“பார்க்குள் அறிவிருந்தாலும் படித்தாலும்
கேட்டாலும் பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்
பெரியவர்தம் மகிமை உண்டோ?
ஆர்க்கும்அருங் கதியுதவும் தண்டலையா
ரே! சொன்னேன்! ஆகாயத்தில்
ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும்
பருந்தாகா துண்மை தானே.”
இதன் பொருள் ---
ஆர்க்கும் அருங்கதி உதவும் தண்டலையாரே - எல்லோருக்கும் நல்ல நிலையை அருளுகின்றவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ளவரும் ஆன சிவபரம்பொருளே! ஊர்க்குருவிதான் ஆகாயத்தில் உயரப் பறந்தாலும் பருந்து ஆகாது - ஊர்க்குருவி வானத்தில் உயரமான தொலைவில் பறந்தாலும் அது பருந்தின் மதிப்பை அடைய முடியாது, உண்மை தானே - இது உண்மையே ஆகும்; (ஆகையால்), அறிவு இருந்தாலும் படித்தாலும் கேட்டாலும் – அறிவு இருந்தாலும், இருக்கின்ற அறிவைப் பெருக்கிக் கொள்ள நூல்களைக் கற்றாலும், நூற்பொருளைக் கற்றார் வாய்க் கேட்டாலும், பணிந்து வேதமார்க்கமுடன் நடந்தாலும் – பணிவுடன், வேதநெறியில் ஒழுகினாலும், பார்க்குள் சிறியவர்க்குப் பெரியவர் தம் மகிமை உண்டோ - உலகிலே கீழ்மக்களுக்குச் சான்றோருக்கு உரிய சிறப்பு உண்டாகுமோ?
“உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்பது பழமொழி. "சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும் – அங்கண் உலகில் சிறியோர் தாம் அடங்கி நடந்து கதி அடையமாட்டார்” என்று முன்னே ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளது காண்க. “வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ?” என்பது குமரேச சதகம்.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி, - தோழி!
நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
விதியின் பயனே பயன். --- மூதுரை
எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,
முற்பவத்தில் செய்த வினை. --- மூதுரை.
வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. --- திருக்குறள்.
No comments:
Post a Comment