என்ற திருவாக்கால் தென்னாடு சிறந்தது. முத்தும் முத்தமிழும் தோன்றியது தென்னாட்டில். தென்றல் பிறந்தது தென்னாட்டில்.  இத் தென்னாட்டின் தலைநகரம் மதுரை. தடாதகைப் பிராட்டியார் திருஅவதாரம் செய்ததும், உக்கிரப் பெருவழுதியும் உருத்திரசன்மரும் அவதரித்ததும் மதுரையே. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த சிவபெருமான், வந்திக்கு ஆளாக வந்து மதுரை மண்ணைத் தன் தலையில் சுமக்க விரும்பினார் என்றால், அம் மண்ணின் பெருமையை யாராலும் அளக்கமுடியாது. அத் தமிழ் மண்ணின் அருமையையும் பெருமையையும் இறைவரே அறிவார்.

மதுரையம்பதியில் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் வேண்ட எழுந்தருளியவர் மண்ணெலாம் உய்ய வந்த வள்ளலார் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமான்.  ஆலவாய்ச் சொக்கன் அருளால் அமணரை வென்று, அருள் செறிந்த திருப்பதிகங்கள் பலவும் பாடியருளி, அருள் திருநீறு பரப்பிய திருத்தலம் மதுரையம்பதி துவாதசாந்தத் திருத்தலம் ஆகும்.

கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப் பெருமாளே ---

அழகிய நெல் வயல்களும் பொழில்களும் சூழ்ந்துள்ள, நல்லொழுக்கம் உடைய அடியார்கள் வாழுகின்ற கோடை நகரில் எம்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலிக்கின்றான்.

கோடை நகர் என்பது இக் காலத்தில் "வல்லக்கோட்டை" என வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்துக்கு அருகில் உள்ளது வல்லக்கோட்டை. ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். ஏழு அடி உயர முருகன் திருவுருவம் அழகு. வள்ளி, தெய்வயானை இருபுறமும் விளங்க முருகப் பெருமான் இங்கு வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

கோரப் பாரச் சூலப் பாசச் சமன் ஆரும் ---

கோரமான உருவத்தோடு, பருத்த சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட இயமன் வந்து நெருங்குகின்ற வந்து என்து உயிரைக் கொண்டு போவான்.

தோள் தப்பாமல் தோய்தப் பாணி சூழ், உற்றார் துற்று அழுவாரும் தூரப் போக ---

உயிரானது இந்த உடலில் இருந்து பிரிந்து பிணமான பின்னர், உற்றாரும் மற்றோரும் கூடி, தோளோடு தோள் கைகோர்த்து இணைந்து நின்று அழுவார்கள்.  பின்னர், பிணத்தை எடுக்க, விலகிப் போவார்கள்.

பாடைக் கூட தீயில் தேறி பாழ்பட்டே பட்டு அழியாதே ---

உயிர் நீங்கிய உடலானது அழகிய பாடையிலே சேர்க்கப்பட்டு, இடுகாட்டுக்குச் சுமந்து செல்லப்படும்.  அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள விறகிலே இடப்பட்டு, தீக்கு இரையாக்கப்படும்.

பாசத்தேனை தேசு உற்று ஆர் பொன் பாதத்தே வைத்து அருள்வாயே ---

உலக பாசங்களால் கட்டுப்பட்டு உள்ள இந்த ஆன்மாவுக்கு, அதில் இருந்து விடுபட இந்த உடம்பை அளித்தான். அது இறைவனின் பெருங்கருணை ஆகும். பிறப்பு சாதகம் எனப்படும். சாதகம் செய்வதற்குச் சாதனமாக இந்த உடல் சாதகம் ஆகி வந்தது.

இந்த உடலில் வாழ்கின்ற காலத்திலேயே இறையருளைக் பெற்று, உயிரானது இறைவன் திருவடியில் கலந்துக் கொள்ள வேண்டும். "உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

கருத்துரை

முருகா! திருவடி நிலையை அடியேனுக்கு அருள்.

No comments:

Post a Comment

சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளக் கூடாது.

  சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளலாமா ?  கூடாதே. -----                அரும்பெரும் பொருள் எதுவானாலும் ,  அதனை இகழ்தல் கூடாது. காரணம்...