006. வாழ்க்கைத் துணைநலம் - 10. மங்கலம் என்ப





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்

     இந்த அதிகாரத்தில் வரும் இறுதித் திருக்குறள், மனைவியின் சிறப்பானது மங்காத நலம் உடையது. அந்த மங்காத சிறப்புக்கு நல்ல அணிகலன் நன்மக்கள் பேறு ஆகும் என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

மங்கலம் என்ப மனைமாட்சி, மற்று அதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.

இதற்குப் பரிமேலகர் உரை ---

         மங்கலம் என்ப மனை மாட்சி --- ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை;

     அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு --- அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.

         ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

பின்வரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க...

"மற்றுஅவர்தம் திருமனையார்,
     வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார், எவ்வுலகும்
     பெறற்குஅரிய பெருமையினார்
பொற்பு உடைய பகவதியார்
     எனப்போற்றும் பெயர்உடையார்
கற்புமேம்படு சிறப்பால்
     கணவனார் கருத்து அமைந்தார்".

இதன் பொழிப்புரை ---

அவருடைய (சிவபாத இருதயர்) மனைவியார், அவருக்குப் பொருந்திய அந்தணர் மரபில் வந்தவர். எல்லாவுலகமும் பெறுதற்கு அரிய பெருமையையுடையவர். அழகுடைய `பகவதியார்' என்று போற்றப்படுகின்ற பெயரை உடையவர். கற்பால் மேன்மையுறும் சிறப்பால் தம் கணவரின் கருத்துக்கு ஏற்ப அமைந்து ஒழுகுபவர்.


"மனையறத்தில் இன்பம்உறு
     மகப்பெறுவான் விரும்புவார்,
அனையநிலை தலைநின்றே,
     ஆடிய சேவடிக் கமலம்
நினைவு உற,முன் பரசமயம்
     நிராகரித்து, நீறு ஆக்கும்
புனைமணிப் பூண் காதலனைப்
     பெறப் போற்றும் தவம்புரிந்தார்".
                                                                       
இதன் பொழிப்புரை ---

     இல்வாழ்க்கையில் இன்பம் அளிக்கும் மகவைப் பெறும் விருப்பத்தைக் கொண்ட சிவபாத இருதயர் அந்நிலையில் ஊன்றி நின்று, சிவபெருமானின் ஆடும் திருவடிப் போதுகளை நினைந்து, முன்னர்ப் பரசமயங்களின் தீமையைப் போக்கித் திருநீற் றின் விளக்கத்தை மிகுதிப் படுத்தும் அழகிய அணிகளை அணியும் திருமகனைப் பெறும் பொருட்டுத் தவத்தைச் செய்தார்.


மனைக்கு விளக்கம் மடவார், மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர், மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே, கல்விக்கும்
ஓதில் புகழ்சால் உணர்வு.       ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     மனைக்கு விளக்கம் மடவார் - வீட்டுக்கு ஒளி பெண்கள்;

      மடவார் தமக்கு தகை சால் புதல்வர் - பெண்களுக்கு  நல்லியல்புகள் நிறைந்த மக்கள் ஒளி;

      மனக்கு இனிய காதல் புதல்வர்க்கு கல்வியே --- பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும் அன்பிற்குரிய மக்கட்குக் கல்வியறிவே ஒளியாகும்;

      கல்விக்கும் ஓதின் புகழ் சால் உணர்வு --- அக் கல்வி அறிவிற்கும், சொல்லுமிடத்து புகழ் நிறைந்த மெய்யுணர்வே ஒளியாகும்.

      மனைக்கு விளக்கம் நன் மனைவி; நன் மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள்; அம் மக்கட்கு விளக்கம் கல்வி;கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...