012. நடுவு நிலைமை - 09. சொற்கோட்டம் இல்லது





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பன்னிரண்டாம் அதிகாரம் - நடுவு நிலைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "மனம் கோணாமல் இருக்குமானால், வாயில் இருந்து பிறக்கும் சொல்லும் கோணாமல் இருக்கும்; அதுவே நடுவு நிலைமை ஆகும்" என்கின்றது.

---   உள் கோட்டம் - உள்ளம் வஞ்சனையாய் நிற்பது.
---   சொல் கோட்டம் - வாய்மொழியானது வஞ்சகமாய் மாறுவது.
---   மனம் கோணாது இருந்தால் சொல்லும் கோணாது.

திருக்குறளைக் காண்போம்...

சொல் கோட்டம் இல்லது செப்பம், ஒரு தலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     செப்பம் சொற்கோட்டம் இல்லது --- நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்;

     உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் --- அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.

      (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.)

     இத் திருக்குறள்க்கு விளக்கமா, சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

நீதியில் பாஞ்சாலி கடாவிற்கு விடை நேர் விகன்னன்
மூதவையில் சொற்றான், முருகேசா! - காதலினால்
சொல்கோட்டம் இல்லது செப்பம், ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, 

     நீதியில் பாஞ்சாலி கடாவிற்கு --- நேர்மையோடு பாஞ்சாலியானவள் கேட்ட கேள்விக்கு, விடை --- மறுமொழியை, நேர் விகன்னன் --- நேர்மை பொருந்திய விகர்னன் என்பவன், மூதவையில் சொற்றான் --- முதுமை தங்கிய பெரியோர்கள் கூடியிருந்த அவையிலே கூறினான். காதலினால் --- ஒருவரிடத்திலே கொண்ட அன்பினால், ஒருதலையா உள்கோட்டம் --- உறுதியாக உள்ளத்தில் மாறுபட்டுப் போகாத தன்மையைப் பெற்றிருந்தால், சொல் கோட்டம் இல்லது செப்பம் --- சொல்லுகின்ற சொல்லும் கோணாது செம்மையாக அமையும்.

         பெரியோர்கள் கூடியிருந்த பேரவையில் பாஞ்சாலி கேட்ட கேள்விக்கு விகர்னன் தகுந்தவாறு மறுமொழி கூறினான்.  ஒருவர் நேர்மையான உள்ளம் படைத்தவராக இருப்பாரானால் அவர் கூறும் சொல்லும் செம்மையானதாக அமைந்திருக்கும் எண்பதாம். 

     கடா --- வினா. மூதவை --- முதுமை தங்கிய பெரியோர்களாகிய வீடுமர், திருதராட்டிரன், துரோணர் முதலிய பெரியவர்கள் கூடியிருந்த அவை. சொற்றான் --- சொன்னான் என்பது வலித்தல் விகாரம் பெற்றது.

                                    விகர்னன் கதை

         துரியோதனன் பாண்டவர்களைத் தன்னுடைய அவைக்கு வரவழைத்து வஞ்சகமாகச் சூதாடி, நாடு நகரம் முதலியவைகளைப் பற்றிக் கொண்டு பல தீமைகளைச் செய்தான். திரௌபதியையும் அவைக்குக் கொண்டு வரச் செய்தான். அரசர்கள் கூடியுருந்த அவைக்கு வந்த திரௌபதி அங்குக் கூடியிருந்த பெரியோர்களைப் பார்த்துச் சில கேள்விகளைக் கேட்டாள். அப் பெரியோரகள் அரவக் கொடியோனாகிய துரியோதனனுக்கு அஞ்சி, யாதும் மறுமொழி கூறாது ஊமைபோல் இருந்தார்கள். துரியோதனனுக்குத் தம்பியாகிய விகர்னன் துரியோதனனுக்குச் சிறிதும் அஞ்சாது நேர்மையான மொழிகளை அவையிலே எடுத்துப் பேசினான்.

பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க.

திரௌபதி சபையில் இருந்த கங்கையின் மைந்தரான பீஷ்மரைப் பார்த்து முறையிடுகின்றாள்...

பொல்லா வசையே, புகழ் பூணாப்
     புல்லன் புகல,இதற்கு ஒன்றும
சொல்லாது இருந்த பேர் அவையைத்
     தொழுதாள், அழுதாள், சோர்வுற்றாள்;
'மல்ஆர் திண்தோள் மாமாவோ!
     மந்தாகினியாள் மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு,
     இதுவோ மண்ணில் இயல்பு?' என்றாள்.

     அதற்கு, மந்தாகினியின் மைந்தரான பீஷ்மர் பகர்ந்த மறுமொழி....
    
இன்னல் படுசொல் பாஞ்சாலி
     இரக்கம்தனைக் கண்டு, இரக்கம் உறா,
'மன்னற்கு இளையோய்! தவறு உரைத்தல்
     வழக்கோ, வடமீன் அனையாளை?'
என்னக் கழறி, 'நீ உரைத்த
     எல்லாம் அரசற்கு இயம்பு' என்றான்-
முன்னர்ப் புகலும் குருகுலத்தோர்
     முதல் ஆம் வாய்மை மொழியோனே.
    
     திரௌபதி அவையோரை நோக்கி, நீதி வேண்டி முறையிட, அவையோர் ஓவியம் போல அசைவற்றிருத்தல்

'மன் தோற்றனன் வெஞ் சூது ஆகில்,
     வழக்கால் கொள்மின்; மன் அவையில்
முன் தோற்றனனோ, என்னையும்? தான்
     முன்னே இசைந்து தனைத் தோற்ற
பின் தோற்றனனோ? கரியாகப்
         பெரியோர் உண்மை பேசுக!' என,
மின் தோற்றனைய நுண் இடையாள்,
     விழி நீர் வெள்ளமிசை வீழ்ந்தாள்.
         
மையோடு அரிக் கண் மழை பொழிய,
     வாடும் கொடியின் மொழிக்கு ஆகார்;
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்;
     விறல்வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு,
பொய்யோ அன்று,  மெய்யாக, 
     புனை ஓவியம்போல் இருந்தாரை,
ஐயோ! அந்தக் கொடுமையை யாம்
     உரைக்கும் பொழுதைக்கு அதி பாவம்!

     சபையில் இருந்தோர் யாவரும் ஓவியம் போல் பேசாது இருக்க, துரியோதனனது தம்பியும், வாய்மையே வடிவானவனும் ஆகிய விகருணன், சபையோரை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றான்.

அல்ஆர் கூந்தல் விரித்த மயில்
     அனையாள் அரற்ற, அதற்கு ஒன்றும்
சொல்லாது, ஊமர் கணம் போலத்
     தொல் போர் வேந்தர் சூழ்ந்திருப்ப,
மல் ஆர் தடந் தோள் விகருணன் ஆம்
     வாய்மைக் கடவுள்,  'வாள் வேந்தீர்!
பொல்லா நெறியில் அனைவீரும்
     போகாவண்ணம் புகல்வீரே!

 'முறையோ!' என்று என்று, அவனிதலம்
     முழுதும் உடையான் முடித் தேவி
நிறையோடு அழிந்து, வினவவும், நீர்,
     நினைவுற்று இருந்தீர்; நினைவு அற்றோ?
இறையோன் முனியும் என நினைந்தோ?
     இருந்தால், உறுதி எடுத்து இயம்பல்
குறையோ? கண் கண்டது நாளும்
     குலத்துப் பிறந்தோர் கூறாரோ?

'தன் நேர் இல்லா நெறித் தருமன்
     தன என்று உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று, தங்களையும்
     முறையே தோற்று, முடிவுற்றான்;
சொல் நேர் உரைக்கு, 'தான் பிறர்க்குத்
     தொண்டாய்விட்டு, சுரிகுழலைப்
பின்னே தோற்க உரிமையினால்
     பெறுமோ?' என்று பேசீரோ?'

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
    
காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட் கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதாகும், உவப்பதன்கட்
குற்றமும் தோன்றா கெடும்.   --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     காய்வதன்கண் உற்ற குணம் தோன்றாதாகும் --- வெறுப்புத் தோன்றும் போது பொருளில் உள்ள குணம் ஆராய்வானுக்குத் தோன்றாது;

     உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும் --- விருப்பம் உண்டாகும் போது, பொருளில் உள்ள குற்றமும் தோன்றாது மறையும் (ஆதலால்);

      காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் - வெறுப்பு விருப்பு இல்லாமல் ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்து அறிதல்,

     அறிவுடையோர் கண்ணதே --- அறிவுடையார் செயலாகும்.


"ஆரம்பூண்ட மணிமார்பா!
     அயோத்திக்கு அரசே! அண்ணா! கேள்
ஈரம் இருக்க மரம் இருக்க
     இலைகள் உதிர்ந்தவாறு ஏது?
வாரம் கொண்டு வழக்கு உரைத்து,
     மண்மேல் நின்று வலிபேசி,
ஓரம் சொன்ன குடி அதுபோல்
     உதிர்ந்து கிடக்குந் தம்பியரே".

     இது கம்பராமாயணத்தில் இல்லாத ஒரு பாடல். விவேகசிந்தாமணி என்னும் நூலில் உள்ளது. இதன் பொருள் ....

     தம்பியர்கள் கேட்ப, அதற்கு இராமபிரான் விடை இறுப்பது போல் அமைந்துள்ள பாடல் இது.

     "முத்தாரம் அணிந்துள்ள அழகிய மார்பினை உடையவரே! அயோத்திக்கு அரசரே! எங்கள் அண்ணாவே! மண்ணில் ஈரம் இருக்கின்றது. மரமும் இருக்கின்றது. ஆனால் இலைகள் மட்டும் உதிர்ந்து போய் பட்டமரமாய் இருப்பது ஏன்?" இது தம்பிகள் எழுப்பிய வினா.

     "நடுநிலை தவறி ஒரு வழக்கைத் தொடுத்து, வலாற்காரமாகப் பேசியவன், அந்த வழக்குக்கு ஒருதலையாக சாட்சி சொன்னவன், ஆகிய இவர்கள் தம் குடியானது எப்படிச் சந்ததி அற்று இருக்குமோ, அது போல் இந்த மரமும், இலைகள் உதிர்ந்து பட்டமரமாக உள்ளது" இது இராமன் பகர்ந்த விடை.


இருவர்தஞ் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்
மனம்உற மறுகிநின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே. --- நறுந்தொகை.

இதன் பதவுரை ---

     இருவர் தம் சொல்லையும் --- வாதி எதிரி என்னும் இருவருடைய சொற்களையும்; எழு தரம் கேட்டு --- ஏழு முறை கேட்டு உண்மையுணர்ந்து, மனுமுறை நெறியின் --- மனு நீதி வழியால், இருவரும் பொருந்த --- இருவரும் ஒத்துக்கொள்ள, உரையார் ஆயின் --- முடிவு சொல்லாமல் போனால், வழக்கு இழந்தவர் தாம் --- நீதியின்றி வழக்கினை இழந்தவர், - மனம் உற மறுகி நின்று - மனமானது மிகவும் கலங்கி நின்று, அழுத கண் நீர் --- அழுத கண்ணீரானது, முறை உற தேவர் மூவர் காக்கினும் --- முறையாக மூன்று தேவர்களும் காத்தாலும், வழி வழி ஈர்வது ஓர்வாள் ஆகும் --- அவர் சந்ததி முழுதையும் அறுப்பதாகிய ஒரு வாட்படையாகும்.

     இரு திறத்தினர் சொல்லையும் ஏழு முறைகேட்டு ஆராய்ந்து, உண்மையை உணர்ந்து, நீதி வழுவாது இருவரும் மனம் பொருந்தும்படி முடிவு தீர்வு சொல்லாராயின், அநீதியாக வழக்கிலே தோல்வியுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்தியும் முறையாகப் பாதுகாத்தாலும் முடிவு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும்.

         இது நீதி செலுத்தற்குரிய அவையினரும் நீதிபதியும் அரசனும் என்பவர்களை நோக்கிக் கூறியது. சொல்வன்மையால் பொய் மெய்யாகவும், சொலமாட்டாமையால் மெய் பொய்யாகவும் தோன்றக்கூடுமாகலின், 'எழுதரம் கேட்டு' என்றார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...