Showing posts with label தண்டலையார் சதகம். Show all posts
Showing posts with label தண்டலையார் சதகம். Show all posts

109. இரக்கப் போனாலும் சிறக்கப் போ


“இரக்கத்தால் உலகுஆளும் தண்டலையா

     ரே! சிவனே! எந்த நாளும்

இரக்கததான் புறப்பட்டீர்! என்றனையும்

     இரக்கவைத்தீர்! இதனால் என்ன?

இரக்கத்தான் அதிபாவம்! இரப்பதுதீ

     தென்றாலும், இன்மை யாலே

இரக்கப்போ னாலுமவர் சிறக்கப்போ

     வதுகருமம் என்னல் ஆமே.”


இதன் பொருள் ---


     இரக்கத்தால் உலகு ஆளும் தண்டலையாரே சிவனே – அருட்பெருங் கருணையால் உலக உயிர்களைக் காத்து ஆண்டு அருள் புரிபவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில்  எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளே! எந்தநாளும் இரக்கத்தான் புறப்பட்டீர் – நீர் எப்போதும் பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சை எடுக்கச் செல்வீர். என் தனையும் இரக்கவைத்தீர் - என்னையும் இரந்து உண்ண அமைத்து விட்டீர்!, இதனால் என்ன - இவ்வாறு செய்ததனால் என்ன பயன்?, இரக்கத்தான் அதிபாவம் – பிச்சை எடுப்பது பெரிய பாவம். (ஆகையால்) இரப்பது தீது – இரந்து உண்டு வாழ்வது தீயது, என்றாலும் - என்று மேலோர் கூறினாலும், இன்மையாலே இரக்கப் போனாலும் - வறுமையாலே பிச்சை எடுக்கச் சென்றாலும், அவர் சிறக்கப் போவது கருமம் என்னல் ஆமே - அவ்வாறு இரக்கப் போவோர் சிறப்புடன் செல்வது தகுதி என்று கூறுதல் வேண்டும்.

     "இரக்கப் போனாலும் சிறக்கப் போ" என்பது பழமொழி. பிச்சை எடுக்கும் நிலை வந்தபோதும் நல்அறிவு நல்லொழுக்கங்களில் தவறுதல் கூடாது. கண்ணியமான முறையில் பிச்சை கேட்கவேண்டும். பொருள் உள்ளோரைத் தேடிச் சென்று இரத்தல் கூடாது. அருள் உள்ளம் கொண்டோரை நாடி இரந்து உண்ணுதல் சிறப்பு. இரப்போர்க்கு ஈவது சிறப்பு. ஈகை உள்ளம் கொண்டோரிடம் இரத்தலும் சிறப்பு எனவே, இரக்கப் போனாலும் அவர் சிறக்கப் போவது” என்றார்.


108. கல்யாணப் பஞ்சம் இல்லை

 


சலியாமல் தண்டலையில் தாயகனார்

     அருள்கொண்டு தருமம் செய்யப்

பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்

     ஈந்தவைதாம் போக மீந்தால்

மலிவாகிச் செல்வம்உண்டாம்! வயல்முழுதும்

     விளைந்திடும் நன்மாரி ஆகும்!

கலியாணப் பஞ்சமில்லை! களப்பஞ்சம்

     இல்லையொரு காலுந் தானே.


இதன் பொருள் ---

        தண்டலையில் தாயகனார் அருள்கொண்டு சலியாமல் தருமம் செய்ய – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில்  எழுந்தருளிய தாயகனார் ஆகிய சிவபரம்பொருளின் திருவருளை வாழ்த்தி உள்ளத்தில் சோர்வு கொள்ளாமல் அறச் செயல்களைச் செய்ய, கொழுமீதில் பொலிவாகி வந்த பொருள் - உழவுத் தொழிலிலே அழகுறக் கிடைத்த செல்வத்தில், ஈந்தவை தாம் போக மீந்தால் - (தென்புலத்தாருக்கும் தெய்வத்திற்கும் விருந்தினருக்கும் சுற்றத்தாருக்கும் தனக்கும் அரசனுக்கும் என ஆறு பங்காக்கிக்) கொடுத்தவை போக மிச்சமானால், மலிவாகிச் செல்வம் உண்டாம் - மிகுதியாகிச் செல்வம் கிடைக்கும்; வயல்முழுதும் விளைந்திடும் நன்மாரி ஆகும் - நிலம் எங்கும் விளையத் தக்க மாரியாக அந்த அறம் இருக்கும், கலியாணப் பஞ்சம் இலை - அவர்கள் வீட்டிலே மங்கல நிகழ்வுகள் குறைவில்லாமல் நடைபெறும், களப்பஞ்சம் ஒருகாலும் இல்லை - விளைவு கொண்டு நெல்லடிக்கும் களத்திற்கும் ஒருபோதும் வறுமை இராது.

அறநெறியில் வழுவாமல் வாழ்வோர் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வர் என்பது சொல்லப்பட்டது. நமது பழந்தமிழரின் வாழ்வியல் நெறி இதுவே ஆகும். இல்லறத்தில் நிற்கின்ற ஒருவர், மறைந்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவகையினர் இடத்தும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து வருதலே தலையானது ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

 

"தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்றுஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை".

 என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 தென் --- அழகு, ஞானம், சிறப்பு. புலம் --- அறிவு.

         தென்புலத்தார் என்பது, மெய்யறிவு உடையவர், சான்றோரைக் குறித்தது என்கின்றார், கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்.

         தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையில் இருப்பவர் என்பது பொருள். இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதனால், நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களைத் தென்திசையில் உள்ளவர் எனக் கூறுவது மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு என்பது, ஓர் ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம்.

         நம்மோடு வாழ்ந்து இருந்து மறைந்த முன்னோர்களைத் தென்புலத்தார் அல்லது பிதிரர் என்போம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் தேவசாதியர் என்கின்றார் பரிமேலழகர். அவர்க்கு இருக்கும் இடம் தெற்கு என்பதால் தென்புலத்தார் எனப்பட்டார். இறந்து போனவரது புத்திரர் முதலியோர் செய்யும் கருமங்களினால் மகிழ்ச்சி உற்று, இறந்தவர்க்கும் அவரது இனத்தவர்க்கும் நேர்ந்த துர்க்கதியை நீக்கவும், நற்கதியை அளிக்கவும் வல்ல ஒருவகை தேவசாதியார் பிதிர்க்கள் எனப்படுவர். இவர்கள் இயற்கைத் தேவர்களில் ஒரு வகையினராய் இருத்தல் பற்றி, பிதிரராவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் கடவுள் சாதி என்று கூறப்பட்டது. இயற்கைத் தேவர்கள் அல்லாதார், கருமத் தேவர்கள் எனப்படுவர். அவர்கள், புண்ணியத்திற்கு ஏற்ப, சுவர்க்காதி போகங்களை அனுபவித்து, புண்ணியம் கழிந்த உடனே, அவ்விடத்தினின்றும் நீங்கி விடுபவர்கள். 

        இல்லறத்தானின் கடமைகளில் ஒன்று, நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை, குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் ஆகும். இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினை ஆகும். தென்புலத்தாரை நினைத்து அடையாள முறையில் சில உணவுகளைப் படைத்து, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். நம்முடைய வாழ்க்கை முறையில், முன்னோர்களை என்றும் மறத்தல் கூடாது. எனவேதான், திருவள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார். "தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்" என்பது புறநானூறு. இதனால்,முன்னோரை வழிபடுகின்ற நல்ல புதல்வர்களைப் பெறுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

     விருந்து என்பது சுற்றத்தாரையும், நண்பர்களையும் குறிக்காது. விருந்து என்ற சொல்லுக்கு, புதிதாய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் என்று பொருள். விருந்தினர் என்றால், புதியவர், அதிதி என்ற பொருள். 

 “அட்டுஉண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்

அட்டு உண்ணா மாட்சி உடையவர், --- அட்டு உண்டு

வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்,

வீழ்வார்க்கு வீழ்வார் துணை. “      --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் --- 

        சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு, விருந்தினர் என்போர், எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார். சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு, அவ்வாறு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல், மலை உச்சியில் இருந்து நிலத்தின் மீது விழுகின்றவர்க்கு, அவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று எண்ணுதல் போன்றது ஆகும்.

     "ஓர் இராத்திரி பரியந்தம் புதிதாக வந்தவன் அதிதி எனத் தக்கவன். நாள்தோறும் வாராது, ஒரு காலத்து வருபவனுக்கு அதிதி என்று பெயர்" என்று மனுநூல் சொல்லுகின்றது. "அறவோர்க்கு அளித்தலும்,அந்தணர் ஓம்பலும்,தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்" என்று சிலப்பதிகாரம் கூறுவதால், தொன்றுதொட்டே விருந்தினரை எதிர் கொள்ளுதல் இல்லறத்தானுடைய கடமை ஆயிற்று என்பது பெறப்படும்.

     இல்லறத்திற்கு உரிய நெறிகளிலே நின்று வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள் என்பதை,

 

“அரசுகொள் கடன்கள் ஆற்றி 

      மிகுதிகொண்டு அறங்கள் பேணி

பரவு அரும் கடவுள் போற்றி 

      குரவரும் விருந்தும் பண்பின்

விரவிய கிளையும் தாங்கி 

      விளங்கிய குடிகள்ஓங்கி

வரைபுரை மாடம் நீடி மலர்ந்து 

      உள பதிகள் எங்கும்.”

 எனப் பெரியபுராணத்தில், திருநாட்டுச் சிறப்பு என்னும் பகுதியில் வரும் பாடல் கூறும்.

 இதன் பொருள் --- 

        (உழவர்கள் தாங்கள் அறுவடை செய்து குவித்து வைத்துள்ள நெல்லில்) அரசர்க்குச் செலுத்தவேண்டிய ஆறில் ஒரு பங்கு கடமையைச் செலுத்திய பின், எஞ்சிய விளைவைக் கொண்டு,முதலில் செய்யத் தக்கன ஆகிய அறங்களை விரும்பிச் செய்து, வழிபாட்டிற்கு உரிய கடவுள் பூசையைப் பாராட்டிச் செய்து, தென்புலத்தார்களையும் விருந்தினரையும் ஒழுக்கமுடைய சுற்றத்தாரையும் ஓம்பி, அதனால் விளக்கம் பெறும் குடிகளால் செழுமையாக அமைக்கப்பட்ட மலைபோன்ற மாடங்களை உடைய ஊர்கள் எங்கும் நிறைந்திருப்பது சோழ நாடு.

      அரசுகொள் கடன்கள் ஆற்றுதல், அரசுக்குச் சேரவேண்டிய பகுதியாகிய ஆறில் ஒரு பங்கு இறைப்பொருளின் கடமையைச் செலுத்துவது ஆகும். இறைப் பொருளை முறையாகச் செலுத்துதல் குடிமக்களின் கடமையாகும். அவை காலத்தாலும் இடத்தாலும் மற்றும் பலவற்றாலும், வேறு வரி வகைகளும் கூட்டி,மேலும் பலவாய்ப் பின்னரும் அதிகரிக்கக் கூடும் என்பதால் "கடன்கள்" என்றும் சொல்லப்பட்டது. இது குடிகளின் கடமைகளில் முதல் கடமையாகும். எனவேதான், தெய்வத்தின் முன்னர் வைத்து முதலில் கூறப்பட்டது. 

      வரிகொடா இயக்கம் முதலிய இக்காலத் தோற்றங்கள், அந்நாள் தமிழ்மக்களுக்கு உடன்பாடு அல்ல என்பது இதனால் விளங்கும்.

      வருவாயில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியாகச் செலுத்தி, எஞ்சியதைக் கொண்டு,  தென்புலத்தார்,  தெய்வம், விருந்து ஒக்கல், தான் என்னும் ஐம்புலத்து ஆறினை ஓம்பினார்கள் மக்கள் என்று அறியப்படுகின்றது. ஆக, வருவாயை ஆறு பங்காகப் பிரித்து, ஒரு பங்கினை அரசுக்குச் செலுத்தி,  எஞ்சியதைக் கொண்டு அறநெறியில் வாழ்ந்தார்கள்.

 

      திருவிளையாடல் புராணத்தில் வரும் பாடல்களாலும்,  நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நன்கு உணரலாம்.

 

“கற்றை வை களைந்து தூற்றி,

         கூப்பி, ஊர்க் காணித் தெய்வம்,

அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து,

         அளவை கண்டு, ஆறில் ஒன்று

கொற்றவர் கடமை கொள்ள,

         பண்டியில் கொடுபோய்த் தென்னாடு

உற்றவர்,சுற்றம்,தெய்வம்

         விருந்தினர்க்கு ஊட்டி உண்பார்.”

 

        பாண்டி நாட்டிலே வாழ்ந்த குடிகளைப் பற்றிக் கூறுகின்ற இப் பாடலின் பதப்பொருள் ---

       கற்றை வை களைந்து தூற்றி - அறுவடை செய்து கற்றையாக வைக்கப்பட்டுள்ள வைக்கோலைக் கட்டு நீக்கி அடித்து, பதர் போகத் தூற்றி,  கூப்பி - நெல்லைப் பொலிகளாகக் குவித்து வைத்து, (அவ்விடத்திலேயே) ஊர்க் காணித் தெய்வம் - கிராம தேவதைகளுக்கும்,  அற்றவர்க்கு - வறியவர்களுக்கும்,  அற்றவாறு ஈந்து - வரையறுத்தபடி கொடுத்து, அளவை கண்டு - அளந்து பார்த்து, கொற்றவர் கடமை ஆறில் ஒன்று கொள்ள - மன்னருக்கு இறைப்பொருளாக ஆறில் ஒரு கூறு கொள்ளக் கொடுத்து,  பண்டியில் கொடுபோய் - மிகுதியை வண்டிகளில் கொண்டு போய் தமது இருப்பிடத்திலே சேர்த்து,  தென்னாடு உற்றவர் - தென்புலத்தைச் சேர்ந்தவர்களையும், சுற்றம் - சுற்றத்தாரையும்,  தெய்வம் - தேவரையும்,  விருந்தினர்க்கு - விருந்தினரையும்,  ஊட்டி  -உண்பித்து,  உண்பார் - (அந்நாட்டினர்) தாமும் உண்பார்.

 

“பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த

நன்மலை மானக் கூப்பி நல்கிப் பல் குடியும் ஓம்பித்

தென்மலைக் கிழவன் தெய்வம் தென்புல வாணர் ஒக்கல்

தன்மனை விருந்து காத்துத் தருக்கினால் இருக்கும் நாளில்.

                  --- தி.வி.புராணம், மேருவைச் செண்டால் அடித்த படலம்.

 இதன் பொருள் --- 

      பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை - மேருமலைத் தெய்வம் ஆகிய சிவபரம்பொருள் கொடுத்த அத் தூய்மையாகிய பொருளை, அந்த நல்மலை மானப் கூப்பி - அந்த நல்ல மேருமலையைப் போலக் குவித்து, பல் குடியும் நல்கி ஓம்பி - பல குடிகளுக்கும் கொடுத்துப் பாதுகாத்து, தென்மலைக் கிழவன் -பொதிகை மலைக்கு உரியவனாகிய உக்கிரவழுதி, தெய்வம் தென்புல வாணர் ஒக்கல் தன்மனை விருந்து காத்து - தெய்வத்தையும், தென்புலத்தாரையும், சுற்றத்தாரையும், தனது இல்லில் வந்த விருந்தினரையும் ஓம்பி, தருக்கினான் இருக்கும் நாளில் - களிப்புடன் இருக்கும் காலத்தில்.         

 

“மின்னார் சடையான் தமர்,ஆய்ந்தவர், வேதச் செல்வர்,

தென்னாடர் தெய்வம், விருந்து, ஒக்கல்,செறிந்து நட்டோர்,

முன்னாம் எவர்க்கும் முகில்போல் வரையாமல் நல்கி,

எந்நாளுநம் நோயின்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான்.”

                     --- தி.வி.புராணம், உலவாக்கோட்டை அருளிய படலம்.

இதன் பொருள் ---

         மின் ஆர் சடையான் தமர் - மின் போன்ற சடையை உடைய சிவபெருமானது அடியார்களும், ஆய்ந்தவர் வேதச் செல்வர் - வேதத்தை ஆராய்ந்தவர்களாகிய அந்தணர்களும், தென்னாடர் தெய்வம் விருந்து ஒக்கல் - பிதிரரும் தெய்வமும் விருந்தும் சுற்றத்தாரும், செறிந்து நட்டோர் - நெருங்கி நட்புச் செய்தோரும், முன் ஆம் எவர்க்கும் - முதலாகிய யாவர்க்கும், முகில் போல் வரையாமல் நல்கி - மேகம் போல் வரைவின்றிக் கொடுத்து, எந்நாளும் நோய் இன்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான் - எஞ்ஞான்றும் வறுமை நோயின்றிக் குபேரன் போல வாழ்ந்து வந்தான்.

    இல்லறத்தார்க்கு உரிய இந்தத் தலையாய கடமைகளை ஆற்றாமல், ஒருவன் தனியாக இருந்து உண்பது, கொக்கு தான் பிடித்த மீனைத் தனியாக இருந்து தின்பதற்கு ஒப்பாகும் என்கின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.       

                        

“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு

இன்புறத்தான் உண்டல் இனிதாமே --- அன்புறவே

தக்கவரை இன்றித் தனித்து உண்டல் தான் கவர்மீன்

கொக்கு அறுத்தல் என்றே குறி. “         --- நீதிவெண்பா.


107. பொன்மலரில் நறுமணம்

 


கற்பூர வல்லியொரு பாகர்செழுந்

     தண்டலையார் கடலேழ் சூழ்ந்த

நற்பூமி தனிற்பிறந்தோர் எல்லோரும்

     மக்களென நாட்ட லாமோ?

அற்பூரும் பண்புடையார் நற்குணமும்

     பண்பிலார் அழகும் காணின்

பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்

     பூவுமெனப் புகலல் ஆமே.


இதன் பொருள் ---


கற்பூரவல்லி ஒருபாகர் – கற்பூரவல்லியாகிய உமாதேவியாரைத் தனது திருமேனியின் வொரு பாகத்தில் கொண்டவரும், செழுந்தண்டலையார் கடல் ஏழ் சூழ்ந்த நற்பூமிதனில் – வளப்பம் மிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரும் ஆன சிவபரம்பொருளின், எழுகடலால் சூழப்பெற்ற இந்த நல்ல நிலவுலகத்தில், பிறந்தோர் எல்லோரும் மக்கள் என நாட்டல் ஆமோ - தோன்றியவர் யாவரும் மக்கட்பண்பு உடையவர் என உறுதியாகக் கூறுதல் பொருந்துமோ?, அற்பு ஊரும் பண்பு உடையார் நற்குணமும் – உள்ளத்தில் அன்பு மிக்கு உள்ள நற்பண்பு கொண்டோரின் தன்மையும், பண்பு இலார் அழகும் -  மக்கட் பண்பு இல்லாதாரின் உடலழகும், காணின் - ஆராய்ந்தால், பொன்பூவில் வாசனையும் – பொன்னால் ஆன மலரிலே நறுமணமும், புன்முருக்கம் பூவும் – மணம் அற்ற புல்லிய முருக்கமலரும் போல இருக்கும், எனப் புகலல் ஆம் - என்று சொல்லலாம்.


     அற்பு – அன்பு. அன்புடைமையே மனிதப் பண்பு ஆகும். அன்பு தழைக்கும் உள்ளத்தினை உடைய மனிதர்களை பொன்னால் ஆன பூவில் நறுமணம் என்று புகழத்தக்கது ஆகும். அன்புடையாரின் உள்ளத்தைக் கூறிய ஆசிரியர், அன்பு அற்றவரின் உடலழகைக் கூறி, அது மணம் அற்ற புல்லிய முருக்கம் பூவினைப் போலப் பயன் அற்றது என்று கூறினார்.


இதையே குமரகுருபர அடிகள் வேறுவிதமாக, “நீதிநெறி விளக்கம்” என்னும் நூலில் கூறி உள்ளார். என்றும்  ஒருபடித்தாக வாடாமல் இருக்கின்ற மலரைப் "பொன்மலர்" என்றார். ஒருவர் கற்ற கல்வி எவ்வளவு பெரிய அளவினதாக இருந்தாலும், கற்ற நூலின் தரம் அறிந்து, நூற்பொருளை ஆராய்ந்து உணரும் உணர்வு இல்லையானால், அவர் கற்ற கல்வி பயன்றறதாகும். ஒருகால், உணர்ந்து இருந்தாலும், பிறருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இல்லையானால், கற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை. ஏனவே, ஆராய்ந்த அறிவோடு, சொல்வன்மையும் இருக்குமானால், அது, பொன்னால் செய்யப்பட்ட மலருக்கு, நறுமணமும் பொருந்தி இருப்பது போல் ஆகும் என்று பின்வரும் பாடலை அருளிச் செய்தார்.


“எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து

உய்த்து உணர்வு இல்எனின் இல்லாகும், - உய்த்து உணர்ந்தும்

சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும்? அஃது உண்டேல்

பொன்மலர் நாற்றம் உடைத்து. “ --- நீதிநெறி விளக்கம்.


கல்வி அறிவு செயற்கை அறிவு. இயற்கை அறிவு என்பது கற்ற நூலின் பொருளை உய்த்து உணர்ந்து, சொல்லவேண்டிய இடம் அறிந்து, பிறருக்கும் எடுத்து உரைக்கும் வன்மையை உடையது. அப்படிச் சொன்னால், அது பொன்னால் ஆன மலர் நறுமணமும் பொருந்தியது போல் ஆகும். பொன்னால் ஆன மலர் எப்போதும் வாடாது. வாடாத மலரில் மணம் இருந்துகொண்டே இருக்கும்.

எனவே, "இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர், கற்றது உணர விரித்து உரையாதார்" என்றார் திருவள்ளுவ நாயனார். தாம் கற்ற நூற்பொருளைத் தெளிந்து பிறருக்கும் பயன்படுமாறு விரித்துச் சொல்லமாட்டாதவர், மணம் அற்ற மலரைப் போன்றவர்கள்.

பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ, அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்று உடல் அழகை மதிப்பவர்கள் புல்லிய முருக்கமலர் போன்றவர்கள் என்றார் ஆசிரியர். முருக்கமலர் மணம் அற்றது. மலர்ந்து சில நேரத்திலேயே அது வாடிவிடும். அதை யாரும் விரும்பார்கள்.


106. குங்குமம் சுமந்த கழுதை

 “பேருரைகண் டறியாது தலைச்சுமைஏ

     டுகள்சுமந்து பிதற்று வோனும்,

போரில்நடந் தறியாது பதினெட்டா

     யுதம்சுமந்த புல்லி யோனும்

ஆரணிதண் டலைநாதர் அகமகிழாப்

     பொருள்சுமந்த அறிவி லோனும்

காரியமொன் றறியாக்குங் குமம் சுமந்த

     கழுதைக்கொப் பாவர் தாமே.”


இதன் பொருள் ---


ஆர் அணி தண்டலைநாதர் அகம் மகிழாப் பொருள் சுமந்த அறிவு இலோனும் – ஆத்திமாலையைத் தரித்தவரும், திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருவுள்ளம் விரும்பாத பொருள்களைச் சுமந்த மூடனும், தலைச் சுமை ஏடுகள் பேர் உரை கண்டறியாது சுமந்து பிதற்றுவோனும் – நூல்களின் சிறந்த பொருளை அறியாமல், அவற்றைத் தலைச் சுமையாகச் சுமந்து, பிதற்றிக் கொண்டு திரிகின்றவனும், போரில் நடந்து அறியாது பதினெட்டு ஆயுதம் சுமந்த புல்லியோனும் - போருக்குச் சென்ற பழக்கமின்றி எல்லாப் படைக்கலங்களையும் சுமந்த இழிஞனும், காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த கழுதைக்கு ஒப்பாவர் - (எதனைச் சுமக்கிறோம் என்ற) தன் அலுவல் ஒன்றையும் உணராமல் குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமம் ஆவர்.


      திருத் தண்டலை இறைவர் திருவுள்ளம்  மகிழாப் பொருள்கள் சிவசின்னம் அல்லாதவை. ‘குங்குமம் சுமந்த கழுதை' என்பது பழமொழி.


“கழுதை குங்குமம் தான்சுமந்து எய்த்தால்

கைப்பர் பாழ்புக, மற்றுஅது போலப்

பழுது நான் உழன் றுஉள்தடு மாறிப்

படுசு ழித்தலைப் பட்டனன், எந்தாய்!

அழுது நீஇருந்து என்செய்தி மனனே!

அங்க ணாஅர னேஎன மாட்டா

இழுதை யேனுக்கு ஒர் உய்வகை அருளாய்

இடைம ருது உறை எந்தைபி ரானே!”


என்பது சுந்தரர் தேவாரம்.


இதன் பொருள் ---


என் அப்பனே!  திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கின்ற சிவபரம்பொருளே! கழுதையானது  குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர். அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேன் ஆயினேன்; `மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், ` அங்கணனே, அரனே` என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியினை வழங்கியருளாய் .


வாலாயமாகக் கழுதை சுமந்து செல்வது அழுக்கு மூட்டையைத்தான். அதனால் அதற்குத் தாழ்வு ஏதும் இல்லை. உயர்ந்த குங்கும மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வேறுபாடும் தெரியாது. அதனால் அதற்கு உயர்வு ஏதும் உண்டாகாது. அதுபோலத்தான், நம்மில் பலரும் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல், இறைபணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்கின்ற பணியின் பொருள் என்ன என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வார்கள். இறைவனைக் குறித்துப் பாடப்படுகின்ற பாடல்களின் பொருளை உணராது ஓதுகின்றவர்கள், “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்” என்னும் மணிவாசகத்தை ஓதிக் கொண்டுதான் இருப்பார்கள். இறைவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லுபவர்களிலும் பலரும் பொருள் தெரியாமல்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். கேட்டால், பொருள் தெரியாமல் சொன்னாலும் இறைவன் அருள் புரிவான் என்று சமாதானம் கூறுவார்கள். "கக்கத்தில் வையாதே, கருத்தில் வை" என்பது முதுமொழி..


"புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்,

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே! பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு"                     -- நாலடியார்.


கண்ணில் காணும் புத்தகங்களை எல்லாம் வாங்குவர். புத்தகத்தை யாராவது தந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி வந்து விடுவர். ஆனால் அவற்றைப் படித்துப் பயன் கொள்ளமாட்டார். வீடு நிறைய புத்தகங்களைத் தொகுத்து வைத்து இருப்பவர்கள் எல்லோரும் படித்துப் பயன் கொண்டுவர் என்று சொல்ல முடியாது. புத்தகங்களைப் பொருள் உணர்ந்து படித்துத் தானும் பயன் பெற்று, பிறரும் பயனுற எடுத்துச் சொல்பவர்கள் மிகச் சிலரே. 

புத்தகம் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து, பிறருக்கும் சொல்லித் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமையாகும் என்பது கருத்து.


105. இல்லது வாராது - உள்ளது போகாது

 


“வல்லமையால் முடிவதுண்டோ? தலைகீழாய்

     நின்றாலும் வருவ துண்டோ?

அல்லதுதான் அவன் செயலே அல்லாமல்

     தன்செயலால் ஆவதுண்டோ?

புல்லறிவால் மயங்காமல், தண்டலையார்

     அடிபணிந்து, புத்தி உண்டாய்,

இல்லது வாராது! நமக் குள்ளதுபோ

     காதெனவே இருக்க லாமே.”


இதன் பொருள் ---

        வல்லமையால் முடிவது உண்டோ - நமது ஆற்றலாலே எந்த செயலும் முடியுமா? தலைகீழாய் நின்றாலும் வருவது உண்டோ - எவ்வளவு முயன்றாலும் நமக்கு வாராதது வருமா?, அல்லது - மேலும், அவன் செயலே அல்லாமல் தன் செயலால் ஆவது உண்டோ - இறைவன் ஆணைப்படியே நடக்குமன்றி ஒருவன் முயற்சியால் மட்டும் ஏதாவது முற்றுப் பெறுமா? (ஆகையால்), புல்லறிவால் மயங்காமல் - சிற்றறிவினாலே சிந்தை கலங்காமல், தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, புத்தி உண்டாய் – நல்லறிவு உண்டாகப் பெற்று, நமக்கு இல்லது வாராது - நமக்கு (ஊழினாலே) வரத் தகாதது கிடைக்காது, உள்ளது போகாது - (ஊழினாலே) வரக் கூடியது வீணாகாது, என இருக்கலாம் - என்று முயற்சியுடன் மட்டும் இருத்தல் நலம்.


    ‘ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று - சூழினும் தான்முந் துறும்' என்ற திருவள்ளுவ நாயனார், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' என்றும் அருளிச் செய்துள்ளதால், முயற்சியை வலியுறுத்திக் கூறப்பட்டது. ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பதனாலே பயனை எதிர்பாராமல் முயற்சியைச் செய்க என்பதே கருத்தாகக் கொள்ளல் வேண்டும். ‘இல்லாதது வராது உள்ளது போகாது' என்பது சத்காரிய வாதம். 

இக் கருத்து திருவள்ளுவ நாயனாரால் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. திருக்குறளில் அறுத்துப்பாலில் ஊழ் என்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஊழ் வசத்தால் தமக்கு உரியவை அல்லாத பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும், அவை நில்லாது போகும். ஊழ்வசத்தால் தமது உடைமையாக வேண்டிய பொருள்களை வெளியில் கொண்டு போய்ப் போட்டாலும், அவை தம்மை விட்டுப் போகமாட்டா" என்கின்றார் நாயனார். அனுபவிக்கும் ஊழ் உள்ளவன் பொருளைக் காப்பாற்ற வேண்டுவது இல்லை, அது அவனை விட்டு நீங்காமல் இருக்கும். அனுபவிக்கும் ஊழ் இல்லாதவன், எவ்வளவுதான் வருந்திக் காத்தாலும், பொருளானது அனுபவிப்பதற்கு இல்லாமல் போய்விடும்.

“பரியினும் ஆகாவாம் பால் அல்ல, உய்த்துச்

சொரியினும் போகா தம.” -- திருக்குறள்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

“வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண் ஆக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.” --- நல்வழி.

இதன் பொருள்  ---

ஊழால் வரக் கூடாதவைகள், பரிந்து அழைப்பினும் வாராவாம். ஊழால் வரக் கூடியவை, போயிடுங்கள் என வெறுப்பினும், போகாவாம். இவ்வுண்மை அறியாமல் இருந்து ஏக்கமுற்று, மனம் புண்ணாகும்படி அவற்றைத் தாம் நெடுந்தூரம் சிந்தித்து, மாண்டு போவதே மனிதர் தொழிலாக உள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கது அன்று.

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினை உலந்தக் கால். “ --- நாலடியார்.

இதன் பொருள் ---

        பொருளானது, பிறர்க்குக் கொடுத்துத் தானும்  நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலும்மேலும் திரளும், நல்வினை முடிந்துவிட்டபோது, அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும்,  இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.


“வளம்பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை;

அளந்தன போகம் அவரவர் ஆற்றான் ;

விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்

கார்எனச் செய்தாரும் இல்.” ---  நாலடியார்.

இதன் பொருள்  ---

செழுமையாக வாழ விரும்பாதவர் உலகில் ஒருவரும் இல்லை. ஆனால் இன்ப நுகர்வு என்பது அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளது.  விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல.


“ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது.” ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

        மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில், யாரும் சிறிதும் துன்பந்தரும் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே,  மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாது ஒழிதல் இல்லை. (இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும் என்பது கருத்து)


“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்,

போகும் பொறியார் புரிவும் பயன் இன்றே,

ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்

ஆகாதார்க்கு ஆகுவது இல். ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

உயர்ச்சியை உடைய மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ் வந்து எய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு, செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை. செல்வம் போக்கும் போகூழ் வந்து எய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு, அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை.  எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும், செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவது ஒன்றில்லை.


“கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேல் சென்றதனால் - விழுமிய

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது." ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகால் சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டு வந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாது ஒழியினும், அடைதற்கு உரியவாய் நின்ற நன்மைகள் ஒருவனை அடையாது நிற்றல் இல்லை.

கழுமலம் : இது சோழநாட்டு உள்ளது ஓர் ஊர். கருவூர் : இது சேரநாட்டு உள்ளதோர் ஊர். இவ்விரண்டும் வெகு தொலைவில் இருந்தாலும், ஊழ் கருவூரில் உள்ளவனை அரசனாக்கியது. 

கரிகாலன் நெடுந்தொலைவின்கண் இருந்து விரும்பாது இருப்பினும் ஊழ் விழுமிய பயனை அடைவித்தது. சீகாழியை ஆட்சிசெய்தான் இறந்து படவே, அவன் வழியில் யாரும் அவ்வரசாட்சியை ஏற்க இன்மையால் அமைச்சர்கள் பட்டத்து யானையை விட்டு அவ்யானை யாரைக் கொண்டு வருகின்றதோ அவனுக்கே முடிசூட்டுவது என்று உறுதிசெய்து யானையை விட்டனர். அவ் யானை கருவூரிலிருந்த கரிகாலனைக் கொண்டு வந்து முடிசூடுமாறு செய்தது என்பதாம்.


'ஆகுவது ஆகும், காலத்து அழிவதும், அழிந்து சிந்திப்

போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,

ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!' 

                            ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம்.

 இதன் பொருள் ---

எக்காலத்தும் அழியாது வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது  ஆகியே  தீரும். அழிய வேண்டியது அழிந்து சிதறிப் போகும்.  அவ்வாறு அழிந்து போவதைப் பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து  போயே தீரும். குற்றமற அதை உணர்ந்து தெளிந்தவர்கள் உன்னைக் காட்டிலும் யாவர் உலகில் உளர்? துன்பப்படாமல் எம்மைக் குறித்து இரங்கலையாய்ச் செல்வாய்.

நடப்பதை ஏற்கும் பக்குவம் பெற்ற மனிதனாக கும்பகருணன் விளங்குகிறான். நடைமுறை உலகில் வாழ்பவர்க்கு இத்தகைய மனநிலை துன்ப  நீக்கத்துக்கு உறுதுணையாக அமையும் என்பது குறிக்கத்தக்கது. 


104. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.

 


“பார்க்குள் அறிவிருந்தாலும் படித்தாலும்

     கேட்டாலும் பணிந்து வேத

மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்

     பெரியவர்தம் மகிமை உண்டோ?

ஆர்க்கும்அருங் கதியுதவும் தண்டலையா

     ரே! சொன்னேன்! ஆகாயத்தில்

ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும்

     பருந்தாகா துண்மை தானே.”


இதன் பொருள் ---

        ஆர்க்கும் அருங்கதி உதவும் தண்டலையாரே - எல்லோருக்கும் நல்ல நிலையை அருளுகின்றவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ளவரும் ஆன சிவபரம்பொருளே!  ஊர்க்குருவிதான் ஆகாயத்தில் உயரப் பறந்தாலும் பருந்து ஆகாது - ஊர்க்குருவி வானத்தில் உயரமான தொலைவில் பறந்தாலும் அது பருந்தின் மதிப்பை அடைய முடியாது, உண்மை தானே - இது உண்மையே ஆகும்; (ஆகையால்), அறிவு இருந்தாலும் படித்தாலும் கேட்டாலும் – அறிவு இருந்தாலும், இருக்கின்ற அறிவைப் பெருக்கிக் கொள்ள நூல்களைக் கற்றாலும், நூற்பொருளைக் கற்றார் வாய்க் கேட்டாலும், பணிந்து வேதமார்க்கமுடன் நடந்தாலும் – பணிவுடன், வேதநெறியில் ஒழுகினாலும், பார்க்குள் சிறியவர்க்குப் பெரியவர் தம் மகிமை உண்டோ - உலகிலே கீழ்மக்களுக்குச் சான்றோருக்கு உரிய சிறப்பு உண்டாகுமோ?

        “உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்பது பழமொழி. "சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும் – அங்கண் உலகில் சிறியோர் தாம் அடங்கி நடந்து கதி அடையமாட்டார்” என்று முன்னே ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளது காண்க. “வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ?” என்பது குமரேச சதகம்.


ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி, - தோழி!

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன்.                ---  மூதுரை


எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,

முற்பவத்தில் செய்த வினை.               ---  மூதுரை.


வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.        --- திருக்குறள்.


103. முலைமீது கை வைத்த முறைமை

‘இதுகருமம், இதனாலே இதை முடிப்பாய்!'

     எனத் தொழிலை யெண்ணிச் செய்தால்

அதுகருமம் பாராமல், திருடியும் அள்

     ளியும் புரட்டாய் அலைவ தெல்லாம்

மதியணியும் தண்டலையார் வளநாட்டில்

     நீராடும் மாதர் தங்கள்

முதுகினைத்தேய் எனச் சொன்னால் முலைமீது

     கையிட்ட முறைமை தானே.


இதன் பொருள் ---


    மதி அணியும் தண்டலையார் வளநாட்டில் – பிறைச்சந்திரனைத் திருச்சடையில் முடித்துள்ளவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரமத்பொருளின் வளம் பொருந்திய நாட்டினில், இது கருமம், இதனாலே இதை முடிப்பாய் எனத் தொழிலை எண்ணிச் செய்தால் - ‘இதுதான் உனக்குள்ள செயல்; இந்த வழியில் இதனைச் செய்திடு' என்று விதிக்கப்பட்ட ஒரு செயலை எண்ணிச் செய்தால்,  அது கருமம் – அது செம்மையாக முடியும். பாராமல் – அந்த வழியில் சிந்தித்து முயன்று செயல்ப்படுப் பொருளை ஈட்டாமல், திருடியும் அள்ளியும் புரட்டாய் அலைவது எல்லாம் – பிறர் பொருளைக் கவர்ந்தும், எடுத்தும், மாறுபானாகவும், வஞ்சகமாகவும் செயல்களைச் செய்து திரிவது எல்லாம், நீராடும் மாதர் தங்கள் முதுகினைத் தேய் எனச் சொன்னால் - நீரில் குளிக்கும் பெண்கள் தங்கள் முதுகைத் தேய்க்கச் சொன்னால், முலைமீது கையிட்ட முறைமைதானே – முதுகைத் தேய்ப்பது தொடங்கி, வஞ்சகமாக முலைமீது கையை வைத்த செயலாக முடியும்.


      புரட்டு – மாறுபாடு, வஞ்சகம். புரட்டரிடத்திலே ஒரு தொழிலைக் கொடுத்தால்,  அதைப் பலவகையிலும் கெடுத்துத் தங்கள் நலத்தையே நாடிக் கொள்ள முயன்று கேட்டினைத் தேடிக் கொள்வர்.


102. கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

 “தண்டலையா ரடிபணிந்து தவம் தானம்

     உபகாரம் தருமம் செய்து

கொண்டபொருள் விலைவாசி காணிதே

     டிக்கோடி கொடுப்ப தல்லால்

வண்டருமாய் ஒன்றுபத்து விலைகூறி

     அநியாய வட்டி வாங்கிக்

கண்டவர்தம் கடுந்தேட்டுக் கண்ணை அறக்

     கெடுக்குமிது கருமந் தானே.”


இதன் பொருள் ---


தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, தவம் தானம் உபகாரம் தருமம் செய்து கொண்ட பொருள் - தவமும் தானமும் உதவியும் பிற அறமும் புரிந்து தேடிய பொருள், விலைவாசி காணி கோடி தேடிக் கொடுப்பது அல்லால் - விலைவாசியையும் நிலபுலனையும் கோடியாகத் தேடிக் கொடுக்குமே அல்லாமல், வண்டருமாய் – (இறைவனுக்கு ஏவல் செய்யாது) பிறருக்கு ஏவல் செய்வோராக வாழ்ந்து, ஒன்று பத்து விலை கூறி – பொருள்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக விலை சொல்லியும், அநியாய வட்டி வாங்கிக் கண்டவர்தம் கடுந்தேட்டு - ஒழுங்கற்ற முறையிலே வட்டியை வாங்கிச் சிக்கனமாகச் சேர்த்து வைத்த பொருளானது, கண்ணை அறக் கெடுக்கும் - வாழ்க்கையை முழுதும் கெடுக்கும், இது கருமந்தான் - இதுதான் உலகில் நடப்பது.


விளக்கம் ---

 

வாசி – வேறுபாடு. பொருளுக்கான விலையிலே உயர்வு, தாழ்வு. பொருள் வணிகம் செய்யும்போது ஒன்றுக்குப் பத்தாக விலைகூறிப் பொருளைக் குவிப்பது கூடாது. அநியாய வட்டிக்கு விட்டுப் பொருளைச் சேர்ப்பதே வாழ்க்கை எனக் கொண்டு வாழ்வோரை, “வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர்” என்கிறார் திருமூல நாயனார்.


மனிதனுக்குப் பொருளானது அவன் செய்யும் சிவபுண்ணியம் காரணமாக, இறைவன் திருவருளால் இயல்பாகவே வந்து சேரும். தான தருமங்களைச் செய்து வாழ்வோருக்கும் இறையருளால் பொருள் வந்து குவியும் என்பது காட்டப்பட்டது. “இறைக்கிற கிணறு ஊரும், இறைக்காத கிணறு நாறும்” என்பார்கள். பிறருக்குப் பொருளைக் கொடுப்பதனால், தமது செல்வம் குறைந்து விடும் என்று எண்ணுவது அறியாமை. ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமே பசித்தவன் வயிறுதான் என்பார் திருவள்ளுவ நாயனார். “அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி” என்பது திருக்குறள். “இரப்பவர்க்கு ஊய வைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்” என்பது அப்பர் தேவாரம். 


“இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்று எண்ணிக்

கரப்பவர் கண்டு அறியார் கொல்லோ? - பரப்பில்

துறைத்தோணி நின்று உலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

இறைத்தோறும் ஊறும் கிணறு.”. – பழமொழி நானூறு.


கடலில் உள்ள துறையில், தோணிகள் நின்று அசைந்து கொண்டிருக்கும் அசைகின்ற நீரை உடைய கடல் நாடனே! தன்னிடம் வந்து ஒரு பொருளை வேண்டுவார்க்குக் கொடுப்பதால் தமது செல்வமு குறைவுபடும் என்று எண்ணி, ஈயாது மறைப்பவர்கள், இறைக்கும் தோறும் நீர் ஊறுகின்ற கிணற்றைப் பார்த்து அறியாதவர் போலும்.


எனவே, பொருளைச் சேர்த்து வைப்பதோடு, அது மேலும் வளரும் அருள்வழியை விடுத்து, தீயவழியில் ஒன்றுக்குப் பத்தாகப் பொருளுக்கு விலை கூறியும், அநியாய வட்டிக்குப் பொருளைக் கொடுத்தும் வாழ்வது கூடாது என்று அறிவிக்க, “கடும் தேட்டு, கண்ணை அறக் கெடுக்கும்” என்று சொல்லப்பட்டது.  தேட்டு – சம்பாத்தியப் பொருள். கண்ணைக் கெடுக்கும் – நல்லறிவை மழுங்கச் செய்து வாழ்வைக் கெடுக்கும்.


101. வம்பருக்குத் தலைமை

 வம்பரெல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால்

     என்ன? அதுமாறி ஓய்ந்த

பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்

     என்ன? அதிற் பலன்உண் டாமோ?

கம்புலவும் தண்டலையார் வளநாட்டில்

     வருந்துபல கழுதை தாமும்

அம்புவியிற் கிடந்தென்ன? பாதாளந்

     தனிற்கிடந்தென் ஆகுந் தானே?


இதன் பொருள் ---


கம்பு உலவும் தண்டலையார் வளநாட்டில் - சங்குகள் உலவும் நீர்வளம் பொருந்திய திருத்தண்டலை இறைவரின் வளம் பொருந்தல் நாட்டிலே, வருந்து பல கழுதை தாமும் அம்புவியிற் கிடந்து என்ன - திறனற்று வருந்துகின்ற பல கழுதைகள் அழகிய இந்த உலகிலே இருப்பதால் என்ன பயன்?, பாதாளந்தனில் கிடந்து என் ஆகும் - பாதாளத்திலே கிடந்தால் மட்டும் என்ன கெட்டுவிடும்? (ஆகையால்), வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால் என்ன - வம்பர்களுக்கு எல்லாம் செல்வாக்கு மிகுந்திருந்தால் என்ன? அது மாறி, ஓய்ந்த பம்பரமாய் மூலையினில் கிடந்திட்டால் என்ன - ஆதிக்கம் கெட்டு ஆடி ஓய்ந்த பம்பரம்போல மூலையில் முடங்கிக் கிடந்தால் என்ன?, அதின் பலன் உண்டாமோ - அதனால் ஏதாவது நலம் உண்டாமா? (நலம் ஏதும் விளைவதில்லை)


100. பித்தளை நாற்றம் போகாது

 


“நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்

     ஒருதீது நேர வந்தால்,

அத்தனையும் தீதென்பார்! பழிகருமக்

     கயவர்குணம் அகற்றல் ஆமோ?

வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற்

     சாம்பர்இட்டு விளக்கி னாலும்

எத்தனைசெய் தாலும்என்ன? பித்தளைக்குத்

     தன்நாற்றம் இயற்கை ஆமே.”


இதன் பொருள் ---


வித்தகம் சேர் தண்டலையார் வளநாட்டில் - அறிவுத் துறையுடைய திருத்தண்டலை இறைவரின் வளமிக்க நாட்டிலே, சாம்பர் இட்டு விளக்கினாலும் எத்தனை செய்தாலும் என்ன - சாம்பலைக் கொண்டு தேய்த்தாலும் என்ன செய்தாலும், பயன் ஏது? பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை ஆம் - பித்தளையின் களிம்பு நாற்றம் இயல்பானதே ஆகும்; (அதுபோல), பழி கருமக் கயவர் - பழிப்புக்குரிய செயலைச் செய்யுந் தீயவர்களுக்கு, நித்தம் எழுநூறு நன்றி செய்தாலும் - நாள்தோறும் நூற்றுக்கணக்கான நன்மைகளைப் புரிந்தாலும், ஒரு தீது நேர வந்தால் அத்தனையும் தீது என்பார் - (நம்மை அறியாமலே) ஒரு தீமை நேர்ந்து விட்டால் அவ்வளவு நன்மையையும் தீது என்றே கூறிவிடுவர்; குணம் அகற்றல் ஆமோ - (அவர்) பண்பை மாற்ற இயலுமோ?


      தீமை பல செய்தாலும், ஒரு நன்றி செய்தால், தீமையை மறந்து நன்றியை நினைவில் வைப்பது நல்லோர் இயல்பு "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த, ஒன்று நன்(று) உள்ளக் கெடும்” என்பது திருவள்ளுவ நாயனார் வாய்மொழி. ஆனால், எத்துணை நன்றி செய்யினும் ஒரு தீமை செய்தால் அத்துணை நன்றியையும் மறந்து தீமையை மறவாதிருத்தல் தீயோர் இயல்பு. ‘பித்தளை நாற்றம் போகாது' என்பது பழமொழி. 


    ஒருவர் ஒரு நன்மை செய்திருந்தாலும் சான்றோர்கள் அதற்காக  அவர்கள் செய்கின்ற நூறு பிழைகளைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மை செய்து, தற்செயலாக அவர்கள் பார்வையில் ஒன்று தீதாகத் தெரிந்தாலும் செய்த எழுநூறு நன்மையும் தீமையானதாகவே கருதுவர் என்று நாலடியார் கூறுகிறது. 


“ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீதாயின்

எழுநூறும் தீதாய் விடும்.”              --நாலடியார்


"கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்

     காஞ்சிரம் கைப்புவிடுமோ?

கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்

     கதிபெறும் குதிரை ஆமோ?


குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும்

     கொடுவிடம் அலாது தருமோ?

குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்

     கோணாமலே நிற்குமோ?


ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம்இலா

     யோனிகண் ஆகிவிடுமோ?

உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்

     உள்ளியின் குணம் மாறுமோ?


மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில்

     மார்க்க மரியாதை வருமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே." -- குமரேச சதகம்.


இதன் பொருள் ---


     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!  புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


     கட்டி எரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ - வெல்லக்கட்டியை எருவாக இட்டு, நல்ல தேனை நீராக ஊற்றி வளர்த்தாலும் எட்டிக் காயின் கசப்பு நீங்குமா? நீங்காது.


     கழுதையைக் கட்டி வைத்து ஓமம் வளர்க்கினும் கதிபெறும் குதிரை ஆமோ - கழுதையைக் கட்டிப் போட்டு, வேள்வியைச் செய்தாலும், பல கதிகளிலும் செல்லும் குதிரை ஆகுமோ? ஆகாது.


     குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடுவிடம் அலாது தருமோ - பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் கொடிய விடத்தை அல்லாமல் வேறு நல்லது எதையாவது தருமா? தராது.


     குக்கல் நெடுவாலுக்கு மட்டையைக் கட்டினும் கோணாமலே நிமிருமோ - நாயின் நீண்ட வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாலும், அதனுடைய கோணல் தன்மை மாறுமோ? மாறாது.


     ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயமிலா யோனி கண் ஆகி விடுமோ - நிறைய மையினை நன்றாக இட்டாலும் பெண்குறியானது கண் ஆகுமா? ஆகாது.


     உலவு கன கற்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ - இனிய மணம் கொண்ட கர்ப்பூரம் முதலான நறுமணப் பொருள்களோடு கூட்டினாலும், பூண்டின் குணம் மாறுமா? மாறாது.


அது போலத்தான்,


      மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ - அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறையும் நல்ல அறிவு புகட்டினாலும், அதனால் அவருக்கு ஒழுங்கான நடத்தை வருமோ? வராது.


      பின்வரும் நாலடியார் பாடல்களின் கருத்தை, இப் பாடலோடு ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.


“தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை

எக்காலும் குன்றல் இலர்ஆவர்,  - அக்காரம்

யாவரே தின்னினும் கையாதாம், கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு.”


    தகுதி உடைய பெரியவர்கள் நன்மை செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். தகுதியே இல்லாத தீயவர்கள் அவர்களின் இயல்புக்கு ஏற்ப, தீமையும் செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். வெல்லக் கட்டியை யார் தின்றாலும் கசக்காது. இனிக்கவே செய்யும். ஆனால், வேப்பங்காயை யார் தின்றாலும் இனிக்காது. கசக்கவே செய்யும்.      


    மேலான நறுமணப் பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும், உள்ளிப் பூண்டினுடைய தீயநாற்றம் நீங்காதது போல, பொறாமைக் குணம் கொண்ட நெஞ்சத்தை உடைய அறிவிலிகளை நல்லவர்களாக ஆக்க முடியாது என்கிறது நீதிவெண்பா என்னும் நூல்.


“அவ்விய நெஞ்சத்து அறிவுஇலாத் துர்ச்சனரை

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? -- திவ்வியநல்

கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது

கந்தம் மெடுமோ கரை.” -- நீதிவெண்பா


    பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களையும் அவற்றின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் தகும்.


“நாய்வாலை அளவு எடுத்து பெருக்கித் தீட்டின்

     நல் தமிழை எழுத எழுத்தாணி ஆமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

     பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடுஅது ஆமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

     சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;

ஈவாரை ஈயவொட்டான், இவனும் ஈயான்;

     எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.”


    நாயினது வாலை எழுத்தாணிக்கு உரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.


“தூம்பினில் புதைத்த கல்லும்

     துகள் இன்றிச் சுடர் கொடாது;

பாம்புக்குப் பால் வார்த்து என்றும்

     பழகினும் நன்மை தாரா;

வேம்புக்குத் தேன் வார்த்தாலும்

     வேப்பிலை கசப்பு மாறா;

தாம்பல நூல் கற்றாலும்

     துர்ச்சனர் தக்கோர் ஆகார்.”


    வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.


“கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எருப்போட்டு,

      கமழ்நீர் பாய்ச்சி,

பொற்பு ஊரர உள்ளியினை விதைத்தாலும் 

அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்;

சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக

      வரும் எனவே சொல்லினாலும்,

நற்போதம் வாராது, அங்கு அவர் குணமே

      மேலாக நடக்கும்தானே.”


    என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப் பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில்லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர்.


    கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.


"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,


உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்


பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,


மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்பவசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".


இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்.


கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். 


உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம்.


உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். 


உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். 


அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். 


பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். 


கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். 


மணலையும் கயிறாத் திரிக்கலாம் -  மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். 


கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.


எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் அதிகாரத்துள், 


"மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல்"


என்னும் திருக்குறளின் வழி, கீழ்மக்கள் என்பவர் தோற்றத்தால் மக்களைப் போலவே இருப்பர். அவரைப் போல ஒப்பினை நாம் வேறு எங்கும் கண்டது இல்லை என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.


"தேவர் அனையர் கயவர், அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலால்"


என்னும் திருக்குறளின் வழி, கீழ்மக்கள் என்பவர் எப்படியாவது தாம் விரும்புவனவற்றையே செய்து வாழ்ந்து வருவர். அத் தன்மையால் அவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 


99. அச்சியிலே போனாலும்...

 கொச்சையிலே பாலுமுண்டோ? கூத்தியர்கள்

     தம்மிடத்திற் குணந்தான் உண்டோ?

துச்சரிடத் தறிவுண்டோ? துச்சரெங்கே

     போனாலும் துரையா வாரோ?

நச்சரவத் தொடையாரே! தண்டலையா

     ரே! இந்த நாட்டல் லாமல்

அச்சியிலே போனாலும் அகப்பைஅரைக்

     காசதன்மேல் ஆர்கொள் வாரே?


இதன் பொருள் ---


    நச்சு அரவத் தொடையாரே – நஞ்சை உடைய பாம்புகளை மாலையாக அணிந்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளே! இந்த நாட்டு அல்லாமல் அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்காசதன் மேல் யார் கொள்வாரே - இந்த நாட்டிலே அன்றி அச்சிக்குச் சென்றாலும் அகப்பை அரைக் காசுக்கு மேல் விலை போகாது, (ஆகையால், எங்கே சென்றாலும்) கொச்சையிலே பாலும் உண்டோ – வறட்டு ஆட்டிலே பால் கிடைக்குமா?, கூத்தியர்கள் தம்மிடத்தில் குணம்தான் உண்டோ - கூத்தாடும் மாதரிடம் நற்பண்பைத்தான் காணமுடியுமா?, துச்சர் இடத்து அறிவு உண்டோ - தீயருக்கு அறிவு உண்டாகுமா?, துச்சர் எங்கே போனாலும் துரை ஆவரோ - தீயவர் எங்கே சென்றாலும் தலைமைக்கு ஏற்றவர் ஆவாரோ?


      கூத்தி – நாடகக் கணிகை. கூத்தியர் என்பவர் முற்காலத்தில் கூத்தாடும் தொழிலை மேற்கொண்டு, ஒழுக்கமின்றி ஊருராகச் சென்று கொண்டிருந்தவர்கள்.துச்சர் -இழிந்த குணம் உடையவர். ‘துச்சர் துரை ஆவாரே' துச்சரிடத்துத் துரைக்கு உரிய பண்பு பொருந்தி இருக்காது. ‘அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு தான்' என்பது பழமொழி.


98. முழுதும் அனுபவிக்க யாராலும் முடியாது

 


ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம்

     அன்னமயம் ஆனால் என்ன?

சூழவரும் இரவலர்க்குப் பசிதீர

     உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ!

ஏழுலகும் பணியவரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! எந்தநாளும்

நாழிநெல்லுக்கு ஒருபுடைவை விற்றாலும்

     நிருவாணம் நாய்க்குத் தானே.


இதன் பொருள் ---


    ஏழு  உலகும் பணியவரும் தண்டலையாரே - ஏழுலக மக்களும் வணங்கத் தேடிவரும் திருத் தண்டலை இறைவரே! எந்த நாளும் நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய்க்கு நிருவாணந்தான் - எக்காலத்திலும் ஒரு படி நெல்லுக்கு ஒரு புடைவை என்று விற்றபோதிலும், நாய் ஆடையின்றித்தான் இருக்கவேண்டும். (அதுபோல), ஆழி எல்லாம் பாலாகி அவனி எல்லாம் அன்ன மயம் ஆனால் என்ன - எல்லாக்  கடல்களும் பாற்கடல்களாகவும், உலகம் முற்றும் சோற்றுக் குவியலாகவும் ஆனாலும் என்ன பயன்?, சூழ்வரும் இரவலர்க்குப் பசிதீர உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ - (உலகைச்) சுற்றி அலையும் பிச்சைக்காரர்களுக்குப் பசி தீர பாலைக் குடித்தும், உணவை உண்டு களிக்கும் நலம் உண்டாகுமா? (உண்டாகாது)


      ஆழமாக இருப்பது பற்றி, கடலானது ஆழி என வழங்கப்படும். அனைத்துக் கடலுமே பாற்கடலாக மாறினாலும், அதைப் பார்த்து வரும் இரவலருக்கு, பாற்கடலை முழுமையாகக் குடித்து மகிழ முடியாது. உலகம் எங்கும் சோற்றுப் பெருக்கு இருந்தாலும் அதைப் பார்த்து வரும் இரவலர்க்கு சோறு முழுவதையும் உண்டு மகிழ முடியாது. இதை விளக்கவே, ‘நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிருவாணமாகத் தான் இருக்கும் என்னும் பொருள்பட ஒரு பழமொழி இருந்திருத்தல் வேண்டும்.


        பின்வரும் பாடல்களை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

 பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்,

துய்ப்பேம் எனினே தப்புந பலவே. “.      – புறநானூறு

இதன் பொருள் ---

  தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டு உள்ள இந்த உலகில், "எல்லார்க்கும் பொதுவானது அல்ல, எனக்கே உரியது" என்று ஒரு குடையின் கீழ் ஏகச் சக்கராதிபதியாக வாழ்ந்த மாமன்னர்களுக்கும்; பகல் பொழுதிலும் உறங்காமல், நள்ளிரவில் கணி விழித்து, விரைந்து செல்லுகின்ற காட்டு விலங்குகளை வேட்டை ஆடித் திரியும், கல்வி அறிவு இல்லாத வேடர்களுக்கும் தேவைப்படுவது --- உண்பதற்கு ஆழாக்குத் தானியமும், உடுப்பதற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு துண்டு உடைகளுமே ஆகும். மற்ற மற்றத் தேவைகள் எல்லாம் கூட, இந்த இரண்டு விதமானவர்க்கும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. எனவே, செல்வத்தை ஈட்டுவதன் பயன், பிறருக்குக் கொடுத்து மகிழவே. இதை உணராமல், ஈட்டிய செல்வம் தமக்கே உரியது; தாமே அனுபவித்து கிழலாம் என்று இருந்த பலரும், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு, உயிரை இழந்து இருக்கின்றார்கள்.


 “சேவித்தும், சென்று இரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,

பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்.”            -- நல்வழி.

 

இதன் பொருள் ---

      வயிற்றுப் பசியின் கொடுமையால் பிறரைத் தேடிச் சென்று வணங்கியும், பலரிடத்தில் சென்று யாசித்தும், தெளிந்த நீரை உடைய கடலைக் கடந்து, வேற்ற நாடுகளுக்குச் சென்றும், அற்பர்களை எல்லாம் பெரியவர்களாகப் பாவித்தும், உலகை ஆண்டும்,  செல்வர்களைப்  புகழ்ந்து பாடியும், இப்படிப் பலவிதமாக உடம்பினை ஓம்புவதற்கு வேண்டிய படி அரிசிக்காகவே உழைத்துக் காலத்தைக் கடத்துகின்றோம்.



97. பிறர் வருத்தம் அறியாதவர்

 


"நொந்தவரும், பசித்தவரும், விருந்தினரும்,

     விரகினரும், நோயுள் ளோரும்,

தந்தமது வருத்தமல்லாற் பிறருடைய

     வருத்தமது சற்றும் எண்ணார்!

இந்துலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன் ஈன்ற தாயின்

அந்தமுலைக் குத்துவலி சவலைமக

     வோசிறிதும் அறிந்தி டாதே."


இதன் பொருள் ---


இந்து உலவும் சடையாரே – பிறைச்சந்திரன் உலாவுகின்ற திருச்சடையினை உடையவரே! தண்டலையாரே – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 


ஈன்ற தாயின் அந்த முலைக் குத்துவலி சவலை மகவோ சிறிதும் அறிந்திடாதே - பெற்ற தாயின் முலையில் உண்டாகும் குத்து நோயைச் சவலைப் பிள்ளையோ கொஞ்சமும் அறியாது; (அதுபோல), நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும் விரகினரும் நோய் உள்ளோரும் – உள்ளம் வருந்தினோரும், பசியோடு இருப்பவரும், விருந்துண்ண வந்தோரும், காம உணர்வு கொண்டவரும், நோய்வாய்ப் பட்டோரும் ஆகிய இவர்கள், தந்தமது வருத்தம் அல்லால் பிறருடைய வருத்தமது சற்றும் எண்ணார் - தங்கள் வருத்தத்தை அன்றி மற்றவர்களின் வருத்தத்தைச் சிறிதும் நினையார்.


பிறர் வருத்தம் அறியாதவர் இன்னின்னார் என்பது கூறப்பட்டது. இதனால், இவர்களைத் தவிர, பிறர் யாவரும், பிறர் வருத்தத்தை உணர்ந்து, அதனைப் போக்க உதவுகின்ற மனம் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்பது கருத்து.


96. இளைத்தவன் மனைவி என்றால்...

களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு!

     மிடியருக்குக் கனந்தான் உண்டோ?

வளைத்தமலை யெனுஞ்சிலையார் தண்டலைசூழ்

     தரும்உலக வழக்கம் பாரீர்!

ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரைக்

     கண்டவரும் ஒன்றும் பேசார்!

இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கும்

     மச்சினியாய் இயம்பு வாரே.


இதன் பொருள் ---


    வளைத்த மலை எ(ன்)னும் சிலையார் தண்டலை சூழ்தரும் உலக வழக்கம் பாரீர் - வளைந்த மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான்  எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைச் சூழ்ந்த உலகத்தின் வழக்கத்தைப் பாருங்கள்!, தம் மனையில் பெண்டீரைக் கண்டு ஒளித்திடுவர்; அவரும் ஒன்றும் பேசார் - செல்வ வலிமை உடையோர் வீட்டில் உள்ள பெண்களைக் கண்டு ஒளித்திடுவார்; ஒன்றும் பேசவும் மாட்டார் (எனினும்), இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லோர்க்கும் மச்சினியாய் இயம்புவார் – ஆற்றலு அற்றவன்  மனைவி என்றாலோ யாவருக்கும் மைத்துனியாகக் கொண்டு நகையாடுவர்; (ஆகையால்), களித்து வரும் செல்வருக்கு வலிமையுண்டு - களிப்புடன் வரும் செல்வர்களுக்கு ஆற்றலுண்டு; மிடியருக்குக் கனந்தான் உண்டோ - ஏழைகட்கு அப் பெருமை உண்டாகுமோ?


      சிவபெருமான் மேருமலையை திரிபுர தகனத்தின்போது) வில்லாக வளைத்ததனால், வளைத்தமலை எனும் சிலையார், என்றார். (சிலை – மலை) ‘இளைத்தவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி' என்பது பழமொழி.


96. பிடாரி மனைவி ஆனால்....


அடுத்தமனை தொறும்புகுவாள்! கணவன்உணும்

     முனம் உண்பாள்! அடக்கம் இல்லாள்!

கடுத்தமொழி பேசிடுவாள்! சிறுதனம்தே

     டுவள்! இவளைக் கலந்து வாழ்தல்

எடுத்தவிடைக் கொடியாரே! தண்டலையா

     ரே! எவர்க்கும் இன்பம் ஆமோ?

குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப்

     பெண்டுவைத்துக் கொண்ட தாமே.


இதன் பொருள் ---


    எடுத்த  விடைக் கொடியாரே - இடபக்கொடியினை உயர்த்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! அடுத்த மனைதொறும் புகுவாள் - அயல் வீடுகளிலெல்லாம் நுழைவாள், கணவன் உ(ண்)ணும் மு(ன்)னம் உண்பாள் - கணவன் உண்பதற்குமுன் தான் உண்பாள், அடக்கம் இல்லாள் – அடங்கி இருக்கமாட்டாள், கடுத்தமொழி பேசிடுவாள் - வெறுப்பாகவே  உரையாடுவாள், சிறு தனம் தேடுவள் - (தனியே) சிறு சேமிப்புச் செய்வாள், இவளைக் கலந்து வாழ்தல் எவர்க்கும் இன்பம் ஆமோ - இப்படிப்பட்டவளைக்  கூடி வாழ்வது  யாருக்குத்  தான் மகிழ்ச்சியாக இருக்கும்? (இப்படிப்படவளை மணந்து வாழ்வது) குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப் பெண்டு வைத்துக் கொண்டது - குடிகெடுவதற்குப் பிடாரியை மனைவியாகக் கொண்டதை, ஆம் – ஒத்த செயல் ஆகும்.


     “பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு” என்பது கலித்தொகை. ஐந்தறிவு உள்ள விலங்குக்கே இந்த அன்பு விளங்குகிறது. விலங்கினும் மேம்பட்ட எப்படி இருக்க வேண்டும் என்பது இதனால் விளங்கும். “கறுத்தமுலைச் சூல் பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக் கைந் நீட்டும்” என்பது பதினொன்றாம் திருமுறை. கறுத்த முலையினை உடைய பெண்யானைக்கு, ஆண் யானையானது சந்தன மரத்தை ஒடித்துத் தன் துதிக்கையால் நீட்டிக் கொடுக்கிறதாம். “சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து, யானை மந்தண் மடப்பிடியின் வாய்க் கொடுப்ப வந்து, அதன் கண்களிக்கத் தான் களிக்கும்” என்பதும் பதினொன்றாம் திருமுறை. ஆண்யானையானது, சந்தன மரத்தின் அழகிய பசுமையான தழையை தேனில் தோய்த்து பெய்யானையின் வாயில் கொடுக்கிறதாம். அந்த அன்பினை நோக்கிப் பெண்யானையில் கண்களில் நீர் துளித்தது. பெண்யானை மகிழ்ந்ததைப் பார்த்து, ஆன்யானை மகிழ்ந்தது. மனிதனுக்கு அமைந்து இருக்க வேண்டிய நற்பண்புகள் இவை இவை என்று நமது முன்னோர்கள், விலங்கினங்களைக் காட்டி நமக்கு அறிவுறுத்திய அற்புதக் காட்சிகள் இவை ஆகும். எனவே, முன் ஊட்டிப் பின் ஊட்டுதல் அன்பு மிகுந்தோர் செய்யும் செயல் ஆகும் என்பதனை அறிக. 


பிடாரி - காளி. இவள் சிவனுடன் வாதாடினாள்  என்று கூறுவதால், அடங்கா மனைவியை, ‘அடங்காப்பிடாரி' என்று கூறுவது மரபு.  பின்வரும் பாடல்களின் கருத்தை இங்கு. ஐத்து எண்ணுக.


“எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை.” --- நாலடியார்.


தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களை போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.


"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்." -- மூதுரை


இதன் பொருள் ---


    நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. மனையாள் இல்லாமல் போனாலோ, மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.


நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும். 


95. நாணம் அற்றார் நிலை

சேணிலகு மதிச்சடையார் தண்டலையார்

     வளநாட்டிற் சிறந்த பூணின்

காணவரும் நாணுடையார் கனமுடையார்

     அல்லாதார் கருமம் எல்லாம்

ஆணவலம்! பெண்ணவலம்! ஆடியகூத்து

     அவலம்! என அலைந்து கேடாம்!

நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும்

     வாயிலெனும் நடத்தை ஆமே.


இதன் பொருள் ---

    சேண்  இலகும்  மதிச்  சடையார்  தண்டலையார் வளநாட்டில் - வானில் உலவும் பிறைத் திங்கள் அணிந்த திருச்சடையினை உடையவரும், திருதண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளின் வளம் பொருந்திய நாட்டில், சிறந்த பூணின் காண வரும் நாணுடையார் கனம் உடையார் அல்லாதார் கருமம் எல்லாம் - சிறப்பு மிக்க அணிகலன் போலக் காணப்படும் நாணமும் பெருமையும் இல்லாதவரின் செயல்கள் யாவும், ஆண் அவலம் பெண் அவலம் ஆடிய கூத்து அவலம் என அலைந்து கேடு ஆம் - ஆடவரும் வீணர், பெண்டிரும் வீணர், அவர்கள் நடத்திய கூத்தும் வீண், என்னும்படியாக அலைவுற்றுக் கேடு ஆகும்.(அச்செயலானது, நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும் வாயில் எனும் நடத்தை ஆம் - வெட்கம் அற்ற கூத்தாடிச்சிகளுக்கு நான்கு திசையினும் வழி என்னுமாறு ஆய்விடும்.

      நன்றாகக் கூத்தாடும் திறமையற்ற கூத்தாடும் பெண்டிர் தம்மைப் பலரும் பழிக்கும்போது வெட்கித் திசை நோக்காமல் தப்பித்து ஓடுவர். அதுபோல நாணமும் மானமும் இல்லார் செயலும் பலரும் பழிக்கும்படி வீணாகும் என்பது அறிவுறுத்தப்பட்டது. “‘நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும் வாயில்” என்பது என்பது பழமொழி போலும்.

ஆண் ஒருவன் பெண் வேடம் இட்டாலும் அவலமாகவே முடியும். பெண் ஒருத்தி ஆண்வேடம் புனைந்தாலும் அவலமாகவே முடியும். அடியார் போல வேடமிட்டுக் கொண்டு திரியும் அவலர்களைக் குறித்து இப்பாடல் எழுந்ததாகக் கொள்ளலாம். “வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்?” என்பார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலதேவ நாயனார். “சிவ வேடம்”, “அவ வேடம்” என இரண்டு பகுதிகளைத் திருமந்திரத்தில் நாயனார் வகுத்து இருப்பது காண்க.

வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பாவில் உள்ள பின்வரும் பாடலையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“நிலைகாட்டி ஆண்டநின் தாட்கு அன்பு

    இலாது, அன்பில் நீண்டவன்போல்

புலைகாட் டியமனத் தேன்கொண்ட

     வேடம், புனைஇடைமேல்

கலைகாட்டி, கட்டு மயிர்த்தலை

     காட்டி, புன் கந்தைசுற்றி

முலைகாட்டி, ஆண்மகன் பெண்வேடம்

     காட்டும் முறைமை அன்றே.”.  – திருவருட்பா.


     பெருமானே! உலகின் நில்லாத இயல்பு கண்டு உணர்ந்து, தேவரீரது திருவடிக் கூழ் பெறும் இன்பமே நிலையான இன்பம் அடியேனது உணர்வில் இருந்து உணர்த்தி ஆட்கொண்டாய். அந்த நன்றிநினை உணர்ந்து உம்மிடத்துப் பேரன்பினைச் செலுத்த வேண்டும். தேவரீரது திருவடிக்கு உண்மையில் அன்பு இல்லாமல், மிக்க அன்பினை உடையவன்போல் புறத்தார் காணுமாறு, அடியேன் பூண்டு இருக்கும் அடியவர் வேடம் பூண்டு உலாவுகின்றேன். இது ஆண்மகன் ஒருவன், பெண்ணின் இடுப்பினைப் போலப் புனையபட்ட இடுப்பில் புடைவையைச் சுற்றிக் கொண்டு, கட்டு மயிரை வைத்துக்  கூந்தல் போலக் காட்டி, இல்லாத முலைக்காக, கந்தைத் துணியைப் பந்துபோல் சுருட்டிக் கட்டி, பெண்வேடம் பூண்டு தோன்றும் முறைமையாக இருக்கிறது. 


94. நல்லோர்க்குச் செல்வம் வந்தால்...


ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்

     எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்

காலம்அறிந் தருமையுடன் பெருமையறிந்

     துதவிசெய்து கனமே செய்வார்;

மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே!

     அவரிடத்தே வருவார் யாரும்!

ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பாற்

     சீட்டெவரே அனுப்பு வாரே?


இதன் பொருள் ---


    மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே - திருமாலும் அறியாத, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால் எவரே சீட்டு அனுப்புவார் - ஆலமரம் பழுத்தால் பறவைகள் வரவேண்டும் என்று சீட்டு எழதி அனுப்புவோர் யார்? (யாரும் இல்லை. அதுபோலவே), ஞாலம் உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால் - உலகில் வாழும் நல்லோர்களுக்குச் செல்வம் கிடைத்தால், நாவலோர்க்கும் எல்லவர்க்கும் - புலவர்களுக்கும் இரவலர் முதலிய யாவருக்கும், காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து - காலமும் அருமையும் பெருமையும் உணர்ந்து, உதவி செய்து கனமே செய்வார் - பொருள் கொடுத்துப் பெருமைப் படுத்துவார்கள்; அவரிடத்தே யாரும் வருவார் - அவரிடம் எல்லோரும் வருவார்கள்.


    ஔவையார் அருளிய நல்வழி என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை இங்கு வைத்து எண்ணுக.


“மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்

கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத் தவர்.”


இதன் பொருள் ---


    மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமல் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.


     செல்வம் படைத்தவர்கள், அது இல்லாதவர்களைத் தேடி உதவுவார்கள். பலராலும் விரும்பப்படும் வள்ளல்கள், ஊரின் நடுவிலே சுற்றிலும் திண்ணை அல்லது மேடையோடு கூடிய காய்த்த பனைமரத்தை ஒப்பர். காய்த்த பனையானது பெண்பனை என்று சொல்லப்படும். தமக்கு செல்வம் நிறைந்துள்ளஒபோதும் ஒருவருக்கும் கொடுத்து உண்ணாத மக்கள், சுடுகாட்டில் உள்ள காய்க்காத பனைமரம் போல்வர். காய்க்காத பனையை ஆண்பனை என்பர்.


"நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

 படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்,

 குடிகொழித்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்

 இடுகாட்டுள் ஏற்றைப் பனை." -- நாலடியார்.


இதன் பொருள் ---


ஊருக்குள்ளே ஓர் உயர்ந்த இடத்தில், எல்லோரும் வந்து பயன் பெறுமாறு காய்த்துக் குலுங்கும் பயனுடைய பனைமரம் போன்றவர்கள், பலரும் தம்மை விரும்பி வந்து பயன் பெறும்படி, பிறர்க்கு உதவி புரிந்து வாழுகின்ற பெரியவர்கள். அப்படி இல்லாது, மிகப் பெரிய செல்வச் செழிப்பில் இருந்தும், பிறருக்கு உதவி வாழாதவர்கள், ஒருவருக்கும் பயன்படாது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இருக்கும் வெற்றுப் பனைமரம் போன்றவர்கள்.


பிறருக்கு உதவ வேண்டும் என்னும் உள்ளம் படைத்த செல்வந்தர்கள், ஊரின் நடுவிலே பழுத்துள்ள மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன் உடையான்கண் படின்." --- திருக்குறள்.

இதன் பொருள் ---

இரக்கம், தயவு முதலிய நற்குணங்கள் பொருந்திய ஒருவனிடம் செல்வம் திரண்டு இருந்தால், அது பழங்கள் தருகின்ற பயனுள்ள மரம் ஒன்று ஊரின் உள்ளே பழுத்தால் போன்றது.


இதையே பின்வரும் பாடல்கள் வழிமொழிகின்றன. 


"அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்

நிழல்மரம்போல் நேர் ஒப்பத் தாங்கிப் - பழுமரம்போல்

பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்." --- நாலடியார்.


இதன் பதவுரை ---


அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் நிழல்மரம் போல் - வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி - வறுமையின் துன்பம் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் சமம் பொருந்தக் காத்து, பழுமரம் போல் பல்லார் பயன் துயப்ப - பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல் பலரும் பயன் நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக் கடன் - தான் மேன்மேலும் பொருள் ஈட்டும் முயற்சியால் உழைப்பு உடையனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமை ஆகும்.


‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர்

பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,

கார் மழை பொழியவும், கழனி பாய் நதி

வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.?    ---  கம்பராமாயணம், மந்திரப் படலம்.


இதன் பதவுரை ---


ஊருணி நிறையவும் - ஊராரால் உண்ணுதற்கு உரிய நீர்நிலை நீரால்  நிறையவும்; உதவும் மாடு உயர் - பலர்க்கும் உதவத்தக்க இடத்தில்  வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம் - உலகத்தார் விழையும் பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் - பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் - மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி - வயல்களில் பாய்கிற ஆறு;  வார்புனல் பெருகவும் - மிக்க நீர் பெருகவும்;  மறுக்கின்றார்கள் யார் - வேண்டாம் என்று தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’


      இந்த எடுத்துக்காடுகளால், இராமன் பிறர்க்கு நன்மை செய்யும்  ஒப்புரவாளன் என்பது  தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் திருக்குறளில்  வரும் உவமையினை,  "ஊருணி நிறையவும்" என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம், நயன் உடையான்கண் படின்” என்றும், "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகையான்கண் படின்" என்றும் வரும் திருக்குறட் பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழு பயன்மரம்” என்றும் கம்பர் சுருங்கச் சொல்லி உள்ளார்.


93. குறைகுடம் கூத்தாடும்

 



பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்

     விளக்கேற்றிப் புகுத வேண்டும்!

கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து

     நடந்துதலை கீழாய் வீழ்வார்!

வறுமையினும் மறுமையினும் காணலாம்;

     தண்டலையார் வாழும் நாட்டில்

நிறைகுடமோ தளும்பாது! குறைகுடமே

     கூத்தாடி நிற்ப தாமே!


இதன் பொருள் ---


    தண்டலையாா் வாழும் நாட்டில் – சிவபரம்பொருள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலம் உள்ள நாட்டில், பொறுமையுடன் அறிவுடையார் இருந்த இடம் விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும் - பொறுமையும் அறிவும் உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச் சென்று காணவேண்டும். கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து நடந்து தலைகீழாய் வீழ்வர் - செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து தலைதடுமாறி அழிவார்கள். வறுமையினும் மறுமையினும் காணலாம் - வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம். (எப்போதும் ஒரு தன்மையராகவே இருப்பர்) நிறைகுடமோ தளும்பாது - நீர் நிறைந்த குடம் எனிலோ தளும்புவது செய்யாது; குறைகுடமே கூத்தாடி நிற்பது ஆம் - நீர் குறைந்த குடமே கூத்தாடி நிற்கும்.


      கருவம் என்னும் சொல் எதுகை மோனை நயங்களை நோக்கிக், ‘கெறுவம்' என வந்தது. ‘இருந்த இடம் விளக்கேற்றிப் புகுத வேண்டும்' ‘தலைகீழாய் வீழ்வார்' என்பன மரபு மொழிகள். ‘நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்' என்பது பழமொழி.


    இக் கருத்தையே “பழமொழி நானூறு” என்னும் நூலும் பின்வரும் பாடலால் வலியுறுத்தும்.


“கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்; - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்.”

 

இதன் பொருள் ---

 

      அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை. (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைப் பொருளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கொண்டனவே அடக்கத்திற்குரிய செயல்கள் ஆகும். அறியாதார் - நூல்களைக் கற்றதோடு அமைந்து, நூற்பொருளின் உண்மையையும் அனுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.


92. மலைமீது இருப்போரைப் பன்றி பாயாது

 

நிலைசேரும் அதிகவித ரணசுமுக

     துரைகளுடன் நேசம் ஆகிப்

பலநாளு மேஅவரை அடுத்தவர்க்குப்

     பலனுண்டாம்! பயமும் இல்லை!

கலைசேரும் திங்கள்அணி தண்டலையா

     ரே! சொன்னேன்! கண்ணிற் காண

மலைமீதில் இருப்பவரை வந்துபன்றி

     பாய்வதெந்த வண்ணந் தானே?”


இதன் பொருள் ---


    கலைசேரும் திங்கள் அணி தண்டலையாரே - (ஒற்றைக்) கலையுடன் பொருந்திய (பிறைச்) சந்திரனைத் திருச் சடையில் அணிந்த திருத்தண்டலை இறைவரே! கண்ணில் காண மலை மீதில் இருப்பவரைப் பன்றி வந்து பாய்வது எந்த வண்ணம் - கண்ணில் காணுமாறு மலைமேல் இருப்பவரைத் தரையிலிருக்கும் பன்றி வந்து எவ்வாறு பாயும்?, (ஆகையால்), நிலைசேரும் அதிக விதரண சுமுக துரைகளுடன் நேசம் ஆகி - நிலைபெற்ற சிறந்த அறிவும் இன்முகமும் உடைய தலைவர்களுடன் நட்புக்கொண்டு, அவரைப் பலநாளும் அடுத்தவர்க்குப் பலன் உண்டாம் - அவர்களைப் பல நாள்களில் அடைந்து இருந்தவர்க்கு நன்மை உண்டு; பயமும் இல்லை - அச்சமும் உண்டாகாது.


      மலை என்றது கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோரைக் குறிக்கும். பன்றி என்றது, கீழோரைக் குறிக்கும்.  விதரணம் என்னும் வடசொல் அறிவு என்னும் பொருளது. சுமுகம் என்னும் வடசொல் இன்முகம் என்னும் பொருளது. ‘ஆம் பிள்ளாய்' எனத் தொடங்கும் பாடலில், பெரியோரை அடுத்தவர் உயர்வு பெறுவார் என்று கூறப்பட்டது. இப் பாடலில் ‘பெரியோரை அடுத்தவர்க்குத் தீமையில்லை, நன்மையும் உண்டாகும் என்பது காட்டப்பட்டது.  “பெரியோருடன் கூடல் பேரின்பம் ஆமே” என்பது திருமூலர் திருமந்திரம். நல்லறிவு, நற்பண்பு மற்றும் அனுபவத்தில் சிறந்த பெரியோருடன் பழகுவது அல்லது அவர்களுடன் கூடி இருப்பது பேரின்பத்தைத் தரும், வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் மிக உயர்ந்த நிலை ஆகும். இது அறத்தை அறிந்து செயல்படவும், மனச் செருக்கை அறுத்து சிவநெறியில் நிலைபெறவும் துணைபுரிகிறது. 


91. அரைக் காசுக்குப் போன அபிமானம்


"கானமரும் கவரியொரு மயிர்படினும்

     இறக்கும்! அது கழுதைக் குண்டோ?

மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!

     சுயோதனனை மறந்தார் உண்டோ?

ஆனகஞ்சேர் ஒலிமுழங்கும் தண்டலையா

     ரே! சொன்னேன்! அரைக்கா சுக்குப்

போனஅபி மானமினி ஆயிரம்பொன்

     கொடுத்தாலும் பொருந்தி டாதே."


இதன் பொருள் ---


ஆனகம் சேர் ஒலி முழுங்கும் தண்டலையாரே – படகம், துந்துபி கலந்த ஓசை முழங்கும் திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! கான் அமரும் கவரி ஒரு மயிர் படினும் இறக்கும் - காட்டில் இருக்கும் கவரிமான் ஒரு மயிரை இழந்தாலும் இறந்து விடும்; அது கழுதைக்கு உண்டோ - அந்தப்  பண்பு  கழுதைக்கு இருக்கிறதோ?, மானமுடன் வாழ்பவனே மாபுருடன் - மானத்தோடு வாழ்கின்றவனே ஆடவரில் சிறந்தவன்; சுயோதனனை மறந்தார் உண்டோ - துரியோதனனை மறந்தார் யார்?, அரைக்காசுக்குப் போன அபிமானம் இனி ஆயிரம் பொன் கொடுத்தாலும் பொருந்திடாதே. – அரைக்காசுக்கு ஆசைப்பட்டு இழந்த பெருமையானது, பிறகு ஆயிரம் பொன்னைக் கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதே.


விளக்கம் --- ஆனகம் – படகம், துந்துபி முதலிய வாத்திய வகை. கவரி - கவரிமான். சுயோதனன் (சுய ஓதனன்) - சிறந்த போர்வீரன் (காரணப் பெயர்). ஓதனம் – போர். ஓதனன் - போர்வீரன். இவன் தன் சிற்றப்பன் மக்களான பாண்டவருக்கு அடங்கி வாழ விரும்பாமல் இறுதிவரையில் அவர்களைப் பகைத்துப் போர் செய்து உயிர் துறந்தான். பதினெட்டாம் நாட்போரிலே தனித்து நின்ற சுயோதனனைத் தருமன் பார்த்து மனமிரங்கித் தம்முடன் கூடி அவனையே உலகை ஆளும்படியும் ஒத்துப் போகும்படியும் கூறினான். அதற்கு அவன் தன்னுடன் பிறந்தார் உறவினர் நண்பரையெல்லாம் தனக்காக மடியவிட்டு, நாடு என்றவுடன் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு ஒத்துப்போக முடியாதென்று கூறினான். ஆகவே, அவன் மானமுடையவனாகக் கருதப்பட்டான். ‘அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வராது' என்பது பழமொழி.


பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க...


“என்துணைவருடன் யானும் ஏவிய நின்தொழில் புரிந்து

வன்துணையாய்ச் சேவிப்ப, மடங்கல் ஆசனம் ஏறி,

இன்துணைவர் குருகுலத்தார் எனும் இசைபோய்த் திசை ஏற,

நல்துணைவா! ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடைக்கீழ்.”


பதினெட்டாம் நாள் போரில் யாவரையும் இழந்து தனியனாய் வருந்தி நிற்கும் துரியோதனனைப் பார்த்து மனம் இரங்கி, தருமன் பின்வருமாறு சொல்லி, போரை விட்டுச் சமாதானமாய் வாழ்வாயாக என்று சொன்னான். “எனது தம்பியரோடு நானும் நீ ஏவிய சிறுபணிகளைச் செய்துகொண்டு, நல்ல துணையாய் நாங்கள் உனக்கு ஊழியம் செய்ய, நீ அரியணையில் வீற்றிருந்து, குருகுலத்து மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிய துணைவர் ஆனார் என்ற புகழ் எங்கும் போய்ப் பரவ, உலகம் முழுவதும் உனது வெண்கொற்றக் குடைக் கீழ் ஆளுவாயாக"


தருமன் எண்ணத்துக்கு உடன்படாமல், சிறிதும் தாட்சணியம் இன்றி மானமுள்ள துரியோதனன் மறுத்தான்.


“தப்பாது என்மொழி என்று தருமன் மாமதலை, முகில்

ஒப்பான திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக 

செப்பாத வாய்மை எல்லாம் செப்பினான், செப்பவும், அக்

கைப்பான வல்நெஞ்சக் கொடுங் கண்ணன் மறுத்தான்.”


‘நான் சொன்ன சொல் தவறாது’ என்று சிறந்த தருமன், கரிய மேகத்தை ஒத்த திருமேனி உடைய கண்ணபிரான் சாட்சியாக இதுவரையில் யாரும் சொல்லி இராத உறுதியான சொற்களை எல்லாம் சொன்னான். வெறுப்புக் கொண்ட வலிய மனத்தையும், கொடிய தன்மையையும் உடைய துரியோதனன், தருமன் எண்ணுத்துக்கு உடன்படாமல் தாட்சணியம் இன்றி மறுத்தான். (கொடுங் கண்ணன் – தீமை விளைக்கும் கண்ணை உடையவன் ஆகிய துரியோதனன்)


“எம்கிளைஞர். எம்துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,

உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர் வாழ்வின் இனிது அன்றோ,

அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குருதியின் வாய்,

கங்கமும் காகமும் கொட்ட களத்து அவிந்தான் எனும் பெயரே.”


“எனது உறவினரும், எனது தம்பியரும் என் பொருட்டாக மாண்டு போக, உங்கள் அருளைப் பெற்று, அதனால் நான் வாழ்கின்ற உயிர்வாழ்வைக் காட்டிலும், உடல் உறுப்பு எல்லாம் தனித்தனித் துண்டாகி விடவும், ஆறாக இரத்தம் கொட்டும் புண்களின் வாயிலே கழுகுகளும் காக்கைகளும் அலகால் கொத்தவும், போர்க்களத்தில் இறந்தான் என்ற புகழை அடைதல் சிறந்தது அன்றோ?” (கங்கம் – கழுகு)


பொது --- 1128. பொற்கோவைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பொற்கோ வைக்கே (பொது) முருகா!  சிற்றின்பத்துக்காகப் பொருளைத் தேடி அலையாமல்,  தேவரீரது அருளை நாடி வாழ அருள...