திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
15 - பிறனில் விழையாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "நீதிமுறை தவறி, பிறனுடைய
மனையாளிடத்தல் இன்பம் வேண்டிச் செல்வோனிடத்து, பகையும், குடிப் பழியும், அச்சமும், பாவமும் என்னும்
இந் நான்கு குற்றங்களும் என்றும் நீங்காமல் இருப்பன" என்கின்றது. அவன் இம்மை
மறுமை நலன்களை இழப்பான் என்றது.
திருக்குறளைக்
காண்போம்...
பகை
பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா
ஆம் இல் இறப்பான்கண்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இல் இறப்பான்கண் --- பிறன் இல்லாள்கண்
நெறிகடந்து செல்வானிடத்து,
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் ---
பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு
குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.
(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இதனால் இல்
இறப்பான் குற்றம் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளம்மகாம, மாதவச் சிவஞான
யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில்
இருந்து ஒரு பாடல்...
ஆன்றஎழிற்
சீதையைவேட்டு ஐந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே, சோமேசா! - ஏன்ற
பகைபாவம் அச்சம்
பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான்
கண்.
பிறனில்
விழையாமையாவது காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை. இது ஒழுக்கம் உடையார்
மாட்டே நிகழ்வதாம்.
இதன்பொருள்---
சோமேசா!
இல் இறப்பான் கண் --- பிறன் மனைவியினிடத்து
நெறி கடந்து செல்வானிடத்து, ஏன்ற பகை பாவம்
அச்சம் பழி என நான்கும் --- பொருந்திய பகை பாவம் அச்சம் பழி என்று இழித்துக்
கூறப்படும் இந்நான்கு குற்றங்களும்,
இகவா
ஆம் --- ஒருகாலும் விட்டு நீங்காவாம்,
ஆன்ற எழில் --- மிக்க
அழகுடைய, சீதையை வேட்டு ---
சீராமன் மனைவியாகிய சீதாபிராட்டியாரை விரும்பி, ஐந்நான்கு திண் கரத்தான் --- வலிய
இருபது தோள்களை உடைய இராவணன், தோன்று பழி --- அன்று
தோன்றிய பழியினின்று, மாறிலன் ஏ ---
இன்றளவும் நீங்கினானில்லையே ஆகலான் என்றவாறு.
எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம்.
ரகுகுல உத்தமனான இராமபிரான் தனது
சிற்றன்னையாகிய கைகேசி செய்த சூழ்வினையால் நாடு இழந்து, காடு அடைந்து நின்ற நிலையில், இலக்குமணனால் உறுப்பு அறுப்புண்ட சூர்ப்பணகை
என்னும் அரக்கி, சீதையை இராமனில்
பிரிக்க எண்ணி, தன் தமையனாகிய
இராவணனிடம் போய்ச் சீதையின் பேரழகைப் பலபடி வருணிக்க, அவ் வருணனை கேட்ட இராவணன் சீதைபால்
மோகம் கொண்டு சந்நியாச வேடத்தோடும் சீதாராமலட்சுமணர்கள் இருந்த பஞ்சவடியை அடைந்து
தன் மாமனாகிய மாரீசனைப் பொன்மானாகப் போக்கி, இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையை
பர்ணசாலையொடு பெயர்த்துக் கொணர்ந்து, இலங்கைக்கண்
அசோகவனத்தில் சிறை வைத்துத் தன் எண்ணம் முடிவுறாது நிற்க, இராமபிரான் சுக்கிரீவன் நட்புப் பெற்று
அனுமானை நாடவிட்டுச் சீதை இலங்கையில் சிறை இருந்து வருந்துவது உணர்ந்து, வானர வீரர்களோடு திருவணை கட்டிக் கடலைத்
தாண்டி இலங்கை சேர்ந்து அரக்கர் யாவரையும் மடித்து, முடிவில் இராவணனையும் தன் அம்பிற்கு
இலக்காக்கினான்.
அடுத்து, இத்
திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள்
பாடி அருளிய,
"முருகேசர்
முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
பார்க்கவனார்
பன்னிஅத்தம் பற்றிஅலி ஆயினான்முன்
மூர்க்கனாம்
தண்டன், முருகேசா! -
வேர்க்கும்
பகைபாவம்
அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம்
இல்இறப்பான் கண்.
இதன்
பதவுரை ---
முருகேசா - முருகப் பெருமானே,
முன் --- முன்னாளிலே, மூர்க்கனாம் தண்டன் --- மூர்க்கத் தன்மை
உடையவனாகிய தண்டன் என்னும் அரசன்,
பார்க்கவனார்
பன்னி அத்தம் பற்றி --- பார்க்கவ முனிவருடைய மனைவியின் கையைப் பற்றி இழுத்து, அலி ஆயினன் --- ஆணும் பெண்ணும் அல்லாத
தன்மையை அடைந்தான். வேர்க்கும் --- வருத்தத்தை உண்டாக்குகிற, பகை பாவம் பழி அச்சம் என நான்கும் ---
பகை பாவம் பழி அச்சம் என்று சொல்லப் பெறுகிற நான்கும், இன் இறப்பான்கண் --- பிறன்
மனைவியிடத்திலே நெறிகடந்து நடப்பவன் இடத்திலே, இகவாவாம் --- விட்டு நீங்கமாட்டாவாம்.
முன்னாளிலே தண்டன் என்னும் அரசன்
பார்க்கவ முனிவருடைய மனைவி கையைப் பிடித்து இழுத்து, அம்முனிவருடைய தீமொழியினாலே ஆணும்
பெண்ணும் அல்லாத அலித்தன்மையினை அடைந்தனன். பகை பாவம் பழி அச்சம் என்னும் நான்கும்
பிறன் மனைவியிடத்திலே தீமை புரிவோனை விட்டு நீங்கமாட்டா என்பதாம்.
பன்னி --- மனைவி. அத்தம் --- கை. இறத்தல் --- நெறிகடந்து நடத்தல்.
தண்டன் கதை
முன்னாளிலே தொண்டை நாட்டை தண்டன்
என்னும் அரசன் அரசாட்சி செய்துகொண்டு இருந்தான். அவன் வேட்டை ஆடுதற்கு ஒருநாள்
காட்டிற்குச் சென்றான். நீர்வேட்கையால் மெலிந்து பார்க்கவ முனிவருடைய
இருப்பிடத்திற்குச் சென்றான். முனிவருடைய மனைவி, அரசனுடைய நீர்வேட்கையை உணர்ந்து
தண்ணீர் கொடுத்து அவனுடைய துன்பத்தைப் போக்கினாள். தண்டன் அவளுடைய அழகைப்
பார்த்துக் காமவேட்கை கொண்டான். அவளுடைய கையை வலிந்து பற்றினான். இச்செய்தியை
உணர்ந்த பார்க்கவமுனிவர் தண்டன் அலியாகுமாறு தீமொழி புகன்றார். அரசன் தண்டனும்
ஆணும் பெண்ணும் அல்லாத அலித்தன்மையை அடைந்து மிகுந்த வருத்தத்திற்கு
உள்ளானான். தம்டனிடத்தில் பகை பாவம் பழி
அச்சம் என்னும் நான்கும் என்றும் நீங்காதனவாய் நிலைபெறல் ஆயின.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
அச்சம்
பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம்
நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே
கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க
நாணுடை யார். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
அச்சம் பெரிதால் --- உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் ---
அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவே ஆதலாலும், நிச்சம் நினையுங்கால் கோ கொலையால் ---
நாடோறும் நினைக்குமிடத்து அதற்கு ஏற்ற தண்டனை உண்மையாக அரசனது கொலைக் கட்டளை ஆதலாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் ---
நாடோறும் அழல்வாய் நரகுக்கே உருவாகிய செயலாதலாலும். பிறன் தாரம் நம்பற்க
நாணுடையார் --- பழிபாவங்கட்கு அஞ்சுதலுடையார் பிறன் மனைவியை விரும்பாமல் இருப்பாராக
!
பிறன் மனைவியை விரும்பி ஓழுகுவார்க்கு
எந்நாளும் இருமையிலும் துன்பமே ஆகும்.
அறம்புகழ்
கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரா, - பிறன்தாரம்
நச்சுவார்ச்
சேரும் பகைபழி பாவம் என்று
அச்சத்தோடு
இந்நாற் பொருள். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் ---
புண்ணியம், புகழ், தக்கார் நேயம், ஆண்மை என இந் நான்கும்; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா --- பிறன்
மனைவியை விரும்புவாரிடத்தில் சேரமாட்டா; பகை
பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் --- பிறர் பகையும் பழியும் பாவமும்
அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன்
தாரம் நச்சுவார்ச் சேரும் --- பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.
பிறன் மனைவியை விரும்புவார்க்குப்
புண்ணியமும் புகழும் தக்கார் கூட்டுறவும் வீரமும் உண்டாகா.
புக்க
இடத்து அச்சம், போதரும் போது அச்சம்,
துய்க்கும்
இடத்து அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம்,
எக்காலும்
அச்சம் தருமால், எவன்கொலோ
உட்கான்
பிறன்இல் புகல். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
புக்க இடத்து அச்சம் --- புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் --- திரும்பி வரும்போது
அச்சம் ; துய்க்கும் இடத்து
அச்சம் --- இன்பம் நுகரும்போது அச்சம்;
தோன்றாமல் காப்பு அச்சம் --- பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் --- இங்ஙனம்
எந்நேரமும் அச்சம் தரும்; எவன் கொலோ உட்கான்
பிறன் இல் புகல் --- ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதல்?
பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதலில்
முழுதும் அச்சமே அல்லாமல் இன்பம் இல்லையே.
காணின்
குடிப்பழியாம் ; கையுறின்
கால்குறையும்;
ஆண்இன்மை
செய்யுங்கால் அச்சமாம்;
- நீள்நிரயத்
துன்பம்
பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம்
எனக்கெனைத்தால் கூறு. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
காணின் குடிப்பழியாம் --- பிறர் கண்டு
விட்டால் குடிக்குப் பழிப்பாம்;
கையுறின்
கால் குறையும் --- கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் ---
ஆண்மை இல்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் ---
நெடுங்கால் நரகத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி --- தீயொழுக்கம் உடையவனே!;
நீ
கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு --- நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ? எனக்குச் சொல்.
பிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலும்
இன்றி இன்பம் சிறிதும் இல்லை.
"ஓவியம் அமைந்தநகர் தீ
உண உளைந்தாய்,
கோஇயல் அழிந்தது என, வேறொரு குலத்தோன்
தேவியை நயந்துசிறை
வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும்பழி இதின்
பழியும் உண்டோ?".
--கம்பராமா. யுத்த.
மந்திரப்படலம்,
இதன்
பதவுரை ---
கோ இயல் அழிந்தது என --- நமது ஆட்சியின் தன்மை
அழிந்து விட்டது என்று; ஓவியம் அமைந்த நகர் --- சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை மாநகரத்தை; தீ உண உளைந்தாய் ---
(அனுமன் வைத்த) தீ உண்டமைக்கு மனம் வருந்தினாய்; வேறு ஒரு குலத்தோன் --- அரக்கர் இனம் அல்லாத வேறு
ஒரு குலத்தவனான இராமனுக்கு உரிய;
தேவியை நயந்து --- மனைவியான சீதையை விரும்பி; சிறை வைத்த செயல் நன்றோ --- (கவர்ந்து வந்து)
சிறையில் வைத்த உனது
செயல் நல்லதோ? பாவியர் உறும் பழி --- பாவம் செய்தவர் அடையும் பழிகளிலே; இதின் பழியும் உண்டோ --- இதை விடவும் கொடிய பழி வேறு உள்ளதோ?
பிறன்வரை
நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன்றே
யயினு மாக - சிறுவரையும்
நன்னலத்த
தாயினுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க
வுண்ணடுங்கு நோய். --- நீதிநெறி விளக்கம்.
இதன்
பதவுரை ---
பிறன்வரை நின்றாள் --- பிறனது எல்லைக்கண்
நின்றவள்; பிறன்மனைவி; (“பிறன்வரையாள்”
(குறள். 150) என்றார்
திருவள்ளுவரும்). கடைத்தலைச் சேறல் --- அவளது இன்பத்தை விரும்பி அவள் வீட்டு
வாயிலிடத்தே சென்று நிற்றலை. சிறுவரையும் --- சிறிது பொழுதாயினும். நல் நலத்தது ---
நல்ல இன்பத்தைத் தருவது. நலம் அன்று --- இன்பம் அன்று. அது மெய்ந் நடுங்க மனம்
நடுங்க வருவதோரு நோயாகும்.
பிறர் மனை நயப்பவர்
அறம் அல்லாததைச் செய்தவராவதோடு எப்போதும் அச்சத்தை அடைதலால், தாம் கருதிய இன்பமும் பெறாதவர் ஆவர் என்பது
கருத்து.
கொலையஞ்சார்
பொய்ந்நாணார் மானமு மோம்பார்
களவொன்றோ
வேனையவுஞ் செய்வார் - பழியோடு
பாவமிஃதென்னார்
பிறிதுமற் றென்செய்யார்
காமங்
கதுவபட் டார்.
இதன்
பதவுரை ---
காமம் கதுவப்பட்டார் --- காமத்தால்
பற்றப்பட்டவர்கள், கொலை அஞ்சார் ---
கொலை புரியப் பயப்படார், பொய் நாணார் --- பொய்
சொல்லக் கூசார், மானமும் ஓம்பார் ---
தம் பெருமையையும் பாதுகாவார், களவு ஒன்றோ --- களவு
செய்தலொன்றோ ! (அதற்கு மேலும்) ஏனையவும் செய்வார், மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும்
செய்வார், இஃது --- இந்தக் காமம், பழியொடு பாவம் என்னார் --- பழியொடு
பாவமாம் என்றும் நினையார், (அங்ஙனமாயின் அவர்)
பிறிது என் செய்யார் --- வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளுஞ் செய்வார்.
இன்பமோ
சிறிது ஆகும், இதில்வரும்
துன்பமோ
கரை இல்லாத் தொடுகடல்
என்பது, ஆரும் இவனால் அறிய, இவ்
வன்பது
அன வினையால் வருந்துவான். --- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன்
பதவுரை ---
இன்பமோ சிறிது ஆகும் --- (காமத்தால் வரும்)
இன்பமே
அற்பமாகும், இதில் வரும் துன்பமோ கரை இல்லாத் தொடு
கடல் --- இதனால் விளையுந் துன்பமோ கரையில்லாத கடலாகும், என்பது --- என்னும் உண்மையை, ஆரும் இவனால் அறிய --- யாவரும்
இப்பாவியினால் அறிந்து கொள்ள, இவ்வன்பது ஆனவினையால்
வருந்துவான் --- இக் கொடுமையான தீவினையால்
வருந்துவானாயினன்.
மையல்
நாகம் மதியை விழுங்க, அக்
கையன்
ஆயைக் கலந்து ஒழுகுஞ் செயல்
ஐயன்
தான் குறிப்பால் கண்டு, அயல்செவிக்கு
உய்ய
லாவண்ணம் உள்ளத்து அடக்கினான்.
--- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இத்ன
பதவுரை ---
மையல் நாகம் மதியை விழுங்க --- காம
மயக்கமாகிய இராகுவானது
அறிவாகிய மதியை விழுங்கலால், அக் கையன் ஆயைக்
கலந்து ஒழுகும் செயல் --- அந்தக் கீழ்மகன் தாயைக் கூடியொழுகுஞ் செயலினை, ஐயன் குறிப்பால் கண்டு --- அவன்
தந்தையானவன் குறிப்பாலறிந்து, அயல் செவிக்கு உய்யலா
வண்ணம் உள்ளத்து அடக்கினான் --- பிறர் செவிக்குச் செல்லாவாறு அதனை மனத்தின்கண்
அடக்கியொழுகினான்.
வேற்றோர்
வைகல் வெளிப்படக் கண்டு, அறம்
சாற்று
நாவினன் வேறு ஒன்றும் சாற்றிலன்,
சீற்றம்
மேல்கொடு செல்வன் கொல்வேன் என
ஏற்று
எழுந்தனன், ஈன்றாள்
விலக்குவாள்.
--- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன்
பதவுரை ---
வேறு ஓர் வைகல் --- மற்றொரு நாளில், வெளிப்படக் கண்டு --- புலப்படக் கண்டு, அறம் சாற்றும் நாவினன் --- அறநெறியைக்
கூறும் நாவினையுடையனாய், வேறு ஒன்றும்
சாற்றிலன் --- பிறிதொன்றும் கூறானாயினன்; (அங்ஙனமாகவும்), செல்வன் --- அவன் புதல்வன், சீற்றம் மேல்கொடு --- சினத்தை
மேற்கொண்டு, கொல்வேன் என ஏற்று
எழுந்தனன் --- அவனைக் கொல்வேனென்று எதிர்ந்து எழுந்தான் ஈன்றாள் விலக்குவாள் ---
பெற்றவள் விலக்குவாளாய்.
அறம் கூறியது அன்றி, அவனை இகழ்ந்து உரைத்திலன் என்க.
தாயில்
இன்பம் நுகர்ந்தனை, தந்தையைக்
காயில்
என்பெறுவாய் எனக் காமுகர்க்கு
ஆயில்
அன்னையில் அப்பனில் என்பயன்,
ஏயில்
இன்னருள் என்?, அறம் என்? என்றான்.
--- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன்
பதவுரை ---
தாயில் இன்பம் நுகர்ந்தனை --- தாயினிடத்துக்
காம இன்பத்தினை
நுகர்ந்தாய், தந்தையைக் காயில் என்
பெறுவாய் என --- (இன்னும்) தந்தையைக் கொன்றனை ஆயின் என்ன பயனை அடைவாயோ என்று கூற, காமுகர்க்கு --- காமுகர்களுக்கு, ஆயில் --- ஆராய்ந்து பார்க்கில், அன்னையில் அப்பனில் என் பயன் ---
தாயாலும் தந்தையாலும் என்ன பயன்,
இன்
அருள் ஏயில் என் அறம் (ஏயில்) என் என்றான் --- இனிய அருளைப் பொருந்தில் என்ன பயன்? அறத்தைப் பொருந்தில் என்ன பயன்? என்றனன்.
மண்
தொடும் கருவிப் படை வன்கையில்
கொண்டு, தாதை குரவன் என்று ஓர்கிலான்,
துண்ட
மாகத் துணித்தனன் ஆய்முகத்து
உண்ட
காம நறவால் உணர்விலான்.
--- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன்
பதவுரை ---
மண் தொடும் கருவிப் படை வன் கையில் கொண்டு --- மண் வெட்டுங்
கருவியாகிய படையினைத் தனது வலிய கையிலேந்தி, தாதை குரவன் என்று ஓர்கிலான் --- தன்
தந்தையை ஐங்குரவருள் ஒருவனென்று அறியாதவனாய், ஆய் முகத்து உண்ட காம நறவால் உணர்வு
இலான் --- தாயினிடத்துப் புணர்ந்து நுகர்ந்த காமமாகிய கள்ளினால் அறிவிழந்த பாவி, துண்டமாகத் துணித்தனன் --- (அவனைத்)
துண்டு பட வெட்டினான்.
மண்டொடுங் கருவி --- மண் வெட்டி. கருவிப்படை
: வன்கை
- கொலை செய்யுங் கை.
ஐங்குரவர்
இவர் என்பதனையும், அவரை வழிபட வேண்டும்
என்பதனையும்,
"அரசன் உவாத்தியான் தாய்தந்தை
தம்முன்
நிகரில்
குரவர் இவர் இவரைத்
தேவரைப்
போலத் தொழுதெழுக வென்பதே
யாவருங்
கண்ட நெறி"
என்னும்
ஆசாரக்கோவையால் உணர்க.