அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சிவமாது உடனே
(திருவருணை)
அடியேனுடைய வறுமையும்,
நோயும் தொலைய
அண்ணாமலையில் எழுந்தருளிய
முருகா!
உனது வேலையும் மயிலையும்
எனக்குத் தந்து அருள்.
தனனா
தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான
சிவமா
துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே ...... பசியாறித்
திகழ்வோ
டிருவோ ரொருரூ பமதாய்
திசைலோ கமெலா ...... மநுபோகி
இவனே
யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவே ...... மறையோத
இறையோ
னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா ...... அருள்வாயே
தவலோ
கமெலா முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்
தலைதூள்
படஏழ் கடல்தூள் படமா
தவம்வாழ் வுறவே ...... விடுவோனே
கவர்பூ
வடிவாள் குறமா துடன்மால்
கடனா மெனவே ...... அணைமார்பா
கடையேன்
மிடிதூள் படநோய் விடவே
கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சிவமாது
உடனே அநுபோகம் அதுஆய்,
சிவஞான அமுதே ...... பசியாறி,
திகழ்வோடு
இருவோர் ஒரு ரூபம் அதுஆய்
திசை லோகம் எலாம், ......அநுபோகி
இவனே
என, மால் அயனோடு, அமரோர்
இளையோன் எனவே ...... மறை ஓத,
இறையோன்
இடமாய் விளையாடுகவே,
இயல் வேலுடன் மா ...... அருள்வாயே.
தவலோகம்
எலாம் முறையோ எனவே,
தழல்வேல் கொடு போய், ...... அசுராரைத்
தலைதூள்
பட, ஏழ் கடல்தூள் பட, மா-
தவம் வாழ்வு உறவே ...... விடுவோனே!
கவர்
பூ வடிவாள் குறமாதுடன் மால்
கடன் ஆம் எனவே ...... அணைமார்பா!
கடையேன்
மிடிதூள் பட, நோய் விடவே
கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
பதவுரை
தவலோகம் எலாம்
முறையோ எனவே --- மிகுந்துள்ள உலகங்கள்
எல்லாம் முறையோ என்று ஓலமிட,
தழல்வேல் கொடு போய் --- நெருப்பை
வீசும் வேலுடன் சென்று
அசுராரைத் தலைதூள் பட --- அசுரர்களின் தலைகள் தூள் படவும்,
ஏழ்கடல் தூள்பட --- எழுகடல்களும் தூள் படவும்,
மாதவம் வாழ்வு உறவே விடுவோனே ---
முனிவர்களின் சிறந்த தவமானது வாழ்வு பெறுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
கவர் பூ வடிவாள்
குறமாது உடன்
--- கவர்ச்சியை உடைய மலர் போன்ற வடிவை உடையவளாகிய வள்ளி நாயிகியின் மீது
மால் கடனாம் எனவே அணை மார்பா ---
அன்பு கொள்வது கடன் ஆகும் என்று அவரை அமைந்த திருமார்பினரே!
கடையேன் மிடி தூள் பட --- கடைப்பட்டவனாகிய அடியேனுடைய வறுமை
தூள்பட்டு ஒழியவும்,
நோய் விடவே ---
நோய்
தொலையவும் அருள் புரிந்து,
கனல் மால் வரை சேர் பெருமாளே ---
பெருமையுடைய நெருப்பு மலையாகிய திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள பெருமையில்
சிறந்தவரே!
சிவமாது உடனே
அநுபோகம் அது ஆய் --- சிவம் என்கின்ற தலைவியுடன் இன்பு நுகர்ச்சி கொண்டவனாய்,
சிவஞான அமுதே பசியாறி --- சிவஞானம் என்கின்ற அமுதத்தை
உண்டு பசி நீங்கி,
திகழ்வோடு இருவோர்
ஒரு ரூபமதாய்
--- விளக்கத்துடன் அடியேனும் சிவமாகிய தலைவியும் ஆகிய இருவரும் ஒரு வடிவமாய் ஒன்றி,
திசை லோகம் எலாம் அநுபோகி இவனே என --- திசையில் உள்ளோரும் உலகில் உள்ள
அனைவரும் சுகாநுபவம் உடையவன் இவன் ஒருவனே என்று வியந்து கூறும்படி,
மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத --– திருமால், பிரமன், தேவர் என்ற யாவரும் இவன் இளையோன்
என்றும், வேதமும் அவ்வாறே
எடுத்துக் கூறவும்,
இறையோன் இடமாய்
விளையாடுகவே
--- சிவபெருமானிடத்தில் அடியேனும் உம்மைப் போல் விளையாடி மகிழ
இயல் வேலுடன் மா அருள்வாயே --- அழகிய
வேலையும், மயிலையும் தந்து
அருளுவீராக.
பொழிப்புரை
மிகுந்துள்ள உலகங்கள் எல்லாம் முறையோ என்று
ஓலமிட, நெருப்பை வீசும்
வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் தூள் படவும், எழுகடல்களும் தூள் படவும், முனிவர்களின் சிறந்த தவமானது வாழ்வு
பெறுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
கவர்ச்சியை உடைய மலர் போன்ற வடிவை
உடையவளாகிய வள்ளி நாயிகியின் மீது அன்பு கொள்வது கடன் ஆகும் என்று அவரை அமைந்த
திருமார்பினரே!
கடைப்பட்டவனாகிய அடியேனுடைய வறுமை
தூள்பட்டு ஒழியவும், நோய் தொலையவும் அருள்
புரிந்து, பெருமையுடைய நெருப்பு
மலையாகிய திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!
சிவம் என்கின்ற தலைவியுடன் இன்பு
நுகர்ச்சி கொண்டவனாய், சிவஞானம் என்கின்ற
அமுதத்தை உண்டு பசி நீங்கி, விளக்கத்துடன் அடியேனும் சிவமாகிய
தலைவியும் ஆகிய இருவரும் ஒரு வடிவமாய் ஒன்றி, திசையில் உள்ளோரும் உலகில் உள்ள
அனைவரும் சுகாநுபவம் உடையவன் இவன் ஒருவனே என்று வியந்து கூறும்படி, திருமால், பிரமன், தேவர் என்ற யாவரும் இவன் இளையோன்
என்றும், வேதமும் அவ்வாறே
எடுத்துக் கூறவும், சிவபெருமானிடத்தில்
அடியேனும் உம்மைப் போல் விளையாடி மகிழ அழகிய வேலையும், மயிலையும் தந்து அருளுவீராக.
விரிவுரை
சிவமாதுடனே
அநுபோகமதாய் ---
சிவம்
- நன்மை, அன்பு என்பவை. சிவம் என்ற பெண்மணியுடன் கலந்து இன்புறுதல்.
இதனைச் சிவபோகம் என்பர்.
இந்தக்
கருத்தைப் பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் கூறியுள்ளார்.
சிவசுடர்
அதனைப் பாவை மணம் என மருவி.... ---
(திருநில)
திருப்புகழ்.
சிவஞான
புண்டரிக மலர்மாதுடன் கலவி
சுகபோக
மன்பருக அறியாதே.... --- திருப்புகழ்.
சிவஞானமுதே
பசியாறி ---
உலகை
அறிவது - பாசஞானம்.
தன்னை
அறிவது - பசுஞானம்
இறைவனை
அறிவது - பதிஞானம்.
பதிஞானம்
சிறந்தது. இதனைச் சிவஞானம் என்பர். இந்தச்
சிவஞானமாகிய அமுதத்தை உண்ணுதல் வேண்டும்.
அதனால் பசியாறி பரகதி சித்திக்கும்.
குகனெ
குருபர னெஎன நெஞ்சில்
புகழ
அருள்கொடு நாவினில்இன்பக்
குமுளி
சிவஅமுது ஊறுக உந்திப் பசியாறி.... --- திருப்புகழ்.
இருவோர்
ஒருரூபமதாய்
---
சிவமாகிய
தலைவியும் ஆன்மாவாகிய தலைவனும் இரண்டும் ஒன்றாகி நிற்றல் .
இருவரும்
உருகிக்காய நிலையென மருவித் தேவர்
இளையவன்
எனவித்தாரம் அருள்வாயே .. --- (திருநில) திருப்புகழ்.
திகைலோக
மெலாம் அநுபோகி இவனே என ---
திகை
- திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், அடியேனுடைய சிவானுபவத்தைக் கண்டு
விம்மிதம் அடைந்து, "இவனே சுகாநுபவச்
செல்வம் உடையவன்" என்று புகழ்ந்து கூறுவர்.
மாலயனோடு
அமரர் இளையோன் எனவே மறை ஓத ---
திருமாலும்
திசைமுகனும் ஏனைய தேவர்கள் யாவரும் ஏளியேனைப் பார்த்து, "இவன் என்றும் இளையோன்" என்று
வியந்து கூறுவர். வேதமும் அவ்வாறே வியந்து
கூறும்.
இறையோன்
இடமாய் விளையாடுகவே இயல்வேலுடன் மா அருள்வாயே ---
"அடியேன் என்றும்
அகலாத இளமை பெற்று தேவரீர் சிவபிரானிடம் விளையாடுவது போல் அடியேனும் விளையாடி மகிழ, உமது வேலையும் மயிலையும் எனக்குத்
தந்தருள்" என்று வேண்டுகின்றார்.
குறித்து
நீ அருகு அழைத்து, மாதவர்
கணத்தின்
மெவுஎன அளித்து, வேல்மயில்
கொடுத்து, வேதமும் ஒருத்தன்ஆம் என அருள்வாயே... --- (வெடித்த) திருப்புகழ்.
மா
- குதிரை. இது ஆகுபெயராக மயலைக் குறித்து
நின்றது.
கவர்
பூ வடிவாள் குறமாது ---
கவர்
- கவர்ச்சி. வசீகரிப்பு. பூவைப்போன்ற
கவர்ச்சி உள்ள திருமேனி உடையவர் வள்ளி பிராட்டியார்.
மால்
கடன்ஆம் எனவே அணைவோனே ---
மனமொழிகளால்
தன்னையே நினைந்து தவம் புரிந்தவர் வள்ளி நாயகியார்.
குருவி
ஓட்டித் தரிந்த தவமானை --- (அறிவிலா)
திருப்புகழ்.
அடியவரை
ஆட்கொள்வது இறைவனது கடப்பாடு ஆகும். "தன்கடன் அடியேனையும் தாங்குதல்"
என்பார் அப்பர் பெருமான்.
எனவே, வள்ளி எம்பிராட்டியை ஆண்டது முருகனுடைய
கருணைத் திறத்தின் சிகரம் ஆகும்.
வள்ள
பிறந்தது குறவர் குலம் என்ற சிறுமையைப் பாராது, அவர் புரிந்த தினைப்புனக் காவல் என்ற
எளிமையைப் பாராமல், மூவர்க்கும்
தேவர்க்கும் முதல்வனான முருகவேள் அவரை ஆட்கொண்டார்.
கடையேன்
மிடி தூள்பட நோய்விடவே ---
அருணகிரிநாதருடைய
வறுமை போன்ற சிறுமையும், தொழுநோய் முதலிய
துன்பங்களும் ஒரு கணத்தில் அகலுமாறு அருணாசலத்தில் ஆறுமுகப் பெருமான் ஆட்கொண்டு
அருளினார்.
கருத்துரை
அருணை
மேவும் அரசே! வேல் மயில் தந்து என்னைக் காத்தருள்.