008. அன்புடைமை - 05. அன்புற்று அமர்ந்த






திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

எட்டாம் அதிகாரம் - அன்புடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாவது திருக்குறளில், இந்த உலகத்தில் இல்வாழ்க்கையில் பொருந்தி இருந்து, தாமும் துய்த்துப் பிறர்க்கும் கொடுத்து மகிழ்தலால் வரும் இன்பத்தை நுகர்ந்து, முடிவில் வீடுபேறு பெற்று நிலையான பேரின்பத்தை அடைவதை, அன்பு பொருந்திய உள்ளத்தவராய் இருந்து, இல்லறத்தோடு வாழும் வாழ்க்கையின் பயன் ஆகும் என்று அறிந்தவர் கூறுவார் என்கின்றது.

     விண்ணுலகில் அடையும் பேரின்பம், மண்ணுலகில் இல்வாழ்க்கையில் பொருந்திய அன்பின் பயன் ஆகும் என்பது கருத்து.

     இல்வாழ்க்கையில் மனைவியோடும், மக்களோடும், சுற்றத்தாரோடும் கூடி இன்புற்று வாழ்ந்து, ஐம்பெரும் வேள்விகளாகிய கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூதவேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி ஆகியவைகளை செய்து வந்ததின் பயனா, சுவர்க்க உலகம் புகுந்து இன்பத்தை அனுபவிப்பார் ஆதலால், இல்வாழ்க்கையை இயல்பாக வாழ்ந்து இன்புற்றவர் எய்தும் சிறப்பு என்றார். தவத்தினைச் செய்து துன்பமுற்று அடையும் விண்ணுலக இன்பத்தை, இல்வாழ்க்கையில் பொருந்தி இருப்போர் இங்கேயே அந்த இன்பத்தினை அனுபவிப்பவர் ஆவார் என்பது இத் திருக்குறளால் பெறப்படும் தெளிவு ஆகும்.

வேள்வி என்பது விரும்பிச் செய்வது.

அறத்தினைப் புரிந்தோர், அதன் பயனாக மேல் உலகத்தில் இன்புற்று வாழ்வர். அறத்தினைப் புரிவதற்கு இல்லறமே சிறந்தது. ஆகையால், "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" எனப்பட்டது. 

இனி, திருக்குறளைக் காண்போம்....

அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப, வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இதற்குப் பரிமேலழகர் உரை---- 

        வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு --- இவ்வுலகத்து இல்வாழ்க்கைக் கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை,  
    
         அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.

         ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)

     இத் திருக்குறளின் பொருளை நன்குணர்ந்த திருமாலடியார் ஒருவர், திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் மீது தாம் பாடிய, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் பின்வருமாறு பாடி உள்ளார்.

வற்றாத அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப, வையகத்து இன்பு
உற்றார் எய்தும் சிறப்பு என்பது காண், இவ் உலகுதனில்
கற்றார் உனது அன்பர்க்கு அல்லாமல் வஞ்சக் கயவர்க்கு என்று
சற்று ஆகிலும் உரையார் புல்லை வாழும் தனிக்கொண்டலே.
                                                     ---  திருப்புல்லாணிமாலை.

இதன் பொருள் ---

இந்த உலகத்தில் அருள் நூல்களைக் கற்றுத் தெளிந்து, அதன் பயன் இல்லறத்தை இனிது இயற்றி, திருமாலின் திருவடிக்கு அன்பு செய்தலே என்பதை உணர்ந்து அவ்வழி ஒழுகும் அடியவர்கட்கு மட்டுமே இத் திருக்குறள் பொருந்தும். அல்லாமல் வஞ்சகத் தன்மை பொருந்திய கீழ்மக்கட்குப் பொருந்தாது.

     இக் கருத்துக் கொண்ட பாடல் ஒன்று பதினோராம் திருமுறையில், பட்டினத்து அடிகள் பாடி அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் வருதலைக் காணலாம்.

"புண்ணிய! புராதன! புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக!
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந!    
பூத நாத! பொருவிடைப் பாக!

வேத கீத! விண்ணோர் தலைவ!
முத்தி நாயக! மூவா முதல்வ!
பத்தி ஆகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர்

கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை மருத! திரிபு ராந்தக!
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ,
மனையும் பிறவும் துறந்து, நினைவுஅரும்

காடும் மலையும் புக்கு, கோடையில்
கைம்மேல் நிமிர்த்து, கால் ஒன்று முடக்கி,
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று,
மாரி நாளிலும், வார்பனி நாளிலும்,
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்;

சடையைப் புனைந்தும்; தலையைப் பறித்தும்;
உடையைத் துறந்தும்; உண்ணாது உழன்றும்;
காயும், கிழங்கும், காற்று உதிர் சருகும்,
வாயுவும், நீரும், வந்தன அருத்தியும்;
களர் இரும் கல்லிலும் கண்படை கொண்டும்;

தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து,
ஆங்கவர்
அம்மை முத்தி அடைவதற்காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்;
ஈங்கு இவை செய்யாது யாங்கள் எல்லாம்

பழுது இன்று உயர்ந்த எழுநிலை மாடத்தும்,
செழுந்தாது உதிர்ந்த நந்தன வனத்தும்,
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்,
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்,
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்,

மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்,
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்டு அட்ட
மருப்பின் இயன்ற வாள் அரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்

தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டின்உள் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச்
சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்

பொன் தோரணத்தைச் சுற்றிய துகில் என
அம்மென் குறங்கின் ஒம்மென் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்கு மணிமேகலை மருங்கில் கிடப்ப
ஆடரவு அல்குல் அரும்பெறல் நுசுப்பு

வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
அணி இயல் கமுகை அலங்கரித்தது போல்
மணி இயல் ஆரம் கதிர் விரித்து ஒளிர்தர
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின் மிசை விரித்து மீது இட்ட

உத்தரீயப் பட்டு ஒருபால் ஒளிர்தர
வள்ளை வாட்டிய ஒள்இரு காதொடு
பவளத்து அருகாத் தரளம் நிரைத்தாங்கு
ஒழுகி நீண்ட குமிழ் ஒன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்

ஆல காலமும் அனைத்தும் இட்டு அமைத்த
இரண்டு நாட்டமும் புரண்டு, கடை மிளிர்தர,
மதி என மாசு அறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழல்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்;

சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது,
ஆடினர்க்கு என்றும், பாடினர்க்கு என்றும், வாடினர்க்கு என்றும் வரையாது கொடுத்தும்;
பூசுவன பூசியும்; புனைவன புனைந்தும்;

தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும்;
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து;
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி;
இவ்வகை இருந்தோம், ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்து ஐந்தும் வாய் இடை மறவாது

சிந்தை நின்வழி செலுத்தலின், அந்த
முத்தியும் இழந்திலம்; முதல்வ! அத்திறம்
நின்னது பெருமை அன்றோ! என் எனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்

நிலத்தின் வழாஅக் கல்லே போல்
நலத்தின் வழார் நின் நாமம்நவின் றோரே".

     பல வகையிலும் உடலை வருந்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டே ஆகும். அவ்வாறு நோற்பதால் மனம் ஒருங்குதலின் பயன், மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது சிந்தை சிவன் வழிச் செலுத்தலே ஆகலின், தம்மைத் தாமே ஒறுத்தும் அது செய்யாதார் அந்த முத்தியை அடைவார் அல்லர் எனப்பட்டது.

     முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில் மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோன்புகளை மேற்கொள்ளாமல், மாறாக, ஐந்து புலன்களும் ஆரத் துய்த்தும், அந்த முத்தியையும் இழவாது பெறுவர்எனவும் எப்படியாயினும் சிவனை நினைதலே முத்தி சாதனம்என்பதும், ‘எனவே, எதனைச் செய்யினும் அச்சாதனத்தைப் பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லைஎன்பதும் உணர்த்தப்பட்டது.

     கல் ஒன்றை, வல்லான் ஒருவன் கைம் முயன்று எறிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கு உவமை ஆயிற்று.

      மாட்டா ஒருவன் வாளா எறிதல், அவற்றைச் செய்ய மட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கு உவமை ஆயிற்று.

     கல்லின் இயல்பு, யாவர் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் ஆதல் போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியில் சேர்த்தல்என்பது இதனால் விளக்கப்பட்டது.

     சிவனை நினையாது பிறவற்றை எல்லாம் செய்வோர் அச்செயல்களுக்கு உரிய பயன்களை மட்டுமே பெறுவர். பிறவி நீங்குதலாகிய முத்தியைப் பெறார்என்பது கருத்து.

இதனை,

பரசிவன் உணர்ச்சி இன்றிப்
     பல்உயிர்த் தொகையும் என்றும்
விரவிய துயர்க்கு ஈறு எய்தி
     வீடுபேறு அடைதும் என்றல்
உருவம் இல் விசும்பின் தோலை
     உரித்து உடுப்பதற்கு ஒப்பு என்றே
பெருமறை பேசிற்று என்னில்
     பின்னும் ஓர் சான்றும் உண்டோ?

எனக் கந்த புராணத்திலும்,

மானுடன் விசும்பைத தோல்போல்
     சுருட்டுதல் வல்லன் ஆயின்,
ஈனம் இல் சிவனைக் காணாது
     இடும்பை தீர் வீடும் எய்தும்;
மானம் ஆர் சுருதி கூறும்
     வழக்கு இவை, ஆதலாலே
ஆன் அமர் இறையைக் காணும்
     உபாயமே அறிதல் வேண்டும்

எனக் காஞ்சிப் புராணத்திலும் கூறப்பட்ட உபநிடதப் பொருள் பற்றி அறிக.

என்பு என்பது, யாக்கை என்பது,
     உயிர்என்பது, இவைகள் எல்லாம்
பின்பு என்ப அல்லவேனும்,
     தம்முடை நிலையில் பேரா,
முன்பு என்ப உளது என்றாலும்
     முழுவதும் தெரிந்த ஆற்றல்
அன்பு என்பது ஒன்றின் தன்மை
     அமரரும் அறிந்தது அன்றால்.  ---  கம்பராமாயணம், மருந்துமலைப் படலம்.

இதன் பதவுரை ---

     என்பு என்பது, யாக்கை  என்பது, உயிர் என்பது, இவைகள எல்லாம் --- எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடு இயைந்த) உயிர் என்பதும் ஆகிய  இவையெல்லாம்;  பின்பு என்ப அல்ல முன்பு --- (அன்பினை நோக்கப்) பிற்பட்டது  என்பது அல்லாமல்,  (அவ்வன்பு விளங்கித் தோன்றுவதற்கு ஏதுவாக,   அதன்) முன்பே தோன்றி இயைந்து நிற்பனவாகி;  என்றும் தம்முடை நிலையின் பேரா --- எக்காலத்தும் (அன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக அதன் முன்பே தோன்றுதலாகிய) தம்முடைய நிலையில் மாறுதலின்றி நிற்கின்றன; என்றும்  உளதென்றாலும் --- இப்படிப்பட்ட தொடர்பு (உடலுயிர் ஆகியன அன்பு தோன்றி விளங்குதற்குக் காரணமாய் முன்தோன்றுவதும், பின்பு, அன்பு அவை மாட்டுத் தோன்றி விளங்குவதுமாகிய தொடர்பு) என்றும் உள்ளதென்றாலும்;  முழுவதும் தெரிந்தவாற்றால் --- முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தால்; அன்பு என்பது ஒன்றின் தன்மை --- அன்பு என்பதாகிய ஒன்றனுடைய (உடலுயிர் ஆகியவற்றைத் தளிர்ப்பச் செய்தலும், சிதைப்பச் செய்தலுமாகிய) இருவேறுபட்ட  தன்மையினை; அமரரும் அறிந்ததன்றே --- தேவர்களும் அறிந்தவர்களல்லவே?

     இப்படாலின் கருத்தை,  அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்னும் குறள் வழி நின்று காணுதல் வேண்டும்.

     பிறவி என்பது உடலும் உயிரும் இணைவது. அறிவற்றதும் மாயாகாரியமும் ஆகிய உடம்பு என்னும் பருப்பொருளை,  அறிவு வடிவானதும்,  அருவமானதுமான உயிர் இயைந்து இருப்பது அருளார்ந்த அறிவு வெளியாக இருக்கின்ற இறைவனை அடைந்து அனுபவித்தற்காகும். இதற்குப் பிறவிதோறும் உடம்போடு கூடி உயிர் அன்பினைப் பெருக்கிக் கொண்டு அருள்  நிலைக்கு உயர்தல் வேண்டியிருக்கின்றது. எனவே, அன்பு தோன்றி விளக்கம் பெறுதற்கு உடலோடு உயிர் இயைதல் தேவையாகின்றது. உடலோடு உயிர் இனணந்த பின்பேதான் அன்பு தோன்றி விளக்கம் பெறுதல் முடியும். எனவேதான் என்பு என்பது,  யாக்கை என்பது,  உயிர் என்பது இவைகள் எல்லாம் அன்பிற்குப் பின்பு அல்ல முன்பு என்றார்.

     உடலும் உயிரும் சேர்ந்தவழி தோன்றிச் சிறக்கின்ற அன்பு, அன்பிற்கு உரியார் அருள் செய்த போது அவ்வுடலுயிர்கள் இன்புறும் வண்ணம் தளிர்ப்பதும்;  அங்ஙனம் இன்றி அவ்வன்பிற்கு உரியார் பிரிகின்ற காலத்து அவ்வுடலுயிர்கள் சிதைவு பெற்றழிய அவ்வன்பே காரணமாதலும் காணுகின்றோம். எனவே அன்பு, தளிர்ப்பச் செய்தலும் சிதைப்பச் செய்தலுமாகிய இருகூறுகளை உடைய தன்மைகளை உடைத்தாகின்றது.

     அன்பு,  உடல் உயிர் இணைவிற்குப் பின்பு அவற்றிடத்து நின்று தோன்றினும் அவை மென்மேலும் இன்புற்றுச் சிறக்கவோ, அன்றி அவை இரண்டும் தனிப்பட்டுப் பிரியவோ அதுவே காரணம் ஆகின்றது. நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை   புலப்படும். இதனைத் தேவர்களும் உணரார்கள் என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.  

     இதனை,  அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப, வையகத்து  இன்புற்றார் எய்தும் சிறப்புஎன்ற  திருக்குறள் வழி உணரலாம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...