008. அன்புடைமை - 07. என்பில் அதனை




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

எட்டாம் அதிகாரம் - அன்புடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "எலும்பு இல்லாத புழுவினை வெயில் வருத்துவது போல, உள்ளத்தில் அன்பு இல்லாத மனித உயிரை அறக்கடவுள் வருத்தும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

என்பு இல் அதனை வெயில் போலக் காயுமே,
அன்பு இல் அதனை அறம்.

      என்பு இல் அதனை வெயில் போலக் காயும் --- என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற் போலக் காயும்;

     அன்பு இல் அதனை அறம் --- அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.

         ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.)

பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்தவை ......

கல்லா ஒருவர்க்குத் தம்வாயில் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்             --- நான்மணிக் கடிகை.

இதன் பதவுரை ---

     கல்லா ஒருவர்க்குத் தம் வாயின் சொல் கூற்றம் --- கல்வியறிவில்லாத ஒருவருக்குத் தமது வாயிலிருந்து வரும் சொல்லே எமனாகும்;

         மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் --- மெல்லிய இலைகளையுடைய வாழை மரத்துக்கு, தான் வெளிவிட்ட குலையே எமனாகும்;

         அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் --- தீயவை செய்யும் மக்கட்கு அறக்கடவுளே எமனாம்;

         இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள் கூற்றமே --- வீட்டிலிருந்து கொண்டு, கற்புக் கேடாக மறைவாக ஒழுகும் மனைவி,  தன்னைக் கொண்ட கணவனுக்கு எமனே ஆவாள்.

         கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயில் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்; வாழை மரத்துக்கு அது ஈனும் குலையே கூற்றுவனாம்; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்திலிருந்து கொண்டு மறைவாய்க் கற்புக் கெடுபவள் கொண்டானுக்குக் கூற்றுவனேயாவாள்,


உயிர்ப்புஇலன், துடிப்பும் இல்லன்
     என்று உணர்ந்து, உருவம் தீண்டி,
அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு
     ஆர் உயிர் இன்மை தேறி,
மயில் குலம் அனைய நங்கை
     கோசலை மறுகி வீழ்ந்தாள் -
வெயில் சுடு கோடைதன்னில்
     என்பு இலா உயிரின் வேவாள்.     --- கம்பராமாயணம், தைலமாட்டு படலம்.

இதன் பதவுரை ---

     குலம் மயில் அனைய நங்கை கோசலை --- சிறந்த மயிலை ஒத்த பெண்ணாகிய கோசலையானவள் உயிர்ப்பு இலன்;  துடிப்பும் இல்லன்என்று உணர்ந்து --- தசரதனுக்கு மூச்சு இல்லை துடிப்பும் தொட்டு; அயிர்த்தனள் நோக்கி --- ஐயுற்றுப் பார்த்து;  மன்னற்கு --- தசரதனுக்கு; ஆர் உயிர் இன்மை தேறி --- அரிய உயிர் இல்லை என்பது தெளிந்து; வெயில் சுடு கோடை தன்னில் --- வெள்ளில் சுடுகின்ற கோடைக் காலத்தில்; என்பு இலா உயிரின் --- எலும்பு இல்லாத (புழு முதலிய) பிராணிகள் போல; வேவாள் -- வெந்து;  மறுகி - மனம் சுழன்று;  வீழ்ந்தாள் --- விழுந்தாள்.

     இறுதி அடியின் சொல்லாட்சியை என்பிலதனை வெயில் போலக் காயுமே' என்பதனோடு  ஒப்பிடலாம்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...