005. இல்வாழ்க்கை - 09. அறன் எனப்பட்டதே





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லறவியல்

ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது திருக்குறளாகிய இது,  இல்லறம் துறுவறம் என்று சொல்லப்பட்ட இருவகை அறங்களிலே, சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்லறமே ஆகும் என்றும், துறவறமானது பிறரால் பழிக்கப்படுதல் இல்லாது இருந்தால், அந்த இருவாழ்க்கையோடு ஒரு தன்மையதாக நல்லது என்கின்றது.

     துறவறத்திலே மனத்தையும் இந்திரியங்களையும் வருந்தி அடக்க வேண்டியது இருக்கின்றது, எனவே, அந்தத் துறவறம் தவறு இன்றி முற்றுப் பெற வேண்டும். இல்லையானால் கூடாவொழுக்கத்தில் முடியும். எனவே, அது முற்றுப் பெறுவது அரிது.

     ஆனால், இல்லறத்திலே, இந்திரியங்களை அடக்காமல், ஐம்புல இன்பங்களையும் ஆர அனுபவிக்கும் மேம்பாடு உள்ளது.

     "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" என்பது கொன்றைவேந்தன்.

திருக்குறளைக் காண்போம்....


அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை --- இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே;

     அஃதும் --- ஏனைத் துறவறமோ எனின், அதுவும்

     பிறன் பழிப்பது இல்லாயின் நன்று --- பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.

         (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று.)

     இத் திருக்குறள் கருத்தை ஏற்று நிற்கும், பின் வரும் தண்டலையார் சதகப் பாடலை எண்ணுக.

புல்லறிவுக்கு எட்டாத தண்டலையார்
         வளம் தழைத்த பொன்னி நாட்டில்,
சொல் அற மாதவம் புரியும் சௌபரியும்
         துறவறத்தைத் துறந்து மீண்டான்,
நல் அறமாம் வள்ளுவர் போல் குடிவாழ்க்கை
         மனைவியுடன் நடத்தி நின்றால்,
இல்லறமே பெரிது ஆகும், துறவறமும்
         பழிப்பு இன்றேல் எழில் அது ஆமே. ---  தண்டலையார் சதகம்.

         இதன் பொருள் ---

     புல்  அறிவுக்கு  எட்டாத  தண்டலையார் வளம் தழைத்த பொன்னி நாட்டில் --- உயிர்கள் தமது சிற்றறிவு கொண்டு அறியக் கிட்டாத தண்டலையாரின் வளம் மிகுந்த  காவிரி பாயும் சோழ  நாட்டில்,

     சொல் அற மாதவம் புரியும் சௌபரியும் --- பேச்சு இன்றிப்  பெருந்தவம் செய்த சௌபரி என்னும் முனிவனும்,

     துறவறத்தைத் துறந்து மீண்டான் --- தான் மேற்கொண்டு இருந்த துறவறத்தை விட்டுத் திரும்பினான்,

     வள்ளுவர் போல மனைவியுடன் நல்லறம் ஆம் குடிவாழ்க்கை நடத்தி நின்றான் --- திருவள்ளுவ நாயனாரைப் போல இல்லாளுடன் நல்ல அறமாகிய இல்வாழ்க்கையை இனிதே நடத்தினான்.

     (ஆகையால்),

     இல் அறமே பெரிது ஆகும் --- இல்லறமே சிறந்தது ஆகும்,

     துறவு அறமும் பழிப்பு இன்றேல் எழிலது ஆம் ---- துறவறமும் பிறரால் பழிக்கப் படாமல் அமைந்தால் அழகியது ஆகும்.

சாட்டையில் பம்பர சாலம் போல் எலாம்
ஆட்டுவான் இறை என அறிந்து, நெஞ்சமே!
தேட்டம் ஒன்று அற, அருள் செயலில் நிற்றியேல்,
வீட்டு அறம், துறவு அறம் இரண்டும் மேன்மையே.     --- தாயுமானார்.

இதன் பொருள் ---

எனக்கு ஒப்பில்லாத உறுதுணையாக வேண்டிய என் மனமே! கயிற்றினால் சுழற்றப்பட்டுக் கிறுகிறு எனச் சுற்றி நிற்கும் பம்பரக் கூட்டங்கள் போன்று, உனக்கென எவ்வகைத் தேட்டமும் இல்லாமல் திருவருட் செயலின்வழி நிற்பாயானால், மனையற வாழ்க்கையும் தனை நிகர் துறவற வாழ்க்கையும் திருவடிப் பேறெய்துதற்கு ஒத்த மேம்பாடுடையனவே ஆகும்.

நாடுகளில் புக்கு உழன்றும், காடுகளில் சரித்தும்,

         நாகமுழை புக்குஇருந்தும், தாகமுதல் தவிர்ந்தும்,

நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்,

         நின்மல ஞானத்தை இல்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்,

ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே, இடைக்கே,

         எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும், இறைஞானம்

கூடுமவர், கூட அரிய வீடும் கூடிக்

         குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்.  ---  சிவஞானசித்தியார்.

இதன் பொருள் ---

பல நாடுகளில் உள்ள புண்ணியப் பதிகளை வணங்கியும், புண்ணிய தீர்த்தங்களில் அடியும், காடுகளுக்குள்ளே அலைந்து திரிந்தும், குகைகளிலே புகுந்து யோக சாதனை புரிந்தும், பசி நீர்வேட்கை போன்றவற்றைப் பல காலம் பொறுத்துக் கொண்டு தவம் இயற்றியும் இவ்வாறு செயற்கரிய செய்த தவத்தினரும் சிவஞானம் பெற்றிலரேல் மீண்டும் பிறப்புக்கு உட்படுவர். இறைஞானம் பெற்றவர்கள் வாசமிகுமலர் அணிந்த மங்கையரோடு கூடி வாழினும் பிறர் சென்று சேர்வதற்கரிய வீடு பேற்றினை அடைந்து சிவபெருமானின் சிவந்த குஞ்சித தாள்களைக் கும்பிட்டே இருப்பர்.


உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு.       --- இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     உடையான் வழக்கு இனிது --- பொருளுடையான் தனது பொருளைப் பிறர்க்கு வழங்குதல் இனிது.

     ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை.முன் இனிது --- மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் மாறுபாடின்றி ஒன்றுபடக் கூடுமாயின் இல்வாழ்க்கையானது முற்பட இனிது ;

     மாணாதாம் ஆயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாக நன்கு இனிது --- (அங்ஙனம்) மாட்சிமைப்படாது எனின், யாக்கை முதலியன நில்லாமையை ஆராய்ந்து, தாமதியாதவராய், அகம் புறமாகிய இருவகைப் பற்றுகளையும் விடுதல் தலைப்பட மிக இனிது.

ஒப்ப முடிதலின் அருமை தோன்ற ‘ஒப்ப முடிந்தால்' என்றார்.

"காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்"

என நன்னெறியும்,

"மருவிய காதல் மனையாளுந் தானும்
இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ்
செல்லாது தெற்றிற்று நின்று "

என அறநெறிச்சாரமும் கூறுதல் காண்க.

     துறவறத்தில் நின்றவரும் மாதவரும் மாதர் மயக்கில் விழுந்து, தமது மாண்பினை இழப்பர் என்பதை, பின் வரும் கம்பராமாயணப் பாடல்கள் விளக்கும்....

ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது. காமன் கை வில் எனும்
வாக்கு மாத்திரம்; அல்லது. வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே!
                                  ---  கம்பராமாயணம், பூக் கொய் படலம்.

இதன் பதவுரை ---

உள்ளத்து  ஊக்கம் உடைய --- (தவம் புரிவதில்) மனத்தில் ஊக்கம் (மிகக்) கொண்ட; முனிவரால் --- முனிவர்களிடத்தில்; காமன் கை வில் காக்கல் ஆவது எனும் --- காமன் வில்லின் ஆற்றலைக் காக்கத் தக்க ஆற்றல் உண்டு என்று (உலகில்) சொல்லப்படுகின்ற; வாக்கு மாத்திரம் அல்லது --- வாய்ச்சொல் மட்டும் (பிரபலமே) யன்றி (உண்மையை ஆராய்ந்தால்   அம்முனிவர்களின் ஆற்றலைப் பொடியாக்குதற்கு); வல்லியில்   பூக்கொய்வாள் --- பூங்கொடிகளிலிருந்து பூக்களைக் கொய்யும்  ஒருத்தியின்;  புருவக் கடை போதும் --- புருவத்தின் நுனிப்
பகுதியின் கடைப் பார்வையே போது மானதாகும்.

துறவறத்தில் நிற்பதாக் சென்று, காமத்தை அடக்குமுடியாமயால், பெண்களின் வயப்படுதலை விட, இல்லறத்தில் இருந்து, அச் சுகத்தையும் அனுபவித்தே வீடு பெறலாம்.


நாறு பூங் குழல் நன்னுதல். புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று. ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்.
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ!
                                   ---  கம்பராமாயணம், பூக் கொய் படலம்.

இதன் பதவுரை ---

     நாறு பூங்குழல் நன்னுதல் --- மணக்கின்ற பூக்களை அணிந்த கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடையாள் ஒருத்தி; புன்னை மேல் ஏறினான் --- புன்னை மரத்தின் மீது  (பூக்கொய்ய) ஏறியுள்ள தன் கணவனுடைய;  மனத்து உம்பர் சென்று ஏறினாள் --- மனத்தின் மீது ஏறி அமர்ந்திருந்தாள்; ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் --- மனத்தில் ஊற்றாய்ச் சுரக்கின்ற அறிவினைப் பெற்ற உயர்ந்தோர் ஆனாலும்; வீறு சேர் முலை மாதரை  வெல்வரோ? --- பெருமை மிக்க தனங்களையுடைய பெண்டிரை  வெல்ல வல்லவர் ஆவரோ? (ஆகார் என்க.)

     அவன் புன்னை மேல் ஏறினான். இவளோ அவன் உள்ளத்தின் மேல் ஏறினாள். உருவுடைய மரத்தின் மேல் ஏறலினும்,  உருவற்ற உள்ளத்தின்மேல் ஏறல் அன்றோ உயர்வுக்கு உரியது  என்றவாறு. 

     ஞானத்தால் உயர்ந்தாரும் காமத்தால் தாழ்வர்  என்பது குறிப்பு.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...